‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 55

tigஸ்வேதனும் சங்கனும் புரவியிலமர்ந்து இருபுறமும் சென்றுகொண்டிருந்த பாண்டவர்களின் படை அணிகளை நோக்கியபடி நடுவே ஓடிய பாதையினூடாக முன்னால் சென்றனர். அவர்களுடன் திருஷ்டத்யும்னன் அனுப்பிய துணைப்படைத்தலைவன் வஜ்ரகுண்டலன் வந்தான். குலாடப் படைகள் திருஷ்டத்யும்னனின் படைகளுடன் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இணைந்துகொண்டன. படை கிளம்பிய பின்னரே அவர்களுக்கு வழிச்செல்லும் ஒப்புதல் கிடைத்தது. படை மிக மெல்லத்தான் கிளம்பியது. “படுத்த யானை எழுவதைப்போல” என்றான் சங்கன்.

அவர்கள் கிளம்பியபோது இளவெயில் சரிந்திருந்தது. படைக்கலன்களும் இரும்புக் கவசங்களும் மின்னிக்கொண்டிருந்தன. அனைவரும் இரும்பு அடிகொண்ட தோல்காலணிகள் அணிந்திருந்தனர். அவை சீரான ஓசையுடன் நிலத்தை அறைந்து சென்ற ஒலியை விழிமூடிக் கேட்டபோது அலையலையெனத் தோன்றியது. புரவியில் அமர்ந்து தலைக்கவசங்களின் பரப்பை பார்த்தபோதும் அதே அலையை காண முடிந்தது. அது எதன் அலை? நிலப்பரப்பின் அலைகள் பேரலைகளாக படையில் எழுந்தமைகின்றன. அவற்றினுள் ஒவ்வொரு தலையும் கொள்ளும் சிற்றலைகள் செறிந்திருந்தன. மனிதர்கள் தங்கள் உடலுக்குள்ளேயே எழுந்தமைந்துகொண்டிருக்கிறார்கள். அலையென்பது அவர்களின் உள்ளத்திலும் நிகழ்வதுபோலும். நிலைகொண்ட உள்ளம் அமைந்த ஒரு வீரனாவது இப்பெருந்திரளில் இருக்கக்கூடுமா? முன்னும் பின்னுமென அலையாத உள்ளம் கொண்ட மானுடர் எவரேனும் உண்டா?

யானை நிரைகள் கோட்டைச்சுவரென பக்கவாட்டில் வந்துகொண்டிருந்தன. கரிய அலைகளாலான கோட்டை. புரவிகள் நுரைகொண்ட அலைகள். ஒரு சிறு குன்றின் மேலேறி திரும்பிப் பார்த்தபோது கரிய மணிமாலைகள்போல் வளைந்தெழுந்து சென்றன யானைநிரைகள். பிறிதொரு குன்றின்மேல் சென்று திரும்பிப் பார்த்தபோது நீண்ட கரிய தோல்பட்டையென நெளிந்தன. ஒரு கணத்தில் அவன் யானைகளாலான பெருநாகம் ஒன்றை கண்டான். ஸ்வேதன் திரும்பி சங்கனின் தோளைத்தொட்டு “நோக்குக, நாகம்!” என்றான். சங்கன் திரும்பிப் பார்த்த பின் புன்னகைத்தான்.

தேர்நிரைகளின் முகட்டுக் குமிழிகள் செறிந்து நுரையென மாறிவிட்டிருந்தன. செம்மஞ்சள்நிற ஆடைகளாலான ஒழுக்கு செந்நிறத்தில் மழைக்கலங்கல் பெருகிவரும் நதியென தோன்றியது. அவர்கள் படையின் நடுப்பகுதியை சென்றடைந்தபோது அங்கு அடுமனைப் பணியாளர்களும் உணவுப்பொருட்களும் ஏந்திய வண்டிகள் சென்றுகொண்டிருந்தன. பல்லாயிரம் வண்டிகளில் ஏற்றப்பட்ட உணவுத்தானியங்களும் உலர்கிழங்குகளும் வற்றல்காய்கறிகளும் உலர்ஊனும் வறட்டிப்பொடித்த மீனும் பெரிய மரப்பீப்பாய்களில் அடைக்கப்பட்டும் தேன்மெழுகுபூசப்பட்ட பாய்களில் சுருட்டிக் கட்டப்பட்டும் மேல்மேலென்று அடுக்கப்பட்டு எடைமிக்க சகட ஒலியுடன் குளம்புகள் மிதிபட இழுத்த மாடுகளால் கொண்டு செல்லப்பட்டன.

