அன்னைக்கு இரண்டு கவிதைகள் 

mo

லக்ஷ்மி மணிவண்ணன் நாகர்கோயிலில் இருந்து நடத்திக்கொண்டிருந்த சிலேட் இதழில் 1992ல் நான் எழுதிய இரண்டு கவிதைகள் இவை. சமீபத்தில் இதை கவிஞர் கைலாஷ் சிவனின் இணையதளத்தில் கண்டடைந்தேன்.

நன்றி பிறவாத கவிதை கைலாஷ் சிவன் இணையதளம்

1. என் முகம்

சகல அகங்காரங்களுடன் கூறுகிறேன்
என் முகமே யாவும்
இந்த மலை இந்த வெளி இந்நீல இரவு
எங்கும் தொட்டெழும் பேரொளி
என் முகமே அழகு என் முகமே நிஜம்
துளித்துளியாக என் அன்னை உயிர்உறிஞ்சி
உடலுறுஞ்சி உருவான வடிவம்
தனித்திருந்தே இரவுகளில் கண்கசிய
அவள் கண்ட கனவெல்லாம் திரண்டுருண்டு
பருப்பொருளாக உருப்பெற்ற மையம்
மண்ணாகி உப்பாகி மானுடர் போனபின்பும்
வாழ்கின்றன கனவுகள் இந்தப்
பூமியெங்கும் பல கோடி முகங்களாக
கனவு சுழித்தொழுகும் கடைத்தெருவில்
கரையோரம் ஒதுங்கிய ஒரு முகம் நான்.

2. எச்சம்

உன்னை நினைத்து அழ முடிவதில்லை இப்போது
ஆணித்தரமாக ஒரு சொற்றொடர்கூட இல்லை கைவசம்
மவுனமாய் குளிர்ந்தவனாய் நினைவுறுகிறேன்
இருண்ட தாள்களில் காரியமையால் எழுதிய கதையொன்றை
உன் குரல், உன் பேச்சு, உன் பாசம்,
மண்ணின் அலாதியான தவிட்டுநிறம்,
ஒரு அணைப்பு போல
உப்புக் கரிக்குமோ சாம்பல்?
சாம்பலுண்டு வளர்ந்த மரங்களின் கனிகள் இவை,
நிழல்களை வெறுக்கிறேன்.
எரியும் வெயில் வெளியில் நிற்க விரும்புகிறேன்.
தன்னந்தனியாக.
வானிலொரு பருந்துகூட இருக்கலாகாது அப்போது
மண்ணிலொரு நிழல்கூட இல்லாத மதியம்
பார்க்கப்படாதவனாக நிற்பேன்.
எப்படி விரும்புகிறேன் நான்
ஒரு கணம் நானேயாகி நிற்க
எஞ்சுவதென்ன என்று காண.

சிலேட் 1 – ஆகஸ்ட் 1992.

அப்பாவுக்கு மூன்று கவிதைகள்
முந்தைய கட்டுரைதணியாத தாகம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஐரோப்பாவுக்கு மீண்டும்…