‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 79

tigபோர்முரசு கொட்டும் கணம் வரை என்ன நிகழ்கிறது என்பதையே உணராதபடி பலவாகப் பிரிந்து எங்கெங்கோ இருந்துகொண்டிருந்தான் உத்தரன். இளமைந்தனாக விராடநகரியின் ஆறுகளில் நீந்திக் களித்தான். அரண்மனைச் சேடியருடன் காமம் கொண்டாடிக்கொண்டிருந்தான். அறியா நிலமொன்றில் தனித்த புரவியில் சென்றுகொண்டிருந்தான். அர்ஜுனனுடன் வில்பயின்றுகொண்டிருந்தான். கனவு நிலமொன்றில் எவரென்றறியாத நாககன்னிகை ஒருத்தியை துரத்திக்கொண்டிருந்தான். படைமுழக்கம் எழுந்து கண்முன் இரு படைகளும் அலையோடு அலையென மோதிக்கொள்வதை கண்ட பின்னரே திடுக்கிட்டு விழித்தான். இரு கைகளையும் தூக்கி “வெற்றிவேல்! வீரவேல்!” என்று பெருங்குரலெழுப்பியபடி “செல்க! செல்க!” என்று தன் பாகனை ஊக்கினான். தேர் அதற்கென படைபிளந்துகொண்டு அமைந்த பாதையினூடாக விரைந்து முன்னகர்ந்தது.

அம்புகளை ஆவக்காவலரிடமிருந்து வாங்கி வாங்கி நாணேற்றி காதளவு இழுத்து செலுத்தினான். ஒவ்வொரு அம்புடனும் தன்னுள் ஒரு துளி எழுந்து விம்மிச்செல்வதை கண்டான். அது சென்று தைத்து சரித்த வீரனை முற்பிறவிகளில் அறிந்திருந்தான். கொல்பவனுக்கும் கொல்லப்படுபவனுக்கும் நடுவே அவ்விறுதிக் கணத்தில் நிகழும் விழித்தொடர்பு எத்தனை விந்தையானது! “பீஷ்மரை அணுகுக! பீஷ்மரை!” என்று அவன் கூவினான். பாகன் சவுக்கை வீசி புரவிகளை ஊக்கி தேரை அணிபிளந்து செலுத்தி பீஷ்மரை நோக்கி கொண்டுசென்றான். அங்கிருந்து பார்க்கையில் பீஷ்மரின் முகம் பின்புறம் எழுந்த சூரியனின் ஒளியில் பொற்கம்பிகளாக கூந்தலிழைகள் மின்ன வெண்ணிறத் தாடி பறக்க மூதாதை தெய்வம் ஒன்று எழுந்து வந்ததுபோல் தெரிந்தது.

பீஷ்மரின் தேர் நீரலைபோல் மின்னிக்கொண்டிருந்தது. அவர் கையிலிருந்த வில்லை விழிகொண்டு நோக்க இயலவில்லை. வலக்கை அம்பறாத்தூணிக்கும் நாணுக்குமென சுழல்வது பறக்கும் பறவையின் சிறகென ஓர் அரைவட்டமாக, பளிங்குத்தீற்றலாக, நீர்வளையமாக தெரிந்தது. அவரிலிருந்து எழுந்த அம்புகள் தீப்பொறிபோல் இருபுறமும் சிதறித் தெறித்து படைவீரர்களை சாய்த்தன. ஒற்றைக்கணத்தில் வெடித்து விழிநோக்கவே பதினெட்டு முப்பத்தாறு அறுபத்துநான்கு என்று பெருகும் அம்புகளை அவர் வில் தொடுப்பதுபோலிருந்தது. அவர் சென்ற வழியெங்கும்  வெற்றிடமென தடம் எஞ்சியது.

“மேலும் நகர்க! ஒவ்வொரு கணமும் அவரை எதிர்கொள்க!” என்று உத்தரன் தனது படைவீரர்களுக்கு ஆணையிட்டான். அவர்கள் முன்னால் விழுந்த பிணங்களையே தங்களுக்கு எல்லைக்காப்பென அமைத்து மேலும் மேலும் என இறந்துவிழுந்து முன்னேறினர். விழுந்தவர்கள் எழுவதுபோல் விழிமயக்கு காட்டியது அந்நகர்வு. முன்னேறிச்சென்ற தேர்கள் புரவிகள் அம்புபட்டு விழ விசை நிலைமாறி பக்கவாட்டில் சரிந்தன. பிறையம்புகளால் தலையறுந்து விழுந்து துடித்த குதிரைகள்மேல் ஏறி மேலும் சரிந்தன தேர்கள். குளம்புகள் உதைக்க கனைத்துப் புரண்டெழுந்த புரவிகளை மீண்டும் சாய்த்தன அம்புகள். அம்புகளின் பெருக்கு கரையுடைத்து பெருவெள்ளம் ஒன்று அலைசுருண்டு முன்வருவதுபோல் தோன்றியது. பல்லாயிரக்கணக்கில் எழுந்த பறவைக்கூட்டம்போல வளைந்து படைகளின் மீது பொழிந்தது.

