‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67

tigபீஷ்மரின் குடில் முற்றத்துக்கு வந்ததும் சகதேவன் “நாம் மாதுலர் சல்யரை சந்திக்கவேண்டும். பிதாமகர் பால்ஹிகரையும் இன்னும் சந்திக்கவில்லை” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், அவர்களிடம் நம் எண்ணத்தை நாம் முழுமையாக சொல்லவில்லையா?” என்றார். சகதேவன் திரும்புவதற்குள் அஸ்வத்தாமன் அருகே வந்து “மத்ரநாட்டரசர் சல்யர் தங்களுக்காக இன்னொரு குடிலில் காத்திருக்கிறார், அரசே. பிறருடன் சேர்ந்து தங்களை சந்திக்க அவர் விரும்பவில்லை. அந்நிரையில் தான் இல்லை என்று மறுத்துவிட்டார்” என்றான். “ஆம், அதுவே முறை” என்றார் யுதிஷ்டிரர்.

அஸ்வத்தாமன் அவர்களை யானைத்தோல் இழுத்துக் கட்டப்பட்ட கூடாரத்திற்கு அழைத்துச் சென்றான். வாயிலில் மத்ரநாட்டு இளவரசர்கள் ருக்மாங்கதனும் ருக்மரதனும் நின்றிருந்தார்கள். யுதிஷ்டிரர் அணுகியதும் அவர்கள் கைகூப்பியபடி வந்து வணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் அரசருக்கு நல்வரவு. இத்தருணம் மூதாதையர் மகிழ்வதற்குரியது. தந்தை தங்களுக்காக காத்திருக்கிறார்” என்றார்கள். யுதிஷ்டிரர் “ஆம், மீண்டும் குருதிச்சுற்றத்தினருடன் ஒரு தருணம்… தெய்வங்கள் உடனிருக்கட்டும்” என வாழ்த்தினார். “வருக!” என அவர்கள் உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

குடிலுக்குள் மான்தோலில் சல்யர் அமர்ந்திருந்தார். யுதிஷ்டிரர் கைகூப்பியபடி உள்ளே சென்று நிலம்படிய வணங்கினார். “நீ தேடிவந்தது நிறைவளிக்கிறது, மைந்தா. உனக்கு நன்று நிகழ்க! நீ வெல்க!” என்றார் சல்யர். பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் அவரை வணங்கி வாழ்த்து கொண்டார்கள். யுதிஷ்டிரர் “போருக்குமுன் மூத்தோர் வாழ்த்து அமையவேண்டும் என விழைந்தேன். அது நிகழ்ந்துள்ளது. இனி எனக்கு உளக்குலைவே இல்லை” என்றார். சல்யர் “நீ முறைதேர்பவன் என அறிவேன்” என்றார். அவர் உள்ளூர நிலைகுலைந்திருப்பதை உத்தரன் கண்டான். அவர் மேலும் ஏதோ பேச விழைந்தார். அதை உடனே தவிர்த்தார்.

அதை உணர்ந்தவர்போல யுதிஷ்டிரர் “மூத்தவரே, நீங்கள் உங்கள் நாட்டுக்கும் குடிக்கும் உகந்த முடிவை எடுத்ததில் எனக்கோ இளையோருக்கோ எந்த உளவிலக்கும் இல்லை. அரசன் எந்நிலையிலும் அரசன் என்றே எண்ணம்கொள்ளவேண்டும் என நூல்கள் சொல்கின்றன. தாங்கள் பிற அனைத்தையும்விட நாட்டுநலம் நாடியதில் நான் பெருமையே கொள்கிறேன்” என்றார். சல்யர் முகம் மலர்ந்து “ஆம், நான் நாடியது மத்ரத்தின் நன்மையையே. இன்று நான் ஷத்ரியப் பேரவையில் மூத்தோன் என அமர்ந்திருப்பது அம்முடிவால்தான். இப்போருக்குப் பின் எவரும் நாங்கள் ஷத்ரியர்கள் என்றால் மாற்றுரைக்க மாட்டார்கள்” என்றார்.

