‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73

tigபடைகளின் முகப்பினூடாக புரவியில் பெருநடையில் செல்கையில் திருஷ்டத்யும்னன் தன்னுள் ஒரு நிறைவை உணர்ந்தான். பலநாட்களாக செதுக்கி முடித்த சிற்பம் கண்திறந்து நிற்கக் காண்பது போலிருந்தது. எங்கோ ஒரு சிறு குறை இருப்பதாக அஞ்சி விழி துழாவிக்கொண்டே இருந்தது. அந்த விந்தையான இருநிலையை அவன் வியந்தான். குறைகளை தேடிக்கொண்டிருந்தமையால் ஒரு சிறு குறை காணநேரிட்டபோது உள்ளம் மகிழ்வுகொண்டது. ஆனால் ஒவ்வொரு குறைக்குப் பின்னரும் பதற்றமும் உருவாகியது. முன்புலரியின் அரையிருளில் முகங்கள் அனைத்தும் விழிகள் ஒளிர அரைநிழல் பரவிய நீண்ட ஆலயச் சுற்றுவட்ட சிற்பநிரைகளைப் போன்று தோன்றின.

அவனை நோக்கி வந்த சாத்யகியின் மைந்தன் அசங்கன் “அரசர் ஒருங்கிவிட்டார். உங்களை உசாவினார்” என்றான். அவன் “இளையவர்கள் வந்துவிட்டார்களா?” என்றான். “சகதேவரும் நகுலரும் பின்னிரவிலேயே வந்துவிட்டார்கள். பீமசேனரும் பார்த்தரும் சற்றுமுன் வந்தனர்” என்று அவன் சொன்னான். “பாண்டவ மைந்தர் அனைவரும் அவர்களின் படைப்பிரிவுகளுக்கே சென்றுவிட்டார்கள். அங்கே சிற்றலுவல்களை நோக்க என்னிடம் பணித்தார் பாஞ்சால அரசர்.” திருஷ்டதுய்ம்னன் பெருமூச்சுவிட்டான். பின்னர் “இளைய யாதவர் இருக்கிறாரா?” என்றான். “இன்னும் அவர் வரவில்லை.”

காலையில் இளங்குளிர் இருந்தது. முந்தையநாள் கீழ்ச்சரிவில் சற்று முகில்கணங்கள் சேர்ந்து இடிமுழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தன என அவன் நினைவுகூர்ந்தான்.பின்னிரவில் காற்று விசையுடன் கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தது. தெற்குப் படைப்பிரிவை நோக்கும்பொருட்டு அவன் சென்றபோது நீர்த்துளிகள் காற்றில் கலந்து வீச உடல் மெய்ப்பு கொண்டது. மழை பெய்யுமா என அவன் ஐயுற்றான். ஆனால் நிமித்திகர் “இன்னும் இரண்டு வாரங்களுக்கு மழை இல்லை, ஐயமே தேவையில்லை” என்று பலமுறை கூறியிருந்தனர்.

யுதிஷ்டிரரின் பாடிவீட்டின் முன்னால் காவல்படை ஒன்று அணிவகுத்து நின்றது. புலரிக்காற்றில் மின்கொடியும் யுதிஷ்டிரரின் நந்தக்கொடியும் பறந்துகொண்டிருந்தன. அவன் புரவியை நிறுத்திவிட்டு இறங்கி பாடிவீட்டுக்குள் சென்றான். அங்கு நெய்விளக்கின் ஒளியில் முதன்மைப்பீடத்தில் யுதிஷ்டிரர் அரசணிக்கோலம் பூண்டு அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே ஒரு சிறு மேடையில் அவருடைய மணிமுடி வைக்கப்பட்டிருந்தது. நகுலனும் சகதேவனும் முழுக்கவச உடையில் பின்னால் தலைக்கவசங்களை கைகளில் வைத்தபடி நின்றிருந்தனர். இரும்புக்கவசம் மின்ன பீமன் எதிரே பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்தான். பெரிய இரும்புக்கலம்போல தலைக்கவசம் அவன் மடிமேல் இருந்தது. திருஷ்டத்யும்னன் உள்ளே நுழைந்து சொல்லின்றி தலைவணங்கி பீடத்தில் அமர்ந்தான்.

