அவலாஞ்சி, பங்கித்தபால்

 

டிசம்பர் மாதம் நான் வீட்டைவிட்டு போயாக வேண்டுமென அருண்மொழி சொல்லியிருந்தாள். அவளுடைய அம்மா சித்தி அப்பா ஆகியோர் விருந்துக்கு வருகிறார்கள். அவள் அம்மாவும் சித்தியும் பழைய தமிழ்ப் பண்பாட்டு வழக்கத்தைச் சார்ந்தவர்கள். மருமகன் முன்னால் வருவதில்லை. நேரடியாகப்பேசுவதில்லை.  நான் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு சுதந்திரமே இருக்காது. ஆகவே நான் எங்காவது கிளம்பியாகவேண்டிய நிலை. அருண்மொழிக்கு அவர்களை பலவாறாக உபசரித்து கோயில்கள் எல்லாம் காட்டி மகிழ்விக்கவேண்டியிருந்தது. அத்துடன் பேரப்பிள்ளைகளுடன் அவர்கள் கொட்டமடிக்கவேண்டிய தேவையும் இருந்தது.

ஆகவே நான் டிசம்பர் இருபத்தெட்டாம் தேதி மாலை கெ.பி.என் பேருந்தில் ஈரோட்டுக்குக் கிளம்பினேன். ஈரோட்டுக்கு சென்றுசேர்ந்தபோது காலை ஏழுமணி. நண்பர் விஜயராகவன் வந்து கூட்டிச்சென்றார். கிருஷ்ணனின் வீட்டில் யாரும் இல்லை. ஆகவே அங்கே சென்று குளித்து உடைமாற்றிக் கொண்டேன். பாபு வந்திருந்தார். பாலில்லா டீ சாப்பிட்டுவிட்டுச் சற்று நேரம்பேசிக்கொண்டிருந்தோம்.

ஒன்பது மணிக்கு சங்கர் காருடன் வந்தார். சங்கர் லண்டனில் ஓட்டல் தொழில்செய்பவர். அவரது மச்சானின் மாருதி ஸ்வி·ப்ட் கார். ஏற்கனவே சங்கர் எங்களுடன் கேரளத்தில் திருநெல்லி காட்டுக்கு வந்திருக்கிறார். அப்போதுதான் நாங்கள் முதல்முறையாக புலியைப் பார்த்தோம். ஒன்பதரை மணிக்கு குன்னூருக்கு கிளம்பினோம். அதற்குள் எப்படி வருகிறீர்கள் என்று லதானந்த் பலமுறை தொலைபேசியில் கேட்டுவிட்டிருந்தார்.

கிருஷ்ணன் கர்நாடக சங்கீதம் கேட்க ஆரம்பிக்க விரும்பினார். சில அறிமுக பாடல்கள் கொண்டுவரும்படிக் கேட்டிருந்தார். அருண்மொழியிடம் சொன்னபோது பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, மகாராஜபுரம் சந்தானம் இசைவட்டுகள் சிலவற்றை தேர்ந்து அளித்தாள். பாடல்களைக் கேட்டுக்கொண்டே மலை ஏறினோம். மலைகள் மெல்ல பின்னுக்கு நகர்கையில் இசை கேட்பதென்பது ஓர் அனுபவம்தான். அந்த இசைவட்டு முழுக்க மெல்லிசையின் பாணியில் பின்னனிசேர்க்கப்பட்ட கர்நாடக சங்கீத கீர்த்தனைகள் இருந்தன. பாரதி, பெரியசாமி தூரன், சுத்தானந்த பாரதி ஆகியோரின் தமிழ் பாடல்களே அதிகம்.