பீமன் “அத்துடன் நீங்கள் உங்கள் உள்ளத்துக்கு உகந்தவனின் உடனிருக்கிறீர்கள் எனும் நிறைவும் உடனுள்ளது” என்றான். சல்யர் “ஆம்” என்றதுமே பீமன் குறிப்பது பிறிதொன்று என உணர்ந்துகொண்டு புருவம் சுருங்க ஏறிட்டு நோக்கினார். புரியாமல் உத்தரன் அவர்களிருவரையும் மாறிமாறி நோக்கினான். யுதிஷ்டிரருக்கும் அங்கே நிகழ்ந்தது புரியவில்லை. அவர் “ஆம், துரியோதனன் மூத்தவரின் உள்ளத்தை கவர்ந்தது புரிந்துகொள்ளத் தக்கதே” என்றார். சல்யர் பீமனிடம் “நீ சொல்வது புரியவில்லை” என்றார். “நீங்கள் இங்குதான் இருக்கமுடியும். உங்கள் அம்புகள் அவரை எதிர்த்து எழவியலாது” என்றான் பீமன். “அறிவிலி… நீ சொல்வது என்னை மட்டும் அல்ல…” என்றார் சல்யர். பீமன் “ஆம்” என்றான்.

சல்யர் தளர்ந்தார். பெருமூச்சுவிட்டு “ஆம்” என்றார். மீண்டும் மூச்செறிந்து “ஆம்” என்றார். யுதிஷ்டிரர் புரியாமல் பீமனை நோக்கிவிட்டு “நீ மாதுலரிடம் முறை மீறி ஒன்றும் சொல்லவில்லை என்று எண்ணுகிறேன், இளையோனே” என்றார். “இல்லை, அவன் உரைத்தது முறையே” என்றார் சல்யர். பின்னர் விழிதூக்கி பீமனை நோக்கி “ஆம், நீ எண்ணுவதே உண்மை. அதை நானே என்னிடம்கூட இதுவரை சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் அதற்காக நான் நாணவில்லை. மானுடர் அனைவரும் என்னைப் போன்றவர்களே” என்றார். பீமனும் மெல்ல முகம் கனிந்து “மெய்தான்” என்றான்.

அர்ஜுனன் “களத்தில் அங்கரை நான் எதிர்க்கவேண்டியிருக்கும், மாதுலரே” என்றான். “ஆம்” என சொல்லி கூர்ந்து நோக்கினார் சல்யர். “அங்கர் களம்புகுந்தால் அவருடைய விற்திறனுக்கு நிகராக இங்கே தேர்தெளிக்க எவருமில்லை. உங்களிடம் கௌரவ மூத்தவர் அதற்காக கோரக்கூடும்” என்றான். சல்யர் சீற்றத்துடன் “நானா? நான் ஷத்ரியன்…” என்று சொல்ல “ஆம், ஆனால் தேர்வலன் வில்லவனுக்கு நிகர்நின்றாகவேண்டும் என்பார்கள். அத்துடன் அவன் வில்லவனின் உள்ளறிந்தவனாக இருக்கவேண்டும். வில்லவனின் நலத்தை அனைத்துக்கும் மேலாக நாடுபவனாகவும் அமையவேண்டும்” என்றான் அர்ஜுனன்.

சல்யர் முகத்தை திருப்பிக்கொண்டார். “நீங்கள் தேர்தெளிவித்தால் வில்லேந்திய அங்கரை வெல்வது கடினம்” என்றான் அர்ஜுனன். “ஆனால் நான் வெல்வேன் என நம்புகிறேன். என்னுடன் அறமெனும் ஆற்றல் உள்ளது. பாரதவர்ஷத்தின் ஊழெனும் தெய்வம் உடனுறைகிறது.” அவன் குரல் கூர்கொள்ள “ஆனால் அங்கரின் அம்புகளால் நாங்கள் கொல்லப்படக்கூடும்” என்றான். சல்யர் “அது நிகழாது… அவன்…” என்று சொல்லி நிறுத்திக்கொண்டார். “செஞ்சோற்றுக்கடனுக்காக எங்களைக் கொல்ல அங்கர் துணிவார். அவர் கௌரவ மூத்தவருக்கு சொல்லளித்துள்ளார்” என்றான் அர்ஜுனன்.

