பித்து – மூன்று கவிதைகள்

ma

நான் அதிகம் கவிதைகள் எழுதியதில்லை. எழுதியவற்றுள் நாவல்களுக்குள் அமையும் கவிதைகளே மிகுதி. இக்கவிதைகள் சுந்தர ராமசாமியின் காலச்சுவடு இதழில் 1988ல் வெளியானவை. அதற்கும் நான்காண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. இக்கவிதைகளை வாசிக்கையில் எத்தனை உளக்கொந்தளிப்புடன் இருந்திருக்கிறேன் என்று உணரமுடிகிறது

நகரம்

செத்த மிருகத்தின் அடிவயிறு போல
வெளிறி விரைத்திருக்கிறது வானம்
பசிக்கிறதா உடம்பெங்கும் உறுப்புகள்
சுழலத் துடிக்கின்றனவா
குளிர்ந்த மூச்சுவிட்டபடி இருமருங்கும்
வரிசையில் உறைந்திருக்கும்
குருட்டு ராட்சதர்கள்
நீர்க்குழாய் மலக்குழாய் புடைக்கும்
கான்கிரீட் பிண்டங்கள்
எங்கே என் கருப்பை
நகரத்து திரைப்படச் சாலை?
ஒடுங்கிக் கொள்வேன் சுருண்டு கொள்வேன்
இருளில் இருளில்…
கடவுளே இந்த காலையில்
மழிக்கப்பட்ட தலைகள் போல
வெறுமை கொள்கின்றன முகங்கள்
யார் மீதோ முட்டிக் கொண்டேன்
மன்னிக்க வேண்டும் சோதரா?
தீய சகுனங்கள் தெரிகின்றனவே?
கீழ்வானில் இரும்புக் கோபுர உச்சியில்
கண்மினுக்கும் மைக்ரோ வேவ் நட்சத்திரம்
நீர் அதைக் காணவில்லையா?
காலை வெயிலில் நீண்டு தெருவில் படிகிறதே
அதன் எலும்புக்கூடு நிழல்
பாதி வெளிவந்த பிரசவம் போல இவ்வுதயம்
மதுக்கடை கூடவா திறக்கவில்லை
உடை உடை மண்டை ஓட்டை
உள்ளிருந்து பதிலுக்கு உடைப்பது யார்
இந்த மூத்திரச் சந்தில் கொட்ட வேண்டும்
என் மூளையை
பிய்த்தெறிந்தபடி ஓடவேண்டும் இந்தத்
தெருக்களில்
உடைகளை…தோலை…சதைகளை
இந்தக் காலையை உங்களுக்கு
விற்றுவிடுகிறேன்
எனக்கு ஒரு குன்றிமணியளவு சூரியனைக்
கொடுங்கள்
பனியில் நனைந்து பசுந்தளிர்மேல் நின்று
நடுங்கும்
ஒரு துளிச் சூரியனை.

ஸ்பரிசம்

துாரம் சுருண்டு ஒடுங்கும்
படிகக் கட்டிக்குள்
பயணிக்கும் ஒளி
ஒரு பெருவெளிப் பிரவாகம்
முடிவின்றி ஊடுருவும்
மின்னல் கதிர்
ஓராயிரம் புறங்களில்
முட்டிச் சிதறுகிறது
கசிகிறது
அறைக்குள் நிறைகிறது
வண்ணம் சிதற
வில்லென வளைகிறது
சுவர்களில் அலை ததும்பும்
அதன் உள்பிரகாசம்
ஒரு துளி ஜடத்துக்குள்
கொப்பளிப்பதென்ன சலனம்?
ஒரு துளி மண்ணை
ஒளியாக்குவதெந்த ஸ்பரிசம்?

காலை நடை

வானத்தின் அபாரத் தனிமை
ஒரு மலர் கொண்டு வைத்திருந்தது
என் முற்றத்தில் நேற்று
குறுங்காட்டின் இருண்ட ஈரம்
ஒரு கரிய இறகாய் விழுந்து கிடந்தது என்
பாதையில்
செவ்விதழ் வரிகளில் எழுதப்பட்டுருக்கின்றது
ஒரு செய்தி
கரிய பீலிகளின் மெல்லிய நெருக்கம்
தொட்டுப்பேசுகின்றது என்னிடம் மெல்ல
கடவுளே இரைச்சலிடும் இந்த நகரத்தை
எப்படித் துரத்துவேன் என் அறையைவிட்டு
என் மூளைக்குள் எந்தச் சன்னல்களை மூட
வேண்டும் நான்
எல்லா ஒலியும் அவிந்த மவுனத்துக்காக?
ஒரு விடிகாலையில்
என்றாவது ஒரு விடிகாலையில்
ஆம் வரப்போகும் ஓர் அற்புத
விடிகாலையில்
உள்ளுணர்வின் விரல் நுனியால் உசுப்பி
எழுப்பப்படுவேன்
சட்டைக் காலரை துாக்கிவிட்டு
மப்ளரைச் சுற்றிக்கொண்டு
எல்லாக் கதவுகளையும் திறந்து விட்டுவிட்டு
பனியில் இறங்கி நடப்பேன்
எந்த உன்னதம் மலைகளை மவுனங்களாய்
மாற்றுகின்றதோ
அதுவரை ஒரு காலை நடை சென்று
வருவேன்

முந்தைய கட்டுரைகிறித்தவ இசைப்பாடல்கள் -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 81