‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62

tigநிமித்திகர் அவைமேடையில் ஏறி “வெல்க மின்கொடி! வெல்க பாண்டவர்பெருங்குலம்!” என அறிவித்தார். அவை அமைதியடைந்தது. சுரேசர் கைகாட்ட யுதிஷ்டிரரையும் பாண்டவர்களையும் வணங்கிவிட்டு அரவானும் ஸ்வேதனும் சென்று பின்புறம் இருக்கைகளில் அமர்ந்தனர். சங்கன் மீண்டும் பீமனுக்குப் பின்னால் சென்று நின்றான். நிமித்திகர் “அரசரின் ஆணைப்படி இங்கு புதிய செய்திகளின் அடிப்படையில் போர்சூழ்கைகள் வகுக்கப்படும்” என்றார். அவை பிறிதொரு உளநிலைக்குச் செல்வதை சேர்ந்தசைந்த உடல்களால் ஆன சிற்றலை காட்டியது.

அரவான் மென்குரலில் “இங்கு படைசூழ்கைகளை வகுக்கமாட்டார்களா?” என்றான். “படைசூழ்கைகள் ஒவ்வொரு நாளும் வகுக்கப்படும். ஒவ்வொரு நாளும் மாற்றப்படும். உண்மையில் போர் அறிவிக்கப்பட்ட அன்றே படைசூழ்கை தொடங்கிவிட்டிருக்கும். இறுதிக்களத்தில் எப்படைசூழ்கை எதிர்ப்படைகளை சந்திக்கும் என்று எவராலும் சொல்லிவிடமுடியாது” என்றான் ஸ்வேதன். அரவான் “அவருடைய தொடுகை என்னை நிறைவுறச் செய்தது… கைக்குழவிபோல் உணர்ந்தேன்” என்றான். ஸ்வேதன் புன்னகை செய்தான்.

யுதிஷ்டிரர் திரும்பி கைகாட்ட சகதேவன் எழுந்து “அவையீரே, நமது படைநெறிகளை வகுத்து அளிக்கவேண்டிய நிலையில் இன்று இருக்கிறோம்.  இரு தரப்பிற்கும் உரிய படைமுறைமைகளை வகுக்கும் பொருட்டு அந்தணர் குழு ஒன்று மூன்று நாட்களுக்கு முன் அருகே உள்ள சமீகவனத்தில் கூடியுள்ளது. அவர்கள் தங்கள் சொற்களை இரு அவைக்கும் அனுப்பியுள்ளனர். இங்கு சொல்கொண்டு வந்த முதிய அந்தணரும் சமீக குருமரபின் அதர்வ வைதிகருமான அத்வேஷரை அவைக்கு அழைக்கிறோம்” என்றான்.

அத்வேஷர் தன் ஏழு மாணவர்களுடன் அரங்கின் வலப்பக்கத்திலிருந்து எழுந்து அவைமுகப்பிற்கு வந்து நின்றார். கையில் ஓலைக்கட்டுடன் அவருக்குப் பின்னால் இளம் மாணவர் ஒருவர் நின்றார். அத்வேஷர் அவையை வணங்கி அதர்வத்தின் தொன்மையான காவல் செய்யுளை ஓதினார்.

நீர்களில் உறையும் நெருப்பு

காத்தருள்க உங்களை! ஆம்!

மானுடர் கைகளில் எழும் எரி

காத்தருள்க உங்களை! ஆம்!

உயிரென அனைத்திலும் உறையும் தீயாகிய

வைஸ்வாநரன் உங்களை காத்திடுக! ஆம்!

மின்னலென விரியும் விண்கனல்கள்

உங்களை எரிக்காமலிருப்பதாக! ஆம்!

ஊன் பொசுக்கி உண்ணும் அனல்

துன்புறுத்தாதிருக்கட்டும் உங்களை!

வானமும் பூமியும் காத்திடுக! ஆம்!

கதிரோனும் நிலவும் காத்திடுக!

எங்கும் நிறைந்த வெளி

தன் இறைவல்லமையால் உங்களை காத்திடுக!

தன்னுணர்வும் அதன் எதிருணர்வும் காத்திடுக!