மதியம் குன்னூருக்குச் சென்றுசேர்ந்தோம். சிம்ஸ் பார்க் அருகே உள்ள வன விடுதியில் லதானந்த் தங்க ஏற்பாடுசெய்திருந்தார். குன்னூருக்குச் சென்றதுமே ஸ்வெட்டர் போட நேர்ந்தது. மதியமானாலும் நல்ல குளிர். மலை ஏறி குளிருக்கு வந்துசேர்ந்ததும்  ஒரு மெல்லிய தலைச்சுழற்சி ஏற்படும். போதை போல ஒன்று. சுடச்சுட மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பொதுவாக வனத்துறை விடுதிகளில் மிகச்சுவையாகச் சமைக்கும் பணியாளர்கள் இருப்பார்கள். குளித்துவிட்டுச் சாப்பிட்டோம்.

சங்கர் விடுதியைச் சூழ்ந்திருந்த காட்டில் ஒரு மலபார் அணிலைக் கண்டார். அப்பகுதியில் அவை அதிகம். ஆனாலும் பார்க்கையில் ஆச்சரியம் அளிக்கும். பூனை அளவுக்குப் பெரிய , செந்தவிட்டு நிறமான, பூக்க்குலை போல் வால் கொண்ட மலபார் அணில் அல்லது நீலகிரி அணில் இயற்கையின் அற்புதமான படைப்பு. முன்பெல்லாம் ஊட்டியில் அதன் வாலை வெட்டி கொண்டு வைத்து விற்பார்கள். சுற்றுலாப்பயணிகள் வாங்கிக் கொண்டுசென்று பூச்சாடிகளில் வைத்து மகிழ்வார்கள். இப்போது வனச்சட்டங்கள் மிகக் கடுமை. ஆகவே இப்போது நிறையவே கண்ணில் படுகின்றன.
மூன்றை மணிக்கு கிளம்பி பகாசுரன் மலைக்குச் சென்றோம். கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் செங்குத்தாக ஏற வேண்டும். வழக்கம்போல முதல் இருபது நிமிடம் மூச்சு கெட்டிப்பட்டு மார்பு அடைத்துக் கொண்டது. பின்பு உடல் வெம்மையாகி வியர்வை கொட்டி மூச்சு இலகுவாகி அலாதியான ஓர் உற்சாகம். வனக்காவலர் ஒருவர் துணைக்கு வந்தார். தேயிலைத்தோட்ட்டங்களும் அவற்றைச் சூழ்ந்த  மலை எழுச்சிகளும் வெண்பனியால் மூடியிருந்தன. மேலே ஏற ஏற வான்வெளியில் நடப்பதுபோல ஒரு பிரமை உருவாகியது.

பகாசுரன் மலை உச்சியில் காட்டுத்தீயைக் கண்காணிப்பதற்காக உருவாக்கபப்ட்ட  கண்காணிப்பு கோபுரத்தில் ஏறினோம். சுற்றும்பார்த்தால் மேட்டுப்பாளையம் குந்தா எல்லாம் தெரியும் என்றார்கள். ஆனால் வெண்பனி மட்டுமே தெரிந்தது. மேகத்துக்குமேலே நிற்கும் உணர்வு. மூக்கு நுனியை மரத்துப்போகச்செய்யும் குளிர்.

இருள்பரவ ஆரம்பித்தபோது கீழே இறங்கினோம். அரை இருட்டுக்குள் நடந்து விடுதியை அடைந்தோம்.ரிரவில் மெல்ல மெல்ல கடுமையான குளிர் சூழ்ந்துகொண்டு இறுக்க ஆரம்பித்தது. போர்வைக்குள் குளிர்ந்த தண்ணீர் போல குளிர். சைக்கிள் ஓட்டுவதுபோல கால்களை அசைத்து அசைத்து உடலை வெப்பப்படுத்திக் கொண்டேன். மெல்ல கம்பிளிக்குள் உடல்சூடு பரவியபோது இதமாக இருந்தது.

