ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6

raj gauthaman

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

 

அன்புள்ள ஜெ

 

விருதுச் செய்தி என்னைப் பத்தாண்டுகளுக்குப் பின்னே அழைத்துச் சென்றுவிட்டது. தமிழினி பதிப்பித்த இலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்களை வாங்கியபோது புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றி வேதசகாயகுமார், பொதியவெற்பன், ராஜ் கௌதமன் எழுதிய நூல்களையும் வாங்கினேன்.

 

விருது பெறுபவர் குறித்து முன்னரே அறிவித்தமைக்கு நன்றி. டிசம்பருக்குள் அவருடைய எல்லாப் படைப்புகளையும் வாசித்துவிட விழைகிறேன்.

 

ஆண்டுதோறும் விழா வளர்ந்துகொண்டே போகிறது. இம்முறையும் மேலும் பலபடிகள் வளரும் என்பதில் ஐயமில்லை.

 

அன்புடன்

 

கோபி ராமமூர்த்தி

அன்புள்ள ஜெ

 

ராஜ் கௌதமன் விருதுபெறும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. நெடுங்காலமாகவே எந்தக் கவனிப்பும் இல்லாமல் இலக்கியத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையுடன் செயல்பட்டுவரும் படைப்பாளி. அவருடைய பண்பாட்டு ஆய்வுகள் மிக மிக முக்கியமானவை. ஆனால் கூடவே இன்னொருவரும் நினைவுகூரத்தக்கவர். தமிழினி பதிப்பகம் இல்லாவிட்டால் ராஜ் கௌதமன் இந்த அளவுக்கு எழுதியிருப்பாரா என்பது சந்தேகம்தான். ராஜ் கௌதமனின் நூல்களுக்கு மிகச்சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தவர் அவருடைய முதன்மைப்பதிப்பாளரான தமிழினி வசந்தகுமார். ராஜ் கௌதமனின் நூல்களுக்கு வாசகர்களே இல்லாத நிலையில்கூட அவர் ஆய்வுநூல்களை மிகச்சிறப்பாகப் பதிப்பித்திருக்கிறார். விழாவில் அவரையும் கௌரவிக்கவேண்டும் என கோருகிறேன்

 

வெங்கட்

 

அன்புள்ள ஜெ

 

ராஜ் கௌதமனின் ஆய்வுநூல்களைப்பற்றிய கட்டுரைகள் தமிழில் அனேகமாக இல்லை. அவை எழுதப்படும் என்றால் அவருக்கு அளிக்கப்பட்ட இவ்விருது பொருள்படுகிறது. அவரைப்பற்றி இன்றைய அடுத்த தலைமுறையினர் எளிதில் அறிந்துகொள்ள இந்த விருது உதவலாம்.

 

ராஜ் கௌதமனின் பார்வை எனக்கு பெரும்பாலும் உவப்பானது அல்ல. தமிழியர்கள் தமிழ்த்தூய்மை தமிழ்ப்பெருமிதம் ஆகியவற்றைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். தமிழனின் தொல்பழங்காலம் சாதிப்பிரிவினை அற்றது, மூடநம்பிக்கை அற்றது, வைதிகச்சார்பில்லாத தொன்மையான வழிபாட்டுமுறைகள் கொண்டது  என்ற தொன்மம் எந்த ஆதாரமும் இல்லாமல் தொடர்ச்சியான உணர்ச்சிபூர்வமான கூச்சல்கள் வழியாக மட்டுமே நிலைநிறுத்தப்படுகிறது. ராஜ் கௌதமன் மிக விரிவான ஆதாரங்கள் வழியாக அது பொய் என நிறுவுகிறார்.

 

தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் முதல் இங்கே சாதியம் இருந்துள்ளது, தொடர்ச்சியாகத் தமிழ்ப்பண்பாட்டு வளர்ச்சி என்பது சாதியம் வழியாகவே நடந்துள்ளது என்கிறார்.  பழங்குடிவாழ்க்கையில் இருந்து பெற்றுக்கொண்ட பலவகையான மூடநம்பிக்கைகளால்தான் சங்ககால வாழ்க்கை நடந்த்து என்றும் அதில் வைதிகம் ஆழமான அதிகாரமாகச் செயல்பட்டது என்றும் நிறுவுகிறார். அதாவது சாதியம், மூடநம்பிக்கை, வைதிகம் மூன்றும் இணைந்ததே  தமிழ்ப்பண்பாடு. அது அடித்தளச்சாதிகள் மீதான சுரண்டலால் உருவானது. அதற்கு வைதிகப்புனித்த்தை உருவாக்கும் பிராமணர்களின் வழி எந்தளவுக்குச் சாதுரியமானதோ அந்தளவுக்கு சாதுரியமானதே அதற்கு தமிழ்த்தொன்மை என்ற புனித்த்தைக் கட்டமைக்கும் இடைநிலைச்சாதிகளின் வழி என்கிறார் ராஜ் கௌதமன்

 

இரண்டையும் நிராகரிக்கும் ராஜ் கௌதமன் மாற்றாக இங்கே எதை வைக்கிறார்? அவருடைய ஆய்வுச்சட்டகம் மார்க்ஸியம் சார்ந்த்து. ஆனால் அவருடைய நூல்கள் எதுவுமே மார்க்ஸியம் மீதான நம்பிக்கையை முன்வைப்பவை அல்ல. மாறாக எள்ளலுடன்தான் அவர் மார்க்ஸியத்தையும் பார்க்கிறார். இந்த எதிர்மறைப்பார்வை காரணமாக விடியும்வரை கிண்டி விடிந்தபின் வாணலியை உடைத்தகதையாகவே அவருடைய ஆய்வுகள் நின்றுவிடுகின்றன

 

மா.குமார்.

ராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்

ராஜ் கௌதமன் படைப்புக்கள்

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்

சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல்

ராஜ்கௌதமனின் இரு நூல்கள்

ராஜ் கௌதமன் -கடிதங்கள்

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1

ராஜ் கௌதமன் ,திருப்பூர் சந்திப்பு,சிலுவைராஜ் சரித்திரம்…

ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5

 

முந்தைய கட்டுரைகாப்பீடு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகணினியில் எழுதுவது…