‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72

tigஅவை மெல்ல தளர்ந்தமையத் தொடங்கியது. பெருமூச்சுகளும் மெல்லிய முணுமுணுப்புகளும் ஒலித்தன. அதுவரை அந்தச் சொல்லாடல் செல்லும் திசை எது என்பதே அவர்களை முன்னெடுத்துச் சென்ற விசையாக இருந்தது. அது கண்ணுக்குத் தெரிந்ததும் முதலில் மெல்லிய சலிப்பும் பின்னர் சோர்வும் அவர்களை ஆட்கொண்டது. அங்கிருந்து கிளம்பிச் செல்லவும் தங்கள் சிறிய பாடிவீடுகளுக்குள், அறிந்த சுற்றங்களுக்குள் ஒடுங்கிக்கொள்ளவும் அவர்கள் விழைந்தனர்.

உத்தரன் கண்களை மூடி குருதித்துளிகள் உடலுக்குள் உதிர்ந்து அமையும் ஓசையை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான். அதுவரை எத்தனை உளவுச்சத்தில் இருந்திருக்கிறோம் என அப்போதுதான் தெரிந்தது. குருதி படிவது இனிய களைப்பை அளித்தது. கைகால்கள் தளர்ந்து விரல்கள் விடுபட்டன. நினைவுகள் தவறித் தவறிச் செல்ல அவன் விராடபுரியில் இருந்தான். இளவேனில் எழுந்திருந்தது. அணிக்காடுகள் பூத்திருந்தன. தரையெங்கும் பொன்மலர்களை விரித்திருந்தன கொன்றையும் வேங்கையும். அவன் ஒரு மரநிழலில் அமர்ந்து அப்பால் ஒளிகொண்டு சென்ற ஆற்றை நோக்கிக்கொண்டிருந்தான்.

தன் குறட்டையை தானே கேட்டு விழித்துக்கொண்டான். பாண்டவ மைந்தர்கள் ஒருவரோடொருவர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர் அரவானுடன் சர்வதனும் சுருதகீர்த்தியும் யௌதேயனும் சதானீகனும் நகையாடிக்கொண்டிருந்தனர். நிர்மித்ரனும் சுருதசேனனும் பிரதிவிந்தியன் அருகே நின்றிருந்தார்கள். அரவானின் தோளில் கைவைத்து சர்வதன் ஏதோ சொல்ல அவர்கள் வெடித்துச் சிரித்து உடனே ஓசை அடக்கினர். உத்தரன் அவைமேடையை நோக்கினான். அங்கே பீமன் தன் கைகளை நோக்கியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அர்ஜுனன் வேறெங்கோ நோக்கியபடி கோணலாக பீடத்தில் வீற்றிருந்தான். யுதிஷ்டிரர் அருகணைந்த ஒற்றர்தலைவரிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார். அவ்வப்போது நகுலனிடமும் சகதேவனிடமும் ஓரிரு சொற்கள் உசாவினார். இளைய யாதவர் அங்கிலாதவர்போலிருந்தார்.

உத்தரன் நீள்மூச்சுடன் அசைந்தமர்ந்தான். ஏவலர்தலைவன் உள்ளே வந்து வணங்கினான். நகுலன் “வருகிறாளா?” என்றான். ஏவலர்தலைவன் “மணப்பெண்ணென அணிகொள்ளவேண்டும் என்றாள். அணிகொள்ளாமல் வர மறுத்துவிட்டாள். இங்கே அணிப்பொருட்கள் எதற்கும் ஒப்புதல் இல்லை. அணிசெய்வோரும் இல்லை. அடுமனைப் பொருட்களைக் கொண்டே அணிசெய்யும்படி குலாடர் ஆணையிட்டார். சற்றுநேரத்தில் வந்துவிடுவாள்” என்றான். அமைச்சர் சுரேசர் இரு துணையமைச்சர்களுடன் உள்ளே வந்து வணங்கினார். “அரசே, இங்கு படைகளில் நானே மூத்த அந்தணன். இந்த மணத்தை நிகழ்த்தும்பொருட்டு எனக்கு ஆணையிடப்பட்டது” என்றார்.