அடுமனைக்கலங்கள் ஏந்திய வண்டிகள் நூற்றுக்கணக்கில் செல்ல அவற்றைக் கடந்து சென்றபோது பல்லாயிரம் கூடங்களால் இரும்பு அடிபடும் கொல்லன் உலைக்களத்தில் நுழைந்து அப்பால் சென்றதுபோல் தோன்றியது. சங்கன் “உணவுவண்டிகள் ஏன் படைநடுவில் இருக்கவேண்டும்? அவை படைக்குப் பின் வரும் என்றல்லவா எண்ணினேன்” என்று கேட்டான். “எவரேனும் படைகொண்டு அவற்றை மையப்படையிலிருந்து வெட்டிவிடக்கூடும் என்றுகூட எண்ணமாட்டாயா?” என்றான் ஸ்வேதன். சங்கன் “எத்தனை கணக்குகள்!” என வியந்தான்.

பகல் முழுக்க அவர்கள் சென்றுகொண்டே இருந்தனர். படையைவிட இருமடங்கு விரைவில் சென்றாலும் படைகள் உடன் வந்துகொண்டே இருந்தமையால் விரைவு போதவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. “எத்தனை பொழுது… மூத்தவரே, இத்தனை நீளம் இப்படை என நான் என் கற்பனையை ஓட்டியும்கூட எண்ணவில்லை” என்றான் சங்கன். அக்ஷௌகிணிகளின் எல்லைகளை கடப்பது மட்டுமே அவர்கள் முன்னால் செல்வதை அவர்களுக்கு காட்டியது. இருபுறமும் சென்றுகொண்டிருந்த படைகள் ஒற்றை அசைவில் அத்தனை மனிதர்களையும் கோத்துக்கொண்டு இயங்கின. ஒரு மாபெரும் தறி என அம்மானுடரை அவை நெய்துகொண்டிருந்தன. நான்கு திசைகளிலும் பிரிந்து வளர்ந்து செல்லும் ஒரு ஆடை, ஒவ்வொரு மானுடனும் அதிலொரு கண்ணி.

உச்சிவெயில் எரிந்தெழுந்து சிவந்து மங்கலடைந்தது. உச்சியின் வெம்மையில் படைவீரர்களின் வியர்வையும் புரவிகளின் வியர்வையும் விலங்குகளின் சிறுநீரும் வண்டிப்பாய்களின் தேன்மெழுகும் அரக்கும் கலந்து உருகும் வாடையும் சூழ்ந்திருந்தன. உச்சி கடந்தபோது வியர்வையாலேயே மழைமுன்பொழுதுபோல் மெல்லிய நீராவியை உணரமுடிந்தது. அந்தியணையத் தொடங்கியபோதுதான் படைமீது மென்பட்டுப் போர்வை என மூடியிருந்த புழுதிப்படலத்தை காணமுடிந்தது. அதுவரை நோக்குமங்கலென இருந்தது அதுவே என செம்மை கொண்டபோதே புலப்பட்டது. வான்சரிவில் கதிரவனை மேலும் சிவக்கச் செய்தது அது.

