பெண்ணியமும் பெண்களின் எழுத்தும்
ஜெ,
பெண் எழுத்து பற்றிய அந்த விவாதம் பெண்ணியமும் பெண்களின் எழுத்தும் போகன் எழுதிய ஒரு பகடிக்குறிப்பில் இருந்து ஆரம்பமானது. அதற்கு பெருந்தேவி எழுதிய எதிர்வினை முக்கியமானது என நினைக்கிறேன்
ஆர்
செக்சிஸ்ட் ‘நகைச்சுவை’: சிரிக்காதிருப்பதன் அரசியல்
பெருந்தேவி
“Sexist humor does not just incidentally incorporate sexist beliefs-it depends upon those beliefs for the fun” (Merrie Bergmann)
முதலில் இக்கட்டுரையை சில கருத்தியல், கருத்துநிலைகளுக்கான எதிர்வினை எனப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். யாரையும், குறிப்பாக என் நண்பர்களைத் தாக்குவது என் நோக்கமல்ல. ஆனால், ஒரு பெண்ணாக நான் அறியப்பட்டிருப்பதால், பால் இருப்பு என்பது இங்கே பால் அரசியலோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இதை எழுதுகிறேன்.
நகைச்சுவை என்பது இன்றியமையாத சமூக, பண்பாட்டுச் செயற்பாடாக பலரால் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. தனிநபர்களிடையே, குழுக்களிடையே சமூகப் பிணைப்பை உறுதிசெய்தல், அதன் செயற்பாடுகளில் முக்கியமான ஒன்று. ஆனால் பல சமயம், நகைச்சுவை, இதற்கு மாறாக, பிணைப்பை குலைக்கிறது, பரஸ்பர சந்தேகத்தை வளர்க்கிறது. குறிப்பாக, இனவாத, சாதிய, மதவாத, பால்பாகுபாட்டு நகைச்சுவை. பால்பாகுபாட்டு (sexist) நகைச்சுவை பற்றி இப்பதிவு.
பால்பாகுபாட்டு நகைச்சுவை பல சமயங்களில் எளிதாக அடையாளங்காணக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில், இத்தகைய நகைச்சுவையோடுதான் நாம் குடும்பத்தில் வளர்கிறோம், கல்விக்கூடங்களில் பயில்கிறோம், பணியிடங்களில் பணியாற்றுகிறோம். உதாரணமாக, உங்கள் குடும்பம் வெளியே செல்லத் தயாராகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘அவளா, கண்ணாடி முன்னாடி போய் நின்னா வர ஒரு யுகமாகும்’ என்று உங்கள் சகோதரியை அல்லது மனைவியை அல்லது அம்மாவைப் பற்றிச் சிரிப்போடு சொல்லப்படும். இதைக் கூறுபவர் ஆணாக இருக்கவேண்டுமென்பது அவசியமில்லை, ஆனால் பெரும்பாலும் இவ்வாறு விவரிக்கப்படுபவர் பெண்ணாக இருப்பார் என்பதுதான் விஷயம். இங்கே அந்தச் சொல்லாடலின் இலக்குதான் கவனிக்க வேண்டியது.
பெண்ணுக்கு அலங்காரத்தில் விருப்பம், அதனால் அதிக நேரம் கண்ணாடிக்குமுன் நிற்பாள், நல்ல புதிய ஆடைகளை உடுத்த விருப்பம், துணிக்கடைக்குப் போனால் கூடப் போகிறவன் பாடு அதோகதி, இந்த வகையில் குடும்பத்தில் புழங்குகிற நகைச்சுவை, சமூகத்தின் பொதுப் புத்தியாகவும் உள்ளது.
அழகோடு, அலங்காரத்தோடு பெண் அடையாளப்படுத்தப்படுகிற அதே நேரத்தில் எதிரிணையாக அறிவோடும் திறமையோடும் ஆண் அடையாளப்படுத்தப்படுதல் நடக்கிறது. போலவே இயற்கையோடு, வீட்டோடு பெண்ணும், கலாச்சாரத்தோடு, புறவெளியோடு ஆணும். இனப்பெருக்கத்தை முன்னிட்ட எதிர்ப்பாலியல் நியதிகள் (heterosexual norms) தொழிற்படுகிற சமூகத்தில் ஒருவகையான complementarityயை வலியுறுத்த, ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ வழிசெய்ய, எதிர்ப்பாலியல் அடிப்படையில் குடும்பத்தை அமைத்துக்கொள்ள, இத்தகைய எதிரிணைக் கருத்தாக்கத் தொடர்புறுத்தல்கள் உதவுகின்றன.
