பிழை -கடிதம்

saraswatibai

பிழையின் படைப்பூக்கம்

வணக்கம் திரு ஜெயமோகன்
 தளத்தில் தொடர்ந்து வந்த கடிதங்கள் மூலம் பிழை சிறுகதையை அடைந்தேன். படிக்கையில் ஸ்டீபன் ஸ்வெய்க் எழுதும் கதைகளை படிக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது. ஸ்வெய்கின் பெரும்பாலான கதைகள் இருவருக்குள் நடக்கும் உரையாடல் மூலமே சொல்ல பட்டிருக்கும். நம்மிடம் கதை சொல்பவர் மற்றொருவருடன் அமர்ந்திருப்பார். அவர் அங்கிருந்து தன் கதையை சொல்ல துவங்குவார். அது நமக்கு உரையாடலாக தரப்பட்டிருக்கும். இவ்வாறு உரையாடல்கள் மூலம் கதை சொல்கயில் வாசகனை இன்னும் சற்று சுலபமாக கதைக்குள் இழுக்க முடிகிறது.
 பிழை கதையில் அவ்வாறாக நம்மிடம் கதை சொல்பவர் லக்ஷ்மண் ரானேயுடன் பேச அமர்கிறார். அவரைப்பற்றி சில குறிப்புககளை மட்டுமே தந்துவிட்டு நேராக ரானேயின் கதைக்குள் செல்கிறோம். ரானேவை பற்றி சற்று தெரியவருகையிலேயே கதை காந்தியை நோக்கி நகர்கிறது. காந்தியின் உணர்ச்சிகளை நாமும் அநுபவிப்பதற்குள் விஜய் பாட்டின் கதைக்குள் செல்கிறோம். அங்கிருந்து பிரேம் அதிப். பிறகு இசையமைப்பாளர் வியாஸ் மற்றும் பாடகி சரஸ்வதி.
கதையின் முதல் வரியில் சொன்னது போல பெரிய விஷயங்களின் பக்கத்திலேயே நாமும் இருந்துகொண்டிருக்கிறோம். காந்தி தன் வாழ்நாளில் பார்த்த ஒரே படம் என்ற பெரிய விக்ஷயத்தில் துவங்குகிறோம்.  காந்தி மூலம் கடவுளை கண்ட தருணம், ரயில்வே ஊழியரின் மகனான விஜய் ஒரு குட்டி நகரம் போல் உள்ள ஸ்டூடியோ வை கட்டி படம் இயக்குதல், தன் காலில் விழுந்தாலும் அந்த வணக்கம் ராமனுக்கே செல்ல வேண்டும் என ராமசரணம் சொல்லும் பிரேம், இருபது வருடங்கள் விற்ற பாடல்களை இசையமைத்த வியாஸ், ஏழு வயதிலிருந்து பாட துவங்கி அதிகளவு சம்பளம் வாங்கும் பிரபல பாடகி சரஸ்வதி என பெரிய விஷயங்களின் மத்தியிலே ரானே இருக்கிறார். இந்த கதையின் மூலம் நாமும் இருக்கிறோம்.
தலை அசைத்தது பிழையென தோன்றுகிறது, பிறகு அதுவே ரானேவிற்கு பிடித்தும்விடுகிறது. சொல்லமுடியாதவற்றை உவமைகள் மூலமே சொல்ல முயல்கிறோம்.
பிரேமின் அந்த தலையசைப்பு ஏன் அவரை பாதித்தது என சொல்ல வைரங்கள் நடுவில் கூழாங்கல் என்ற உவமையால் சொல்கிறார்.
பிறகு ஏன் அது பிடித்தும் போனது என்பதற்கு அழகான பெண்ணின் முகத்திலுள்ள பரு நம்மை அவள் மேலும் அழகுடையவள் என உணரச்செய்கிறது என்ற உவமையின் மூலம் விளக்கமுயல்கிறார்.
பீனா மதுர பாட்டு அவருள் ஏற்படுத்திய தாக்கத்தை ரெய்ன் ஃபாய் ஏற்படுத்தவில்லை என்பதை விளக்க சக்ரவர்த்தியின் முன் சேடிப்பெண் என மற்றுமொரு உவமை கொண்டு முயல்கிறார்.