காலையில் எழுந்து குளித்துவிட்டு அவலாஞ்சி கிளம்பினோம். தயிர்சாதமும் தக்காளிசாதமும் பொட்டலமாகக் கட்டி எடுத்துக்கொண்டோம். அவலாஞ்சி போவதற்கு குன்னூரில் இருந்து ஊட்டி போகாமல் ஒரு வழி இருக்கிறது என்றார்கள். லவ்டேல், லாரன்ஸ் வழியாக பத்தடிக்கு ஒருமுறை விசாரித்துக்கொண்டு சென்று கொண்டே இருந்தோம். அவலாஞ்சி சென்றபோது பதினொரு மணி. அங்கே இருந்து வனக்காவலரைக் கூட்டிக்கொண்டு அவலாஞ்சிப்பாதையில் சென்றோம்

இடுங்கலான மலைப்பாதை அது. வழியில் மலையோடை அருகே படுகர்களின் கோயில் ஒன்று இருந்தது. அதனருகே அமர்ந்து சாப்பிட்டோம். ஓடைநீரையே குடித்தோம். அவலாஞ்சியில்  அந்த நீர்நிலை கண்ணில்பட்டதுமே உற்சாகம். புல்வெளிமலைகள் இளவெயிலில் சுடர்விட்டபடி அலையலையாக விரிந்து கிடந்தன. துல்லியமான நீலவானத்தில் சில வெண்மேகங்கள் கனாக்கண்டபடி மிதந்தன. குளிரும் இளவெயிலும் இணையும்போது சோம்பல் வந்து மனதை நிறைக்கிறது. பலர் கூட இருந்தாலும் தனிமை உணர்வும் உருவாகிறது.

அவலாஞ்சி புல்மலைகளில் ஏறிச்சென்றோம். மூச்சிரைப்பதென்பது ஒரு பெரும் பயிற்சி. உடலுக்குள் இருந்து தேங்கிடக்கும் அனைத்தும் ஒழுகி வெளியேறிவிடுவதுபோல, உடல் எடையிழந்து தூய்மையாகிவிடுவதுபோல ஓர் உணர்வு. மலைக்கு அப்பால் இறங்கி யானைகள் மிதித்து சேற்றுக்குழிகளாக ஆகிவிட்டிருந்த படுகைவழியாக நடந்தோம். செம்மண்ணை மான்கூட்டங்கள் குத்திப்புரட்டி போட்டிருந்தன. கோடைகாலத்தில் மரங்கள் எரிந்த சாம்பலை மான்கள் குத்திப்புரட்டி உண்டிருப்பதை கண்டோம். மான் சிறுத்தை செந்நாய் எல்லாமே கொஞ்சம்போல மண் தின்னும் என்றார் வனக்காவலர். உப்புக்கள் கிடைப்பதற்கு அவற்றுக்கு வேறு வழி இல்லை.

சதுப்பு நிலத்தில் ஒரு பெரிய உடைவு அங்கே ஒரு ஓடை. தெள்ளிய நீர் குட்டி அருவி போலக் கொட்டிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த குழிக்கு மேலேயும் கீழேயும் ஓடை இல்லை. ஓடை சதுப்பு மண்ணுக்குள் ஓடியது. அங்கே குழி விழுந்தமையால் அது வெளியே தெரிந்தது. அந்த நீர் துவர்க்கிறது என்றார் கிருஷ்ணன். வெயிலின் அழகை புல்நுனிகள் தோறும் வைர ஊசிகளைப் பொருத்தும் அதன் மாயத்தை பார்த்தபடி நடந்தோம்.