ஆனால் தொடர்ந்து இந்தத் தொடர்புறுத்தல்கள் யதார்த்தத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. அலங்காரத்தில் ஈடுபடாத, அல்லது வெளியே கிளம்பும்போது இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடும் பெண்கள் உண்டு. போலவே, சிலமுடிகளே இருக்கும் தலையையும் வாரிவாரிச் சீவிக்கொள்ளும் ஆண்கள் உண்டு. ஆனால், இவற்றையெல்லாம் பால் கட்டமைப்பு பொதுப்புத்தி கண்டுகொள்ளாமல் கடந்துவிடும்.
ஆண் இயல்பு, பெண் இயல்பு என்று கட்டமைக்கப்பட்டிருக்கும், மேற்சொன்ன இருமைச் சட்டகத்தில் அமைந்த மதிப்பீடுகள், நியதிகள் நகைச்சுவையிலும் தொடர்ந்து மீள் உருவாக்கப்படுகின்றன. எனவே நகைச்சுவை என்பது உங்களைச் சிரிக்க வைக்கக்கூடிய வகைமை என்றாலும், சமூக மதிப்பீடுகளை, நியதிகளை மீள்-உருவாக்கம் செய்யும் வகையில் தீவிரமான conventional சமூக, பண்பாட்டுச் செயற்பாடு ஆகும். சொல்லப்போனால், இங்கே நகை, தீவிரமான conventional செயற்பாட்டுக்கு முகமூடி மட்டுமே.
செக்சிஸ்ட் அல்லது பால்பாகுபாட்டு நகைச்சுவை, பால் இருமையை இயல்பாக ஏற்கிறது. மதிப்பீடுகளை அதே வழமையான வகையில் வலியுறுத்துகிறது. நியதிகளைத் தாண்டிச் செல்வோரை ஏளனத்துக்குள்ளாக்குகிறது.
இருமைக் கட்டமைப்பில் அறிவு என்பது ஆண் சார்ந்ததாக இருக்கும்போது, அறிவுச் சூழலில் பெண் பங்கேற்பது என்பது, எதிர்ப்பாலியல் நியதிகளின் அடிப்படையில் இயங்கும் சமூகத்துக்குச் சவாலான ஒரு விஷயம். அடிப்படையை ஆட்டங்காண வைக்கக்கூடியது அது. எனவே ‘உன் இடம் இல்லை இது’ என்றுதான் பெண்ணிடம் தொடர்ந்து சொல்லப்படும். இங்கே, இதை ஆண்கள் சொல்வார்கள் என்று நான் கூறவில்லை, கவனிக்கவும். ஆண்- சதிக் (male conspiracy) கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கையில்லை. பொதுவாக சதிக் கோட்பாடுகள் காலாவதியானவை. இங்கே முக்கியம் எதிர்ப்பாலியல் நியதிகள், அதாவது கடவுளின் விதிகளைப் போல் இருப்பவை அவை.
தமிழிலக்கியச் சூழலில் சில எழுத்தாளர்களால் பெண் எழுத்தாளர்களிடம் கூறப்படுவதும் இதேதான்: ‘உன் இடம் இது இல்லை.’ பெண் எழுத்தாளர்களிடம் இலக்கியத்துக்கான மொழி இல்லை, அறிவு இல்லை, வாசிப்பு இல்லை, ஆற்றல் இல்லை. இப்படி எத்தனை கேட்டிருக்கிறோம்? போகன் சங்கரின் பதிவுகள் இதற்கு உதாரணம். ஆனால் அவர் என்றில்லை, இன்னும் வேறு பல எழுத்தாளர்களின் பதிவுகளையும் இதே பாணியில் பார்த்திருக்கிறேன். (உதாரணம்: ஜெயமோகனின் சில கருத்துகள், சாரு நிவேதிதாவின் தடம் இதழ் பேட்டி) போகன் என் நண்பரும்கூட, அவர் என் பதிவை கருத்து நிலை வேறுபாடாக மட்டும் பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன்.
போகனது சில பதிவுகள் இவை, செக்சிஸ்ட் பதிவுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.
“ஆண் பெண் உறவுகளில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஒரே வழி ஒவ்வொரு ஆணும் பெண்ணிடம் “நானும் உன்னைப் போல ஒரு முட்டாள்தான்” என்று மனம் திறந்து சொல்லிவிடுவதுதான்.”
**
“தேன்மொழி தாஸ் கவிதைகளில் ஆரம்பித்து இன்றைய பெண்கவிகள் பற்றி ஒரு சாவிக்குறிப்புகள் தொடர் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று யோசனை.நண்பரிடம் தெரிவித்தேன்.
