‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 74

tigகுருக்ஷேத்ரத்திற்கு வடக்கே கஜபதம் என அழைக்கப்பட்ட மேட்டுநிலத்தில் அமைந்திருந்த திருதராஷ்டிரரின் பெரிய கூடாரத்திற்கு வெளியே சஞ்சயன் கைகளைக் கட்டியபடி காத்து நின்றான். உள்ளே அவரை சங்குலன் அணிவித்து ஒருக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது மிக அரிது என்று சஞ்சயன் அறிந்திருந்தான். பெரும்பாலும் தனக்குள் என திருதராஷ்டிரரே பேசிக்கொள்வார். சங்குலன் எப்போதாவது மறுமொழி இறுத்தால்கூட அதுவும் திருதராஷ்டிரரின் குரல் என்றே கேட்கும். வெளியே நின்றிருப்பவர்களுக்கு உள்ளே இருவர் இருக்கும் உணர்வே எழாது. இருவரும் பேருடலும் எடைமிக்க கால்களும் கொண்டவர்களாயினும் யானைபோல் ஓசையிலாது நடப்பவர்கள். ஆகவே அவ்வுரையாடல் ஒலி மிகையாக கேட்கும்.

ஒருக்கங்கள் முடிந்ததை அறிவிக்கும் பொருட்டு கைகளால் சங்குலன் இருமுறை கதவைத் தட்டியதும் சஞ்சயன் கைகளை விலக்கி தலைவணங்கி நின்றான். உள்ளிருந்து நிமிர்ந்த பேருடலுடன் வெளியே வந்த திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் “சஞ்சயா, என்ன செய்கிறாய்?” என்றார். சஞ்சயன் அருகே சென்று வணங்கி “இங்குளேன், அரசே” என்றான். அவன் தோளில் கைவைத்து “பொழுது புலர்ந்துவிட்டதா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “புலர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாழிகை ஆகும் முதல் ஒளி எழுவதற்கு” என்றான் சஞ்சயன். “அப்படியென்றால் கருக்கிருட்டு…” என்றார் திருதராஷ்டிரர்.

சங்குலன் தலைவணங்கி அவர்கள் செல்லலாம் என்பதை அறிவித்தான். அவ்வசைவின் காற்றை ஏற்று சங்குலனை நோக்கி செவிதிருப்பிய பின் “இவன் வரவில்லையா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “இல்லை அரசே, நாம் இருவர் மட்டுமே அங்கு செல்கிறோம். வேறெவரும் செல்ல ஒப்புதல் இல்லை” என்றான் சஞ்சயன். “செல்வோம்” என்றார் திருதராஷ்டிரர். அவரது வலக்கையை பற்றி அழைத்துச்சென்று அங்கே காத்து நின்றிருந்த தேரை அணுகினான். அதன் பக்கவாட்டிலிருந்த படியை விரித்து கீழிறக்கினான். திருதராஷ்டிரர் போர்த்தேருக்கு பழகிவிட்டிருந்தமையால் படியில் கால்வைத்து அதன் அமைப்பை உணர்ந்தபின் ஒரே மூச்சில் ஏறினார். பீடத்தில் எடையுடன் அமர்ந்து கால்களை நீட்டி கைகளை பீடத்தில் வைத்து முதுகை நன்கு சரித்து தலையை மேலே தூக்கி “தெய்வங்களே…” என்று முனகினார். படிகளினூடாக ஏறி உள்ளே சென்று படிகளை மடித்து பின்னால் வைத்து பாகனிடம் செல்லலாம் என்று சஞ்சயன் கைகாட்டினான். பாகன் சவுக்கு முனையால் புரவிகளை தொட அவை குளம்போசை எழுப்பியபடி விரைவு கொண்டன.