உறங்காதிருப்பதும் அசையாதிருப்பதும்

காத்திடுக உங்களை! ஆம்!

தனித்தும் விழித்துமிருக்கும் தெய்வங்கள்

காத்திடுக உங்களை!

அவை உங்களை காத்திடுக!

உங்களுக்கு துணையென்றமைக!

அவையனைத்தையும் போற்றுகிறோம்

அவையனைத்திற்கும் இதோ அனற்கொடை

ஆம் அவ்வாறே ஆகுக!”

அவை ஓமென்று ஒலித்தமைந்தது. அத்வேஷர் தொடர்ந்தார். “அரசே, அவையே, அறிக! இது அதர்வம் துறைபோகிய அந்தணர் வகுத்தளித்த தொல்நெறி. போர்கள் மூன்று வகை என்பதை படைசூழ்கைகள் கற்ற அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஷாத்ரம், கந்தர்வம், பைசாசிகம் என்று அவை முன்னோரால் வகுக்கப்பட்டுள்ளன. பைசாசிக நெறியென்பது நெறியின்மையே ஆகும். எவ்வகையிலும் எப்பொழுதிலும் எப்படைகொண்டும் எதிரியைத் தாக்கி முற்றழிப்பது அது. அசுரரும் அரக்கரும் கிராதரும் நிஷாதரும் அவ்வகைப் போர்முறைகளை கொண்டவர்கள்.  ஷத்ரியர்கள் அரிதாக அம்முறையை கைக்கொள்வதுண்டு.  அசுரரையும் அரக்கரையும் கிராதரையும் நிஷாதரையும் வென்று அறத்தை நிலைநாட்ட அது ஒன்றே வழியென்றிருக்கையில் மட்டும் அதற்கு ஒப்புதல் உள்ளது.”

“மகதத்தின் அரசர் ஜராசந்தர் தன் பெரும்பாலான போர்களில் அம்முறையையே கடைபிடித்திருக்கிறார். ஷத்ரியர் அதை கைகொண்டால் வெற்றிக்கு நிகராக பழியையும் அளிப்பது. அறத்தின் பொருட்டு அதை செய்தால் நூறுமுறை வேள்விசெய்து நூறாண்டு குடியறம் பேணி அப்பழியை களையவேண்டும். செல்வத்தின் பொருட்டன்றி வேறெதன் பொருட்டு அப்போர் நிகழ்ந்தாலும் அதற்கான பயன் விளைவதில்லை. செல்வத்தின் பொருட்டு அப்போர் நிகழ்ந்தால் அச்செல்வம் எளியோரையும் கற்றோரையும் வேதியரையும் முனிவரையும் வந்தடைந்தாகவேண்டும். அவர்கள் வாழ்த்துக்களே அப்பழியை நீக்கும் ஆற்றல்கொண்டவை. பைசாசிகப் போர்புரியும் அரசன் பிறர் தன்மேல் பைசாசிகப் போர் தொடுக்க ஒப்புதல் அளிப்பவன். அவனுக்கு இறுதி வெற்றி அமைவதில்லை. ஏனென்றால் நெறியிலா வாழ்வென்பது ஒவ்வொரு கூழாங்கல்லும் நாகப்பல்லென்றாகும் நிலத்தில் நடப்பதற்கு நிகர்” என்றார் அத்வேஷர்.

“பைசாசிகப் போர்புரிபவனை அவன் குடிகளே உள்ளூர வெறுப்பார்கள். ஏனென்றால் அதனூடாக அவன் அனைத்து அறங்களையும் அழித்துவிடுகிறான். ஒவ்வொரு சொல்லும் பொருளிழக்கும் அக்காற்றில் மூச்சு நஞ்சென்றாகும். இன்பமென ஏதும் எஞ்சாது. சொல்தோறும் தீமை பெருகும். காலத்துளிதோறும் பழி சேரும். அவ்வரசனுக்கு அந்தணர் வேத ஒப்புதல் அளிக்கமாட்டார்கள். சூதர் அவனை நோக்கி இழிசொல்லுரைப்பார்கள். முனிவர்கள் தீச்சொல்லிடுவார்கள். தெய்வங்கள் முனியும். வான்மழை பொய்க்கும். நதிகள் திசைமாறும். மலைகள் அசைந்துருளும். விலங்குகள் எல்லை மீறும். மண் பிளக்கும். நோய்கள் பெருகும்.”

