துன்பக்கேணி

pu

அன்புள்ள ஜெ.,
புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பான “கண்மணி கமலாவுக்கு..” என்றொரு  மாபெரும் சோகச் சித்திரம் படித்தேன். பல கடிதங்களை கண்டசாலாவின் சோகப்பாடல்கள் பின்னணியில் ஒலிக்கத்தான் படிக்க முடிகிறது.ஒவ்வொரு கடிதமும் ஒரு இருபதாம் நூற்றாண்டு முழுநேர எழுத்தாளனின் நிலையில்லாமையை பதிவு செய்யும் ஆவணம். 1938 முதல் 1948 வரையில் வெவ்வேறு ஊர்களிலிருந்து எழுதப்பட்டவை. நிறையக் கடிதங்கள் “நம் 1, சாலே மேன்ஷன், டக்கர்ஸ் லேன், ஜி டி” யிலிருந்து(சென்னை ஜார்ஜ் டவுன் தான்)  மனைவி கேரளாவில் இருக்கிறார். ஊர் குறிப்பிடவில்லை. ஒரு கடிதத்தில் “திவான் ராமசாமியின் அட்டகாசம் எப்படி இருக்கிறது? விசாரித்து நாலு வார்த்தை எழுது” என்கிறார். சி.பி.ராமஸ்வாமி ஐயரைக் குறித்து நீங்கள் எழுதியது ஞாபகத்திற்கு வந்தது.
ஒவ்வொரு கடிதத்திலும் அவர் மனைவிக்கு அனுப்புவதாகச் சொன்ன பணம் அனுப்ப முடியாதது குறித்து வருத்தமும், அந்தப் பணத்தை எப்போது அனுப்பப் போகிறார் என்பதற்கான வாக்குறுதியும் தவறாது இடம் பெறுகிறது. “பொருள் வயிற் பிரித”லால் மிகவும் அவதியுற்ற வாழ்க்கை. ஆனால் அந்தப் பொருள் தான் கடைசி வரை அவரை நெருங்குவதில்லை. எல்லாவற்றிற்கும் “ரேஷன்”. சாப்பாட்டிற்காக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். “கெரோசின்” மற்றும் குட்டிக்குரா பவுடர்  எவ்வளவு முடியுமோ சேர்த்து ஊருக்குப் போகும்போது எடுத்துப்போகிறார்.   யுத்த காலம். “ARP (Anti Raid precaution)  காரன் ஊதி விட்டான். முடித்துக் கொள்கிறேன்” என்கிறார் ஒரு கடிதத்தில். பர்மா ஜப்பானிடம் வீழ்ந்ததைப் பதிவு செய்கிறார். இவருடைய நண்பர் கி ரா (கி ராமசந்திரன் – ஜெமினியில் வேலை பார்த்தவர். பின்னாளில் அசோகமித்திரனின் நண்பர்) மீதான மன வருத்ததில் இவர் மனைவி என்னவோ சொல்லிவிட “நீ இந்த ஈ வே ரா மனப்பான்மையை ஒழிக்கவேண்டும். பிராமண த்வேஷம் கூடாது. உள்ளிருந்து கொல்லும் விஷம் அது” என்று எச்சரிக்கிறார். “வந்த முப்பத்தைந்தில் உனக்கு பதினைந்து எனக்கு பதினைந்து. மீதி ஐந்தும் நல்ல காரியத்திற்குத்தான் செலவழித்தேன். பழைய கடன் அடைந்தது” என்கிறார் ஒரு கடிதத்தில். அடுத்த கடிதத்திலேயே ” உன் செலவுகளுக்கெல்லாம் எவ்வளவு அனுப்பவேண்டும்? 160 ஆ? 170 ஆ? சரியாகச் சொன்னால் அனுப்பச் சௌகர்யமாக இருக்கும்” என்கிறார். பாவமாக இருக்கிறது. பற்றாக்குறை..பற்றாக்குறை..பற்றாக்குறையே வாழ்க்கையின் அடிநாதமாக இருந்திருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.
