சுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்

silu

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

புதுப்பட்டி ஆர்.சி தெருவிலிருந்து ஒரு சிறுவனாக தன்னை உணரும் கதைசொல்லி சிலுவைராஜ் தன்னையும் தன் சூழலையும் நிமித்தமாகக் கொண்டு கதை சொல்ல ஆரம்பிக்கிறான். புதுப்பட்டியின் வறுமையும் அவ்வறுமை உப-விளைவாய் உருவாக்கியிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் பாரபட்சமும் அக்கதையில் காலமாற்றத்துக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

புதுப்பட்டி ஆர்.சி தெரு சிறுவர்களின் வறுமையான சூழலிலிருந்து ஆறுதல் அளிப்பவையாக அச்சிறுவர்களின் ஓயாத விளையாட்டும்  திருவிழாக்களும் இருக்கின்றன. சிறுமலை தேவாலயத் திருவிழா, இனிப்புகளும் தின்பண்டங்களும் இராட்டினக் குதிரைகளுமாக குழந்தைகளுக்கு பெரும் குதூகலம் அளிக்கின்றது. சிலுவைராஜ் தன் பாட்டி சொல்லும் கதைகள் மூலம் கற்பனை உலகிற்குள் பிரவேசிப்பவனாகவும் அவ்வப்போது அதில் சஞ்சரிப்பவனாகவும் இருக்கிறான்.

அச்சத்தால் ஏற்பட்ட விலக்கம் தனது தந்தையிடம் சிலுவைராஜிற்கு சிறுவயது முதலே இருக்கிறது. அவன் இளைஞனான பின்னும் அது நீடிக்கிறது. சிலுவைராஜின் தந்தை தன் தலைமுறையில் தன் கிராமத்திலிருந்து விடாப்பிடியாக வெளியேறி இராணுவத்தில் சேர்ந்து தன் குடும்பத்துக்கு மாதாமாதம் மணியார்டர் அனுப்புகிறார். கைக்கும் வாய்க்கும் பத்தாமல் இருக்கும் அக்குடும்பமே அவர்கள் தெருவில் பரவாயில்லை என இருக்கும் குடும்பமாக இருக்கிறது. அதுவே பலருக்குப் பொறாமையை அளிக்கிறது. ஓயாமல் சக சிறுவர்களுடன் தெருவில் விளையாடுவதும் கடைத்தெருவுக்குச் சென்று வேடிக்கை பார்ப்பதும் மலையடிவாரம் சென்று வேட்டையாடுவதும் சிலுவைராஜின் பால்யத்தை நிரப்புகிறது. தெருவிலிருப்பவர்களின் ஓயாத வம்பும் பூசலும் வசைகளும் சிலுவைராஜ் எப்போதும் காணக் கூடியதாகவும் கேட்கக் கூடியதாகவும் இருக்கிறது. பள்ளி ஆசிரியர்கள் சிலர் காரணமின்றி கடுமையாக நடந்து கொள்கின்றனர். மனம் போன போக்கில் தண்டிக்கின்றனர்.

சிலுவைராஜ் அந்த சூழலிலும் மொழியும் அறிவியலும் விரும்பி கற்கிறான். வார இதழ்களின் சித்திரக்கதைகளை வாசிக்கிறான். மிகக் குறுகிய எல்லைக்குட்பட்ட அவனது புற உலகிலிருந்து அவனது வாசிப்பு அவனை விரிவடையச் செய்கிறது. பள்ளி மேல் வகுப்புக்கு மதுரை சென்று படிக்கிறான். அவன் அறிந்ததை விட பெரிய உலகம் அவனுக்கு அறிமுகமாகிறது. பலவிதமான மாணவர்கள். பலவிதமான ஆசிரியர்கள் மற்றும் பாதிரியார்கள். ஆனால் சாதியடையாளம் மறைமுகமான ரூபங்களில் விதங்களில் பலரால் வெளிப்படுத்தப்பட்டவாறே இருக்கிறது. தனது கிராமத்தில் கட்டின்மையை உணர்ந்தவனுக்கு பள்ளி விடுதியின் கெடுபிடி பழக்கங்கள் புதிதாய் இருக்கின்றன. அதிலும் பழகிக் கொள்கிறான்.

