தணியாத தாகம்  

mouni1_thumb[1]

தன்னை தனியனாகவும் உணர்வுகளால் நிறைந்தவனாகவும் உணரும் ஒருவன் முன்பு தான் கண்ட ஒரு பெண்ணை நினைத்துக்கொள்கிறான். அவளை ஒரு குளக்கரையில்தான் முதலில் அவன் காண்கிறான். அரசமரப்படித்துறையில் அவள் துணிதுவைத்துக்கொண்டிருக்கிறாள். அருகே ஒரு குடியானவப்பெண் வரட்டி தட்டுகிறாள். அவள் துணிதுவைப்பதும் அவளைச்சூழ்ந்திருந்த ஆறும் அப்பால் தன் பிம்பம் நோக்கித்தவம் செய்யும் நாரைகளும் எல்லாம் தனக்காகவே என அவன் உணர்கிறான். அந்த வரட்டிகளும் தனகாகவே தட்டப்படுகின்றன என்று எண்ணுகிறான்.

அவள் இசையறிந்தவள். அவள் பாடிக்கேட்கையில் அவன் உணரும் ஒரு உள எழுச்சி உண்டு, இப்பிரபஞ்சம் குறைபட்டது. ஏனென்றால் அது தன் பிரபஞ்சகானத்தில் ஒருபகுதியை அவளிடம் அளித்துவிட்டது.

அவளுக்கு இதயத்தில் நோய். டாக்டர் பாடக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஆகவே அவள் பாடுவதில்லை. அவன் அவள் வீணை வாசிப்பதைக் கேட்கிறான். அந்த இசையில் அவனும் அவளுடன் காலமில்லாத ஒரு பிரக்ஞைவெளியில் உலவுகிறான்.

“அவள்தான் சங்கீதம்; பிரபஞ்ச கானம் அவளுக்குள் அடைபட்டுவிட்டது… அவளுடைய சங்கீதம் வெளி விளக்கம் கொள்ளாததால் இயற்கையே ஒரு வகையில் குறைவுபட்டது போலவும் வெளியில் மிதப்பது வெறும் வறட்டுச் சப்தம்தான் என்றும் எண்ணலானான்.”

அவளுக்கு திருமணம் நிகழ்கிறது. நலுங்கில் அவளிடம் பாடும்படிக் கட்டாயப்படுத்துகிறார்கள். அவன் அங்கே இருக்கிறான். அவன் விழிகளை அவள் விழிகள் சந்திக்கின்றன. “பாடவேண்டுமா? சரி” எனச் சொல்கிறாள். அனைத்துக்கட்டுகளையும் மீறி அனைத்து இலக்கணங்களுக்கும் அப்பால் சென்று அந்த இசை எழுகிறது. அவள் அந்த பாடலிலேயே உச்சம் கொண்டு இசையிலேயே இறந்துபோகிறாள்.

அவன் பிரபஞ்சம் தன்னில் குறைந்த  இசையை அவளிடமிருந்து மீட்டு எடுத்துக்கொண்டு நிறைவடைகிறது என உணர்கிறான். அதுவரை உலகின் ஓசைகள் ஒத்திசைவில்லாமல் உரசிக்கொள்கின்றன. அவள் மறைந்தபின் அவை அழகும் நேர்த்தியும் கொள்கின்றன. அவன் புதிய உலகில் நின்றபடி பிரபஞ்சகானமாக மாறிவிட்ட அவளை நினைத்துக்கொள்கிறான்.

மௌனி எழுதிய பிரபஞ்சகானம் என்னும் கதை இது. மௌனி தமிழின் தொடக்ககால எழுத்தாளர்களில் ஒருவர். தமிழில் அன்றாடவாழ்க்கையை கடந்த ஆழ்ந்த உணர்வுநிலைகளை எழுதிக்காட்டிய முன்னோடி என அவர் மதிக்கப்படுகிறார். பிரபஞ்சகானம் உட்பட அவரது கதைகள் எவையுமே கதை என்னும் வடிவத்திற்குள் வருவன அல்ல. அவை ஒருவகை கவிதைகள். அழகான, புதிரான சொற்றொடர்கள்மூலம் அவை அந்த உணர்வுநிலையை நமக்குக் கடத்துகிறார்.

