இரு கடிதங்கள்

photo_2018-03-05_14-51-24

அன்புகெழுமிய ஜெமோ!

தங்களை மூன்று முறை நேரில் பார்த்து பேசிவிட்டேன். இருந்தாலும் ஒவ்வொரு முறை உங்களை காணும் போதும் முதன்முதலாக பார்த்து பேசப்போவது போன்ற ஒரு பிரமிப்பு, பரவசம் என சொற்களால் சொல்ல இயலாத ஒரு புதுமையை நான் அடைகிறேன். கடந்த இரண்டு சந்திப்புகளிலும் சற்று உணா்ச்சிவசத்தால் தங்களிடம் இயல்பாக என்னால் பேச முடியவில்லை. இம்முறை எவ்வித தயக்கமும் இன்றி நான் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டுவிட்ட திருப்தி. அதற்கு தாங்கள் மிக பொறுமையாக புரியும்படி மிக எளிதாக கூறி கடந்துவிட்டீர்கள். சமணர்கள ஏன் வடக்கிருந்து உயிா் துறக்கிறார்கள் என்ற கேள்வி என்னுள் எழுந்து அன்றுடன் 7 ஆண்டுகள் ஆயின. தங்களிடம் கேட்ட பின்தான் அலை அடங்குவது போன்று அந்த கேள்வி அடைந்தது. மிக்க நன்றி ஜெமோ!

கடந்த மூன்று முறையும் தங்கள் பார்வை நிகழ்வில் இருக்கும் பொழுது என்னை நேராக வந்தடைந்துவிடுகிறது! நானும் தங்களை நேருக்கு நேராக கண்ணோடு கண்ணாக பார்த்துவிடுகிறேன். இது உண்மையா அல்லது என் மனபிரமையா என்று தெரியவில்லை இது கற்பனையாக இருந்தாலும் கூட எனக்கு மகிழ்ச்சியே! ஒவ்வொரு முறையும் தங்கள் தளத்தை கண்டு பயிலும் போது மிகப்பெரிய திறப்பு என்னுள் ஏற்படுகிறது. தங்களை என் முழுமுதல் ஆசானாகவே பாவிக்கிறேன். தாங்கள் எப்படி சுந்தர ராமசாமியுடன் இருந்து தங்கள் பாதையை தொடங்கினீர்களோ அது போல் தங்களுடன் கூடவே இருந்து என்னுடைய பாதையை தொடங்க வேண்டும் என பெரிதும் அவாக்கொள்கிறேன். முனைவர் பட்ட ஆய்வை தங்கள் படைப்புகளுடன் எழுத்தாளர் எஸ்.ராவின் படைப்புகளையும் ஒப்பாய்வு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.

எப்பொழுதும் போல் இலக்கியத்துறையில் மாற்றங்கள் நிகழ்விலும் எதிர்பாரா பல திறப்புகளை எனக்குள் அளித்தது. ஆனால் பின்நவீனவத்துவம் பற்றியும் தங்கள் உரை இருக்கும் என்று ஆவலோடு இருந்தேன். மிகக் குறுகிய நேரத்தில் உரையை முடித்துவிட்டது போன்ற ஒரு மனநிலை. 6.30 மணி என்பதற்கு பதிலாக இன்னும் முன்பாக வைத்து தங்களை இரண்டு மணிநேரம் பேசவிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் உங்கள் உரையை கேட்கும்பொழுது தங்கள் குரல் மிக புதுமையாக, இனிமையாக வசீகரமானதாக இருக்கிறது. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு என்று வள்ளுவர் கூறுவது போன்று உங்கள் குரலில் ஏதோ ஒன்று உண்டு என்று மட்டும் நன்றாக தெரிகிறது. ஆனால் தாங்களே மேடை பேச்சு எனக்கு உகந்தது அல்ல என்று தன்னடக்கத்தோடு கூறிக்கொள்கிறீா்கள் மிக வியப்பாக உள்ளது!

சென்ற திங்கள் கிழமைதான் குற்றமும் தண்டனையும் படித்து முடித்தேன் சொற்களால் சொல்ல முடியாத சொல்மனக் கோவை அந்நூல் அவரின் வெண்ணிற இரவுகள் நூலுக்கு அடுத்து இந்நூலை படித்துள்ளேன் மிக அருமையான கதைக்களம் எனக்கு கதாநாயகனை விட மர்மலதோவ் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருக்கிறது. என் மனதிற்கு நெருக்கமாக உணா்கிறேன். ஆனால் ரஸ்கோல்நிகோவ் மனநிலை சற்றேக்குறைய என் என் மனநிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது (கொலை வரை சென்றதில்லை!). அடுத்து தங்களின் கொற்றவை நாவலை படிக்கத் துவங்கியுள்ளேன்! மிக அருமையான சித்தரிப்புகள்… அருமையான வரிகள், சொற்கள் எனக்கு பிடித்த வரிகளை கோடிட்டு உள்ளேன், படித்து முடித்தவுடன் தங்களுக்கு இன்னொரு கடிதம் மூலம் விரிவாக எழுத உள்ளேன்.

தங்கள் அலைபேசி எண்ணை கொடுத்தீா்கள் ஆனால் தொடா்புக்கொள்ள எனக்கு மிகவும் தயக்கமாக உள்ளது! கூடியவிரைவில் தொடர்புக்கொள்வேன் என்று எண்ணுகிறேன்.

உங்கள் ஆக்கங்களை மேலும் மேலும் படித்து என்னை நான் கண்டடைகிறேன்! மிக்க நன்றி!

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது

அன்புடன்
ரா. பாலசுந்தர்
அன்புள்ள ஜெ

இப்படி ஒரு கடிதம் எழுதவேண்டும் என நெடுநாட்களாக நினைத்திருந்தேன்.எழுதி முடித்து இப்போதுதான் அனுப்புகிறேன். இலக்கியவாசகனாக என்னை நான் உணர்வது உங்கள் எழுத்துக்களை வாசித்தபின்னர்தான். நான் அதிகமாக வாசிக்காமலிருந்த ஒரு காலகட்டம் உண்டு. வேலையில்லாமல் அலைந்துகொண்டிருந்தபோது. அப்போதுதான் செயலின்மையின் இனிய மது என்ற கட்டுரையை ஒருவர் அளித்தார். அன்று அந்தக்கட்டுரையை மட்டும்தான் படித்தேன். ஐம்பதுமுறைக்குமேல். இப்போதுதான் அத்தனை கட்டுரைகளையும் வாசிக்கிறேன்

உங்கள் மேல் எனக்குள்ள ஈர்ப்பு ஏன் என்று பார்க்கிறேன். நீங்கள் மற்ற இலக்கியவாதிகளைப்போல எதிர்மறை எண்ணத்தை உருவாக்கவில்லை. வெறும் கசப்புகளை உண்டுபண்ணவில்லை. ஆனால் கதைகளில் மிகக்கூர்மையாக மனிதனின் எல்லா இருட்டையும் முன்வைக்கிறீர்கள். அதைக் கடந்து ஒரு நம்பிக்கையொளியை மிச்சம் வைக்க முடிகிறது. அதை நீங்கள் இயற்கையிலிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். அதைத்தான் உங்களிடமிருந்து ஒரு வெளிச்சமாக நான் பெற்றுக்கொள்கிறேன்

நன்றி

செல்வா ராஜ்குமார்

முந்தைய கட்டுரைகார்மில்லா -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅம்பேத்கரின் நவயானம்