சூஃபிதர் -கடிதம்

kollu

 

சூஃபிதர்

அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு வணக்கம்.

 

சென்னை திருவல்லிக்கேணியின் பெரிய பள்ளிவாசலை அன்றைய ஆற்காடு நவாபுகள் 1765-ஆம் ஆண்டில் கட்டிக் கொடுத்துள்ளனர். எங்கள் வேலூர் மாவட்டத்து முஸ்லிம்களில் இன்றைக்கும் திருமணம், பெருநாள் போன்ற விழாக்காலங்களில் புதுத்துணி எடுக்க சென்னையின் இந்த பகுதிக்கு வருவது வழக்கம். அப்படியானதொரு சந்தர்ப்பத்தில் 90-களுடைய பிற்பாதியின் ரம்ஜான் மாதமொன்றில் இங்கு நுழைந்தேன். நோன்பு முறிக்க அமர்ந்திருந்த முஸ்லிம்களுக்கு  கஞ்சி, வடை, தண்ணீர், வாழைப்பழம் என ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விருந்தோம்பலை செய்து கொண்டிருந்தவர்கள் குல்லா போட்டிருந்தாலும், கையேந்தி பிரார்த்தித்த போதிலும் தொழுகையில் கலந்துகொள்ளவில்லை என்பதை மட்டும் கவனித்தேன். அதன் பிற்பாடு இருபது ஆண்டுகள் கழித்து ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இந்த “சூஃபிதர்” அறிமுகமாயினர். ஆம், பிறப்பால் இந்த அமைப்பினர் சிந்தி மொழி பேசும் இந்துக்கள். ஆனால் கடந்த 35 / 40 ஆண்டுகளாக ரம்ஜான் நோன்பு நோற்கும் இரண்டாயிரம் முஸ்லிம்களுக்கு மாலை நேரத்தில் “நோன்பு துறப்பு”க்கான பொருட்களுடன் இந்த  தொண்டூழியர்கள் வந்துவிடுகின்றனர். குறைந்தபட்சம் இரண்டாயிரம் பேர்கள்வரை முழுக்க முழுக்க முஸ்லிம்களே இந்த அன்னதானத்தின் பயனாளிகள்.  நாற்பதாண்டுகள் என்பது ஒரு தலைமுறையின் முழு ஆயுட்காலம். இனியும் அது தொடர்ந்து நீடிக்கும் என நம்புகிறேன். சூஃபிய பண்பின் தனிச்சிறப்பு “மதம்” என்பதை பின்னுக்கு தள்ளும் அரவணைப்பே.
மகா அலெக்சாண்டர், முகம்மத் பின் காசிம் போன்றவர்களின் காதுகளுக்கும் இந்த ’சிந்து சமவெளி’ பற்றிய ஏதோவொரு அம்சம் போய்ச் சேர்ந்துள்ளது. தொன்மையான நிலம் அது. அகதிச் சமூகமொன்று கடல்கடந்த பெருநகரமொன்றில் கொடுக்கும் கரங்களாக உயர்ந்திருப்பது, அதுவும் பிறமத பக்தர்களுக்கு அன்னதானம் அளிப்பது போற்றத்தக்க புனிதச் செயல். பூஜ்ய தாதா ரத்தன் சாஹிப் அவர்களின் பணியை கூப்பிய கரங்களுடன் நினைவுகூர்கிறேன். சுட்டிக்காட்டிய தோழர் சிவக்குமாருக்கும், அதை கவனப்படுத்திய தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கொள்ளு நதீம்,
முந்தைய கட்டுரைராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5
அடுத்த கட்டுரைசிரபுஞ்சியின் மாமழை-கடிதங்கள் 2