ஒட்டுமொத்தமாக அவர்கள் எல்லோரையும் பகைத்துக்கொள்ள இதைவிட சிறந்த வழி கிடையாது என்று சிலாகித்தார்.”
**
“வரலாற்றில் நாம் நமது கலாச்சாரச் சீர்கேட்டின் உச்சத்தில் இருக்கிறோம் எனத் தோன்றுகிறது. ஒழுக்கக்கேடு எங்கும்இருக்கிறது.வற்புறுத்தப்படுகிறது
நமது திரைப்படங்கள்,பாடல்கள்,ஓவியங்கள், பெண்கவிஞர்களின் கவிதைகள், ஆண் கவிஞர்களின்அட்டைப்படங்கள்,வண்ணத்திரை நடுப்பக்கங்கள்,விளம்பரங்கள்..
இப்போது இது ஒருபடி முன்னேறி பெயர்ப்பலகைகளுக்கும் பரவிவிட்டது.”
**
“ஒட்டுமொத்த தமிழ் இலக்கிய வரலாற்றிலும் எந்தப் பெண்எழுத்தாளராலும் எழுத முடியாத அந்தப் பதினைந்து வரிகளை நான் மருதத்தில் படித்திருக்கிறேன்.”
**
“குழித்துறையில் ஒரு பெண் இருக்கிறார்.காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் தன் கூந்தலைப் பராமரிக்கிறார்.இப்படி உச்சி முதல் உள்ளங்கால் வரை பராமரிக்க பெண்களுக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
ஆண்களுக்கு என்ன இருக்கிறது?
சிலருக்கு இருக்கும் மூளையையாவது சரியாகப் பராமரிக்கிறார்களா?
அதைக்கொண்டு கவிதை எழுதிவிடுகிறார்கள்!”
**
“ஒரு கேள்வி
வணக்கம் சார் உங்கள் பதிவுகளை சமீபகாலமாக படித்துவரும் குடும்பத் தலைவி நான்.நீங்கள் தொடர்ச்சியாக அவற்றில்பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை அறிவில்லை ஆற்றல் இல்லை என்று சொல்லிவருகிறீர்கள் சரிதானா?
இதோ பாருங்கள். பெண்களுக்கு ஆற்றல் இல்லை என்று நான் சொன்னதே இல்லை.அதுவும் குடும்பத்தலைவிகளுக்கு.நானே நேரடியாகப் பாதிக்கப்.. பார்த்திருக்கிறேன்.”
**
மேலே பதிவுகளில் நாம் எளிதாகப் பார்க்கக்கூடியது, அறிவும் மூளையும் இலக்கியமும் ஆற்றலும் ஆணுக்கானது என்பதுதான். ஒருவர் கேட்கலாம், ஏன் இதையெல்லாம் நகைச்சுவையாகக் கடந்துசெல்லக்கூடாது என்று. பெண்களுக்கு, அதுவும் குறிப்பாக பெண்ணியவாதிகளுக்கு நகைச்சுவை உணர்வு கிடையாது, என்று எள்ளுவதும் காலம்காலமாக செக்சிஸ்ட் நகைச்சுவையின் ஓர் அங்கம். ஒருவரின் தனிப்பட்ட மொழி நிகழ்த்துதல் மாத்திரமல்ல இது.
ஏன் இவற்றை வாசித்துவிட்டு என்னாலோ வேறு சில பெண்களாலோ சிரிக்க முடியவில்லை? ஏனெனில், பெண்கள் systemic inequality யைக் காலம்காலமாகச் சந்தித்து வருபவர்கள். இலக்கியம் உள்ளிட்ட பொதுச் சமூக, பண்பாட்டு வெளியில் அவர்களது பங்களிப்பு ஆண்களை ஒப்பிடுகையில் கணிசமாக இல்லை. (கவனிக்கவும், காத்திரமாக என்று நான் கூறவில்லை). கார்க்கி, அவ்வை, அக்கமாதேவி, ஆண்டாள் என்று சில பெயர்கள் உண்டுதான், ஆனால் அவை கணிசமல்ல.
