சிற்பங்களுக்காக ஒரு பயணம்

thadi

சிற்பக்கலை அறிய…
தென்னிந்தியக் கோயில்கள்
நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்
சோழர்கலை
மெய்யான பெருமிதங்கள் எவை?
அசைவைக் கைப்பற்றுதல்
கலையறிதல்
சிற்பங்களைப் பயில…
தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும்

அன்புநிறை ஜெ,

வணக்கம், சமீபத்தில் தாடிக்கொம்பு கோயிலுக்கு சென்றிருந்தேன். அக்கா திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக சென்றதால் சுற்றிபார்க்க எங்கேனும் செல்லலாம் என்று முடிவெடுத்த பொழுது எதார்த்தமாக தாடிக்கொம்பு கோயிலுக்கு செல்வதாக முடிவுசெய்து கிளம்பினோம். அங்கு சென்று சிற்பங்களை கண்டு வாயடைந்து நின்றுவிட்டேன்! அந்த சிற்பத்தொகுதி அப்படியே எங்கள் ஊர் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் சிற்பங்களை பிரதிபலித்தது போன்ற பிரமை…. எவ்வளவு நேர்த்தி, எவ்வளவு கலையழகு, அந்த சிற்பங்களை வடித்தவனுக்கு வாழ்நாள் அடிமையாகிவிட வேண்டும் என்று தோன்றுமளவிற்கு நம்மை அந்த சிற்பம் அருகே கட்டிப்போட்டு விடுகிறார்கள். ஒவ்வொரு சிற்பமாக பார்த்து நகரும் பொழுது மேலும் மேலும் பிரம்மாண்டம், மேலும் மேலும் அதிர்ச்சி அதிகரிக்கிறது. நாயக்கர் கால சிற்பங்களில் என்னை மிகவும் ஈர்த்த சிற்பப் பகுதி தொடை மற்றும் கணுக்கால் மற்ற பகுதியை விட தொடை மற்றும் கணுக்கால்களில் மிக நுணுக்கமாக செதுக்குவதாக தோன்றுகிறது. தாடிக்கொம்பு கோயிலும் அதற்கு விதிவிலக்கு அல்ல அதுவும் அனுமர் ராமனை தோளில் தூக்கி செல்வது போன்ற சிற்பம் மற்றும் உலகளந்த பெருமாள் சிற்பம் போன்றவை கலையின் உன்னத உச்சம் அந்த சிற்பங்களை பற்றி எழுதுவதற்கு தமிழ் தாத்தா உ.வே. சா கூறுவது போன்று சொல்லில் வடித்துவிட முடியா பேரழகு கொண்டது. எவ்வளவு சொல் எந்த மொழியில் தேடினாலும் கிடைக்காத சொல் சிற்பத்தின் மௌத்தை அதே உளக்கிடைக்கையுடன் வெளிப்படுத்துவது.

அதன்பிறகு தான் தங்கள் தளத்தில் தாடிக்கொம்பு, தாரமங்கலம் பற்றி ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா என்று தேடிய பொழுது எதிர்பார்த்தது போன்றே இரண்டு கலைக்கோயில்கள் பற்றியும் குறிப்புகள் கிடைத்தது. இந்தியப் பயணத்தில் தாங்கள் தாரமங்கலம் பற்றி கூறிய மேலதிக விவரங்களும் தெரிந்துக்கொண்டேன்… மிக்க நன்றி!

இந்தக் கடிதம் எழுதுவதன் முக்கிய நோக்கம் – இக்கோயில் ஏற்படுத்திய தாக்கத்தினால் நான் நமது பாரம்பரிய கலைக் கோயில்களை காண பயணப்படலாம் என்று உத்தேசித்துள்ளேன். அதற்கு தங்களின் உதவி அவசியம் தேவைப்படுகிறது. சுமார் 15 நாட்களில் தமிழகத்தின் கலைச்செல்வங்களை கொண்டுள்ள முக்கியமான கோயில்களை சுற்றிப்பார்க்க முடியுமா? அவ்வாறு முடியுமென்றால் எந்த கோயிலில் ஆரம்பித்து வரிசைக்கிரமமாக எந்தக் கோயிலில் முடித்தால் ஓரளவேனும் வரலாற்றுடன் சிற்பக்கலையின் வளர்ச்சியை அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்? இல்லையெனில் தமிழகத்தின் முக்கிய கலைக்கோயில்களை சுற்றிவர எத்தனை நாட்கள் ஆகும். இப்பட்டியலில் தவற விடக்கூடாத முக்கிய கோயில்களை சேர்த்துக் கொடுத்தீர்கள் என்றால் என் போன்ற கலைபயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவிகரமானதாக இருக்கும்.

தங்களின் தஞ்சை தரிசனம் கட்டுரை படித்தேன். தாங்கள் பயணப்பட்ட முறையிலேயே பயணப்படலாமா? என்றும் உத்தேசிக்கிறேன். ஆனால் பேருந்தில் தாங்கள் சென்ற இடங்களுக்கு செல்லும் வசதி உள்ளதா? என்று தெரியவில்லை.

தங்கள் பதில் கிடைத்தவுடன்தான் திட்டத்தை ஆரம்பித்து பயணத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளேன்.

தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்!

பாலசுந்தர்

photo_2017-12-30_21-16-29

அன்புள்ள பாலசுந்தர்

நீங்கள் தொடங்குவது நல்ல விஷயம். அது வாழ்நாள் முழுக்க நீளும் ஒரு பயணமாக இருக்கவேண்டும். அன்றி ஒருசில நாட்களில் முடிக்கக்கூடியது அல்ல இது. தமிழகம் கலைக்கோயில்களின் பெருங்காடு

முதலில் பல பகுதிகளாக பிரித்துக்கொள்ளுங்கள். நீங்கள் இப்போது திட்டமிடுவது தஞ்சை வட்டாரம். சோழநாட்டுக் கலைக்கோயில்கள். கொடும்பாளூர், புதுக்கோட்டை விஜயாலய சோளீச்வரம் போன்றவை முதற்கட்ட ஆலயங்கள். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் போன்றவை அடுத்தகட்ட பேராலயங்கள். திருபுவனம், மன்னார்குடி, திருவாரூ, திருவையாறு போன்றவை அடுத்தகட்ட ஆலயங்கள். இப்படிப் பிரித்துக்கொண்டு கொஞ்சம் வரலாற்றையும் தெரிந்துகொண்டு பார்க்கலாம். பார்க்கப்பார்க்க மேலும் பார்க்கவேண்டியவை தெரியவரும்

இவ்வாறு பாண்டிய மண்டல ஆலயங்கள், தொண்டைமண்டல ஆலயங்கள் என்று பல பகுதிகளாக பிரித்துக்கொண்டு தனித்தனியாகப் பயணம் செய்து ஆலயங்களைப் பார்வையிடலாம். என் இணையதளத்தில் ஏராளமான கட்டுரைகள், நூல்களைப்பற்றிய அறிமுகங்கள் உள்ளன

ஜெ

முந்தைய கட்டுரைஅன்புள்ள புல்புல்- தொகுப்புரை
அடுத்த கட்டுரைஇதழியலின் தொடர்ச்சியறுதல்