மாத்ருபூமி பேட்டி மொழியாக்கம்

 

ஜெயமோகன்அன்புமிகு திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

சிகாகோவில் இருந்து சந்திரக்குமார். நீங்கள் பகிர்ந்த குறிப்பின் வழி, கடந்த ஞாயிறு ( JULY 29,2018) அன்று மாத்ருபூமி தினசரியில் வெளிவந்த நேர்கோணலைப் படித்தேன். கட்டுரை நன்றாகவும், வித்தியாசமாகவும் இருந்ததோடல்லாமல் சில புதிய விவரங்களையும் கொண்டிருந்ததது. உங்கள் இருவருக்குமிடையேயான காதல் அரும்பிய தருணக் குறிப்புகள் மற்றும் பின்புலத்தில் உங்கள் துணைவியாரின் அபார ஒத்துழைப்பும், ஊக்கமும் பற்றிய விளக்கங்கள் கட்டுரையின் ஹைலைட் என்பேன். உங்கள் மற்றும் உங்கள் துணைவியருடனான கலந்துரையாடலின் சாரம், ஒரு NON-LINEAR வடிவில் திரு. அருண் கோபியின் எழுத்தில் புதுமையாக, நன்றாக வந்திருக்கிறது. அவருக்கு என் பாராட்டுக்கள்.

மலையாள இலக்கிய உலகில் உங்களுக்கும், உங்கள் படைப்புக்களுக்குமான அங்கீகாரம் மற்றும் எதிர்பார்ப்பு, உங்கள் பார்வையில் மலையாள எழுத்தாளர்கள், வாசகர்கள், இலக்கியப் போக்கு என இருக்கும் புதிய விஷயங்களை உங்கள் வாசகர் கூட்டம் படித்தறிந்திட ஏதுவாக இருக்கும் என்ற எண்ணத்துடன்தான் இந்தக் கட்டுரையை மொழிபெயர்த்தேன். பிழையேதும் இருந்தால் நீக்கவும், தேவைக்கேற்ப திருத்தவும் வேண்டுகிறேன்.

வீட்டில் அனைவரின் நலனையும் வேண்டுகிறேன்.

அன்புடன்,
ந. சந்திரக்குமார்

 

 

என் மொழியே….

மலையாள மூலம்: மாத்ருபூமி தினப் பதிப்பு, ஜூலை 27,2018
https://www.mathrubhumi.com/print-edition/weekend/–1.3012868
மலையாளக் கட்டுரை ஆசிரியர் : அருண் பி. கோபி
தமிழாக்கம்: ந. சந்திரக்குமார், சிகாகோ

 

aruna

{ முகப்பில் கட்டுரையாளரின் சிறுகுறிப்பு: ஜெயமோகன் என்கின்ற எழுத்தாளரையும் , அவரது படைப்புக்களையும் தமிழ் மற்றும் மலையாள வாசகர்கள் நன்கறிவர். ஆனால், அந்த எழுத்தாளரின் பின்புலத்தில் ஒரு உந்துசக்தியாய் இருப்பது அவரது அருமை மனைவி அருண்மொழி. அருண்மொழியோடு தான் காதல் வயப்பட்டிருந்த காலத்தில், அவருக்கு எழுதிய கடிதங்கள்தான் தன்னுடைய படைப்புகளில் உச்சம் தொட்டவை என்கிறார் ஜெயமோகன். வீட்டில் சந்தித்தபோது ஜெயமோகனும், அருண்மொழியும் அந்தக் கடிதங்களை தம்முன் வைத்து, அந்தக் கடிதங்கள் எழுதுவதற்கு முன்பான காலகட்டத்தில் இருந்த தமிழ் படைப்பு முயற்சிளை அலசினர். ஜெயமோகன், “அந்தக் கடிதங்கள் மூளையின் பங்களிப்பு இல்லாத ஆக்கங்களாய் இருந்தன. ஆனால், கண்டிப்பாக அவற்றில் இதுவரை யாரும் படித்திராத என்னுடைய சிறந்த சிந்தனை வெளிப்பாடுகள் எழுத்துக்களாய் வடிவம் கொண்டிருந்தன என்று நம்புகிறேன்” என்கிறார் }

எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்பாற்றலின் வேகம் அமானுஷ்யத் தன்மை கொண்டது. இப்போது வெண்முரசு என்ற தலைப்பில் அவர் மேற்கொண்டிருக்கும் மகாபாரதத்தின் மீளுருவாக்கத்தின் செயல்பாடு குருக்ஷேத்ரத்தில் வந்து நிற்கின்றது. “முதற்கனலில்” ஆரம்பித்து “இமைக்கணம்” வரை பதினேழு புத்தகங்கள் அடங்கிய வெண்முரசு உலகில் மிகப் பெரிய நாவலென அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

தமிழும், மலையாளமும் கலந்திசையும் நாஞ்சில் நாட்டு வாழ்க்கையின் உள்ளடுக்குகளை ஜெயமோகன் எழுதியபோது, தன் எழுத்தின் மூலம் தமிழ் வாசகர்களின் நெஞ்சம் கவர்ந்தார். ஒரு நோய் போல் “நூறு சிம்மாசனங்கள்” நாவல் என் மனதை அலைக்கழித்தபோது கதாசிரியரைத் தேடி, சென்னையில் இருந்து பார்வதிபுரத்திற்கு ஓடினேன். பிறகு, அதுவே வழக்கமாகிப் போனது. தமிழ் எழுத்துலகின் தலை சிறந்த எழுத்தாளர் இப்போது நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தின் சாரதா நகரில் உள்ள எளிய வீட்டில்தான் வசிக்கிறார். ஒரே நேரத்தில், தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும், நாவல் மற்றும் சினிமா திரைக்கதையாக்கங்கள். அதுபோக, ஒவ்வொரு நாளும் வெண்முரசிற்கு, தினம் ஒரு புதிய அத்தியாயம் என்ற வகையில். இத்தகைய எழுத்துச் சுமையின் பாரம், இரண்டு கைகள் கொண்டு எழுத வாய்த்தவனையும், எளிதில் சோர்வடையச் செய்யும்.

அனுபவத்தின் கால்தடங்கள் நிரம்பி நிற்பது ஜெயமோகனின் எழுத்தில் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையிலும்தான். தாயும், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட அவலம். கடைசியில், தானும் வாழ்க்கையைத் துறந்திட, பயணம் புறப்பட்ட கணங்கள். ஒரு நாடோடியாய், தனியே அலைந்து திரிந்தது. வாழ்க்கைப் பயணத்தில் கடந்து வந்த மகான்கள்: நித்ய சைதன்ய யதி, சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, பி.கே. பாலகிருஷ்ணன்.

இந்த முறை நான் பார்வதிபுரம் சென்றதற்கு வேறு ஒரு காரணம் இருந்தது. அது, அருண்மொழி நங்கைக்கானது. ஜெயமோகன் என்ற எழுத்தாளனின் பின்னால், திரைமறைவில் ஒரு நிழல் போல், என்றும் துணையிருக்கும் அவரின் மனைவி அருண்மொழி.

காதல் அரும்பிய தருணம்:

“மூளையின் பங்களிப்பு இல்லாத ஆக்கங்களாய் இருந்தன. ஆனால், கண்டிப்பாக அந்தக் கடிதங்களில் இதுவரை யாரும் படித்திராத என்னுடைய சிறந்த சிந்தனை வெளிப்பாடுகள் எழுத்துக்களாய் வடிவம் கொண்டிருந்தன என்று நம்புகிறேன்” (உறவிடங்கள், மாத்ருபூமி புக்ஸ்). கடந்த 27 ஆண்டுகளாக பிரியத்திற்குரிய ஒரு புதையல் போல் காத்து வைத்திருக்கும் அந்தக் கடிதங்களை வெளியே எடுக்கும்போது, அருண்மொழி நங்கையின் கன்னக்குழிகள் விரிவதைக் காண முடிகிறது. இருபது வருடங்களுக்கு முன் அருண்மொழி நங்கைக்கு ஜெயமோகன் எழுதிய கடிதத்திலிருந்து, இரண்டு வரிகள்:

“மழையீரம் கொண்டுவந்து என்வீட்டில் குடி வைப்பேன்
தளிரில்லா என்வீட்டில் விதை எல்லாம் முளையாகும்”

வாழ்க்கையும், எதிர்பார்ப்புகளும்,காதலும், கொந்தளிப்புகளும் என்று எல்லாமும் இதில் அடங்கும்.

