சிலைத்திருட்டுக்கள்

36994397_2038871956376188_7731254313225289728_n

உரிமைக்குரல்

திரு ஜெ

சிற்பப் படுகொலைகள் என்றெல்லாம் ஆக்ரோஷமாக எழுதிய நீங்கள் தமிழகத்தில் ஏழாயிரம் சிற்பங்கள் திருடி விற்கப்பட்ட செய்தி வெளிவந்தபோது கொந்தளிப்பீர்கள் என ஒருமாசம் வரை எதிர்பார்த்து ஏமாந்தேன். திருடிவிற்றவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதுதான் உங்கள் ஆழ்ந்த அமைதிக்கும் செய்தித்துறப்புக்கும் காரணம் என்று நினைக்கிறேன்.

ஜெயபாலன்

***

அன்புள்ள ஜெயபாலன்,

இச்செய்தி வெளிவந்தபோது இங்குள்ள திராவிட இயக்க ஆதரவாளர்கள் எழுதியதை அவ்வப்போது எவரேனும் எடுத்தனுப்பி கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருந்தார்கள். செய்தியை நான் துறந்தாலும் என்னை செய்தி துறப்பது அரிது. இன்றும் இச்செய்தியின் உள்ளடக்கம் எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆகவே கருத்துச்சொல்லாமலிருக்கிறேன்.

அதேசமயம் கோயில் என்றால் என்ன, அங்குள்ள நிர்வாகம் எவ்வாறு நிகழ்கிறது, எவர் எதற்கெல்லாம் பொறுப்பு என்று எதுவுமே தெரியாமல் சிலைத் திருட்டு என்றதுமே அதை பிராமணப்பூசாரிகள்தான் விற்றிருப்பார்கள் என அவதூறுசொல்லி எம்பிக்குதிப்பவர்களை நான் நன்கறிவேன். வெறுப்பில் முளைத்தவர்களால் பொய்யால்தான் நிலைகொள்ளமுடியும்.

நான் ஊட்டியில் இருந்தபோது ஒருநாள் வெளியே என் பெயர் சொல்லி சிலர் பேசிக்கொள்வதைக் கேட்டேன். வெளியே சென்று அவர்களைச் சந்தித்தேன். என் வாசகர்கள். ஊட்டி வந்தபோது நாராயணகுருகுலம் வந்திருக்கிறார்கள். நான் அங்கிருப்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்.

அவர்களிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தேன். சிலைத்திருட்டு குறித்து நான் சற்று ஆக்ரோஷமாக எழுதியிருந்த கட்டுரையைக் குறிப்பிட்டு நீண்ட விளக்கங்களை அவர்கள் அளித்தனர். நான் அரசு ஊழியனாக இருந்தவன் என்பதனால் அதை துல்லியமாக என்னால் புரிந்துகொள்ளவும் இயன்றது

இந்து ஆலயங்களின் அதிகாரமும் பொறுப்பும் எவ்வகையிலும் கோயில்பூசகர்களான அந்தணர்களிடம் இல்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் கிட்டத்தட்ட கடைநிலை ஊழியர்கள். மிகக்குறைவான ஊதியத்தில் மிக அதிகமான பொழுது பணியாற்றுபவர்கள். அவர்களில் சிலைத்திருட்டு போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் சிலர் இருக்கலாம், ஆனால் அது மிக அரிது. வாய்ப்புகளே அரிது என்று சொல்கிறேன்.

ஆலயநிர்வாகத்தில் அதிகாரப் பொறுப்பு கொண்டவர்கள் இருசாரார். ஒருதரப்பு தக்கார், இன்னொரு தரப்பு அறநிலையத்துறை அதிகாரிகள். இந்த தக்கார் என்னும் பொறுப்பு பெரும்பாலான ஆலயங்களில் பாரம்பரியமாக வருவது. பலசமயம் சில குறிப்பிட்ட குடும்பங்களைச் சார்ந்தது. அவர்கள் அவ்வூரின் பெரியமனிதர்களாகவும் செல்வந்தர்களாகவும் பெரும்பாலும் அரசியல்பின்னணி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆலயநிலத்திலும் பெரும்பகுதி அவர்களின் கைகளிலேயே இருக்கும். அறநிலையத் துறை ஊழியர்கள் நேரடியான அரசூழியர்கள்

சென்ற எழுபதாண்டுக்கால ஆலய நிர்வாகத்தின் வரலாற்றை இப்படிச் சுருக்கிச் சொல்லலாம். பரம்பரை தக்கார் கைகளில் இருந்து அதிகாரத்தை படிப்படியாக அறநிலையத் துறை அதிகாரிகளின் கைகளுக்கு மாற்றுவது. இதை சிறுகச்சிறுகத்தான் செய்திருக்கிறார்கள்.

