வாசகர்களுடன் உரையாடுதல்
வணக்கம் ஜெ சார்!
ஒரு உண்மையான வாசகன் தனக்கு பிடித்த எழுத்தாளரை எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்வதில்லை என சுஜாதா “கற்றதும் பெற்றதும்”ல் எழுதியதாக என் நினைவில். இது குறித்து தங்களது கருத்தினை அறிய ஆவல், நேரம் கிடைக்கப்பெறின்.
தற்போது, தனிக்குரல் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். காணொளியை விட படிப்பது வேறு சுகமாய் உள்ளது. நன்றி.
மீண்டும் தங்களை காணும் வாய்ப்பினை எதிர்நோக்கி…
அன்புடன்
ஜான் பிரதாப் குமார்
***
அன்புள்ள ஜான்,
1991ல் நான் அமெரிக்கன் கல்லூரியில் பேசச்சென்றிருந்தேன். இளம் எழுத்தாளன். ரப்பர் மட்டுமே வெளிவந்திருந்தது.என் சிறுகதைகள் பேசப்பட்டுக்கொண்டிருந்த காலம். அன்று அங்கே மாணவராக இருந்த இளம் எழுத்தாளர் ஒருவர் என்னிடம் கொந்தளிப்பாக பேசிக்கொண்டிருந்தார். ஏராளமாகச் சொல்வதற்கிருந்தன. அவற்றை கொட்டி முடித்தார். பின்னாளில் அவர்தான் சு.வேணுகோபால். அந்த அரங்கில் அன்று மாணவராக இருந்த மனுஷ்யபுத்திரனை இருமாணவர்கள் தூக்கி என்னருகே கொண்டுவந்தனர்.
பின்னர் அதே அமெரிக்கன் கல்லூரியில் ஓர் ஆய்வுமாணவர் என் கருத்துக்களுடன் முரண்பட்டு கடுமையாக விவாதித்தார். அவர்தான் ஸ்டாலின் ராஜாங்கம். இன்று தமிழில் எழுதும் பெரும்பாலானவர்கள் ஏதேனும் ஒரு தருணத்தில் வாசகர்களாக என்னுடன் உரையாடியவர்களே. ஏன் அன்று ’இளம் வாசகராக’ இருந்த எஸ்.ராமகிருஷ்ணன் என்னுடைய ‘கிளிக்காலம்’ நாவலை வாசித்துவிட்டு ஒரு கடிதம் போட்டிருக்கிறார்
நான் என் பத்தாம் வயது முதல் எழுத்தாளர்களுக்கு கடிதம்போட்டிருக்கிறேன். எட்டாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது அசோகமித்திரனின் இலாரியா என்னும் கதையை குமுதத்தில் படித்துவிட்டு கடிதம் எழுதினேன். நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர் கடிதங்களை எழுதியிருக்கிறேன். வண்ணதாசன், அசோகமித்திரன்,நாஞ்சில்நாடன் ஆகியோருடன் எப்போதுமே வாசக உறவு இருந்தது இவர்களோ. நானோ ‘நல்ல’ வாசகர்கள் அல்ல என்று சொல்லமுடியுமா?
எனக்கு எப்போதுமே வாசகர்களின் தொடர்பு உண்டு. 1991 முதல் இன்றுவரை இரண்டு வாசகர்கடிதங்களாவது வராத ஒருநாள்கூட இருந்ததில்லை. இன்று ஒருநாளைக்கு இருபதிலிருந்து எழுபது கடிதங்கள் வரை வருகின்றன. இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்று சொல்ல இருக்கிறது. படித்ததை பகிர்பவர்கள். விவாதிப்பவர்கள். அந்தரங்கமானச் செய்திகளைப் பகிர்ந்துகொள்பவர்கள். தனிப்பட்ட உரையாடலை விரும்புபவர்கள்.
அவ்வாறு என்னை அணுகிய வாசகர்களால்தான் இன்று ஒரு பெரிய நட்புக்குழுமம் ஆக மாற முடிந்திருக்கிறது.பத்தாண்டுகளாக ஓர் இலக்கிய இயக்கமாகச் செயல்பட இயல்கிறது. தமிழில் அப்படிச்ச் செயல்படும் பல வாசக -எழுத்தாள நட்புச்சுற்றங்கள் இன்று உள்ளன.