உத்தரன் தன் கை அம்புகளை, நாணை, இலக்கை தானே அறிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். தன் கட்டுகளுக்கு அப்பாலென தன் முன் எழுந்து செல்லும் தன் அம்புகளை அவனுள் அமைந்து அவனே திகைத்து நோக்கினான். பீஷ்மரின் அம்புவெளிக்குள் அவன் குளிர்நீர் பெய்யும் மலையருவிக்குள் என தலைதாழ்த்தி உடல்குறுக்கி நுழைந்தான். அவன் உடலெங்கும் பீஷ்மரின் அம்புகள் உலோக முத்தங்களுடன் மொய்த்து கீழே உதிர்ந்தன. விரிகலத்தில் கொதிக்கும் நெய்யின் குமிழியுடையும் ஓசை. வெறிக்கூச்சலுடன் அவன் தன் அம்புகளை அவரை நோக்கி தொடுத்தான். முட்ட வரும் களிற்றெருதை எதிர்கொள்வதுபோல் அந்த அம்புக்கொந்தளிப்பில் முட்டிக்கொண்டான். எதிரே வந்த பீஷ்மரின் அம்புகளால் அவை ஒவ்வொன்றும் காற்று வெளியிலேயே முறியடித்து கீழே உதிர்க்கப்பட்டன.

மேலும் மேலுமென சலிக்காமல் அம்புகளை செலுத்திக்கொண்டே இருந்தான். தன் கை நூறு அம்புகளுக்குள் சலித்துவிடுவதையே முன்னர் அவன் அறிந்திருந்தான். ஆனால் களத்தில் ஒவ்வொரு அம்புக்குமென தோள்களின் ஆற்றல் பெருகி வந்தது. விழிகள் கூர்மை கொண்டன. அம்பும் விழியும் கைகளுமன்றி பிற எதுவும் அவனல்ல என்று ஆயிற்று. அவன் அம்பொன்று சென்று பீஷ்மரின் தேரின் தூணில் பட்டு நின்றது. பீஷ்மர் திரும்பி அவனை நோக்கி புன்னகைத்தார். “ஆசிரியரே, இதோ உங்களுக்கு என் அன்பு!” என்றபடி உத்தரன் இன்னொரு அம்பை எய்தான்.  “மேலும் அணுகுக! மேலும் அணுகுக!” என்றபடி தன் பாகனை தூண்டினான். அம்புகள் சென்று எதிரம்பால் தடுக்கப்பட்டு சரிந்தபடியே இருக்க பிறிதொரு அம்பு பீஷ்மரின் மிக அருகே சென்று தேர்த்தூணில் பாய்ந்தது. மறுகணம் பீஷ்மரின் அம்பு ஒன்று அவன் தோளை தைத்தது.

அது அளித்த சிற்றுதையால் நிலைநடுங்கி சற்றே பின்னடைந்தபின் அவன் மீண்டும் வெறிகொண்டு அம்புகளை எய்தான். அவனுடைய விழி தொடுமிடமெல்லாம் அம்புகள் உள்ளத்திலிருந்தே ஆணை பெற்று சென்று கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அருகணைந்து அவன் இன்னொரு அம்பை அவருடைய நெஞ்சுக்கு எய்தான். அம்பறாத்தூணியிலிருந்து அம்பெடுக்கும் விசையாலேயே அதை தட்டித் தெறிக்கவிட்டு அவ்வம்பினாலேயே அவன் நெஞ்சுக்கவசத்தை பிளந்தார் பீஷ்மர். அவன் முழந்தாளிட்டு தேரில் அமர்ந்து காவலன் எடுத்தளித்த அடுத்த கவசத்தை நெஞ்சில் பொருத்திக்கொண்டான். அதே விசையில் எழுந்து இன்னொரு அம்பை அவரை நோக்கி எய்தான். “நன்று! நன்று!” என்று பீஷ்மர் சிரித்து கூச்சலிட்டார். மீண்டும் ஓர் அம்பு அவன் தலைக்கவசத்தை உடைத்தெறிந்தது. அவன் அம்பெடுப்பதற்குள் அவனது இரண்டாவது கவசமும் உடைத்தெறியப்பட்டது. மூன்றாவது அம்பு அவன் தோளில் தைத்து நின்றது.

