கௌரவப் படையின் முகப்பு அஸ்வத்தாமனால் ஆளப்பட்டது. தொலைவிலேயே அவனும் இரு படைத்தலைவர்களும் படை முன்னணிக்கு வந்து கைகூப்பியபடி நிற்பதை பார்க்கமுடிந்தது. யுதிஷ்டிரரும் இளையோரும் ஏறிய தேர்கள் செருகளத்தின் செம்மண் பூழியில் சகடத்தடம் பதித்தபடி சென்று கௌரவப் படைகளின் விளிம்பை அடைந்தன. அரசரை வரவேற்பதற்குரிய முழவுகளும் கொம்புகளும் ஏழுமுறை எழுந்தமைந்து ஓய்ந்தன. யுதிஷ்டிரர் கைகளைக் கூப்பியபடி தேரிலிருந்து இறங்கி நடந்தார். கையில் மலர்க்குடலையுடன் அவருக்கு வலப்பக்கம் அர்ஜுனனும் இடப்பக்கம் பீமனும் சென்றனர். தொடர்ந்து வந்த தேரிலிருந்து நகுலனும் சகதேவனும் இறங்கி அவர்களைத் தொடர்ந்து நடக்க சற்று விலகியவனாக உத்தரன் சென்றான்.
அஸ்வத்தாமன் கைகூப்பியபடி நடந்துவந்து குனிந்து யுதிஷ்டிரரின் கால்தொட்டு தலைசூடி “வருக, அரசே! தங்கள் குருதியினரின் இப்படை தங்கள் வருகையால் மகிழ்கிறது. இத்தருணம் மூதாதையருக்கு இனிதாகுக!” என்று முகமனுரைத்தான். யுதிஷ்டிரர் அவன் தலைதொட்டு வாழ்த்தி “வெற்றி கொள்க! நலம் சிறக்க!” என்று நற்சொல் உரைத்தபின் “நான் தொல்முறைப்படி போருக்கு முன் பிதாமகர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்து வாழ்த்துகொண்டு மீளும்பொருட்டு வந்துளேன்” என்றார். அஸ்வத்தாமன் “ஆம், அது அவர்களுக்கும் மகிழ்வளிப்பதாகவே இருக்கும். வருக, தங்களை நானே பிதாமகரின் பாசறைக்கு அழைத்துச் செல்கிறேன்!” என்றான்.
அஸ்வத்தாமனுக்காக தேர் ஒன்று ஒருங்கி நின்றிருந்தது. அவன் தேர்ப்பீடத்தில் ஏறி பாகனுக்கு ஆணையிட்டதும் செம்மண் புழுதி புகையென பின்னால் கிளம்ப சகடங்கள் ஒலிக்க பலகைபாதை மேல் ஏறிக்கொண்டது. பலகைகள் நெரியும் ஒலியும் சகடஒலியுமாக விரைந்து முன்னால் சென்றது. அவனுக்குப் பின்னால் யுதிஷ்டிரரின் தேரும் உத்தரன் ஏறிய தேரும் சென்றன. சகதேவன் “நாம் எதன்பொருட்டு வருகிறோம் என்பதையும் உய்த்துக்கொண்டிருக்கிறார்” என்றான். நகுலன் “ஆம், அதுவும் நன்றே” என்றான்.
பாண்டவப் படைகளின் மையப்பாதையைவிட இருமடங்கு பெரிது கௌரவர்களின் பாதை என்பதை உத்தரன் கண்டான். பாண்டவப் படையைவிடவும் கௌரவப்படை அளவில் பெரியது என்பது அச்சிறு பகுதியின் அளவிலேயே தெரிந்தது. ஒன்றுக்கொன்று எவ்வகையிலும் மாறுபடாத செங்கற்களை அடுக்கி கட்டப்பட்டதுபோல் அந்தப் படை இருப்பதாக உத்தரன் எண்ணிக்கொண்டான். ஒவ்வொரு படைவீரனும் ஒருவன் பிறிதொருவன் போலவே அசைவிலும் நோக்கிலும் முழுமை கொண்டிருந்தான். செல்லச் செல்ல ஒன்றே மீளும் கொடுங்கனவுக்குள் சுழன்றுகொண்டிருப்பதாக உளமயக்கடைந்தான்.