பகலெல்லாம் நடந்த படைகள் உச்சியில் தளர்ந்து பின்னுச்சியில் மேலும் நடைதொய்ந்து வெயிலணைந்ததும் மீண்டும் விரைவுகொண்டன. முரசுகள் ஒலிக்கவிருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பதாகத் தெரிந்தது. முரசொலி எழுந்ததும் இழுபட்ட தோல்பட்டை தளர்வதுபோல படைகளில் தழைவு உருவாகியது. விழிகளுக்கே அந்தத் தொய்வு தெரிந்தது. முரசுகள் முழங்கி அமைய படைகள் விசையழிந்து மெல்ல நின்று அவ்விடத்திலேயே கால்வைத்து அடிபயின்றன. மீண்டும் கொம்புகள் ஒலித்தபோது சிறுகுழுக்களாக பிரிந்தன. “பால் திரிவதுபோல” என்றான் சங்கன். “அனைத்துக்கும் அடுமனை ஒப்புமை” என்று சிரித்தபடி ஸ்வேதன் சொன்னான்.

நிலைகொண்ட படைப்பிரிவின் நடுவில் அவர்கள் சென்றனர். படையோசை மாறிக்கொண்டே இருந்தது. படைகள் நிலைகொள்வதை உணர்ந்தவைபோல சூழ்ந்திருந்த காடுகளிலிருந்து காகங்கள் பறந்துவந்து வானில் சுழன்றன. நான்கு காளைகள் பூட்டப்பட்ட அகன்ற நுகமும் எட்டு சகடங்களும் கொண்ட பெரிய வண்டிகளில் இருந்து எடைமிக்க அடுகலங்களை மடைப் பணியாளர்கள் இறக்குவதைக்கண்டு வியந்து புரவியின் கடிவாளத்தை பற்றித் திருப்பி சங்கன் நின்றுவிட்டான். மேலும் சற்று தொலைவு சென்ற ஸ்வேதன் திரும்பிப்பார்த்து சிற்றடிகளில் அணுகினான். “நான் யானைகளைக் கொண்டு இவற்றை இறக்குவார்கள் என்று எண்ணினேன்” என்று சங்கன் திரும்பிப்பார்த்து சொன்னான். “நெடுங்காலமாக இப்பணிகள் செய்யப்பட்டுவருவதால் எளிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்” என்றான் ஸ்வேதன்.

வண்டிகளுக்குப் பின்புறம் தடித்த பலகைகளை சரிவாக அமைத்து கயிறுகளால் கட்டி இழுத்தும் உந்தியும் கலங்களை அவற்றின் மேல் ஏற்றினர். மெல்ல சரித்து சறுக்கி கீழே வரச்செய்து அங்கே வைக்கப்பட்டிருந்த சகடங்கள் கொண்ட சிறிய பீடங்களின்மேல் அமரச்செய்து அங்கிருந்து தள்ளியும் இழுத்தும் அடுப்புகளை நோக்கி கொண்டுசென்றனர். அடுப்புகளின் மீது அவற்றை இழுத்துத் தூக்கி அமரவைத்தனர். நிரைநிரையாக வந்த மடைத்துணைவர் மரக்குடுவைகளில் காவடியாக கட்டி கொண்டுவந்த நீரை அவற்றில் ஊற்றி நிறைத்தனர். ஒருவர் இறங்கி நீச்சலிடும் அளவுக்கு பெரிய அடுகலங்கள் நீர் நிறைந்தபோது சிறிய குளங்கள்போல் அலைகொண்டன. அவற்றுக்குக் கீழே இடப்பட்ட அரக்குகளில் அனல் பற்றிக்கொண்டு நாகொண்டது.

எரிமணம் உணவை நினைவூட்டியமையால் இனிதாக இருந்தது. மகிழ்வுடன் முகம் திருப்பிய சங்கன் “சமைத்து குவிக்கப்படும் உணவு மலைபோன்றிருக்கும்” என்றான். “இங்கு தங்கிவிடுகிறாயா?” என்று ஸ்வேதன் கேட்டான். “இங்கு எங்கோதான் அவர் இருப்பாரென்று தோன்றுகிறது, மூத்தவரே” என்று சங்கன் சிரித்தான். “இருட்டுகிறது. நாம் தங்கவேண்டிய குடில் இன்னும் சற்று அப்பால் உள்ளது என்று வரைவு காட்டுகிறது” என்றான் ஸ்வேதன். புரவியைத் திருப்பியபடி இருவரும் சென்றனர்.

