பெண்களின் ஜன்னல்

jeya

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். நலமோடு இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.

திரு. ஜெயகாந்தன் அவர்களின் நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் -சிறுகதையை வாசித்தேன் . தன் வாழ்நாள் முழுக்க ஜன்னல் திண்டிலேயே அமர்ந்துவிட்ட ஒருத்தியின் கதை. அந்த பெண் குழந்தையின் முதல் நினைவே ஜன்னல் வழியாக பார்த்த தன் தாயின் இறுதி ஊர்வலம் தான். பார்த்த முதல் கல்யாண ஊர்வலம் தன் தந்தையுடையது. இந்த இருவரிகளில் உள்ளது சமுகத்தின் கேலிச்சித்திரம். மனைவியை இழந்த கணவன் உடனே மணமகன் ஆகிவிடுகிறான். அதற்கு வயதோ,வசதியோ,குழந்தைகளோ தடையாக இருப்பதில்லை. அவள் வளர்கிறாள் அவளுக்கு இருக்கும் ஒரே விளையாட்டு, கனவு, ஆசுவாசம் எல்லாம் இந்த ஜன்னலில் அமர்ந்து பார்ப்பது மட்டுமே. நாளில் பெரும்பகுதி வீட்டின் பின்கட்டிலும் அடுமனை புகையிலும் இருப்பவர்களுக்கு இத்தகைய ஆசுவாசம் தேவைப்படுகிது. சிலருக்கு அது ரேடியோவில் பாடல் கேட்பதாக,கோலம் போடுவதாக,புத்தகங்கள் படிப்பதாக அமைந்து விடுகிறது. நான் நேரில் கண்டதுண்டு ஊரில் உள்ள சிறு பிள்ளைகளை எல்லாம் அலங்கரிப்பதே ஒரு அக்காவிற்கு வேலையாக இருக்கும்.

பானு அம்மா சொல்லியது உண்டு பாடல்களை ரேடியோவில் மாத்திரமே கேட்க வேண்டிய சூழலில் அந்த பொட்டி இருக்கும் அலமாரியை பிடித்து தொங்கிக்கொண்டே முழுநிகழ்ச்சியையும் கேட்டு உள்ளதாக. அதற்காக முதுகில் பலமான கோடுகள் வாங்கியதும் உண்டு என்று. புத்தகம் படிக்கும் பெண்ணின் நிலை பற்றி சொல்ல தேவையே இல்லை. ஒரு வார்த்தை கூட போனாலும் புத்தகம் தீயை நோக்கி ஏறியபடும் சில நேரங்களில் அந்த பெண்ணும். ஜன்னலில் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கிறது தன் வயதை ஒட்டிய பெண்ணிண் திருமண ஊர்வலத்தை பார்த்துவிட்டு தன் அப்பாவிடம், தனக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறாள். அதுவும் நம்ம அப்பாவாச்சே என்று. ஆனால் அப்பா ஒருபோதும் அப்பாவாக இல்லை. கடைசி வரை ஆணாக,சித்தியின் கணவராக மட்டுமே உள்ளார். அவள் கேட்ட அந்த ஒரு கேள்வி அவளை தீராத துயரத்தில் தள்ளுகிறது. எத்தனை விதமான அவமானங்கள் வசைகள். அவள் அப்படி கேட்டதே அந்த ஜன்னலில் அமர்ந்து பார்ப்பதினால் தான் என்று முடிவு செய்கிறார்கள். அந்த வயதிற்குரிய நியாயமான நேர்மையான விருப்பத்தை தேவையை, நேரடியாக கேட்டதால் மட்டுமே களங்படுத்துகிறார்கள். வருடத்திற்கு ஒரு பிள்ளையை பிரசவிக்கும் சித்தியும் அவளை வசைபாடுகிறாள்.