சல்யர் ஏதோ சொல்ல நாவெடுக்க அதை தடுப்பவன்போல அர்ஜுனன் மேலும் பேசினான். “அத்துடன் வேறு சில நோக்கங்களும் அவருக்கு இருக்கலாம். அவருள் வாழும் நஞ்சு மாத்ரியின் மைந்தர்களை கொல்லவே விழையும்.” சல்யர் வலி கொண்டவராக தலையை அசைத்தார். “அன்னை குந்தி எனக்கும் மூத்தவருக்கும் அளிக்காத முலைப்பாலை இரு இளையோருக்கும் அளித்தார் என்பதை அறிந்திருப்பீர், மாத்ரரே. அதன்பொருட்டு என்னுள்ளும் மூத்தவர் பீமனின் ஆழத்திலும்கூட வஞ்சம் எஞ்சியிருக்கிறது” என்றான் அர்ஜுனன். “மாத்ரி தன்னிடம் அளித்துப்போன மைந்தருக்காக அன்னை தன்னை முற்றளித்தார். தன் மைந்தர் அனைவரைவிடவும் அவர்களை நெஞ்சோடு சேர்த்தார்.”

“அன்னை மாத்ரி தன் மைந்தரை தங்களை நம்பியும் ஒப்படைத்துச் சென்றார்” என்றான் அர்ஜுனன். “தொல்குடிகளாகிய பால்ஹிகர்களுக்கு தாய்மாமன் தந்தைக்கும் ஒரு படி மேலானவன். மருகன்களைக் கொன்ற தாய்மாமனுக்கு சேர்வது மேலும் கொடிய நரகம்” என்றான் அர்ஜுனன். போதும் என சல்யர் கைகாட்டினார். அர்ஜுனன் அவரை கூர்ந்து நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். சல்யர் மீண்டும் முகம் தூக்கியபோது விழிகள் சிவந்திருந்தன. “நான் செய்யவேண்டியதென்ன?” என்றார்.

“அவர் கையால் இளையோர் இறக்கலாகாது” என்றான் அர்ஜுனன். “நான் அச்சொல்லை அவனிடமிருந்து பெற இயலாது… அவனுக்கும் எனக்கும் இக்கணம் வரை இணக்கம் இல்லை” என்றார் சல்யர். “மேலும்…” என தயங்கி “மேலும் நான் சொன்னதனாலேயே அவன் மேலும் வஞ்சம் கொள்ளவும்கூடும்” என்றார். அர்ஜுனன் “நீங்கள் நேரடியாக சொல்ல இயலாது. ஆனால் சொற்களால் உணர்த்தலாம்” என்றான். “சொல்” என்றார் சல்யர். அவர் முகம் கசப்பும் வலியும் கொண்டு சுளித்திருந்தது. தாடை இறுகி இறுகி அசைந்தது.

“மாதுலரே, தன் குடிகளின்பொருட்டு எவரை கொல்லவும் தெய்வ ஆணை கொண்டவன் ஷத்ரியன் மட்டுமே. சூதர்கள் நாடாளலாம், அப்போதுகூட அவர்களுக்கு ஷத்ரியர்களுக்குரிய உரிமைகளை மரபு வழங்குவதில்லை” என்றான் அர்ஜுனன். சல்யர் “ஆம்” என்றார். “தன்னை ஷத்ரியர் என்று எண்ணிக்கொள்வது அங்கரின் வழக்கம். அவர் சூதரே என நினைவூட்டுக!” என்றான் அர்ஜுனன். சல்யர் “எங்கு?” என்றார். “களத்தில். அவர் அம்புகளை கையில் எடுக்கையில் எல்லாம்” என்றான் அர்ஜுனன். சல்யர் “ஆனால்…” என்றபின் நிறுத்திக்கொண்டார்.

