யானைடாக்டர்,ஹிண்டு- ஒரு கடிதம்

FkmRL43a

 

யானை டாக்டர்,தி ஹிண்டு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

யானைடாக்டர் கதை பற்றி மீனா பிள்ளை அவர்கள் எழுதிய குறிப்பையும் அதற்கு நீங்கள் எழுதிய எதிர்வினையையும் வாசித்தேன். நல்ல கதை, அதை மிகச்சரியாக வகுத்து எழுதியிருக்கிறார்

 

உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது. அதை நான் மறுக்கமாட்டேன். தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் எல்லா பத்திரிகைகளிலும் இலக்கியத்தைப்பற்றிய உதாசீனமான பார்வையே உள்ளது. பத்திரிக்கையாளர்கள் தங்களை கருணையான தெய்வங்களாக நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களை கும்பிடும் எழுத்தாளர்களும் உருவாகி வருகிறார்கள். இதை நான் மறுக்கவில்லை. நான் இன்னொரு கோணத்தைச் சொல்ல வருகிறேன்

 

திருமதி மீனா பிள்ளை  அவர்கள் எழுதிய இந்தக்குறிப்பின் தரத்தில் நவீனத் தமிழிலக்கியத்தைப்பற்றி இன்றைக்கு ஆங்கிலத்தில் ஒரு குறிப்பை எழுத யார் இருக்கிறார்கள்? அசோகமித்திரனும் வெங்கட்ஸ்வாமிநாதனும் இருந்தார்கள். வெங்கட்ஸ்வாமிநாதன் தெற்கே வந்த பத்திரிக்கைகளில் எழுதவில்லை. எழுதிய காலகட்டத்தில் தன்னுடைய அரசியல் கொள்கைகளை பொருட்படுத்தாமல் நல்ல எழுத்தாளர் அனைவரைப்பற்றியும் எழுதினார். அப்படிப்பட்ட  இப்போது யார் இருக்கிறார்கள்? இன்றைக்கு அவ்வப்போது இந்திரா பார்த்தசாரதி எழுதுகிறார். அவ்வளவுதான்.

 

இங்கே ஆங்கிலத்தில் எழுத ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். உயர்வட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். அவர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு எந்தத் தமிழ் எழுத்தாளரையும் தெரியாது. ஹிந்துவில் தொடர்ந்து புத்தக மதிப்புரை எழுதும் ஒரு பெண்மணியுடன் சிலநாட்களுக்கு முன் பேசினேன். அவர் சுந்தர ராமஸ்வாமியைக் கேள்விப்பட்டதே இல்லை. லா.ஸ.ராமாமிருதம் அவர்களையும் கேள்விப்பட்டதில்லை. இதுதான் நிலைமை.

 

பத்திரிக்கையாளர்கள்  விமர்ஸகர்கள்  அல்ல. அவர்கள் எல்லா புத்தகங்களையும் வாசிக்கவோ நவீன விமர்ஸனங்களை எழுதவோ முடியாது. எழுதுபவர்கள் இருந்து அவர்களின் எழுத்து பத்திரிக்கைகளால் புறக்கணிக்கப்பட்டிருந்தால் நீங்கள் சொல்வது சரி. இங்கே ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு தமிழ் மேல் எந்த மதிப்பும் இல்லை. பொதுவாக அவர்களுக்கு இலக்கிய வாசிப்பும் கிடையாது. ஆகவே தாங்களே இலக்கியவாதிகளாக ஆகி எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதுவதனாலேயே தமிழில் எழுதுபவர்களை குனிந்து பார்க்கிறார்கள். பெரிய எழுத்தாளர்களைக்கூட மட்டம்தட்டி எழுதுபவர்களும் உண்டு. இந்நிலையில் பதிப்பகமோ அல்லது எழுத்தாளரோ முயற்சி செய்து மதிப்புரைகளை கொண்டுவந்து அளித்தால் அவை பிரசுரமாகின்றன. அந்தளவுக்காவது வருகிறதே என்று சமாதானம் செய்துகொள்ளவேண்டியதுதான்.

 

சரி, தமிழர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்களே. உலகில் எங்காவது தமிழர்கள் தமிழிலக்கியம், தமிழிசை, தமிழ்க்கலாச்சாரம் பற்றி எதையாவது எழுதியிருக்கிறார்களா? அவர்களுக்கு ஒன்று தமிழ்ப்பாரம்பரியம் இலக்கியம்பற்றி ஒன்றுமே தெரிந்திருக்காது. அல்லது மேலோட்டமான அறிவும் இளக்காரமான பார்வையும் இருக்கும். மட்டம்தட்டுவதன் வழியாக தாங்கள் மேலானவர்கள் என்று நினைக்க விரும்புவார்கள். அல்லது தரமே இல்லாதவர்களை முன்னிறுத்தி எழுதுவார்கள். தரமான எழுத்தை சாதி,  அரசியல் அடிப்படையில் கண்டுகொள்ளமாட்டார்கள்

 

இந்த மனநிலை வங்காளிகள், மராட்டியர் ,கன்னடிகர், மலையாளிகள் ஆகியோருக்குக் கிடையாது. அவர்களின் தரமான கலைகளையும் இலக்கியத்தையும் பற்றி உலகதளத்திலும் இந்திய தளத்திலும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். ஆகவேதான் அவர்களுக்கு அந்த இடம் உருவாகியிருக்கிறது. இதற்கு பத்திரிக்கைகளைக் குறைசொல்வதில் அர்த்தமில்லை. பிரசுரிப்பதாக இருந்தால் என் பெயர் வேண்டியதில்லை

 

எஸ்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 54
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4