இந்திய சூழலில் தனிமனித உணர்வுகளுக்கு மதிப்பே இல்லை போலும். ஜன்னல் திண்டில் அமர்ந்து இவள் யாருக்கவோ காத்திருப்பது போலவும் எவரையோ பார்ப்பது போலவும் எண்ணப்படுகிறது. உண்மையில் எவருமில்லை. ஒரு கட்டத்தில் இழிவுகளின் தொடர்ச்சியால் சலித்து மெய்யாகவே யாரையாவது பார்த்தால் என்ன? என்று தோன்றி விடுகிறது.  பார்க்கவும் செய்கிறாள். ஆனால் அங்கு இவளை கவனிக்கவும் காத்திருக்கவும் யாருமில்லை. அவளே சொல்லுவது போல தொப்பை வைத்த பிள்ளையார் தவிர. சொல்லி சொல்லி,சொல்லில் மாத்திரமே நெறிமீறியவர்களாக கெட்டுப்போனவர்களாக நிலைநிறுத்தபடுபவர்கள் தாங்களே விழைந்து கெட்டு விட நினைத்தாலும் அது நடப்பதில்லை. வயிற்றை பிடித்துக்கொண்டு அங்கே நகைப்பது அவர்களோடு ஊழும் சேர்ந்து தான். வெளியே நடக்கும் மாற்றங்கள் தெரியும் அளவிற்கு உள்ளே நடப்பது அவளை அதிகம் பாதிப்பதில்லை. அப்பாவின் சித்தியின் மரணங்கள் நிகழ்ந்து ஏறுகின்றன. எல்லாமே ஜன்னல் வழி காட்சிகளாக. இந்த மாமியின், (அவளுக்கு வயதாகி விட்டதல்லவா ) முன்னோடிகளாக அல்லது தொடர்ச்சியாக நான் நினைப்பது வெண்முரசுவின் சிவையையும், சர்மிஷ்டையும் இன்னும் நீளும் அந்த வரிசையையும்.

இவர்களுக்கு எல்லாம் என்ன நேர்கிறது? எதை தான் இவர்கள் வாழ்நாள் எல்லாம் காண்கிறார்கள்?. இறுதியாக அவள் யாரையும் அலுத்துக்கொள்ளவில்லை. தன் இளையவனையும் அவன் மனைவியையும் பற்றி பெருமிதமே கொள்கிறாள். வாழ்வை குலைத்த தெய்வங்கள் சில இடங்களில் நிகர் செய்கின்றன. பாட்டி என்று அழைக்கும் சிறுமகளை பார்த்து பாட்டியா?நானா? என்று கேட்கும் அந்த குரலில் ஆச்சரியமும் வேடிக்கையும் தான் நிறைந்து உள்ளது. துயரமெல்லாம் நமக்கு தான்.

நன்றி சார்.

மிக்க அன்புடன்

தேவி. க

ஆவடி, சென்னை.

97965796-6b05-4e9d-9428-289b1fc4ee64

அன்புள்ள தேவி,

ஜெயகாந்தனின் நல்ல கதைகளில் ஒன்று அது. வீட்டுக்குள் இருள் புகுவதை யானை புகுந்துவிட்டது என்று அவள் சொல்வாள். அவள் வாழும் வேறொரு உலகின் புலனறிதல்களை அது காட்டுகிறது.

கதைகளை வாசித்ததும் அதைப்பற்றிய உளப்பதிவுகளை எழுதுவது ஒரு நல்ல வழக்கம்.நம்மை விமர்சனரீதியான வாசிப்பை நோக்கிக் கொண்டுசெல்வது அது. கதையில் இருந்து உங்கள் தனிப்பட்ட அவதானிப்புகளை நோக்கிச் செல்வது ஆர்வமூட்டுகிறது

ஆனால் பொதுவாக நாம் கதைகளைப்பற்றி எழுதும்போது அந்தக்கதையைச் சுருக்கிச் சொல்லி நம் உணர்வுரீதியான எதிர்வினைகளையும் சொல்லி நின்றுவிடுவோம். இலக்கியவாசிப்பில் செய்யவேண்டியது அது மட்டும் அல்ல. அந்தக் கதை எழுப்பும் மேலதிக வினாக்களை எழுப்பிக் கொள்வதும், அந்த கதையின் இடைவெளிகளை நிரப்பி அழகியல்ரீதியாக முழுமைசெய்துகொள்வதும், அந்தக்கதையை நாம் அறிந்த இலக்கியப்படைப்புகளின் பின்புலத்தில் பொருத்திப்பார்ப்பதும்தான்

உதாரணமாக இப்படி யோசியுங்கள். அந்தப்பெண் சில வளர்ச்சிச் சிக்கல்கள் கொண்டவள். ஆகவே ஜன்னலோரத்தில் அமர்ந்திருக்கிறாள். அது இரக்கத்துக்குரியதுதான். ஆனால் ஒருவகையில் அத்தனை பெண்களும் அப்படி சன்னலோரத்தில் அமர்ந்துகொண்டு வெளியுலகைப் பார்ப்பவர்கள்தானே?

ஜெ

முந்தைய கட்டுரைகாடும் மழையும்
அடுத்த கட்டுரைசுபாஷ் பாலேக்கர்