“ஷத்ரிய அரசன் பைசாசிகப் போர்முறைகளை கையாண்டான் என்றால் ஏழு தலைமுறைகளுக்கு அப்பழி நீடிக்கும். அவன் கொடிவழியினரின் மேல் அது மேலும் பெருகி நூற்றெட்டு தலைமுறைகளில் நிலைகொண்டு வாழும். எனவே எந்நிலையிலும் பைசாசிகப் போரை ஒழிவதே அரசர்களுக்கு நன்று” என்றார் அத்வேஷர். “பைசாசிகம் போரில் நீரில் நஞ்சென நுண்வடிவில் கலந்துள்ளது. விண்ணிறங்கி மண்தொட்ட கங்கையின் நீரில்கூட அணுவிலும் அணுவென நஞ்சு உறைகிறதென்று அறிக! எண்ணத்திலேனும் பைசாசிகம் நிகழாது போர் என ஒன்று மண்ணில் நிகழமுடியாது. நோயென்று துளியேனும் இல்லா உடல் இல்லை. ஆனால் உயிரனலை அணைக்கும் அளவுக்கு அந்நோய் எழுந்துவிடலாகாது என்று மட்டும் உறுதிகொள்க!”

“காந்தர்வப் போர்முறைக்கு ஷத்ரியர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என அத்வேஷர் தொடர்ந்தார். “அது பெண்கொள்ளவும் பொருள்வெல்லவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே ஏற்கப்படுகிறது. எதிரியின் எல்லைகடந்து சென்று வென்று அப்பொழுதே மீளும் போர்முறை அது. இரவிலும் பெருமழையிலும் காந்தர்வப் போர்முறைகள் இயற்றப்படலாம். மாற்றுருக் கொண்டும் மாயங்களை பயன்படுத்தியும் அதை ஆற்றலாம். நம்பச்செய்து ஏமாற்றலாம். விளையாட்டிலும் திருவிழாக்களிலும் உட்புகலாம். ஆலயங்களிலும் அப்போர் நிகழலாம்.”

“ஆனால் காந்தர்வப் போர்முறையில் போர்வீரர் அன்றி குடிகள் ஒருவர்கூட உயிர் துறக்கலாகாது. ஷத்ரியப் படைவீரர்கள் அன்றி பிறர் அப்போரில் ஈடுபடலாகாது. நிகரான ஷத்ரிய அரசர்களுக்கு நடுவே அது நிகழ்வது நன்று. பிறருடன் என்றால் வேதம்காக்கவும் குடியறம்நிலைகொள்ளவும் மட்டுமே அது ஆற்றப்படவேண்டும். அப்போருக்குப் பின் தோற்றவர் வென்றவரின் உரிமையை ஒப்புக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அது குடிகளுக்கு பேரழிவை அளிக்கும் பெரும்போரை தவிர்ப்பதற்காகவே அரசர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.”

“ஷாத்ரமே ஷத்ரியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட போர். இரு நாடுகள் ஒன்றுடன் ஒன்று பொருதுகையில் ஷாத்ரமுறை மட்டுமே நெறியாகும். அறத்தின் பொருட்டோ, தொல்முறைமைகளை காக்கவோ, வேதச் சொல் நிலைநிறுத்தவோ, தெய்வ ஆணையின்பொருட்டோ நிகழும் போர்கள் ஷாத்ர முறைப்படி நிகழ்கையிலேயே நிலையான பயன் அளிக்கின்றன. இங்கு இரு நாடுகளுக்கும் நடுவே பிற நாடுகளின் துணையுடன் நிகழும் இப்போர் ஷாத்ரமுறைப்படி நிகழ்ந்தாகவேண்டும் என அந்தணர் அவை ஆணையிடுகிறது” என்றார் அத்வேஷர். “இது அதர்வநெறிகளின்படி அனல்தொட்டு அளிக்கப்படும் ஆணை! ஆளும் வேதத்தின் சொல். பாரதத்தில் அனல் குடியிருக்கும் அவைகொண்ட அனைத்தரசர்களும் இதற்கு கட்டுப்பட்டவர்களே.”