மீண்டும் ஓர் அம்பு அவன் விலாவில் தைத்ததுமே பின்னிருந்து அர்ஜுனன் “விலகு! விலகு!” என்று கூவியபடி தன் தேரில் பாய்ந்து முன்னால் வந்தான். அவன் தேரின் முன்னால் சவுக்குடன் அமர்ந்திருந்த இளைய யாதவர் புன்னகைப்பதுபோல் தோன்றியது. இரு பக்கங்களிலும் இருந்து தேர்ப்படை எழுந்துவந்து இரும்புக்கேடயங்களை சுவர்கள் என்றாக்கி உத்தரனை சூழ்ந்துகொண்டது. தேர்த்தட்டில் அவன் விழுந்து கிடக்க பாகன் தேரை பின்பக்கம் கொண்டு சென்றான். “என் அம்புகளை பிடுங்குக! அம்புகளை பிடுங்குக!” என்று உத்தரன் கூவினான். தேரில் பாய்ந்தேறிய அணுக்க வீரனொருவன் அவன் உடலில் இருந்து அம்புகளை பிடுங்கி எடுத்தான். உருகிக்கொண்டிருந்த தேன்மெழுகில் மூலிகைச்சாறு கலந்து அக்காயங்களின் மேல் வைத்து துணியால் அழுந்தக் கட்டினான். வலியுடன் முனகியபடி உத்தரன் கண்களை மூடிக்கொண்டான். “தசைக்காயங்கள்தான், விராடரே” என்றான் அணுக்கன். உத்தரன் கையூன்றி எழுந்து தேர்த்தூணைப் பற்றியபடி நின்று தொலைவில் பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்குமிடையே மூண்டுவிட்ட கடும்போரை பார்த்தான்.

அர்ஜுனன் தன் முதல் அம்பை எடுத்து பீஷ்மரின் காலடியை நோக்கி செலுத்தினான். அவரது இரு கால்களுக்கு நடுவே சென்று தைத்து நின்று சிறகதிர்ந்தது அது. பீஷ்மர் அதை நோக்கியபின் அவனைப் பார்த்து புன்னகைத்தார். அவருடைய அம்பு ஒன்று பறந்து வந்து அர்ஜுனனின் தலைக்கவசத்திலிருந்த செம்பருந்தின் இறகை தட்டியெறிந்தது. அக்கணமே என எழுந்த இருவரின் அடுத்த அம்புகளும் வானில் ஒன்றையொன்று முறித்து கீழே விழுந்தன. இயல்பாக அவர்களை சூழ்ந்திருந்தவர்கள் போரை நிறுத்திக்கொண்டு நோக்கி நிற்கலாயினர். படைக்கலங்களில் இருந்து பித்து ஒழிய, உடற்தசைகள் தளர, விழிகளும் முகங்களுமென்றாகி சூழ்ந்தனர். பின்னர் போரில் அவர்களின் உள்ளங்கள் ஈடுபட்டன. கூச்சல்கள், முனகல்கள், சிரிப்புகள், வாழ்த்தொலிகள் என அவர்கள் அப்போருக்கு அருகு வகுத்தனர்.

பீஷ்மரின் தேரிலிருந்த விஸ்வசேனர் பீஷ்மரே பிறிதுடலாக ஆனது போலிருந்தார். பீஷ்மர் அவரிடம் ஒரு சொல்லும் உரைக்கவேண்டியிருக்கவில்லை. இளைய யாதவரோ தானே வில்லேந்தி தேர்த்தட்டில் நின்றிருப்பதுபோல் தேர் செலுத்தினார். சூழ்கையையும் திசையையும் விசையையும் தேரிலிருந்தே பார்த்தனின் வில் பெற்றுக்கொண்டது. ஒருசில கணங்களில் இரு தேர்களும் இரு சிம்மங்கள் என நிலம் அறைந்து இடியோசை எழுப்பி சுற்றிவந்து பாய்ந்து அறைந்து விலகி பதுங்கி மீண்டும் பாய்ந்து அப்போரை நிகழ்த்திக்கொண்டிருப்பதாக தோன்றியது. பருப்பொருட்கள் மானுடரை புரிந்துகொள்ளும் தன்மைபோல் விந்தை பிறிதில்லை என உத்தரன் எண்ணினான். பருப்பொருட்களில் தன் உள்ளத்தைப் பொறித்து எடுத்து மானுடன் செய்தவை தேர்கள், படைக்கலங்கள். அவை தங்கள் பருவியல்பை உதறி விழிநோக்கும் மானுட உள்ளமென்றாகும் தருணம் எழும்.