உத்தரன் ஒவ்வாமையால் உடல்கூச விழிகளை தழைத்தான். நெற்றி நரம்புகள் துடித்துக்கொண்டிருந்தன. என்ன நிகழ்கிறது என அவன் உள்ளம் சலித்துக்கொண்டே இருந்தது. எழுந்து சென்றால் என்ன என்ற எண்ணம் எழுந்ததுமே உடலில் மெல்லிய அசைவும் உருவாகிவிட்டது. அதை அடக்கும்பொருட்டு பெருமூச்சுவிட்டு தன்னை தளர்த்திக்கொண்டான். ஏன் என் உள்ளம் கூசுகிறது? ஆணிலியை மணப்பதனாலா? அல்ல, அது மணமே அல்ல. வாழ்வை முன்னிறுத்தி அது இயற்றப்படவில்லை. நீத்தார் சடங்குகளில் தெரிவதுபோல மங்கலமே மங்கலமின்மையென ஆகும் தருணம். அவ்வெண்ணத்தால் அவனே திகைத்து அதை விலக்கும்பொருட்டு தன்னை அசைத்து அமர்ந்தான்.

வெளியே சங்கொலி கேட்டது. காவலன் ஒருவன் இந்திரப்பிரஸ்தத்தின் கொடியுடன் அவைக்குள் நுழைந்தான். தொடர்ந்து ஸ்வேதன் கைகூப்பியபடி வர அவனைத் தொடர்ந்து சங்கன் வந்தான். அவர்களுக்குப் பின்னால் பொன்னிற கச்சைத்துணியை மேலாடையாக அணிந்து கழுத்தில் மலர்மாலையுடன் தலைகுனிந்து ரோகிணி நடந்து வந்தாள். வாயிலில் அவளுடைய நடை தளர்ந்தது. ஏவலன் ஏதோ சொல்ல அவள் கைகளைக் கூப்பியபடி வந்து அவைநடுவே நின்றாள். அவள் முகத்தை அங்கிருந்து நோக்க இயலவில்லை. குளிர்கொண்டவள்போல தோள்களை நன்கு குறுக்கியிருந்தாள்.

ஸ்வேதன் “அரசே, இவள் பெயர் ரோகிணி. என் குலத்தையும் தங்கையின் இடத்தையும் இவளுக்கு அளிக்கிறேன். நானும் என் இளையோனும் உடன்பிறந்தாராக இருபுறமும் நின்று இவளை இந்த அவைக்கு கொண்டுவந்தோம். தங்கள் அவையில் இவள் மாண்புறட்டும்” என்றான். ரோகிணி கைகூப்பி தலைவணங்கினாள். “குலாடகுடியினளாகிய ரோகிணியே, இங்கே நீ எதன்பொருட்டு வந்திருக்கிறாய் என்று அறிவாயா?” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், அறிவேன்” என்றாள் ரோகிணி. “நீ என் இளையோனின் மைந்தனுக்கு மணமகளாக வருகிறாய். மூதன்னையராலும் பேரரசியராலும் சிறப்புற்ற என் குடி உன்னால் மேலும் சிறப்புறுக! என் அன்னை குந்தியும் அம்பையும் அம்பிகையும் அம்பாலிகையும் உன்னை வாழ்த்துக! விண்ணுறையும் பேரன்னை சத்யவதி உனக்கு அருள்க!” என்றார் யுதிஷ்டிரர்.

அவர் தளர்ந்த குரலில் மெல்ல பேசினாலும் அவையிலிருந்த அமைதியால் அக்குரல் அனைவருக்கும் நன்கு கேட்டது. “எங்கு எவ்வகையில் நிகழ்ந்தாலும் மூத்தோரும் சான்றோரும் சுற்றமும் வாழ்த்தினால் அது நல்மணமே என்கின்றன நூல்கள். இந்த அவையில் நீ என் மைந்தனை மணம்கொள்கிறாய். என் குடியின் மருமகளாக நீ வருக! உனக்கு அனைத்து தெய்வங்களும் அருள் பொழிக!” ரோகிணியின் விசும்பலோசை அவையெங்கும் கேட்டது. மெல்லிய இறகு ஒன்று வந்து தொட்டு கூரிய கத்திபோல் உடல்கிழித்துச் சென்றதுபோல என உத்தரன் எண்ணிக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டு ஓசை வழியாகவே அங்கே நிகழ்வதை கண்டான்.

