அன்புள்ள ஜெ.,
இசை அறிஞர் தஞ்சாவூர் பி எம் சுந்தரம் அவர்களின் “மங்கல இசை மன்னர்கள்” என்னும் நூலைச் சமீபத்தில் வாசித்தேன்(இலக்கியத்தில் மாற்றம் பற்றி பாரதீய வித்யா பவனில் பேச வந்திருந்த பொழுது நீங்கள் கையெழுத்திட்டீர்கள்). பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகஸ்வர மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் வாழ்க்கைத்தொகுப்பு. கலை, பண்பாட்டு, இசை ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத புத்தகம். இதில் நாகஸ்வர ஏகச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி என் ராஜரத்தினம்பிள்ளையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
திருக்கோடிக்காவல் வயலின் கிருஷ்ணய்யரிடம் வாய்ப்பாட்டு கற்று கச்சேரிகள் செய்யத்தொடங்கிய பொழுது ராஜரத்தினம்பிள்ளைக்கு வயது ஏழு. பிற்காலத்தில் புல்லாங்குழல் விற்பன்னராக விளங்கிய (இது போல ஒன்றுக்கு மேற்பட்ட வாத்தியங்களில் தேர்ச்சியடைந்தவர்கள் அதிகம் பேர் இருந்திருக்கிறார்கள் ) திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையுடன் சேர்ந்து கச்சேரிகள் செய்து வந்தவரை நாகஸ்வரத்துக்கு “மடை மாற்றம்” செய்தவர் திருவாவடுதுறை மடத்தின் சர்வாதிகாரியான பொன்னுப்பிள்ளை. இவரது மாமா திருமருகல் நடேசபிள்ளை(இவர் தத்தெடுத்துக் கொண்ட பிறகு டி என் ராஜரத்தினம் ஆனார்) “வித்வான்களின் வித்வான்” ஆக இருந்தபோதிலும் அவரிடம் தவில் வாசித்த இன்னொரு சகலகலவல்லவரான அம்மாபேட்டை கண்ணுசாமிப்பிள்ளையிடமே நாகஸ்வரம் கற்றுக்கொண்டார். ஆசிரியர் கூறுகிறார் “குருகுலவாசம், சாதகம் எல்லாம் ஒரு வியாஜ்யமாக இருந்ததே தவிர, உண்மையில் முன்ஜென்ம நற்கருமங்களின் பலனாக அக்கலை அவருக்கு இயல்பாகவே லபித்திருந்தது. துரிதமான, வக்கிரமான பிருகாக்கள், சுருதிசுத்தமும் வன்மையும் நிறைந்த ஒலி, ஆற்றலான பிரயோகங்கள், மணிக்கணக்கில் ஆலாபனை செய்யும் திறமை எல்லாம் ராஜரத்தினம் பிள்ளையிடம் தாமாக வந்து சேர்ந்தன. இவருடைய வாசிப்பைப் பற்றி எவ்வளவு கூறினாலும் அது குறைவாகத்தான் இருக்கும்”
பொதுவாக இவரை எல்லோரும் நாத்திகர் என்றே கருதினாலும் இவரிடம் நீறு பூத்த நெருப்பாக இருந்த பக்தி வெளிப்பட்ட தருணங்களும் உண்டு. ஒருமுறை இவர் திருச்செந்தூர் உற்சவத்தின் ஏழாம் திருநாளன்று வாசித்துக்கொண்டிருந்தார். வாசஸ்பதி ராக ஆலாபனை கரை புரண்டு பிரவகித்துக்கொண்டிருந்தது. வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பார்த்தவுடன் வாசிப்பு தடைப்பட்டுவிட்டது. அழகு பொலியும் அந்த அலங்காரத்தில் மெய்மறந்து ஒரு கணம் நின்றுவிட்டார். சுயநினைவு வந்ததும் நாகஸ்வரத்தை கொடுத்துவிட்டு, சுவாமியின் அருகே சென்று தன் கழுத்திலிருந்த விலையுயர்ந்த நவரத்தின மாலையைக் கழற்றி சுவாமிக்கு அணிவிக்கச்செய்துவிட்டு பிறகு வாசிப்பைத் தொடங்கினார். ஒருமுறை மன்னார்குடி கோமாலப்பேட்டை ஆலயத்தில் இரவு சுவாமி புறப்பாட்டிற்கு வாசிக்கச் சென்றிருந்தவர் மறுநாள் காலை ஆற்றங்கரைக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது பிரகாரத்திலிருந்த முருகனைக் கண்டார். கண்ணெடுக்க முடியாத அந்தப் பேரழகு அவர் மனத்தைக் கரைத்துவிட்டது. தன் ஆளை அனுப்பி நாகஸ்வரத்தை வரவழைத்து, சுமார் ஒன்றரை மணி நேரம் “ஷண்முகப்பிரியா” வைப் பொழிந்து தள்ளி பெருமானையும் மற்றவர்களையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.
