ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
ஜெ
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளித்தது. நான் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கோபமாக ‘ராஜ் கௌதமன் அயோத்திதாசரின் ஸ்கூல் ஆஃப் தாட்டைச் சேர்ந்தவர். எப்படி சுந்தர ராமசாமியின் ஸ்கூல் ஆஃப் தாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்லலாம்?” என்றார்.
நான் கேட்டேன். அயோத்திதாசர் சிந்தனைகள் பொதுவாக தலித் சிந்தனையாளர்களுக்கே தெரியாத காலம் இருந்தது தெரியுமா? ஞான அலாய்ஸியஸ் அவற்றை புத்தகமாகத் தொகுத்தபிறகுதான் தலித் அறிவுஜீவிகளுக்கே அவரைப்பற்றித் தெரியும். அதன்பிறகுதான் ராஜ் கௌதமன் அவரைக் கவனிக்கிறார். அவர் அதற்குமுன் தானே ஒரு ஸ்கூல் ஆஃப் தாட் ஆக மாறிவிட்டார் தெரியுமா? நண்பருக்குத் தெரியாது.
சரி, அயோத்திதாசரை ராஜ் கௌதமன் எப்படி எதிர்கொள்கிறார் தெரியுமா? அதுவும் தெரியாது. மொத்தத்தில் ஒன்றுமே தெரியாது. ஆனால் கொந்தளித்துவிட்டார். சரி, ராஜ் கௌதமனுக்கு வாழ்த்துத் தெரிவித்து ஒரு வாழ்த்தாவது போட்டீர்களா? இல்லை, அதிலே பிரச்சினைகள் உள்ளன என்றார். ஏனென்றால் அவர் இடதுகட்சிக்காரர். இப்படித்தான் இருக்கிறார்கள்.
இந்தச்சூழலில் இவ்விருது மிகப்பெரிய முக்கியத்துவம் உடையது. வாழ்த்துக்கள்
சிவராம்
அன்புள்ள ஜெ
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அவருடைய கருத்துக்களுடன் பெரும்பாலும் எனக்கு உடன்பட முடியவில்லை. அவருடைய கருத்துக்களை அவர் ஆய்வுகளிலிருந்து எடுத்துக்கொள்ளவில்லை என நினைக்கிறேன். அவர் அக்கருத்துக்களை ஆய்வுசெய்து நிறுவுகிறார். ஆகவே அவற்றை ஆய்வுகள் என சொல்லமுடியாது. அவை அரசியல் வாதங்கள்
ஆனால் அந்த வாதங்களை அவர் செறிவான மொழியில் கூர்மையான செய்திகளுடன் ஒரு ஆய்வாளருக்குரிய அடக்கத்துடன் சொல்கிறார். அந்நூல்கள் நம் மரபைப்பற்றிய பார்வையை முழுமையாகவே மாற்றியமைக்கின்றன. ஆகவே அவை மிகவும் முக்கியமானவை. அவருக்கு என் வாழ்த்துக்கள்
மூர்த்தி.ஆர்
அன்புள்ள ஜெ
ராஜ் கௌதமனுக்கு வாழ்த்துக்கள். நான் அவரை பொதுவாகவே வாசித்திருக்கிறேன். திருக்குறள் குறித்த அவருடைய நூல் பொதுவான பார்வையை அளிப்பது
ராஜ் கௌதமனுக்குரிய இடத்தை நீங்கள் மிகச்சரியாக வகுத்து அளித்திருக்கிறீர்கள். தமிழ்ப்பண்பாட்டு உருவாக்க ஆய்வுகளில் பி டி சீனிவாச அய்யங்கார். மார்க்ஸிய நோக்கிலான ஆய்வுகளில் கைலாசபதி. விளிம்புநிலை ஆய்வுகளில் ராஜ் கௌதமன் என்பது மிகச்சிறந்த வரையறை. இவர்கள் மூவரையும் ஒப்பிட்டு நிறையவே எழுதமுடியும்
என்.சத்யா