துருபதர் எழுந்து “குலாடர்களே, இந்த அவையின் மூத்தவனாகவும் ஷத்ரியக்குடிகளில் முதல்வனாகவும் இந்த மணத்திற்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன். இதை நடத்தி வைக்கும்பொருட்டு அந்தணராகிய சுரேசரிடம் விண்ணப்பிக்கிறேன்” என்றார். சுரேசர் கைகூப்பி அதை ஏற்றார். பின் ஸ்வேதனிடம் “குலாடரே, உங்கள் குலமகளின் கைகளை பற்றி முன்னால் வருக!” என்றார். ஸ்வேதன் ரோகிணியின் கைபற்றியபடி மூன்றடி முன்னால் சென்றான். அவனுக்குப் பின் சங்கன் வாளேந்தியபடி தொடர்ந்தான். “பாண்டவ குடியில் இளையவரான அர்ஜுனனுக்கு நாகர்குலத்து உலூபியில் மைந்தனாகப் பிறந்த அரவான் இந்த இளையோளை மணம்கொள்ள விழைந்திருக்கிறான். தந்தை கைபற்றி அவன் முன்னெழுக!” என்றார் சுரேசர்.

உத்தரன் விழிதிறந்து அர்ஜுனனை நோக்கினான். அர்ஜுனன் அதே உடற்கோணலுடன் அமர்ந்திருந்தான். “இளைய பாண்டவரே, உங்கள் மைந்தன் மணம்கொள்ள உடன் வருக!” என்று சுரேசர் சொன்னார். அர்ஜுனனின் தாடை இறுகி அசைந்தது. அவன் திரும்பவில்லை. பிரதிவிந்தியன் “அந்தணரே, என் இளையோருக்கு நான் தந்தையுமானவன். நான் கைபிடித்து மணம் செய்விக்கிறேன்” என்றான். சுரேசர் “ஆம், அதற்கும் நெறியுள்ளது” என்றார். பிரதிவிந்தியன் அரவானின் வலக்கையை பற்றி முன்னால் வர அவனுக்குப் பின்னால் சுருதகீர்த்தியும் சுதசோமனும் சுருதசேனனும் சதானீகனும் யௌதேயனும் நிர்மித்ரனும் சர்வதனும் இரு நிரைகளாக வந்தனர். கைகளைக் கட்டியபடி விழிகூர்ந்து நோக்கி அபிமன்யூ மட்டும் அப்பால் நின்றான்.

“குலமகளை கைப்பிடித்து அளியுங்கள், குலாடரே” என்றார் சுரேசர். ஸ்வேதன் ரோகிணியின் கைபற்றி அரவானிடம் நீட்டி “பாண்டவ மைந்தரே, என் தங்கையை கொள்க! இவளால் உங்கள் குடி சிறப்புறுக!” என்றான். “குலமகளை கைக்கொள்க, பாண்டவ மைந்தரே!” என்றார் சுரேசர். பிரதிவிந்தியன் “என் இளையோன் அரவானின் பொருட்டு இக்குலமகளை என் குடிக்குரியவளாக கொள்கிறேன்” என்றான். ரோகிணியின் கையைப் பற்றி அரவானின் கையில் சேர்த்து வைத்தான். அவர்கள் விரல்பற்றிக்கொள்ள மென்துகிலால் அவர்களின் கைகளை சேர்த்துக் கட்டினான்.

சுரேசர் “மனையாட்டியின் கைபற்றி கிழக்கு நோக்கி ஏழு அடி எடுத்து வையுங்கள். குலமகளே, நீ அங்கே விழியறியாது உளமறிய மின்னிக்கொண்டிருக்கும் அருந்ததியை எண்ணிக்கொள்க!” என்றார். அரவான் ரோகிணியின் கை பற்றி ஏழு அடி எடுத்து வைத்தான். அவள் நடுங்கிக்கொண்டிருந்தமையால் விழப்போகிறவள்போல தோன்றினாள். தொலைவிலேயே அவள் தோள்கள் அழுகையில் அதிர்வதை காணமுடிந்தது. “அன்னையர் என்றும் தந்தையர் என்றும் மூவர் என்றும் முப்பத்து முக்கோடி என்றும் நம் தெய்வங்கள் பலர். ஆனால் போர்க்களத்தில் வாளே நம் தெய்வம். இளையோனே, உன் வாளை உருவி மும்முறை தாழ்த்தி வணங்குக! இவள் உன் துணைவி என்றும், எந்நிலையிலும் நீ இவளுக்குரியவன் என்றும் உறுதிபூணுக!” என்றார் சுரேசர்.