அடுகலங்களை மடை உதவியாளர் தூக்கிச் சென்றபோது யானைக்கன்றுகளும் எருமைகளும் செல்வதுபோல் தோன்றியது. மரத்தாலான குடைவுக்கலங்கள், மரச்சிம்புகளை இறுக்கி இரும்புப் பட்டையிட்ட நீள்கலங்கள், பெருங்கொப்பரைகள், நீண்ட மரப்பிடியில் பொருத்தப்பட்ட சட்டுவங்கள், கிளறிகள், சல்லரிகள். “மண்கலங்களே இல்லை” என்றான் சங்கன். அகப்பைக்கட்டுகள், நீள்பிடிகொண்ட கோருவைகள், செம்புச்சருவங்கள், நிலவாய்கள், உருளிகள், குட்டகங்கள், அடுக்குக் கலங்கள். அடுமடையர்கள் அவற்றை எடுத்து பிரித்து ஆங்காங்கே வைத்துக்கொண்டிருந்தனர். அவற்றை ஒருவன் குறித்துக்கொண்டிருந்தான். சங்கன் “மூத்தவரே, அவன் எங்கு எக்கலங்கள் உள்ளன என்பதை வரைந்து குறிக்கிறான். மிகச் சிறந்த வழி. கலங்கள் தொலைவதும் தேடுவதும்தான் அடுதொழிலில் பெரும் இடர்” என்றான்.

அடுப்புகளில் எரியெழ அனலால் ஆன நீண்ட கோடு அரையிருளில் தெரியலாயிற்று. சங்கன் “மூத்தவரே, படைகளில் எப்போதுமே புதிதாக சமைத்த உணவுதான் அளிக்கப்படுமா?” என்றான். “உணவைப்பற்றி நன்கு தெரிந்துகொண்ட பின் படைக்கு வந்திருக்கலாம் என்று எண்ணுகிறாயா?” என்றான் ஸ்வேதன். “இல்லை, தெரிந்துகொள்ளும்பொருட்டு கேட்டேன்” என்றபடி அவன் தொடர்ந்து வந்தான். “அந்தியில் புத்துணவு காலையில் உலர்சிற்றுணவு உச்சிப்பொழுதுக்கு அதிலெஞ்சியது கையுணவாக என்பது படைநெறி. படைகள் காலையில் கிளம்பிய பின்னர் அந்திவரை எதன் பொருட்டும் நிறுத்தப்படுவதில்லை” என்றான் ஸ்வேதன்.

சங்கனின் உள்ளத்தை உணர்ந்தவனாக “புரவிகளும் யானைகளும்கூட மெல்ல நடந்தபடியேதான் நீர் அருந்தும். அவற்றுக்கு நீர் கொடுப்பதற்கென்று சகடங்கள் அமைத்த தொட்டிகள் உண்டு. இப்படைப்பிரிவுகளுக்குள் அவற்றை நீ பார்த்திருக்கலாம்” என்றான். “ஆம், நான் அவை நீர் மொண்டு வருவதற்கானவை என்று எண்ணினேன்” என்று சங்கன் சொன்னான். “ஒருமுறை நின்ற படை மீண்டும் கிளம்புவதற்கு அரைநாழிகைப் பொழுதுக்கு மேலாகும். ஓர் அக்ஷௌகிணியை கலைத்துவிட்டால் மீண்டும் ஒருங்கமைவதற்கு இரண்டு நாழிகை பொழுதாகும். இவையனைத்தும் நூல்களில் கணக்கிடப்பட்டுள்ளன” என்று ஸ்வேதன் சொன்னான்.