காற்று குளிராக வந்து ஆடைகளை படபடக்கச் செய்தது. குழல் கட்டவிழ்ந்து பறக்கத் தொடங்கியதும் சஞ்சயன் விடுதலை உணர்வை அடைந்தான். மலைச்சரிவில் கட்டப்பட்டிருந்த அந்தக் கூடாரத்தில் அவர்கள் வந்து தங்கியிருந்த அந்நான்கு நாட்களும் பெரும்பாலான பொழுதுகளில் முகப்பிலிடப்பட்டிருந்த மரப்பீடத்தில் திருதராஷ்டிரர் அமர்ந்திருக்க அவரருகே நின்றபடி அவன் அவர் கேட்கும் வினாக்களுக்கு மறுமொழியிறுத்துக் கொண்டிருந்தான். இரண்டு நாள் கழிந்த பின்னர் ஒரு கணம் அவன் உணர்ந்தான், அவர் மீள மீள ஐந்து கேள்விகளையே கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று. அவ்வைந்து கேள்விகளையும்கூட ஒற்றைக்கேள்வியாக சுருக்கிவிடமுடியுமென்று மீண்டும் எண்ணிக்கொண்டான். “படைகளில் என்ன நிகழ்கிறது?”

ஆனால் அவர்கள் இருந்த கூடார முகப்பிலிருந்து மிகத் தொலைவில் ஆழத்தில் குருக்ஷேத்ரமாக ஆகும் செம்மண்வெளியின் சரிவு மட்டுமே தெரிந்தது. இருபுறமும் நிலைகொண்ட படைகளின் ஓசை அங்கு ஒரு சிறு வண்டுக்கூடு இருப்பதுபோல் தோன்றச் செய்தது. “இங்கிருந்தால் எதுவும் தெரிவதில்லை, அரசே” என்று அவன் பலமுறை சொன்ன பின்னரும் என்ன நிகழ்கிறது என்று திருதராஷ்டிரர் கேட்டுக்கொண்டே இருந்தார். “என்ன செய்கிறார்கள்?” என்று சலித்துக்கொண்டார். மீண்டும் ஒரு சொல்பரிமாற்றம் நிகழ்ந்து போர் தவிர்க்கப்படுமென அவர் எதிர்பார்க்கிறாரா என அவன் எண்ணிக்கொண்டான். ஆனால் அவர் அவ்வாறு சொல்லவில்லை. உடலோ உள்ளமோ எங்கும் அமரவியலாதவராக இருந்தார்.

அவர் துயின்றுவிட்டார் என்று குறட்டையொலி கேட்டு அவன் புரிந்துகொண்டான். அவர் இரவில் துயில்வது மிக அரிதாகிவிட்டிருந்தது. ஆகவே பகலில் எண்ணங்களில் அமையும்போதெல்லாம் துயிலில் மூழ்கி குறட்டை ஒலி எழுப்பினார். முழுத் துயில் உடலை அழுத்துகையில் அந்த எடையாலேயே விழித்துக்கொண்டு உரத்த குரலில் மூச்சிரைத்து இருமி தன்னை உணர்ந்தார். ஒவ்வொரு முறை துயில் விழிக்கும்போதும் அவர் நெஞ்சில் ஒரு வேல் பாய்ந்ததுபோல் உடலில் விதிர்ப்பு பரவுவதை அவன் பார்த்திருந்தான். துயில் நீப்பினால் அவர் உடல் வெளிறி மெலிந்திருந்தது. வாய் உலர்ந்து மடிந்திருக்க, பெரிய வெண்பற்கள் எழுந்து வெளியே நீட்டியிருந்தன. பெரும்பாலான பொழுதுகளில் அவர் சீற்றம்கொண்டிருப்பதாக தோன்றச்செய்தது அது.