மௌனியின் எல்லா கதைகளுமே ஒரே கதையின் பகுதிகள் போல உள்ளன. அவை அனைத்திலுமே காதல்தான் பேசுபொருள். ஆனால் சரியான பொருளில் காதல் அல்ல. பெண்ணுக்கான ஏக்கம். ஆனால் மேலும் துல்லியமாகச் சொன்னால் அதுவும் அல்ல. பெண் என்னும் மாயப்பிம்பம் மீதான ஏக்கம் அது. உண்மையான பெண்களுக்கு அவர் கதைகளில் இடமில்லை. அவர்கள் புகையால் ஆன ஓவியம் போல கரைபவர்கள். அந்தி ஒளி போன கொஞ்சநேரம் பொன்னாகச் சுடர்விட்டு அணைபவர்கள்.

அந்தமனநிலையை புரிந்துகொள்ள ஒரு வரலாற்றுணர்வு தேவை. தமிழ்நாட்டின் பல ஊர்களில் பெண்களைக் கல்லூரிக்கு அனுப்புவதற்கான தயக்கம் இன்றும் உள்ளது. அதற்கான காரணமாகச் சொல்லப்படுவது அவர்கள் காதல் வயப்படக்கூடும், கலப்புத் திருமணம் செய்யக்கூடும் என்பது தான். இதன் பொருட்டே தமிழகத்தில் ஆணும் பெண்ணும் தனித்தனியாகப் பயிலும் கல்விக்கூடங்கள் அமைந்தன. இன்றும் கூட தமிழகத்தில் ஏராளமான கல்வி நிலையங்கள் கன்னி மாடங்கள் போலவே செயல்படுகின்றன. ஆசிரியர்களுக்கு கூட ஆண்களை அங்கு அனுமதிப்பதில்லை.

இன்னும் சில ஆண்டுகளுக்கு முன்பு வயது வந்த பெண்கள் கல்வி பயில்வதற்கான தடை சமூகத்தில் இருந்தது. பெண்களுக்கு எழுதப்படிக்கத் தெரியும் அளவுக்கு மட்டும் கல்வி போதுமென்றும் அதற்கு மேல் அவர்கள் கல்வி கற்றால் ஒழுக்க நெறி தவறுவார்கள் என்றும் கூறப்பட்டது. தமிழகத்தின் முக்கியமான மடாதிபதிகள் இக்கருத்தை சமீபகாலத்தில் கூட வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால் அதற்கும் முந்தைய காலகட்டத்தில் ஆண்களை கல்விக்கூடத்திற்கு அனுப்புவதற்கான இதே தடை இருந்தது. அங்கு அவர்கள் ஒழுக்க நெறி தவறுவார்கள் என்று குடும்பத்தினர் அஞ்சினர். தங்கள் கல்விக்கூடம் மாணாக்கர்களுக்கு ஒழுக்கத்தை உறுதியாக வலியுறுத்துகிறது என்பதை அன்றைய கல்விக்கூடங்கள் திரும்பத் திரும்ப அனைத்து பேச்சுகளிலும் வலியுறுத்திக் கொண்டிருந்தன. உண்மையிலேயே சிறைக்கூடம் போல அவை ஒழுக்கத்தை வலியுறுத்தவும் செய்தன.

ஆனால் இதை வைத்து அன்றைய சமூகம் பாலியல் ஒழுக்கம் மிகுந்தது என்றும் அன்றைய ஆண்கள் இல்லற நெறிகளுக்கு உட்பட்டு வாழ்ந்தார்கள் என்றும் பொருள் கொள்ளக் கூடாது. உண்மை அதற்கு நேர் மாறானது. சொல்லப்போனால் தமிழ் பண்பாட்டிலேயே ஒருவனுக்கு ஒருத்தி என்பது மிக சமீபமாக உருவாகி வந்த ஒரு மரபு.

