ஆங்கிலமும் இந்தியாவும்

1

அன்புள்ள ஜெமோ,

என் பெயர் ஸ்வேதா. கோவையில் பிறந்து வளர்ந்தவள். பொறியியல் முடித்துவிட்டு மூன்று ஆண்டுகளாக பெங்களூரில் IT வாசியாக உள்ளேன். புத்தகங்களின் மேல் உள்ள ஈர்ப்பால் தொலைதூர கல்வி வழியே MA ஆங்கில இலக்கியம் பயின்றேன். பதினான்கு வயது வரையில் எனிட் ப்ளிட்டன், ரோல்டு டால், ஜெ கே ரெளலிங், ஜேன் ஆஸ்டன், ப்ராண்டே சகோதரிகள் என இங்கிலாந்து எழுத்தாளர்களின் வாயிலாகவே இலக்கியம் கண்டறிந்தேன்.  என் பதினைந்து வயதில் ஒரு நாள், ஆங்கில பேராசிரியையான என் அம்மா வங்காள பூர்விகம் கொண்ட எழுத்தாளர் அமிதாவ் கோஷின் “Sea of Poppies” நூலை ஆய்விற்காக வீட்டிற்கு எடுத்து வந்தார். அந்த நூல் என் இலக்கிய பார்வையை முற்றிலுமாக மாற்றியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய- பர்மா- சீனா வில் அபினிற்காக (Opium) நடந்த வர்த்தக யுத்தத்தை பின்னணியாக கொண்ட அந்த ஆங்கில புனைவு எனக்கு ஓர் இனம்புரியாத உணர்வையளித்தது. அதன் பின்னர் நான் படிக்க தேர்ந்தெடுத்த நூல்கள் (ஆங்கிலம்) பெரும்பாலும் இந்தியர் அல்லது இந்திய பூர்வீகம் கொண்ட எழுத்தாளர்களிள் படைப்புகளாகவே அமைந்தன. நான் என்னையறிமாலே ஒரு சுதேசி வாசகியானேன். அரவிந்த் அடிகா, அனிதா தேசாய், சல்மான் ருஷ்டீ, ஜும்பா லஹிரி, சித்ரா பேனர்ஜி திவகுரினி, அனிதா நாயர் – இந்திய சூழலை மையம் கொண்ட, அந்நிய மொழியில் மண் மணம் மாறாமல் அமைந்த அவர்களின் எழுத்து என்னை பரவசத்தில் ஆழ்த்தியது.

என் இலக்கிய பயணம் இவ்வாறு சலனமில்லாமல் நகர, சென்ற ஆண்டு நடந்த ஒரு சம்பவம் என் பாதையை மீண்டும் மாற்றியமைத்தது. பெங்களூரு இலக்கிய விழா (Bengaluru Literary Fest) 2017 டிசெம்பரில் ஒரு பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. நானும் என்னை போலவே வாசிக்கும் என் தோழி ஹரிணியும்  ராமச்சந்திர குஹா, கிரிஷ் கர்ணட், அனில் கும்ப்லே போன்ற பிரபலங்களை காண; முடிந்தால் அடித்துப்பிடித்து ஒரு கையெழுத்தையாவது வாங்க ஆவலுடன் சென்றோம். பெருமாள் முருகன் தொகுத்த  “சாதியும் நானும்” நூலை, “Caste and I” என்ற பெயரில் தமிழ்/ஆங்கில எழுத்தாளார் அம்பை அவர்கள்  மொழிப்பெயர்த்திருந்தார். நூல் அறிமுக நிகழ்வு நிறைவடைந்து அம்பை மேடையிறங்கி செல்கையில் அவரிடம் இருவரும் ஆசிர்வாதம் பெற்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். இதற்கு முன் அவருடைய நூல்களை வாசிக்காத காரணத்தால்  அவரிடம் எங்கள் பெயர், ஊர் இன்ன என்ற அறிமுகம் மட்டுமே அளித்தோம். அவரும் கோவையில் தன்னுடைய  சொந்தகள் இருப்பதாக கூறி புன்சிரிப்புடன் விடைப்பெற்றார். நானும் என் தோழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம் – ‘என்ன படித்து என்ன பயன்? தாய்மொழியில் எழுதும் எழுத்தாளரை அடையாளம் கூட காணமுடியாமல் நிற்கிறோமே!’ என்பது போல.