மனைவியை “என் ஆருயிர்க்கண்ணாளுக்கு” “எனது கட்டிக்கரும்பான ஆருயிர்க்கண்ணாளுக்கு” “என் கண்ணம்மாவுக்கு” என்று விதம் விதமாக அழைத்து எழுதி முடிக்கும் போது “ஆயிரம் முத்தங்கள் உன் தேக முழுமைக்கும் போட்டு”,”உனதே உனது” “பேய் மனம் கொண்டெழுதும்” சொ வி என்று பலவிதமாக முடிக்கிறார்.அடக்கிவைக்கப்பட்ட காமம் அவ்வப்போது கடிதங்களில் கொப்பளிக்கிறது(“நான் அங்கு வந்தால் கட்டிலை விட்டிறங்காக்கதைதான்”) இதற்கிடையே அவருக்கு மிகவும் பிரியமான அவருடைய பெண் குழந்தை – குஞ்சு – தொடர்ந்து உடல் சுகமில்லாமல் இருந்து இறந்து போய் விடுகிறது. இடிந்து போன மனைவியை பலவாறாகத் தேற்றுகிறார். ஆனால் அவரால் தேற முடிவதில்லை. கெட்ட சொப்பனம் கண்டு தூக்கத்தில் அடிக்கடி திடுக்கிட்டு எழுகிறார். ஒருநாள் காலையில் எழுந்து பார்த்தால் தலைமாட்டில் ஒரு கடிதம். “எப்போது எழுந்தேன் என்று கூட ஞாபகம் இல்லை. கிறுக்கியிருப்பதைப் பார்த்தால் லைட்டைப் போடாமல் கூட எழுதியிருப்பேனோ என்று தோன்றுகிறது. இது என் மனநிலைக்கு ஒரு உதாரணம்” என்று மனைவிக்கு அனுப்புகிறார்.    மனைவிக்கு பக்கிம் சந்திரரின் “ஆனந்த மடம்” , மணிக்கொடி, தினமணிக்கதிர் அனுப்பி வைக்கிறார். கவலைகளுக்கு வடிகாலாகத் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறார் (இவர் மனைவியின் சிறுகதை கலைமகளில் வந்ததாக அசோகமித்திரன் சொன்ன ஞாபகம்)  “முசோலினி வேகமாக ஓடுகிறான்” “அவ்வைக்காகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்று தன் படைப்புகளைப்பற்றி அவ்வப்போது குறிப்பிடுகிறார்.
சினிமாவிற்கு எழுத ஆரம்பிக்கிறார். சினிமா உலகின் போட்டி, பொறாமையைக் கண்டு  முதலில் மிரண்டு போகிறார். இவருக்கு புராணம் எழுத வராது என்று கூறி வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. முதலில் ஜெமினியின் “ஔவையார்”, பின்பு தியாகராஜ பாகவதரின் “ராஜமுக்தி”, காமவல்லி என்று படங்கள்.கையொடியும் எழுத்து வேலை. “தொழில் சினிமாவானதுனால நிமுந்து பேச வசதியாக” ஊருக்கு வெளியே (அந்தக்காலத்தில்) மாம்பலத்தில் ஒரு தனி வீட்டை 23000 ரூபாய்க்கு விலை பேசுகிறார் (முடிந்ததா? தெரியவில்லை) தாம்பரத்தில் நண்பர் ஒருவர் நாலைந்து ஏக்கர் நிலம் வாங்கிப் போடுகிறார். விலை ஆயிரம் ரூபாய்தான். தானும் இப்படி ஒரு ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய மனைவியிடம் ஆலோசிக்கிறார்(ஐயோ.. வாங்கிப்போட்டிருக்க மாட்டாரா? என்று தோன்றுகிறது. இன்றைய மதிப்பு கோடிகளில்)  மதுரை, பெங்களூரு, மும்பை, பூனா என்று நாடோடி வாழ்க்கை  கண்ட இடங்களில் மோசமான சாப்பாடு, தொடர்ந்த பேய் உழைப்பு ஏற்கனவே பலவீனமான உடலை மேலும் பலவீனமாக்குகிறது. சுவாசநோய் இருப்பது கண்டறியப்படுகிறது.
