சங்கன் ககனவெளியிலிருந்து பல நூறு தெய்வங்கள் திரண்டெழுந்து தன் உடலில் வந்து பொருந்தும் உணர்வை அடைந்தான். உடற்தசைகள் அனைத்தும் வெவ்வேறு உயிரும் தனித்தனியே விழைவும் தமக்கென்றேயான அசைவும் கொண்டவைபோல் தோன்றின. தோள்கள் சினமெழுந்த இரு பெரும்மல்லர்கள். இரு கால்களும் புரவிகள். நெஞ்சுள் தேரேறிய வில்லவர்கள் இருவர். விழிகளில், செவிகளில், உடலெங்கும் பரவி பலகோடி விழிகளென்றான தோலில் தெய்வங்கள் கூர்கொண்டன. வில்லை நாட்டி அம்பை கையிலெடுத்து செவிவரை நாணிழுத்து முதல் அம்பை தொடுத்தான்.
அது விம்மிச் சென்று தைக்க உடல் திடுக்கிட்டு பாய்ந்துவந்த கரிய புரவியிலிருந்து சரிந்து உதிர்ந்த கௌரவ வீரனின் இறுதி விழிமின்னை ஒருகணம் அருகிலென கண்டான். அத்தருணத்தில் உடல்விதிர்க்க எழுந்த துள்ளல் தன்னுடையதல்ல என்றுணர்ந்தான். அது பல்லாயிரம் குருதி குடித்து சுவையறிந்த தொல்தெய்வமொன்றின் களிப்பு. ஒவ்வொரு அம்பும் நாணிழுக்கப்படுகையில் தன்னுள் முறுகி மேலும் மேலும் என்று வெறிகொண்ட தெய்வங்களின் ததும்பலை அவன் அறிந்தான். இம்மென்று ஒலித்து எழுந்து சென்ற அம்புடன் அவர்கள் தாங்களும் பறந்து சென்றனர். சென்று தைத்து மெல்ல இறகு நடுங்கி நின்ற அம்பிலிருந்து அவ்வுடலுக்குள் பாய்ந்தேறினர். வழிந்த குருதியை ஆயிரம் மென் நாக்குகளால் நக்கி உண்டு திளைத்தனர். சரிந்து மண்ணில் அறைந்து விழுந்த அவ்வுடலுக்குள் ஒருவரோடொருவர் முட்டிமோதி கொந்தளித்து களித்தனர்.
இறந்த விழிகளில் இருந்த வியப்பை அவன் பார்த்தான். அன்றுவரை அவர்கள் காணாத ஒன்றைக் கண்டு அக்கணமே நிலைத்தவை. ஆனால் அவர்கள் நன்கறிந்திருந்தவை. எப்போது முதலில் புண்பட்டார்களோ, முதற்குருதித்துளி தொட்டு சுட்டுவிரலால் தரையில் இழுத்து விளையாடினார்களோ, என்று முதற்படைக்கலத்தை ஆசிரியன் தொட்டளிக்க வாங்கி அச்சமும் தயக்கமுமாக மெல்ல சுழற்றி நான் நான் என்று உணர்ந்தார்களோ அப்போது அவர்கள் கண்டது அந்த தெய்வம். என்றும் உடனிருந்தது. கனவுகளில் வந்து புன்னகைத்தது. தனித்தது, மானுடனை நன்கறிந்தது, முடிவிலாது காத்திருப்பது.
அம்புகள் சென்று சென்று தைத்து வீரர்களை வீழ்த்திக்கொண்டிருந்தன. எண்ணியவை பிழைத்தன. எண்ணா இலக்கில் சென்று தைத்தன சில. மண்ணில் தைத்து நடுங்கின சில. தேர்த்தட்டில் முட்டி உதிர்ந்தன பிற. இலக்கடையாத தெய்வங்கள் சீற்றம்கொண்டு திரும்பி வந்தன. குருதிக்கென நெடுந்தவம் இருந்தவை. விழிகொண்டு நாநீட்டி எழுந்தவை. அவை கணத்திற்கொன்று படைக்கலத்திற்கொன்று. ஒன்று பிறிதொன்றாகின்றவை. ஒன்றிலிருந்து நூறு ஆயிரமென முளைத்தெழுபவை. தெய்வங்களாலான பெருவெளிக்குக் கீழே அவற்றின் கால்புழுதியின் கொந்தளிப்பென இரு படைகளும் ஒன்றுடன் ஒன்று சென்று நெஞ்சறைந்துகொண்டன. கைகளும் கால்களும் பின்னிக் கோக்க ஒற்றை உடலென ஆகி இறுகி விதிர்த்து விசையுச்சியில் அசைவிழந்து பின் சுழன்றன.