பாண்டவப் படைகளின் கலவை இயல்பு அப்போதுதான் அவன் சித்தத்தை வந்தடைந்தது. குலக்குழுக்களின் வேறுபாடு, முகத்தோற்றங்களின் உடல் வண்ணங்களின் மாறுபாடுகள், படைக்கலங்களின் வகைகள், அணிவகுப்பில் எவ்வகையிலோ நிகழும் சிறிய தனித்தன்மைகள் என பாண்டவப் படை ஒரு பெருந்திரளாகவே தோன்றியது. அவன் எண்ணியதையே சகதேவனிடம் நகுலன் சொன்னான். “இப்படையை பார்க்கையில் நாம் ஒரு மாபெரும் சந்தையை அழைத்து வந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது” என்றான். சகதேவன் “ஆம். அச்சுறுத்தும் ஒழுங்குகொண்ட படை” என்றான்.
சற்று கழித்து “ஒத்திசைவும் ஒற்றை இயல்புமே படையின் ஆற்றல் என்று நமக்கு போர்நூல்கள் கற்பிக்கின்றன. ஆனால் அது எப்போதும் அவ்வாறே இருந்தாக வேண்டுமென்பதில்லை. கைவிரல்களில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அளவிலும் இயல்பிலும் படைத்த தெய்வங்கள் அறிந்த ஒன்று நமது படைகளில் உறையக்கூடும்” என்றான் சகதேவன். நகுலன் “ஆனால் மானுடர் உருவாக்கும் கருவிகள் மானுடக் கைகளைவிட பலமடங்கு விசையும் ஆற்றலும் செயல்முழுமையும் கொண்டவை. அவற்றில் இந்த மாறுபட்ட இயல்புகளின் தொகுப்புத்தன்மை இல்லை” என்றான்.
“ஆம் மானுட உறுப்புகளைக்கொண்டு உருவாக்கும் கருவிகள் அவ்வுறுப்புகளைவிட திறன்மிக்கவை, விசைகொண்டவை. ஆனால் முன்பு வகுக்கப்படாத ஒரு செயலை செய்கையில் கருவிகள் தோற்றுவிடுகின்றன. மானுடக் கைகள் தங்கள் வழியை முற்றிலும் புதிதென சென்று கண்டுகொள்கின்றன. கணந்தோறும் மாற கைகளால் இயலும் கருவிகளுக்கு அத்திறன் இல்லை” என்று சகதேவன் சொன்னான். அத்தருணத்தில் உள்ளம் முன்னும் பின்னுமென அலைவதை தடுத்து அக்காலத்தில் நிற்க அப்பேச்சு அவர்களுக்கு உதவியது என உத்தரன் எண்ணினான். ஆனால் அதை செவிகொள்வதன் நடுவே அவன் உள்ளம் சந்திக்கப்போகும் பிதாமகர்களையும் ஆசிரியர்களையும் எண்ணியது. திரும்பிச்சென்று தன் படைகளுடன் நின்றது.
காவல்மாடங்கள்தோறும் முரசொலி எழுந்து யுதிஷ்டிரரை வரவேற்றது. ஏழு காவல்மாடங்களுக்கு அப்பால் தொலைவில் தெரிந்த துச்சாதனனின் அரவக்கொடியை கண்ட நகுலன் “அருகே பிதாமகர் பால்ஹிகர் இருக்கிறார். அவருடைய கொடி உடன் பறக்கிறது”
என்றான். “அருகில்தான் பீஷ்ம பிதாமகரும் இருக்கிறார் என்பதை கொடிகள் காட்டுகின்றன” என்று சகதேவன் சொன்னான். சல்யரின் கொடியை அதன்பின் அவர்கள் கண்டனர். “பெரும்பாலும் பிதாமகர்களையும் ஆசிரியர்களையும் நாம் ஓரிடத்திலேயே பார்த்துவிடமுடியும்” என்றான் சகதேவன். துரோணரின் கொடியும் கிருபரின் கொடியும் துலங்கலாயின.