யுதிஷ்டிரர் “பாஞ்சாலரே, இன்று துரியோதனன் யானைமேல் ஏறி அரசணிக்கோலத்தில் படைமுகம் கொள்ளக்கூடும் என்று செய்தி வந்தது. நான் எவ்வண்ணம் படைமுகம் கொள்வது என்று பேசினேன். கவசமும் மணிமுடியும் அணிந்து செல்வதென்று முடிவெடுத்தோம். ஆனால் யானைமேல் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. போர்க்களத்தில் அம்பாரிமேல் அமரவியலாது. யானையின் வெற்றுமுதுகின்மேல் நெடுநேரம் அமர்வது எனக்குக் கடினம்” என்றார். திருஷ்டத்யும்னன் “அரசர்கள் போருக்கு மணிமுடிசூடி எழுவது வழக்கம்தான், அரசே. அது படைகளுக்கு ஊக்கமளிக்கும்” என்றான். “ஆனால் தேரில் எழுந்தருளினால் எவர் அதை பார்க்கவியலும்?” என்றான் நகுலன். பீமன் “செய்திமாடத்தில் ஏறி நின்றிருக்கலாம். வேண்டுமென்றால் யானைகளைக் கொண்டு அதை இழுக்கலாம்” என்றான்.

அந்த இளிவரல் யுதிஷ்டிரரை சினம்கொள்ளச் செய்தது. “மந்தா, நான் உன் அரசன். எனக்காகவே நீ படைமுகம் கொண்டிருக்கிறாய். என்மேல் மதிப்பில்லை என்றால் கவசம் களைந்து நீ கிளம்பலாம்” என்றார். “என் குலமகளின் வஞ்சம் முடித்தபின் கிளம்பத்தான் போகிறேன்” என்றான் பீமன். “அவள் எனக்கும் குலமகள்தான்” என்றார் யுதிஷ்டிரர். “மெய்யாகவா?” என்றான் பீமன். “மூத்தவரே…” என்று சகதேவன் பீமனை அடக்கினான். திருஷ்டத்யும்னன் “அரசே, உங்கள் தேருக்குத் தடம் விழாது என்று அதர்வர் அருளியிருக்கிறார்” என்றான். யுதிஷ்டிரர் முகம் மலர்ந்து “ஆம், மெய்யாகவே அது உருண்டுசெல்கையில் தடம் விழவில்லை. பலமுறை நோக்கிவிட்டேன். சேற்றுப்பரப்பிலும் தடமில்லை. அதர்வர் கொண்டுவந்த கலிங்கச் சிற்பிகளின் திறனா அல்லது ஏதேனும் மாயமா என்று வியந்தேன்” என்றார்.

“அப்போதுகூட தன் அறம் மீது நம்பிக்கை வரவில்லை. அந்தத் தன்னடக்கம் நன்று” என்றான் பீமன். “வாயை மூடு, அறிவிலி!” என்று யுதிஷ்டிரர் சீறினார். “மூத்தவரே, இது நாம் போர்முகம் கொள்ளும் தருணம். இத்தனை கசப்பும் பூசலும் தேவையில்லை” என்றான் சகதேவன். “கசப்பும் பூசலும் இருப்பதனால்தான் போர்முகம் கொள்கிறோம்” என்றான் பீமன். “அன்பும் அறமும் கொண்டா மண்ணுக்கும் பெண்ணுக்கும் வாளெடுக்கிறோம்?”. திருஷ்டத்யும்னனே சற்று சலிப்படைந்தான். நகுலனிடம் “இளைய யாதவர் வரவில்லையா?” என்றான். “வந்துகொண்டிருக்கிறார். அவரை எதிர்கொள்ள பார்த்தன் வெளியே சென்று நின்றிருக்கிறான்” என்றார் யுதிஷ்டிரர்.