ஒவ்வொரு வீரனும் முற்றிலும் தனித்தவனாக, தன்னை முழுமையாக தன்னுள் எழுந்த தெய்வங்களுக்கு ஒப்புக்கொடுத்தவனாக, நூறு கைகளும் நூறுநூறு கால்களும் ஆயிரம் விழிகளும் ஆயிரமாயிரமென பெருகும் செவிகளும் கொண்டு எழுந்தான். அம்புகள் பறவைகளாக எழுந்து சிறகு விம்ம வளைந்திறங்கி தைத்து நடுங்கின. உடல்களை துளைத்து சரிந்து உடன் விழுந்து துடிக்கும் உடல்மேல் குத்தி நின்றிருந்தன. வாள்கள் காற்றில் குறுமின்னல்களென வளைந்து சுழன்றன. வேல்கள் எழுந்து அரைவட்டமென சுழன்று வெட்டி, குருதி தெறிக்க மீண்டும் சுழற்சி கொண்டன. கைகளிலிருந்தெழுந்து விசையுடன் வளைந்து உடல்களில் குத்திச் சரித்து மண்ணிலிறங்கி நின்றதிர்ந்தன. விழுந்தவர்கள்மேல் விழுந்தவர்கள் இறுதித் திணறலில் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர். மண்ணில் ஒரு திரள் மற்போர் என.
விழுந்தவர்களின் துடிப்புகள் திளைப்பு கொள்ள அவற்றுக்கு மேல் புரவிகள் குளம்புகள் அறைந்து தாவி முன் சென்றன. தேர்ச்சகடங்கள் ஏறி விழுந்து அதிர்ந்து மீண்டும் ஏறிச் சென்றன. சகடங்களால் எலும்புகள் உடைவதை தசைகள் கிழிபடுவதை மேலிருந்தே உணரமுடிந்தது. படைகள் முதலில் எழுந்த விசையை எதிரிப்படையின் விசை தடுக்க விரிசலிட்டு பக்கவாட்டில் விரிந்தன. அவை உருவாக்கிய இடைவெளியில் பின்னாலிருந்த படைகள் வந்து நிறைய நீண்ட கூர்முக்கோணமென அமைந்திருந்த சங்கனின் படை விரிந்து பிறைவடிவம் கொண்டது. வில்ஓயாது அம்புதொடுத்தபடி அவன் ஆணைகளை கூவினான். அங்கே எழுந்த பேரொலியில் சொற்கள் சிதறி மூழ்கின. ஆனால் உதடுகளை விழிகளால் கூர்ந்தால் அச்சொற்களை செவி சென்றடைந்தது. அவன் சொற்களை நோக்கியபடி இரு துணைப்படைத்தலைவர்கள் இருபுறமும் வந்துகொண்டிருந்தனர். அவன் ஆணைகளை அவர்கள் கூவ கொடிமேடையில் இருந்து அவை விழிச்சொல்லாயின. முரசொலியென எழுந்து இடிகொண்டன.
ஒருநோக்கை தான் தாக்கும் இலக்குக்கும் மறுநோக்கை தன்னைச்சுற்றி இருந்த படைக்குமென மாறி மாறி அளித்தபடி அவன் முன்சென்றான் “இதோ! இதோ!” என்று அம்பெடுத்து எய்து நகைத்த மறுநாவசைவால் “வலதுமுனை முன்னேறுக! வலதுமுனைக்கு மேலும் எண்பதின்மர் செல்க! பன்னிரண்டாவது நூற்றுவன் பின்னடைகிறான். உதவிக்கு செல்க!” என்று ஆணைகளை கூவினான். அவனது ஒவ்வொரு சொல்லும் மறுகணமே கொடியசைவென வண்ண நா கொண்டது. ஒலிவடிவென எழுந்து படைக்குமேல் முழங்கியது. அவன் எண்ணியது சிலகணங்களில் நிகழ்வென்று மாறியது. சற்று நேரத்தில் அந்த ஒத்திசைவு முழுமையாக கைகூட அப்படையை அவன் தன் எண்ணத்தால் ஆண்டான். தன் கைகளென அதை உணர்ந்தான். பேருருக்கொண்டு எதிரிப் படைப்பிரிவை தாக்கினான்.