அரவான் தன் வாளை உருவி மும்முறை ஓங்கி நிலம்தொட தாழ்த்தினான். “அரசரையும் தந்தையையும் வணங்குக! அவர்கள் சொல்லால் தெய்வங்கள் உங்களை ஏற்றருள்க!” என்றார் சுரேசர். ரோகிணியுடன் அரசமேடையில் ஏறிச்சென்ற அரவான் யுதிஷ்டிரரை அணுகி கால்தொட்டு வணங்கினான். அவர் இருவர் தலை மேலும் கை வைத்து “சிறப்புறுக!” என வாழ்த்தினார். பீமனை அவர்கள் வணங்கியபோது அவன் பேருடலில் தசைகள் அலையிளகின. அர்ஜுனன் முகம் திருப்பி அவர்களை நோக்காமலேயே கைகளால் இருவர் தலையிலும் தொட்டு வாழ்த்தினான். நகுலனையும் சகதேவனையும் வணங்கியபின் கீழிறங்கி வந்து துருபதரையும் விராடரையும் வணங்கி வாழ்த்து கொண்டான்.

அரவான் ரோகிணியுடன் இளைய யாதவரை நோக்கி சென்றபோதுதான் அவர் அங்கிருப்பதை மீண்டும் உத்தரன் உணர்ந்தான். அவர்கள் வணங்கும்போது இளைய யாதவரின் உணர்வு என்னவாக இருக்கும் என அவன் எண்ணினான். அவர் இனிய புன்னகையுடன் அவர்களை வாழ்த்தி நற்சொல் உரைத்தார். அரவானின் தோள்தொட்டு மெல்ல தழுவிக்கொண்டார். உத்தரன் மீண்டும் ஏனென்றறியாத எரிச்சலையும் கசப்பையும் அடைந்தான். அவன் அருகே நின்றிருந்த ஹிரண்யபாகு “அவர் அவ்வப்போது இங்கிருந்து மறைகிறார். மீண்டும் தோன்றுகிறார்” என்றான். உத்தரன் மறுமொழி உரைக்கவில்லை. “வேறு எங்கிருந்தோ அவர் நம்மை நோக்கிக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வை அடைந்தேன். எறும்புக்கூட்டை குனிந்து நோக்குபவர்போல நம்மை பேருருவாக நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்று ஹிரண்யபாகு மீண்டும் சொன்னான்.

மீண்டும் கொம்பொலி எழுந்தது. அரவான் அவைநோக்கி திரும்பி தலைவணங்கி “அவையினர் வாழ்த்தையும் மூத்தோரின் நற்சொல்லையும் விழைகிறேன்” என்றான். அவையிலிருந்த அனைவரும் எழுந்து நின்று தங்கள் குடிக்கோல்களையும் வாள்களையும் தூக்கி வாழ்த்துக்கூவினர். மங்கலப்பொருட்கள் எதற்கும் படையில் ஒப்புதல் இல்லாமையால் வாழ்த்தொலி மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அரவான் ரோகிணியின் கை பற்றி நிலத்தில் நெற்றிதொட விழுந்து வணங்கினான்.

மீண்டும் கொம்போசை எழுந்தது. சகதேவன் “இளையோர் அவை அகல்க!” என்றான். பாண்டவ மைந்தரும் பிற இளையோரும் அவை நீங்கினர். உத்தரனும் எழுந்தான். இளைய யாதவர் “நீங்கள் இருக்கலாம், இளைய விராடரே. இங்கே நாங்கள் நாளைய படைநகர்வைப் பற்றிய இறுதிமுடிவை எடுக்கவிருக்கிறோம்” என்றார். உத்தரன் அமர்ந்தான். திருஷ்டத்யும்னன் “நமக்கு இனி நேரம் இல்லை. இப்போதே நடுநிசி. இன்னும் சில நாழிகைகளில் பொழுது விடியும். நாளை பகல் முழுக்க படைகளை அமைக்கவே தேவைப்படும். அனைத்து முடிவுகளும் இன்றே எடுக்கப்படவேண்டும். நாளை கௌரவர் படைகளிலிருந்து போர் அறிவிப்பு எழும்போது நாம் ஒருக்கமாக இருக்கவேண்டும்” என்றான்.