“உணவுக்களஞ்சியம்” என்றான் சங்கன் முகம் மலர்ந்து. “அது நிறைந்திருப்பது எப்போதும் ஒரு மங்கலக்காட்சி.” அடுமனையர் உணவுப்பொருட்களை வண்டிகளிலிருந்து இறக்கிக்கொண்டிருந்தனர். வெட்டி உலர்த்தப்பட்ட மாட்டுத் தொடைகள் கருமை கொண்டு இறுகி மரக்கட்டை போலாகியிருந்தன. அவற்றில் படிந்திருந்த உப்பும் அவற்றின் இனிய கெடுமணமுமே அவை ஊனென்று காட்டின. அவற்றை எடுத்து தோளிலேற்றி கொண்டுசென்று அங்கு விரிக்கப்பட்டிருந்த பாயில் அடுக்கினர். ஆளுயர விறகுக்குவியல் போலிருந்தது அது.

சங்கன் “எவர் பாடுவது?” என்று கேட்டான். “அடுமனையர்கள் பலர் நல்ல பாடகர்கள்” என்றான் ஸ்வேதன். “அவர்கள் தனிக் குலம்போல. அவர்களின் வாழ்வும் மொழியுமே வேறு. இரவெல்லாம் சமைப்பவர்களுக்கு தங்களுக்குரிய பாடல்களும் கதைகளும் இருந்தாகவேண்டும்.” சங்கன் “ஆம், நாங்கள் சமைக்கையில் பாடும் பாடல்களை புலரி வெளிச்சம் எழுந்தபின் பாடமுடியாது. அக்கணமே நெறியும் ஒழுக்கமும் நோக்கும் மூத்தவரால் கழுவிலேற்றப்படுவோம்” என்று சிரித்தான்.

தொலைவிலெங்கோ அந்தப் பாடல் கேட்டுக்கொண்டிருந்தது. “நாளை படைநகர்வு இல்லையா என்ன? அடுமனையை முற்றாகப் பிரித்து அடுக்குகிறார்கள்?” என்று சங்கன் கேட்டான். “ஏழு நாட்களுக்கு ஒருமுறை முற்றோய்வென்பது ஓர் அக்ஷௌகிணிக்குமேல் எண்ணிக்கையுள்ள படைகளுக்கான நெறி. அன்று புரவிகளின் கால்கள் உருவிவிடப்படவேண்டும். விலங்குகளின் உடலில் எங்கேனும் நெறிகட்டியுள்ளதா என்று பார்க்கவேண்டும். சிறிய நோய்களுக்கு மருந்திடுவார்கள். படைவீரர்கள் தங்கள் பொருட்களையும் படைக்கலங்களையும் பழுதுநோக்குவார்கள். சகடங்களின் பிழைகள் களையப்படும். ஒருநாள் ஓய்வுக்குப் பின் முற்றிலும் புதிய விசையுடன் படைகள் கிளம்பும் என்கிறார்கள்” என்றான் ஸ்வேதன்.

பாடல் அணுகி வந்தது. “பெண்! ஒரு பெண் அங்கிருந்து பாடுகிறாள்” என்று சங்கன் சொன்னான். “படைகளில் பெண்கள் ஏற்கப்படுவதில்லை” என்று ஸ்வேதன் சொன்னான். “அது பெண்குரல்! ஐயமேயில்லை” என்றான் சங்கன். ஸ்வேதன் “பெண்டிருக்குள்ள பணிகளை செய்வதற்கு ஆணிலிகள் கொண்டுவரப்படுவதுண்டு” என்றான். சங்கன் அதற்குள் பாடுபவனை பார்த்துவிட்டான். “அவன் தோள்கள் காட்டுகின்றன, அவன் ஆணிலி” என்றான். “ஓர் ஆணிலியை அவள் என்று சொல்வதைப்போல் அவளை மகிழ்விக்கக்கூடும் பிறிதொன்றில்லை” என்று ஸ்வேதன் சொன்னான்.

