‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 56

tigமீண்டும் படைகளின் நடுவே செல்லத் தொடங்கியபோது ஸ்வேதன் சற்று விரைவு குறைத்தே புரவியை செலுத்தினான். வஜ்ரகுண்டலன் அவர்களை நோக்கியபடி சற்று விலகி வந்தான். ஆணிலியுடன் செல்வதை அவன் இழிவெனக் கருதுவதை காணமுடிந்தது. பந்தங்களின் ஒளி செந்நிறமாக வழியெங்கும் சிந்திக் கிடந்தது. வழியில் யானைகளை அவிழ்த்து இரட்டைக் கந்துகளில் இருபக்கமும் சங்கிலி நீட்டி கட்டியிருந்தார்கள். அவை செவியாட்டியபடி உப்புநீரில் நனைக்கப்பட்ட உலர்புல்லைச் சுருட்டி மண்போக காலில் அறைந்து தின்றுகொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான மணிகளின் ஓசை இணைந்து முழக்கமாக சூழ்ந்தது.

“நீ எப்போது இளைய பாண்டவரை அறிந்தாய்?” என்று ஸ்வேதன் கேட்டான். ரோகிணி சிறு ஓட்டமாக அவர்களுடன் வந்தபடி “நான் மொழி அறிகையிலேயே அவரைப்பற்றி அறிந்துகொண்டேன். மணிபூரக நாட்டில் அவர் பெண்ணுருக்கொண்டு சென்று சித்ராங்கதையை வென்ற கதையை ஒருநாள் சூதர் ஒருவர் எங்கள் மன்றில் பாடினார். அப்போது நான் எந்தையுடனும் அன்னையுடனும் இருந்தேன். அப்போது அவர்கள் உத்கலத்தில் ஒரு கற்கோயிலை செதுக்கிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் சிற்பப் பணி முடிந்த பின்னர் இளைப்பாறும் பொருட்டு சூதரைக்கொண்டு கதையும் ஆடலும் நிகழ்த்தினார் அவ்வூரின் சிற்றரசர். அன்னை மடியிலிருந்து அக்கதையை நான் கேட்டேன்” என்றாள்.

“என் நாவில் அப்போதும் மொழி திருந்தியிருக்கவில்லை. செவியறியும் சொற்களுக்கு பொருள் விரியும் பருவமும் அகவையும் அல்ல. ஆயினும் அக்கதையில் நான் முழுமையாக ஆழ்ந்தேன்” என்று அவள் தொடர்ந்தாள். “கரைவிளிம்பில் நின்றிருக்கையில் கால்தவறி பெருக்கெடுக்கும் நதியொன்றில் விழுந்து கொண்டுசெல்லப்படுவதுபோல என்று பின்னாளில் அதை மீண்டும் மீண்டும் எண்ணி நோக்கியிருக்கிறேன். அந்நாளில் ஒவ்வொரு அந்தியிலும் ஒரு சூதர்கதையை கேட்டுக்கொண்டிருந்தேன். மாமன்னன் நளன் புரவி வென்ற கதை. ராகவராமன் படைகொண்டு சென்று இலங்கையை வென்றது. இந்திரன் வெண்ணிற யானை மேல் ஏறி விருத்திரனை அழித்தது. எந்தக் கதையும் பிறிதெங்கோ எவரோ இயல்வதாகவே எனக்கு தோன்றியது. அந்தக் கதையில் மட்டும் நான் இளைய பாண்டவராக மாறினேன்.”

முகம் மலர்ந்தவளாக அவள் சொல்லிக்கொண்டே வந்தாள். “வேர்கள் நெளியும் நீராழத்தில் நீந்தி வெளியே தெரியும் மங்கலான வானத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். இத்தனை ஆண்டுகளில் வேர் நெளியும் நீராழம் எத்தனையோ முறை என் கனவுகளில் வந்திருக்கிறது. ஒருமுறைக்கு மேல் அந்தக் கதையை நான் கேட்டதில்லை. அதன் சொற்களேதும் என் நினைவில் இல்லை. ஆனால் மிதக்கும் பசுந்தீவுகளில் ஏறினேன். மூங்கில் சூழ்ந்த கோட்டையை தாவிக்கடந்தேன். மூங்கிலாலான ஏழடுக்கு மாளிகை, பீதர்முகங்கொண்ட குடிகள் என ஒவ்வொரு காட்சியும் என்னுள் நூறாண்டு வாழ்ந்ததற்கு நிகராக பதிந்துள்ளது.”