மலையைச்சுற்றிக்கொண்டு திரும்பி காருக்கு வந்து சேர்ந்தோம். திரும்பும் வழியில் வனக்காவலர் செந்நாய் ஒன்றைக் காட்டினார்.  அதன் காதுகள் நுட்பமாக எங்களை நோக்கி கூர்ந்திருந்தன. சிலைபோல பார்த்தபடி நின்றது. சற்று தள்ளி இன்னொரு செந்நாய். சற்று தள்ளி இன்னொன்று. ஆனால் அவை ஓடவில்லை. ஒருவகை வியூகம் அமைப்பதுபோல இடம் மாறி மாறி நின்றன. அப்போதுதான் படுத்திருந்த இன்னொரு செந்நயைக் கண்டோம். பெரியது. ஆனால் அதுஎ ழுந்து விலகியபோது கால் ஒடிந்திருப்பது தெரிந்தது

”சிறுத்தை அடிச்சிருக்கும் சார்” என்றார் வனக்காவலர். அதற்குத்தான் பிற செந்நாய்கள் காவல் காக்கின்றன. அது தலைவன். அவன்தான் முன்னால்செல்வான். குணமாகிவிடுமா என்று கேட்டேன். பெரும்பாலும் குணமாகிவிடும் என்றார் வனக்காவலர். எதிர்மலை மீது மான்கூட்டங்கள் நிற்பதைக் கண்டோம். அந்த தூரத்திலேயே அவை எங்களை மிகக்கூர்ந்துநோக்கியபடி சிலைகள் போல நின்றன.

திரும்பும் வழியில் பங்கித்தபால் என்ற காட்டு முனைக்குச் செல்லும் பாதையில் திரும்பினோம். அங்கே மேல் பவானி அணைக்கட்டு இருக்கிறது. சிறிய தார்ச்சாலை. அவ்வழியே வாகனங்களே செல்வதில்லை போலும். மாலை மங்கும் நேரத்தில் நாங்கள் விட்டுவந்த அவலாஞ்சி புல்சரிவுகளில் கூட்டம் கூட்டமாக மான்கள் இறங்கிச்சென்று நீர்நிலையில் தண்ணீர் குடிப்பதைக் கண்டோம். கீழே புல்சரிவில் மிளா ஒன்றைக் கண்டு கிருஷ்ணன் கூவினார். பெரிய மிளா. விரிந்த கவைக்கொம்புகள். தேங்காய்நார் நிறம் சிறிய பசு அளவுக்கு பெரியது.

அதனருகே இன்னும் ஒன்று. இன்னும் ஒன்று. அவை எங்களை நோக்கி அசையாமல் நின்றன. காதுகள் எங்களை நோக்கி குவிந்து நாசி தூக்கி கழுத்து வளைத்து நின்றன. கிருஷ்ணன் மெல்ல மறுபக்க கார்க்கதவைத்திறந்தார். அந்த மெல்லிய ஒலியிலேயே மூன்று மிளாக்களும் உடல் அதிர்ந்தன. அவர் கீழே இறங்கியதுமே ஓட ஆரம்பித்தன.

பின்னர் வழியெங்கும் மிளாக்களைக் கண்டோம். ஒரு பயணத்தில் இத்தனை வனமிருகங்களைக் கான்பது அதுவே முதல்முறை. நூற்றுக்கும் மேல் மிளாக்களைக் கண்டிருப்போம். சாலையில் நேர் எதிராக நின்று நிதானமாக ஏறிட்டு நோக்கி சரிவிறங்கியது ஒரு ஆண் மிளா. மான்களுக்கு உள்ள நளினத்துடன் காளைகளுக்கு உள்ள திமிர் கலந்த கம்பீரமும் கொண்டதுமிளா. அதன் கண்கள் இருளில் ஒளிவிட்டதைக் கண்டோம்.

பொதுவாகவே இப்போது காட்டில் மிருகங்கள் பெருகிவிட்டன. வேட்டை அனேகமாக இல்லை என்பதே காரணம் ”சல்மான் கான் தான் தான் காரணம். அந்தாளையே புடிச்சிட்டாங்கன்னு தெரிஞ்சதுக்குப் பிறவு எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கு” என்றார் வனக்காவலர்.