அந்நேரம், சிறு வயதில் அந்நியன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்புகையில் “கடவுளே! நான் இனி எந்த தப்பும் செய்ய மாட்டேன். நரகத்துக்கெல்லாம் அனுப்பி விடாதே!” என்று எழுந்த  குற்றவுணர்ச்சி அடுத்த பரிணாமத்திற்கு சென்றதாகத் தோன்றியது. தமிழில் பொன்னியின் செல்வன், ஜெயகாந்தன் சிறுகதைகள், ஆனந்த விகடனில் பிரசுரமாகிய நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைகள், தங்களுடைய “அறம்” என விரல் விட்டு எண்ண கூடிய அளவே அதுவரை படித்திருந்தேன். இலக்கியம் ஒரு மொழிக்கு உரியதன்று என மனதறியும்.  எனினும்  வாடகை மொழியில் புலமை பெற்று தாய் மொழியை தவற விட்டு விட்டோமே என்ற எண்ணம் வாட்டிய நிலையில் நல்லதொரு நட்பு வட்டம் உருவாகியது.

உங்கள் இலக்கிய வாசகர் கூட்டங்களால் புத்துயிர் பெற்ற என் அலுவலகத் தோழர் GSSV நவின் எனக்கு தங்களுடைய “நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்” நூலை பரிந்துரைச்செய்தார். என் அனைத்து வேண்டுதல்களையும் அந்நூல் பூர்த்தி செய்தது. எங்கேத் தொடங்க வேண்டும் என தெளிவாக அந்நூலும், தொடர்ந்து தங்கள் வலைதளப் பதிவுகளும் வழிக்காட்டுகின்றன. இவ்வருடம் தொடங்கி ஆங்கில நாவல்களில் எவ்வளவு நாட்டம் செலுத்தினேனோ அதே அளவு நாட்டம் தமிழிலும் செலுத்த விழைகிறேன். விசும்பு, ரப்பர், அம்மா வந்தாள், திருச்சாழல், அம்புப்படுக்கை என என் பயணம் இனிதே தொடங்கிற்று. தமிழை விட ஆங்கிலத்தில் எழுத்துத் திறன் அதிகம் கொண்ட என்னை போன்ற தமிழிலக்கிய முனைப்புள்ள வாசகர்களுக்குத்  தங்கள் அறிவுரை என்ன? தமிழ் இலக்கியச்சூழலில் எங்கள் பங்களிப்பு எத்தகைய வண்ணம் இருக்கலாம்?

உங்கள் வலைதளத்தில் இந்திய எழுத்தாளர்கள் பற்றிய விவாதம் எழுகையில் பெரும்பாலும் இந்திய மொழிகளில் எழுதுவோரின் படைப்புகள் விவாதிக்கபடுகின்றன. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பற்றி தங்கள் கருத்து யாது?

தங்கள் வழிக்காட்டுதலுக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

அன்புடன்,

ஸ்வேதா
என் வலைப்பூ :

http://howzzatbyswe.blogspot.com/

2

அன்புள்ள ஸ்வேதா

இதே விஷயத்தை நேற்று ஒரு கடிதத்துக்குப் பதிலாக எழுதநேர்ந்தது. நமக்கு நெடுங்காலமாக பயிற்றுமொழி ஆங்கிலம். சென்ற இருபதாண்டுகளில் தாய்மொழிக் கல்வி இந்தியா முழுக்கவே குறைந்து வருகிறது. சொல்லப்போனால் இல்லாமலேயே ஆகிவிட்டது. புகழ்பெற்ற வங்க இலக்கியத்தின் தேக்கத்திற்கு என்ன காரணம் என்று கேட்டேன். “ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் அதிகமும் வங்காளிகள். அதைப் பார்த்தாலே புரியும்” என்றார் வங்க விமர்சகரான நண்பர்.

வங்கமொழியில் கற்பவர்கள் அரிதாகிவிட்டனர். வங்க இலக்கியம் என்பதே கல்கத்தாவில் உருவாவது. கிராமப்புற வங்கம் பிகாரைவிடப் பின்தங்கியது. கல்கத்தா இப்போது முழுக்கவே ஆங்கிலமயமாகிவிட்டது. வங்கமொழியை, பண்பாட்டைக் கொண்டாடிய கல்கத்தாவின் உயர் அறிவுவட்டம் இன்றில்லை. ஆகவே வங்க எழுத்து இல்லாமலாகிவிட்டது.“சரி, அப்படியென்றால்கூட ஆங்கில- வங்க எழுத்தாளர்களில் எவருமே வங்கமொழி முன்னோடிகளின் கலைவெற்றியை அடையாதவர்களாக இருக்கிறார்களே” என்றேன். “பெரும்பாலும் அனைவருமே வெறும் முற்போக்குக் கருத்துக்களை கூரிய மொழியில் ஏளனத்துடன் சொல்பவர்கள். விசித்திரமான தகவல்களால் ஒரு சூழலை உருவாக்குபவர்கள். ஆனால் சொந்தமான இலக்கியநோக்கும் கலையழகும் கொண்டவர்கள் எவருமில்லை” என்றேன்

