யானை டாக்டர், தி ஹிண்டு

FkmRL43a

தமிழ் ஹிந்து –சிறுமையைக் கடத்தல்

அன்புள்ள ஜெ

திருவனந்தபுரம் ஹிந்து நாளிதழில் இந்தக் கட்டுரையை வாசித்தேன். யானை டாக்டர் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த விமர்சனக்குறிப்பு. அந்தக்கதையின் அழகியல் வடிவம் மற்றும் உள்ளடக்கம் பற்றி மிகச்சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். அதாவது வாழ்க்கை வரலாற்றிலிருந்து எழுந்து மெல்ல ஒரு பேரபிள் ஆக மாறுகிறது என்று. மிக அழகான ஒரு குறிப்பு அது. ஏனென்றால் இங்கே அந்தக் கதையை  வாசித்தவர்கள் அந்த அழகியல்மயக்கத்தை புரிந்துகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். யானை அப்படியெல்லாம் தேடிவருமா என்பதுதான் இங்கே அதிகமாகப் பேசப்பட்டது. எங்கே யதார்த்தம் எங்கே பேரபிளின் ஃபேண்டஸி என்பது ஒன்றாக்க் கலந்து இருப்பதுதான் அதை வசீகரமான கதையாக ஆக்கியது. அதை இந்த விமர்சகர் சொல்லியிருக்கிறார்

ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் இது ஒரு தமிழ்க்கதை என அவருக்குத்தெரியவில்லை. மலையாளக்கதையாக நினைத்தே எழுதியிருக்கிறார். இந்தக்கதை இங்கே வெளிவந்து பெரிய அலையை உருவாக்கியிருக்கிறது. பல ஆயிரம் பிரதிகள் வெளியாகியிருக்கிறது. பாடப்புத்தகம் வரை வந்திருக்கிறது. ஆனால் இங்கே உள்ள சென்னை இந்துவில் ஒரு வரிகூட இதைப்பற்றி எழுதப்பட்டதில்லை என்பதுதான் ஆச்சரியம்

மகேஷ்

***

Mammoth misuse of the wild

***

அன்புள்ள மகேஷ்

இங்குள்ள ஹிந்து ஆங்கில நாளிதழில் என்னைப்பற்றி பெரும்பாலும் எதுவுமே வந்ததில்லை- சென்ற முப்பதாண்டுக்கால இலக்கிய வாழ்க்கையில் அசோகமித்திரன் விஷ்ணுபுரம் குறித்து எழுதிய விமர்சனம் ஒன்றே விதிவிலக்கு. அதுவும் அவருடைய விருப்பத்தால் வெளிவந்தது. தமிழுக்கு முதல்முறையாக என் எழுத்துக்கென ஒரு சர்வதேச விருது கிடைத்தபோதுகூட  வெறும் நாலைந்துவரி செய்திக்குறிப்புதான். ஒரே நாவல் எழுதிய சல்மா பற்றி இருபதுக்கும் மேற்பட்ட முறை அதில் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். பெருமாள் முருகன் உட்பட பெரும்பாலும் காலச்சுவடு எழுத்தாளர்களைப்பற்றி மட்டுமே அதில் எழுதப்படுகிறது.

நான் ஏற்கனவே சொன்னதுபோல அதற்குக் காரணம் உளமுதிர்ச்சி இல்லாத, இலக்கியம் என்னும் அமைப்புமேல் நம்பிக்கை இல்லாத  இதழாளர்கள். இவர்கள் தங்களை இலக்கியவாதிகளை உருவாக்கவும் மறைக்கவும் வல்லவர்கள் என்று அசட்டுத்தனமாக எண்ணிக்கொள்கிறார்கள். இவர்கள் எழுதி எவரையும் முக்கியமானவர்களாக ஆக்க முடியாது, எவரையும் முற்றாக மறைக்கவும் முடியாது. அதை என் ஒருவனைக்கொண்டாவது அவர்கள் புரிந்துகொண்டிருக்கவேண்டும்.

இலக்கியம் என்பது ஒரு பெரிய அறிவியக்கம். நாம் முதன்மையாகக் கடன்பட்டிருப்பது அதற்கே. நாம் செய்வன ஒவ்வொன்றும் அதன்பொருட்டே. நாற்பதாண்டுகளில் நவீனத்தமிழிலக்கியத்தை முற்றாக இருட்டடிப்பு செய்த இதழ் அது. என்றும் அது வரலாறாகச் சொல்லப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். குறைந்தபட்ச நுண்ணுணர்வு கொண்டவர்கள் அந்த வரலாற்றை அஞ்சுவார்காள். இவர்கள் வரலாற்றை கற்பனைசெய்துகொள்ள முடியாதபடி மிகச்சிறியவர்கள்

ஜெ

முந்தைய கட்டுரைராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2
அடுத்த கட்டுரைதொல்வெளி இசை