“அவர்கள் வெவ்வேறு படைப்பிரிவுகளுக்கு தலைமை தாங்குவதாகத்தானே சொல்லப்பட்டது?” என்றான் நகுலன். “ஆம், ஆனால் அவைசூழ்கையின் பொருட்டு எளிதில் வந்தணையும்படி அண்மையிலேயே அவர்கள் இப்போது நிலைகொண்டிருப்பார்கள். நாம் கிளம்பி வரும் செய்தி உளவுப்புறாக்கள் வழி வந்துசேர்ந்திருக்கும். ஆகவே அனைவரும் ஓரிடத்தில் அமைய அரசர் ஆணையிட்டிருப்பார்” என்றான் சகதேவன்.
அவர்கள் படையணிகளைக் கடந்து யானைத்தோல் கூடாரங்களாலான பாசறைகளின் தொகுப்புக்கு சென்று சேர்ந்தனர். பதினெட்டு கூடாரங்கள் அரைவட்ட வடிவில் அமைந்த முற்றத்தில் தேர்கள் சென்று வளைந்து நின்றன. அஸ்வத்தாமன் முதல் தேரிலிருந்து இறங்கி வணங்கியபடி நிற்க நடுவே இருந்த பெரிய கூடாரத்திலிருந்து பீஷ்மரின் முதல் மாணவர் விஸ்வசேனர் கைகளைக் கூப்பியபடி வெளிவந்தார். யுதிஷ்டிரர் படிகளில் இறங்கி முற்றமென பதிக்கப்பட்டிருந்த பலகைப்பரப்பினூடாக நடந்தார். யுதிஷ்டிரரை அணுகிய விஸ்வசேனர் “பாண்டவ முதல்வரை பீஷ்ம பிதாமகர்பொருட்டு வணங்கி வரவேற்கிறேன்” என்றார். யுதிஷ்டிரர் “பிதாமகரின் தன்னுருவான மாணவருக்கு என் வணக்கம்” என்றார்.
உத்தரன் “ஒருகணம் பிதாமகர் பீஷ்மரே வெளியே வந்து வரவேற்கிறார் என்று எண்ணினேன்” என்றான். நகுலன் “அவர் பிதாமகரின் அணுக்கர். உடனிருந்து உடனிருந்து பிதாமகரின் அனைத்து இயல்புகளையும் பெற்றுக்கொண்டவர்” என்றான். அவர்கள் கைகூப்பியபடி விஸ்வசேனரை அணுகி தலைவணங்கி முகமனுரைத்தனர். அவர் உள்ளே செல்லலாம் என கைகாட்டினார். உத்தரன் சகதேவனும் நகுலனும் உள்ளே செல்ல காத்துநின்று பின் தானும் நுழைந்தான்.
பீஷ்மரின் பாசறை வட்டமாக நடப்பட்ட மூங்கில் தூண்களுக்குமேல் யானைத்தோல் இழுத்துக்கட்டப்பட்டு நான்குபுறமும் வாயில்கள் கொண்டதாக பெரிய கூடம்போன்ற விரிவுடன் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முகப்பில் செந்நிற மரவுரித் திரைச்சீலை தொங்கிக்கொண்டிருந்தது. அதை மெல்ல விலக்கி விஸ்வசேனர் “வருக, அரசே!” என்றார். யுதிஷ்டிரர் உள்ளே நுழைந்து கைதொழுது “வணங்குகிறேன், பிதாமகரே. தங்கள் மைந்தனாக நான் நிகழ்த்தும் பெருஞ்செயலுக்கு வாழ்த்து பெறும்பொருட்டு வந்திருக்கிறேன்” என்றார். உள்ளே உயரமற்ற மரப்பீடத்தில் போடப்பட்ட மரவுரி மீது பீஷ்மர் அமர்ந்திருந்தார். அவருக்கு இருபுறமும் துரோணரும் கிருபரும் மான்தோல் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
பீஷ்மர் வாயை இறுக்கி முகத்தை சற்று மேலே தூக்கியிருந்ததனால் நரைத்த தாடி கொக்கின் பின்னிறகுபோல நீட்டி நின்றது. அவர் தலையசைத்து கைகளால் அருகே வரும்படி அழைத்தார். யுதிஷ்டிரர் பீஷ்மரின் அருகே நின்று எட்டு உடலுறுப்புகளும் நிலம்தொட விழுந்து வணங்கினார். பீஷ்மர் புன்னகையற்ற முகத்துடன் அவர் தலையில் வலக்கையை வைத்து சொல்லில்லாது வாழ்த்துரைத்தார். யுதிஷ்டிரர் எழுந்து கிருபரையும் துரோணரையும் அவ்வாறே வணங்கினார். வாழ்த்துகொண்டு எழுந்து கைகூப்பியபடி நின்றார். பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் சென்று மூவரையும் வணங்கி வாழ்த்து பெற்றனர்.