“வாழ்வைவிட கனவு எத்தனை ஒளிமிக்கதாய் பழுதற்றதாய் நோக்குந்தோறும் தெளிவதாக இருக்கிறது! ஏனெனில் இவ்வாழ்வைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு பொருளும் வடிவம் கொண்டுள்ளது. நம் விழைவுக்கேற்ப உருமாறுவன எவையுமில்லை. இங்கே எட்டுத் திசைகளும் எட்டு விசைகளாக நம்மை இழுக்கின்றன. நம் கனவுகளோ நாமன்றி பிறிதொன்றிலாதவை. அங்கு தெய்வங்களுமில்லை. ஒரு தருணம் இளைய பாண்டவராக அங்கு நான் இருப்பேன். பிறிதொரு தருணம் சித்ராங்கதையாக அவர்மேல் பெருங்காதல் கொள்வேன். அரிதாக அவர்களுக்கு குற்றேவல் செய்யும் சிறுமியாக இருந்தேன்” என்றாள் ரோகிணி.

ஸ்வேதன் “அப்போதே உன்னை சிறுமி என்றுதான் எண்ணினாயா?” என்றான். அவள் திரும்பிப் பார்த்து “நான் என்னை எண்ணும்போதெல்லாம் சிறுமியாகவே உணர்ந்தேன்” என்றாள். “அக்கதையை உன்னிலிருந்து சென்று தொட்டது எதுவென்று உணர்வதொன்றும் கடினமானதல்ல” என்றான் ஸ்வேதன். ரோகிணி “ஆம், நீங்கள் சொல்வது என்ன என்று எனக்கு புரிகிறது. நான் ஆணிலியானதால் அக்கதைக்குள் சென்றேனா அன்றி அக்கதை என்னை ஆணிலியாக வார்த்தெடுத்ததா என்று நானும் எண்ணியதுண்டு” என்றாள்.

“பின்னர் பிருகந்நளையாக விராடபுரிக்குச் சென்ற கதையை கேட்டேன். அப்போது பெற்றோரைவிட்டு ஆணிலிகளுடன் சேர்ந்து பெண்ணுருக்கொண்டு ஊர்கள் தோறும் அலையத்தொடங்கிவிட்டிருந்தேன். பிறந்த குழந்தைகளை கைதொட்டு வாழ்த்தினேன். புத்தில்லங்களில் முதலில் நுழைந்தேன். இந்திரனுக்கு பூசனை நிகழும் இடங்களில் முதல்மலர் கொண்டும் செழிக்கா வயல்களில் இடக்கால் வைத்து சீற்றம்கொள்ளச் செய்தும் பாரதவர்ஷத்தின் நாடுகளெங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்தேன். விராடபுரியின் பிருகந்நளையின் கதையை கேட்டுக் கேட்டு பெருக்கிக்கொண்டேன். ஒருமுறை அக்கதையை கேட்டுக்கொண்டிருந்தபோதுதான் என்னை அவரால் புரிந்துகொள்ளமுடியும் என்று தோன்றியது.”

“அந்தக் கணத்தை நினைவுறுகிறேன். சூதன் அதை பாடிக்கொண்டிருந்தான். எனக்கு மிக அருகே அவர் நின்றிருப்பதாக உணர்ந்தேன். திரும்பிநோக்கினால் அவ்வுணர்வை இழந்துவிடக்கூடும் என அஞ்சி அவ்வாறே அமர்ந்திருந்தேன். அன்றுமுதல் அவரை சென்று சேர விழைவுகொண்டேன். என்றேனும் ஒரு நாள் அவரை நான் பார்ப்பேன் என்று என் அகம் உறுதி கொண்டிருந்தது. காண்கையில் அவரிடம் எனக்கு சொல்வதற்கு ஒன்றே இருக்கிறது. என் இறையே, என்னை ஆட்கொள்க! தாங்களன்றி பிறர் என்னை அறிய இயலாது. அது ஒன்றே. அச்சொல்லுக்கு அப்பால் இப்புவியில் எவரிடமும் எனக்கு சொல்வதற்கு ஏதும் இல்லை.”