“ஷாத்ரப்போரின் நெறிகளை நூல்களிலிருந்து எடுத்து இங்கு முன்வைக்க வேதியர் அவை என்னை பணித்துள்ளது. அவை பதினெட்டு நெறிகள்” என்றார் அத்வேஷர். “புலரியிலிருந்து அந்திவரை மட்டுமே களத்தில் போர் நிகழவேண்டும். முதற்கதிர் எழுவதற்கு முன்பும் இறுதிக் கதிர் மறைந்த பின்னும் ஓர் அம்போ ஒரு வாட்சுழற்சியோகூட நிகழக்கூடாது. போருக்கான துவக்கமும் முடிவும் முறைப்படி இரு தரப்பினராலும் பெருஞ்சங்கங்களாலும் முரசுகளாலும் அனைத்து படைவீரர்களுக்கும் அறிவிக்கப்படவேண்டும். போர் நின்றதுமே இரு சாராரும் இயல்புநிலை கொள்ளவும் உணவுண்டு உறங்கவும் உரிமைகொண்டவர்களாவர். அதை குலைக்கும் எதையும் எதிரித்தரப்பு செய்யலாகாது.”

“படைக்களத்தின் நிலம் நான்காக பகுக்கப்படவேண்டும். நான்கிலொன்றில் ஒருமுனையில் ஒருபடையும் மறுமுனையில் எதிர்ப்படையும் நிலைகொள்ளவேண்டும். இரு படைகளுக்கும் நடுவே இருபங்கு நிலம் ஒழிந்துகிடக்கவேண்டும். படைகள் நிற்பவை நிலைக்களம் என்றும் ஒழிந்துகிடப்பவை செருகளம் என்றும் வகுக்கின்றன நூல்கள். செருகளத்தில் போர் நிகழும்போதன்றி பிற பொழுதுகளில் இரு நாட்டுப் படைகளும் படைக்கலங்களுடனும் வஞ்சத்துடனும் கால் வைக்கலாகாது. போர்நிகழும் மண்ணை கிளறுவதோ, சேறாக்குவதோ, முட்கள் நிரப்புவதோ, பிறவகைகளில் பழுதடையச் செய்வதோ பிழை.”

“படைகொண்டு போர்கொள்ளும் தரப்பினர் ஒருவர் ஆடையை பிறிதொருவர் அணியலாகாது. ஒருவர் கொடியை பிறர் கையாளுதல் கூடாது. குறிச்சொற்களும் முரசோசைகளும் மாறி மாறி பயன்படுத்தப்படக்கூடாது. அது போரில் கரவுரைத்தல் என்றே பொருள்கொள்ளப்படும்” என்று அத்வேஷர் தொடர்ந்தார். “போர்க்களத்தில் நீரோ, காற்றோ, எரியோ, நஞ்சோ படைக்கலங்களாக பயன்படுத்தக்கூடாது. நேரடியாக உணவுத்தளத்தை தாக்கலாகாது. தாளமுடியாத இடியோ மழையோ எழுந்து ஒருதரப்பினர் கோரினால் போர் நிறுத்தப்படவேண்டும். பொய்ச்செய்தி பரப்புவதும் மாயம்காட்டி அச்சுறுத்துவதும் போர்நெறி மீறல். ஷாத்ரப்போர் அதை பழிகோள் என்றே கருதும்.”

“தனிப்போர் நெறிகளும் உள்ளன” என அத்வேஷர் தொடர்ந்தார். “களத்தில் ஒருவனை பலர் சூழ்ந்து தாக்கலாகாது. நிகராற்றல் கொண்டவனை மட்டுமே வீரர்கள் எதிர்கொள்ளவேண்டும். வாள் வாளாலும், வில் வில்லாலும், கதை கதையாலும் எதிர்கொள்ளப்படவேண்டும். எந்தப் படைக்கலத்தை எடுப்பது என்னும் உரிமை எதிரிக்கு எப்போதும் வழங்கப்பட்டாகவேண்டும். ஒருவருடன் தனிப்போரில் ஈடுபட்டிருப்பவரை பிறிதொருவர் தாக்கலாகாது. படைக்கலம் தாழ்த்தினோர் செருநிலையில் இருந்து விலக ஒப்பப்படவேண்டும். படைக்கலம் இழந்தோர் தாக்கப்படலாகாது. புண்பட்டவரோ, மயங்கியவரோ, துயில்வோரோ, ஊழ்கத்திலமர்ந்தோரோ தாக்கப்படலாகாது.”