முன்பு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கிராமநிர்வாக அலுவலர் பதவியும் இப்படி பட்டாமணியம், கிராமக்கர்ணம் ஆகிய பரம்பரை ஊழியர் கைகளில் இருந்து அரசூழியர்களான கிராமநிர்வாக அலுவலர் கைகளுக்கு மாற்றப்பட்டது. ஆனால் அது நேரடியாக அரசு நிர்வாகத்துடன் தொடர்புடையத் துறை. ஆகவே உடனடியாக அம்மாற்றம் நிகழ்ந்தது. ஆனாலும் கடும் எதிர்ப்பு இருந்தது. எம்ஜிஆர் மேல் கொலைமுயற்சிகூட நிகழ்ந்தது. ஆனால் அந்த மாற்றம் கிராமநிர்வாகத்தில் இருந்த சாதிமேலாதிக்கத்தை ஒழித்து தமிழக முன்னேற்றத்தில் முக்கியமான காலடியாக அமைந்தது.

ஆலய நிர்வாகத்தில் அப்படிச்செய்ய பெருந்தயக்கம் உள்ளது. முதன்மைக்காரணம் ஆலயத்துறை பெரிய வருமானம் இல்லாதது. நேரடியாக அரசுடன் தொடர்பற்றது. இரண்டாவதாக இதில் சம்பிரதாயங்களும் மதமரபுகளும் உள்ளன. ஆகவே இன்றும்கூட தக்கார்முறை நீடிக்கிறது.

சென்ற இருபதாண்டுக்காலத்தில் ஆலயத் தக்காராக இரண்டாம்நிலை மூன்றாம்நிலை அரசியல்வாதிகள் நியமிக்கப்படுகிறார்கள். ஆலயச் சொத்துக்களைச் சுரண்டுவது உட்பட அனைத்திலும் இவர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். இன்று அறநிலையத்துறை ஊழியர்கள் இவர்களுடன் ஒத்துப்போகவோ முரண்பட்டு போராடி துன்பப்படவோதான் முடியும். அரசியல்வாதிகளின், பெரியமனிதர்களின் சுரண்டல் ஆக்ரமிப்பு எதுவுமே தண்டிக்கப்படுவதில்லை என்பதே நம் பண்பாடு.

சிலைகளைப் பொறுத்தவரை அறுபதுகளிலேயே கணிசமான சிலைகள் விற்கப்பட்டுவிட்டன. ஏராளமான ஊர்களில் சிலைகள், நகைகள் போன்றவை தக்கார்களின் இல்லங்களிலேயே இருந்தன. திருவிழாக்களுக்கு அவை கொண்டுவரப்பட்டு திரும்பிக் கொண்டுசெல்லப்படும். அவற்றை சீர்நோக்க எவருக்கும் நடைமுறையில் அதிகாரம் இருக்கவில்லை.

அத்துடன் அன்று சிலைகளுக்கு வெறும் எண்களே இடப்பட்டு கையிருப்புப் பட்டியல் தயார் செய்யப்பட்டது. விவரணைகளோ புகைப்படப்பதிவுகளோ இல்லை. ஆகவே ஒரு சிலை மாற்றம் செய்யப்பட்டால் அதை கண்டுபிடிக்கவும் வழியில்லை.

கணிசமான கோயில்கள் ஆள்நடமாட்டம் இல்லாதவை. ஆகவே கிராமப்புற ஆலயங்களில் இருந்து சிலைகளை ஒட்டுமொத்தமாகக் கொண்டுவந்து ஒரு பெரிய கோயிலின் அறையில் அடைத்துப்போட்டு வைப்பது வழக்கம். இப்படி பல சிலைக்க்காப்பகங்கள் தமிழகத்து ஆலயங்களில் இன்றும் உள்ளன. அவற்றின் சாவி சமீபகாலம் வரை தக்கார் கைகளில் இருந்தது. இப்போது அறநிலையத்துறை அதிகாரிகள் கைகளில். எங்கும் அது பூசகர் கைகளில் இருப்பதில்லை

இந்த ‘குடோன்களில்’ இருக்கும் சிலைகள் ஓர் அறநிலையத் துறை அதிகாரி முந்தையவரிடமிருந்து பொறுப்பேற்கும்போது மட்டுமே திறந்து சரிபார்க்கப்படும். பெரும்பாலும் எண்ணிக்கையை மட்டுமே சரிபார்க்க முடியும். அரசுத்துறையில் மிக உதாசீனமாக செய்யப்படும் வேலை இந்த கையிருப்பு ஒப்படைப்பு. நடைமுறையில் சரிபார்க்கவே முடியாது. பின்னால் பின்னால் சென்று சென்றுகொண்டே இருக்கவேண்டியதுதான்.