தமிழ் நவீன இலக்கியச் சூழலிலும் பாரதி, புதுமைப்பித்தன், மௌனி போன்று தடக்கென்று, அந்தக் காலகட்டத்தில் ஒரு முன்னோடிப் பெண் பெயரைக் கூறமுடியாது. (வை.மு.கோதைநாயகி அம்மாள் என்று யாரும் சொல்லிவிடவேண்டாம்.) காலவரிசைப் பிரகாரம் இலக்கிய எழுத்து என்று அறியப்பட்டிருப்பதற்கு பின்னால் வந்தவர்கள் பெண்கள். மட்டுமல்லாமல், வீட்டுக்கு வெளியே கல்வி, அறிவுச்சூழலில் பொதுவெளிப் பங்கேற்பு என்பதே பல பெண்களுக்கு சமீப சில பத்தாண்டுகள் வரை இங்கே கிட்டியதில்லை. அதாவது, அவர்களுக்கு அறிவை ஈட்டும் எண்ணமிருந்தாலும், முனைப்பிருந்தாலும், வாய்ப்பு கிட்டியதில்லை. அல்லது பலருக்குச் சமீபத்தில்தான், காலனிய நவீன கல்வியை ஒட்டித்தான் கிடைத்திருக்கிறது. (தேவதாசிகள் என்ற வகைமையில் வருபவர்கள் விதிவிலக்கு). பெண்கல்விக்குத்தான் எத்தனை போராட்டங்கள் நடந்திருக்கின்றன? மாறாக அறிவு உற்பத்திச் சூழலில் காலாகாலமாக வசதி வாய்ப்பு பெற்றிருப்பவர்கள், காலூன்றி நிற்பவர்கள் ஆண்கள். இது நம் சூழலின் வரலாற்று உண்மை. இதைத்தான் systemic inequality என்கிறேன். (இங்கே சாதி வேறுபாடு போன்றவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம். அது தனிப்பதிவுக்கானது)
இத்தகையச் சமனில்லாத ஒரு தளத்தில், சமீப ஆண்டுகளில் நுழைந்திருக்கும் பெண்கள், செக்சிஸ்ட் நகைச்சுவைக்கு எப்படி சிரிக்க முடியும்? தனக்கு மூளை குறைவு என்று ஓர் ஆண் சுய எள்ளல் செய்துகொள்ளும்போது வேண்டுமானால் சிரிக்கலாம். ‘அறிவில்லை, ஆற்றலில்லை’ என்று ஓர் ஆண், பெண்களை அறிவுச்சூழலிலிருந்து தள்ளிவைத்துச் சொல்லும்போது, அவர் ஏற்கெனவே இங்கே இருக்கும் பால் பாகுபாட்டுக்குத்தான், பால் அதிகார அரசியலுக்குத்தான் துணைபோகிறார்.
பெண் எழுத்தாளர்களை, எழுத்தை அப்போது யாருமே விமர்சிக்கக்கூடாதா என்று யாரும் கேட்கலாம். தாராளமாக விமர்சியுங்கள். வாசகராக உங்கள் உரிமையும் கூட இது. ஆனால் பெண்கள் அல்லது பெண் எழுத்தாளர்கள் என்று ஒரு தொகுதியினரை ஒரேமாதிரி ‘புத்தி மட்டு’ வார்ப்புருவில் போட்டு அடைக்காமல், அவர்கள் பிரதிகளை எதிர்கொள்ள முயலலாம். ஒரு சக ஆண் எழுத்தாளருக்குக் கொடுக்கும் கௌரவத்தை அவற்றுக்குத் தந்து விமர்சிக்கலாம். ஒரு தேர்ந்த இலக்கிய வாசக, படைப்பாளியின் செயலாகவும் அது இருக்கும். இருமைச் சட்டகம் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கேடுதான். மற்றபடி, பெண்களின் ஆக்கங்களுக்கு பெரியமனிதத்தன ஏற்பு (condescending acceptance) தேவையே இல்லை. சமமாக நடத்தப்பட்டாலே போதும்.
*
அன்புள்ள ஆர்
பெருந்தேவியின் இக்கட்டுரை முக்கியமானதுதான், ஆனால் இதை ஒரு கவிஞர் எழுதியிருக்கக் கூடாது. இது இலக்கியவாதியின் குரல் அல்ல. பண்பாட்டுச் செயல்பாடுகளை பலவகையான கருத்தியல்மோதல்களாகவும் படைப்புகளைக் கருத்தியல் குவியங்களாகவும் சுருக்கிக்கொள்ளும் கோட்பாட்டாளர்களின் குரல். இது இலக்கியத்திற்கு எதிரானது. சொல்லப்போனால் இந்தப்பார்வை வந்ததுமே இலக்கியம் பொருளற்றுப்போகிறது. பால் திரிவதுபோல பல துகள்களாகச் சிதறி வெறும் கருத்தியல் திவலைகளாக மாறிவிடுகிறது. கோட்பாட்டாளர்கள் அந்தத் திவலைகளை தனித்தனியாக ஆராய்ந்து வகுத்து அவற்றை தொகுத்து அதை பால் என காட்டுகிறார்கள். ஆகவே இலக்கியம் என்பது மிக எளிது என அவர்கள் நினைக்கிறார்கள். புதுமைப்பித்தனின் சொற்களில் சொல்லப்போனால் வேதாந்திகளின் கைக்குச் சிக்காத கடவுள்.