அம்புகளாலான ஓர் உரையாடல். அம்புகள் வானில் தங்களுக்கென ஒரு உலகை அமைத்துக்கொண்டவைபோல. அந்த உலகில் அவை காமம் கொண்டாடின. சிணுங்கியும் சிரித்தும்  சொல்லாடிக்கொண்டன. முத்தமிட்டன. தழுவிச் சரிந்தன. இருவர் கவசங்களும் உடைந்தன. வீரர்கள் எடுத்தளித்த மறு கவசங்களை மறுகணமே அணிந்துகொண்டனர். கவசங்களை அணிவதும் அம்பை எடுப்பதும் தொடுப்பதும் ஆகிய மூன்று செயல்களையும் ஒற்றை அசைவாலேயே செய்ய அவர்களால் இயன்றது. பீஷ்மர் புன்னகைத்து அர்ஜுனனை நோக்கி கையசைத்தார். அர்ஜுனனின் மார்புக்கவசம் பிளந்துவிழுந்தது. அவன் அதை நோக்கும் கணத்தில் அவன் தொடைக்கவசமும் பிளந்தது. பிறிதொரு அம்பு அவன் தலைகொய்ய வர இளைய யாதவர் புரவிக்கடிவாளத்தைப் பற்றி மெல்ல இழுத்துத் திருப்பி அதை கடந்துசெல்லச் செய்தார். கூகைபோல் கதறியபடி வந்தது பின்னும் ஒரு வாளி. மீண்டும் ஒன்று. கழுதைப்புலி என நகைத்தபடி மின்அதிர்ந்து வந்தது பஞ்சமுக ஆவம்.

இளைய யாதவரின் கையில் கடிவாளம் தேர்ந்த இசைச்சூதனிடம் யாழ்நரம்பென இழுபட்டு சுண்டப்பட்டு தெறிப்புகொண்டது. அக்கடிவாளத்தின் அசைவுகளை புரவிக்குளம்புகள் பெருக்கி தாங்களும் நடித்தன. தேர் இளவிறலி என நடனமிட்டது. தரையில் கிடந்த சடலங்களின் மேல் கழைக்கூத்தி என நின்று ஆடியது. பீஷ்மரின் அம்புகள் வேழாம்பல் என முறச்சிறகு வீசும் ஒலியுடன் வந்து பதிந்தன. தேரின் தூண்கள் சிதறின. கொடியுடன் முகடு உடைந்து சிம்புகளாகத் தெறித்தது. அர்ஜுனன் அம்புகள் பீஷ்மரைச் சூழ்ந்து பறந்து திகைத்து அப்பால் விழுந்தன. விஸ்வசேனரின் கைகள் அசைவதாகவே தெரியவில்லை. ஆனால் கடிவாளங்களினூடாக புரவி அவர் எண்ணுவதனைத்தையும் அறிந்தது. அர்ஜுனனின் தலைக்கவசம் உடைந்தது. அவன் குனிந்து தலையை காக்க கழுத்துக்கு வந்த பிறையம்பு கடந்துசென்று ஒரு வீரனை தலைகொய்து சென்றது. அவன் எழுவதற்குள் பிறிதொரு அம்பு அவன் காதுள் கொசுவென மீட்டிக் கடந்துசென்றது. அவன் எய்த மூன்று அம்புகளில் ஒன்று பீஷ்மரின் முழங்காலில் குத்தி நின்றது. அதேகணம் அவர் எய்த அம்பு அவன் தோளிலையை உடைத்தெறிந்தது. மறுகணமே அடுத்த அம்பு தோளில் குத்தி நின்றது.

இளைய யாதவர் கைவீச அர்ஜுனனை காப்பாற்றும்பொருட்டு பின்பக்கம் படைநிரையிலிருந்து முரசொலி எழுந்தது. பீமனும் மறுபுறம் திருஷ்டத்யும்னனும் அம்புகளை எய்து பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் நடுவே திரையொன்றை அமைத்தபடி அணுகி வந்தனர். கவசத்தேர்கள் உள்ளே புகுந்து முற்றிலும் அம்புகளைத் தடுத்து சுவரென்றாக்கின. குருதி வழிய தேர்த்தட்டில் சற்றே தளர்ந்த அர்ஜுனனை இளைய யாதவர் ஒரே கணத்தில் தேரைத் திருப்பி எழுப்பி படைநிரைகளுக்குள் புதைத்து மூழ்கடித்து அப்பால் கொண்டு சென்றார். அவன் அந்த அம்பை பிடுங்கி எடுக்க முயல “வேண்டாம், தசையை கிழித்துக்கொள்ளாதே!” என்று இளைய யாதவர் கூவினார். அவர்கள் மறைந்த இடைவெளியிலிருந்து வில்லவர்கள் நின்ற விரைவுத்தேர்கள் புற்றிலிருந்து ஈசல்கள் என கிளம்பி வந்தன. அம்புகள் பீறிட்டு பிஷ்மரை சூழ்ந்தன. ஆனால் பீஷ்மரை எவரும் அணுக இயலவில்லை. பீமன் அவருடைய அம்புச்சுழலுக்குள் சிக்கிக்கொள்ள “பின்னகருங்கள்… தனியாக செல்லவேண்டாம்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். பீமன் உடைந்த கவசங்களும் தோளிலும் மார்பிலும் பாய்ந்த அம்புகளில் ஊற்றெடுத்துப் பெருகிய குருதியுமாக பின்னடைந்தான்.