தனக்கு முன் அஸ்வத்தாமனின் தேர் வருவதை சங்கன் கண்டான். அவனுடைய தேரின் விரைவு மிகுதியாக இருக்க தொடர்ந்து வந்த காவல்படைகளை அம்புகள் தாக்கி தயங்கச்செய்தமையால் தனித்து முன்னால் வந்துவிட்டிருந்தான். “தாக்குக! இன்று நமக்கு ஒரு பெருந்தலை சிக்கவிருக்கிறது! முன்னேறுக!” என்று கூவியபடி அஸ்வத்தாமனை நோக்கி சென்றான். “மும்மடங்கு அம்புகள் பொழியவேண்டும். துணைப்படையினர் அருகணையாது வானில் வேலியெழுக!” என்றபடி கையை தூக்கி போர்க்கூச்சலெழுப்பினான். அஸ்வத்தாமனின் காவல்படை முன்னால் விழுந்த புரவிகளின் உடல்களில் தொடர்ந்த புரவிகள் கால்தடுக்க மேலும் மேலும் பின்னடைந்தது. குலாடர்களின் விரைவுக் குதிரைப் படை அஸ்வத்தாமனின் படையைச் சூழ்ந்து வந்த புரவிகளை எதிர்கொண்டது. அலறல்களும் குருதித் தெறிப்புகளும் தலைக்கவசங்களின் கொப்பளிப்புமாக அப்பகுதி ஏரியில் இரைவீசப்பட்ட மீன்கொப்பளிப்பு என கொந்தளித்தது.
சங்கனின் தேர் அஸ்வத்தாமனை நோக்கி சென்றது. தேர்த்தட்டில் நின்ற அஸ்வத்தாமன் அவனைக் கண்டு நகைத்து “மைந்தா, இல்லத்துக்கு திரும்புக! இளமைந்தரை நான் கொல்வதில்லை” என்றான். சங்கன் “இளமைந்தரால் உயிர்துறப்பதென்பது நற்பேறு. உங்கள் தந்தையின் நல்லூழால் அது அமைந்துள்ளது, பாஞ்சாலரே” என்றான். அவனுடைய சொற்களை உதடசைவிலிருந்தே புரிந்துகொண்ட அஸ்வத்தாமன் விழிதொடரா விரைவுடன் கைசுழல அம்பெடுத்து அவன்மேல் எய்தான். சங்கன் முழந்தாளிட்டு அவ்வம்பை தவிர்த்த மறுகணமே தன் அம்பை எய்தான். இரு அம்புகளும் ஒன்றையொன்று விண்ணில் சந்தித்தன. உலோக நகைப்பொலி எழுப்பி முட்டிக்கொண்டு உதிர்ந்தன.
சங்கனின் வில் போர்வெறி எழுந்ததுபோல் நின்று துள்ளியது. அவன் அம்புகள் இரைகொண்டுவரும் அன்னையைக் கண்ட குருவிக்குஞ்சுகள் என தூளியில் எம்பித்தாவின. அவன் நாண் விரல்விளையாடும் யாழின் நரம்பென அதிர்ந்து முழங்கியது. காற்றாடி இறகென கைசுழல அவன் அம்புகளை செலுத்தினான். ஒவ்வொரு அம்பும் தைக்குமிடத்தில் ஒருகணம் விழிசென்று தொட்டது. உளம் சென்று தொட்ட இடத்தில் தான் சென்று தொட்ட அம்பு தன் கனவிலிருந்து எழுவதுபோல் தோன்றியது. ஒருபோதும் அவன் அம்புகள் அத்தனை கூர்மையாக இலக்கடைந்ததில்லை.
அவர்களிருவரையும் இரு பக்கங்களிலும் காத்த புரவிவீரர்கள் அம்புகளால் சூழ வேலியொன்றை அமைத்தனர். அதில் முட்டிச் சிதறியவர்களாக புரவியூர்ந்த வீரர்கள் விழுந்தனர். அஸ்வத்தாமனின் வில்லை தன் அம்பு முறித்தபோது ஒருகணம் திகைத்து பின் கைதூக்கி வெடிப்பொலி எழுப்பினான் சங்கன். அஸ்வத்தாமன் அதை எதிர்பாராமல் துணுக்குற்று மறுகணமே இடக்காலால் இன்னொரு வில்லை எடுத்து நாணிழுத்து சங்கனின் தேரை அடித்தான். தேர்த்தூணில் பட்டு அந்த அம்பு துள்ளியது. அஸ்வத்தாமன் “நன்று! நீ வில் பயின்றிருக்கிறாய்! நன்று!” என்று கூவினான். “இன்னும் காண்பீர்கள், பாஞ்சாலரே” என்றபடி சங்கன் தன் பிறையலகு அம்புகளை தொடுத்தான். அஸ்வத்தாமன் வெடித்து நகைத்து “நன்று! நன்று!” என்று கூவினான்.