இலக்கியம் பெருந்தேவியின் இக்கட்டுரை செல்லும் வழிக்கு நேர் எதிர்வழியில் செயல்படுவது. அது நேரடியானது அல்ல. நேரடியானதல்ல என்பதால்தான் அது அத்தனை உத்திகளையும் நுட்பங்களையும் ஜாலங்களையும் கையாள்கிறது. ஒரு புனைவுப்பகுதி, அல்லது புனைவெழுத்தாளனின் ஒரு சொல்லாடல், ஏன் எழுகிறது என்பதற்கு நேரடியாக அவன் கருத்தியல்நிலைபாடு என்ன என்று கேட்டு விடைகாண முடியாது. அவன் புனைவுகள், அவன் கட்டமைத்துக்கொள்ளும் ஆளுமை ஆகியவற்றைக்கொண்டுதான் அவற்றை சென்றடைய முடியும். பலசமயம் ஆராய்ந்து அறிதலாக அது இருக்காது. ‘எப்படியோ’ உணர்ந்துகொள்வதாகவே இருக்கும். அப்படி உணர்ந்துகொண்டபின்னர் அதை முன்வைப்பதில்தான் தர்க்கமும் ஆய்வுமுறையும் செயல்படமுடியும்.
இலக்கியவாதியின் கருத்துநிலை, இலக்கியப்படைப்பின் கருத்துநிலை ஒரு விளையாட்டு. கருத்தியலில் அதைக் கேட்பவன் , வாசிப்பவன் என்னும் இரண்டாவது ஆள் இல்லை. அது ஒற்றைப்படையானது. ஆனால் இலக்கியவாதியின் அனைத்துச் சொற்களுடனும் அதை வாசிப்பவனுடனான ஊடாட்டம் உண்டு. அது எவருக்கானது என்னும் வினா, அதன் இடைவெளிகளை நிரப்பிக்கொள்வது யார் என்னும் பார்வை இல்லாமல் அதை ஒற்றைப்படையாக அணுகவே முடியாது.
இந்த வகையான விவாதங்களின் பெறுபயன் என்னவென்றால் இலக்கியச் சொல்லாடல்கள் உடனே கருத்தியல்நடுத்தெருவுக்கு இழுத்துவிடப்படுகின்றன. இலக்கியத்தின் பூடகங்கள், விளையாட்டுக்கள் பற்றிய ஞானமோ நுண்ணுணர்வோ இல்லாத பெருங்கும்பல் வந்து சூழ்ந்து எழுத்தாளனுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். “இதோ பார் , உனக்கு என்ன பிரச்சினை? எல்லாரும் எப்படி நாகரீகமாக ஒழுக்கமாக இருக்கிறார்கள்? எப்படி கவனமாகப் பேசுகிறார்கள்? உனக்கு என்ன கேடு? நாக்கின்மேல் கட்டுப்பாடு வேண்டாமா? என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக்கொள். நாலுசுவருக்குள் பேசு. ஏன் எழுதித் தொலைக்கிறாய்?” என்கிறார்கள். இலக்கியவாதி என்பவன் இவர்களின் அந்த நாகரீகங்களும் இடக்கரடக்கல்களும் இல்லாதவன். கனவுக்கும் மனதுக்கும் சொல்லுக்கும் வேறுபாடு அழியும்போதுதான் அவன் இலக்கியவாதி.