சென்ற காலங்களில் நமது தாத்தாக்கள் பலதார மணத்தில் இயல்பாக ஈடுபட்டிருப்பதை பார்க்கலாம். நூறு வீடுகள் கொண்ட சிற்றூரில் ஐந்து வீடுகள் தாசிகளின் வீடுகளாக இருந்தன அன்றெல்லாம் தமிழகத்தின் கோயில் நகரங்கள் அனைத்துமே தாசி தெருக்கள் கொண்டவை. அங்கு சென்று வருவது பெரிய குற்றமாக ஆண்களின் மனைவிகளால் கூட கருதப்படவில்லை. அதே போல சற்று செல்வாக்கானவர்கள் வைப்பாட்டியரை வெளிப்படையாகவே வைத்து கொண்டனர். வண்டி கட்டிக்கொண்டு வைப்பாட்டி வீட்டுக்குச் சென்று வருவது ஒரு செல்வந்தரின் கௌரவமாகவே கருதப்பட்டது.

அன்றைய இளைஞர்கள் வயது வந்த காலம் முதலே தாசிகளை தேடிச் செல்வதென்பது மைனர்விளையாட்டு என்று அனுமதிக்கப்பட்டது. மேலும் கீழ் படிகளில் இருக்கும் சமூகங்களை பொறுத்தவரை சாதிக்குள் பாலியல் வரம்பு மீறல்கள் எளிதாக மன்னிக்கப்பட்டன. இன்னும் பிற்பட்ட கிராமிய சூழல்களில் நிலவுடைமைச் சாதிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் நாடோடி சாதிகளின் பெண்கள் மேல் ஒருவகையான பாலியல் மீறலுக்கான உரிமையே கொண்டிருந்தார்கள்.

கடந்தகாலத்தை திரும்பி பார்த்தால் குடும்பப் பெண்கள் என்று சொல்லப்பட்ட ஒரு சிறு வட்டத்தினருக்கு மட்டுமேஏதேனும் வகையில் பாலியல் ஒருக்கம் கற்பிக்கப்பட்டதென்று தோன்றுகிறது.பிற அனைவருமே கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்படாத பாலியல் வாழ்க்கையை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அப்படியானால் நாம் இன்று பேசும் ஒழுக்க நெறிகள் எவ்வாறு இப்படி பொது உரையாடலுக்குள் வந்தன. சங்க காலத்தில் தலைவன் பரத்தை வீட்டுக்குச் செல்வதும் பரத்தையுடன் களியாடுவதும் ஒரு வகையான ஒழுக்கமாகவே கருதப்பட்டன. தலைவியர் அதற்காக ஊடினார்களே ஒழிய தலைவனை ஒதுக்கி வைக்கவில்லை. பரத்தையர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் பாங்கர் பாணரும் நிறைந்திருந்தனர். அதன் பின் பிற்காலச் சோழர்களின் காலம் தமிழகம் முழுக்க பேராலயங்கள் எழுந்து சிற்றூர்கள் வரைக்கும் பரத்தையர் பண்பாடு வந்து சேர்ந்தது.

இவ்விரு காலகட்டங்களுக்கும் நடுவே சமண, பௌத்த மதங்கள் பாலியல் ஒடுக்கத்தை வலுவாக முன் நிறுத்தின. திருக்குறளில் நாம் காணும் பாலியல் அறம் என்பது சமண மதத்தின் கொள்கைதான். இப்பாலியல் ஒழுக்கம் ஒருவகை உயர் மட்ட அறிவுறுத்தலாகவே இருந்ததே ஒழிய சமூகத்தை ஒட்டுமொத்தமாக எத்தனை காலம் கட்டுப்படுத்தியது என்று இன்று சொல்ல முடியவில்லை. பிற்காலச் சோழர் ஆட்சியில் சைவமும் வைணவமும் எழுச்சி பெற்ற போது சமணமும் பௌத்தமும் முன்வைத்த பாலியல்நெறிகள் பின்னடைவு கொண்டன.

அதன் பின்னர் நமக்கு வலுவான பாலியல் ஒழுக்க நெறிகளைக் கொண்டு வந்தவர்கள் ஐரோப்பியர்களே. இங்கு வந்த ஐரோப்பியர்களில் முதன்மையானவர்கள் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயர்களின் பாலியல் நெறி அப்போது மிக இறுக்கமானதாக இருந்தது. அதை விக்டோரியன் மொராலிட்டி என்றே ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்.