“இந்தப் போரில் இளைய யாதவர் எப்படி கலந்துகொள்ளவிருக்கிறார்?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். நகுலன் தயங்கியபடி “அவர் இப்போது அரசர் அல்ல. ஷத்ரியரும் அல்ல. ஆகவே தேர்ச்சூதராக போர்முகப்புக்கு வருவதாக சொன்னார். மூத்தவர் பார்த்தருக்கு தேரோட்டுகிறார்” என்றான். திருஷ்டத்யும்னன் சில கணங்களுக்குப்பின் “தேரோட்டியாகவா?” என்றான். “ஆம்” என்றான் நகுலன். யுதிஷ்டிரர் “இப்படை ஒரு தேர் எனில் அவர் அதன் பாகன்” என்றார். “சூதர்பாடலுக்கு சிறந்த முதலடி” என பீமன் முனகிக்கொண்டு அசைந்து அமர்ந்தான். யுதிஷ்டிரர் சலிப்புடன் தலையசைத்து பெருமூச்சுவிட்டார். திருஷ்டத்யும்னன் மீண்டும் பேச்சை விலக்கி “அரசே, தங்கள் தேர் மண் தொடுவதில்லை என்று படைகளிடம் பேச்சு உள்ளது. அத்தேரில் நீங்கள் படைமுகப்புக்கு எழுவதே உகந்தது. அதைக் கண்டதுமே வீரர்கள் அதன் சகடங்களைத்தான் உற்றுப்பார்ப்பார்கள். தேர்த்தடம் விழவில்லை என்றால் அதுவே பெரும் கொந்தளிப்பாக ஆகும்” என்றான்.

“ஆம், அது உகந்ததே” என்றார் யுதிஷ்டிரர். “படைகளுக்கு முன் சிலமுறை முன்னும்பின்னும் ஓட்டிக்காட்டலாம்” என்றான் பீமன். திருஷ்டத்யும்னன் “மெய்யாகவே அதை செய்யலாம், மாருதரே. படைகளை பார்வையிட அரசர் அவ்வாறு செல்வது வழக்கம்தான்” என்றான். யுதிஷ்டிரர் “மூத்தவர்களும் ஆசிரியர்களும் கூடி நின்றிருக்கும் படையை எதிர்த்து நான் படைகொண்டு செல்வது அந்தத் தேர் அளிக்கும் நம்பிக்கையால்தான்” என்றார். “அது என்னை அறத்தோன் என எனக்கே காட்டுகிறது. அறத்தை தன்னுள் எவரும் ஐயமற உணரமுடியாது. உள்ளிருக்கும் அந்த துலாமுள் அலைபாய்ந்துகொண்டேதான் இருக்கும். புறத்தேதான் நம் அறத்தின் சான்றுகளை நாம் தேடிக் கண்டடையவேண்டும்”

வெளியே சங்கொலி எழுந்தது. யுதிஷ்டிரர் பேச்சை நிறுத்தி பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தார். குறடுகள் ஒலிக்க தலைகுனிந்து குடிலுக்குள் அர்ஜுனன் நுழைந்தான். வெள்ளியென மின்னிய இரும்புக் கவச உடை அணிந்திருந்தான். இரும்பு வளையங்கள் பதிக்கப்பட்ட கையுறைகளை இழுத்துவிட்டபடி வந்து யுதிஷ்டிரரை வணங்கி “யாதவர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான். திருஷ்டத்யும்னன் “அவர் உங்களுக்கு பாகன் என்றார்கள்” என்றான். அர்ஜுனன் அவனை நோக்காமல் “ஆம்” என்றான்.