பீமன் “நமது சூழ்கை என்ன என்று இளைய பாஞ்சாலர் வகுத்துள்ளார் என்றால் முன்வைக்கட்டும்” என்றான். திருஷ்டத்யும்னன் “நாளைமறுநாள் நாம் முதற்செருகளத்தை சந்திக்கிறோம். எதிரியின் படைவல்லமை மட்டுமே இப்போது நமக்கு தெரியும். அவர்களின் உளவிசை நாம் இன்னும் அறியாதது. அவர்களின் கருதல்பிழைகளும் சூழ்கைப்பிழைகளும் முதற்போரிலேயே தெரியவந்துவிடும். உண்மையில் அதன் பின்னரே நாம் மெய்யாக போர்புரியத் தொடங்குகிறோம். முதற்போரில் முதன்மைப் படைவீரர்கள் முன்னணியில் நின்று பொருதும் வழக்கம் இல்லை. படைகளை மதிப்பிட்டபடி அவர்கள் பின்னணியில் நின்றிருப்பார்கள்” என்றான்.

“வெம்மையை அறியும்பொருட்டு மெல்ல தொட்டுநோக்குவதே முதல்நாள் போர் என்பார்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். “என் படைசூழ்கை அதனடிப்படையிலேயே அமைந்துள்ளது. முதல்நாள் நாம் அமைக்கவிருக்கும் படை மாண்டூக்யம். நான்கு கால்களை நன்கு பரப்பி மிக மெல்ல எதிரியை நோக்கி செல்கிறோம். கூடவே பெரிய விழிகளால் முப்புறமும் கூர்ந்து நோக்குகிறோம். தேவையான அனைத்தையும் அறிந்துகொள்கிறோம். நாம் நோக்குகிறோம் என்று அவர்கள் அறிவதுமில்லை. தவளையை நோக்கினால் அது கல்லென்றே தோன்றும். அதனால் விரைவுகொள்ளலாகுமா என ஐயம் எழும். ஆனால் தவளை தேவையென்றால் தாவும். எதிரி தொடுதொலைவில் வந்தால் சற்றும் எதிர்பாராத கணத்தில் நாவை எய்து கொய்தெடுத்து மீளும். முதல்நாள் போரில் ஒரேயொரு வலுவான எதிரியை வென்று மீண்டால்கூட நம் படைகளை அது ஊக்கமூட்டும். மறுநாள் புத்தெழுச்சியுடன் கிளம்பிச் செல்லச் செய்யும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.

“தவளையின் கால்கள் என அர்ஜுனரும் பீமசேனரும் சாத்யகியும் விராடரும் அமைக! விழிகள் என துருபதரும் யுதிஷ்டிரரும் கூர்கொள்க! நாவென நான் நிற்பேன். விரைந்தெழுந்து நீண்டு கௌரவப் படைப்பிரிவுக்குள் ஊடுருவி அதே விரைவில் மீள்வேன். என் கொடுக்கில் ஓர் இரை சிக்குமென்று உறுதியளிக்கிறேன்” என அவன் தொடர்ந்தான். “ஆனால் மிகுவிரைவுப் புரவிகள் கொண்ட படை நமக்கு தேவை. மலைச்சரிவில் பயின்றவர்களாக அவர்கள் இருக்கவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவர்களை தெரிவுசெய்துள்ளேன். விராடகுடிப் படைகள் குறுகிய தொலைவுக்கு மிகுவிரைவில் செல்லும் பயிற்சி கொண்டவை” என்றான் திருஷ்டத்யும்னன். “விராடபுரியின் நிலமும் புரவிகள் விரைவை பழகுவதற்குரியது. முதல்நாள் போரில் மையமென அமையவேண்டியவர் விராடரே.”

“ஆம், இதுவே சிறந்த படைசூழ்கை. இவ்வாறே அமைக!” என்றார் யுதிஷ்டிரர். “இளைய யாதவரின் கருத்தை அறிய விழைகிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். இளைய யாதவர் “நாம் அறியவேண்டியது பாண்டவப் படைகளை அல்ல, பீஷ்ம பிதாமகரைப் பற்றி மட்டுமே” என்றார். “முதல்நாளே நாம் அவர் முன் சென்று நிற்கவிருக்கிறோம். இப்போரின் முடிவை அமைக்கும் மாவீரர்களில் ஒருவர் முன் அவ்வாறு முதற்கணமே சென்று நிற்பதுதான் நமக்கிருக்கும் பேரிடர். அதை குறித்து மட்டுமே பேசுவோம்.”

