அச்சிதழ்கள், தடம்

thadam

அன்புள்ள ஜெ.,

நலமா? நான் கடந்த முப்பத்தைந்து வருட காலமாக விகடன் வாசகன். பொழுதுபோக்குப் பத்திரிகை, வெகு ஜனப் பத்திரிகை என்ற வரையறையிலே கூட இலக்கியத்திற்கு மற்றும் சமூகத்திற்கு அதன் பங்களிப்பு மறுக்கக்கூடியதல்ல. “சங்க சித்திரங்கள்” தொடர் மூலம் தான் என்னைப்போன்ற பல்லாயிரம் வாசகர்களுக்கு உங்கள் அறிமுகம் கிடைத்தது. இப்போது காத்திரமான தீவிர இலக்கியப் படைப்புகளோடு “தடம் விகடன்” வந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கும் விகடனுக்கும் ஏற்பட்ட முரண்பாடுமற்றும் அதன் மூலம் நீங்கள் அடைந்த அவதிகள் துரதிருஷ்டவசமானது. பலருக்கும் மனவருத்தத்தைக் கொடுத்தது. “நத்தையின் பாதை” “தடம்” பதித்ததன் மூலம் அந்த முரண்பாடு முடிவுக்கு வந்தது அல்லது கடக்கப்பட்டது என்று கொள்ளலாமா?

அன்புள்ள.,

கிருஷ்ணன் சங்கரன்

***

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

தெளிவான ஒன்றுண்டு, இன்றைய தமிழ் வாசகச்சூழலில் ஒரு தீவிரமான இலக்கியப் படைப்பாளியை பிரபல ஊடகங்கள் முதன்மையாக முன்னிறுத்த முடியாது. அவரையும் ஒரு பக்கம் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்நிலை நோக்கி அவர்கள் வந்துசேரவே நெடுங்காலம் ஆகிவிட்டிருக்கிறது – அரைநூற்றாண்டு. ஆகவே அவர்கள் அளிக்கும் இடம் அந்தளவுக்கு நன்மை அளிப்பது. அதற்குமேல் எதிர்பார்க்கத் தேவையில்லை.

அத்துடன் இன்றைய அச்சு ஊடகங்கள் எதன் வழியாகவும் பெரிய அளவில் வாசகர்களை ஈட்டமுடிவதில்லை. எஸ்.ராமகிருஷ்ணன்தான் இலக்கிய வட்டாரத்தில் இருந்து மிக அதிகமாக பிரபல இதழ்களில் எழுதுபவர். அவருடைய வாசகர்களின் பரப்பு எவ்வகையிலும் என் வாசகர்களின் பரப்பைவிட மிகுதியானது அல்ல. அச்சிதழின் வாசகர்கள் மிகப்பரவலானவர்கள். அவர்களில் ஒரு சிறு தரப்பினர் மட்டுமே இலக்கியப்படைப்பைத் தொடர்ந்து சென்று உணர்பவர்கள்

இலக்கியவாசகனுக்குரிய முதன்மைத்தேவை இலக்கியம் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்குரியது, வாழ்க்கையால் புரிந்துகொள்ளப்படவேண்டியது என்னும் தெளிவு. அது பிரபல இதழ்களின் வாசகர்களிடம் மிக அரிது. அவர்களுக்கு அந்த மனநிலையை, வாசிப்பதற்கான பயிற்சியை பிரபல இதழ்கள் வழியாக அளிக்கவும் இயலாது. நேற்று அது இலக்கியவாதிகளுடனான நேரடி உறவு மூலம் வாய்த்தது. இன்று ஓரளவுக்கு அது இணையதளங்கள் வழியாக நிகழ்கிறது. அந்தப்பயிற்சி உடைய வாசகர்களே இலக்கியவாதிகள் தேடுபவர்கள்.

ஆகவே நான் என்றுமே அச்சிதழ்களைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அவர்களால் ஆவதொன்றுமில்லை என்பதே என் எண்ணம், ஓர் அறிமுகத்தை மட்டுமே அவை அளிக்கும். நான் என் ஊடகங்களை நானே உருவாக்கிக்கொண்டு வாசகர்களைச் சென்றடைந்தவன். ஆகவே எதற்கும் எவரையும் சார்ந்து இல்லை.