பிறகு எடுத்த படத்தில் ராமன் தலைஅசைக்காமல் அழுது சரிந்து விழுவதை காண்கயில் ஏமாற்றம் அடைந்ததை நாண் அறுந்த வில் போல நான் தளர்ந்தேன் என உவமையாய் கூறுகிறார்.
மீண்டும் பழைய படத்தை பார்த்து அதில் வந்த பாடல் ராமன் தலை அசைக்கும் காட்சியை நோக்கி தன்னை யானை துதிக்கையால் தூக்கி கொண்டது போல எனவும் காட்டருவி இட்டுச்சென்றதுபோல எனவும் உவமையால் குறிப்பிடுகிறார்.
சொல்லவருவதை நேராக சொல்ல இயலாமல் உவமைகள் மூலம் தன்னையறியாமல் கஞ்சாபோதைக்குள் சொல்லிக்கொண்டிருக்கையில் சரி என்னதான் சொல்ல வருகிறீர்கள் என நம் நாயகன் கேட்டே விடுகிறான். அவரும், என்னால் சரியாக சொல்லமுடியவில்லை என ஒரு கட்டத்தில் ஒப்பு கொள்கிறார். தோராயமாக சொல்ல முயல்கிறேன் என இலக்கியநயமாக சொல்ல முற்பட்டு சரியாக இல்லை என உணர்கிறார். ஏதோ சொல்லத்தோன்றியதை சொன்னேன் என கூறி விட்டு லட்டு தின்ன துவங்குகிறார்.
ஏதோ சொல்ல தோன்றியதை தன் ஒவ்வொரு கதைகளினூடும் சொல்பவன் எழுத்தாளன். சொல்ல முடியாதவற்றை உவமைகள் மூலம் சொல்ல முயன்றாலும் விளக்க முடியா ஒன்று எஞ்சி உள்ளது. அதை கண்டறியும் போதே வாசகன் கதையின் தரிசனத்தை அடைகிறான்.
தலைப்பிற்கான காரணத்தை கதையின் நடுவில் அறிந்தோம் என நினைத்தால் கதை முடிகயில் எது பிழை என எண்ண வைத்துவிடுகிறது. தலை ஆட்டியது பிழை என எண்ணுவதா, தலை ஆட்டியதை பிழை என எண்ணியது பிழையா, பிழையென எண்ணியதை பிடித்தது பிழையா, முதலில் பிழையென எண்ணியதை புதிய படத்தில் மாற்றியதை பார்த்தவுடன் ஏமாந்தது பிழையா, பிழை என எண்ணி அந்த காட்சியை மாற்றிய விஜய் செய்தது பிழையா, மீண்டும் சென்று பழைய படத்தை தலை அசைப்பை பார்த்து மூர்ச்சையானது பிழையா, இவையனைத்தையும் சரியாக கூற முடியாமல் போவது பிழையா என பலஎண்ணங்கள் ஓடுகின்றன.
இவ்வாறான ஒரு தேடலையும் தரிசனத்தையும் தரும் சிறுகதை அதே நேரத்தில் காந்தி, விஜய், வியாஸ், சரஸ்வதி என பெரிய மனிதர்களை பற்றியும் தேவையான அளவு விவரித்துச்செல்கிறது. ஒரு திரைப்படம் 1934இல் எப்படி உருவாக்க பட்டது என்பதை பற்றியும் விரிவாக சொல்கிறது. சிறுகதை என்பதற்கான அளவுகோல்கள் என நான் நினைத்திருந்தவற்றை விரிவாக்குகிறது, வெண்கடல் நூலை ஏன் இன்னும் வாங்கவில்லை என தூண்டுகிறது, பீனா மாதுர பாட்டை மனதில் பதித்துவிட்டது, கதையின் கடைசி வரியில் வருவது போல் அந்த மெட்டை முணுமுணுக்க வைக்கிறது. அனைத்திற்கும் நன்றி.
ஸ்ரீராம்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 60
அடுத்த கட்டுரைகல் அழகுறுதல்