“ஏனென்றால் அவர்கள் வங்கத்துக்கு அன்னியர்கள். அவர்கள் வங்கப்பண்பாட்டை விலகிநின்று பார்க்கிறார்கள். எள்ளலும் விமர்சனமும் சாத்தியமாகிறது. ஆனால் உள்ளிருப்பவனின் நுட்பமும் அழகும் கைவருவதில்லை. அது ஆங்கிலம் என்ற மொழி உருவாக்கும் சிக்கல். அந்தமொழியில் பேசுபவர்கள், சிந்திப்பவர்கள் நம் பண்பாட்டுக்குமேல் மிதந்துகிடக்கும் ஒரு வர்க்கம். அவர்களால் இங்குள்ள வாழ்க்கையை எழுதமுடியாது” என்றார் வங்க நண்பர்.

ஆங்கிலம் நம் வரவேற்பறைமொழி. அதில் புழங்கும் உள்ளத்தால் நம் சமையலறையை புழக்கடையை எழுத முடியாது. உலக இலக்கியத்தில் மெய்யான அறிமுகம் கொண்டவர்கள் இதை எளிதில் உணரமுடியும். அமிதவ் கோஷ் போன்ற வெகுசில எழுத்தாளர்கள் அன்றி எந்த ஆங்கில எழுத்தாளரும் இலக்கியரீதியாக முக்கியமானவர்கள் அல்ல. அவர்களின் எழுத்து ஐரோப்ப்பிய அமெரிக்க ரசனைக்காக உருவாக்கப்படுவது. அவ்வாசகர்கள் புரிந்துகொள்ளும், அவர்கள் ஏற்கும் எழுத்தை எழுதி எழுதி உருவாக்கிக்கொண்டால்தான் வெற்றிகரமான எழுத்தாளர் ஆகமுடியும். அந்தப் பயணத்தில் அவர்கள் இங்கிருந்து மிக விலகிச் சென்றுவிடுவார்கள். ஐரோப்பா உருவாக்கும் எளிய அரசியல்சரிகளைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதன்வழியாக இந்தியாவைப் பார்ப்பார்கள். ஒன்று இந்திய ஏளனம் அல்லது இந்தியா பற்றிய செயற்கையான புனிதமாக்கல். இரு எல்லைகளில் இருப்பார்கள்.

எந்த நல்ல எழுத்தாளனும் உலகப்புகழைத் தேடியோ, உலகவாசகர்களை எண்ணியோ, உலகச் சந்தைக்காகவோ எழுதுவதில்லை. அவன் தன் சூழலை நோக்கியே எழுதுவான். அதனுடன் உரையாடவும் அதை மாற்றியமைக்கவுமே முயல்வான். ஆகவே அதன் பெரும்பகுதி அச்சூழலுக்குரியதாகவே இருக்கும். அது இலக்கியமாக அமையும் என்றால் அதன் ஒருபகுதி உலகளாவிய மதிப்பு கொண்டிருக்கும். அதனால்தான் அது மொழியாக்கம் செய்யப்படுகிறது. அதனூடாக உலக வாசகன் அந்த எழுத்தாளன் முன்னிலையாக்கி எழுதிய அந்தச் சூழலையும் வந்தடைந்து படைப்பை முழுமையாகப் புரிந்துகொள்கிறான். வோல் ஸோயிங்கா எழுதுவது ஆப்ரிக்காவுக்காக. நாம் அதன் மானுடப்பொதுவான ஒரு அம்சத்தை வாசிக்கிறோம். கொஞ்சம் முயன்றால் நைஜீரியச் சூழலைச் சென்றடைகிறோம்

இந்திய இலக்கியம் அதன் இந்தியத்தன்மையாலேயே இலக்கியமாகிறது. அந்த இந்தியத்தன்மையை சிறந்த மொழியாக்கங்கள் வழியாக உலகுமுன் கொண்டுசெல்கையிலேயே ‘இந்தியச்சுவை’ என்னவென்று உலகுக்குத் தெரியும். ஆனால் அதைத் தெரியவைக்க இங்கு வாய்ப்பில்லை. முதலில் நமக்கு நல்ல மொழியாக்கநிபுணர்கள் இல்லை. ஓரளவு படைப்பூக்கம் கொண்ட உரைநடை எழுதுபவர்கள் தாங்களே எழுதி புகழும் பணமும் ஈட்ட முயல்கிறார்கள்.மொழியாக்கம் செய்பவர்கள் பழைய ஆங்கிலத்தில் பாடப்புத்தகநடையில் செய்கிறார்கள். ஆகவே இந்திய ஆங்கில எழுத்து என்னும் பொய்யான இந்திய இலக்கியம் உலகுமுன் வைக்கப்படுகிறது.