எஸ்.எஸ்.எல்.சி முடித்து பாளையங்கோட்டை சேவியர்ஸ் கல்லூரியில் படிக்கிறான். கிருத்துவ இறையியலும் விவிலியமும் பொதுவுடமையும் அவனைக் கவர்கின்றன. தனது வாழ்க்கை அனுபவங்களுடன் அவற்றை இணைத்து அவன் பரிசீலிக்கிறான். முதிரா இளமையின் இயல்பான பகல்கனவுகள் அவன் மனத்தை ஆக்கிரமிக்கின்றன. ஹாலிவுட் திரைப்படங்களும் ஹிந்தி படப் பாடல்களும் மனத்திரையில் நீங்காமல் இருக்கிறது. வாழ்க்கை என்பது என்ன என்ற கேள்வி சுற்றி சுற்றி அவனிடம் வருகிறது. விலங்கியல் படிக்கிறான். கல்லூரியில் டியூட்டராக வேலைக்குச் சேர்கிறான். தமிழ் படிக்கிறான். தற்காலிகமாக பல வேலைகள் பார்க்கிறான்.

வேலைக்குச் செல்ல துவங்கியதும் குடும்பத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அவன் தன் ஊதியத்தின் பெரும்பகுதியை குடும்பத்துக்காகத் தர வேண்டும் என்று அவனது அப்பா எதிர்பார்க்கிறார். அவனுடைய அம்மா அவனிடம் வைக்கும் கோரிக்கைகள் முற்றிலும் லௌகிகம் சார்ந்தவையாக இருக்கின்றன. எதிர்பாராத விதமாக வேலை பறிபோகிறது.

கிராமத்தில் அவனுடன் பள்ளியில் படித்த நண்பர்கள் கூலிவேலைக்கு தினமும் செல்கின்றனர். அவர்கள் உலகில் குடியும் சூதாட்டமும் மட்டுமே இருக்கிறது. அவர்களிடமிருந்து மனவிலக்கம் அடைகிறான். வத்திராயிருப்பு நூலகத்தில் உள்ள நூல்கள் அவனுக்குத் துணையாகின்றன. தினசரி அவனது அம்மாவின் குத்திக்காட்டல்களையும் பேச்சுகளையும் கேட்க வேண்டியதாயிருக்கிறது. நக்சல் இயக்கத்தினர் அறிமுகமாகிறார்கள். காவல்துறை சிலுவைராஜைக் கண்காணிக்கிறது.

பலவிதங்களிலும் தனிமை தன்னைச் சூழ்ந்திருக்க தனது கிராமத்தில் கடும் இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழையைக் காணும் போது அதன் தீவிரத்தில் தன் இருப்பை அறியும் அனுபவம்  சில கணங்களுக்கு கிடைக்கிறது. அதைப் போன்ற அனுபவம் பெங்களூரின் பூங்கா ஒன்றில் சிலுவைராஜுக்கு வாய்க்கிறது. தான் வாழ்வில் கடந்த பல விஷயங்களுக்கும் அடைந்த பல துயர்களுக்கும் கலங்காமல் ஒரு துளி விழிநீர் சிந்தாமல் இருந்த சிலுவைராஜ் பெங்களூரின் பிளாட்ஃபாரம் ஒன்றில் கண்ணீர் விட்டு அழுகிறான். அவ்வழுகை அவன் மனத்தை லேசாக்குகிறது. அது அவன் சமூகத்துக்கு அளித்த மன்னிப்பும் கூட.

’’சிலுவைராஜ் சரித்திரம்’’ எவ்விதத்திலும் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று. ராஜ் கௌதமன், கதைசொல்லியான ஒரு சிறுவனின் பார்வையிலும் சித்தரிப்பிலுமே புதுப்பட்டி கிராமத்தையும் பிரிட்டிஷ் ஆட்சியையும் கிருத்தவ நிறுவனங்களையும் அப்பிராந்தியத்தின் சாதிக் கலவரங்களையும் காட்டியுள்ளார். அது புதுப்பட்டியைப் பற்றிய முழுமையான சித்திரத்தை உருவாக்குகிறது. தேவாலயப் பங்குகளையும் மாணவர் விடுதிகளையும் சித்தரித்திருக்கும் விதம் அங்கிருக்கும் அரசியலையும் பாகுபாடுகளையும் வாசகன் ஊகிக்கும் விதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

வலியும் துயரமும்தான் வாழ்வெனத் திரண்டு அனுபவமாகிறதா என்ற கேள்வியை எழுப்பி அதற்கான பதிலை வாசகன் கண்டடையட்டும் என நாவல் விட்டுவிடுகிறது.

பிரபு மயிலாடுதுறை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 64
அடுத்த கட்டுரைநான் எழுதலாமா? -கடிதங்கள்