“பெருஞ்செயல் புரிந்து புகழ்கொள்பவர்களின் பிழைக்கொலைகளையும் தெய்வங்கள் பொறுத்தருள்கின்றன. ஆனால் பெருஞ்செயல் என்பது அறத்தின்பொருட்டு இயற்றப்படுவது. நட்பின்பொருட்டோ குருதியின் ஆணையாலோ போரிடுபவன் பெருஞ்செயலாற்றுபவன் அல்ல. பிறருக்குப் பணிபவன் எந்நிலையிலும் ஏவலனே. அதை அவருக்கு சொல்லுங்கள்” என்றான் அர்ஜுனன். சல்யர் “படைமுகத்தில் அவற்றை சொல்வதென்பது…” என தொடங்க “ஆம், உளவிசையை அழிப்பது. சினமெழச்செய்து சித்தம்குலைப்பது. ஆனால் பெருவீரர்கள் அவற்றால் உலைக்கப்படுவதில்லை. காற்று மலைகளை அசைப்பதில்லை” என்றான் அர்ஜுனன். “மாதுலரே, சில படைக்கலங்களை சற்றே கூர்மழுங்கச் செய்வதே அப்படைக்கலங்களை ஏந்துபவர்களுக்கு நல்லது. நீர்க்கப்பட்ட நஞ்சே மருந்தாகிறது” என்றான்.

சல்யர் நெடுநேரம் சரிந்த விழிகளுடன் அசைவிலாது அமர்ந்திருந்தார். பின்னர் கலைந்து நிமிர்ந்து நோக்கி “பெரும்பழி சேர்ப்பது. மூதாதையரும் தெய்வங்களும் உகக்காதது. ஆயினும் செய்கிறேன். என் இளையோள் பொருட்டு” என்றார். கைகளை விரித்து “இவ்வண்ணம் இரு முனைகளில் சிக்காமல் இப்போர்க்களத்தில் எவரேனும் உள்ளனரா? தெய்வங்களே…” என்றார். யுதிஷ்டிரர் அவரை புரியாமல் நோக்கியபின் அர்ஜுனனை பார்த்தார். “நான் இதை தங்கள் சொல்லுறுதியாக கொள்கிறேன், மாதுலரே” என்றபின் அர்ஜுனன் எழுந்துகொண்டான். சல்யர் அசைவிலாது அமர்ந்திருந்தார்.

அவர்கள் மீண்டும் வணங்கி வெளியே செல்லும்போது யுதிஷ்டிரர் “என்ன சொன்னாய், இளையோனே? உங்கள் நடுவே நிகழ்ந்த உரையாடல் எனக்கு புரியவில்லை” என்றார். புன்னகைத்த அர்ஜுனன் “அதை புரிந்துகொள்ளும் கரவு உங்களுக்கில்லை, மூத்தவரே” என்றான். சகதேவன் “அவர் சொன்ன அச்சொல் நன்று. ஆனால் அது எங்கள் பொருட்டென்பது நாணச்செய்கிறது” என்றான். அர்ஜுனன் பீமனிடம் “மூத்தவரே, அவர் தன் சொல்லை கடைப்பிடிப்பாரா? போர் என்பது மெல்லுணர்வுகள் மழுங்கி இருள்தெய்வங்கள் மேலெழும் வெளி” என்றான்.

பீமன் புன்னகைத்து “உறுதியாக செய்வார். ஏனென்றால் அவர் இயல்பிலேயே அதை செய்யத்தான் விழைவார். அவ்வுறவு அத்தகையது” என்றான். புன்னகை விரிய “இப்போது அப்பழியை நம் மீது ஏற்றிவைக்க நாம் வாய்ப்பளித்திருக்கிறோம்” என்றான். யுதிஷ்டிரர் “என்னதான் பேசிக்கொள்கிறீர்கள், அறிவிலிகளே?” என்று கூவினார். அர்ஜுனன் “இதை புரிந்துகொள்வதை விட்டுவிடுங்கள், மூத்தவரே” என்றான். பீமன் “அவ்வுறவின் ஆயிரம் பல்லாயிரம் முட்களில் ஒன்றுகூட இதுவரை எழுந்திருக்காது, இளையோனே. ஏனென்றால் அவர்கள் தனியாக சந்தித்துக்கொண்டதே இல்லை. இப்போது போர்நடுவே ஒரு தேருக்குள் தனித்திருக்கப்போகிறார்கள். சூழ்ந்து கொந்தளிக்கும் படைப்பெருக்கு ஒரு மாபெரும் திரை. வந்தணையவிருக்கும் இறப்புக்கான வாய்ப்பு அனைத்துத் தடைகளையும் விலக்குவது” என்றான்.