அர்ஜுனன் நிலைகுலைந்திருப்பதுபோல தோன்றியது. “அவர் உடனிருப்பது நன்று. புரவியின் உள்ளமறிந்த தேர்ப்பாகன் தேரின் ஆத்மா என்பார்கள். உன் எண்ணங்கள் அனைத்தும் அவரினூடாக புரவிக்கு செல்லும். கவிஞர் பாடும் உளத்தேர் போல அது உன் உள்ளமென்றே செயல்படும்” என்றார் யுதிஷ்டிரர். அர்ஜுனன் பெருமூச்சுடன் “அவர் துயருற்றிருக்கிறார்” என்றான். யுதிஷ்டிரர் அமைதியாக நோக்க “நேற்றிரவு அவரை பாடிவீட்டில் சென்று தேடினேன். அவருடன் இருந்த அணுக்கன் அவர் முன்மாலையில் கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னான். நான் அவரைத் தேடிச்சென்றேன். எப்போதுமே அவரை தேடிச்செல்கையில் என் எண்ணங்களை மயங்கவிட்டு உள்ளத்தை அதர்தேடிச் செல்லவிடுவேன். என்னை அது கொண்டுசென்று சேர்த்துவிடும். அவர் கிழக்குமூலை அறிவிப்புமேடைமேல் இருந்தார்” என்றான். “ஆம், சிலமுறை அவரை அங்கே கண்டிருக்கிறேன்” என்றார் யுதிஷ்டிரர்.

“நானும் மேலேறி அவர் அருகே சென்றேன்” என்றான் அர்ஜுனன். “அவர் நான் வருவதை உணர்ந்ததாக தெரியவில்லை. அருகே நின்றிருந்தேன். நெடுநேரம் அவர் என்னை உணரவில்லை. அவர் விழிகள் எங்கிருக்கின்றன என்று பார்த்தேன். அவர் நேர்முன்னால் விரிந்துகிடந்த கௌரவப்படைகளை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் என்ன எண்ணுகிறார் என்று எனக்கு புரிந்தது. மூத்தவரே, அவர் அங்கே தன்னை எதிர்த்து படைக்கலம் கொண்டு நின்றிருக்கும் தன் குடியினரை எண்ணிக்கொண்டிருந்தார்” என்றான் அர்ஜுனன். “நான் திரும்பி வந்துவிட்டேன். இன்று புலரியில் மீண்டும் அவரைத் தேடிச்சென்றேன். அவர் அதே செய்திமாடத்தில் அவ்வண்ணமே அமர்ந்திருப்பதாக சொன்னார்கள். ஆகவேதான் திரும்பிவிட்டேன்.”

“அவர் துயர்கொள்வது தன் குடியினருக்காக மட்டும் அல்ல” என்றான் பீமன். அர்ஜுனன் அவனை திரும்பி வெறுமனே நோக்கினான். அங்கிருந்தவர்கள் அச்சொற்றொடரைக் கடக்க சற்று பொழுதாகியது. யுதிஷ்டிரர் “இளையோனே, நீ ஓர் உறுதியை கொள்க! ஒருபோதும் உன் கைகளால் நீ யாதவரை கொல்லலாகாது” என்றார். “எவர் கொன்றால் என்ன?” என்றான் பீமன். “நம் கைகளால் கொல்லவேண்டியதில்லை” என்றார் யுதிஷ்டிரர். “அதாவது நாம் குற்றவுணர்வுகொள்ளாது காப்போம் என்கிறீர்கள்?” என்றான் பீமன். “உன்னிடம் பேச என்னால் இயலாது” என்று யுதிஷ்டிரர் சொன்னார். அர்ஜுனன் “என்னால் அவரை எதிர்கொள்ள முடியாது என்று தோன்றிவிட்டது, மூத்தவரே” என்றான். “இப்போது அவர் இங்கு வருவார். அவ்விழிகளை நோக்கி நான் ஒருசொல்லும் உரைக்கவியலாது”