ரோகிணி பேசிக்கொண்டே சென்று சொல்முடிந்து வெறுமையை சென்றடைந்தாள். பின்னர் நெடுநேரம் தலைகுனிந்து நடந்து வந்தாள். அடுமனைகளில் பொருட்களிலிருந்து உணவு எழத் தொடங்கியது. கல்லில் தெய்வம் எழுவதுபோல என்று அதை சங்கன் சொல்வதுண்டு. அவன் புன்னகைத்தான். அத்தனை தெளிவாக, தொட்டு உண்டு உணரும்படி தெய்வத்தை அறிய வாய்ப்பவர்கள் நல்லூழ் கொண்டவர்கள்.

உணவின் மணத்தை உணர்ந்து அரைத்துயிலில் இருந்த படைவீரர்கள் எழுந்து அமர்ந்து மேலும் ஊக்கத்துடன் பேசிக்கொண்டிருந்தமையால் படைமுழக்கம் இருளுக்குள் கார்வையுடன் எழுந்தது. சங்கன் பசிகொண்டிருந்தான். அடுமனை மணம் அவனை மேலும் சோர்வுறச் செய்தது. அவர்களின் பேச்சில் அவன் உள்ளம் ஈடுபடவில்லை. புரவியின் கடிவாளத்தை தளர்வாகப் பிடித்தபடி தயங்கிய நடையில் புரவியை செல்லவிட்டு உடலை எளிதாக்கி இருபுறமும் ஆர்வமின்றி நோக்கியபடி வந்தான்.

படைவீரர்கள் சகட ஒலி கேட்டு திரும்பி நோக்கினார்கள். பேசிக்கொண்டிருந்தவர்களின் ஓசை நின்றது. அது விளக்குவண்டிகள் எனத் தெரிந்ததும் தொடர்ந்தனர். ஊன்நெய்க்கலம் ஏற்றப்பட்ட ஒற்றைச் சகடவண்டியை ஒருவன் தள்ளியபடி வர இன்னொருவன் நீள்கைக்குடுவையால் நெய்யை அள்ளி ஊற்றி கற்களால் ஆன பந்தவிளக்குகளை எரியவிட்டான். “ஏன் கல்விளக்குகள்?” என்றான் சங்கன். “அவை எரியால் வெம்மை கொள்வதில்லை” என்று ரோகிணி சொன்னாள்.

உலர்ந்து விறகுபோலான ஊன்துண்டுகளை வெட்டுவதற்கு ஒரு கருவியை உருவாக்கியிருந்தனர். பெரிய மரப்பீடத்தில் அதை ஒருவன் வைத்தான். அதை வெட்டும் கத்தியின் பிடி மிக நீளமானதாக இருந்தது. முழு எடையாலும் அதை ஒருவன் அழுத்த பாக்குவெட்டிபோல அது ஊன்தடியை நறுக்கியது. அகன்ற உருளிகளில் கொதிக்கும் அரிசியுடன் ஊன் துண்டுகளையும் காய்கறிவற்றல்களையும் உலர்கிழங்குகளையும் போட்டனர். அவை வெந்து எழ இருபுறமும் நின்றபடி துடுப்பிட்டு படகோட்டுபவர்கள்போல கிளறினர். ஊன் சோற்றின் மணம் இனிதாக இருந்தது. களத்திலன்றி வேறெங்கும் அது அத்தனை மணமும் சுவையும் கொண்டிருக்க வாய்ப்பில்லை. நினைவில் மேலும் சுவைகொள்ளக்கூடும். முதுமையில் நினைவெழுந்தால் அமுதெனவே தோன்றும்போலும்.

உருளிகளை கயிறிட்டுத் தூக்கி மெல்ல சரித்து ஊன்சோற்றை பாய்விரிக்கப்பட்ட பீடவண்டியில் கொட்டினர். அதை தள்ளிக்கொண்டுசென்று அங்கிருந்த சோற்றுமலைமேல் கொட்டிக் குவித்தனர். பந்தவெளிச்சத்தில் ஆவி தழலென சுழன்றசைந்தது. பதினெட்டு மடைப் பணியாளர் நீண்ட மூங்கில் கழியில் பாதியாக வெட்டிய கொப்பரை பொருத்தப்பட்ட அகப்பையால் சோற்றுமலையில் அள்ளி அப்பாலிருந்த அகன்ற பீடத்தில் அடித்தனர். அங்கே சோற்றுருளை உருவாகியது. அதன்மேல் இலைகோட்டிச் செய்யப்பட்ட தொன்னையை வைத்து அழுத்தி எடுத்து அப்பால் அடுக்கினர். காயில் தோல்போல சோற்றுடன் இலை ஒட்டிக்கொண்டது.