மூவர் முகங்களிலும் விந்தையானதோர் அமைதி இருப்பதை உத்தரன் பார்த்தான். அவர்கள் மகிழ்கிறார்களா சினங்கொண்டிருக்கிறார்களா அன்றி அத்தருணத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று அறியாது திகைப்பு அடைந்திருக்கிறார்களா என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. யுதிஷ்டிரர் “இத்தருணம் தெய்வங்களை மகிழ்விக்கட்டும். நூல்நெறியின்படி மூத்தோரும் ஆசிரியரும் வாழ்த்துரைத்த பின்னரே போருக்குச் செல்லவேண்டும் என்று அறிந்தேன். நான் முதற்சொல்லை பேசக் கற்றுக்கொண்டது தங்களிடமிருந்துதான். நானும் என் இளையோரும் படைக்கலம் தொட்டு எடுத்தது ஆசிரியர்களாகிய தங்கள் கைகளால். இது எங்கள் வாழ்வின் உச்ச தருணம். இப்போரில் நாங்கள் வெல்லவும் சிறப்புறவும் உங்கள் வாழ்த்துச்சொல் பெறும்பொருட்டு இங்கு வந்தேன்” என்றார்.
பீஷ்மர் “நீ அவ்வாறு வந்தது எனக்கு உள மகிழ்வளிக்கிறது. நெறிகளின்பால் நிற்பவர் எந்நிலையிலும் நிறைவடைவார். நீ அறச்செல்வன் என்பதை உன் செயலால் காட்டினாய். உனக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் எனது நெறியின்படி நான் இப்போது உனது எதிரியாகிய துரியோதனனின் படைத்தலைமைகொண்டு உனக்கு எதிராக போர் வஞ்சினம் உரைத்து இங்கு வந்துள்ளேன். ஆகவே எந்நிலையிலும் நீ வெல்ல வேண்டுமென்ற சொல்லை என் நா உரைக்காது. என் உளம் அதை எண்ணவும் செய்யாது” என்றார். அவர் அதை சொல்லக்கூடும் என உத்தரன் எண்ணியிருந்தாலும் மெல்லிய ஏமாற்றம் அடைந்தான்.
“தங்கள் நெறிகளை மீறவேண்டுமென்று ஒருபோதும் நான் கூறமாட்டேன், பிதாமகரே. நோன்பு என்பதே முழுதுளத்தாலும் கடைபிடிக்கவேண்டிய ஒன்றென்பது நானும் அறிந்ததே. தாங்களும் ஆசிரியர்களும் என் எதிர்தரப்பில் படைக்கலம் கொண்டு நின்றிருக்கிறீர்கள் என்றும் போர்முனையில் நானும் என் இளையோரும் உங்களை எதிர்கொண்டு வென்ற பின்னரே எங்கள் எண்ணத்தை அடையமுடியுமென்றும் அறிவேன். ஆனால் தங்கள் வாழ்த்துரை எனக்கு தேவை. இத்தருணத்தில் அதை எவ்வகையில் தாங்கள் எனக்கு அளிப்பீர்கள் என்று எனக்கு தெரியாது. கல்வியிலும் பட்டறிவிலும் தாங்கள் பெரியவர். அம்முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்” என்றார் யுதிஷ்டிரர்.