“எந்நிலையிலும் அடிபணிந்தோர் கொல்லப்படலாகாது. சிறைபிடிக்கப்பட்டோர் விருந்தினருக்கு நிகராக பேணப்படவேண்டும். எதன்பொருட்டும் அவர்கள் துன்புறுத்தப்படலாகாது, சிறுமைப்படுத்தப்படலும் ஆகாது. சிறைபிடிக்கப்பட்டவர்களைக் காட்டி எதிரியை அச்சுறுத்துவதும் அடிபணியக் கோருவதும் பெரும்பிழை. தூதர்கள் எந்நிலையிலும் சிறைபிடிக்கப்படுவதோ கொல்லப்படுவதோ கூடாது. அரசகுடிப்பிறந்தோர் எதிரிப்படைக்குள் எதன்பொருட்டேனும் சென்றுமீள முறைப்படி கோரினால் ஒப்புதல் அளிக்கப்படவேண்டும். போரில் பங்கெடுக்காத மானுடனோ விலங்கோ கொல்லப்படலாகாது. புறமுதுகிட்டவர் தாக்கப்படுவது தாக்குபவனுக்கு மேலும் இழிவை அளிப்பது. போரில் தாக்க வராத விலங்கு கொல்லப்படலாகாது” என்றார் அத்வேஷர்.

“படைக்கலமுறைமைகள் பேணப்படவேண்டும். விற்போரில் கால்களிலோ, கதைப்போரில் இடைக்குக் கீழோ தாக்கலாகாது.  வாட்போரில் வாளை வீசுவதும் கேடயத்தை வீசுவதும் குற்றம். எதிரி அறியாத படைக்கலங்களை போரில் கொண்டுசெல்லலாகாது. படைக்கலங்களில் நுண்பொறிகளை கரந்தமைப்பது பிழை. படைக்கலங்களில் நஞ்சு இருக்குமென்றால் அது தெய்வப்பழியேயாகும். போரின்போது எதிரியை வசைபாடுவது பிழையல்ல என்றாலும் இழிவு. எதன்பொருட்டேனும் எதிரி போரில் பொழுதிடை கோரினால் அதை அளிப்பதே மாண்பு. புரவிச்சூதர்களும் அடுமனைச்சூதர்களும் ஏவலர்களும் களத்திலிருந்தாலும் அவர்களை நோக்கி அம்புகள் குறிவைக்கப்படலாகாது. போருக்குப் பின் எளியோர் ஒருவர்கூட கொல்லப்படவில்லை என்றால் மட்டுமே தெய்வங்கள் அதை அறப்போர் என்று அளிகூர்கின்றன என்று அறிக!”

அத்வேஷர் சொன்னார் “இவை ஓலையில் எழுதப்பட்டு அரசரிடம் அளிக்கப்படும். இந்த அவையினராலும் அரசாலும் இந்நெறிகள் முழுதேற்கப்பட்டன என்று அவைமுத்திரை பொறிக்கப்பட்டு எங்களிடம் அளிக்கப்படவேண்டும். இவற்றை எதிரிப்படைக்கு நாங்கள் கொண்டுசென்று சேர்ப்போம். அவர்கள் முத்திரைச்சாத்திட்ட ஓலை இங்கு வந்து சேரும். போர் முடியும்வரை இந்த நெறிகள் இரு படையையும் முற்றிலும் கட்டுப்படுத்தும்.” அவையினர் பெருமூச்சுடன் அசைந்தமர்ந்தனர். “அந்தணரின் விழியிலாத இடம் பாரதவர்ஷத்தில் இல்லை என்றுணர்க! அறம்பிழைக்குமென்றால் மறுகணமே நாங்கள் அதை அறிவோம். எங்கள் கடன் எவ்வரசுக்கும் எக்கொடிக்கும் அல்ல; வேதத்துக்கும், வேதம்புரக்கும் எளிய குடிகளுக்கும் மட்டுமே” என்று அத்வேஷர் சொன்னார்.