“இரண்டுநாட்களுக்குப் பின் அந்த இலையின் மணம் சோற்றை மேலும் இனிதாக்கிவிட்டது” என்று ரோகிணி சொன்னாள். அவள் தன் உளஒழுக்கில் இருந்து மீண்டுவிட்டாள் என்று தெரிந்தது. “உலருணவு சிலநாட்களில் சலித்துவிடும் என நான் எண்ணினேன். ஆனால் சுவைமிகுந்தே வருகிறது. வறுத்த கோதுமையும் துருவிய இன்கிழங்கும் உலர்மீன்பொடியுடன் ஊன்கொழுப்பு சேர்த்து உருட்டி எடுப்பது… உண்ண உண்ணப் பெருகும் உணவு அது.” சங்கன் “எங்களூரில் ஈசலையும் பனையின் விதைக்குள் உள்ள வெண்பருப்பையும் கோதுமையையும் சேர்த்து இடித்து உருட்டி கலங்களில் வைத்திருப்பார்கள். பெருமழைக்காலத்திற்கான உணவு அது” என்றான். ரோகிணி “மழையுடன் போரிடுகிறீர்கள்” என்றாள்.

“போரின்போது இனிப்பு உண்பதில்லையா? வெல்லம் கொண்டுவரப்படவே இல்லை என்று தோன்றுகிறது” என்றாள் ரோகிணி. “போரில் இனிப்பு உண்ணலாகாதென்று நூல்கள் சொல்கின்றன” என்றான் ஸ்வேதன். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “தெரியவில்லை” என்றபின் அவன் நினைவுகூர்ந்து “போருக்கெழும் படைகளில் தவிர்க்கவேண்டியவற்றின் நிரையை சொல்கிறது யுத்தவித்யா தரங்கிணி. அதில் பெண்டிர், குழந்தைகள், வீட்டு விலங்குகள், மலர்கள், பொன்னணிகள், அருமணிகள், பட்டாடைகள், நறுமணப்பொருட்கள், பஞ்சுச்சேக்கைகள், சாமரம், விசிறி, நீராட்டு எண்ணைகள், இசைக்கருவிகள், ஆடி, வாய்மணம் ஆகியவற்றுடன் பதினாறு இன்பங்களில் ஒன்றாகவே இனிப்பும் சொல்லப்பட்டுள்ளது” என்றான்.

அவள் சிரித்து “இன்பங்களும் நுகர்வுகளும் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன” என்றாள். “ஆம், படைவீரனை போர்த்துறவி என்று சொல்லும் வழக்கம் உண்டு. அவன் அணியும் ஆடையையும் துவராடை என்பார்கள்” என்றான். “அவர்கள் வீடுபேறை நோக்கி செல்கிறார்கள்” என்று சொல்லி அவள் மீண்டும் நகைத்தாள். ஸ்வேதன் “அவர்கள் தங்கள் துணைவியரையும் மைந்தரையும் எண்ணி துயருறுகிறார்களா?” என்றான். “இல்லை, துயருற்றால்கூட அதை சொல்லமாட்டார்கள்” என்றாள். “ஆம், படைமுகம் கொண்டு கிளம்பிவிட்டால் ஒருமுறைகூட திரும்பிநோக்கலாகாது என்று நெறியுள்ளது. திரும்பி நோக்குபவனை பிடித்துக்கொள்வதற்காக நூற்றெட்டு இருள்தெய்வங்கள் காத்து நின்றிருக்கின்றன என்கின்றன நூல்கள்.”