மகாராணி விக்டோரியாவின் ஆட்சிக் காலத்தில் சீர்திருத்தக் கிறிஸ்தவம் மையப்போக்காக இருந்தது. சீர்திருத்தக் கிறித்தவம் கத்தோலிக்க மதத்திற்கு எதிராக எழுந்தது. நெடுங்காலமாக மையமதமாக   நிலவி வந்த கத்தோலிக்க மதத்திற்குள் காலப்போக்கில் உருவான ஊழல்களையும் பாலியல் மீறல்களையும் எதிர்த்து ஒவ்வாமை கொண்டு உருவானவையே சீர்திருத்த கிறித்தவக் கருத்துக்கள். ஆகவே அது எப்போதுமே ஒரு எதிர்நிலை வீம்பு கொண்டிருந்தது. தன்னை எளிமை நோக்கியும் பாலியல் ஒழுக்கம் நோக்கியும் வலுக்கட்டாயமாக செலுத்திக் கொள்ள முயன்றது. அதன் உச்சம் விக்டோரியா காலகட்டம்.

ஆங்கிலேயர் இங்கு பாலியல் ஒழுக்கத்தை முதன்மையாக வலியுறுத்தினார்கள். இங்குள்ள பரத்தையர் அமைப்பு முறை அவர்களை கொதிப்படையச் செய்தது. பொட்டுக்கட்டுதல் முதலிய சடங்குகள் மேல் ஒவ்வாமை கொண்டுஅன்றைய கிறித்துவ மதப்பரப்புநர்கள் எழுதிய குறிப்புகள் ஏராளமாக இன்றைக்கு கிடைக்கின்றன. இந்தியாவுக்கு பாலியல் ஒழுக்கத்தை கற்றுத் தருவது தங்கள் பொறுப்பென்று அவர்கள் நம்பினார்கள்.

ஆகவெ அன்றைய கல்விக்கூடங்கள் மாணவர்களுக்கு பாலியல் ஒழுக்கத்தை முதன்மையாக வலியுறுத்தின. கிறித்தவத் துறவிகள் வழியாக அது வந்தமையால் பிரம்மசரியம்— புலனடக்கம் போன்றவை திரும்ப திரும்ப வலியுறுத்தப்பட்டன. காமம் இழிவானதென்றும் அது வெறும் தசையின் விருப்பம் என்றும் ஆன்மாவைக் கறை படிய வைப்பது என்றும் தெய்வங்களுக்கு எதிரானது என்றும் கூறப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபைக்குள் இருந்த பொதுமனநிலை காமத்தை ஒடுக்குவதுதான். ஆனால் காமத்தை இப்படி ஒடுக்கமுடியாது. ஒடுக்கினால் அது வேறுவடிவம் கொண்டு வெளிவரும்.  புனித ஜான்  [1542 – 1591] ஸ்பெயினில் வாழ்ந்த கத்தோலிக்க துறவி. அவருடைய கவிதைகள் கிறிஸ்து மீதான பக்தியை காதலின், காமத்தின் வடிவில் முன்வைப்பவை. அதன்பொருட்டு அவர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்.அவருடைய கவிதைகளை மக்கள் மறக்கவில்லை. இருநூறாண்டுகளுக்குப்பின்னர் அவர் கத்தோலிக்க திருச்சபையால் புனிதர் என அறிவிக்கப்பட்டார்

பதினேழாம் நூற்றாண்டுக்குப் பிறகு சீர்திருத்த கிறித்தவம் காமத்தை ஒடுக்கியபோதும் இதேபோன்ற ஒரு உருமாற்றம் நிகழ்ந்தது. புனித ஜான் பாடியதுபோலவே காமத்தை தூயஉணர்ச்சிநிலையாக உன்னதப்படுத்தி முன்வைக்கும் கவிஞர்கள் உருவானார்கள். ஆனால் அவர்கள் அதை பக்தியிலிருந்து பிரித்து லட்சியவாதம் நிறைந்த காதலாக மாற்றிக் கொண்டனர். இன்றைக்கு நாம் தூயகாதல், தெய்வீகக் காதல் என்றெல்லாம் சொல்லும் கருத்துக்கள் அவ்வாறு உருவாகி வந்தவைதான்.