“துணை! துணை! துணை!” என முரசுகள் முழங்கின. நகுலனும் சகதேவனும் சிசுபாலனின் மைந்தன் திருஷ்டகேதுவும் அம்புகளைப் பெய்தபடி பிதாமகரை சூழ்ந்துகொண்டார்கள். “முழுப் படையும் எழுக! முழுப் படையாலும் பிதாமகரை செறுத்து நில்லுங்கள்” என்று முரசொலி அறைகூவியது. “பிதாமகர் முதல் நாள் முதல் போரிலேயே முற்றிலும் கொலைவெறி கொண்டிருக்கிறார்” என்று திருஷ்டத்யும்னன் கூவினான். “பிதாமகர் பீஷ்மரை படைத்தலைவர் அணுக வேண்டியதில்லை… பிதாமகர் பீஷ்மரை அணுக வேண்டியதில்லை” என்று முரசுகள் ஆணையிட்டுக்கொண்டே இருந்தன. “கவசவீரர்கள் மட்டும் அவரை சூழ்ந்துகொள்க! அம்புகளை எதிர்கொண்டு அவரை தடுத்து நிறுத்துக!” நூறு தேர்வீரர்களால் பீஷ்மர் சூழப்பட்டார். செந்நாய்த்திரளை மதயானை என அவர் அவர்களை எதிர்கொண்டார். “கேடயங்களால் சூழ்ந்துகொள்க!” என்று முரசு அறைகூவியது. பெருங்கேடயங்களை கொண்டு சுவரமைத்து அவரை சூழ்ந்தனர் தேர்வீரர்கள். ஆனால் பீஷ்மரின் அம்புகள் தைக்க புரவிகள் கால்மடிந்து வீழ்ந்தன. நிலையழிந்த தேர்வீரனின் கேடயம் சரிய அவ்விடைவெளியில் நாகமென நுழைந்து அவனை கொன்றது அவருடைய வாளி. ஒருவன் விழுந்தால் அவ்விடைவெளியை இன்னொரு தேர் நிறைப்பதற்குள் மூவர் அலறிவிழுந்தனர். உடைந்த தேர்களும் துடிக்கும் குதிரையுடல்களும் அவற்றுக்குமேல் அலறிவிழும் வில்லவர்களுமாக அப்பகுதி சூழப்பட்டது.

பீஷ்மருடன் போரிடுகையில் அர்ஜுனன் கையிலிருந்து அம்புகள் தவறிவிட்டதை உத்தரன் பார்த்தான். அவ்வாறு நிகழுமென்று அவன் எண்ணவேயில்லை. “பார்த்தன் கை தளர்வதென்றால் நம் படைகள் தோற்றுவிட்டன என்று பொருள்” என்றான். தேர்ப்பாகன் “அவருடைய புண் எளியதுதான்” என்றான். அப்பால் நின்றிருந்த திருஷ்டத்யும்னன் “பீஷ்மர் பல்லாயிரம் கைகொண்டு எழுந்திருக்கிறார். இப்போது முக்கண் விழியனோ உலகளந்தானோகூட அவரை எதிர்கொள்ள இயலாது… விலகிசெல்க!” என்றான். மறுபக்கம் பீமன் தன் புண்களை மெழுகுத்துணியால் கட்டிக்கொண்டு மீண்டும் பீஷ்மரை எதிர்கொண்டான். “விலகுக!” என்று கூவி இரு தேர்களை விலக்கி அவன் உட்புகுந்தான். அவன் அம்புகளில் ஒன்று பீஷ்மரின் புரவி ஒன்றை கொன்றது. அவருடைய தேர் நிலையழிய அவன் அவருடைய தோளிலையை உடைத்தான். விஸ்வசேனர் அக்கணமே புண்பட்ட புரவியை தேரிலிருந்து அறுத்து அகற்றி தேரை திருப்பி நிலைமீட்டார்.