கடைசியில் சிதம்பரம் என்பவருக்கு எழுதுகிறார் “டாக்டர்கள் சீட்டுக்கிழித்து விட்டார்கள். இரண்டு பக்கமும் சுவாசப் பையில் ஓட்டை விழுந்து விட்டது. நான் ஊருக்குக் கிளம்பி வந்துவிட்டேன். பாகவதரிடமிருந்து பணம் வர லேட்டாகிறது. சிகிச்சை செய்து கொள்ள ஒரு நூறு ரூபாய் அனுப்ப முடியுமா? ” என்று. “எல்லாம் மாயைதானா ஏழை எண்ணம் யாவும் வீணா?” என்ற பழைய பாடல் ஒலிக்கிறது. அவல வாழ்வு நிறைவுக்கு வருகிறது. பாரதி வாழ்ந்த அதே அவல வாழ்க்கை. இந்தத் துன்பக்கேணியிலிருந்து அவருக்கு சாபவிமோசனம் கிடைப்பது மகாமசானத்தில்தான்.  செத்துச்செத்துப் பிழைத்த இந்த வாழ்க்கையில் பிறந்தவைதான் சாகாவரம் பெற்ற அத்தனை கதைகளும். அவருடைய மகள் தினகரியின் உதவியோடு இளையபாரதி தொகுத்துள்ள இப்புத்தகம் “புதுமைப்பித்தன் பதிப்பக”தின் வெளியீடு. நிற்க.
கி ரா அவர்களுடைய கடிதங்களின் பெருந்தொகுப்பு வரப் போவதாக கேள்விப்படுகிறேன். உங்களுக்கு கடிதங்களைப் பிரசுரிக்க எண்ணமுண்டா? குறிப்பாக பிற எழுத்தாளர்களுக்கு மற்றும் மனைவிக்கு எழுதிய கடிதங்களை?
அன்புள்ள,
கிருஷ்ணன் சங்கரன்
***
அன்புள்ள கிருஷ்ணன சங்கரன்
கடிதங்களில் இருவகை, அந்தரங்கமானவை, பொதுவானவை. அந்தரங்கமான கடிதங்களை உடனடியாக பிரசுரிக்கக்கூடாது. அது அக்கடிதம் எழுதப்பட்டவரின் அந்தரங்கம் சார்ந்ததும்கூட
புதுமைப்பித்தனின் இக்கடிதங்கள் பல ஆண்டுகளாக கமலா அவர்களிடம் இருந்தன.  எம்.வேதசகாயகுமார் அவர்கள் பலமுறை கமலா அவர்களிடம் புதுமைப்பித்தனைப்பற்றிய தகவல்களைக் கேட்டிருக்கிறார். இக்கடிதங்களைப்பற்றி அவர் வாய் திறக்கவில்லை.  ஆனால் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்
பல ஆண்டுகளுக்குப்பின் அவருக்கு அகவை முதிர்ந்து வாழ்க்கையின் இறுதிநாட்களில் நிற்கையில்தான் இக்கடிதங்களை இளையபாரதிக்கு கொடுத்து அச்சில்வர உதவியிருக்கிறார். ஏனென்றால் அப்போது காலங்கள் கடந்துவிட்டன. அவர் மறைந்துவிட்டார், இவர் முதிர்ந்துவிட்டார். அந்தரங்கம் வெளியாகும்போது உருவாகும் கூச்சம் ஏதும் அவை வெளியாகும்போது எழுவதில்லை
ஜெ
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67
அடுத்த கட்டுரைமாத்து