கணினியில் எழுதுவது…
அன்புள்ள ஜெ
கணினியில் எழுதுவது பற்றி நீங்கள் எழுதிய குறிப்பை வாசித்தேன். அ. முத்துலிங்கம் எழுதிய இந்தக்கட்டுரையை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்
வாசகர் தேவை
ஜெயராமன்
அன்புள்ள ஜெயராமன்,
அ.முத்துலிங்கம் அவருக்குரிய நையாண்டியுடன் இன்றைய எழுத்து வாசிப்புச் சூழலைச் சொல்கிறார் அவர் சொல்வது ஒருவகையில் உண்மை. தமிழில் எண்பதுகளில் ஆண்டுக்கு சராசரியாக நாநூறு நூல்கள் வெளிவந்தன இன்றைக்கு சராசரியாக முப்பதாயிரம் நூல்கள். இவற்றில் எவ்வளவு நூல்கள் படிக்கப்படுகின்றன என்பது முக்கியமான கேள்வி. குறிப்பாக இன்று பல எழுத்தாளர்களின் பெருந்தொகைகள் வருகின்றன. தொடக்கம் முதல் இறுதிவரை எவரேனும் பெருந்தொகைகளை வாசிக்கிறார்களா?
இன்று எழுத்து எளிதாகிவிட்டது. நூல்வெளியீடு மேலும் எளிதாகிவிட்டது. விஷ்ணுபுரம் எழுதி முடித்து இரண்டு ஆண்டுகள் வெளியீட்டுக்கு முயன்றேன். நானே 150 பிரதிகள் முன்விலைத்திட்டத்தில் விற்றும் கொடுத்தேன். இன்று எந்தக்கைப்பிரதியும் உடனே அச்சில் வந்துவிடும். ஆசிரியரே மின்னூலாகக் கொண்டுவரலாம். விளைவாக நூல்பெருக்கம். அதற்கு மறுபக்கமாக வாழ்க்கை விரைவானதாக, போட்டிமிக்கதாக ஆகிவிட்டது. கடுமையான உழைப்பில்லாமல் வாழமுடிவதில்லை. நேரம் மிகப்பெரிய சிக்கல்.
இன்னொரு சிக்கல் மிகைப்பேறு. இதை பின்நவீனத்துவ ஊடகவியலாளர்கள் இருபதாண்டுகளுக்கு முன்னரே சுட்டிக்காட்டி விட்டனர். நானே கூட அவர்களை மேற்கோள்காட்டி நிறைய எழுதியிருப்பேன். இன்று ஒவ்வொன்றும் பலமடங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன. நுகர்பொருட்கள், கேளிக்கைகள் எண்ணமுடியாத அளவில் நம்மைச் சூழ்ந்துள்ளன. அவற்றிலிருந்து நமக்குத்தேவையானதைத் தெரிவுசெய்வதே பெரும் சிக்கல். நம் தேவை என்ன என்று முடிவுசெய்வது அதைவிடச் சிக்கல். இதன் நடுவே நாம் நமக்குரிய அறிவுத்துறையை, அதிலுள்ள நூல்களை தெரிவுசெய்து நேரம் செலவிட்டு வாசிப்பதென்பது மிகப்பெரிய அறைகூவலாக மாறிவிட்டிருக்கிறது
இன்று ஓர் இளம்வாசகன் கொள்ளவேண்டிய முதன்மையான தன்னுறுதி ஒன்று உண்டு.யானை எவ்வளவு பெரிதென்றாலும் காட்டை முழுக்க உண்ணமுடியாது. இன்றுள்ள அனைத்து அறிவுத்துறைகளையும் ஒருவர் மேலோட்டமாகக்கூட அறிந்துவைத்துக்கொள்ள முடியாது. தனக்குரிய துறையிலேயே கூட அனைத்தையும் அறிந்துவிடமுடியாது. ஆகவே எவரேனும் பரிந்துரைத்தார் என்பதனாலோ உடனடியான ஆர்வம் தோன்றிவிட்டது என்பதனாலோ எல்லாரும் படிக்கிறார்கள் என்பதனாலோ ஒருநூலை படிக்கத் தொடங்கிவிடக்கூடாது. அவ்வாறு ‘கண்டதையும்’ படிப்பது சென்ற காலகட்டத்தில் பரந்துபட்ட அறிவை அளிக்கும். இன்று அது ஆழமற்ற தகவல்சேமிப்பாளனாக ஆக்கிவிடும். ஒரு கோப்பை நீரை ஐம்பது சதுரகிலோமீட்டர் அகலத்துக்கு பரப்புவதுபோன்றது அது என முன்னர் எழுதியிருந்தேன். நம் தளத்தை தெரிந்தெடுத்து அதற்குள் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் படித்து முன்செல்வதே சரியான வழிமுறை.சொல்லப்போனால் தெளிவான திட்டத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொண்டு நூல்களை வாசிப்பதும் அதைப்பற்றி எழுதியும் விவாதித்தும் தொகுத்துக்கொள்வதும்தான் இன்றைய தேவை.
ஆனால் அ.முத்துலிங்கம் சொல்வதுபோல வாசிப்பு அழிகிறதா? நான் அப்படி நினைக்கவில்லை. நிறைய நூல்கள் கிடைப்பதனாலேயே வாசிப்பு பெருகிவருகிறது என்ற எண்ணம்தான் எனக்கு இன்றுவரை ஏற்பட்டுள்ளது. என் நூல்களின் விற்பனையும் அதையே காட்டுகிறது. பொழுதுபோக்குக்காக, கேளிக்கைக்காக வாசிப்பவர்கள் குறைந்துள்ளனர். தேடலுடன் வாசிப்பவர்கள் என்றும் சிறு வட்டத்தினரே. அவர்களுக்கு நூல்கள் கையருகே இருப்பதனால், எப்போதும் உடன்வருவதனால் வாசிப்பு எளிதாகியிருக்கிறது. நான் மிகச்சிறந்த வாசகர்களைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். மனிதனின் அறிவுத்தேடல் உள்ளவரை நூல்கள் வாழும் என்றுதான் தோன்றுகிறது
ஜெ