“நீ கனவில் கேட்ட வேதாமுடிபுப்பாடல் உன்னை ஆட்கொள்ளவில்லையா? உனக்கு அது எதையும் அளிக்கவில்லையா?” என்றார் யுதிஷ்டிரர். “அது விடை. நான் சென்றடையும் எல்லை. மூத்தவரே, நான் கிளம்புவது என் துயரிலிருந்தும் தத்தளிப்பில் இருந்தும்தான். மீண்டும் மீண்டும் பலநூறு முனைகளிலிருந்து அந்த புள்ளிக்குச் சென்றுசேர்ந்துகொண்டிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “நகர்நடுவே தெய்வம் என என்னுள் அது உறைந்துள்ளது. அங்காடிகளில் அடுமனைகளில் மதுவிடுதிகளில் எங்கும் அதன் நோக்கு திகழ்கிறது”

வெளியே சங்கொலி கேட்டது. யுதிஷ்டிரர் எழுந்துகொண்டு “அவரை நாம் சென்று வரவேற்போம். இது அவருடைய போர்” என்றார். கைகளைக் கூப்பியபடி அவர் செல்ல உடன் பீமனும் நகுலனும் சகதேவனும் சென்றனர். அர்ஜுனன் தயங்கி நின்றான். அருகே நின்ற திருஷ்டத்யும்னன் “அவர் இப்போரை தவிர்த்திருக்க முடியாது என்றே எண்ணுகிறேன், இளவரசே” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “ஆகவே அவர் துயர்கொள்ளவேண்டியதில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “மூத்தவர் சொன்னதே சரி,ஞானிகள் துயர்கொள்வது தங்கள் பொருட்டல்ல, மானுடர்பொருட்டு” என்றான் அர்ஜுனன். “ஆகவே பிறிதிலாத மாற்றிலாத துயர் அது. அதன்முன் நாம் மிகச் சிறியோர்.”

அவன் சொல்வது புரியாமல் வெறுமனே நோக்கி விட்டு திருஷ்டத்யும்னன் பெருமூச்செறிந்தான். பின்னர் “வருக!” என அர்ஜுனனை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான். அர்ஜுனனின் காலடிகளின் ஓசையிலேயே தயக்கத்தை உணரமுடிந்தது. துயருக்கும் ஐயத்திற்கும் பருநிலை எடை உண்டுபோலும். செவிகளால் அதை உணரமுடியும்போலும்.

பாடிவீட்டின் முற்றத்தில் யுதிஷ்டிரர் கைகூப்பி நின்றார். அவர் அருகே வலப்பக்கம் பீமனும் இடப்பக்கம் நகுலனும் சகதேவனும் நின்றனர். தொலைவில் மரப்பாதையில் குளம்படி முழங்க புரவி வருவது தெரிந்தது. வெண்புரவிமேல் இளைய யாதவர் நெஞ்சில் மட்டும் கவசம் அணிந்து வந்துகொண்டிருந்தார். அவருடன் வேறெவரும் இருக்கவில்லை. புரவித்தாளம் மெல்ல ஓய அவர் வந்து கால்சுழற்றி இருந்து இறங்கி கடிவாளத்தை ஏவலனிடம் அளித்துவிட்டு கைகூப்பியபடி யுதிஷ்டிரரை நோக்கி வந்தார்.

யுதிஷ்டிரர் அவரை வணங்கி “வருக, யாதவனே! இந்நாளில் உன் அருளால் களம்காண்கிறோம்” என்றார். “நன்று நிகழ்க!” என்று இளைய யாதவர் அவரை வாழ்த்தினார். நகுலனும் சகதேவனும் அவர் கால்களைத் தொட்டு வணங்க “வெல்க!” என அவர் அவர்களை வாழ்த்திவிட்டு அர்ஜுனனை பார்த்தார். அவர் முகம் உவகைமிக்க செய்தியொன்றை சற்றுமுன் கேட்டதுபோல் மலர்ந்திருந்தது. “போருக்கு ஒருங்கிவிட்டாய் அல்லவா?” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். அவர் தலையில் நீலப்பீலி பிறிதெங்கோ நோக்கு கொண்டிருந்தது.