அவன் அறிந்திருந்த திருதராஷ்டிரர் அவ்வுடலுக்குள் தன்னை இழுத்துக்கொண்டு மறைய உள்ளே சிறு விதையென உறங்கிய பிறிதொருவர் எழுந்து அவ்வுடலில் பரவி முன்னால் நிற்பதுபோல இருந்தது. திருதராஷ்டிரர் உடலில் எப்போதும் ஓர் அழகு இருப்பதை அவன் கண்டிருந்தான். அவ்விழிகளின் வெறுமை உருவாக்கும் துணுக்குறலை விழி கடந்து சென்றுவிட்டதென்றால் ஒவ்வொன்றிலும் தணியாத ஆர்வம் கொண்ட ஒரு பேருருவச்சிறுவனை அவரில் கண்டடைய முடியும். மைந்தரையோ விலங்குகளையோ தொடுகையில் அவர் முகத்திலெழும் கனிவுக்கு நிகரான பிறிதொன்றை மானுட முகத்தில் அவன் கண்டதில்லை. இப்போது அவரால் ஒரு குழவியை தன் மடியில் எடுத்துவைத்து கனிந்து முத்தமிடமுடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை.

விழித்துக்கொண்ட திருதராஷ்டிரர் இரு தொடைகளிலும் கைகளால் அறைந்தபடி “எங்கிருக்கிறோம்? எங்கிருக்கிறோம்?” என்றார். “சென்றுகொண்டிருக்கிறோம், அரசே” என்றான் சஞ்சயன். “இங்கிருந்து படைகள் தெரிகின்றனவா?” என்று அவர் கேட்டார். “இவ்விருளில் எங்கிருந்தாலும் படை தெரியாது” என்றான் சஞ்சயன். “விடிந்துகொண்டிருக்கிறது என்றாய்?” என்றார். “இரவு என்பது விடியலின் முன்வடிவம். உள்ளத்தில் விடிவு தொடங்கி நெடும்பொழுதுக்குப் பின்னரே முதல் ஒளி வந்தடைகிறது” என்றான் சஞ்சயன். “மூடன்! மூடன்!” என்று கூறியபடி தன் இரு தொடைகளிலும் அவர் அறைந்து கொண்டார். தேர்ச்சகடம் சீராக ஒலித்தது. வளைவுகளில் நிறுத்துகட்டைகள் உரசி முனகின.

“இன்னும் நெடுந்தொலைவா?” என்றார். “அணுகிக்கொண்டிருக்கிறோம்” என்றான் சஞ்சயன். “அதுவும் இதைப்போலத்தான் அல்லவா? நாம் அணுகத்தொடங்கிய பின்னரே பாதை குறுகத் தொடங்குகிறது” என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் புன்னகைத்தான். அவன் புன்னகைப்பதை விழியின்மையாலேயே அவரால் உணரமுடியும். அது அவரை சற்றே எளிதாக்கியது. “அறிவிலி, உனக்கு சொற்கள் விளையாட்டுப் பொருட்கள். வெளியே சென்று உலகை அறியாதவன். நீ அறிந்ததெல்லாம் நூல்களில் இருந்து. இருந்த இடத்திலிருந்தே சொல்லாடி இதோ பொருளின்மையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறாய்” என்றார் திருதராஷ்டிரர். “இன்று கண்முன் நிகழ்வுப்பெருக்கை காணவிருக்கிறாய்.”

“ஆம் அரசே, சொல்லில் இருந்து காட்சிகளை உருவாக்குபவன் நான். இன்றுமுதல் காட்சிகளில் இருந்து சொல்லை உருவாக்கவேண்டும்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரர் மீண்டும் பெருமூச்சுடன் தளர்ந்து “விடியும்போது நாம் அங்கிருப்போம்” என்றார். “ஆம்” என்று சஞ்சயன் சொன்னான். “அங்கிருந்தால் படைகள் நன்கு தெரியுமா?” என்று அவர் கேட்டார். “நன்கு தெரியுமிடத்திலேயே நோக்குமாடம் அமைக்கப்பட்டுள்ளது” என்றான் சஞ்சயன். “அங்கு பீதர் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட தொலைநோக்கு ஆடியொன்று பொருத்தப்பட்டுள்ளது. அதனூடாக நாம் தேவர்களுக்கிணையாக விழிகளை பெறமுடியும். நெடுந்தொலைவை அங்கிருந்தே பார்க்கமுடியும்” என்றான். “ஆடியினூடாகவா?” என்று அவர் கேட்டார். “நீர்த்துளியை அழுத்திப் பரப்பியது போன்றது அது என்றார்கள். நான் இன்னமும் அதை பார்க்கவில்லை” என்று அவன் சொன்னான்.