இவர்களின் இந்த கூட்டு மிரட்டல்போல இலக்கியத்திற்கு அபாயமானது ஏதுமில்லை. இந்த கூட்டுக்குரலுக்கு எதிராக ‘போங்கடா வெண்ணைகளா’ என்ற நிலைபாட்டை எடுக்காத ஒருவன் ஒருபோதும் உருப்படியாக எதையும் எழுதிவிடப்போவதில்லை. இந்த வகையான எச்சரிக்கைகள், கவனமெடுப்புகள் ஒருவனிடம் கொஞ்சம் வந்தால்கூட, எழுதும்போது அணுவிடை அது ஊடுருவினால்கூட எழுத்து நுட்பமான ஒரு திரிபுக்கு ஆளாகிவிடும். அதற்கும் பொதுப்புத்திக்கும் இடையேயான ஒரு சமரசம் நிகழ ஆரம்பித்துவிடும். அதன்பின் அது கலை அல்ல. கொலைவாளின் கூர் கொண்டது கலை. அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
நான் ஒப்புக்கொள்கிறேன், ஒரு சமூகவெளியில் பாலியல்மேலாதிக்க நகைச்சுவைகள் புண்படுத்துபவை. ஒரு பணியிடச்சூழலில், பொது இடங்களில் அவை கண்டிக்கப்படவும் வேண்டுமென்றால் தண்டிக்கப்படவும் வேண்டியவை. ஆனால் இலக்கியப்படைப்பில் இலக்கியம் சார்ந்த சொல்லாடல்களில் அல்ல. ஆம், இலக்கியத்திற்கு மட்டும் சில தனியுரிமைகள் அளிக்கப்பட்டாகவேண்டும். ஒருவன் தன்னிச்சையாக வெளிப்பட வாய்ப்பில்லாதபோது அங்கே உண்மையான இலக்கியப்பேச்சு நிகழ முடியாது. மரியாதைப்பேச்சு இலக்கியமே அல்ல. ஆகவேதான் இலக்கியவிவாதங்களில் அத்துமீறல்களை அனுமதிக்கவே வேண்டும் என முப்பதாண்டுகளாகச் சொல்லிவருகிறேன். என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களில் அத்துமீறிய எவரைப்பற்றியும் நான் இன்றுவரை புகார் சொல்லி எதுவும் எழுதியதில்லை.
உண்மையிலேயே ஆணாதிக்க நோக்குக்கு இலக்கியத்தில் இடமுண்டா? ஆம், கண்டிப்பாக உண்டு. ஏனென்றால் அது மானுட உள்ளத்தின் ஒரு வெளிப்பாடு என்றால்,ஒரு சிந்தனைநிலை என்றால் அதுவும் இலக்கியத்தின் பகுதியே. அதைக் கருத்தில்கொண்டு அப்படைப்பாளியை பேசலாம். அவரை நிராகரிக்கலாம். நான் இன்று திரும்பிப் பார்க்கையில் கணிசமான பெரும்படைப்பாளிகளிடம் ஆணாதிக்க அம்சம் வலுவாக இருப்பதைக் காண்கிறேன். ‘செக்ஸிஸ்ட்’ நகைச்சுவைகளின் உஸ்தாத் என்றால் வைக்கம் முகமது பஷீர்தான். [அதற்கான கிளாஸிக் உதாரணக்கதை பூவம்பழம்] புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி ஆகியோரிடம் அந்த அம்சம் உண்டு. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, மார்சல் புரூஸ்ட், தாமஸ் மன்….
ஏன்? ஒரு வகையில் இதைப்புரிந்துகொள்ள முயல்கிறேன். ஒரு மனிதரில் வெளிப்படும் ஆதாரமான ஆற்றலே இலக்கியத்தின் விசை. மலையேறுபவரிலும் தத்துவவாதியிலும் வெளிப்படுவது அந்த ஆற்றலே. ஆணில் அது ஒரு முதலாண் [alpha male] தன்மைதான். ஒருவகையான மூர்க்கமான வேகம் அது. அவ்விசை சற்றே ஆணாதிக்க இயல்புக்கு மாறுகிறதுபோலும். உறுதியாகச் சொல்லமாட்டேன், ஆனால் அப்படித் தோன்றியிருக்கிறது.
இந்த அம்சம் பெண்களில் உண்டா? கண்டிப்பாக. நான் விரும்பும் பெரும்பாலான பெண் எழுத்தாளர்களில் ஒருவகையான முதல்பெண் [alpha female] அம்சம் இருப்பதைக் கண்டிருக்கிறேன். இது மூன்று இயல்புகளாக அவர்களில் வெளிப்படுகிறது.
அ. ஆண் ஒரு பொருட்டாகவே இல்லாத தனக்குத்தான் தன்மை. மலையாளத்தில் அன்னையரின் இந்த இயல்பைச் சுட்ட அழகான சொல் ஒன்றுண்டு – ‘தான்போரிமை’. தானே போதும் என்னும் நிலை. ஆணையும் குழந்தைகளையும் தன் உடலின் ஒரு பகுதியாகக் காணும் நிலை.
ஆ. எதிரம்சமே இல்லாத, ஒரு நேர்நிலைக்கூறாக விரியும் உலகப் பார்வை. எதையும் வெல்லவோ, நிறுவவோ முயலாத பெருநோக்கு.