விகடனில் நிகழ்ந்தது ஒரு கசப்பூட்டும் நிகழ்வு. அது நிகழ்வதற்கான காரணம் இன்று துலங்குகிறது. நம் பொது ஊடகங்களின் அடிப்படை இயல்பு அது. அவை ‘கவனத்துக்குரிய முகங்களை’ உருவாக்குகின்றன. பின்னர் அம்முகங்களைக்கொண்டு வணிகம் செய்கின்றன. அந்த வணிகத்தில் ஒரு பகுதியே அவர்களைச் சர்ச்சைகளுக்குள் இழுத்துவிடுவது. அதை அவர்கள் அனைவருக்குமே செய்கிறார்கள். எனக்கும் அவர்கள் செய்தது அதுவே

என்ன வேறுபாடு என்றால் அவர்களின் பிற முகங்கள் அனைவருமே பெரிய மனிதர்கள். செல்வத்தின், அரசியல்புலத்தின் பாதுகாப்பு கொண்டவர்கள். எழுத்தாளன் கால்நடையாளன். அவனால் அந்தச் சர்ச்சைகளில் எழுந்துவரும் பெருவாரியான சமூக எதிர்ப்பை, நிறுவனமயமாக்கப் பட்ட வெறுப்பை எதிர்கொள்ள முடியாது. இலக்கியவாதிகளை ஊடகங்கள் கண்டுகொண்ட முதற்காலகட்டம் அது. ஆகவே அது நிகழ்ந்தது. பின்னர் அதன் விளைவை அவர்களும் புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்

விவாதத்திற்குகுரிய கருத்துக்கள் இல்லாமல் அறிவுலகச் செயல்பாடு இல்லை. ஆனால் அறிவுலகச் செயல்பாடு என்றால் என்ன என்று அறிந்தவர்கள் நடுவே மட்டும்தான் அந்தவகையான விவாதங்கள் நிகழவேண்டும். அதற்கு பண்படாத பெருந்திரள் தடையும் அபாயமும் ஆகும். ஒருவகையில் நானும் அதைக் கற்றுக்கொண்டேன்.

தடம் இதழ் ஒரு முயற்சி என்றவகையில் நன்று. அச்சும் அமைப்பும் தரமானவை. ஆனால் இலக்கியம் என்பது தனக்குரிய அளவுகோலைக் கொண்டிருக்கவேண்டும். மலையாள இலக்கிய இதழ்கள் அனைத்துமே அத்தகைய அளவுகோலைக் கொண்ட ஆசிரியர்குழுவால் நடத்தப்படுபவை. தடம் ஏற்கனவே தமிழில் இருக்கும் சிற்றிதழ்ச்சூழலை பொத்தாம்பொதுவாக தானும் பிரதிபலிக்கிறது என்ற எண்ணம் உருவாகிறது

சிற்றிதழ்ச்சூழலிலேயே பெரும்பாலான எழுத்துக்கள் பதர்களே. வணிக எழுத்தை எழுதமுடியாதவர்கள் எழுதும் அசட்டுமுயற்சிகள். சலிக்காமல் அதையே எழுதி ,கொஞ்சம் நட்புகளையும் சம்பாதித்து,  ஓர் அரசியல்நிலைபாடும் கொண்டிருந்தால் இங்கே ஒருவகையான பெயரடையாளம் உருவாகிவிடும். தடம் போன்ற இதழ்கள் ‘ஜனநாயக’ அடிப்படையில் இலக்கியத்தை அணுகும்போது இவர்களும் அங்கே சென்று அமர்கிறார்கள். ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் ஜனநாயகம் போல இலக்கியத்துக்கு எதிரானது எதுவும் இல்லை.

எல்லாவகையான எழுத்துக்கும் இடமளிக்கலாம், ஆனால் இலக்கியமென்றால் என்ன என்ற தெளிவு ஆசிரியர் குழுவுக்கு இருக்கவேண்டும். அனைவரையும் உள்ளிழுக்கையில் என்ன நிகழ்கிறதென்றால் வெற்றுக்கூச்சலிடும் சக்கைகள் முண்டியடித்து உள்ளே நுழைந்து இடத்தை நிரப்பிக்கொள்வார்கள். குமுதம் தீராநதி உட்பட பல இலக்கிய இதழ்கள் செல்லாக்காசானது அப்படித்தான். தடமும் அந்தப்பாதையில் செல்லலாகாது என்னும் எச்சரிக்கை அதற்குத்தேவை

ஜெ

முந்தைய கட்டுரைஅண்ணன்களின் பாடகன் -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72