கதர் வேஷ்டி, சட்டை, தலையில் குடுமி என்று ஏனைய நாகஸ்வரக்கலைஞர்களைப் போலவே முதலில் காட்சி தந்த ராஜரத்தினம்பிள்ளை, தன் தோற்றத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். “கிராப்” வைத்துக்கொண்டு ஷெர்வாணி, சுர்வால் மற்றும் காலிலே “ஷூ” என்று புது அவதாரம் எடுத்தார். எல்லா விதவான்களும் நடை, உடை, பாவனை விஷயத்திலாவது அவரைப் பின்பற்றத் தலைப்பட்டனர். அதேபோல் முதலில் மேடை போட்டு வாசித்தவரும் இவர்தான். அதுவரை வித்வான்கள் யாரும் திருமணம் தவிர மற்ற இடங்களில் உட்கார்ந்து வாசித்ததில்லை. திருவாவடுதுறை மடம், மாயவரம் துலாமாத சுவாமி புறப்பாடு, திருவிடைமருதூர் தைப்பூச வெள்ளிரதம் முதலிய இடங்கள் தவிர மற்ற இடங்களில் நின்று வாசிப்பதில்லை என்பதை நிபந்தனையாகவே போட்டு கடைசி வரை செயல்படுத்தினார். திருவிழாக்களோ திருமணங்களோ இவர் வாசிப்பு இல்லாத இடமே இல்லை என்றொரு காலம் இருந்தது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள அமரர் பொள்ளாச்சி நா மகாலிங்கம் அவர்கள் அவருடைய திருமணத்தில் திருவிடைமருதூர் வீருஸ்வாமிப்பிள்ளையோடு (“சொல்வனம்” தி ஜானகிராமன் நினைவிதழில் கரிச்சான்குஞ்சுவின் கட்டுரையில் இவர் பற்றிய குறிப்பு உண்டு. அதே சொல்வனத்தில் கி.ரா ராஜரத்தினம்பிள்ளை குறித்து அபாரமான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் “அழிந்துபோன நந்தவனம்” என்று) இவர் வாசித்துச் சிறப்பித்ததை நினைவுகூர்கிறார்.”இவருக்குப் பல்லவி வாசிப்பதில் விருப்பம் குறைவு. அதிலும் “வ்யவகாரமான” ஸ்வரம் போடுவதை கட்டோடு வெறுத்தார். சில கீர்த்தனைகள் மட்டுமே வாசிப்பார். ஆனால், அமானுஷ்யமான கற்பனை செறிந்ததாகவும், அதற்கு ஈடு கூறமுடியாத விதத்திலும் அவருடைய ராக ஆலாபனைகள் அமைந்திருக்கும். இன்று வரை அதற்கொப்பான ராக ஆலாபனையை எவரிடமும் கேட்க முடியவில்லை” என்கிறார் ஆசிரியர்.
