சிரபுஞ்சி -கடிதங்கள்

 

முகுல் சங்மா
முகுல் சங்மாeka

 

சிராப்புஞ்சியின் மாமழை

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,

 

உங்கள் சிரபுஞ்சி மாமழை பயண அனுபவ கட்டுரை அலாதியாக இருந்தது. பெருமழைப் பொழிவின் விவரிப்பு  காட்சி அனுபவமாக அபாரமான  மன எழுச்சி தந்தது.

 

மேகமில்லா வானத்து நிலவின் காட்சியில் மயங்கியிருக்கும் குழந்தைக்கு அன்னை ஊட்டமழிப்பது போல மேகாலாயாவின் வரலாற்று சித்திரத்தின் விவரிப்பு இருந்தது. பழங்குடி மனநிலை, வடகிழக்கின் அரசியல் வரலாறு,  மேலைநாட்டில் கற்ற முற்போக்கு அரசியலாளர்களின் பொதுத்தன்மை என அறிதலும் புரிதலும் ஆங்காங்கே.

 

//

அதுவும் என்ன மழை! மழைநீர் கூரையிலிருந்து சரடுகளாகக் கொட்டுவதைப் பார்த்திருப்போம். அருவிபோல வளைந்த கண்ணாடிப்பாளமாக கொட்டுவதை இங்கேதான் பார்க்கிறேன். முழுநாளும், ஒருமணிநேர இடைவெளி கூட இல்லாமல் பெய்தபடியே இருக்கிறது. பெயல்கால் மறைத்தலில் விசும்புகாணலரே என்றார் கபிலர். இது காலற்ற மழை. ஒற்றை படலம். செங்குத்தாக நின்றிருக்கும் கடல்.

 

அருவியின் உறுமல் மட்டும் கேட்டது. மழைகொட்டிக்கொண்டிருந்தது. முகில் திரை. குகைச்சிங்கத்தின் ஓசை போல அருவி ஒலித்தது

//

 

வரிகள் மலைஅருவிக்குள் குளித்து வெளிவந்த சில நொடித்த தருணம் போல, என் நாளினை நிறைக்கிறது.

 

என்றும் அன்புடன்,

உங்கள் வாசகன்,

சிவமணியன்

 

அன்புள்ள ஜெ

 

சிரபுஞ்சியின் மாமழை தலைப்பை வாசித்ததுமே ஒரு கிளர்ச்சி. அங்கே பெய்யும் மழையை மாமழை என்றுதான் சொல்லமுடியும். சின்னவயசில் வாசித்தது. அதன்பின்னர் எப்போதுமே ஒரு கனவாக நின்றிருந்த நிலம் அது. இன்றைக்கு ஏராளமான புகைப்படங்களும் ஆவணப்படங்களும் உள்ளன. ஆனால் ஒருவர் சென்றுவந்து வார்த்தைகளால் சொல்லும்போது கிடைக்கும் அந்த நிறைவை எந்தப்புகைப்படமும் ஆவணப்படமும் அளிப்பதில்லை.

 

பயணத்திலேயே இருக்கிறீர்கள் சார். நினைத்தால் பொறாமை வரவில்லை. உங்களுடன் மானசீகமாக வாழ்கிறோம் என தோன்றுகிறது

 

எஸ்

அன்புள்ள ஜெ

 

சிரபுஞ்சியின் மாமழையில் அளிக்கப்பட்டுள்ள நுட்பமான சித்திரங்கள் முக்கியமானவை. அவை சாலை அந்த மாநிலத்தை எப்படி மாற்றின என்பதை காட்டுகின்றன. முகுல்சங்மா எப்படிப்பட்ட சாதனையாளர் என்பதை அறிந்தபோதே அவர் அடுத்த தேர்தலில் தோற்றார் என்பதும் ஞாபகம் வருகிறது.

 

அங்கே அன்னிய நிதியுதவிபெறும் தன்னார்வக்குழுக்கள் உருவாக்கிய அழிவு பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். அவர்கள் இனக்குழுக்களுக்கு இடையே அவநம்பிக்கையை உருவாக்கினார்கள். இந்திய அரசின் மீதான நம்பிக்கையைக் குலைத்தார்கள். அதன் வழியாக தீவிரவாதத்தை உருவாக்கி அந்த மாநிலத்தை இருட்டுக்குள் வைத்திருந்தார்கள்.

 

அதே குழுக்கள் இன்றைக்கு இந்தியா முழுக்கச் செயல்படுகிறார்கள். எல்லா இடங்களிலும் அவர்களின் செயல்பாடுகள் இதேதான். எல்லாவகையான வளர்ச்சித்திட்டங்களையும் அழிவுத்திட்டமாகக் காட்டுவது, இந்திய அரசு மீதும் நீதிமன்றம்மீதும் ஜனநாயகம் மீதும் அவநம்பிக்கையை உருவாக்குவது

 

போகிற போக்கைப்பார்த்தால் கொஞ்சநாளில் நம் இளைஞர்கள் மேகாலயாவுக்கு வேலைதேடிச் செல்லவேண்டிய நிலைமை வரலாம்

 

ஜெகன்னாதன்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 53
அடுத்த கட்டுரைராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3