கல்பற்றா நாராயணன், நான், தொலைக்காட்சி

peddi

தொலைக்காட்சியில் தோன்றுவதில்லை என்பது என் கொள்கைகளில் ஒன்று. ஆனால் கூடுமானவரை என்று சேர்த்துக்கொள்ளவேண்டும். வெவ்வேறு கட்டாயங்களால், நண்பர்களுக்காக ஓரிருமுறை தொலைக்காட்சியில் தோன்றியதுண்டு. தொலைக்காட்சிநிலையம் சென்றது இரண்டே முறைதான். தொலைக்காட்சியில் தோன்றுவதன் வழியாக ஒருவாசகனைக்கூட அடைய முடியாது என்பது என் எண்ணம்.

அச்சுநூல்களில் எவ்வளவு வேண்டுமென்றாலும் நம் முகம் தோன்றலாம். எப்படியோ அச்சில் ஒன்றை படிப்பவர் நம் சமூகத்தில் ஒரு சிறிய வட்டத்தைச் சேர்ந்தவர். தினத்தந்தி மாலைமுரசு படிப்பவரே கூட மிகச்சிறுபான்மையானவர்தான்.இங்குள்ள அத்தனை அச்சு ஊடகமும் சேர்த்தால்கூட ஐம்பதுலட்சம் பிரதி வருவதில்லை. தமிழகத்தின் மக்கள்தொகை பத்துகோடி. எதையாவது வாசிப்பவர் குறைந்தபட்ச அறிவுத்தள அறிமுகம் கொண்டவர். அப்படிக்கூட எழுத்தறிமுகம் இல்லாதவர்களே தொலைக்காட்சி பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள்.

1

தொலைக்காட்சியில் தோன்றினால் நம் முகம் நன்றாகப் பதிவாகும். பல்லாயிரம்பேர் நம் பெயரையும் முகத்தையும் மட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள். போகிற இடங்களிலெல்லாம் அடையாளம் கண்டுகொண்டு பேசி உயிரை வாங்குவார்கள். வாசகர்கள் அல்லாதவர்களிடம் அவ்வாறு பேசுவதென்பது பெரிய இம்சை. [எப்டிசார் எழுதறீங்க? வேற புக்ஸ் பாத்து அப்டியே எழுதிருவீங்க இல்ல? என்னது சொந்தமாவா? எங்க அத படிப்பீங்க? படிக்காம எப்டி எழுதறது? இதுக்குன்னு செலபஸ் உண்டா சார்? நான் கூட சின்னவயசிலே கதை எழுதுறதுண்டு சார்.]

அவ்வப்போது மலையாளத் தொலைக்காட்சிகளில் வருகிறேன். அங்குள்ள இலக்கிய நிகழ்ச்சிகள் வாசிப்பவர்கள் பார்க்கவேண்டியவை, பார்ப்பவை. முக்கியமாக நம் வீட்டுக்கு வந்துதான் படம்பிடிப்பார்கள். நாம் வாழும் சூழல் பதிவாகவேண்டும் என்று நினைப்பார்கள். கேரள தூரதர்சன் கல்பற்றா நாராயணனும் நானும் உரையாடும் ஒரு நிகழ்ச்சியை உருவாக்க விரும்பினார்கள். கல்பற்றா நாராயணன் 17ஆம் தேதி காலையே என் வீட்டுக்கு வந்திருந்தார். முழுநேர இலக்கிய விவாதமாக நாள் போயிற்று. காலையில் ஒரு நீண்ட வயல் நடை சென்றோம்

2

18 அன்று தொலைக்காட்சியினர் வந்தனர். நானும் கல்பற்றா நாராயணனும் என் வீட்டுக் கூடத்தில் அமர்ந்து இயல்பாக இலக்கியம், எழுத்தின் பின்னணி ஆகியவற்றைப் பற்றி உரையாடிக்கொண்டோம். பின்னர் ஓணம் பற்றி இன்னொரு அரைமணிநேர உரையாடல். உற்சாகமாக இருந்தது

நேற்று 19 -7-2018 அன்று மீண்டும் ஒரு தொலைக்காட்சி உரையாடல். மாத்ருபூமி தொலைக்காட்சியில் இருந்து வந்தனர். தென்குமரி மாவட்டம் பற்றி நான் பேசுவதை பதிவுசெய்து நான் குறிப்பிடும் இடங்களையும் சேர்த்து ஒர் ஆவணப்படம். என் புனைவுலகின் பின்னணியை வாசகன் சென்றடைவதற்கான ஒர் அறிமுகம். நான் மலையாளத்தில் நான்கு நூல்கள், மொத்தமாக 500 பக்கம் அளவுக்கே எழுதியிருக்கிறேன். அதற்கு இந்த அறிமுகமும் ஆவணமாக்கலும்.