இ. பேரன்னைத்தன்மை. தன் குழந்தைகளாக உலகைப் பார்க்கும் இயல்பு.
கமலாதாஸ் அந்த முதலியல்பைக் கொண்டிருந்தார். குர்ரதுல்ஐன் ஹைதரிடம் இரண்டு இயல்புகளைக் காணலாம். ஆஷாபூர்ணா தேவியிடம் மூன்றையும். உலக இலக்கியப்பரப்பில் எனக்கு மிக அணுக்கமான ஜார்ஜ் எலியட் இம்மூன்று அம்சங்களையும் கொண்டவர்
கடைசியாகப் பகடி. பொதுவாழ்க்கையிலும் இலக்கியத்திலும் பகடி என்றும் இருந்துவந்துள்ளது. பகடி, அங்கதம் இரண்டிலும் எவரோ ஒருவருக்கு எரிச்சலூட்டும் ஓர் அம்சம் இருந்தே தீரும். அந்த எரிச்சலூட்டும் அம்சம் மொழித்திரிபாக, படிமமாக, பார்வைக்கோணலாக வெளிப்படுகையிலேயே அது பகடி ஆகிறது. ஆகவே எவரையும் புண்படுத்தாத பகடி என்று ஒன்று இருக்கவே முடியாது. அந்த உரிமையை பகடியாளனுக்கு அளிப்பதுதான் பண்பாட்டின் முதிர்ச்சி.
ஓரு நிகழ்வு. வேஸ்யாவிருத்தி என்ற சொல் Prostitution என்பதற்கான மலையாளம். மலையாளப் பகடி எழுத்தாளர்களில் பேரிலக்கியவாதியான வி.கே.என் ஒரு கதையில் ‘கல்ஃப் ராஜ்யங்களில் நேர்ஸ்யாவிருத்தி செய்வது’ என எழுதியிருந்தார். நர்ஸ்களை அவமதித்துவிட்டார் என ஒரு குரல் எழுந்தபோது முற்போக்குச் சிந்தனையின் ஆசானாகிய ஈ.எம்.எஸ் சொன்னார் ‘சாக்கியார்க்கு எந்தும் ஆகாம்” [சாக்கியார் என்னவேண்டுமென்றாலும் சொல்ல்லாம்] சாக்கியார் என்பது சாக்கியார்கூத்து என்னும் கலையின் நடிகர். முடியேற்றி மேடைக்கு வந்த சாக்கியார் எதைவேண்டுமென்றாலும் சொல்லலாம். முடியாட்சிக் காலத்தில் அரசியின் கள்ளக்காதலை வரை பகடி செய்திருக்கிறார்கள். அவர் சொல்லும் ஒரு சொல்லும் தண்டனைக்கோ எதிர்ப்புக்கோ உரியது அல்ல. சாக்கியார் சினம்கொண்டு மணிமுடி எடுத்து வைத்துவிட்டாரென்றால் அதன்பின் 12 ஆண்டுகளுக்கு மழைகிடையாது.நாகரீக சமூகங்கள் பகடிக்கு அந்த இடத்தை எப்போதும் அளித்துவருகின்றன.
அரசியல்சரிநிலை கொண்ட பகடி உண்டா? கொள்கைகள், கோட்பாடுகளுக்கு விசுவாசமான பகடி உண்டா? வாய்ப்பே இல்லை. பகடி என்பதே அரசியல்சரிகளுக்கு எதிரானது. அது தீவிரநிலைகளைத்தான் பகடி செய்யமுடியும். அரசியல்சரிகள்தான் தீவிரநிலையின் உச்சங்கள். வி.கே.என் எவரை எல்லாம் பகடி செய்திருக்கிறார்? இடதுசாரிகளை முதன்மையாக. அவருடைய நெருக்கமான நண்பரான ஈ.எம்.எஸ் அவர்களை [ஈ.எம்.எஸ் முதல்முறையாக முதல்வராக பதவி ஏற்றபோது வி.கே.என் அவரைப்பார்க்கச் சென்றார். திரும்பிச்செல்ல அரசுக்கொடி இட்ட தன் காரை ஈ.எம்.எஸ் அளித்தார். திருவனந்தபுரம் முதல் திருவில்வாமலை வரை அத்தனை சாராயக்கடை, கள்ளுக்கடைகளிலும் முதலமைச்சரின் கார் நின்று சென்றது. அதில் மீன்விற்பவர்களும் கள்ளுவிற்பவர்களும் மண்வெட்டியுடன் விவசாயிகளும் அமர்ந்திருந்தார்கள். வரலாற்றில் முதல்முறையாக ஒரு கார் தள்ளாடி ஓடியது]. கூடவே மரபை, மரபுவாதிகளை, அவர்களின் உச்சகட்ட ஆளுமையான வள்ளத்தோள் நாராயணமேனனை [வள்ளத்தோள் வர்ணிக்கும்போது பெண்களின் பின்னழகு நம்மை தொடும், நுண்ணுணர்வுள்ள இடங்களில்- வி.கே.என்] பெண்ணியவாதிகளை, ஒழுக்கவாதிகளை, நக்சலைட்டுகளை, எழுத்தாளர்களை… ஒரு மதிப்பீட்டையும் அவர் விட்டுவைக்கவில்லை.