அருண்மொழி நங்கை 1991ல் மதுரை விவசாயக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு 21 வயது. இலக்கிய ஈடுபாடும், தேர்ந்த விமர்சன அறிவும் ஒரு சேரக் கொண்டிருந்த பெண். அப்போது இலக்கியச் சிற்றிதழ் கணையாழியில் பிரசுரமான ஒரு செய்திக் குறிப்பினை அருண்மொழிக்கும், அவரது தோழி கலைச்செல்விக்கும் காணக் கிடைத்தது. “ரப்பர்” என்ற படைப்பிற்காக இளம் எழுத்தாளர் ஜெயமோகன் அகிலன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட செய்தி. சிற்றிதழ்களுக்கு பதில் போடுவது என்பது அந்தக் காலத்தில் அவ்வளவு எளிதான காரியமல்ல. ரப்பர் நாவல் அருண்மொழியின் கைகளுக்கு காலம் தாழ்ந்தே கிடைத்தது. வாசித்து முடிக்கையில், நாவலின் கதாபாத்திரங்களின் வாழ்வியக்கங்கள் தன்னை உள்ளூரத் தொட்டதாய் உணர்ந்த அருண்மொழி, புதிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார்.

“அற்புத இலக்கியம் என்ற பாராட்டப்படுகின்ற ரப்பர் நாவல் பற்றிய விரம், நீங்கள் படிக்க வேண்டி மட்டும் தான் சிற்றிதழில் பிரசுரமானதா? சிற்றிதழ்களைத் தேடி வாங்க வாசகர் படும் பாடு உங்களுக்குத் தெரியாதா? “ என்ற வகையில் நீண்டு போன கடிதத்தில் தன்னுடை விமர்சனத்தையும் கலந்து எழுதியிருந்தார். கடிதம் வாசித்து முடித்த எழுத்தாளனுக்கு, அந்தப் பெண்ணின் பெயரை மறக்க முடியவில்லை. ஜானகிராமன் மற்றும் காவேரிடும் ஊர்க்காரி, பேரு அருண்மொழி நங்கை. எட்டு நாட்கள் கழித்து ‘இதுபோல் நானும் சுந்தர ராமசாமிக்கு முன்பு ஒரு கடிதம் எழுதியிருக்ககிறேன்’’ என்று தொடங்கும் பதில்கடிதம் அனுப்பிய எழுத்தாளர். கூட, ‘சுந்தர ராமசாமி என்ற பெரிய எழுத்தாளரை சிற்றிதழ் வாசகர்கள் மட்டுமே அறிந்திருந்தனர்’ என்று குறிப்பிட்டு. பதில்கடிதம் போட்ட பின்பும், அந்தப் பெண்ணின் பெயரை மறக்கமுடியவில்லை. மனசைக் கட்டுப்படுத்த முயலும்போதெல்லாம், அந்தப் பெண் எழுதிய கடிதத்தின் வாசகங்கள், புதுப் புது அர்த்தங்களை பிறப்பிப்பதாய்த் தோன்றியது. “எழுத்தாளன் மீதானா ஆராதனையா இல்லை காதலா?… அன்று அருண்மொழியின் மனதில் இருந்த நினைப்பு என்னவென்று இன்று வரை எனக்குத் தெரியாது” என்கிறார் ஜெயமோகன்.