“ஆம், நீர்த்துளியினூடாக நோக்கினால் பொருட்கள் அண்மையில் வரும் என்று நான் கேட்டிருக்கிறேன்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “இரண்டு நீர்த்துளிகளை ஒன்றன்பின் ஒன்றென வைத்தால் தொலைவு அவ்விரண்டிற்கும் நடுவே பலமடங்கு மடிந்து சுருங்கிவிடுகிறது என நான் கண்டுள்ளேன். அண்மையும் சேய்மையும் தங்களை நிலைமாற்றிக்கொள்கின்றன” என்றான் சஞ்சயன். “பீதர்கள் இப்பருவெளியுடன் ஓயாது விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் “நமது முனிவர்கள் தங்கள் அகத்துடன் விளையாடுவதுபோல” என்றான். “நம் முனிவர்கள் ஊழ்கத்தில் சென்று அடைந்த அனைத்தையும் கையிலும் கருத்திலும் தொட்டு அடையும் பொருள்வெளியில் அளைந்தே பீதர்களும் அடைந்திருக்கிறார்கள்.”

தேர் மலைப்பாதையின் வளைவினூடாக வளைந்து சென்றுகொண்டிருந்தது. புரவிகளின் கால்பட்டு தெறித்த சில கூழாங்கற்கள் மலைவிளிம்பினூடே உருண்டு ஆழம் நோக்கி சென்றன. பாதை மேலேறிச் சென்றமையால் புரவிகள் மூச்சிரைத்து மெல்ல விரைவழிய மேலும் மேலும் அவற்றை சாட்டையால் அடித்து ஊக்கி முன்செல்லச் செய்தான் பாகன். “அவர்கள் எங்கிருக்கிறார்கள்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். அவர் கேட்பதை புரிந்துகொண்ட சஞ்சயன் “நேற்று ஒற்றர்களை அனுப்பி செய்தி கொண்டுவரச் சொன்னேன். பாஞ்சாலப் பேரரசி திரௌபதியும் பாண்டவர்களின் அன்னை குந்தியும் குருக்ஷேத்ரத்திற்கு வெளியே பாண்டவர்களின் படைகளுக்குப் பின்னால் மிருண்மயம் என்னும் சிற்றூரில் தங்கியிருக்கிறார்கள்” என்றான். “ம்ம்” என்றார் திருதராஷ்டிரர்.

“அங்கிருந்து ஒவ்வொரு நாளும் நூறு புறாக்கள் பாண்டவர் படைகளுக்கு சென்று மீள்கின்றன. அங்கு நிகழ்வன அனைத்தையும் ஒற்றர்களினூடாக தெரிந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் ஆணைகளை இடுகிறார்கள்” என்றான் சஞ்சயன். “வேறு பெண்டிர் எவரும் உடனில்லையா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “இரண்டு சேடியர் உள்ளனர். அரசகுடியினர் எவருமில்லை” என்றான் சஞ்சயன். “இப்போரை நிகழ்த்துபவர்கள் அவர்கள் இருவரும்தான்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “பாண்டவரின் படை ஒரு பெருந்தேர். தேரோட்டியின் இடத்தில் குந்தி அமர்ந்திருக்கிறாள். தேர்த்தட்டில் வில்லுடன் நிற்பவள் பாஞ்சாலத்து அரசி.” மீண்டும் பெருமூச்சுடன் கைகளை உரசிக்கொண்டு “வெல்லப்போகிறவர்கள் அவர்களே. ஆனால் வெல்வதென்ன என்று அவள் இன்னும் அறிந்திருக்கவில்லை” என்றபின் “தெய்வங்களே! மூதாதையரே!” என்று முனகியபடி மீண்டும் பீடத்தில் அசைந்து அமர்ந்தார்.