முதல் முறையாக பீஷ்மரின் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது. பழுத்த விழிகளில் அப்புன்னகை உருவாக்கிய ஒளியை பார்த்ததுமே யுதிஷ்டிரர் அவ்வாறு தன்னை தேடிவந்தது பீஷ்மருக்கு பெரும் உளநிறைவை அளித்துள்ளதென்பதை உத்தரன் உணர்ந்தான். பீஷ்மர் “இத்தருணத்திற்குரிய சொல் என்ன என்பதை நூல்கற்றும் பல்வேறு களங்களைக்கண்டும் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் நோக்கு ஒழித்து தனியறைக்குள் தன் வாழ்வை நிறைவு செய்த காந்தாரப் பேரரசி அறிந்திருக்கிறார். எப்போதும் பெண்களின் வாயிலேயே சொல்லரசி எழுகிறாள். அவள் சொன்ன சொற்களையே நானும் உனக்கு சொல்கிறேன், பெறுக!” என்றார்.
யுதிஷ்டிரர் பீஷ்மரின் முன் முழந்தாளிட்டு கைகூப்பி “வாழ்த்துக, பிதாமகரே!” என்றார். “அறம் வெல்க! அறம் வெல்க! அறமே வெல்க!” என்றார் பீஷ்மர். யுதிஷ்டிரர் முகம் மலர்ந்து “ஆம், அறம் எதுவென்று நம்மால் முடிவு செய்ய இய்லாது. நாம் நம்பியிருக்கும் அறத்தின் பொருட்டு செயல்படவே கடமைப்பட்டுள்ளோம். எவர் வெல்லவேண்டுமென்று அறமே முடிவு செய்யட்டும். பிதாமகரே, தங்கள் சொற்கள் எனக்கு விண்வாழும் மூதாதையர்நிரையிலிருந்து கிடைத்த வாழ்த்துகள்” என்றார். பின்னர் எழுந்து துரோணர் முன் பணிந்து “உங்கள் சொல், ஆசிரியரே” என்றார். துரோணர் “நான் சொல்லக்கூடுவதும் பிறிதொன்றல்ல, மூத்தவனே” என்றபின் தன் வலக்கையை அவர் தலைமேல் வைத்து “அறம் வெல்க! அறம் வெல்க! அறமே வெல்க!” என்றார்.
அவர் முகத்தில் தெரிந்த தத்தளிப்பை உத்தரன் உணர்ந்தான். தன்னுள் இருந்து அரியதொன்றை குருதி வழிய பிடுங்கி எடுப்பதுபோல சொற்களை அவர் உரைத்தார். கிருபர் எவ்வுணர்ச்சியுமின்றி “அறம் வெல்க! அறம் வெல்க! அறமே வெல்க!” என்று வாழ்த்தினார். துரோணர் பெருமூச்சுடன் நிலைமீண்டார். “மூத்தோனே, பயிற்சியின்றி உன் விரல்கள் நெளிந்துள்ளன. உன் அம்புகள் இலக்கடையா. எப்போதும் உன் வலப்பக்கம் பெருவில்லவன் ஒருவன் நின்றிருக்கவேண்டும். உன் தேர் பின்னகரும்பொருட்டு பின்னால் இடமிருக்கவேண்டும். நிலைவில்லை மட்டுமே தேர்க!” என்றார். யுதிஷ்டிரர் பணிவுடன் “ஆம் ஆசிரியரே, நூலாய்வில் இறங்கி வில்லை மறந்துவிட்டேன்” என்றார்.
அர்ஜுனன் பீஷ்மரை முழந்தாளிட்டு தாள்பணிந்து “பிதாமகரே, நான் இங்கு உங்கள் பெயர்மைந்தனாகவும் ஆசிரியர் இருவருக்கும் அணுக்கமாணவனாகவும் வந்துளேன். என் மூத்தவரின் முடியின்பொருட்டும் என் இறைவனின் சொல்பொருட்டும் களம்பொருதவிருக்கிறேன். நான் வெல்லும் வழியென்ன என்றும் என் கல்வியில் எஞ்சியுள்ளதென்ன என்றும் கேட்டறியும் உரிமை எனக்குண்டு. அதை நீங்கள் மூவரும் எனக்கு உரைக்கவேண்டும்” என்றான்.