“அவர்கள் அணுக்கமாகக் கூடும்” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் உறவுகளில் முட்களெழுவதே மிகுதி” என்றான் பீமன். “உங்களுள் உள்ள நஞ்சு அச்சுறுத்துகிறது, மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “போதும்! இனி இந்தப் புரியாப் பேச்சை நாம் தொடரவேண்டியதில்லை” என்றார் யுதிஷ்டிரர். “நாம் இன்னமும் மூத்த பால்ஹிகரை சந்திக்கவில்லை.” அர்ஜுனன் “அதையும் அஸ்வத்தாமனிடமே கேட்போம்” என்றான்.

tigயுதிஷ்டிரர் கையசைத்து அழைக்க அவர்களை அணுகி வந்து நின்ற அஸ்வத்தாமன் “பால்ஹிகர் காலையில் இங்கிருந்தார். நாம் வந்துகொண்டிருக்கையில் எங்கோ சென்றுவிட்டார். தேடி கொண்டுவரும்படி பூரிசிரவஸை அனுப்பியிருக்கிறோம்” என்றான். யுதிஷ்டிரர் “எங்கு சென்றார்?” என்றார். “அவர் அங்கிருந்தே ஓர் யானைமேல்தான் வந்தார். அதன்மேலேயே பெரும்பாலான பொழுதுகளில் இருக்கிறார். அதன்மேலேயே துயில்கொள்வதுமுண்டு என்கிறார்கள்” என்றான் அஸ்வத்தாமன். யுதிஷ்டிரர் புன்னகைத்தார். அஸ்வத்தாமனும் புன்னகைத்து “கவச உடைகளையும் கழற்றுவதில்லை” என்றான்.

அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். எவ்வளவு நேரம் நின்றிருக்க முடியும் என உத்தரன் வியந்தான். தொலைவில் ஓசை கேட்டதும் அஸ்வத்தாமன் “வருகிறார்” என்றான். “எப்படி தெரிகிறது?” என்றார் யுதிஷ்டிரர். “அவரை படைவீரர்கள் வரவேற்கும் ஓசை கேட்கிறது. அவர் இங்குள்ள படைகளில் ஒரு போர்த்தெய்வமும் மூதாதைத்தெய்வமுமாக ஆகிவிட்டார். அவர்பொருட்டு மட்டுமே இப்படையில் கலைவோசை எழும். அவர் செல்லும் வழியை அங்கே எழும் களிப்புக் கூச்சலும் நகைப்பும் வாழ்த்துரையுமே காட்டும்” என்றான் அஸ்வத்தாமன்.

உத்தரன் பால்ஹிகரைப் பற்றி அவன் கேட்ட செய்திகளினூடாக உருவாக்கிக்கொண்ட ஓவியத்தை காணத்தொடங்கினான். சுண்ணமலை போன்ற பேருரு. பளிங்குவிழிகள். விண்ணேகிய மூதாதைநிரையில் இருந்து இறங்கிவந்தவர். அவன் உடல் மெய்ப்பு கொண்டபடியே இருந்தது. யுதிஷ்டிரர் “நான் அவர் உருவை மீளமீள நினைவில் வனைந்தபடியே இருந்தேன், அஸ்வத்தாமரே. அனைத்தும் முறையாக இருந்திருந்தால் அவர் அடி பணிபவர்களில் முதல்வனாக நானே இருந்திருப்பேன்” என்றார். “எத்தகைய நற்பேறு! நான்கு தலைமுறை முந்தைய மூதாதை ஊனுடலுடன் வந்திறங்கியிருக்கிறார். பிரதீபரும் சந்தனுவும் தேவாபியும் சித்ராங்கதரும் விசித்திரவீரியரும் வாழும் சொல்வெளியில் இருந்து முளைத்தெழுந்திருக்கிறார்.”