அத்துடன் பகடியில் ஓர் ‘ஆபாச’ அம்சம் இல்லாமல் இருக்காது. விகேஎன் பெரும்பாலும் ஆபாச எழுத்தாளர்தான். [அவள் உதடுகள் பய்யன்ஸ்குக்கு பிடிக்கும். ஆனால் காமத்தின்போது அவனால் அதைப் பார்க்கமுடிவதில்லை- விகேஎன்] ஏனென்றால் அதிகபட்ச நெறிகள் முன்வைக்கப்படுவது பாலியலில்தான். அதை இருவகையில் மீறலாம், ஆபாசம் வழியாகவும் பகடி வழியாகவும். பெரும்பாலான ஆபாசக்கதைகள் பகடிக்கதைகளும்கூட. எனக்கு அவ்வகையில் போகன் கதைகளைப் படிக்கும்போது ஜட்டிகளை அயர்ன் செய்து பதமாக மடித்து சூட்கேஸில் அடுக்கி வைக்கும் நாஞ்சில்நாடன் நினைவுக்கு வருகிறார். பிள்ளைமாருக்கு இது ஒர் அழகியல் பிரச்சினை போலும் – எல்லா அழகியல் பிரச்சினைகளுக்குள்ளும் கருத்தியல் ஒன்று இருக்கிறது.
பகடியிடம் ‘பார்த்துப்பேசு’ என்பதைப்போல ‘மொசக்கேடான’ குணம் ஏதுமில்லை. எழுத்துக்களைக் கொண்டு பார்த்தால் வி.கே.என் அப்பட்டமான சாதியவாத, பிற்போக்கு, ஆணாதிக்க, கலகக்கார, மரபு எதிர்ப்பாளரான, முற்போக்கு ஆத்மா. ‘பிரக்ஞைபூர்வமான கிறுக்குத்தனம்’ என அதை கல்பற்றா நாராயணன் வரையறை செய்கிறார். அதற்குள் வி.கே.என் எப்படியெல்லாம் ஒளிந்தும் மறைந்தும் விளையாடுகிறார் என்பதை வாசகன் அவருடன் விளையாடியே புரிந்துகொள்ளமுடியும்.
ஆகவே, கடைசியாக இரண்டு கேள்விகள். செக்ஸிஸ்ட் நகைச்சுவைக்கு பெண்கள் சிரிக்கலாமா?கூடாது. ஆனால் இலக்கியவாசகர் சிரிக்கவேண்டும். அரிதாக இவையிரண்டும் ஒன்றாகும்போது ‘டாஸ்’ போட்டு முடிவுசெய்யலாம். இரண்டாம் வினா, பெருந்தேவி என்ன செய்திருக்கலாம்? போகனை பகடி செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம். விகேஎன் கதையில் ஒர் அழுகிய சடலத்தை கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் தொப்பி எடுத்து மூக்கை மறைக்கிறார். உஷ்ணம் உஷ்ணேன சாந்தி [வெப்பம் வெப்பத்தால் நிகர்செய்யப்பட்டு அணைகிறது] என்ற ஆயுர்வேத சூத்திரத்தைக்கொண்டு அதை பய்யன்ஸ் புரிந்துகொள்கிறார்.
ஜெ
பிகு: 1 பெருந்தேவி முனைவர் பட்ட ஆய்வெல்லாம் செய்தவர். மேற்கோளெல்லாம் கொடுக்கிறார். வீட்டுக்கு முன் கோலம்போடுவதுபோல இதெல்லாம் தேவைதான் போலிருக்கிறது.சரி, நாமென்ன கண்டோம்
பிகு:1 இக்கட்டுரை வெளிவந்ததுமே வரப்போகும் முதல் எதிர்வினை கனவில் வந்தது. “சரிசார் நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா யார் மனசையும் நோகடிக்காம பகடி பண்ணலாமே. எதுக்குச் சொல்றேன்னா…”