அவர்கள் அணுகிச் சென்றபோது அங்கு அந்தக் குரலின் இனிமையால் கவரப்பட்டு பேச்சை நிறுத்தினர். அவர்களை உணர்ந்த புரவி மென்னடையில் சென்றது. அடுமனையாளர்கள் பெருவளையமாக கூடி நின்றிருக்க கவிழ்க்கப்பட்ட தொட்டியொன்றின்மேல் நின்று நடனம்போல் கைகளை அலையென வீசியும் விரல் குவித்தும் பலவகையான முத்திரைகளைக் காட்டி அந்த ஆணிலி பாடிக்கொண்டிருந்தாள். வயல்களில் முதல் பயிர் பசுமைபெற்றெழுவதை. அப்போது பிறந்த குழந்தையின் மென்மயிர்போல் அது தொடுவதற்கு இனிதாய் இருப்பதை. இளங்காலை ஒளியில் அது சுனைநீரின் நீலப்பசுமை கொள்வதை. சேற்றின் மணத்தை. கதுப்பில் விழுந்திருக்கும் சிறு குமிழிகளால் ஆன துளைகளை. அவற்றினுடாக வெளிவந்து மெல்ல குமிழியை உடைத்து எழும் அடிச்சேற்றின் புளிப்பு மணத்தை. நண்டுகளின் நான்கு கால் தடத்தை. குழிகளுக்குள்ளிருந்து மெல்ல எழும் நண்டுகளின் முன்கால் கொடுக்குகளை. வரப்பில் அமர்ந்திருக்கும் வெண்கொக்கு நிரையை. காலடியோசை கேட்டு அவை சிறகடித்தெழுவதன் படபடப்பை. இளங்காற்று வீசுகையில் வயல்மேல் பசுமை அலையென்றாவதை. வெயில் தொட்டு நீர்ப்பரப்புகள் ஆடியென்று ஒளிகொள்வதை…

அவள் பாடலைக் கேட்டு அங்கிருந்தோர் முகம் துயரிலா உவகையிலா என்றறியாத ஓருணர்வு கூட, விழிகளில் மெல்லிய நீரொளி பரவியிருக்க நின்றனர். சிலர் கைகளை நெஞ்சோடு சேர்த்திருந்தனர். சிலர் முகத்தை கைகளில் தாங்கி விழிமூடியிருந்தனர். ஸ்வேதனும் சங்கனும் குளம்படி இன்றி அருகே சென்று புரவியில் அமர்ந்தபடி அப்பாடலை கேட்டுக்கொண்டிருந்தனர். கண்ணி வடிவிலான அப்பாடல் ஒன்றிலிருந்து ஒன்றென்று ஒப்புமைகளுக்கும் நுண்ணிய விவரிப்புகளுக்கும் சென்றுகொண்டிருந்தது.

வேர் கொண்டு அள்ளுக இம்மண்ணின் உப்பை இளநாற்றேஉன்

இலைகளால் அள்ளுக இம்மண்ணின் காற்றை!

அடித்தூரால் அறிக என் மண்ணின் வெம்மையை இளநாற்றேஉன்

மென் தளிரால் அறிக என் மண் மேல் விழும் ஒளியை!

அந்த ஆணிலி அழகிய பெண் போலவே தோன்றினாள். அவள் கழுத்து முழையும் தோளெலும்புகளின் அமைப்பும் அவளை ஆணெனக் காட்டியது. முகத்தில் அரும்பிய மயிரை நன்கு மழித்து செம்மஞ்சள் பூசி பெண்மை கொள்ளச் செய்திருந்தாள். கண்களுக்கு மையிட்டு நீட்டியிருந்தாள். கழுத்தில் கல்மணி மாலை. கைகளில் சந்தனக்குடைவு வளையல்கள். பெண்களுக்குரிய மேலாடை அணிந்திருந்தாலும் இடையாடை படைவீரர்களுக்குரியதாக இருந்தது. நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. காதுகளில் வெள்ளியாலான மலர்த்தோடுகள். கையில் வைத்திருந்த மரக்கொப்பரைமேல் விரல்கள் தாளமிட கண்கள் தொடுவான் நோக்கி கனவிலென நிலைத்திருக்க அவள் பாடினாள்.