அஸ்வத்தாமன் “இங்கு பெரும்பாலானவர்களுக்கு இன்னமும்கூட நம்பமுடியாத விந்தைதான்” என்றான். “உண்மையில் ஏராளமானவர்கள் இவர் தொல்மூதாதையான பால்ஹிகர் அல்ல என்றே எண்ணுகிறார்கள். ஒரு பிழைப்புரிதல், ஆனால் இனியது என்பதே அவர்களின் எண்ணம்.” யுதிஷ்டிரர் “அவர் வந்திருக்கும் செய்தியை உபப்பிலாவ்யத்தில் ஒற்றர் சொல்லி அறிந்தபோது முதற்கணமே என் உள்ளம் ஏற்றுக்கொண்டுவிட்டது. சில நிகழ்வுகள் அவற்றிலுள்ள விந்தையாலேயே நம்பும்படி ஆகின்றன. இது அவற்றிலொன்று” என்றார். “அவரை எவ்வகையிலேனும் வந்து சந்திக்கவேண்டுமென விழைந்தேன். ஆனால் ஒன்று இன்னொன்று என நிகழ்வுகள் போர்நோக்கி வந்துகொண்டிருந்தன.” பெருமூச்சுடன் “இதோ குலமூதாதை முன் எவரோ என நின்றுகொண்டிருக்கப்போகிறேன்” என்றார்.

அஸ்வத்தாமன் “அவருக்கு இங்குள்ள எவரும் ஒரு பொருட்டே அல்ல. எவரையும் அவர் அடையாளம் கண்டுகொள்வதில்லை” என்றான். யுதிஷ்டிரர் அவன் சொல்வதை புரிந்துகொள்ளவில்லை. வலுத்துவந்த ஓசையைக் கேட்டு அங்கே நோக்கிக்கொண்டிருந்தார். புரவியில் தூசெழ விரைந்துவந்து மூச்சுவாங்க இறங்கிய பூரிசிரவஸ் யுதிஷ்டிரரை வணங்கிவிட்டு அஸ்வத்தாமனிடம் “பிதாமகர் யானைமேல் வந்துகொண்டிருக்கிறார். படை எல்லையை கடந்து சென்றுவிட்டார். பின்னால் ஆளனுப்பி பிடித்துவரச் செய்துள்ளேன்” என்றான். அஸ்வத்தாமன் “நன்று” என்றான். பூரிசிரவஸ் மெல்ல வியர்வையுடன் தளர்ந்து “அவரை கட்டுப்படுத்துவது எளிதல்ல” என்றான்.

படைகளை பிளந்ததுபோல கவசயானை தோன்றியது. “அது அங்காரகன் அல்லவா?” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், அரசர் அதை அவருக்கு அளித்துவிட்டார். அவரை யானையும் ஏற்றுக்கொண்டுவிட்டது. அவர்கள் ஒரே பித்தில் வாழ்கிறார்கள்” என்றான் பூரிசிரவஸ். பீமன் “யானை பித்தை விரும்புவது” என்றான். வெயிலில் வெள்ளியென ஒளிவிட்ட கவசங்களுடன் அங்காரகன் மெல்ல அசைந்து வந்தது. அதன்மேல் வண்ணங்களாக கௌரவப் பெரும்படை நெளிந்தது. ஒரு சிறு குளம் அசைந்து வருவதுபோலிருந்தது. அதன்மேல் முழுக்கவச உடையணிந்து பால்ஹிகர் அமர்ந்திருந்தார். யானைமேல் இருக்கையிலும் அவருடைய பேருருவம் திகைப்பூட்டுவதாக இருந்தது.

அவர்களின் உள்ளத்தை உணர்ந்தவன்போல அஸ்வத்தாமன் “அவருக்காக கவசங்கள் வார்க்கப்பட்டன. அவை நிலத்திலிருக்கையில் கவசமெனும் எண்ணம் எவருக்கும் வருவதில்லை” என்றான். பால்ஹிகரின் முன்னால் யானையின் மத்தகம் மீதிருந்த பெரிய கதையை பார்த்த யுதிஷ்டிரர் “அது அஞ்சனை மைந்தரின் கதை அல்லவா?” என்றார். “ஆம் அரசே, அதை அவர் பெயர்த்து தூக்கிக் கொண்டார். தன்னுடன் யானைமேல் ஏற்றிக்கொண்டு இங்கே வந்தார். எப்போதும் உடன் வைத்திருக்கிறார். அவருக்கு ஒரு பொருள்மேல் பற்று எழுந்தால் இரவும் பகலும் அது அவருடன் இருக்கும்” என்றான் பூரிசிரவஸ்.