இளைய யாதவர் அருகே வந்து அர்ஜுனனின் தோளில் கைவைத்து “மகிழ்வுடன் செய்யப்படாத எச்செயலும் முழுமைகொள்வதில்லை” என்றார். பின் திருஷ்டத்யும்னனின் தோளைத் தொட்டு “படைகள் முற்றொருங்கிவிட்டனவா?” என்றார். “ஆம், அரசே” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “நன்று, நாம் களம்செல்வதற்கான நற்பொழுது குறிக்கப்பட்டுள்ளதா?” என்றார் இளைய யாதவர். சகதேவன் “ஆம் யாதவரே, இந்த ஒருநாழிகையும் உகந்த நற்பொழுதுதான்…” என்றான். “இத்தருணத்தின் தெய்வம் எது?” என்றார் இளைய யாதவர். “கருவிழிக் கொற்றவை” என்றான் சகதேவன். “அன்னையை துதிக்கும் பாடல் எழுக!” என்றார் இளைய யாதவர்.

சகதேவன் கைகாட்ட ஏவலன் ஓடிச்சென்று முதிய சூதரை அழைத்துவந்தான். நரம்புகள் பரவிய எலும்புடலும் பழுத்த விழிகளும் கொண்ட சூதர் தன் கிணைப்பறையை மீட்டி ஆழ்ந்த குரலில் பாடத்தொடங்கினார்.

யோகிகளின் தலைவியை வணங்குகிறேன்.

பரம்பொருளின் தோற்றமே

அலகிலியில் வாழ்பவளே

அழிவற்றவளே குன்றாதவளே

மூவிழியன் துணைவியே

கரியவளே இருண்டவளே

வணங்குகிறேன் உன்னை.

 

அடியார்க்கு அருள்பவளே

உன் அடிவணங்குகிறேன்

காளி, நலமருள் நங்கை

வணங்குகிறேன் உன்னை

அனைத்தையும் அழிப்பவனின் துணையே

பெரியவளே காப்பவளே

அனைத்தும் அருள்பவளே

என்னுடன் நிலைகொள்க!

 

காத்யரின் குலத்தோளே

தொழுதற்குரியவளே

கொடியோளே வெற்றித்திருமகளே

வெற்றிவடிவானவளே

மயிற்கொடியினளே

அணிநிறைந்தோளே

அணியென சூலம் கொண்டவளே

வாளும் கேடயமும் ஏந்தியவளே

இடையருக்கு உகந்தவளே

எழுக இத்தருணத்தில்!

 

இருளெருமைச் செங்குருதி ஆடுபவளே

குசிகருக்கு உரியவளே

மஞ்சள் சுற்றியவளே

ஓநாய் பசி கொண்டு

தீயோரை விழுங்குபவளே

போரில் களிப்போளே

வணங்குகிறேன் உன்னை

வெண்ணிறத்தோளே கரியோளே

கைடபனை கொன்றவளே

அலகிலா விழியோளே

புகைவண்ண விழிவிரித்தோளே

நோக்குக என்னை

அருள்க அன்னையே!

அர்ஜுனன் கைகூப்பி விழிமூடி நின்றான். சகதேவன் கைகாட்ட அப்பால் ஒருங்கி நின்றிருந்த தேர் வந்து நின்றது. அதன் மேல் குரங்குக் கொடி பறந்தது.அப்பால் இசைச்சூதர்கள் தங்கள் கலங்களுடன் வந்து அணிவகுத்தனர். தேர்ப்பாகன் அமரமேடையில் இருந்து மறுபக்கம் இறங்கினான். ஏழு வெண்புரவிகளும் நீண்ட கழுத்துக்களுடன் மெலிந்த கால்களுடன் நாரைகள் விலங்குருக் கொண்டவைபோல தோன்றின. இளைய யாதவர் நிலம்தொட்டு வணங்கி தேரை அணுகி வலக்கால் வைத்து ஏறி அமரமேடையில் அமர்ந்தார். அவர் கடிவாளத்தை எடுத்தபோது புரவிகளில் ஒன்று அவர் ஏறிக்கொண்டதில் மகிழ்வுற்று பர்ர்ர் என ஓசையிட்டது. இன்னொரு புரவி மணிகள் கட்டப்பட்ட தலையை அசைத்து சலங்கையோசை எழுப்பியது.