அம்புகளாலேயே ஆன சரடால் தொடுத்துக்கொண்டு மெல்ல சுழன்றனர். சங்கன் அப்பெருங்களத்தை, அங்கு நின்றுகொண்டிருந்த படைப்பெருக்கை, போர்க்கொந்தளிப்பை முற்றிலும் மறந்தான். அஸ்வத்தாமனும் அவனும் மட்டுமே அங்கே இருந்தனர். ஒருவரையொருவர் அம்புச் சரடுகளால் தொடுத்துக்கொண்டு அம்புகளினூடாகவே ஒருவரையொருவர் முற்றிலும் அறிந்தவர்களாக தனிமையில் அங்கு நின்றனர். வேறெப்போதும் இன்னொரு மானுடனை அவ்வளவு அணுக்கத்தில் உணர்ந்ததில்லை என்று சங்கன் அறிந்தான். அஸ்வத்தாமனின் ஒவ்வொரு விழியசைவையும் அவனால் பார்க்க முடிந்தது. அவனுடைய கை எழுவதற்குள் அது எடுக்கும் அம்பை அவன் விழிதொட்டுவிட்டிருந்தது. தன்னை அவ்வாறே அவன் உணர்கிறான் என்பதை அவன் அறிந்தான். ஒருவர் இருவரென பிரிந்து நின்றாடும் ஆடல் போரிலன்றி மானுடரால் இயலாது. போரென்பது உடல்உதறி உள்ளங்கள் எழுந்த ஒரு வெளியில் ஒன்றாகி நின்றிருக்கும் தருணம்.
மேலும் மேலும் என்று அவர்கள் சுற்றிவந்தனர். பெருங்காதலுடன் காமம் கொண்டாடுபவர்களின் முத்தங்கள்போல அம்புகளால் மொய்த்துக்கொண்டார்கள். ஊடே புகுந்த ஒவ்வொருவரும் அலறி வீழ்ந்தனர். குருதியால் நனைந்த செம்மண் மீது விழுந்து துடித்தவர்களின்மேல் சகடங்கள் ஏற உடலுடைந்து அலறிய ஓலம் எங்கிருந்தோ என கேட்டது. இளஞ்சாரல் என குருதித்துளி தெறித்தது. குருதி வழிந்து உடல் குளிர்ந்து தசைகளில் வெம்மையை ஆற்றியது. உலர்ந்த குருதி தோல் மேல் பிறிதொரு தோலென இருக்க அதன் மேல் விழுந்த பசுங்குருதி உப்பு கரைத்து நிணவிழுதென்றாகி தயங்கி வழிந்தது. தன் புருவங்களிலிருந்தும் மூக்கு நுனியிலிருந்தும் சொட்டும் குருதியை தலையுதறி அவன் உதிர்த்தான்.
ஒருவரை ஒருவர் அணுகிய ஒரு கணத்தில் தன் தொடையில் ஓங்கி அறைந்து கூச்சலிட்டபடி சங்கன் கதையை எடுத்துக்கொண்டு பாகனைத் தாண்டி புரவிமேல் நடந்து குதித்து தரையில் இறங்கினான். அதை ஏற்று நகைத்தபடி அஸ்வத்தாமன் தன் கதையுடன் பறந்து இறங்கி மண்ணில் சிறகொடுக்கி அமையும் சிறுபுள்ளென குதித்து கதையுடன் நிலத்தில் நின்றான். சங்கனின் கதையின் ஐந்திலொரு பங்கு எடையும் அளவும்தான் அஸ்வத்தாமனின் கதைக்கு இருந்தது. அவன் எண்ணியது போலவே அஸ்வத்தாமனின் கதை விழிதொட்டு நோக்க இயலாத விரைவு கொண்டிருந்தது. இரு கதைகளும் ஒன்றையொன்று முட்டிய கணத்தில் விசையாலேயே அது எடைகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.
கதைகளின் இரும்புத்தலைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு அனல் தெறித்தன. கால்களை நிலைமண்டிலமாக விரித்து தோள்களை அகற்றி கதை சுழற்றி அவன் அஸ்வத்தாமனை எதிர்கொண்டான். கீழே விழுந்து ஒன்றின் மேல் ஒன்றென அடுக்கப்பட்டவைபோல் கிடந்த சடலங்களின் மீது கால் வைத்து அவர்கள் தாவியும் அமைந்தும் எழுந்தும் போரிட்டனர். இரும்புக்கோள்கள் இருவரைச் சுற்றி பறந்தன. காற்றுவெளியில் மோதி மோதி அனல்தெறிக்க அதிர்ந்தன. சுழலும் கதையின் இரும்புக்குமிழ் பெருகி உருவான கவசமொன்றை அஸ்வத்தாமன் அணிந்திருந்தான். அதில் சிறுவிரிசல் தேடி தவித்தது சங்கனின் கதை. அமர்வதற்கு கிளை தேடும் பறவையென சங்கனைச் சூழ்ந்து பறந்தது அஸ்வத்தாமனின் கதை.