பீஷ்மரின் முகத்தில் மிக மெல்லிய நிழலசைவுபோல வந்து சென்ற உணர்வென்ன என்று உத்தரனால் கணிக்க இயலவில்லை. கேள் என்பதுபோல் அவர் கையசைத்தார். “முதல் நாள் முதல் போரில் உங்களை எதிர்கொள்ளவிருக்கிறேன். நான் தங்களை வெல்லும் வழி எது?” என்றான் அர்ஜுனன். “ஆசிரியர்களாகிய துரோணரும் கிருபரும் எனக்கு உரைக்கவேண்டும், எனக்கு அவர்கள் கற்பித்தனவற்றில் நான் இன்னும் அறியாத கலையேதும் நீங்கள் அறிந்ததாக உள்ளதா? இல்லையெனில் நான் உங்களை வெல்வதெப்படி? ஆமெனில் அக்கலையை நான் கற்பதெப்படி?”
பீஷ்மர் வாய்விட்டு நகைத்து “நன்று! உண்மையில் உன் மூத்தோன் என்னை வணங்கி வாழ்த்து கொண்டதைவிட உன் இந்த உரிமைக்குரல் எனக்கு மகிழ்வூட்டுகிறது. மைந்தா, தன்னிடம் முறையாக உணவுகோரும் மைந்தனைவிட தன் வாயிலிருந்து கைவிட்டு தோண்டி எடுத்து உண்ணும் மைந்தனையே தந்தை மேலும் விரும்புகிறான். அவனைத்தான் சிரித்து கொண்டாடுகிறான்” என்றார். துரோணர் அதுவரை இருந்த அனைத்து தத்தளிப்புகளையும் கடந்தவராக நகைத்து “மெய்தான். இவ்வினாவை இவன் எடுக்கையில் ஒருகணம் இவ்வாறு இவன் கேட்பான் என்று எனக்கு எப்படி தோன்றாமல் போயிற்று என்றுதான் என் உள்ளம் வியப்படைந்தது” என்றார்.
கிருபர் “இளையவனே, குட்டி போட்ட அன்னைநாய் அறிந்த ஒன்றுண்டு. அதன் குட்டிகளில் ஒன்று மட்டும் முட்டி முட்டி இறுதித்துளி வரை பாலை உறிஞ்சி உண்ணும். குருதிவரை உறிஞ்சி அன்னை உயிர் குடிக்கும் கூற்றாகவும் அந்தக் குட்டி ஆவதுண்டு. ஆனால் அதை பேணி வளர்ப்பதே தன் கடன் என அன்னை அறியும்” என்றார். “நீ அத்தகையவன் என்பதை முதல் நாள் முதல் அம்பை நீ கையில் எடுக்கும்போதே அறிந்திருந்தேன். ஆகவே நான் ஒரு துளியும் எனக்கென வைத்துக்கொண்டிருக்கவில்லை. இத்தருணத்தில் விற்கலையில் நீ அறியாத ஓர் அசைவு கூட என்னிடம் இல்லை” என்றார். “என் பேறு அது” என்றான் அர்ஜுனன்.
“பார்த்தா, உண்மையில் உன்னை நிகர்த்த வில்லவன் அல்ல நான்” என பீஷ்மர் சொன்னார். “வில் பயின்று தேர்த்தட்டில் நிற்பவன் அசைவிலா உளம் கொண்டவனாக இருக்கவேண்டும். என்னுள் அந்த அசைவின்மை முழுமையாக கூடியதே இல்லை. உன்னில் அதை உனது ஆசிரியன் நிறைத்திருக்கிறான். ஆகவே நீ என்னை வெல்வாய்.” அர்ஜுனன் தலைவணங்கினான். “ஆனால் என்னை களத்தில் வெல்வது எளிதல்ல. ஏனெனில் என் விழைவின்றி எவனும் என்னை வெல்லலாகாது என்னும் சொல்லை என் தந்தையிடமிருந்தும் ஆசிரியரிடமிருந்தும் பெற்றுக்கொண்டுள்ளேன். நீ என்னை வெல்லவேண்டும் என்று எப்போது என் உள்ளத்தில் தோன்றுகிறதோ அப்போதே நீ வெல்லத் தொடங்கிவிட்டிருப்பாய். நீ வென்று கொண்டிருக்கிறாய் என்பதை அக்கணத்தில் நீ உன்னுள்ளே உணர்வாய்” என்றார் பீஷ்மர். அர்ஜுனன் மீண்டும் தலைவணங்கினான். பீஷ்மர் “இச்சொல்லை நினைவுறுக, சிம்மம் உண்ணாத இரை ஒன்றுண்டு” என்றார். அர்ஜுனன் அவர் விழிகளை நோக்கியபடி “அச்சொல் வழிகாட்டுக!” என்றான்.