அதாவது காமம் தீண்டாத காதல், இரு ஆத்மாக்களுக்கிடையே  மட்டுமேநிலவும் காதல். கதாநாயகனும் கதாநாயகியும் விரல் நகங்களால் கூட தொட்டுக் கொள்ளாத காதல். ‘அதையும்தாண்டி புனிதமானது’. இந்தக் காதலையே Platonic love என்கிறார்கள்.  கிரேக்க சிந்தனையாளரான பிளேட்டோ ஒவ்வொன்றுக்கும் ஒரு இலட்சிய வடிவம் உண்டு என்று வாதிட்டவர். காதல் என்பது காமத்தின் இலட்சியவடிவம் என நினைப்பதே பிளாட்டானிக் லவ். அல்லது தெய்வீகக் காதல்

ஆங்கில இலக்கியத்தில் ஷெல்லி, கீட்ஸ், யேட்ஸ், கூல்ட்ரிட்ஜ் வோர்ட்ஸ்வொர்த் முதலியவர்கள் அந்த லட்சிய தெய்வீகக் காதலை உணர்ச்சிகரமாக அழகிய சொற்களில் முன்வைத்தனர். மானுடத்தின் பெரும் படைப்புகளாக அவை நிலைகொள்கின்றன. இது பிரிட்டிஷ் கற்பனாவாத காலம் என்று சொல்லப்படுகிறது. 1800கள் முதல் இந்தியாவில் அறிமுகமான ஆங்கிலக்கல்வியில் முதன்மையாகக் கற்பிக்கப்பட்டவை இந்தக் கவிஞர்களின் படைப்புகள்தான். அவற்றினூடாக நமது இளைஞர்கள் அனைவரையும் லட்சியக் காதலென்னும் உணர்வு வந்தடைந்தது.

இவ்வாறு ஒடுக்கப்பட்ட காமத்தை உன்னதப்படுத்திக் கொள்ளுதல் இந்தியாவுக்கு புதியதல்ல. சமண மதங்களும் பௌத்த மதங்களும் காமத்தை ஒறுத்தன. ஆகவே தான் சமணத் துறவிகளும் பௌத்த துறவிகளும் காமத்தை கலையாக மாற்றி தெய்வீகமாக்கிக் கொண்டனர். அஜந்தா எல்லோராவின் ஓவியங்களும் சித்தன்ன வாசலின் ஓவியங்களும் காட்டும் பேரழகிகளின் சித்திரங்களை இவ்வாறுதான் புரிந்து கொள்ள முடியும்.

பின்னர் பக்தி இயக்கத்திலும் இந்த அம்சம் இருப்பதைப்பார்க்கலாம். காமத்தின்  உறவு, பிரிவு, ஆசை,, தவிப்பு அனைத்துமே கடவுளடனான குறியீடாக மாற்றப்பட்டன.   ஆண்டாள் பாடல்களை தூய காதல் பாடல்களாக இன்று வாசிக்க முடியும். ஆனால் அவை பெருமாள் மேல் பாடப்பட்டவை. சங்க கால அகத்துறை யின் காமப்பாடல்களின் நீட்சியைத்தான் நாம் நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் உள்ள நாயக -நாயகி பாவத்திலும் காண்கிறோம்.

விக்டோரிய காலகட்டத்தின் காமஒடுக்குமுறைக்கு ஆளான நம் இளைஞர்கள் கூடவே தெய்வீகக் காதலையும் அடையாளம் கண்டு கொண்டனர். கல்வி நிலையங்களில் நிகழ்ந்த கடுமையான் கடுமையான கண்காணிப்பு ஒருபக்கம் அவர்களை இறுக்கியது. மறுபக்கம் மிக ரகசியமாக அவர்கள்தெய்வீகக் காதலென்னும் பாவனையினூடாக காதலையும் காமத்தையும் கொண்டாடினார்கள். அது அவர்களுக்கு மிகப்பெரிய விடுதலை உணர்வை அளித்தது. காமம் சார்ந்த குற்ற உணர்விலிருந்து விடுதலை கொடுத்தது.