பின் ஒரு கணத்தில் என்ன நிகழ்ந்ததென்று அறியாமல் சங்கன் பின்னால் சரிந்து விழுந்தான். அவன் தோளை அறைந்த அஸ்வத்தாமனின் கதை சுழன்று தலை நோக்கி வருவதற்குள் பின்னாலிருந்து விரைந்து வந்த திருஷ்டத்யும்னனின் புரவி சங்கனை அணுகி அவன் மேல் தாவி அப்பால் சென்றது. அதே விசையில் குனிந்த திருஷ்டத்யும்னன் சங்கனின் தோள் பற்றி சுழற்றித் தூக்கி தன் முன் படுக்கவைத்து கொண்டுசென்றான். திருஷ்டத்யும்னனை தொடர்ந்து வந்த படைகள் அரண்போல அஸ்வத்தாமனுக்கும் அவர்களுக்கும் நடுவே குவிந்தன. அஸ்வத்தாமனின் கதையால் தலை உடைபட்டு வீரர்கள் நிலத்தில் விழுந்தனர். அவர்களின் அலறல்களும் சிதறும் குருதியும் அவர்களை சூழ்ந்தன.
திருஷ்டத்யும்னன் “தேர் வருக! தேர் நிரை தொடர்க!” என்று கூவினான். சங்கனின் தேர் தொடர்ந்து வந்தது. அவன் மீண்டுமொருமுறை சங்கனை தூக்கிச் சுழற்றி தேர்த்தட்டிலிட்டான். சங்கன் தேர்த்தட்டில் கையூன்றி புரண்டெழுந்து நின்றான். “இளையோனே, செல்க… சற்றே ஓய்வெடு” என்றான் திருஷ்டத்யும்னன். “இல்லை, தசை மட்டுமே அடிபட்டிருக்கிறது. மீண்டும் களம் நிற்போம். தாழ்வில்லை” என்று சங்கன் கூவினான். திருஷ்டத்யும்னன் “நன்று இளையோனே, நீ நமது படைகளின் சுவையின் ஒரு திவலையை அவர்களுக்கு அளித்துவிட்டாய்” என்று கைதூக்கிக் கூவியபடி முன்னால் சென்றான். அவன் கையசைவுக்கு ஏற்ப பின்னால் காவல்மாடத்திலிருந்து “அணிகொள்க! அடியை மீண்டும் இறுக்குக!” என்று ஆணை எழுந்தது.
சிதறிப்பரந்த படைவீரர்கள் பின்னகர்ந்து எஞ்சியவர்கள் ஒருங்கிணைந்து மீண்டும் முப்புரிவேல் வடிவத்தை அடைந்தனர். போர் விசைகொண்டு மீண்டும் தொடங்கியபோது சங்கன் தன்னுள் தெய்வங்கள் உறுமியெழுவதை உணர்ந்தான். தன் வில்லை எடுத்து நிறுத்தி நாணிழுத்தபோது உடலில் ஒரு சிறு நிலையின்மை தோன்றியது. மறுகணம் உள்ளிருந்து ஒரு தெய்வம் “செல்க… செல்க!” என ஆர்ப்பரித்தது. வலத்தோளை அசைக்க இயலவில்லை. முழுமூச்சையும் இழுத்து எரிய வைத்து ஆற்றல்திரட்டி எய்தான். அவ்விசையிலேயே மீண்டும் தன்னை முன்செலுத்திக்கொண்டான்.
முதல் அம்பிலேயே எதிரிவீரனின் உடல் தைத்து அப்பால் சென்றது அம்பு. அடுத்த அம்பு இன்னொருவனின் நெஞ்சுபிளந்து நின்றது. இன்னொருவன் கவசம் உடைந்து தெறிக்க சரிந்து விழுந்தான். அவன் தலையை கொய்தது பிறையம்பு. தலையற்ற உடல் தள்ளாடி முன்னகர்ந்து அணைப்பதுபோல் கைவிரித்து மண்ணில் விழுந்தது. திகைத்த புரவி தன்னைத்தான் சுழன்றபடி கனைத்தது. சங்கன் வெறிகொண்டு கூவியபடி முன்னால் சென்றான். “செல்க! ஒருகணமும் நில்லற்க!” என்று கூச்சலிட்டான். கௌரவ மைந்தர் குத்ஸிதனும் சுபானுவும் அவனை எதிர்கொண்டனர். இரு அம்புகளால் அவர்களின் கவசங்களை உடைத்து கொன்றுவீழ்த்தினான். வெறிக்கூச்சலுடன் வந்த அவர்களின் மூத்தவனான உன்மத்தனை கொன்றபடி கடந்துசென்றான்.