வனத்துறை வழக்கை உடைப்பதே கஷ்டம் என்றார் கிருஷ்ணன். பிற வழக்குகளில் பொதுசாட்சிகள் தேவை. வனத்துக்குள் பிறர் போக முடியாதென்பதால் வனத்துறை ஊழியர்களின் சாட்சியே போதுமானது. அவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். துல்லியமான சாட்சி மூலம் குற்றவாளியை சிக்கவைத்துவிடுவார்கள் என்றார்.

இருட்டுபரவும் நேரத்தில் அமராவதி அணைக்குச் சென்றுவிட்டு உடனே திரும்பிவந்தோம். சாலைக்குக் கீழே ஆழத்தில் ஒரு பெரிய காட்டெருது மேய்வதைக் கண்டோம். ஓங்கிய திமில். பெரிய முன்கால். அதனருகே காட்டுப்பன்றிகள். ”சங்கருக்கு மிருக ராசி அதிகம்…இவர் வந்தாலே நெறையமிருகங்கள் கண்ணிலே படுது”என்றார் கிருஷ்ணன்.

”ஒரு சிறுத்தையைக் கூட பாத்திருக்கலாமே” என்றார் சங்கர் ”உங்க தகுதிக்கு இதுவே ரொம்ப அதிகம்” என்றார் கிருஷ்ணன். இருட்டுக்குள் சிறுத்தைக்காக தேடிய கண்களுடன் திரும்பி வந்தோம். பொதுவாக நள்ளிரவு தாண்டி அல்லது விடிகாலையில்தான் சிறுத்தை மற்றும் புலிகளைப் பார்க்க முடியும் என அறிவோம் என்றாலும். காடு மர்மங்களால் ஆன ஒரு வசீகரம். கற்பனை அந்த மர்மங்களை மேலும் வளர்க்கிறது.

அன்றிரவு குன்னூரிலேயே தங்கிவிட்டு மறுநாள் காலை ஊட்டிக்குச் சென்றோம். நாராயண குருகுலத்தில் பொறுப்பாலரான சுவாமி டாக்டர் தன்மயா இல்லை. இண்டியன் ஏக்ஸ்பிரஸில் நிருபராக இருந்தவரும் சூழலியலாளருமான முகமது லத்தீ·ப் மட்டுமே பொறுப்பாக இருந்தார். ஒரு டச்சுக்காரர் இந்திய தத்துவம் குறித்து ஆய்வுசெய்வதற்காக வந்து தங்கியிருப்பதாகச் சொன்னார் லத்தீப். அவரே சமைத்த மதிய உணவை உண்டோம்.

நிர்மால்யாவை தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருந்தேன். அவர் வந்திருந்தார். தியான அறைக்குப் போய் சற்றுநேரம் இருந்தோம். பின்னர் அருகே உள்ள வனத்துறைக் குன்று ஒன்றுக்குச் சென்றோம். மாபெரும் பைன்மரங்கள் அடர்ந்த குன்று அது. அதன் உச்சியில் ஒரு பார்வைக்கோபுரம் உண்டு. அந்த உச்சிவரை நடந்துவிட்டு இறங்கும்போது ஒரு காடு ஆடு தாண்டிச்செல்வதைக் கண்டோம். நான் அந்தக்குன்றுக்கு பத்து வருடங்களாகச் செல்கிறேன். அங்கேயொரு மிருகத்தைப் பார்ப்பது அதுவே முதல் முறை. சங்கரின் ராசி!

மாலை நாலரை மணிக்கு ஊட்டியில் இருந்து இறங்கினோம்.நான் கோவையில் இறங்கிக்கொண்டேன்.நேராக திரிச்சூர் செல்வதாக திட்டம். கோவை மத்திட பேருந்து நிலையத்தில் ஈராற்றுபேட்டை பேருந்தில் ஏறிக்கொண்டேன்.

 

ஒரு மலைக்கிராமம்

பருவமழைப்பயணம்-மழையில்லாமல்

அவலாஞ்சி

முந்தைய கட்டுரைமாற்றுவெளி
அடுத்த கட்டுரைதுவாரபாலகன்:கடிதங்கள்