ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1

raj

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

 

அன்புள்ள சார்,

 

மிக்க மகிழ்ச்சி!

 

எங்க ஊருக்காரர் விருது வாங்குகிறார். தளத்தில் ‘விருதுநகர் அருகே புதுப்பட்டி’ என்பதற்கு பதிலாக ‘ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்றாப் புதுப்பட்டி’ என்று போடலாமா சார்? :-)

 

நன்றி,

முத்துக்கிருஷ்ணன்

லண்டன்

 

அன்புள்ள ஜெயமோகன்

 

 

வணக்கம். நலம்தானே?

 

 

சற்று முன்புதான் விருது அறிவிப்புச் செய்தியைப் படித்தேன். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். போன வாரம் உங்கள் நூலகம் இதழில் அவர் நூல்வெளியீடு குறித்து வந்திருந்த விளம்பரச்செய்தியைப் படித்துவிட்டு ‘இந்தச் சமயத்தில் இவருக்கு ஒரு பெரிய விருது கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இந்த உழைப்புக்கு அது ஒரு பெரிய கெளரவமாக இருக்கும்’ என்று நினைத்துக்கொண்டேன்.  இன்று இந்த அறிவிப்பைப் படிக்க நேர்கிறது. விசித்திரமாகவே உள்ளது.  விஷ்ணுபுரம் விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர் அவர்.  இக்கணம் உண்மையிலேயே என் மனம் மகிழ்ச்சியில் ததும்புகிறது.

 

 

கல்லூரியில் அவர் எனக்கு நேரடியாகப் பாடமெடுத்த ஆசிரியரல்ல. ஆனால் எங்கள் கல்லூரியில் ஆசிரியர். ஓர் உரையாடலில் ஜே.ஜே.சில குறிப்புகள் வந்த புதிதில் அதை வாசிக்கும் முறையைப்பற்றி பொறுமையாக எடுத்துரைத்த கணம் இன்னும் என் நினைவில் உள்ளது.  1987இல் என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதி வெளிவந்த தருணத்தில், அதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் முதல் உரையை அவரே நிகழ்த்தினார். அது ஒரு மறக்கமுடியாத அனுபவம். அவரை என் மனத்தில் ஓர் ஆசிரியர் என்னும் இடத்திலேயே வைத்திருக்கிறேன்.

 

 

ராஜ் கெளதமன் அவர்களுக்கு என் வாழ்த்துகள். உங்களுக்கு என் நன்றி.

 

 

அன்புடன்

பாவண்ணன்

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

 

ராஜ் கௌதமன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தமைக்கு மகிழ்ச்சி , கூடுதலாக அவரது புதினங்கள் மறு பதிப்பு காண்பது சிறப்பு

 

 

நன்றிகள் பல

 

 

அன்புடன்

மணிகண்டன்

 

அன்புள்ள ஜெ

 

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விருதுபெறுபவர்களின் பட்டியலாலேயே இன்று இவ்விருது மிக முக்கியமானதாக ஆகியிருக்கிறது. பேரா.ராஜ்கௌதமன் பெரும்பாலும் வாசிக்கப்படாதவராகவே இன்றும் இருக்கிறார். அவர்மேல் ஒரு கவனம் உருவாக இந்த விருது வழிவகுக்கும். எவருக்கு விருது அளிக்கப்படவேண்டும் என்றும் ஏன் அளிக்கப்படவேண்டும் என்றும் உங்கள் குழு கொண்டிருக்கும் தெளிவு ஆச்சரியப்படவைக்கிறது

 

நான் சிலுவைராஜ் சரித்திரம், மாதவையா இரு நூல்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். அவற்றில் தெரிந்த தெளிவான உரைநடையும் நகைச்சுவையும் கூடவே ஆராய்ச்சிநோக்கும் என்னை மிகவும் கவர்ந்தன. மற்றநூல்களையும் வாசிக்கவேண்டும்

 

ஆர்.ஜெயச்சந்திரன்

 

அன்புள்ள ஜெ

 

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. பலவகையிலும் நீங்கள் தமிழ்பண்பாட்டையும் வரலாற்றையும் பார்க்கும் பார்வையிலிருந்து நேர்மாறான பார்வை கொண்டவர் அவர். அவருக்கு விருதளிப்பதன் வழியாக இவ்விருது காத்திரமான பங்களிப்புக்கே ஒழிய கருத்துநிலைக்காகவோ தனிப்பட்ட உறவுக்காகவோ அல்ல என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்

 

பொன்.அருணாச்சலம்

 

ராஜ் கௌதமன் படைப்புக்கள்

ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்

சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல்

ராஜ்கௌதமனின் இரு நூல்கள்

ராஜ் கௌதமன் -கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 50
அடுத்த கட்டுரைகல்பற்றா நாராயணன், நான், தொலைக்காட்சி