அப்பால் அஸ்வத்தாமனுக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் உச்சகட்டப் போர் நிகழ்வதை அவன் பார்த்தான். மறுபக்கம் நகுலனின் தேரை சகுனியின் தேர் எதிர்கொண்டது. துரியோதனனைச் சூழ்ந்து தாக்கிக்கொண்டிருந்தனர் பாண்டவ மைந்தர். காற்றில் இறகதிரும் அம்புகள் நிறைந்திருந்தன. சருகுப்புயலடிக்கும் காட்டுக்குள் என தன்னை உணர்ந்தான். ஏதோ ஒருகணத்தில் போர் தனக்கு சலிப்பூட்டும் என முன்னர் எண்ணியிருந்தான். ஆனால் அது ஒவ்வொரு கணமும் பெரும் களியாட்டென்று தொடர்ந்தது. இத்தனை ஆண்டுகள் அள்ளி உண்ட உணவனைத்தும் இத்தருணத்திற்காகவே. அன்னை கருவிலிருந்து உடல் திரட்டி எழுந்ததும் இதற்காகவே. இன்றொரு நாள்! இன்று! ஆம் இன்று! இத்தனை அம்புகளுக்குப்பின் இருக்கும் ஊழ்க நுண்சொல் அது! இன்று!
இன்று இன்று இன்று இன்று… ஒவ்வொரு சொல்லுக்கும் அம்புபட்டு வீரர்கள் விழுந்துகொண்டிருந்தனர். அவன் கவசத்தின்மீது வந்து முட்டி உலோக ஓசையை எழுப்பி விழுந்தன அம்புகள். அவன் தலைக்கவசத்தை உரசி கேவலொலி எழுப்பிச் சென்றது ஓர் அம்பு. புரவி ஒன்று அவனை விரைந்தணுகி அம்புபட்டு கனைத்தபடி விழியுருட்டி சரிந்தது. அதன் குளம்புகள் உதைத்துக்கொள்ள அதன் மேல் உருண்டு வந்து கவிழ்ந்தது ஒரு தேர். ஒரு கேடயம் பறந்து வந்து பூழி மண்ணில் விழுந்தது. அதன்மேல் கணகணவென ஒலியுடன் அம்புகள் பெய்தன.
“சைந்தவரை சூழ்க!” என்று அவன் ஆணையிட்டான். அவன் படை அக்கணமே இரு கைகளாக மாறி நீண்டு அணைப்பதுபோல் ஜயத்ரதன் படைகளை நோக்கி சென்றது. ஜயத்ரதன் படைகளிலிருந்து எழுந்த இரு கைகள் அவற்றை கோத்துக்கொள்ள இரு மல்லர்கள் என படைகள் கைகோத்துக்கொண்டன. படைசுழிப்பென போர் நிகழத்தொடங்கியது. அம்புகளால் எதிர்ப்படுபவரை வீழ்த்தி வழிவகுந்தபடி விழுந்த உடல்களின் மேல் ஏறி தேர் முன்செல்ல அவன் ஜயத்ரதனை அணுகினான்.
அவன் அணுகுவதை பாராமல் மறுபக்கம் அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தான் ஜயத்ரதன். களத்தில் அத்தனை ஒன்றி அவனால் போர்புரிய முடிவதை சங்கன் வியந்தான். அத்தனை பொறுப்பின்மையுடன் இருக்குமளவுக்கு தன் ஆற்றல் மேல் நம்பிக்கையுடன் இருப்பதை எண்ணி வியந்தான். அவன் அம்பு ஜயத்ரதனை நோக்கி சென்றபோது விழி அறியாமலேயே அவன் உடல் நெளிந்து அதை தவிர்த்தது. மீண்டும் மீண்டுமென பதினெட்டு அம்புகளை அவன் ஜயத்ரதனை நோக்கி அனுப்பினான். ஒவ்வொரு அம்பையும் அவன் உடலே ஒழிந்தது.
தான் எடுத்த இலக்கை முற்றாக அழித்தபின் ஜயத்ரதன் திரும்பினான். நிஷாதகுடித் தலைவர்கள் எழுவர் தலையறுந்து விழ அவர்களைச் சூழ்ந்து படை வீரர்களின் உடல்கள் விழுந்து துள்ளிக்கொண்டிருந்தன. அவர்கள் வந்த பகுதியே ஒழிந்து ஒரு வெற்றிடமாக அங்கு எழுந்த வெறுமையை நோக்கி களிக்கூச்சலிட்டபடி திரும்பி அவன் சங்கனை பார்த்தான். “நீயா? வா வா… இன்று ஒரு பெரிய மீனுடன் பாடிவீடு திரும்புவேன்” என்றபடி அவன் சங்கனை நோக்கி வந்தான். நீந்துபவனுக்கு முன் எழும் அலை என அவனுக்கு முன்னால் அம்புச்சுழல் எழுந்து அணைந்தது. அவ்வம்புகளாலேயே அவன் சுமந்து கொண்டுவரப்படுபவன் போலிருந்தான்.
