சிரபுஞ்சியின் மாமழை-கடிதங்கள் 2

IMG_20180711_161153

சிராப்புஞ்சியின் மாமழை

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

 

தங்களின் சிராப்புஞ்சியின் மழைப்பொழிவு  மற்றும் மேகாலயா  மாநிலத்தின் தற்போதைய  வளர்ச்சியும் மக்களின்வாழ்வாதார முன்னேற்றம்  பற்றிய பயண கட்டுரை ஒரு பெரிய திறப்பை அளித்தது.அதில் சாலைகள்  அமைப்பது எப்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்ற உண்மையை அனுபவபூர்வமாக அறிந்து எழுதியிருந்தீர்கள்(இது நம்மவர்களுக்கு இன்னும் புரியவில்லை).

 

 

மேலும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு – மதுரை கல்லூரி பேராசிரியர் திரு வாசுதேவன் அவர்களின் தொழில் நுட்ப முறை -சாலைகள் அமைக்கப்பட்டு அவை கடும் மழையிலும் தாக்குப் பிடிப்பதை பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள்.எனக்கும் அவரின் தொழில்நுட்ப முறை மூலம் அவரின் நேரடி கண்காணிப்பில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு (நான் பணி புரிந்த ரசாயன தொழிற்சாலையில்) சோதனை முறையில் சாலை போட்ட அனுபவம் உண்டு.ஏனோ நமது மழையற்ற சூழ்நிலையில் அதன் உபயோகம் அவ்வளவாகத் தெரியவில்லை.

 

மேலும் மேகாலயா முன்னாள் முதல்வர் Dr.முகுல் சங்மாவின் பணியை பாராட்டி எழுதி அவர் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் P .A . சங்மாவின் புதல்வர் என்று தவறுதலாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.உண்மையில் தற்போது முதல்வராக இருக்கும்  திரு. கொனார்ட் சங்மா தான் அவரின் புதல்வர்.

 

அன்புடன்,

 

அ .சேஷகிரி.

 

 

 

அன்புள்ள ஜெ

 

சிரபுஞ்சியின் மாமழை கட்டுரை கனவுக்குள் கொண்டுசென்றது. பூமி வாழ்வதற்கென்று மாமழை பெய்கிறது. அப்படிப்பட்ட கருணையின் கீழ் வாழத்தெரியாமல் போரிட்டு பூசலிட்டு வறுமையில் தவிக்கிறார்கள் மனிதர்கள். நமக்கு இங்கே மழையே இல்லை. ஆனால் நாம் உழைத்து ஒரு வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறோம். முகுல் சங்க்மா போல நமக்குக் காமராஜர். அவர் உருவாக்கிய அடித்தளம்தான் நம்மை வளரச்செய்தது. சாலைகள், பள்ளிக்கூடங்கள், அணைக்கட்டுகள் எல்லாம் அவர் அளித்தது

 

ஆனால் இன்றைக்கு நாமும் மதவாதம், இனவாதம், மொழிவெறுப்பு போன்ற சில்லறை உணர்வுகளால் போரிட்டு அழியும் சமூகமாக ஆகிக்கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இன்றைக்கு இங்கேயும் எல்லாவகையான வளர்ச்சிகளையும் தடுக்கும் தன்னார்வக்குழுக்களின் ஆதிக்கம் அரசியலில் கூடிவிட்டது. அவர்களிடம் கைச்செலவுக்குக் காசுவாங்கும் உதிரி அரசியல்வாதிகளும் அவர்களை வளர்த்துவிடும் கனிமச்சுரண்டல்காரர்களும் தமிழகத்தை இன்றைக்குத் தங்கள் பிடியில் வைத்திருக்கிறார்கள்.

 

செல்வகுமார்

 

அன்புள்ள ஜெ

 

சிரபுஞ்சியின் மாமழை அற்புதமான ஒரு பயணக்குறிப்பு. மழைவர்ணனை மனதைக் கொந்தளிக்கச் செய்தது. என்ன ஒரு கனவு. அருவி ஒன்றுக்குக் கீழே தொடர்ச்சியாக பத்துநாட்கள்

 

வந்ததுமே அடுத்த பயணம். நடுவே குமரிமாவட்டமே சிரபுஞ்சிக் களையுடன் இருக்கிறது. சார் சும்மா சொல்லக்கூடாது. வாழ்கிறீர்கள்

 

ராம்

 

அன்புள்ள ஜெ

 

சிரபுஞ்சியின் மாமழை அற்புதமான கட்டுரை. நீங்கள் மழைபற்றி எழுதும் எல்லா கட்டுரைகளும் அழகு. இவ்வளவுக்கும் உங்களூர் மழையிலேயே நனைந்துகொண்டிருக்கிறது. மழையை நீங்கள் யானை போல விரும்புகிறீர்கள் என தோன்றுகிறது

 

அருண்ராஜ்

முந்தைய கட்டுரைசூஃபிதர் -கடிதம்
அடுத்த கட்டுரைதலைப்புகள்