உறுமியபடி பீஷ்மர் ஒரே வீச்சில் எழுந்த பன்னிரு அம்புகளால் பீமனின் கவசங்களையும் காதிலணிந்த குண்டலம் ஒன்றையும் வெட்டி எறிந்தார். குனிந்தும் துள்ளியும் அவ்வம்புகள் தன் தலையை அறுக்காமல் தப்பிய பீமன் தேர்த்தூணருகே மண்டியிட்டமர்ந்தான். பீஷ்மர் கைதூக்கி “ஓடுக சிறியவனே, உயிர் கொண்டு ஓடுக!” என்று கூவினார். “உங்கள் கண்முன் கௌரவக்குடியை கொன்றழிப்பேன் பாருங்கள், பிதாமகரே! ஒன்று உணர்க, எந்நிலையிலும் குந்தியின் மைந்தன் புறம்காட்டமாட்டான்!” என்று பீமன் கூவினான். மீண்டும் மீண்டும் பீமனை அம்புகள் தாக்கின. இருண்ட பலநூறு வௌவால்களால் தாக்கப்படும் கரடி என அவன் தேர்த்தட்டில் நிலைகுலைந்து சுழன்றான். “பீமனை காக்கவேண்டும்! பீமனை காக்கவேண்டும்!” என்றது முரசு. படை அலையெழுந்து அணையும் சுடரை கைகாப்பதுபோல பீமனைக் காத்து அப்பால் எடுத்துச் சென்றது.

உத்தரன் “என்னை களமுகப்புக்கு கொண்டு செல்க!” என்றான். துயருடன் “விராடரே…” என்று தேர்ப்பாகன் அழைத்தான். “இல்லை, இனி தயங்குவதில்லை. இத்தருணத்தில் தயங்கினால் இனி ஒருபோதும் நாம் வெல்லப்போவதில்லை” என்று உத்தரன் கூவினான். “நாம் இங்கு வந்ததே பெருவாய்ப்பு. முதலணி பின்வாங்கிய படை வென்ற வரலாறே இல்லை.” அவனுக்குப் பின்னால் விராடப் படைகள் பின்வாங்கத் தொடங்கியிருந்தன. இரு கைகளையும் விரித்து “முன்னேறுக! முன்னேறுக!” என்று கூவியபடி அவன் தேரை முன்னோக்கி செலுத்தினான். நீர்ப்பாசியை சுட்டுவிரல் என அவன் தேரால் அவனுடைய படை இழுபட்டு தேருக்குப் பின்னால் ஒழுகி வந்தது.

பீஷ்மரைச் சுற்றி குவிந்துகிடந்த பிணங்களைக் கண்டு ஒருகணம் உத்தரன் உளம் தயங்கினான். பின்னாலிருந்த திருஷ்டத்யும்னன் “நீ அவரை எதிர்கொள்ள இயலாது. எவ்வகையிலும் அவருக்கு முன்நிற்க இயலாது. விலகுக! விலகிச் செல்க!” என்று கூவினான். “இல்லை, நான் அவரை எதிர்கொள்வேன். இக்களத்தில் புகழுடன் இறப்பேன்! முதற்பலியென என்னை இங்கு நிறுவுவேன்!” என்று உத்தரன் கூவினான். “இத்தருணத்தில் இங்கு என்னை நான் நிறுவிக்கொள்ளாவிட்டால் இனி ஒரு தருணம் எனக்கு வாய்க்கப் போவதில்லை! செல்க! செல்க!” என்றான். அவனுக்குப் பின்னால் தன் அம்புகளை ஏவியபடி வந்த திருஷ்டத்யும்னன் “வேண்டாம் இளையோனே, நமக்கின்னும் போர்க்களங்கள் பல உள்ளன!” என்று கூவினான். உத்தரன் அச்சொற்கள் தேய்ந்து அகல முன்னேறி முகப்புக்கு சென்றான்.