தேர் மிக மெல்ல சென்றுகொண்டிருந்தது. மலை உச்சியில் தனித்த விண்மீன்போல தெரிந்த ஒளியைக் கண்டு சஞ்சயன் “அணுகிவிட்டோம். நோக்குமாடத்தின் நெய்விளக்கு தெரிகிறது” என்றான். “இன்னும் எத்தனை பொழுதாகும் அங்கு சேர?” என்றார் திருதராஷ்டிரர். “முதல் முகில் ஒளிகொண்டுவிட்டது, அரசே. நாம் அங்கு சென்று அமர்கையில் கீழே ஒளிபரந்துவிடும்” என்றான் சஞ்சயன். திருதராஷ்டிரர் “விடிவது என்பதன் பொருளே மாறிவிட்டது” என்றார். அவன் திரும்பி வானத்தை நோக்கிக்கொண்டிருந்தான். எத்தனை விரைவில் ஒன்றிலிருந்து ஒன்றென முகில்கள் பற்றிக்கொண்டன என்று வியந்தான்.

“இங்கிருந்தால் நமது படைகளின் ஓசை கேட்குமா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “இல்லை, இது நெடுந்தொலைவு. ஆனால் அதுவும் நன்று. ஓசை திரைபோல நிகழ்வன அனைத்தையும் மறைத்துவிடும்” என்றான் சஞ்சயன். பின்னர் “தொலைவு மிக நன்று. அது விரைவை அழிக்கிறது. ஒவ்வொன்றையும் உற்று நோக்குவதற்கு நமக்கு முழுப்பொழுதும் கிடைக்கிறது. தேவர் விண்ணிலிருந்து மானுடரை அசைவில்லாதவர்களாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு தொல்நூல் சொல்கிறது. அத்தனை பெருந்தொலைவில் இருந்து நோக்குகையில் அசைவு முற்றிலும் பொருளிழந்துவிடும்” என்றான்.

“எனக்கு நீ இந்த அணிச்சொற்களால் எதையும் சொல்லவேண்டியதில்லை. உன் சொற்களினூடாக நான் அனைத்தையும் பார்க்கவேண்டும். பொருள்வய வெளியென மாறாத நுண்சொற்கள் ஒன்றுகூட எனக்குத் தேவையில்லை” என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் “அரசே, இறுதியாக நான் ஒன்றை சொல்ல விழைகிறேன். தாங்கள் எதன் பொருட்டு இதை பார்க்கவேண்டும் என்று இன்னமும் எனக்கு தெரியவில்லை” என்றான். “நானும் அறியேன். முதலில் இதை பார்க்க விழையவில்லை. ஆனால் பார்க்காமலிருக்க என்னால் இயலவில்லை என்று பின்னர் உணர்ந்தேன். இதை பார்க்காதொழிய என்னால் இயலுமென்றால் எப்போதோ இளையோனுடன் கிளம்பி நானும் காட்டுக்கு சென்றிருப்பேன்” என்றார் திருதராஷ்டிரர். “நான் இதனுள் இருக்கிறேன். இங்குள்ள ஒவ்வொரு படைவீரனுக்குள்ளும் என் ஒரு துளி உள்ளது. என்னால் இதை பார்க்காமலிருக்க இயலாது.”