அங்கிருக்கிறது என் மண். நெஞ்சே, எங்கு சென்றாலும் நான் மீளவேண்டிய மண். என் மூதாதையர் உறங்கும் மண். நான் எங்கு விழுவேன் எவ்வகையில் மட்குவேன் என்று அறியேன். என் மண்ணுக்கு மீளும் என் உப்பு. என் மூதாதையர் உப்புகள் கலந்த மண்ணில் அதுவும் இருக்கும். என் மூதாதையரும் எங்கெங்கோ விழுந்தனர். உப்பென்று என் மண்ணை வந்தடைந்தனர். மானுடர் எழுவார்கள், பூத்து கனிந்து உதிர்ந்து மீண்டும் முளைப்பார்கள். என் நெஞ்சே, அறிக! என் கனவே, அறிக! உப்பு என்றுமிருக்கும்! உப்பு ஒருபோதும் அழிவதில்லை! உப்பு மண்ணின் பொருள்! அறியா நுண்சொல் இந்த மண். நா, அதில் அறியும் பொருள் இந்த உப்பு!

பாடி முடித்ததும் அவள் தன் கைகளைத் தூக்கி தலைக்குமேல் வணங்கினாள். அதன்பின் தலைகுனிந்து அசையாமல் நின்றாள். கூடிநின்று கேட்டவர்கள் அனைவரும் அக்கனவிலேயே நெடுந்தொலைவு சென்றுவிட்டவர்கள்போல் அசைவற்றிருந்தனர். சங்கனின் புரவி அந்த அமைதியை உணர்ந்ததும் தலையை சிலுப்பி கழுத்து மணியை ஒலிக்கச் செய்தது. ஆணிலி திரும்பி அவர்களை பார்த்தாள். பீடத்திலிருந்து கீழே குதித்து தலைவணங்கினாள். சங்கன் “அரிய பாடல்! படைப்பிரிவுகளிலிருந்து இத்தனை அழகிய பாடல் ஒன்று எழுமென்று நான் எண்ணவே இல்லை. நீ இசைச்சூதர் குலத்தவளா?” என்றான்.

ஆணிலி முகம் மலர்ந்து “அல்ல இளவரசே, நான் தெற்கே திருவிடத்திற்கும் அப்பால் தமிழ்நிலத்தை சார்ந்தவள். என் பெற்றோர் சிற்பிகள். இளமையிலேயே என்னை ஆணிலி என்று கண்டனர். உத்கலத்திலிருந்து வந்த ஆணிலிகளின் குழுவிற்கு என்னை அளித்துவிட்டுச் சென்றனர். அவர்கள் ஊர்தோறும் சென்று பாடி வாழ்பவர்கள். என் பெயர் ரோகிணி” என்று சொன்னாள். “மெய்ப்பெயர் பிறிதொன்று. நான் என்னை உடல்மாற்றிக்கொண்டபோது என் பிறவிமீனையே பெயராகக் கொண்டேன்.”

கூடி நின்றிருந்த மடைப்பணியாளர்கள் அவர்கள் அரசகுடியினர் என்று கண்டு அகன்று நோக்கிக்கொண்டிருந்தனர். ஸ்வேதன் தன் கையிலிருந்த கணையாழி ஒன்றை கழற்றி “சிறந்த பாடல்களை பலமுறை கேட்டிருக்கிறேன். தருணமுணர்ந்து பாடுகையில் பாடல் மேலும் அழகுகொள்கிறது. தருணம் பொருந்த கேட்கையில் மேலும் பலமடங்கு அழகு கொள்கிறது. இன்று கேட்ட இப்பாடல் என் வாழ்நாள் முழுக்க நினைவிருக்கும் என்று தோன்றுகிறது. இத்தருணம் அழகுறுக!” என்று சொல்லி அதை அவளிடம் நீட்டினான்.