உத்தரன் தனக்கு முன்னால் தோன்றிய அஸ்வத்தாமனை எதிர்கொண்டான். அஸ்வத்தாமன் “விலகி ஓடுக, மைந்தா! இப்போரில் முதல் நாள் பலி நீயாக வேண்டியதில்லை” என்றான். “ஆம், நானே முதற்பலி. அதன்பொருட்டே வந்துளேன். உங்கள் கையால் அல்ல, பிதாமகர் பீஷ்மரின் கையால்” என்றான் உத்தரன். அஸ்வத்தாமனின் மேல் அம்புகளை எய்தபடி அவன் முன்னால் செல்ல அஸ்வத்தாமன் அவனை தடுத்தான். திருஷ்டத்யும்னன் உத்தரனைத் தொடர்ந்து வந்து அஸ்வத்தாமனை எதிர்கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி பெய்த அம்புகளால் இணை நின்று பொருதியபடி சுழன்று வர திருஷ்டத்யும்னன் உத்தரனிடம் “பிதாமகர் முன் நம் கேடயத்தேர்கள் மட்டும் எழட்டும். ஆணை, அவர் முன் எவரும் நிற்கலாகாது” என்றான். உத்தரன் “இல்லை, பாஞ்சாலரே. அவர் குருதிவெறி கொண்டுவிட்டார். விசை கொண்டுவரும் பெருந்தேரின் முன் மரச்சக்கையை இட்டு விரைவழிப்பதுபோல அவர் முன் செல்கிறேன்” என்று கூவியபடி தன் தேரை பீஷ்மரை நோக்கி செலுத்தினான்.

பீஷ்மரைச் சூழ்ந்து நின்றிருந்த கேடயத்தேர்களின் நடுவே இடைபிளந்து அவன் அவ்வளையத்தின் உள்நுழைந்தான். பீஷ்மர் அவனைக் கண்டதும் உரக்க நகைத்து “மீண்டும் வந்துளாய், வா!” என்றார். “ஆம், உங்கள் எதிர்நிற்கப் போகிறேன்” என்று அவன் கூவினான். பீஷ்மரின் அம்புகள் அவனை அறைந்தன. அவ்வம்புமுனைகளையன்றி அவன் பிறிதொன்றையும் பார்க்கவில்லை. தன் அம்புகளால் ஒவ்வொன்றையும் அடித்து கீழே உதிரச்செய்தான். எத்தனை பொழுதென்பதே அவன் முன் உள்ள வினாவாக இருந்தது. அம்புகள் சென்று அறைந்தபடியே இருந்தன. பீஷ்மரின் அம்புகளால் செத்து உதிர்ந்துகொண்டிருக்கும் வீரர்களை அவன் நோக்கினான். உடைந்த தேர்களால், விழும் பிணங்களால் அவன் அகற்றப்பட்டான்.

அவன் புரவிகளில் ஒன்று வெட்டுண்டு சரிய தேர் நிலையழிந்தது. தொடர்ந்த அம்புகளால் அவன் புரவிகள் அனைத்தும் கழுத்தறுந்து முகம் பதித்து நிலத்தில் விழ அவன் தேர் சரிந்தது. அவன் பிணங்கள் நடுவே விழுந்தான். “இளவரசே…” என அலறியபடி எழுந்த தேர்ப்பாகனின் தலை அறுந்து சரிய அவன் அசைந்தாடி உத்தரன் மேல் விழுந்தான். அவன்மேல் ஒரு தேர்ச்சகடம் ஓடி அப்பால் சென்றது. தன்மேல் விழுந்த பிணங்களை உந்தி அகற்றியபடி உத்தரன் தவழ்ந்து இரு தேர்களினூடாக அப்பால் சென்றான். பின்னிருந்து திருஷ்டத்யும்னன் மேலும் மேலுமென தேர்நிரைகளை அனுப்பினான். அலையென அவை அவனைத் தூக்கி அகற்றின.

உடலெங்கும் குருதியும் நிணமுமாக உத்தரன் எழுந்து நின்றான். வெறியுடன் இரு கைகளையும் விரித்து வானோக்கி கூவினான். திரும்பி அங்கே கிடந்த நீண்ட வேலை எடுத்துக்கொண்டு நோக்கியபோது மேலிருந்து பாகன் விழுந்துவிட நிலையழிந்துகொண்டிருந்த கேடயம் ஏந்திய களிற்றை கண்டான். ஓடிச்சென்று அதன் கழுத்துக்கயிற்றைப் பற்றி தொற்றி மேலேறினான். அதன் இரு விலாவிலும் எடைமிக்க வேல்கள் அடுக்கப்பட்ட தூளிகள் தொங்கின. கைவேலைச் சுழற்றி அங்கே நின்ற கௌரவ நூற்றுவர்தலைவனை நோக்கி வீசினான். அவன் இரும்புக்கவசத்தை உடைத்து உட்புகுந்து அப்பால் சென்று தேர்த்தட்டில் அவனை தைத்தது அது. வேல்களை உருவி தேர்வீரர்களை எறிந்து வீழ்த்தியபடி அவன் முன்னெழுந்தான்.