1991 மார்ச் மாதம், தேவதாருகள் நிழல் விரித்த ஒரு மாலை வேலையில், மதுரை விவசாயக் கல்லூரியின் நடைபாதைகளில் இருவரும் நடந்தனர். திரும்பி தருமபுரி வந்து சேர்ந்த ஜெயமோகன், பத்து பக்கங்கள் நீண்ட கடிதமொன்றை எழுதி அருண்மொழிக்கு அனுப்பினார்.
‘இதை ஒரு பெண்ணால் தாங்க முடியுமென்று நான் நம்பவில்லை. என் தாய் தற்கொலை செய்துகொண்டபோது அவருக்கு வயது 54. முதுமையின் தற்கொலைகளின் காரணப் பின்னணியில் ஒரு கசப்பானஅறிதல் இருக்க வேண்டும். ‘ ஜெயா ஜெயா “ என்ற அம்மாவின் கூக்குரல் என்னைப் பைத்தியம் பிடிக்கச் செய்திருந்தது. ஆசுவாசத்திற்கு சாராயக்கடை தேடிப் போக நான் விழைந்திட, நினைவில் மீண்ட என் தந்தையின் குடிக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல்… கும்பளா என்னும் ஊரில் வாழ்வைத் துறந்திட ரயில்வே ட்ராக்கில் காத்து நின்றது. கடைசியில், அந்த முயற்சியைக் கைவிட்டு, தனியே ஒரு தேசாந்திரியாய் பயணம் தொடர்ந்தது. இந்தியா முழுதும் சுற்றிப் பார்த்தேன். இப்போது ஒரு எழுத்தாளனாக, என் வாழ்க்கையே எழுத்துதான், இதில் இருந்து பணமோ, புகழோ கிடைக்காது. நான் வாழ்க்கையில் ஒரு தோல்விக்கான முன்னெடுப்பில் சக்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். விருப்பம் இருந்தால், என்னோடு வந்து இணைந்துகொள்!”

கடிதம் வாசித்த அருண்மொழி கலங்கிப் போனார்.

எங்களுடைய ஹனிமூன் எங்கே என்று தெரியுமா? ஆற்றூரிலும், சுந்தர ராமசாமியின் இல்லங்களிலும்தான். ஜெயமோகனின் இலக்கிய வளையம் பெரியதாக இருந்தபடியால், புகழ் பெற்ற பெரிய எழுத்தாளர்களைப் பார்ப்பதற்கும், அவர்கள் வீட்டில் தங்குவதற்குமான அழைப்பு எனக்குக் கிடைத்தது என்றார் அருண்மொழி.

விஷ்ணுபுரத்தின் உட்கருத்தை நாங்கள் தருமபுரியில் இருக்கும்போதுதான் ‘ஜெ’ என்னிடம் சொன்னார். அவரோடு சேர்ந்து அதன் மீதான பைத்தியம் எனக்கும் பிடித்தது, அந்த நாவலை விரைவில் படிக்க வேண்டும் என்று. அந்த நாட்களில் நங்கள் இருவரும் மாலை வேளையில் தர்மபுரியைச் சுற்றி இருந்த கோவில்கள், ரயில்வே நிலையங்கள், காலனிகள் என்று சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தவர்கள், “இவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்று கேட்டனர். காரணம் என்னவென்றால், எங்கள் வாழ்க்கை உரையாடல்களில் அல்லாமல் விஷ்ணுபுரம் என்கின்ற ஒரு மாபெரும் வினோதத்தினுள் நிறைந்திருந்தது.

விஷ்ணுபுரம் நாவலுக்குள் கெளஸ்தூபம், ஸ்ரீபாதம், மணிமுடி என்ற மூன்று புத்தகங்கள் உள்ளடங்கியிருந்தன. இரண்டாம் பாகமான ஸ்ரீபாதத்தை முதலில் எழுதலாம் என்று ஜெ சொன்னார். அவர் எழுத ஆரம்பித்த கட்டத்தில், ஒவ்வொரு பக்கம் முடிந்ததும், சமையல் அறையில் இருந்து ஓடோடி வந்து, அதை எடுத்து உடனுக்குடன் படிப்பேன். “ஒரு அத்தியாயம் முடிந்து ஒட்டு மொத்தமாகப் படித்தால் போதாதா? “ என்று சொல்லி ஜெ சங்கடப்படுவார். ஆனால், அந்த அளவு காத்திருப்பிற்கான பொறுமை அப்போது என்னிடம் இல்லாமல் இருந்தது.

பின் தொடரும் குரலின் நிழல், கன்யாகுமரி, காடு, ஏழாம் உலகம், அனல் காற்று ஆகிய அனைத்து நாவல்களையும் முதன் முதலில் படித்தது அருண்மொழிதான். “ பதிப்பகத்தார் மற்றும் வாசகர்களுக்கு முன்பாக என் படைப்புகளின் எடிட்டராக அருண்மொழி மாறினாள்!” என்கிறார் ஜெ. இன்று வெண்முரசை முழுவதும் படித்து முடித்திருப்பது அருண்மொழி மட்டுமாக இருக்கும். வெண்முரசிற்கு நாளொன்றிற்கு ஒரு புதிய அத்தியாயம் என்ற முறையில் இணையதளத்தில் பதிவேறும் முன்பு, தினமும் அவற்றை முதலில் படிப்பது அருண்மொழி மட்டுமே.
ஜெயமோகன் நேர்கோணல்:

உங்கள் வாழ்க்கையின் மீது மற்றவர்கள் பொறாமை கொண்டு பேசுவது பற்றி?