இரு கைகள் நீட்டி அதை பெற்று விழிகளில் ஒற்றி நெஞ்சோடு சேர்த்துக்கொண்ட ரோகிணி “இளவரசே, என் சிறுவாழ்க்கையில் பொன்னணிகளுக்கோ அருமணிகளுக்கோ பயனென ஏதுமில்லை. உண்மையில் இதை நான் பேணிக்கொள்வதே அரிது. உளமுவந்து பிறிதொருவருக்கு இதை அளிப்பதே நான் செய்யக்கூடுவது. தங்கள் அன்பு இக்கொடையிலிருப்பதனால் இதை பெரும்பேறென்று பெற்றுக்கொண்டேன்” என்றாள். அவள் உள்ளத்தை உணர்ந்த ஸ்வேதன் “உன் விழைவென்ன?” என்றான். “என்னை இளைய பாண்டவர் அர்ஜுனரிடம் அழைத்துச் செல்லுங்கள். நான் அவரை ஒருகணமேனும் நேரில் பார்க்கும்பொருட்டே இப்படையில் வந்து இணைந்துகொண்டேன். என் அடுமனைத்திறனால் இவர்களுடன் இருக்கிறேன். எங்களைப் போன்றவர்கள் போர்முனைக்குச் செல்ல ஒப்புதல் இல்லை. அணிஏவலர்களாகவும் அடுமனையாளர்களாகவும் மட்டுமே படையில் இடம்பெற இயலும். நான் அணிப்பணி தெரிந்தவள். அரசகுடியினர் தங்களுக்கென தனிப்பட்ட ஏவலரையும் அணி செய்கையாளர்களையும் உடனழைத்துக்கொள்ளலாம் என்று நெறியிருக்கிறது.”

ஸ்வேதன் புன்னகைத்து “உன் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன். ஏனெனில் நீ விழைவதையே இத்தருணத்தில் நானும் விழைகிறேன். அவரை சந்திக்கத்தான் நானும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றான். அவள் முகம் மலர்ந்து “தங்களுடன் என்னை அழைத்துச் சென்றீர்கள் என்றால் அதை என் நல்லூழ் என கொள்வேன். அவர் முன் நான் நின்றால் போதும். என்னை அவர் மறுக்கமாட்டாரென்று நன்கறிவேன்” என்றாள். ஒருகணம் எண்ணிய பின் “சரி, என்னுடன் கிளம்புக!” என்றான் ஸ்வேதன்.

அவள் சிறுமியைப்போல கூச்சலிட்டு கைகளைத் தூக்கியபடி துள்ளிக்குதித்து இரு கைகளாலும் ஆடையைப் பற்றியபடி மும்முறை சுழன்றாள். “சுதீரரே, மித்ரரே, நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன்! மடைத்தலைவரிடம் சொல்லிவிடுங்கள்! நான் கிளம்புகிறேன்! இங்கிருந்தே” என்றாள். “உன் பொருட்களை எடுத்துக்கொள்” என்றான் ஸ்வேதன். “பொருளென்று எதுவுமில்லை, இவ்வாடைகளைத் தவிர. நான் தங்கள் புரவியுடன் ஓடியே வரமுடியும்” என்றாள். “நாங்கள் நெடுந்தொலைவு செல்வோம், விரைந்தும் செல்வோம். நாளை முழுக்க செல்லவேண்டியிருக்கும். மறுநாள் பிற்பொழுதில்தான் சென்றடைவோம்.” “எத்தொலைவாயினும் நான் உடன் வருவேன். என் உடலின் ஆற்றல் நீங்கள் எண்ணுவதை விட மிகுதி” என்றாள் ரோகிணி.

முந்தைய கட்டுரைகிளியின் அழகியல்
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5