சங்கனைச் சுற்றி நூறுநூறு அம்புகள் பறந்துகொண்டிருந்தன. பெருநதியின் ஆழத்தில் நீந்தித் திளைக்கையில் வெள்ளி மீன்களால் சூழப்பட்டிருப்பதுபோல் அவன் உணர்ந்தான். அவன் கவசங்களை அம்புகள் அறைந்தறைந்து துடிக்கவைத்தன. மீன்கள் கொத்தி புரட்டும் தசைத்துண்டென அவன் அவற்றால் சுழற்றப்பட்டான். தன்னை தேர்த்தட்டிலிருந்து விலக்கி தூணுடன் உடல் ஒட்டி நிறுத்திக்கொண்டபடி அவன் அம்புகளை எய்து ஜயத்ரதனை தாக்கினான். “ஓர் அம்பு! இளையோனே, ஒரேயொரு அம்பேனும் என் மேல் தொடுத்தாய் என்றால் நீ வென்றாய்” என்று சிரித்தபடி ஜயத்ரதன் கூவினான். அவன் பற்களின் மின்னலை, கண்ணிலெழுந்த நகைப்பின் ஒளியை மிக அருகிலென கண்டான்.
பாரதவர்ஷத்தின் மாபெரும் வில்லவன் ஒருவனை எதிர்கொண்டிருக்கிறேன். இத்தருணத்தில் அரைநாழிகைப் பொழுது இங்கு தலையறுந்து விழாது நின்றிருப்பேனெனில் என் குடி எனக்காக பெருமைகொள்ளும். “ஒருநாழிகைப்பொழுது! ஒரேநாழிகை!” சங்கன் உள்ளம் கூவியது. ஜயத்ரதன் அம்பு அவன் தேர் முகடை உடைத்தெறிந்தது. அவனுக்குப் பின்னால் நின்ற அறிவிப்பாளனின் தலை தெறித்து அப்பால் விழ அவன் தேர்த்தட்டில் தள்ளாடி சங்கனின் மேல் விழுந்தான். அவனை வலது தோளால் உந்தி அப்பால் தள்ளிய சங்கன் அம்புகளை தெறிக்கவிட்டான். ஜயத்ரதனின் தேரை ஓர் அம்புகூட நெருங்க இயலவில்லை.
“ஓர் அம்பு! ஒருநாழிகைப்பொழுது!” என்று உள்ளம் ஓலமிட சங்கன் அம்பை எய்துகொண்டிருந்தான். இதோ… இதோ… எத்தனை பொழுது ஒருகணத்திற்கு? ஓர் அம்பு! ஒருகணத்திற்கு நூறு அம்புகள் எதிர்வருகின்றன. கணம் கணமெனச் செல்லும் காலம். ஒரு நாழிகையின் நீளமென்ன? இக்கணம் உயிர்பிழைத்தேன். மீண்டும் ஒரு கணம். ஒருகணத்தில் மானுடன் இத்தனை நெடுந்தூரம் வாழ முடியுமா? ஒருகணத்தில் இத்தனை அறிந்து, இத்தனை துயருற்று, இவ்வளவு களிகொண்டு நிறைய முடியுமா? ஒவ்வொரு கணமும் தோள்களால் அசைக்க முடியாத பெரும்பாறைபோல் கடந்து சென்றது. கணம் கணமென உந்தி உந்தித் தள்ளி அவன் போரிட்டுக்கொண்டிருந்தான்.
காதளவு இழுத்து விட்ட நாணின் ஓசை அவனுடன் பேசிக்கொண்டிருந்தது. விம் விம் என்று ஒற்றைச் சொல். பின் அது ஒரு மொழியாயிற்று. இத்தருணம். புகழ்கொள்ளும் தருணம். இதுவரை நீ வாழ்ந்தது ஒருகணம். இக்கணம் முழு வாழ்வின் பெருக்கு. இங்கிரு! இதை நிறை! இதை வென்று ஆள்! இதிலிருந்து வென்றெழுவது என ஏதுமில்லை. இரு! இருந்துகொண்டிரு! நிறை! நிறைந்து கடந்து அப்பால் செல்! அவன் தோள் கவசம் உடைந்து தெறித்தது. ஜயத்ரதனின் அம்பு ஒன்று வந்து அவன் தோளில் தைத்து நின்றது. ஒருநாழிகைப் பொழுதுக்கு இன்னும் எவ்வளவு கணம்? இந்நாழிகையை நான் நிறைவுறச் செய்யப்போவதில்லை. இதோ இது அறுபட்டு நிற்கும். இவ்வம்பில். இது பிழைத்தது. அதில். அதுவும் பிழைக்கிறது. பிழைக்கும் அம்புகளாலானது என் காலம்.
