ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2

37237351_1986897501329613_2033022009352388608_n

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

அன்புள்ள ஜெ

 

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. நான் காலச்சுவடு இதழ் வழியாக அவருடைய கட்டுரைகளை வாசித்து அறிமுகமானேன். அக்கட்டுரைகளில் தெரிந்த தெள்ளத்தெளிவான அணுகுமுறை எனக்கு மகிழ்ச்சி அளித்தது.

 

ராஜ் கௌதமனின் நூல்களை வாங்கி வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தபோது கிடைத்த நூல் வள்ளலாரைப் பற்றிய கண்மூடிப்பழக்கமெல்லாம் மண்மூடிப்போக என்ற நூல். அந்நூல் எனக்கு ஓர் அதிர்ச்சியை அளித்தது. வள்ளலாரை ஒரு ஏளனத்துடன் பார்க்கிறாரா என்று தோன்றியது. ஆனால் அப்படியும்பார்க்கலாமே என்ற எண்ணத்தால் தொடர்ந்து வாசித்தேன். அந்த நூல் எனக்கு மிகப்பெரிய திறப்பாக அமைந்தது.

 

எனக்கு அந்த நூலில் இருந்து கிடைத்தது ஒரு பார்வை. அதாவது ராஜ் கௌதமன் அவருடைய எந்த மாய ஆன்மிகத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் அதில் ஏற்றுக்கொள்வது வள்ளலாரின் கருணை என்ற ஆன்மிகத்தை மட்டும்தான். உண்மையில் அப்படித்தானே? அந்தக்கருணையைப் புரிந்துகொள்ளாமல்தானே அவரை சித்தர் என்று ஆக்கினோம். அவருடைய கருணையைப்புரிந்துகொண்டிருந்தால் இன்றைக்கு வள்ளலார் ஒரு மதத்தலைவர் போல இருந்திருக்கமாட்டாரே. அதோடு ஒரு மெட்டீரியலிஸ்டின் பார்வையில் வள்ளலார் அப்படி கருணையும் அறச்சீற்றமும் கொண்டவராக வெளிப்படுவது எவ்வளவு பெரிய விஷயம் என்றும் தோன்றியது. வள்ளலாரை அவர் மீட்டு எடுத்திருக்கிறார் என்று நினைத்தேன். அவருக்கு விஷ்ணுபுரம் விருது அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி

 

ஓம் சிவகுரு

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்த செய்தியை வாசித்தேன். வழக்கமாக முகநூலில் உருவாகும் ‘அலை’ உருவாகவில்லை. பெரும்பாலானவர்கள் சம்பிரதாயத்துக்குக் கூட வாழ்த்துத் தெரிவிக்கவில்லை. அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்கிறேன். நீங்கள் அவருக்கு அளித்திருக்கும் முதன்மையான இடம்தான் காரணம். அந்தக்குறிப்பு இல்லாவிட்டால் வாழ்த்துக்கள் குவிந்திருக்கும். அந்தக்குறிப்பு ஒரு ஒவ்வாமையை உருவாக்கியதனால்தான் அந்த அமைதி. இதை நாம் ஏற்கத்தான் வேண்டும். முற்போக்குப் பாவனைகளுக்கு அடியில் இப்படித்தான் இருக்கிறார்கள் நம் மக்கள்

 

ஜான் செல்வகுமார்

 

அன்புள்ள ஜெ

 

ராஜ் கௌதமனுக்கு அளிக்கப்பட்டுள்ள விருது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் உங்கள் தளம் படிப்பதில்லை. குறைவாகவே வாசிப்பது என் வழக்கம். அந்தச்செய்தியை தாமதமாகவே அறிந்தேன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். நான் அவருடைய நாவல்களை வாசித்ததில்லை. நான் அவருடைய கட்டுரைநூல்களையே வாசித்திருக்கிறேன். அந்நூல்கள் எனக்கு அளித்தது சிலசமயம் ஒரு சீண்டல். சிலசமயம் பெரிய சிந்தனை தொடக்கம். அவர் வள்ளலார் உட்பட அனைவரையுமே ரேஷனலாகத்தான் பார்க்கிறார். அதில் மிக ரேஷனலாக அவர் அணுகுவது அயோத்திதாசரைத்தான். அவருடைய அயோத்திதாசர் நூல் தாசரின் மீது நம்மவர் ஏற்றிவைக்கும் எல்லாவற்றையும் குறைத்து அவரை ரேஷனலாக அணுகுவது. அதில் அவர் லட்சுமிநரசுவின் சிந்தனைகளையே பெரும்பாலும் அறிவியல்பூர்வமானவை என்று ஏற்கிறார். நம் நண்பர்கள் சிலர் கடுமையாக எதிர்த்தனர். நான் சொன்னேன். நாம் அவர் வள்ளலாரை அதேபோல எழுதியபோது ஆமாம் என்று சொன்னோமே என்று சொன்னேன். ராஜ் கௌதமன் நம்முடைய objective thought க்கு கிடைத்த ஒரு வெற்றி. அவரை வாழ்த்துகிறோம்

 

எஸ்.ராஜேந்திரன்

 

ராஜ் கௌதமனைப் புரிந்துகொள்ளுதல்

ராஜ் கௌதமன் படைப்புக்கள்

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்

சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல்

ராஜ்கௌதமனின் இரு நூல்கள்

ராஜ் கௌதமன் -கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 52
அடுத்த கட்டுரையானை டாக்டர், தி ஹிண்டு