உலோகம் -கடிதங்கள்

ulogam-47236

அன்புள்ள￰ ஜெ ,

 

உலோகம் நாவலில் சார்லஸ் இயல்பான மனித உணர்வுக்குள்  ஆட்படும்  போதெல்லாம் அவனுள்  இருக்கும் உலோகம் ஞாபகத்திற்கு வருகிறது , உணர்வுகளில் இருந்து வெளிவந்து விடுகிறான்  . நாவல் சொல்லும் திசைக்கு எதிராகவும்  இதை பார்க்க முடியும் என்று தோன்றுகிறது . ஒருவருக்கு தனது அன்றாட வாழ்வும் ஆசைகளும்   தாண்டி ஒரு நோக்கம் இருக்குமானால் , அந்த நோக்கம் அவனை நகர்த்தும்  விசை நம்ப முடியாத அளவிற்கு  அபாரமானது . உங்களின் வெண்முரசு எழுதும் வேகத்தையே  இதற்கு உதாரணமாக சொல்ல முடியும் .

 

செயல் மட்டுமல்ல பிறர் மீது செலுத்தப்படும் தாக்கத்தையும் அப்படி சொல்லலாம் , காந்தியின் தாக்கம் உதாரணம் , பூமி தான இயக்கம் எல்லாம் அப்படியான நிகழ்வுதான்  .

 

இப்படியான இயல்பு இரண்டு வகையான  விளைவை  கொண்டிருக்கிறது  , தாக்கம் செலுத்தும் நபர் நன்மையை தருபவராக  இருப்பின் நன்மை கிடைக்கிறது  , தீமையை உருவாக்குபவராக  இருப்பின் தீமை அமைகிறது .

 

இ பா வின் ஆகாய  தாமரை நாவலில் நாயகன்  வீட்டை விட்டு வெளியேறும்  போது வாசித்த நூல்கள் என அரவிந்தர்  ,நீட்ஷே  இருவரின் நூல்கள்  இருக்கும் , நாயகன் இயல்பு அன்றாட வாழ்வு சார்ந்த மனநிலை தாண்டி வேறொன்றாக இருக்கும் , அவனுக்கு அன்றாட  வாழ்வு ,குடும்பம், சமூகம்  என்பதெல்லாம் பொருட்படுத்தத்தக்க  விஷயம் அல்ல .

 

அரவிந்தர் ,நீட்ஷே இருவரையும்  நீங்களும் பூரணம் சிறுகதையில்   குறிப்பிடுகிறீர்கள்  , இந்த கதையில் இருவர் பரிசோதனை நபர்கள் , ஒருவர்  ஆன்மீகம் சார்ந்து,இன்னொருவர் அதிகாரம் சார்ந்து . அதிகாரம் சார்ந்த மனநிலையை  உலோகம் நாவல் சார்ந்து யோசிக்க முடியும் , முக்கியமான இயக்கு  விசை இது .

யதியின் ஈஸாவாஸ்ய  உபநிட விளக்க நூலில்  இந்த இயல்பு பற்றிய குறிப்புகள் இருக்கிறது , அவர் நன்மை திசைக்கு பசுமை புரட்சியையும்  , தீமை திசைக்கு அணு ஆயுதத்தையும்  உதாரணமாக சொல்கிறார் . ஒரு மனிதனால்  மிக அதிகமான பாதிப்பை உருவாக்க இயலும் எனவும் , முக்கியமாக உலகம் பரிணமித்து வந்த இயல்பை திசை திருப்பி வளர்த்தியோ  அல்லது வீழ்த்தியோ  ஆக்க முடியும் எனும் அர்த்தத்தில் சொல்கிறார் .

 

மதங்கள் மனிதனின் குணத்தினை  கட்டுப்படுத்துவதை  இதற்கு மிக சிறந்த உதாரணமாக சொல்ல முடியும் , உலோகம் எனும் அர்த்தத்தில் அழகாக ஒரு அடிப்படைவாத மதத்தை பொருத்தி பார்க்க முடியும் .

 

ராதாகிருஷ்ணன்

 

 

அன்புள்ள ஜெ

 

நான் நீண்ட நாட்களாக வாசிக்காமல் விட்டிருந்தது உங்கள் உலோகம் நாவல். பலவகையான எதிர்விமர்சனங்கள் கொண்டது. கொஞ்சம் சுவாரசியமான, அதேசமயம் புத்திசாலித்தனாமான திரில்லர் வகையைச் சேர்ந்த எழுத்து அது. அத்தகைய எழுத்துக்களுக்கு ஒரு முக்கியத்துவம் இன்றைக்கு உள்ளது

 

அந்த மொத்த நாவலிலும் உள்ளோடும் ‘உலோகம்’ என்ற படிமம் அதை ஒரு சாதாரணமான திரில்லராக அல்லாமல் ஆக்குகிறது.

 

ராஜ்

முந்தைய கட்டுரைஇரா முருகன், என்.எஸ்.மாதவன் -கடிதம்
அடுத்த கட்டுரைசிலைத்திருட்டுக்கள்