(சிரித்தபடி…) அதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஒரு எழுத்தாளனைப் பொறுத்த வரையில், தனக்கென்ற அடையாளத்தையும், புகழையும் அவனை வந்தடையும் கால அளவில், அவருக்கு திருமணம் ஆகி இருக்கக்கூடும். வந்து சேரும் மனைவிக்கு எழுத்துலகம் பற்றிய புரிதல் முற்றிலும் இல்லாமல் இருக்கும். சில எழுத்தாளர்களுக்கான அங்கீகாரத்தை நானாக முன்வந்து பெற்றுத் தந்திருக்கிறேன். இலக்கிய கலந்துரையாடலுக்கான அமைப்புகளை ஏற்பாடு செய்திருக்கிறேன். எழுத்தாளர்களை மரியாதை செய்யும் பொருட்டு, அதற்கென ஒரு அமைப்பை நிறுவி, வருடந்தோறும் ஒரு இலக்கியப் படைப்பாளியை தேர்ந்தெடுத்து, விருது கொடுத்து பாராட்டி வருகிறோம். அந்த விருதைப் பெறுபவர்கள் “ ஓ…இந்த மனிதர் இவ்வளவு பெரிய ஆளுமையா?” என்று என்னைப் பார்த்து வியப்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான மற்ற எழுத்தாளர்கள் போல் அல்லாமல், என் வாழ்க்கையில் நடந்தது என்னெவென்றால், என் எழுத்துக்களைப் படித்த வாசகியை, நான் மணந்து கொண்டது. அருண்மொழி நங்கை என் படைப்புகளின் முதல் வாசகர்களில் ஒருத்தியாய் இருப்பது. அப்படிப்பட்ட ஓர் உறவு எனக்குக் கிடைத்ததை என் அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.

ஒரே நேரத்தில் வெண்முரசையும், சினிமா திரைக்கதைகளையும் எழுத உங்களால் எப்படி முடிகிறது?

வேலையின் திசை திருப்ப, எனக்கு ஒரு சின்ன கால அவகாசம் போதுமானது. வீட்டின் மேல்மாடியில் இருந்து கீழே வந்ததும், அருண்மொழி ஒரு டீ போட்டுத் தருவாள். அதைக் குடித்து முடித்தவுடன், திரைக்கதை எழுதுவதற்கான வேலையில் முனைந்து விடுவேன்.

எந்திரன்-2 போன்ற கமர்ஷியல் சினிமாவிற்கு எழுதுகின்ற அதே ஜெயமோகன் ஒழிமுறி (மலையாளம்), நான் கடவுள், அங்காடித்தெரு போன்ற சினிமாக்களுக்கும் எழுதுகிறார். உங்களுக்கு திரைக்கதையெழுத்து அனாயசமாக வருகிறது என்று கேள்விப்படுகிறேன். இதற்கு மேலும் தீவிரமாக சினிமாவில் ஈடுபாடு கொள்ள திட்டமுண்டா?

நான் இப்போதும் சினிமா வேலைகளில் மும்முரமாக இருக்கிறேன். இரண்டு படங்களுக்கான திரைக்கதையாக்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கமல் ஹாசனின் இந்தியன்-2 விற்காக திரைக்கதை எழுதுகிறேன். அது போக, R.S. விமல் ( என்னு நின்டே மொய்தீன் மலையாளப் படத்தின் இயக்குனர்) இயக்கும் கர்ணன் (மலையாளம்) படத்திற்கான திரைக்கதையும் தயாராகிறது.

மலையாளத்தில் “நூறு சிம்மாசனங்கள்” போன்ற படைப்புகளை உங்களிடமிருந்து இனியும் எதிர்பார்க்கலாமா?