“எதன்பொருட்டேனும் இந்நெறி மீறப்படுமென்றால் மீறுபவரை அந்தணர் அவை வேதம் பழித்தோரென்று புறக்கணிக்கும். அவர்களின் நிலத்தில் வேள்விகள் செய்யவும் மூதாதையரை ஊட்டவும் தெய்வங்களை வழிபடவும் அந்தணர் நுழையலாகாது என விலக்களிக்கப்படும். வேதநெறி நிற்கும் நான்கு குலத்தவரும் அவ்வரசரின் நிலத்தைவிட்டு நீங்கும்படி வேதியர் அறைகூவுவர். முனிவர் அந்நிலத்தின்மீதும் எஞ்சும் குடிகளின்மீதும் தீச்சொல்லிடுவர்” என்றார் அத்வேஷர். பின்னர் மீண்டும் ஒருமுறை தலைவணங்கி “இச்சொற்கள் பொறிக்கப்பட்ட ஓலையை அரசர் பெற்றுக்கொள்ளவேண்டும்” என நீட்டினார்.

யுதிஷ்டிரர் எழுந்து தலைவணங்கி “இது அறத்தின் பொருட்டு நிகழும் போர். ஆகவே அறப்போரென்றே இது நிகழவேண்டும். இங்கு அந்தணர் குழு முன்வைத்த அனைத்து நெறிகளையும் நானும் என் உடன்பிறந்தாரும் இந்த அவையும் முற்றேற்கிறோம்” என்றார். அவையினர் அனைவரும் எழுந்து வாள் நீட்டி “ஆம், ஏற்கிறோம்!” என்றனர். “அந்தணரே, படைக்களத்தில் பொன்னுக்கு இடமில்லை என்பதனால் தங்களுக்கு நான் பரிசிலேதும் அளிக்கவியலாது. என் ஓலைச்சாத்தை நற்கொடை எனப் பெற்று என் குடியை வாழ்த்துக!” என்றார் யுதிஷ்டிரர். சுரேசர் கொண்டுவந்து அளித்த ஓலையை வாங்கி அவர் அளிக்க அத்வேஷர் அதை பெற்றுக்கொண்டார்.

“முறைப்படி அரசச் சாத்தளித்த இந்த ஓலையை அரைநாழிகைக்குள் தங்களிடம் அளிக்கிறோம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “நாளை மாலைக்குள் கௌரவ அரசர் சாத்தளித்த ஓலை இங்கு வந்துசேரும்” என்றார் அத்வேஷர். பீமன் “அந்தணரே, பொறுத்தருள்க! இது என் எளிய ஐயம். இந்த நெறிகளை அவர்கள் ஏற்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது?” என்றான். அத்வேஷர் “அது அவர்களுக்கே பழிசேர்ப்பது. எதிரி நெறிமீறினாலும் தான் அறப்போரில் அமைவதே அரசர்களுக்கு உரிய நன்முறைமை” என்றார். “அதெங்ஙனம்? அவர்கள் ஏற்காதபோது நாங்கள் எப்படி அறத்திலமைய இயலும்?” என்றான் பீமன். “அறத்திலும் தெய்வங்களிலும் நம்பிக்கை இருந்தால் அமையலாகும்” என்றார் அத்வேஷர்.