“அவை என்ன செய்யும்?” என்று அவள் கேட்டாள். “அவை நூறாயிரம் மாயத்தோற்றங்கள் கொள்ளும். அன்னை என்றும் மனைவி என்றும் மைந்தர் என்றும் வந்து நின்று விழிநீர் வடிக்கும். விட்டுச்சென்ற கடமைகளும் எஞ்சும் வஞ்சங்களும் எய்தாத விழைவுகளும் சலிக்காத இன்பங்களுமாக பெருகிச்சூழும். சொற்களின் பொருளனைத்தையும் திரிபடையச் செய்யும். நாடும் குலமும் கொடியும் நெறியும் கடமையும் பிறிதொன்றென தோன்றச் செய்யும். விட்டுவந்த ஒவ்வொன்றையும் கணந்தோறும் பெருக்கும். அத்தெய்வங்களால் சூழப்பட்டுவிட்ட படைவீரன் அஞ்சுவான், ஐயுறுவான், தனிமைகொள்வான், நம்பிக்கை இழப்பான், வெறுமையில் உளம்திளைப்பான்.”

“பின்நோக்கியமையால் தெய்வங்களால் பற்றப்பட்டு பித்தரானவர்கள் எப்போதும் படைகளில் இருப்பார்கள். கூச்சலிட்டு வெறிகொள்பவர்களும் நெஞ்சிலறைந்து அழுதபடி திரும்பி ஓடுபவர்களும் உண்டு. உளமுடைந்து அழுபவர்களும் சொல்லவிந்து ஆழ்ந்த அமைதிக்கு சென்றுவிடுபவர்களும் உண்டு. எப்படையிலும் ஆயிரத்திலொருவர் திரும்பி நோக்காமலிருக்க மாட்டார் என்கிறார்கள்” என்றான் ஸ்வேதன். ரோகிணி “அவர்கள் திரும்பி நோக்காமலிருக்கலாம். ஆனால் ஓட்டைக் கலம் ஒழுகுவதுபோல வழியெங்கும் அவர்கள் தங்களை உதிர்த்தபடிதான் செல்கிறார்கள்” என்றாள்.

ஸ்வேதன் “எப்படி சொல்கிறாய்?” என்றான். ரோகிணி “ஐயமிருந்தால் பின்னிரவில் எழுந்து படைகளை பாருங்கள். வழிநடந்த களைப்பாலும் அந்தியில் அருந்திய மதுவாலும் அவர்கள் விரைவிலேயே துயின்றுவிடுவார்கள். உடல் களைப்பை இழந்ததும் உள்ளம் விழித்துக்கொள்ளும். பின்னிரவில் நான் அவர்களின் நீள்மூச்சுக்களை கேட்பதுண்டு. துயிலின்றி புரண்டு புரண்டு படுப்பார்கள்” என்றாள். ஸ்வேதன் “ஆம், அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்றான்.

சங்கன் “இன்னும் நெடுந்தொலைவா, மூத்தவரே?” என்றான். “அணுகிவிட்டோம்” என்றான் ஸ்வேதன். உணவுருளைகளை ஏற்றியபடி வண்டிகள் படைகள் நடுவே செல்லத் தொடங்கின. படைவீரர்கள் கைகளை நீட்டி அவற்றை பெற்றுக்கொண்டார்கள். “நீத்தார்கடனுக்கு ஆற்று மீன்களுக்கு பொரி வீசுவதுபோலுள்ளது!” என்றாள் ரோகிணி. அந்த ஒப்புமை ஸ்வேதனை புன்னகைக்கச் செய்தது. அவள் கைவீசி பொரிபோடுவதுபோல நடித்தாள். பின் மீன்கள் பொரியை பாய்ந்து பாய்ந்து கவ்வுவதுபோல விரல்களை காட்டினாள்.

ஸ்வேதன் “நீ நடனமாடுவாயா?” என்று கேட்டான். “நான் காவியமும் இசையும் நடனமும் முறைப்படி பயின்றுள்ளேன். பாடல்களும் இயற்றுவேன். சற்றுமுன் பாடியது நான் அக்கணம் இயற்றிய செய்யுள்” என்று அவள் தாழ்ந்த குரலில் சொன்னாள். “நடனம் அறிவாய் எனில் உனக்கு வில்லும் கைப்பழக்கமே என்று எண்ணுகிறேன்” என்றான் ஸ்வேதன். “ஆணிலிகள் படைக்கலம் ஏந்தலாகாதென்பது அரசநெறி. நான் நாணல் கொண்டு பறவைகளை வேட்டையாடுவேன். தனித்த பயணங்களில் என் உணவு அவைதான். ஒருமுறைகூட இரண்டாவது அம்பொன்றை நான் செலுத்த நேர்ந்ததில்லை” என்றாள் ரோகிணி.