வாசகர்களை ‘தொந்தரவு’ என நினைக்கும் இலக்கியப்படைப்பாளி எவரும் நானறிய இதுவரை இருந்ததில்லை. உலக அளவிலேயேகூட. இருபதாண்டுகளுக்கு முன்னர் ‘சும்மா’ நான் அமெரிக்க இலக்கியசிந்தனையாளர் ஒருவருக்கு மின்னஞ்சல்போட்டேன். மறுமொழி வந்தது. எழுத்தாளனுக்குப் பணிச்சுமை இருக்கலாம். உளம் எதிலாவது ஆழ்ந்திருப்பதனால் விலக்கம் இருக்கலாம். ஆனால் வாசகன் என்பவன் ஒரே அறிவியக்கத்தின் மறுமுனை என அவன் அறிந்திருப்பான். சொல்லப்போனால் வாசகனுடைய எல்லா தயக்கங்களையும் மொழிச்சிக்கல்களையும் எழுத்தாளன் முன்னரே உணர்ந்திருப்பான்.
எழுத்தாளன் என்பவன் ஒர் அறிவுநிலை. ஓர் ஆன்மிகநிலையும்கூட. மனிதனாக அல்ல எழுத்தாளனாகவே வாசகர்கள் நம்மை அணுகுகிறார்கள் என அவன் அறிந்திருப்பான். இது நமக்கான மரியாதை அல்ல, இலக்கியம் என்னும் அறிவியக்கத்தின் மீதான மரியாதை என தெளிவுகொண்டிருப்பான். அறிவியக்கம் என்றுமுள்ள பெரும்பெருக்கு,நாம் அதன் துளி. யானைமேல் அமர்ந்திருப்பவனுக்கு கூட்டம் விலகி வழிவிட்டாகவேண்டும்.
இந்த உரையாடல்கள் வழியாக நான் ஓர் அறுபடாத அறிவுவிவாதத்தில் இருக்கிறேன். அதை இந்தத் தளத்தின் வாசகர்கடிதங்களைப் பார்த்தாலே எவரும் காணலாம். தமிழ்நாட்டின் அறிவியக்கத்தின் மிகச்சிறந்த ஒரு பகுதி இங்கு பதிவாகியிருக்கிறது. தமிழ் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டு எனக்கு ஒவ்வொருநாளும் வந்துகொண்டே இருக்கிறது. நான் தமிழகமெங்கும் பரவி வாழ்வதற்குச் சமம் அது.
சுஜாதா சொன்ன அந்தவரியை பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் சொல்வது இதையே. அரிதாக இலக்கிய மதிப்புள்ள சில எழுதியிருந்தாலும் சுஜாதா இலக்கியவாதியாக செயல்பட்டவரல்ல. அவர் வணிக எழுத்தாளர். அவரை அணுகுபவர்களுக்கும் அறிவியக்கம் என்றால் என்னவென்று தெரியாது. இன்று அவரை இலக்கியவாதியாக நினைப்பவர்களுக்கும் இலக்கியமென்றால் என்னவென்று தெரியாது
வணிக எழுத்துக்களில் வாழ்க்கை இருப்பதில்லை, அது புனைவுவிளையாட்டு. அவற்றை வாசிப்பவர்களும் வாழ்க்கையை அறிய முயல்பவர்கள் அல்ல, பொழுதுபோக வாசிப்பவர்கள். ஆகவே அவர்களை அணுகுபவர்கள் அந்தப் புகழ், செல்வாக்கு ஆகியவற்றை கண்டு கவரப்பட்டே அணுகுகிறார்கள். அவர்கள் எழுதுபவனுக்குப் பெரும்சலிப்பு ஊட்டுபவர்கள். அவர்களை விலக்கவும் வாசகன் எங்கோ இருக்கிறான் என்று நம்பவும் சுஜாதா சொன்ன வரி அது. இலக்கியத்திற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை
எனக்கு அத்தகைய ஒரு வட்டம் உண்டு. சினிமாவழியாக என்னை அணுகுபவர்கள். ஒருவர்கூட விடாமல் அனைவருமே மூடர்கள். அவர்களை நான் அணுகவே விடுவதில்லை. நான் தேடுவது வாசகர்களை மட்டுமே. நான் மட்டும் அவர்களுடன் பேசவில்லை, அவர்களும் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
ஜெ