அரிதாகச் சில கிறுக்குகள் அதைச்செய்வதுண்டு. தூசியும் புழுதியும்தான் எழுந்து வரும்.உண்மைக்குற்றவாளியை நெருங்கமுடியாது. பலசமயம் விண்ணுலகு சென்றுவிட்டிருப்பார். நான் என் பணிக்காலத்தில் ஒருமுறைகூட கையிருப்பை சோதனை செய்ததில்லை. கையெழுத்துபோட்டு பெற்றுக்கொள்வதுடன் சரி. தோண்டப்போனால் வெள்ளைக்காரன் ஆட்சிக்காலம் வரைச் செல்லவேண்டியிருக்கும்

சென்ற பதினைந்தாண்டுகளுக்கு முன்னர்தான் புதிய இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்டபோது சிலைகள் புகைப்படங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டன. அப்போதே கணிசமான சிலைகள் முன்பெப்போதோ மறைந்துவிட்டிருப்பதை கண்டறிந்தார்கள். ஆனால் எவரை பிடிப்பது? கடைசியாகக் கையெழுத்திட்ட அறநிலையத் துறை அதிகாரிதான் சிறைக்குச் செல்லவேண்டும். தொண்ணூறுவிழுக்காடு தருணங்களில் அவர் ஒன்றுமறியாத அப்பாவியாகவே இருப்பார். அரசியல்வாதிகளையோ உள்ளூர்ப்பிரமுகர்களையோ அவரால் ஒன்றும் செய்யவும் இயலாது.

சமீபகாலம் வரை அறநிலைய துறைக்கு தனி ஊழியர்கள் நேரடியாகத் தேர்வுசெய்யப்படுவதில்லை. பிற அரசுத்துறைகளில் இருந்து அங்கே அவர்கள் அனுப்பப் பட்டார்கள்.  அவர்களுக்கான தனித்தகுதிகளும் வரையறைசெய்யப்படவில்லை.அவர்களுக்கு வரலாறோ கலையோ தெரியாது. ஆகவே ஒரு சிலையை அடையாளம் காண்பதெல்லாம் அவர்களால் இயலாது. எல்லா அரசு அலுவலகங்களிலும் சம்பிரதாயமாக ’ஸ்டாக்’ கணக்கு எடுப்பதுபோல சிலைகளுக்கும் கணக்கெடுத்திருப்பார்கள்.

சிலைத்திருட்டு பெருந்தொழில். அது முதன்மையாக தக்கார்களாலும் துணைநிற்கும் அறநிலையத் துறை அதிகாரிகளாலும் ஒத்துப்போகும் பூசகர்களாலும் செய்யப்படுகிறது. அதில் பங்கெடுத்த அந்தணர்கள் இருக்கலாம். ஆனால் அந்த வலையில் மிகக்கடைசியில் உள்ள மிகமிகப் பலவீனமான கண்ணியாகிய அந்தணப்பூசகர்களை முழுப்பொறுப்புக்கும் உரியவர்களாக ஆக்குவதில் உள்ளது அப்பட்டமான சாதிவெறியும் திருட்டுநோக்கும் மட்டுமே.

திருட்டுப்போன சிலைகளை இனிமேல் முறையாக கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் அவற்றுக்குச் சரியான ஆவணப்பதிவுகள் இருக்க வாய்ப்பில்லை. கூடுமானவரை பின்னால் தேடிச்சென்று மீட்கமுயலலாம். ஆனால் அது மிகப்பெரிய பணி.செலவேறியது. அதைச்செய்வார்களா என்று தெரியவில்லை

ஆனால் இப்போது என் பார்வை மாறியிருக்கிறது. பல ஊர்களில் ஆலயங்களில் இருந்து அரசு வெளியேறவேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இவற்றில் முன்னிற்பவர்கள் பெரும்பாலும் இந்த பாரம்பரிய தக்கார்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எந்த அதிகாரத்திற்கும் கட்டுப்படாதவர்கள் இவர்கள். ஆலயத்திருப்பணி என்றபேரில் ஊழல்செய்பவர்களும், ஆலயங்களைப் பாழ்படுத்துபவர்களும் இவர்களே

ஆலயங்கள் அரசிடம் மட்டுமே இருக்கவேண்டும் என நினைக்கிறேன். அவை ஆத்திகர்களின் சொத்து அல்ல, கலைமையங்கள் வரலாற்றுச் சின்னங்கள் என்றவகையில் அனைத்து மக்களுக்கும் உரியவை. இந்துக்கள் இஸ்லாமியர் கிறிஸ்தவர் என அனைவருக்கும் உரிமைப்பட்டவை. அவற்றை அரசுதான் பாதுகாக்க முடியும். முறையான பதிவு, அறிவியல்பூர்வமான கணக்குவைப்புமுறை, தொடர்ச்சியான வெளிப்ப்படையான கண்காணிப்பு ஆகியவையே இன்றைய தேவை

ஜெ

சிலை, கலை, திருட்டு பத்ரி சேஷாத்ரி

வாழும் சிற்பங்கள்

முந்தைய கட்டுரைஉலோகம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73