புரவிக்குளம்படி கேட்டுக்கொண்டிருந்தது. சிலகணங்களுக்குப் பிறகு ஸ்வேதன் “நானும் என் கனவுகளில் பெண்ணென உணர்ந்ததுண்டு” என்றான். அவள் விழிதூக்கி “மெய்யாகவா?” என்றாள். “வில்லவர் அனைவரும் எங்கேனும் ஆழத்தில் பெண்ணென்றும் இருப்பார்கள். ஏனெனில் வில்லென்பது நெளியும் பெண்ணுடல். அதனுடன் இணைந்து நெளியும் ஆணுடலில் பெண்மை குடியேறாமலிருக்காது” என்றான். “ஆம், நான் அதை உணர்ந்திருக்கிறேன். வில்பயில்பவர்களை தொலைவிலிருந்து பார்க்கையில் அவர்கள் நடனமிடுவதுபோல் தோன்றும். அங்கே தெற்கே விற்கலையை வில்நடனமென்றே சொல்கிறார்கள்” என்றாள் ரோகிணி.

ஸ்வேதன் “நடனமிலாத விற்கலையும் உண்டு. அம்மரபு பரசுராமரிடமிருந்து அங்க நாட்டரசர் கர்ணன் வரை வந்தது. இரு கைகளையும் இரு நெளியும் நாகங்களென்றாக்கி, அவை சுழன்று பற்றியிருக்கும் நெடுந்தூணாக உடலை அசைவிலாது நிறுத்தி வில் பயிலும் கலை. அது விற்கலையின் ஆண்வடிவம். இளைய பாண்டவரின் விற்பயிற்சியை தனுர்நிருத்யம் என்கிறார்கள். அங்கருடையது தனுர்தாண்டவம்” என்றான். “அவை சிவனும் சக்தியும் போல. இருவரும் ஒருவரை ஒருவர் வெல்ல இயலாது. அணுவிலும் ஆயிரங்கோடி அளவுக்கே அவர்களிடையே உள்ள வேறுபாடு. அக்கணத்தின் தெய்வங்களால் முடிவெடுக்கப்படுவது அது.”

“தாங்கள் இளமையிலேயே இளைய பாண்டவரை எண்ணியதுண்டா?” என்று ரோகிணி கேட்டாள். அவள் ஸ்வேதனுக்கு மிக அணுக்கமாகி அவன் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி நடந்தாள். ஸ்வேதன் “ஆம், நான் அன்னை மடியில் இருக்கும் அகவையில் முதல் முறையாக அவர் கதையொன்றை கேட்டேன். சுபத்திரையை தேரோட்டவிட்டு தேர்ப்பீடத்தில் அமர்ந்து இரு கைகளாலும் அம்பு தொடுத்து புயல்காற்றில் கனி உதிர்வதுபோல் உப்பரிகைகளிலிருந்தும் காவல் மாடங்களிலிருந்தும் வீரர்கள் உதிர விரைந்து சென்று துவாரகையின் எல்லையைக் கடக்கும் இளைய பாண்டவரின் காட்சி” என்றான். அவன் முகம் மலர்ந்தது. “அதன் பின் எத்தனையோ கதைகள் அவரைப்பற்றி. ஆனால் அந்த ஒரு காட்சியில் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.”

ரோகிணி “அவை மானுட உடலில் தெய்வமெழும் தருணங்கள். நாம் வழிபடுவது அத்தெய்வத்தையே” என்றாள். ஸ்வேதன் “இது விராடரின் அக்ஷௌகிணி என நினைக்கிறேன், இளையோனே” என்றான். “ஆம்” என்று சொல்லி திரும்பிய எண்ணியிராக் கணத்தில் சங்கன் மிக அப்பால் ஓர் உடலசைவை கண்டான். உடல் விதிர்த்து கடிவாளத்தை நழுவவிட்டு விந்தையான ஓர் அலறல் ஒலியை எழுப்பினான்.