“பார்த்தவற்றிலிருந்து நீங்கள் எஞ்சிய வாழ்நாள் முழுக்க விடுபட இயலாது என்று அறிந்துகொள்ளுங்கள் அரசே” என்றான் சஞ்சயன். “ஆம், அதை நானும் அறிவேன். ஆனால் அதன்பொருட்டு எவரும் வாழ்க்கையின் பெருந்தருணங்களை தவறவிடுவதில்லை” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “இது நற்தருணமாக அமைய வாய்ப்பில்லை” என்றான் சஞ்சயன். “இளையோனே, என் நீண்ட வாழ்நாளில் கண்டறிந்த ஒன்றுண்டு. வாழ்வின் பெருந்தருணங்கள் அனைத்தும் தீயவையே” என்றார் திருதராஷ்டிரர். “அதன்பொருட்டு எந்த மானுடனும் அவற்றை தவறவிடுவதுமில்லை.” சற்றுநேரத்திற்குப் பின் சஞ்சயன் “ஒருவேளை தெய்வங்கள் மானுடருக்கு வீசியிருக்கும் தூண்டிலே இதுதான் போலும்” என்றான்.

தேர் நோக்குமாடத்தின் முன் சென்று நின்றபோது இலைகள் மெழுக்குப்பூச்சு ஒளிரும்படி தெளியும் அளவுக்கு நுண்வெளிச்சம் எங்கும் பரவியிருந்தது. “இன்னும் சற்று நேரத்தில் பொழுது விடிவதற்கான அறிவிப்பு எழுந்துவிடும்” என்று அவன் திருதராஷ்டிரரிடம் சொன்னான். “ஆம், நான் பறவைக்குரல்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன். கரிச்சான் ஓய்ந்தது. காகங்கள் கரைந்து பறக்கின்றன” என்று திருதராஷ்டிரர் சொன்னார். நோக்குமாடத்திலிருந்து இரண்டு காவலர்கள் வந்து தேர் அருகே வணங்கி நின்றனர். சஞ்சயன் திருதராஷ்டிரரை மெல்ல கைபற்றி இறக்கினான். படிகளினூடாக இறங்கி நிலத்தில் நின்ற அவர் உடலை நிமிர்த்தி “தெய்வங்களே… மூதாதையரே…” என்று முனகினார்.

தேர் நகர்ந்ததும் இரு வீரர்களும் தலைவணங்கி “இவ்வழி, அரசே” என்றனர். “வருக!” என்று சஞ்சயன் அவர் கைபற்றி அழைத்துச் சென்றான். பன்னிரண்டு அடுக்குகளாக மரத்தாலும் மூங்கிலாலும் கட்டப்பட்டிருந்த அந்த நோக்குமாடத்தின் படிகளை அணுகியதும் “அரசே, செங்குத்தான படிகள். கைப்பிடியை பற்றிக்கொண்டு மெல்ல ஏறுங்கள்” என்றான் சஞ்சயன். இரண்டு படிகளில் கால் வைத்ததும் அதன் கணக்கை புரிந்துகொண்ட திருதராஷ்டிரர் விரைந்து மேலேறினார். சஞ்சயன் மெல்ல காலெடுத்துவைத்து தொடர்ந்தான்.

இறுதி நிலையை அடைந்தபோது சஞ்சயன் மூச்சிரைத்துக்கொண்டிருந்தான். திருதராஷ்டிரர் திரும்பிப்பார்த்து “என்ன ஓசை அது? நீயா மூச்சிரைக்கிறாய்?” என்றார். “ஆம்” என்றான் சஞ்சயன். “செங்குத்தான ஏணி… மிகு உயரம்.” திருதராஷ்டிரர் “சொற்களில் அளைகிறாய். ஒருநாளாவது களரிக்குச் சென்று உடல்பயில அமர்ந்துளாயா?” என்றார். சஞ்சயன் “சொற்களை நிறுத்திவிட்டு உடல்பயில வேண்டியிருக்கிறது. அது என்னைப் போன்றவர்களால் இயலாது” என்றான். “அறிவிலி” என்று கையை வீசியபின் “இங்கே எந்த இடம்?” என்றார் திருதராஷ்டிரர். “வருக!” என அவரை அழைத்துச்சென்று அங்கு அவருக்கென போடப்பட்டிருந்த பீடத்தில் அமர்த்தினான். அவர் கால்களை முன்னால் நீட்டிக்கொள்ளும் பொருட்டு குறும்பீடத்தை முன்னால் நகர்த்திவைத்தான்.