நிற்பேன். விழமாட்டேன். ஒருநாழிகைப்பொழுது ஜயத்ரதன் முன் நின்ற முதல் வீரன் நான். ஆனால் இதோ தொடுவானில் இருக்கிறது இந்நாழிகையின் எல்லை. ஒருகணம் அவன் உளம் சோர்ந்தான். மறுகணம் உள்ளிருந்து எழுந்த பிறிதொரு தெய்வம் அவன் பிடரியில் ஓங்கி அறைந்து ஆணையிட்டது. “முன்செல், மூடா! இத்தருணத்தில் இறந்தால் நீ மூங்கில் கழைமேல் துடித்து எழும் வெற்றிக்கொடி!” அவன் தன் முழுவிசையால் உடல் திரட்டி எழுந்து மீண்டும் அம்புகளால் ஜயத்ரதனை அடித்தான். அவன் நெஞ்சக்கவசம் பிளந்தது. சற்றே திரும்புவதற்குள் அவன் இடத்தோள் தசையை சீவிச்சென்றது ஓர் அம்பு.
“இளையோனே, செல்! அவ்வளவுதான், போர் முடிந்துவிட்டது” என்று ஜயத்ரதன் கூவினான். “வெற்று நெஞ்சுடன் என் முன் நிற்கத் துணிபவர் பாரதவர்ஷத்தில் எவருமில்லை. செல்க!” சங்கன் தன் அம்பை இழுத்து ஜயத்ரதனின் கவசத்தை அறைந்தான். கைவிலக்கி அதை ஏற்று நகர்ந்த ஜயத்ரதன் “துணிவு கொண்டிருக்கிறாய், நன்று!” என்றான். “இன்னும் ஒரு சில கணங்கள்! ஒரு நாழிகைப்பொழுது உங்கள் முன் நின்றிருக்கிறேன். ஓர் அம்பையாவது உங்கள் உடலில் தொடுக்காமல் அகலமாட்டேன்.” சங்கன் ஒவ்வொரு அம்பும் எழுகையில் ஒரு துளி குருதி அகன்றதுபோல் உடல் ஒழிந்து எடை இழந்தான். ஒவ்வொரு எண்ணமும் விலக உளமொழிந்து வெற்றுத் தக்கையென அங்கே அலையடித்த உடற்பெருக்கின் மேல் ததும்பினான்.
ஜயத்ரதன் தன் வில்லை தூக்கி “வென்றுவிட்டாய் குலாடனே, ஒரு நாழிகை என் முன் நின்றாய். நீ எனக்கு நிகரானவன் என்று இதோ அறிவிக்கிறேன்” என்றான். “ஆம், உங்களை வெல்லவும் கூடும் நான்” என்றபடி அவன் நாணிழுத்து அம்பைவிட்டான். அது பறந்து சென்று சற்றே வளைந்து ஜயத்ரதனின் கவசங்களுக்கு நடுவே முழங்கையை தைத்தது. உரக்க நகைத்தபடி அந்தக் கையை மேலே தூக்கி “நன்று! நன்று!” என்று அவன் கூவினான். படைகள் “வெற்றிவேல்! வீரவேல்! குலாடர் வெல்க! பெருவீரர் சங்கர் வெல்க!” என்று கூவின.
சங்கன் முழு ஆற்றலையும் இழந்தவன்போல் தேர்த்தட்டில் சாய்ந்தான். அவனுக்கு பின்பக்கமிருந்து சாத்யகியின் படை பெருகிவந்து அவர்களுக்கு நடுவே புகுந்தது. ஜயத்ரதன் தன் தேரை திருப்பிக்கொண்டு மறுபக்கம் செல்ல வாழ்த்தொலிகளும் வெற்றிக்கூச்சல்களுமாக வீரர்கள் சங்கனின் தேரை கைகளால் தள்ளி முன்னெடுத்தனர். தேர்த்தட்டில் நீண்ட மூச்சுவிட்டு தன் தோளிலிருந்த அம்பை சங்கன் உருவி எடுத்தான். ஜயத்ரதனின் கையில் பதிந்திருந்த தன் அம்பை மிக அருகில் காண்பவன்போல் நினைவுகூர்ந்தான். அதில் குலாடகுடியின் போர் முத்திரை இருந்தது. அது ஜயத்ரதன் தனக்களித்த பரிசு என்று அப்போது அவன் உணர்ந்தான்.