ஸ்வேதன் திரும்பிப் பார்த்து “என்ன? என்ன ஆயிற்று?” என்றான். கைசுட்டி வாயசைய சங்கன் நடுங்கினான். “என்ன சொல்கிறாய்?” என்று திரும்பிப்பார்த்தபோதே ஸ்வேதன் அடையாளம் கண்டுகொண்டான். “அவர்தான்! அவர்தான்!” என்று சங்கன் கூவினான். உடலில் வலிப்பெழ புரவியிலிருந்து விழப்போகிறவன் போலிருந்தான். “கடிவாளத்தை விடாதே, அறிவிலி!” என்று ஸ்வேதன் சீறினான். “முதலில் நாம் அவரிடம் செல்வோம். நம்மிடம் நம்மை அடையாளம் காட்டும் ஓலைகள் உள்ளன. திருஷ்டத்யும்னரின் ஆணை உள்ளது.”

எச்சொற்களையும் செவிகொள்ளாமல் இரு கைகளையும் விரித்து தலை நடுங்க அமர்ந்திருந்த சங்கன் மறுகணம் தன் இரு கால்களையும் விரித்து ஓங்கி குதிமுட்களால் குதிரையின் விலாவில் குத்தி அதை பிளிறிக் கனைத்தபடி பாய்ந்தெழச்செய்து படைநடுவே அகன்ற சாலையில் கூழாங்கற்கள் அனல் பொறிகள் என மின்னி பின்னால் தெறிக்க, குதிரையின் வால் தழல்நெளிய பாய்ந்து முன்னால் சென்றான். “இளையவனே, பொறு… நில்… பொறு…” என்றபடி ஸ்வேதன் தன் புரவியை முடுக்கி பின்னால் விரைந்தான்.

முழு விசையில் புரவியில் சென்ற சங்கன் அதை நிறுத்தாமலே கையூன்றி கீழே தாவி இறங்கி பக்கவாட்டில் ஓடி அங்கு உணவுப் பொதிகளுடன் சென்று கொண்டிருந்த இரு வண்டிகளுக்கு நடுவே புரவியில் அமர்ந்து வண்டியோட்டிகளிடம் பேசிக்கொண்டிருந்த பீமனை அணுகி கைவிரித்தபடி கூவினான். “அரசே! என் இறையே!” முழங்கால் மடிந்து மண்ணில் அறைய விழுந்து “என் அரசே! என் தந்தையே!” என்று அலறினான். அவன் முகம் வலிப்புகொண்டதுபோல் இழுபட கண்களிலிருந்து நீர்வழிந்து கன்னங்கள் மின்னின. பீமன் திரும்பி அவனை பார்த்தான். புருவங்கள் சுளிக்க ஒருகணம் விழிநிலைத்தபின் தன் வலக்கையை நீட்டி வருக என்று அழைத்தான்.

கைகளை நீட்டி மூச்சிரைக்க ஓடிய சங்கன் அவ்விசையிலேயே முழந்தாள் மண்ணிலறைய விழுந்து பீமனின் வலக்காலை பற்றிக்கொண்டான். அவன் பாதக்குறடுகள்மேல் தலை வைத்து “எந்தையே! ஆசிரியரே! என் இறையே!” என்றான். பீமன் குனிந்து அவன் தோளைப்பற்றி தூக்கினான். ஓங்கி படீரென அவன் தோளை அறைந்தான். சங்கன் தன் எடைமிக்க உடலால் அந்த அறையை வாங்கிக்கொண்டு சற்றே அசைந்தான். “பசித்திருக்கிறாய்…” என்ற பீமன் திரும்பி “சுமூர்த்தரே, அந்த ஊன்துண்டை எடும்!” என்றான். உலர்ந்து சுருங்கி கருமைகொண்டிருந்த ஆட்டுக்காலை எடுத்து நீட்டிய சுமூர்த்தர் “சுடா இறைச்சி” என்றார்.