மலையாளத்தில் இருக்கின்ற ஒரு குறைபாட்டை இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. மலையாளத்தில் ஒரு விஷயம், கருத்தாக்கம் முழுமையாகச் சொல்லப் படுகிறது. படிக்கும் வாசகர்கள் அதை மட்டுமே புரிந்து கொள்கின்றனர். ஆனால், இலக்கியம் என்பது அதோடு மட்டும் நிற்பதல்ல. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். கேரளாவிற்கு நான் வரும்போது, ஆட்டோ ரிக்க்ஷாவில் பயணிக்கையில் ஓட்டுநர் கேட்பார்: “ சார், யானை டாக்டர் நாவல் பிரமாதாமாக இருந்தது. அது போல இன்னொரு நாவல் எப்ப எழுதுவீங்க?”. இதுதான் பிரச்சினை. அதை நகல் எடுத்தாற்போல் ஒரு நாவல்தான் தேவையாய் இருக்கின்றது. இந்தக் கட்டமைப்பிற்குள்ளான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாகவே மலையாளத்தில் இருக்கும் முன்னணி எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்

மலையாளத்தில் கடைசியாக நான் எழுதிய நாவல் “மிண்டா செந்நாய்’. அதை ஒரு வேட்டைக் கதையாக மட்டுமே படிக்கலாம். ஆனால், அந்த நாவலுக்குள் காலனிய காலமும், பின்காலனியக் காலமும் உள்ளடங்கியிருக்கின்றன. ‘ஊமைச் செந்நாய்’ நாவலில் வரும் யானை இந்தியாவிற்கான குறியீடு. அதைப் புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொண்டால் அது போதும் எனக்கு.
{வெளியே காற்று வீசிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கைச் சுமையை நினவுறுத்தும் வண்ணம் ஒரு ரயில் கடந்து போனது}
உங்களிடம் காடுகளைப் பற்றிய மிகுதியான விவரங்கள் இருப்பதைப் பற்றி?
சுமார் 45 நாட்களுக்கு ஒரு முறையென ஏதாவது ஒரு காட்டிற்குள் செல்வது வழக்கமாக இருக்கிறது. நடந்து கடப்பதற்கு மிகசிரமம் தரும் இடங்களையும், நிறைய காடுகளையும் கண்டிருக்கிறேன், இனியும் புதியன பார்க்க இருக்கிறேன். எனக்கு மலையேற்றத்தில் ஒரு பைத்தியத்தனமான ஈர்ப்பும், உள்ளார்ந்த ஈடுபாடும் உண்டு. அது மாதிரியான ஒரு பயணத்தில், கூட வழிகாட்ட வந்த ஆதிவாசி இளைஞனில் இருந்துதான் “மிண்டா செந்நாய்’ நாவல் உருவெடுத்தது.

உங்கள் எழுத்தைக் கொண்டு இத்தனை சாதனைகள் புரிந்திருக்கும் இந்த நிலையில், உங்கள் பயணங்கள், எழுத்து… இதெல்லாம் என்றாவது ஒரு முடிவிற்கு வரும் என்கின்ற பயம் இருக்கிறதா?

இல்லை. பயணங்கள் செல்வதற்கு முன்னேற்பாடாய், அடுத்து வரும் நாட்களுக்கான படைப்புகளை முடித்திருப்பேன். ஒவ்வொரு நாளும், ஐந்து மணி நேரம் எழுதுகின்றேன்; மூன்று மணி நேரம் படிப்பதற்கென்றே ஒதுக்கி வைக்கிறேன். இந்த வீட்டில் இப்போது இருப்பது நானும், அருண்மொழியும் மட்டும்தான். அருண்மொழி ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
{ஜெ உண்மையும் கிண்டலும் கலந்தபடி சொல்கிறார். அவரது நேரத்தை மேலும் களவாடாமல், விடை சொல்லி முடித்தேன்.}

வெளியே வரும்போது, எதிர்பட்ட அருண்மொழியிடம் கடைசியாய் ஒரு கேள்வி:

உங்களை முதலில் கவர்ந்தது ஜெயமோகன் என்ற தனிமனிதனின் இயல்பா அல்லது அவரின் எழுத்தா?

அன்பு வழிந்திட அருண்மொழி பதிலாகச் சொன்னது: “என்னை அவர்பால் ஈர்த்தது அவருடைய எழுத்தே! ஏனென்றால், அதில் நிறைந்திருந்தது வாழ்க்கை மட்டும் அல்லவா?”

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62
அடுத்த கட்டுரைஇலக்கியமும் சினிமாவும்