“வீண்பேச்சு. நான் கதை கொண்டுசெல்கையில் அவன் வில்கொண்டு வந்து என்னை கொல்வான் என்றால் அறம் வந்து எனக்கு காவலாகுமா? வேதம்தான் துணைவருமா?” என்றான் பீமன். “ஆம், அறம் கேடயமாகும். வேதம் ஒளிரும் வாளும் ஆகும். அவ்வாறு நம்புவதனால்தான் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு துளியையும் அறத்திற்கும் வேதத்திற்கும் அளித்துள்ளோம். அதை அன்றி பிறிதெதையும் நான் சொல்லவியலாது” என்றார் அத்வேஷர். “அவர்கள் நெறிகளை ஏற்கமாட்டார்கள்… இது உங்கள் வெற்றுமுயற்சி” என்றான் பீமன். “நெறிகளை அவர்கள் ஏற்றிருந்தால் இப்போரே தேவையில்லையே?” அத்வேஷர் “நாம் அறத்தில் நிற்பது நம் இயல்பு அது என்பதனால்தான். பிறருக்காக அல்ல. பிறர் நெறிமீறுவதே நாம் நெறிபிறழ்வதற்கான நிமித்தம் என்பதைப்போல் உளமறிந்த பொய் பிறிதில்லை” என்றார்.

“ஆம், நான் என்னுள்ளத்தில் நெறிமீறுகிறேன். அனைத்து அறங்களையும் மீறி எங்கள் நிலம் கொண்டவன் அவன். எங்கள் குலக்கொடியை இழிவுசெய்தவன். அவனுடன் பழிநிகர் செய்ய எழுந்த இப்போரில் இத்தனை நெறிகள் என்பதைப்போல விந்தையும் பொருளற்றதும் பிறிதொன்றில்லை” என்று பீமன் சொன்னான். அத்வேஷர் “ஆம், அவர்கள் அறம்பிழைத்தமையால்தான் நீங்கள் போருக்கெழுகிறீர்கள். ஆகவே நீங்கள் அறம்நின்றாகவேண்டும். அறம்மீறி அவர்களுடன் பொருதினால் அவர்கள் செய்த அறப்பிறழ்வுகளை நீங்கள் நிகர்செய்கிறீர்கள்” என்றார். பீமன் மேலும் சொல்லெடுக்க வாய் திறந்ததும் “அறத்தைச் சொல்லி ஏற்கவைக்க எவராலும் இயலாது, பாண்டவரே. அறம் ஒரு மெய்மைவட்டம். அதற்குள் நின்றால் மட்டுமே அது பொருள்கொள்கிறது. வெளியே சென்றுவிட்டவர்களுக்கு பித்தென்றும் அறிவின்மை என்றும் அன்றி அது பொருள்படாது” என்றார் அத்வேஷர்.

அவையை பொதுவாக நோக்கி அத்வேஷர் சொன்னார் “ஷத்ரியர்களே, உங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் அறியவேண்டிய தேவை அந்தணர்களுக்கில்லை. நூல்நெறியும் மரபுநெறியும் வகுத்தவற்றை அவைமுன் வைப்பதொன்றே எங்கள் பணி.” யுதிஷ்டிரர் “அவன்மேல் சினம் ஒழிக, அந்தணரே! அரசன் என இது என் சொல். நான் அறப்போரை மட்டுமே ஆற்றவிருக்கிறேன். எந்நிலையிலும் நீங்கள் இங்குரைத்த நெறிகளை மீறி எதையும் செய்யமாட்டேன் என உறுதியளிக்கிறேன்” என்றார்.

அத்வேஷர் வாழ்த்தி “ஆம், இச்சொற்கள் உங்கள் நாவில் எழும் என்று உறுதிகொண்டே இங்கு வந்தேன். உங்கள் சொல்லுடன் அங்கு செல்வோம். அவர்கள் மீறமுடியாது. ஏனென்றால் வேதம் காக்கும்பொருட்டு படைகொண்டு எழுந்திருப்பதாக சொல்பவர்கள் அவர்களே” என்றார். யுதிஷ்டிரர் மீண்டும் வணங்கினார். “பாண்டவ மூத்தவரே, நான் இங்கிருந்து நீங்குகையில் உங்கள் தேரை வாழ்த்திவிட்டு செல்வேன். அதர்வ வேதத்தால் ஆளப்படும் தர்மசண்டிகை என்னும் தெய்வம் அறத்தின் காவல் என உங்கள் தேரில் குடியிருப்பாள். உங்கள் தேரின் தடம் ஒருபோதும் மண்ணில் பதியாதென்பதை காண்பீர்கள்” என்றார் அத்வேஷர்.

