ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3

raj gauthaman

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

அன்புள்ள ஜெ

 

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுக்கு ராஜ் கௌதமன் தேர்வுசெய்யப்பட்டுள்ளது மிகவும் எதிர்பாராதது. பொதுவாக விஷ்ணுபுரம் விருதுகள் கதை எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கே அளிக்கப்பட்டுள்ளன. கட்டுரைநூல் எழுத்தாளர்களை விஷ்ணுபுரம் கருத்தில்கொள்வது மிகச்சிறந்த விஷயம். அவர்களுக்கு பொதுவாக எங்கேயுமே ஏற்பு கிடையாது. அவர்களின் ஏதேனும் ஒரு கருத்துடன் கடுமையாக முரண்பட்டு அவர்களை அப்படியே தவிர்த்துவிடுவார்கள். ஆனால் கதை கவிதை எழுதுபவர்களுடன் முரண்பட்டாலும் சில அம்சங்களில் அவர்களின் படைப்புக்களை ஏற்றுக்கொள்வார்கள். தமிழில் முக்கியமான பங்களிப்பாற்றிய ஆய்வாளர்கள் சிலர் உண்டு. அவர்களுக்கான இடம் உருவாகவே இல்லை. அதிரடியாகச் சொல்லி polemics செய்பவர்களுக்கான இடம் சிந்தனையாளர்களுக்கு இல்லை. காத்திரமான பங்களிப்பாற்றியவர்களை அவர்களின் கருத்துநிலைகளை பொருட்படுத்தாமல் பாராட்டிக் கௌரவிக்கவேண்டிய கடமை நம் சமூகத்துக்கு உண்டு

 

மகாதேவன்

 

அன்புள்ள ஜெ

 

ராஜ் கௌதமனின் எந்த நூலையும் நான் வாசித்ததில்லை. இந்த அறிவிப்பு வந்தபின்னர் உடனடியாக வாங்கி வாசித்த நூல் அயோத்திதாசர் ஆய்வுகள். அவர் விதந்தோதி எழுதியிருப்பார் என்று நினைத்தால் அவருடைய கச்சிதமான பார்வை ஆச்சரியப்படுத்தியது. அயோத்திதாசரை மூடநம்பிக்கை – புராண மரபிலே ஒருவராகத்தான் ராஜ் கௌதமன் கருதுகிறார். அந்தக் கருத்தை நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவருடைய புராணிகங்களின் தொன்ம மதிப்பை ராஜ் கௌதமனால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது. அயோத்திதாசர் மூடநம்பிக்கை உள்ளவர் அல்ல. அவர் பழைமையான பகுத்தறிவுநோக்கு கொண்டவர் என்று சொல்லலாம். அவருடைய பார்வையில் இந்தியசரித்திரம் மதம் போன்றவை கொஞ்சம் வேறுகோணத்தில் சொல்லப்பட்டுள்ளன. பிழைகளும் உள்ளன. ஏனென்றால் அன்று ஆய்வுகள் பெரிய அளவில் நிகழவில்லை. ஆனால் ராஜ் கௌதமனின் அந்த பார்வையிலுள்ள அசராத பகுத்தறிப்புப்போக்கு பாராட்டுவதற்குரியது

 

எம்.சத்யா

 

அன்புள்ள ஜெ

 

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியை அளித்தது. நான் எதிர்பார்க்கவேயில்லை. அவருடைய நூல்களை அங்குமிங்குமாகவே நான் வாசித்திருக்கிறேன். அவரைப்பற்றி மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக சிலுவைராஜ் சரித்திரம் பற்றிச் சில எழுத்துக்கள் காணக்கிடைக்கின்றன. மற்றபடி அவருடைய கட்டுரைகளைப்பற்றிய எதிர்வினைகளே இல்லை.

 

நான் சொல்லலாமா என்று தெரியவில்லை. நான் வாசிக்க ஆரம்பித்ததே ஒன்றரை ஆண்டுகளுக்குள்தான். குறிப்பாக நீங்கள் சென்னையில் கூட்டிய வெள்ளையானை விழாவுக்கு வந்தபிறகுதான். ஆகவே எனக்கு தயக்கம். ஆனாலும் பொதுவாக எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேன். ராஜ் கௌதமனின் சிந்தனையில் இரண்டு சிக்கல்களைக் காண்கிறேன். தலித்துக்களை ஒரு தனியான மக்கள்கூட்டமாக அவர் காண்கிறார். அவர்கள் அப்படி தனி அடையாளம், தனி அரசியல் கொண்டு செயல்படவேண்டும் என்கிறார். அந்த அரசியலை எந்தத் தலித்தும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

அதேபோல தமிழிலக்கியத்தை வெறும் அடக்குமுறை, சுரண்டலின் வரலாறாகவும் தமிழ்ப்பண்பாட்டை அடித்தளமக்களுக்கு எதிரானதாகவும் பார்க்கிறார். இந்த ஒற்றைப்படைப்பார்வையை முன்வைக்க அவர் நிறையவே ஆதாரங்களைச் சொல்கிறார். வரலாறு இப்படி ஒரே திசையில் உருவாகி வந்திருக்குமா என்பது ஒரு கேள்வி. மேலும் இதை ஏற்றுக்கொண்டால் தலித்துக்களுக்குத் தமிழ்ப்பண்பாட்டில் எந்தப்பங்களிப்புமே இல்லை என்றும் ஆகிறது. இதெல்லாம் பெரிய சிக்கல்கள்.

 

நான் ஐஏஎஸ் போட்டிக்காக தயார்செயதுகொண்டபோது சில ஆங்கில சரித்திரநூல்களை வாசித்திருக்கிறேன். அவர்களின் பார்வை இப்படி எளிமையாக இருப்பதில்லை. வரலாறு தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் apropriyation வழியாகத்தான் செயல்படுகிறது என நினைக்கிறேன். ராஜ் கௌதமனின் பார்வையில் தமிழிலக்கியம் பண்பாடு ஆகியவற்றைப் பார்த்தால் நாம் முன்பு பார்க்காத சில விஷயங்கள் கண்ணுக்குப்படுகின்றன. அதுமட்டும்தான் அவர் அளிக்கும் பங்களிப்பு

 

சுந்தர் அரசு

ராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்

ராஜ் கௌதமன் படைப்புக்கள்

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்

சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல்

ராஜ்கௌதமனின் இரு நூல்கள்

ராஜ் கௌதமன் -கடிதங்கள்

முந்தைய கட்டுரைசிரபுஞ்சி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇணையதளச் சிக்கல்