ஒரு சராசரி மேலைவாசகனுக்கு இந்திய இலக்கியத்தின் உண்மையான சுவை இன்று சற்று அன்னியமானதாகவே இருக்கும். உள்ளேநுழைவது கடினம். முதலில் அது ஒவ்வாமையையும் அளிக்கலாம். ஆனால் ஜப்பானிய, சீன அழகியலுக்கு உலகம் பழகியதுபோல இந்திய அழகியலுக்குப் பழக்கப்படுத்தப்படவேண்டும். பேரிலக்கியங்களை மொழியாக்கம் செய்தல், அவற்றை மீளமீளப் பேசுதல், அவற்றைச் சார்ந்த ரசனையை உருவாக்குதல் ஆகியவை ஓர் அறிவியக்கமாக அரைநூற்றாண்டாவது நடந்தால்தான் இது சாத்தியம். அதற்கான தொடக்கமே இங்கில்லை.

இங்கிருப்பது ஒரு வர்க்கவேறுபாடு. இந்திய ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் மிகப்பெரும்பாலும் உயர்குடியில் பிறந்து, உயர்கல்வியை வெளிநாட்டில் பெற்று உயர்மட்ட வாழ்க்கை வாழ்பவர்கள். இந்திய ஆங்கில ஊடகங்களும் அவர்களையே குவியமாக்குகின்றன. இந்தியமொழிகளில் எழுதுபவர்கள் பெரும்பாலும் அடித்தட்டிலிருந்து வந்து தங்கள் வாழ்க்கையை, தரிசனத்தை எழுதுபவர்கள். இந்தியாவில் ஆங்கில என்பது அன்றைய சம்ஸ்கிருதம்போல ஒரு வர்க்க அடையாளம். இந்தவேறுபாடு புனைவுகளிலும் தெரிகிறது. அவற்றின் பேசுபொருள், நடை, பார்வை எல்லாமே இவ்வாறுதான் உருவாகியிருக்கின்றன. ஆகவே இவர்களால் இந்திய மொழிகளில் உள்ள இலக்கியம் கவனிக்கப்படுவதோ உலகளாவக் கொண்டுசெல்லப்படுவதோ எளிதல்ல. அது ஒரு வர்க்கப்புரட்சிக்கு நிகரானது.

இந்தியாவில் ஆங்கிலத்தில் புழங்கும் உயர்மட்டச்சூழல் தாழ்வுணர்ச்சி மிக்கது. ஐரோப்பாவின் அமெரிக்காவின் அங்கீகாரத்துக்காக ஏங்குவது. அந்தப்பண்பாடுகளின்மேல் விமர்சனமற்ற உள்வழிபாடு கொண்டது. அவர்களின் பொருட்டு தங்களை தொடர்ந்து உருமாற்றிக்கொண்டே இருப்பது. ஆண்டையின் பாவனைகளை தானும் சென்றடையும் அடியவனைப் போன்றது. ஆகவேதான் ஆங்கில எழுத்தும் செயற்கையான அடிவருடித்தன்மை கொண்டதாக உள்ளது. எனக்கு அமிதவ் கோஷ் மட்டுமே சற்றேனும் பொருட்படுத்தத் தக்கவராகத் தெரிந்தார். மற்றவர்களை கஷ்டப்பட்டு படிப்பதற்கு நான் உலகின் முக்கியமான பேரிலக்கியங்களை படிக்கலாமே.

என்னிடம் பிரித்தானிய எழுத்தாளர் ராய் மாக்ஸம் கேட்டார்.  “உலகிலேயே அதிகமாக ஆங்கிலம் படிக்கும் நாடு இந்தியா. ஏன் இந்திய ஆக்கங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவில்லை? செய்யப்பட்டாலும் மோசமான ஆங்கிலத்தில் உள்ளன?” நான் சொன்னேன். “அது ஒரு வர்க்கபேதம். தேவாசுர யுத்தம். ஆங்கிலமறிந்தவர்கள் இந்தியா என்னும் நரகத்திலிருந்து கடவுளருளால் தப்பி விண்ணில் இருப்பவர்களாக உணர்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் எளிய உலகியல் வெற்றிகளுக்கு அப்பால் ஏதுமறியாத உயர்குடிப்பாமரர்கள். வாசிக்கும் சிறுசாராருக்கு இந்தியாமீதே ஆர்வமும் மதிப்பும் இல்லை. இந்தியா இந்த எல்லையைக் கடக்க இன்னும் ஒருநூற்றாண்டு ஆகும்.தாழ்வுணர்ச்சி இல்லாத ஒரு புதுத்தலைமுறை இந்தியாவில் உருவாகி வரவேண்டும்”

ஜெ

முந்தைய கட்டுரைசுபாஷ் பாலேக்கர்
அடுத்த கட்டுரைகம்போடியாவில் இருந்து…