துரோணர் “எந்த ஆசிரியனும் ஒரு கலையை மட்டும் பிறருக்கு கற்பிக்காமல் தன்னுள் வைத்திருப்பான். சிலர் தன் மைந்தனுக்கு அதை கற்பிப்பதுண்டு. தன் மாணவனுக்கு அதை கற்பிக்கும் ஆசிரியர்கள் அரிதினும் அரிது. நீ என் மாணவனாக இருக்கையில் அன்றே நான் உணர்ந்த ஒன்றுண்டு, நீ என்னை கடந்து செல்வாய். பின்னர் எப்போதோ உன் அம்பால் நான் வீழ்த்தப்படலாம் என்னும் உணர்வையும் அடைந்தேன். அம்பு முனைகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தி கள நிமித்தம் நோக்கும் கலையொன்று உண்டு, விற்கலையில் அதுவும் ஒரு பகுதி. உனக்கு அதையும் நான் கற்பித்திருக்கிறேன். நீ களநிறைவு அடைந்த நாளுக்கு முந்தைய நாள் இரவு என் ஊழை அவ்வாறு அம்பு பொருத்தி நானே அறிந்துகொண்டேன். வரவிருப்பதென்ன என்று தெளிவடைந்த பின்னரே மறுநாள் காலையில் இறுதி விற்கலையையும் உனக்கு அளித்தேன்” என்றார்.
“ஒருதுளி எஞ்சாமல் என் கலை என்னிலிருந்து செல்கையிலேயே அக்கலை எனக்குள் முழுமை கொண்டது. ஆணவத்தின் இறுதித்துளி அதுவரை அம்முழுமையை தடுத்துவைத்திருந்தது” என்றார் துரோணர். “நீ அறியாத ஒன்று என்னிடம் இல்லை. ஆகவேதான் நான் உனக்கு ஆணை ஒன்றை அளித்தேன். என் மைந்தனை எத்தருணத்திலும் உன் அம்புகள் கொல்லலாகாது. அதை மட்டும் இப்போது நினைவுறுத்த விரும்புகிறேன்” என்றார். “அது நான் அளித்த சொல்” என்றான் அர்ஜுனன். “எந்நிலையிலும்” என்று அவனை கூர்ந்து நோக்கியபடி துரோணர் சொன்னார். உத்தரனின் உள்ளம் கொடுந்தெய்வமொன்று எழக்கண்டதுபோல் திடுக்கிட்டது. ஆனால் அர்ஜுனன் விழிவிலக்காமல் “ஆம் ஆசிரியரே, எந்நிலையிலும்” என்றான்.
துரோணர் பெருமூச்சுவிட்டார். “நான் என் நினைவறிந்தநாள் முதல் கற்றுக்கொண்ட வில்வித்தை அனைத்தும் இதுவரை என் உள்ளத்திலேயே நிகழ்ந்தன. களத்தில் அவை நிகழ்கையில் நான் ஏமாற்றம் அடைந்தபடியே செல்வேன். ஒருகணத்தில் என் விற்கலை என்னை விட்டு முற்றாக அகலும். மொழியை முற்றிலும் மறந்த உளநோயாளன்போல ஆவேன். அது அகன்ற அக்கணத்திலேயே உனக்கு தெரியும். மறுகணம் நீ என்னை வெல்ல முடியும்” என்றார் துரோணர். “இச்சொல்லை நினைவுகூர்க, யானை தன் உணவை நிறுத்திக்கொள்ளும் ஒரு தருணம் உண்டு” என்றார். அர்ஜுனன் அச்சொல்லை ஒருமுறை தன் உதடுகள் மட்டும் அசைய சொல்லிக்கொண்ட பின் தலைவணங்கினான்.