துருபதர் “நானும் அவ்வண்ணமே எண்ணினேன்” என்றார். “நாளை மறுநாள் போரில் அவர் மெய்யாகவே போர்வெறி கொள்வாரா, கடமைக்கென வில்லேந்துவாரா என்ற ஐயம் என்னுள் அலைகொள்கிறது.” இளைய யாதவர் “நாளைமறுநாள் முதல்நிகழ்வு அரவானின் தற்பலி. அது ஒருவகையில் நன்று. அர்ஜுனனின் இளமைமுகத்தை அறிந்தவர் பிதாமகர். அவர் கண்ணெதிரே அவன் கழுத்தறுத்து விழுவது அவருக்கு நிகழப்போவதென்ன என்பதை காட்டிவிடும். அவர் வாழ்நாளெல்லாம் அஞ்சி தவிர்த்துவந்தது தொடங்கிவிட்டது என்னும் அறிவிப்பு அது. அவர் உளம் நடுங்கும் என நான் எண்ணுகிறேன். கையில் வில்லும் நடுங்குமென்றால் நமக்கு முதல் வெற்றி” என்றார் இளைய யாதவர். “அந்நடுக்கு குறைவதற்குள் நாம் அவரை கைசோரச் செய்தாகவேண்டும். அவருக்கு முன் நம் இளமைந்தர்களே படைகொண்டு செல்லட்டும்.”

திருஷ்டத்யும்னன் “ஆனால் நம் மைந்தர்…” என்று தயங்க துருபதர் “அது உகந்தது அல்ல. அங்கே அறம் உணராத சகுனியும் ஜயத்ரதனும் உள்ளனர். அஸ்வத்தாமனும் வஞ்சமென்று வந்தால் அனைத்து எல்லைகளையும் கடப்பவர். நம் மைந்தர் சிலர் களம்பட்டால் அதன் விளைவுகள் கணிக்கக்கூடியவை அல்ல. படையினர் உளச்சோர்வடையக்கூடும். பாண்டவர்களேகூட அத்துயரால் நிலையழிந்துவிடுவதும் ஆகும்” என்றார். இளைய யாதவர் “ஆம், அதையும் எண்ணித்தான் ஆகவேண்டும்” என்றார். சாத்யகி “அவ்வண்ணமென்றால் பாண்டவ மைந்தர் அல்லாத இளையோர் செல்லட்டும்” என்றான். “அவர்களுக்கு பின்துணை என நாம் நிற்போம். எதிரி அம்புகளில் இருந்து அவர்களை காப்போம். அவர்களைக் கண்டு பீஷ்மரின் உளம்தழையும் என்றால் எழுந்து நின்று அடிப்போம்.”

திருஷ்டத்யும்னன் “அவ்வண்ணமெனில் குலாடர்கள் முன்னிற்கட்டும். முதன்மைப்படைகள் குலாடநாட்டு புரவியர்களே” என்றான். சாத்யகி “ஆம், சங்கனும் ஸ்வேதனும் பெருவீரர்கள்” என்றான். உத்தரன் “எங்கள் புரவிப்படைகளே போதும். முதல்நாள் போரை நாங்கள் நிகழ்த்துகிறோம். நானும் படைமுகப்பில் நிற்கிறேன்” என்றான். “ஆனால்…” என சாத்யகி தொடங்க “யாதவரே, குலாடர் படைமுகப்பில் நிற்கையில் நான் பின்னிற்க இயலாது. நானும் முகப்பில் நிற்பேன்” என்று உத்தரன் உறுதியாக சொன்னான். இளைய யாதவர் “ஒருவகையில் அது நன்று. நாம் பயிலாத கிராதரையும் நிஷாதரையும் முன்னிறுத்தவில்லை. முன்நிற்போர் ஷத்ரியரும் அல்ல. விராடர்களும் குலாடர்களும் சிறுவெற்றிகளை அடைந்தால்கூட ஷத்ரியர் சீண்டப்படுவார்கள்” என்றார். “குலாடர்களும் விராடர்களே. நாங்கள் இப்போரை தொடங்கிவைக்கிறோம்” என்றான் உத்தரன்.