“கதிரவனால் சுடப்பட்டது” என்றபடி அதை வாங்கிய பீமன் சங்கனிடம் அதை நீட்டி “உண்க!” என்றான். சங்கன் அதை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டான். அதன் ஒரு பகுதியை பிய்த்து சங்கனுக்கு பீமன் ஊட்டினான். “இதை உண்டிருக்க மாட்டாய்… நம்மைப்போன்றவர் வயிறுகளில்தான் இது எரியும்” என்றான். சங்கன் மென்றபடி “நன்று” என்றான். இன்னொரு துண்டை கிழித்து தன் வாயில் இட்டபடி “கொழுப்பில் வெந்த ஊன்… கதிரவனுக்கு நிகரான அடுமனையாளன் வேறில்லை” என்றான். அவர்கள் மெல்லும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. ஸ்வேதன் அருகணைந்து புரவியில் இருந்து இறங்கி நின்றான். அடுமனையாளர்கள் தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.

“இன்னும் ஒன்று” என்றான் பீமன். “ஆம்” என்று சங்கன் சொன்னான். “இன்கனிகளை சமைத்த அடுமனையாளன் வாட்டிய ஊன்!” பீமன் “ஆ! இனிய சொல்… நீ சொல்பயின்றுள்ளாய்” என்று நகைத்தான். மீண்டும் இரு ஆட்டுக்கால்களை அடுமனையாளர் எடுத்து அளிக்க அவர்கள் உண்டனர். “நான் சற்றுமுன்னர்தான் உண்டேன். ஆனால் பிறர் உண்ண என்னால் பார்த்திருக்கவியலாது” என்றான் பீமன். சங்கன் “பிறர் உண்ணும் ஒலி இனிது… நாம் உண்ணும் ஒலி அளவுக்கே” என்றான். பீமன் அவன் தோளில் அறைந்து சிரித்தான். ரோகிணி “இருவரும் நீண்டகாலமாக அறிந்தவர்கள் போலிருக்கிறார்கள்” என்றாள். “அறிந்தவர்கள்தான்” என்றான் ஸ்வேதன்.

மேலும் இரு ஆட்டுத்தொடைகளை உண்டு முடிப்பது வரை அவர்களின் உலகில் எவரும் இருக்கவில்லை. ஏப்பத்துடன் எலும்பை அப்பால் வீசிய பீமன் கைகளை உரசித்துடைத்த பின் ஸ்வேதனை பார்த்தான். “யார் இவன்?” என்றான். “என் மூத்தவர், ஸ்வேதன்” என்றான் சங்கன். “உன் பெயரென்ன?” என்று பீமன் வாயைத்துடைத்தபடி கேட்டான். ஸ்வேதன் வணங்கி “அரசே, குலாடகுலத்து இளவரசனாகிய என் பெயர் ஸ்வேதன். இவன் என் இளையோனாகிய சங்கன். நாங்கள்…” என்று அவன் சொன்னதை நிறைவுறுத்தாமல் பீமன் சங்கனிடம் “நன்று, நீ இந்த உணவுக்குவைகளை ஏழாகப் பகிர்ந்து அடுமனையாளர் எழுவருக்கு அளித்துவிடு. பணிமுடித்து இன்று ஒளி அணைவதற்குள் என்னை என் தனியறையில் வந்து பார். இன்றிரவு நாம் இணைந்து உணவுண்போம்” என்றான்.

“ஆணை” என்றான் சங்கன். பீமன் அவன் தலையை அறைந்து “நீ பன்றி உணவு உண்பாயல்லவா?” என்றான். “உண்பேன், மிகுதியாக உண்பேன்” என்று சங்கன் சொன்னான். “இன்று இரவு உலர்ந்த பன்றியூனுக்கு சொல்லியிருக்கிறேன்… அதற்குள் கிழங்கை வைத்து சுடுகிறார்கள். மதுவுடன் காமம்கொண்டதுபோல் இணைவது” என்றபின் பீமன் ஸ்வேதனை மறந்து புரவியைத் தட்டி முன்னால் சென்றான். இரு கைகளையும் கூப்பியபடி சங்கன் நின்றான். ஸ்வேதன் “நாம் செல்வோம்” என்று ரோகிணியிடம் சொன்னான். “அவர்?” என்று அவள் கேட்டாள். “இனி அவனுக்கு உறவென்றும் சுற்றமென்றும் எவருமில்லை. அவன் தன் முழுமையை அடைந்துவிட்டான்” என்று ஸ்வேதன் சொன்னான்.

முந்தைய கட்டுரைதலைப்புகள்
அடுத்த கட்டுரைகாப்பீடு- கடிதங்கள்