“முழுநாளும் தாங்கள் இங்கு அமர்ந்திருக்கலாம், அரசே. வெயில் தங்களைத் தொடாதபடி மேலே யானைத்தோல் கூரையிடப்பட்டுள்ளது. நோக்கு நெடுந்தொலைவை சென்றடையும்பொருட்டு முப்புறமும் முற்றிலும் திறந்திருந்தாலும் வெயிலுக்கேற்ப நாம் கூரையை சாய்த்து வைக்கலாம்” என்று சஞ்சயன் சொன்னான். சுற்றும் நோக்கி, “இதோ தோல்போர்வையிட்டு மூடப்பட்டிருப்பதுதான் பீதர்நாட்டு தொலைநோக்கி என்று எண்ணுகின்றேன்” என்றான். கீழிருந்து வந்து ஓரமாக நின்ற பீதர்நாட்டு ஏவலன் “ஆம்” என்று தலைவணங்கினான். சஞ்சயன் “காட்டுக!” என்றான்.

பீதர்நாட்டு ஏவலன் அருகே வந்து அத்தோல் போர்வையை விலக்கினான். நீண்ட அமரப்பலகையின் முதல் முனையில் பெரிய குவியாடி பொருத்தப்பட்டிருந்தது. அதற்குப் பின்னால் சற்று சிறிய இன்னொரு குவியாடி இருந்தது. முதல் ஆடி மெலிந்து பரந்ததாகவும் இரண்டாம் ஆடி குவிந்து உருளைபோலவும் இருந்தது. “இரண்டு பெரிய நீர்த்துளிகளேதான்” என்று அவன் திருதராஷ்டிரரிடம் சொன்னான். உளக்கிளர்ச்சி தெரியும் குரலில் “பனிக்கட்டியில் செய்யப்பட்டவை என எண்ணுக! முற்றிலும் ஒளி ஊடுருபவை. இங்கிருந்து நோக்குகையிலேயே வெளியே தெரியும் காட்சி அதற்குள் சுருங்கி சுழன்று சுழியென்று ஆவதை என்னால் காண முடிகிறது” என்றான்.

பீதர்நாட்டு ஏவலன் இரண்டாவது ஆடிக்குப் பின்னால் இடப்பட்ட சிறிய பீடத்தில் அமர்ந்தான். அதன் முன் அமைந்த சிறிய குழிவளைவின் மீது தன் தாடையைப் பதித்து இரண்டாவது ஆடியினூடாக ஒருகண்ணை மூடி மறுகண்ணை கூர்ந்து பார்த்து ஆடிகளை முன்னும்பின்னும் நகர்த்தி சீரமைத்தான். “தாங்கள் அமர்ந்து பார்க்கலாம். தங்கள் விழிநோக்கின் அளவுக்கேற்ப என்னால் ஒழுங்கு செய்ய இயலும்” என்றான். அவன் எழுந்துகொள்ள சஞ்சயன் சிறுபீடத்தில் அமர்ந்து தாடையை அதில் பதித்து வைத்துக்கொண்டான். அவன் கண்களுக்குள் நேரடியாக ஒளிவிழ கூசி விழிகளை விலக்கிக்கொண்டான். பின்னர் நீர்வழியும் கண்களை துடைத்தபடி மீண்டும் நோக்கினான்.