பால்ஹிகர் யானைமேல் ஒரு வெண்சுடர் என அமர்ந்திருந்தார். கவச உடையில் வானின் ஒளி நெளிந்தது. அவர்கள் அருகே வந்துகொண்டிருக்க பூரிசிரவஸ் “இங்கிருந்தே நீங்கள் வணங்கலாம். அவர் அறிந்து வாழ்த்துரைக்க வழியில்லை. அவர் வாழ்த்தினார் என்று கொள்ளவேண்டியதுதான்” என்றான். யுதிஷ்டிரர் “அது போதும், நான் அவரை வந்து வணங்கிச்சென்றேன் என்பதே எனக்கு நிறைவளிப்பது” என்றார். யானை அருகணைந்ததும் யுதிஷ்டிரர் தலைக்குமேல் கைகூப்பி “வாழ்த்துக, மூதாதையே!” என்று கூவினார். இளையவர்களும் அவ்வாறே வணங்கினர். பால்ஹிகர் அவர்களை நோக்கியபடி கடந்துசென்றார். அங்கிருந்த பல்லாயிரம் படைவீரர்களில் அவர் எவர் முகத்தையும் தனித்தறிந்ததாக தெரியவில்லை.

யானை கடந்துசென்றதும் யுதிஷ்டிரர் “பேருருவர்! ஹஸ்தியின் உடல் கொண்டவர்!” என வியப்புடன் சொன்னார். “நான் அவர் இத்தனை பெரிய உடல்கொண்டவர் என எண்ணியிருக்கவே இல்லை. சூதர்களின் மிகையாக்கம் என்றே எண்ணினேன்.” அவர்கள் ஐவருமே பால்ஹிகரின் பெருந்தோற்றத்தால் உளவிம்மிதம் கொண்டிருந்தனர். யுதிஷ்டிரர் “தெய்வமெழுகை என்றல்லாமல் வேறெந்த சொல்லாலும் விண்டுரைக்க இயலாது!” என்று நடுங்கும் குரலில் சொன்னார். சொல்லி ஆற்றாமல் “எந்தையரின் மண்வடிவம்” என்றார். குரல் இடறியது. உத்தரன் அவர் முகத்தை நோக்கினான். அவர் அழுதுகொண்டிருப்பவர்போல தோன்றினார்.

அங்காரகன் திரும்பி வருவதை பூரிசிரவஸ்தான் முதலில் பார்த்தான். “அவர் மீண்டு வருகிறார்” என்றான். “ஆம், திரும்பி வந்த இடத்துக்கே செல்கிறார்” என்றான் அஸ்வத்தாமன். அங்காரகன் வந்து அவர்களின் அருகே நின்றது. முதலைவால் என செதில்கவசம் அணிந்த அதன் பெரிய துதிக்கை நீண்டு பீமனை நோக்கி மோப்பம் பிடித்தது. பால்ஹிகர் மேலிருந்தபடி தன் கவசமணிந்த கையை நீட்டி பீமனைச் சுட்டி “பெருந்தோளன்!” என்றார். “உன்னை நான் முன்னரே பார்த்திருக்கிறேன்.” பீமன் கைகூப்பி நின்றிருக்க யுதிஷ்டிரர் “அவன் தங்கள் மைந்தன், மூதாதையே. உங்கள் பெயர்மைந்தரின் மைந்தனாகிய இவன் பெயர் பீமசேனன். நான் இவன் மூத்தவனாகிய யுதிஷ்டிரன்” என்றார். அச்சொற்களைக் கேளாதவராக பால்ஹிகர் “பெருந்தோளன்!” என்று மகிழ்வுடன் சொன்னார். பீமன் “வாழ்த்துக, தந்தையே!” என்றான். பால்ஹிகர் “நீ உன் உடன்பிறந்தாரை தூக்கிக்கொண்டு காட்டில் சென்றுகொண்டிருந்தாய். எங்கே? ஆம், காட்டில். நான் ஒரு யானையாக காட்டுக்குள் நின்று உன்னை பார்த்தேன். நீ என்னை பார்த்தபின் கடந்துசென்றாய்” என்றார். “அதன்பின் பன்றிவடிவன் ஒருவன் என்னிடம் வந்தான். அவன் என்னிடம் கேட்டபோது நான் சொன்னேன், நான் உன்னை கொல்வேன் என்று. அல்லது…” அவர் குழம்பி அவர்களை மாறி மாறி நோக்கி “அல்லது அவன் என்னை கொல்வான் என்று சொன்னேனா?” என்றார். பீமன் “இரண்டும் ஆகலாம், மூதாதையே” என்றான்.