யுதிஷ்டிரர் தலைவணங்க அவையினர் “பேரறத்தார் வாழ்க! குருகுலத்து அரசர் வாழ்க! மின்கொடி வெல்க!” என வாழ்த்து கூவினர். யுதிஷ்டிரரின் தலைதொட்டு வேதமோதி வாழ்த்தியபின் அத்வேஷர் தன் மாணவர்களுடன் மேடையிலிருந்து இறங்கி அகன்றார். வாழ்த்தொலிகள் மெல்ல அடங்கின. சகதேவன் “இங்கு சொல்லப்பட்ட படைநெறிகளை ஷத்ரியரும் அல்லாதவர்களுமான அனைத்து அரசர்களுக்கும் வீரர்களுக்கும் அரசாணையென அறிவிக்கிறோம். இவற்றில் எவையொன்றை மீறுவதும் அரசவஞ்சம் என்றே கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்படும்” என்றான்.

பீமன் “ஆனால் இங்குளோர் அனைவரும் ஷத்ரியர்கள் அல்ல” என்றான். “அவர்கள் ஷத்ரியர் பொருட்டு வந்தவர்கள். நடக்கவிருப்பது ஷாத்ரமுறைமை சார்ந்த போர்” என்றான் சகதேவன். “இவ்வாணையின் செய்தியை ஒவ்வொருவரும் தங்கள் படைகளுக்கு அறிவிக்கவேண்டும். ஒவ்வொரு படைவீரனும் இன்றிரவுக்குள் இதை அறிந்துவிட்டிருக்கவேண்டும்” என்றவன் தலைவணங்கி அமர அவையினர் கைக்கோல்களைத் தூக்கி அதை ஏற்றனர். நிமித்திகன் மேடையிலேறி “இந்த அவையில் படைநகர்வுக்குரிய ஆணைகள் அளிக்கப்படும்” என்று அடுத்த நிகழ்வை அறிவித்தான்.

அரவான் “போரை அறமென்று கொண்டாலொழிய போரறம் என்று ஒன்று இருக்கவியலாது” என்றான். ஸ்வேதன் அவனை திரும்பி நோக்கியபின் “என்றேனும் போரும் வேட்டையும் ஒழிந்தநாள் இப்புவியில் அமையுமா என்ன?” என்றான். மேடையில் சுரேசர் ஓலைகளை கொண்டுவந்து யுதிஷ்டிரர் முன்னால் இருந்த பீடத்தில் வைத்தார். வழக்கமான அவைநிகழ்வு தொடங்கவிருக்கிறது என்னும் சலிப்பு அவையினர் உடல்களில் வெளிப்பட்டது. அரவான் “அவ்வாறு ஒரு காலம் வராதென்று எவ்வண்ணம் சொல்கிறீர்?” என்றான். “மானுடர் வஞ்சத்தால் விழைவால் தங்களை தொகுத்துக்கொள்பவர்கள்” என்றான் ஸ்வேதன். அரவான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மெல்ல நெளிந்தமைந்து பெருமூச்சுவிட்டான்.

“இந்நெறிகள் போரை நெடுங்காலம் அறிந்தவர்களால் உருவாக்கப்பட்டவை. போரை அறியுந்தோறும் அதில் நெறிகளை அமைக்கவே சான்றோர் எண்ணுவார்கள்” என்று ஸ்வேதன் சொன்னான். “காட்டெரி காட்டின் உள்ளுறையும் விழைவிலிருந்து எழுவது. ஆனால் அது காட்டை முற்றழிக்காமல் காக்க காடே முயல்வதை கண்டிருப்பாய்.” அரவான் “ஆம், எரியும் செடிகளின் எல்லைகளில் எரியாச் செடிகளாலான காட்டை காணலாம்” என்றான். ஸ்வேதன் “தாயவிளையாட்டில் சோழிகளை கலைத்துப் பரப்பி மீண்டும் வகுப்பதுபோல் படைகளை குருக்ஷேத்ரத்தில் அமைத்தாகவேண்டும்… ஆணைகளாலும் அங்குசத்தாலும் யானையை ஆள்வதுபோன்றது அது” என்றான்.

முந்தைய கட்டுரைதணியாத தாகம்  
அடுத்த கட்டுரைமாத்ருபூமி பேட்டி மொழியாக்கம்