முதலில் அவனுக்கு கண்கூசும்படி உடைந்த காட்சிகளின் சுழல் மட்டுமே தெரிந்தது. “தங்கள் விழி இன்னும் இவ்வாடிகளை புரிந்துகொள்ளவில்லை. கூர்ந்து நோக்குக! உளம் அதில் ஒருங்கட்டும். மெல்ல காட்சிகள் தெளியத்தொடங்கும். அதன் பின் இந்நெடுந்தொலைவை விழிகடந்து சென்று நோக்குவீர்கள்” என்று பீதர்நாட்டு ஏவலன் சொன்னான். இரு ஆடிகளையும் அவன் அணுவணுவாக நகர்த்தி ஒன்றுடன் ஒன்று இணையச் செய்துகொண்டிருந்தான். காட்சிகள் வளைந்தும் நெளிந்தும் இழுபட்டும் குவிந்தும் உருமாறிக்கொண்டிருந்தன. ஒரு கணத்தில் எதையோ அடையாளம் கண்டுகொண்ட சஞ்சயனின் உள்ளம் திடுக்கிட்டது. “பொறு” என்று கைகாட்டினான். பின் “மெல்ல மெல்ல” என்று ஆடிகளை நகர்த்தும்படி கைகாட்டினான். போதும் என்று கைகாட்டியபின் விழிகள் பொருந்தியிருக்க அசைவற்று அமர்ந்தான்.

பின்னர் விழிவிலக்கி தான் பார்த்ததென்ன என்று அவன் உளம்கூர்ந்தான். மீண்டும் நோக்கினான். அது குரங்குமுத்திரை பொறிக்கப்பட்ட கொடி. “குரங்குக்கொடி!” என்றான். பின்னர் அவனே கைநீட்டி ஆடிகளை மெல்ல நகர்த்தினான். “இளைய பாண்டவர் அர்ஜுனரின் தேர்” என்றான். திருதராஷ்டிரர் “படைமுகப்பில் நிற்கிறார்களா?” என்றார். “ஆம் பேரரசே, அவர்களின் தேர் படைமுகப்பில்தான் நின்றுள்ளது” என்றான் சஞ்சயன்.

ஆடியை கீழே சரித்து தேரை முழுவதும் பார்த்து “அவர் தேர்த்தட்டில் அமர்ந்திருக்கிறார். தேரை இளைய யாதவர் ஓட்டிக்கொண்டிருக்கிறார்” என்றான். “இளைய யாதவனா?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “ஆம், அவர்தான். நன்கு தெரிகிறது. இங்கிருந்து புரவிகளின் குளம்புகளைக்கூட நோக்க முடிகிறது. அவற்றின் விழிகளை, குஞ்சி முடிகள் ஒவ்வொன்றையும் பார்க்க இயல்கிறது” என்றான். “இளைய யாதவர் தேர்த்தட்டில் சவுக்குடன் அமர்ந்திருக்கிறார். இடையில் அவருடைய வெண்சங்கு. சூதர்களுக்குரிய வகையில் குழல்சுழற்றிக் கட்டியிருக்கிறார் அதில் பீலி சூடியிருக்கிறார்” என்றான்.

“ஆழி கொண்டிருக்கிறானா?” என்றார் திருதராஷ்டிரர். “இல்லை, அவர் படைக்கலத்துடன் இருப்பதாகத் தெரியவில்லை” என்றான் சஞ்சயன். “அறிவிலி… அவன் படைக்கலம் இன்றி இருக்கமாட்டான். நோக்கு!” என்றார் திருதராஷ்டிரர். அவன் கூர்ந்து நோக்கி “இடையில் குறுவாள் ஒன்று இருப்பதுபோல் உள்ளது” என்றான். “அது குறுவாள் அல்ல, படையாழி. எட்டு பிறைகளாக அதை பிரிக்க முடியும். பீதர்நாட்டு விசிறிபோல் ஒன்றென விரிக்கவும் இயலும்… இப்போர்க்களத்திலேயே கொடிய படைக்கலம் அது. அது எந்நிலையிலும் இடையிலிருந்து கைகளுக்கு வராமலிருக்கவேண்டும்” என்றார் திருதராஷ்டிரர். சஞ்சயன் “நீலப்பீலி  விழிதிறந்து களத்தை நோக்கிக்கொண்டிருக்கிறது” என்றான்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி – வி.எஸ்.நைபால்
அடுத்த கட்டுரைஅன்புள்ள புல்புல்- தொகுப்புரை