சுயகௌரவம் மிக அதிகம் உள்ள இவருக்குக் கோபம் வந்து விட்டால், யாருடன் பேசுகிறோம் என்று பாராமல், கெட்ட வார்த்தைகளைச் சரமாரியாகப் பேசிவிடும் குணம் இருந்தபடியால், இவரிடம் பேசவே பலரும் அஞ்சினார்கள். விதிவிலக்குகள் தவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாத கலைஞர்களே இல்லாத காலம். இவரும் விதிவிலக்கல்ல. இசை மற்றும் நாடக மேதை எஸ் ஜி கிட்டப்பாவுடனான இவர் சந்திப்பு திருநெல்வேலி ரயில் நிலையத்திலுள்ள “ஸ்பென்சர்ஸ் ரூமி” ல்தான் நடந்திருக்கிறது. ஒத்துக்கொண்ட கச்சேரிக்கு வராமல் இருப்பது, வந்தாலும் வாசிக்காமல் போவது, எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவது(என்ன தம்பி, உன் சம்பளம் ஒரு ஆயிரம் ரூபாய் இருக்குமா? இந்தக் கச்சேரிக்கே மூவாயிரம் பேசிருக்கேன் என்று மாவட்டக் கலெக்டரையே ஒருமுறை சத்தாய்த்திருக்கிறார்) உடன் வாசிக்கும் நாகஸ்வர மற்றும் தவில் கலைஞர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பது – பொறுத்துப்பொறுத்துப் பார்த்த தவில் வித்வான் பொதுசாமிபிள்ளை உருவிய கத்தியுடன் விரட்ட ஸ்டேஷன் மாஸ்டரும் மற்றவர்களும் மடக்கிப்பிடித்து சக்ரவர்த்தியைக் காப்பாற்றியிருக்கிறார்கள் திருவாரூர் ஸ்டேஷனில் – போன்ற கெட்ட குணங்களும் அவரிடம் இருந்தன. அவருடைய மேதமைக்காக இதையெல்லாம் ஜனங்கள் பொறுத்துக்கொண்டார்கள் என்கிறார் ஆசிரியர்.
“தில்லானா மோகனாம்பாள்” சிவாஜியோ, பாலையாவோ நினைவுக்கு வராமல் இந்த நூலைப் படிப்பது கடினம்.இந்த நூலைப் படித்ததன் தொடர்ச்சியாக அவருடைய வாசிப்புகளையும், பாட்டுக்களையும் இணையத்தில் தேடித் திரிந்த போது அகில இந்திய வானொலிக்கு ராஜரத்தினம்பிள்ளை அளித்த பேட்டி ஒன்று கேட்க நேர்ந்தது.”தில்லானா மோகனாம்பாள்” படத்தில் நாட்டியம் பெரிதா நாகஸ்வரம் பெரிதா என்று ஒரு போட்டி வரும். சிவாஜி “நலந்தானா” வாசிக்க பத்மினி ஆடுவார். கடைசியில் தீர்ப்புக் கூறமுடியாதபடி காட்சியை அமைத்திருப்பார்கள். இந்தப் பேட்டியில் ராஜரத்தினம்பிள்ளை கூறுகிறார் உயிருள்ளகலை வாய்ப்பாட்டுதான். மற்றெதெல்லாம் அடுத்தபடிதான் என்று. அதிலும் சௌக்க காலத்தில் பாடும் பாட்டே மிக உயர்வானது என்கிறார். அவர் கூறும் காரணம் மனித உயிரிலிருந்து கிளம்புகிறது சங்கீதம், உயிரில்லாத வாத்தியங்களிலிருந்து அல்ல என்பதுதான். இதன் தொடர்ச்சியாக திரு பி எம் சுந்தரம் அவர்களின் பேட்டியைக் கண்டபோதும் இது உறுதியானது. அதில் அவர் கூறுகிறார் ராஜரத்தினம் பிள்ளைக்கு தன்னைப் “பாட்டுக்காரன்” என்று சொல்லிக்கொள்வதில் தான் பிரியம் அதிகம் என்று. அதற்கான யோக்கியதையும் அவருக்கிருந்தது. அவருடைய நாயனத்தில் என்ன பிருகா பேசுமோ அதுபோல ரெண்டு மடங்கு அவருடைய வாய்ப்பாட்டில் பேசும் என்கிறார்(இணையத்தில் கிடைக்கும் தரவுகள் அதை உறுதி செய்கின்றன) அதைத்தான் தன்னுடைய வானொலிப் பேட்டியிலும் உறுதிசெய்கிறார் ராஜரத்தினம்பிள்ளை. சரிதான். சக்கரவர்த்தியின் தீர்ப்பு.
டி என் ஆர் ன் வானொலிப்பேட்டி
https://www.youtube.com/watch?v=T8H_GCH41sw
டி என் ஆர் ன் தோடி ஆலாபனை – வாய்ப்பாட்டு
திரு பி எம் சுந்தரம் அவர்களின் பேட்டி
அன்புடன்.,
கிருஷ்ணன்