3

நாளெல்லாம் மென்மழை. அதைவிட காற்று. பிளாஸ்டிக் நாற்காலிகளைத் தூக்கிப்பறக்கவைக்கும் படி விசை. கணியாகுளம் ஏரிக்கரையில் அமர்ந்தும் வயல்வரப்புகலில் நடந்தும் வேளிமலையை நோக்கி அமர்ந்தும் மூலம்திருநாள் மகாராஜா கட்டிய கல்மண்டபங்களில் எண்ணத்திலாழ்ந்தும் குணச்சித்திரநடிப்பை வழங்கினேன். மெய்யாகவே சிலகணங்களுக்குப்பின் அச்சூழலில் ஆந்து விட்டேன். அவர்கள் என்ன எடுக்கிறார்கள் என்பதே நினைவில் இல்லை

இந்தப்பருவத்தில் நனைந்த வேளிமலை அடிவாரத்தில் அலைகொப்பளிக்கும் நாற்றுவயல்களின் நடுவே மென்மழையில் உடைகள் சிறகெனப் பறக்க நின்றிருப்பவர்கள் இந்தியாவிலேயே மிக அழகான சில இடங்களில் ஒன்றில் தாங்கள் இருப்பதை உணர்வார்கள். படமெடுக்க வந்த மல்லுக்களே “எந்தா காற்று…” என மெய்சிலிர்த்துக்கொண்டே இருந்தார்கள். இறுதியாக நான் வயல்கள் நடுவே வேளிமலை நோக்கி மெல்ல நடந்து சென்றேன். அப்படியே சென்றுவிடும் எண்ணம் எழாமலில்லை.

5

இந்நிகழ்ச்சிகளுக்குப் பார்வையாளர்கள் எவர் என்று கேட்டேன். இரண்டுவகையான பார்வையாளர்கள் உள்ளனர் என்றனர். தொலைத்தொடர்கள் போன்றவற்றுக்கு ஒரு பெரிய வட்டம் உண்டு. ஆனால் புறக்கணிக்க முடியாத ஒரு வட்டம் இலக்கிய,. கலை , பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு உண்டு. இவர்கள் தரமான பார்வையாளர்கள், பெரும்பாலும் உயர்நடுத்தர வர்க்கத்தினர். ஆகவே விளம்பரமும் வருகிறது என்றார்கள். “பெண்கள் இவற்றைப் பார்ப்பதுண்டா?” என்றேன். “அரசியல்நிகழ்ச்சிகளுக்குத்தான் பெண்கள் குறைவு. இலக்கியநிகழ்ச்சிகளின் பார்வையாளர்களில் பெண்களும் இளைஞர்களுமே மிகுதி” என்றார்கள்.

கேரளப் பண்பாட்டில் குமரிமாவட்டத்தின் இடம் பற்றிபேசினேன். வேணாடு நாஞ்சில்நாடு என்னும் இரு நாடுகளின் தொகை இது. வேள்நாடு பழைய ஆய் அண்டிரனின் நிலம். ஆய்வேளிர் ஆண்டமையால் வேளிர்மலை வேளிமலையென்றாகியது. நாஞ்சில்நாடு சங்க இலக்கியக் குறிப்புகொண்டது.

IMG_20180719_131241

ஒவ்வொரு முறை இதைச் சொல்லும்போதும் ஏதேனும் ஒன்று புதியதாகத் தோன்றும். இம்முறை சொன்னேன். வேணாடு எருமைக்குரியது. நாஞ்சில்நாடு காளைக்குரியது. வேணாட்டில் வயலில் காளை இறங்கினால் கிரேன் வைத்துத்தான் தூக்கவேண்டும். அங்குள்ள ஓயாமழையும் காளைக்குரியது அல்ல. எருமை சேறோடு சேறாகத் திளைக்கும்.

மாத்ருபூமி இதழில் இருந்து ஷம்மி பேட்டி எடுத்தார். பேட்டி பேசவைப்பதற்காகவே. என் குரல் பின்னணியில் ஒலிக்க காட்சிகள் ஓடும் என்றார்.நன்றாக வாசித்துவிட்டு வந்திருந்தார்கள். ஆகவே என் எழுத்தை என்னைவிட நன்றாகவே தெரிந்துவைத்திருந்தனர்.

IMG_20180719_131418

ஆடிச்சாரலில் அத்தனை புல்விதைகளும் முளைக்கும். அப்போது எருமைகளை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும் கருமையாகி உருண்டு பளபளவென்று உடல் மின்ன “போடா மயிரே” என்ற பாவனையுடன் உலகைப்பார்த்தபடி அசைந்து அசைந்து மீண்டும் அசைந்து செல்லும். அருகே செல்லும் எருமைக்கன்று அந்த எருமைநடையை புரவிநடையாகக் காட்டும் விரைவு கொண்டிருக்கும். “ஆடிமாச எருமைமாதிரில்லா நடக்கான்” என்பது எங்களூர் சொலவடை.

மலையாளத்தில் எழுத்தாளனாக இருப்பது ஒரு பெரிய கௌரவம். அதைவிட கௌரவம் ங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும்  இரண்டு தெய்வங்களில் ஒன்றான தன்னேர் இல்லாத   தமிழுக்கு அடியான் என்றிருக்கையில் என்னுள் நானே உணர்வது

முந்தைய கட்டுரைராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1
அடுத்த கட்டுரைபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்