திருஷ்டத்யும்னன் “அவ்வாறே ஆகுக!” என்றபின் யுதிஷ்டிரரிடம் “எனில் உகந்த சூழ்கை முப்புரிவேல். நடுவே உத்தரர். இருபுறமும் ஸ்வேதனும் சங்கனும். நாம் வேலின் பிடி என பின்னால் நீண்டிருப்போம். வேண்டுமெனில் நீட்டிக்குத்தியும் உகந்தமுறையில் சுழற்றி வெட்டியும் முறைப்படி பின்னிழுத்தும் போரிடுவோம்” என்றான். யுதிஷ்டிரர் “முப்புரிவேலுக்கு அவர்கள் என்ன எதிர்சூழ்கை அமைக்கக் கூடும்?” என்றார். “நான் என்றால் மான்கொம்புச் சூழ்கை. மையத்தண்டென பிதாமகரும் கிளைகள் என பிறரும். முப்புரிவேலை கவர்களால் தடுக்கவும் கூர்களால் முறிக்கவும் இயலும்” என்றான். “யானைமருப்பும் நல்ல சூழ்கை. மையத்தில் கவசத்துடன் பிதாமகர். இருபுறமும் கொம்புகளாக துரோணரும் கிருபரும்” என்றார் யுதிஷ்டிரர்.

“பிதாமகரின் உளச்சோர்வு எஞ்சினால் இரு நாழிகை நீடிக்கலாம். சேற்றுக்குத் தயங்கும் யானை என கருதுக! அதற்குள் நம் இளையோர் வென்று முன்சென்றிருக்கவேண்டும்” என்றார். “ஆம், அன்றுமாலை கொண்டாடுவதற்கு சில முதன்மைத்தலைகள் கொய்யப்படவேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். “தெய்வங்கள் உடனிருக்கட்டும்” என்று துருபதர் சொன்னார். “களம்கண்டவர்கள் அறிவர், அறிவும் ஆற்றலும் அங்கு இரண்டாம்நிலையே. வாய்ப்பும் இறையருளுமே முதன்மை.” சாத்யகி “இறை நம்முடன் உள்ளது” என்றான். “ஆம்” என்றார் யுதிஷ்டிரர்.

சகதேவன் கைகாட்ட அவை நிறைவை அறிவித்து நிமித்திகன் எழுந்து கொம்போசை எழுப்பினான். யுதிஷ்டிரர் களைப்புடன் எழுந்து கைகூப்பி பின்னாலிருந்த சகதேவனிடம் ஏதோ சொன்னபின் வெளியே நடந்தார். சகதேவனும் நகுலனும் அவரை தொடர்ந்தனர். பீமன் கைகளை பின்னால் கட்டியபடி வெளியே சென்றான். இளைய யாதவர் தன்னருகே வந்த சாத்யகியிடம் பேசியபடி செல்ல திருஷ்டத்யும்னன் துருபதரை அணுகி சொல்லுரைத்தான். அவர் அவன் தோளைத்தொட்டு செவிகொடுத்தபடி வெளியேறினார். அர்ஜுனன் மட்டும் அந்தப் பீடத்தில் தனியே அமர்ந்திருந்தான்.

நிஷாதஅரசின் ஹிரண்யநாபனும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவும் உத்தரனின் தோளைத் தொட்டு “வரவில்லையா?” என்றனர். “ஆம், வரவேண்டும்” என்றான் உத்தரன். அர்ஜுனன் அருகே சென்று ஏதேனும் சொல்லவேண்டும் என அவன் விழைந்தான். ஹிரண்யநாபன் “அந்த நாகனுக்கு வேறு வழியில்லை. அவன் தந்தைக்கென உயிர்கொடுத்தாகவேண்டும். படைமுகம் நின்றால் மறுபக்கம் திரண்டுள்ள தன் குடியினரை அவன் கொல்லவேண்டியிருக்கும்” என்றான். ஹிரண்யபாகு “வருக, விராடரே!” என வெளியே நடந்தான். அவை முழுமையாகவே ஒழிந்துவிட்டிருந்தது. அர்ஜுனன் இருக்கையில் உடல்தொய்ந்து தலைசரிந்து விழிமூடியதுபோல் அமர்ந்திருந்தான். உத்தரன் ஹிரண்யபாகுவுடன் வெளியே சென்றான்.

முந்தைய கட்டுரைஅச்சிதழ்கள், தடம்
அடுத்த கட்டுரைஇரா முருகன், என்.எஸ்.மாதவன் -கடிதம்