“பார்த்தா, உன் தேரில் ஏறிக்கொள்க! உன் தெய்வங்கள் உடனமைக! உன் மூதாதையர் வாழ்த்துக! சீற்றம்கொண்டெழும் அறம் உன் வில்லில் குடியேறுக! அறத்தின்பொருட்டு எழுந்த அத்தனை சொற்களும் அம்புகளென உன் ஆவநாழியில் நிறைக!” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் கைகளைக் கூப்பியபடி சென்று அங்கே நடப்பட்டிருந்த மின்கதிர்க்கொடியை வணங்கியபடி நின்றான். மிக மெல்ல ஒரு மின்னல் கீழ்வானில் எழுந்தமைய தொலைவில் ஓர் இடியோசை முழங்கியது. திருஷ்டத்யும்னன் அறியாது மெய்ப்பு கொண்டான். குளிர்காற்றில் ஆடைகள் எழுந்து சிறகடிக்க அந்த ஓசை மட்டும் கேட்டது.

அர்ஜுனன் யுதிஷ்டிரரையும் பீமனையும் வணங்கிவிட்டு தேரை சுற்றிவந்தான். இளைய யாதவரின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு நின்றான். காண்டீபத்தை இரு வீரர்கள் எடுத்துவந்தார்கள். சூதர்கள் மங்கல இசைமுழக்க அவன் காண்டீபத்தை தொட்டு வணங்கி கையில் எடுத்தான். தேரின் படியைத் தொட்டு வணங்கியபின் மேலேறி பீடத்தில் நின்று இடக்கையில் காண்டீபத்தை பற்றி தனக்கிணையாக நிறுத்திக்கொண்டான். புரவிகளில் ஒன்று முன்காலால் நிலத்தை தட்டி கனைத்தது. அர்ஜுனன் வில்லில் நாண் பொருத்தி ஒரே இழுப்பில் பூட்டினான். முழவுகள் விசைகொண்டு துடிக்க மங்கல இசை விரைவுகொண்டது.

அர்ஜுனன் தேர்த்தட்டில் நிமிர்ந்த தலையுடன் நின்றான். அவன் நெஞ்சு ஏறியிறங்கியது. இளைய யாதவர் திரும்பி நோக்கி புன்னகையுடன் “அனைத்தறங்களையும் கைவிடுக, என்னையே அடைக்கலம் புகுக!” என்றார். பின் தன் இடையிலிருந்த பாஞ்சஜன்யத்தை எடுத்து ஓங்கி முழக்கமிட்டார். அர்ஜுனன் நாணில் வலக்கை விரலோட்டி அதை விம்மச் செய்தான். உரத்த யாழிசைபோல நாண் ஒலி செய்தது. பின்னர் சிம்மம்போல் உறுமியது. அவன் தன் தேவதத்தத்தை எடுத்து ஓமென்ற ஒலியை எழுப்பினான். இளைய யாதவர் சாட்டையால் புரவியை மெல்ல தொட அவை குலுங்கி எழுந்து சீரான விரைவுத்தாளம் கொண்டு பலகைப்பாதையில் ஏறி கிழக்கு நோக்கி சென்றன.

திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரரை நோக்கினான். அவர் விழிநீர் வழிய கைகூப்பி நின்றிருந்தார். நகுலனும் சகதேவனும்கூட விழிவழிந்துகொண்டிருந்தார்கள். பீமன் சினமோ சலிப்போ கொண்டவன்போல் தலையை அசைத்தான். திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரரின் அருகணைந்து “தாங்கள் கிளம்பும் பொழுதும் அணைகிறது, அரசே” என்றான்.

முந்தைய கட்டுரைசிலைத்திருட்டுக்கள்
அடுத்த கட்டுரைதமிழனின் அறிவியல்