கிருபர் “என்னிடம் போரிடுகையில் உன் ஆற்றல் பெருகிவருவதை நீ உணர்வாய். ஒவ்வொரு அம்பாக என் முன் எடுத்து தோற்றுக்கொண்டிருக்கையில் உனக்குள் பிறிதொருவன் அதுவரை அறியாத ஒன்றை கற்றுக்கொண்டிருப்பான். ஒருகணத்தில் என் அம்புகளிலிருந்து நீ கற்றுக்கொள்ள மேலும் எதுவுமில்லையென்று உணர்வாய். அத்தருணமே நீ என்னை வெல்வது” என்றார். “நீ என்னை வென்ற பதினெட்டாவது நாள் என்னிடம் கற்க மேலும் உள்ளது என்று உணர்வாய். மீண்டும் வந்து என் அடிபணிவாய். இச்சொல் உடனிருக்கட்டும், நதிகள் வற்றும், நாழிக்கிணறுகள் என்றுமிருக்கும்.” அர்ஜுனன் தலைவணங்கினான்.
பின்னர் மூவரையும் மீண்டும் தாள் தலைச்சூடி வணங்கினான். “ஆசிரியர்களே, இங்கு வருகையில் இவ்வினாவை எழுப்பும் எண்ணம் எனக்கிருக்கவில்லை. மூத்தவர் விழைந்தார் என்பதனால் உடன் வந்தேன். உங்களை பார்க்கையில் என் உளம் உணர்ந்தது, இப்படை நிற்பும் எதிர்கொள்ளலும் பாறைமேல் காற்றென மேலே நிகழ்வது என்று. தாங்கள் பிதாமகர்களும் ஆசிரியர்களும் என்பதும் நான் மைந்தனும் மாணவனும் என்பதும் மட்டுமே என்றுமுள்ள உண்மை என்று. எந்தையே, ஆசிரியர்களே, என்றேனும் எனது அம்புகளால் உங்கள் நெஞ்சு பிளக்கப்படும் எனில் அப்போதும் இச்சொற்கள் உங்களிடம் இருக்கவேண்டும். இவை எப்படி உங்கள் மைந்தனின் வணக்கங்களும் வாழ்த்துகளுமோ அவ்வாறே அவ்வம்புகளும்” என்றான்.
பீஷ்மர் தாடியை நீவியபடி நகைத்து “ஆம், மைந்தர் எட்டி நெஞ்சில் உதைப்பதைப்போல் தந்தையருக்கு இனிது பிறிதில்லை” என்றார். துரோணரும் சிரித்தார். “நினைவுறுகிறாயா, முன்பொருநாள் என் மாணவனாக வில்பயின்றபோது பிழையாக எய்த அம்பு என் காலில் பாய்ந்து குருதிப்புண் ஆகியது! அதை உன் பாதவணக்கமென்று கொண்டேன். இனியும் அவ்வாறே” என்றார் கிருபர். “ஆம், அவ்வாறே.”
பாண்டவர்கள் மீண்டும் அவர்களை வணங்கினர். யுதிஷ்டிரர் “விடைகொள்கிறேன், பிதாமகரே” என்றார். “நலம் திகழ்க!” என்று பீஷ்மர் வாழ்த்தினார்.
அவர்கள் வெளியே வந்தபோதும்கூட கைகள் கூப்பியே இருப்பதை உத்தரன் பார்த்தான். பீமன் மட்டுமே சற்று உளமுரண் தெரியும் உடலசைவுகளுடன் கைகளை வீசியபடி யானை நடையில் வந்தான். யுதிஷ்டிரர் திரும்பி சகதேவனிடம் “இத்தருணத்தில் நான் ஒன்றுணர்ந்தேன் இளையோனே, நம் ஆசிரியர்கள் அவர்களின் உடலிலேயே வெளிப்படுகிறார்கள். அவர்களின் சொல்லைவிட விழிகளைவிட உடலே இனிது. அவர்களை வெறுமனே நோக்குதலே ஊழ்கம் போன்றது” என்றார். சகதேவன் “உடல் அகத்தை நடிக்கிறது” என்றான்.