அவர் அவன் சொற்களையும் செவிகொள்ளவில்லை. “பெருந்தோளன்… ஆம், நான் உன்னை பார்த்தேன்” என்றார். யானை துதிக்கை தூக்கி பிளிறியது. இரும்புத்திரளுக்குள் இருந்து அவ்வோசை உலோகம் உரசுவதுபோல் எழுந்தது. பால்ஹிகர் “செல்வோம்” என்றபின் அதை தட்டினார். அது முன்னால் சென்றது. அவர்கள் அவரை தொழுத கைகளுடன் நோக்கி நின்றனர். யானையின் அசைவு அது அணிந்திருந்த உலோகக் கவசங்களில் நிகழ்வது நெஞ்சுதுணுக்குறச் செய்வதாக இருந்தது. பின்னர் அவ்வசைவே யானை என்று தோன்றியது.

பெருமூச்சுடன் மீண்ட யுதிஷ்டிரர் “மந்தா, அவர் சொன்னதென்ன?” என்றார். “எனக்கும் புரியவில்லை, மூத்தவரே” என்றான் பீமன். அஸ்வத்தாமன் “அவர் வாழும் பித்துலகில் சொற்களுக்கெல்லாம் வேறு பொருள்” என்றான். பூரிசிரவஸ் “வணங்குகிறேன், அரசே” என விடைகொண்டு புரவியிலேறி பால்ஹிகரின் பின்னால் சென்றான். அவர்கள் தங்கள் தேர்நோக்கி செல்கையில் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. பீமன் தலைகுனிந்து கால்களால் மண்ணை கீறியபடியே நடந்தான். தேர்களின் அருகே வந்தபின் உடன் வந்த அஸ்வத்தாமனிடம் அவர்கள் விடைபெற்றனர்.

தேரிலும் நகுலனும் சகதேவனும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். எதிரே பாண்டவப் படை அணுகுவதை கண்டபின் நகுலன் “பிதாமகர் நம் மூத்தவர் கையால் கொல்லப்படுவாரா?” என்றான். சகதேவன் மறுமொழி சொல்லவில்லை. “ஆம், கொல்லப்பட்டாகவேண்டும். குலாந்தகன் என்று அவரை சொல்கிறார்கள். அவர் கொள்ளும் குருதி அங்கிருந்தே தொடங்கும்” என்றான் நகுலன் மீண்டும். சகதேவன் அதை கேட்டதாக தோன்றவில்லை. நகுலன் பெருமூச்சுடன் “அவரை கொல்ல அவருடைய கை எழவேண்டும். நெஞ்சு துணியவேண்டும்… அதுவே தொடக்கம்” என்றான்.

தேர்கள் நின்றன. நகுலன் இறங்கியபடி “அந்த மாபெரும் கதாயுதம் கௌரவ மூத்தவர் பிறந்தபோது உடன் கிடைத்தது என்பார்கள். அவரை அது கொல்லும் என்றும், போரில் அவருக்கு உடன்பிறந்தான் என துணைநின்று அவருடைய முதன்மை எதிரியை அது வெல்லும் என்றும் இருபாற்பட்ட கதைகள் உள்ளன. அதை பீடத்திலிருந்து எவரும் அசைத்தெடுக்கவியலாது என்றும் ஆகவே அக்கதைகள் எல்லாம் பொருளற்றவை என்றும் அதை கௌரவமூத்தவர் மும்முடி சூடி அரசமர்கையில் அரியணைமுன் நிறுத்துவார் என்றும் காந்தாரர்கள் கூறுவதுண்டு” என்றான். சகதேவன் “ஆம்” என்றான். மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தபின் நகுலன் தலையசைத்து சொல்விலக்கிக்கொண்டான். உத்தரன் இறங்கியதும் தேர் விலகிச்சென்றது.

முந்தைய கட்டுரைபெருந்தேவி,போகன்,பால்நிலைச் சீண்டலின் நகைச்சுவை
அடுத்த கட்டுரைதுன்பக்கேணி