“நில், விராடனே!” என்று கூவியபடி சல்யர் அவனெதிரே வந்தார். சீற்றத்துடன் கூவியபடி அவன் அவரை எதிர்கொண்ட முதற்கணத்திலேயே அவருடைய தேரின் மூன்று புரவிகளை வேலெய்து வீழ்த்தினான். சரிந்த தேரிலிருந்து அருகே வந்த புரவிமேல் பாய்ந்த சல்யர் அப்புரவியும் அவன் வேலால் குத்தப்பட்டு சரிய நிலத்தில் பாய்ந்து நின்றார். ஒரு தேர் அவரை மறைத்தபடி சென்றமையால் அவர் நெஞ்சுநோக்கி அவன் செலுத்திய வேலில் இருந்து தப்பினார். தேர்ச்சகடத்துக்கு அப்பால் ஒளிந்துகொண்டு வில்லை இழுத்து நாண் தொடுத்து அவன் தோளில் எய்தார். அவன் வீசிய வேல் அவர் அருகே வந்து தைக்க பாய்ந்து நிலத்தில் விழுந்து சுழன்று எழுந்த விசையில் அடுத்த அம்பை எய்தார். அவன் யானைமேலிருந்து கீழே விழுந்தான். அவர் கீழிருந்து வாளொன்றை எடுத்தபடி பாய்ந்து ஒரே வீச்சில் அந்த யானையின் துதிக்கையை வெட்டி எறிந்தார்.

சரிந்து விழுந்த யானைக்கு அடியிலிருந்து உருண்டு உடல் விடுவித்து எழுந்த உத்தரன் இறுதி வேலை அவர் மேல் வீச அவர் அதை ஒழிந்தபோது தொடையில் வேல் குத்தியது. ஆழ இறங்கிய வேலுடன் அவர் நின்று தள்ளாடினார். யானையின் உயிர்த்துடிப்புக்கு அடியில் இருந்து அவன் தன்னை முழுமையாக விடுவித்து காலூன்றி எழுந்தபோது வெறிகொண்டு கூவியபடி பாய்ந்து அவன் நெஞ்சில் ஓங்கி உதைத்தார். அவன் நிலையழிந்து தள்ளாட மேலும் உதைத்த சல்யர் அதே வீச்சில் மல்லாந்து விழுந்த அவன் தலையை வெட்டினார். கழுத்திலிருந்து துண்டுபட்ட அவன் தலை உருண்டு தெறிக்க அதை அவர் ஓங்கி உதைத்து உருட்டினார். உடல் நிலத்தில் கிடந்து கைகளை மண்ணில் அறைந்து கால்கள் உதைத்துக்கொண்டு துடித்து இழுபட அவர் வேல் தைத்த காலை நிலத்தில் ஊன்றி நின்றபின் நிலையழிந்து வேலுடன் பக்கவாட்டில் தள்ளாடி விழுந்தார்.

உத்தரன் கொல்லப்பட்டதை கண்ட முதல் வீரன் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊத ஒன்றிலிருந்து ஒன்றென கொம்புகளும் முரசுகளும் ஒலிக்கலாயின. சூழ்ந்திருந்த படைவீரர்கள் அதிர்ந்து படைக்கலம் தாழ்த்தி செய்வதறியாது நின்றனர். முரசொலிதான் அவர்களுக்கு “வீழ்ந்தார் விராடர்! விராடர் வீரச்சாவு! விராட பெரும்பலி!” என்று கூவி அறிவித்தது. பாண்டவப் படையிலிருந்து “விராட மைந்தர் விண்ணேகுக! வீரவிராடர் நிறைவுறுக! விராடகுலச் சிம்மம் புகழ் நிலைகொள்க!” என வாழ்த்தொலிகள் எழுந்தன. திருஷ்டத்யும்னன் தன் தேரைத் திருப்பி விரைந்து வந்து துண்டாகிக் கிடந்த உத்தரனின் உடலைக் கண்டு திகைத்து வில் தாழ்த்தினான். உடைந்து குவிந்த தேர்களினூடாக சல்யரின் மகன் ருக்மாங்கதன் தலைமையில் வந்த கௌரவப் படையினர் சல்யரைத் தூக்கி தேரிலிட்டு கொண்டுசென்றார்கள். எலும்பில் கோத்த அவருடைய தொடைவேல் நின்று ஆடியது. அவர் கை வாளை இறுகப்பற்றியபடி நினைவிழந்திருந்தார். சல்யரின் இளைய மகன் ருக்மரதன் தன் கொம்பை எடுத்து வெற்றிக்கூச்சலை எழுப்ப  கௌரவப் படை வெற்றிமுழக்கமிடத் தொடங்கியது.

முந்தைய கட்டுரைவாசகர்களின் உரையாடல்
அடுத்த கட்டுரைகேரள வெள்ளம்- கவிஞர் சுகுமாரன்