தமிழில் ஆரம்ப கால இலக்கியப்படைப்புகள் அனைத்திலுமே இந்த தெய்வீகக் காதல் மையப்பேசு பொருளாக இருப்பதை பார்க்கலாம். பாரதி அவருடைய ஆண் பெண் உறவு அனைத்தையுமே இலட்சியக்காதலாகவே அமைத்திருக்கிறார்.கு.ப.ராஜகோபாலனின் நூரின்னிஸா போன்ற ஏராளமான கதைகளின் கரு இதுவே. ஏன், தமிழ் சினிமாவிலேயே தேவதாஸ் முதல் ஒருதலைராகம், அலைகள் ஓய்வதில்லை, கிளிஞ்சல்கள், இதயம் வரை  எத்தனை லட்சியக்காதல்கள். சென்ற இருபதாண்டுகளில் இலட்சியக் காதல்கதைகள் நின்றுவிட்டன என்பதைக் கவனிக்கலாம்.

இந்த லட்சியக்காதலை ஒட்டுமொத்த மனித உணர்வுகளுக்கும் குறியீடாக பயன்படுத்திஅவை மௌனி கதைகள். இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவையும், கலைக்கும் மனிதனுக்குமான உறவையும் லட்சியக்காதல் வழியாகவே அவர் சொல்கிறார்.  ஐந்து ஆறு ஆண்டுகள் தான் அவ்ர் கதைகளை எழுதியிருக்கிறார். அவரது கதைகள் அனைத்துமே வடிவ ஒருமையற்ற குறிப்புகளாக இருந்தன. அவரது நண்பர்களும் பத்திரிக்கை ஆசிர்யர்களுமாகிய பி.எஸ்.ராமையா, எம்.வி. வெங்கட்ராம் போன்றவர்களால் அவை தோராயமான கதை வடிவமாக கொண்டு வரப்பட்டு பிரசுரிக்கப்பட்டன.

உடனடியாக அந்தக் கதைகள் தமிழகத்தின் தேர்ந்த இலக்கிய வாசகர்களின் ஒருசாராரிடம் பெருங்கிளர்ச்சியை ஏற்படுத்தின. அவை வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் இந்த உலகைச் சாராதவையாகவும் மிக அந்தரங்கமான ஒரு கற்பனை உலகில் நிகழக்கூடியதாகவும் இருந்தன. மௌனி தமிழில் ஆழ்ந்த பயிற்சி அற்றவர் எனவே உடைத்தும் சொற்றொடரை இனைத்தும் அவர் உருவாக்கிய விசித்திரமான சொற்றொடர்கள் வாசகர்களிடம் பலவகையான கற்பனைகளைத் தூண்டுபவையாக அமைந்தன. சென்ற தலைமுறை வரை தமிழின் உச்ச கட்ட படைப்புகள் என்றே மௌனி கதைகள் கொண்டாடப்பட்டன.

ஆனால் அதற்கடுத்த தலைமுறை அக்கதைகளில் தொடர்ந்து வெளிப்படும் தாபம் என்பது அக்காலகட்டத்து பாலியல் ஒடுக்கு முறையின் ஒரு பகுதி என்றும் அதையே அது தெய்வீக காதல் என்று உருமாற்றிக் கொள்கிறதென்றும் அடையாளம் காண ஆரம்பித்தது. பாலியல் ஒடுக்கு முறைகள் மிக மிக குறைய தொடங்கிய காலத்தில் மௌனி கதைகள் முன்பு அளித்த அந்த தீவிரமான பரவசத்தை அளிப்பது குறைந்தது. அக்கதைகளின் வாசகர்கள் தங்களை அடையாளம் கண்டு கொள்வதும் இல்லாமல் ஆயிற்று.

ஆனால் அது உருவான காலகட்டத்தின் உணர்வு வெளிப்பாடாக தோன்றினாலும்ஆணுக்கும் பெண்ணுக்கும்இடையே என்றுமிருக்கும் ரகசியமான தாபத்தின் வெளிப்பாடாக மௌனி கதைகள் இன்று அமைந்திருக்கின்றன.

முந்தைய கட்டுரைமாத்ருபூமி பேட்டி -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62