தக்ஷிண விராடபுரி என்று அயலவரால் அழைக்கப்பட்ட குலாடபுரியில் இருந்து அதன் இளவரசனாகிய ஸ்வேதனும் அவன் இளையோனாகிய சங்கனும் ஆயிரம் புரவிவீரர்களும் ஈராயிரம் வில்லவர்களும் அவர்களுக்குரிய பொருட்களை சுமந்து வந்த ஆயிரத்து இருநூறு அத்திரிகளுமாக மலைப்பாதையினூடாக சதுப்புகளையும் ஆற்றுப்பெருக்குகளையும் கடந்து பாண்டவப் படையை சென்றடைந்தனர். குலாடநகரி அவர்களின் அன்னையான பிரதீதையால் முடிகொள்ளப்பட்டது. அவர்களின் வழக்கப்படி அன்னைசொல் கேட்டு மைந்தர் ஆட்சி செய்தனர்.
குலாடநகரி நெடுங்காலமாக பதினெட்டு குலாடர் குலங்களின் குலத்தலைவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூடி குலஅமைப்பின் மாற்றங்களையும் ஆட்சி நெறிகளையும் வகுப்பதற்குரிய இடமாக இருந்தது. குலாடகுலங்களைச் சார்ந்த குடித்தலைவர்கள் இறந்தால் அவர்களின் உடல்கள் அங்கு கொண்டுவரப்பட்டு குலாடம் என்று அழைக்கப்பட்ட பசும்புல் செறிந்த பெரிய மண்மேட்டில் புதைக்கப்பட்டன. அவர்களின் உடல்களுக்கு மேல் நிறுத்தப்பட்ட குத்துக்கற்கள் கல்லாலான காடு என அக்குன்றை முழுமையாக மூடியிருந்தன. அக்குன்று அவர்களின் மையம் என்று கருதப்பட்டது.
நெடுங்காலம் குலாடர் தங்கள் அன்னையர் குழுவால் ஆளப்பட்டனர். பின்னர் அவர்கள் அன்னையர் சொல்லுக்கிணங்க குடித்தலைவர்கள் கோல்கொண்டனர். கலிங்க மன்னன் சூரியதேவன் படைகொண்டு வந்து குலாடர்களின் அனைத்து ஊர்களையும் கைப்பற்றி அவர்களை தன் ஆட்சிக்குக்கீழ் கொண்டுவந்தபோது அந்நிலத்திற்கு ஓர் அரசனை தேர்ந்தெடுக்கும்படி ஆணையிட்டார். அதன்படி குலாடர்களின் குலத்தலைவர்கள் அக்குன்றில் கூடி அவர்களில் அகவை முதிர்ந்தவராகிய பத்ர குலாடரை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அவரை அரசராக கலிங்கம் ஏற்றுக்கொண்டது. பின்னர் பதினெட்டு தலைமுறைக்காலம் குலாட குடிகள் கலிங்கத்திற்கு கப்பம் கட்டின.
கலிங்கத்திற்கு அளிக்கவேண்டிய கப்பத்தை தங்கள் ஊர்கள் அனைத்திலிருந்தும் பெற்று தொகுத்துக்கொள்ளும் பொருட்டு ஓர் ஆட்சி முறைமையையும் அவற்றை இயற்றும் அமைச்சர்களையும் நிகுதி கொள்ளும் தண்டலர்களையும் குலாட அரசர் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு காப்பென்று சிறுபடை உருவாகியது. பின்னர் குலாடம் எல்லைகள் வகுத்துக்கொண்டு காவலரண்களை உருவாக்கியது. அக்காவலரண்கள் குதிரைப்பாதைகளால் இணைக்கப்பட்டன. அவற்றினூடாகச் சென்று அக்குடிகள் அனைத்தையும் ஒன்றென இணைத்து ஆளும் படைவல்லமையை அது உருவாக்கிக்கொண்டது. குலாடக் குன்றைச் சுற்றி குலாடபுரி என்னும் ஊர் எழுந்து வந்தது.
அந்நகரைச் சூழ்ந்து மூங்கிலாலும் முள் மரங்களாலுமான கோட்டை கட்டப்பட்டது. அதன் நடுவே அரச மாளிகையும் படைத்தலைவர்களுக்கான இல்லங்களும் அமைந்தன. மெல்ல குலாடபுரி வணிக மையமாகியது. கலிங்கத்திலிருந்து வந்த வணிகர்கள் அங்கு பொருட்களை கொண்டுவந்து கடைபரப்பி மலைப்பொருட்களுக்கு கைமாறு கொடுத்து திரட்டி திரும்பிச் சென்றனர். வணிகம் செழித்தபோது குலாடபுரியின் அரசகுலம் மேலும் ஆற்றல் கொண்டது. கலிங்கம் மூன்று நாடுகளாக உடைந்து பிரக்ஜ்யோதிஷத்துக்கும் வங்கத்திற்கும் வேசரத்துக்கும் கப்பம் கட்டும் நாடுகளாக மாறியபோது குலாடபுரி தன் விடுதலையை அறிவித்தது.
பின்னர் ஏழு தலைமுறைக்காலம் குலாடபுரி தனி நாடென்றே இலங்கியது. விராடபுரி எழுந்து ஆற்றல் கொண்ட நாடென்று மாறியபோது அதன் படைகளுக்கும் குலாடபுரியின் படைகளுக்கும் பூசல்கள் தொடங்கின. கலிங்கத்திலிருந்து விராடபுரிக்குச் செல்லும் பாதையை குலாடபுரி தன் ஆளுகைக்குள் வைத்திருந்தது. குலாடபுரி தன்னிடம் வரும் வணிகர்களுக்கு சுங்கம் திரட்டுவதை விராடர் விரும்பவில்லை. ஏழுமுறை நடந்த போர்களுக்குப் பின் இரு தரப்பும் ஒரு உடன்படிக்கையை சென்றடைந்தன. குலாடபுரியில் நிகழ்ந்த பெருவிருந்துக்குப் பிறகு குலாடபுரியின் அரசர் உக்ரதமஸின் மகளாகிய பிரதீதையை விராடர் மணம்கொண்டார்.
ஆனால் குலாடர்கள் தங்கள் நாட்டு எல்லையைவிட்டு செல்லலாகாது என்று குடிமுறைமை இருந்ததனால் குலாடபுரியின் அரசி தன் நகரிலேயே வாழ்ந்தாள். அவர்கள் பெண்வழி முடியுரிமை கொண்டவர்கள் என்பதனால் அவள் வயிற்றில் பிறந்த ஸ்வேதனும் சங்கனுமே குலாடபுரியின் முடியுரிமைக்கு உரியவர்களாக இருந்தனர். விராடபுரியும் குலாடபுரியும் இரு தனிநாடுகள் என்று இலங்கின. ஆண்டுக்கு ஒருமுறை விராடர் தன் படைகளுடனும் அணித்துணைவர்களுடனும் அமைச்சர்களுடனும் குலாடபுரிக்கு வந்து தங்கி அங்குள்ள பெருங்களியாட்டென்னும் திருவிழாவில் பங்கெடுத்து அரசியுடன் மகிழ்ந்திருந்து திரும்பிச் சென்றார்.
விராடபுரியின் படைப்பொறுப்புக்கு கீசகன் வந்தபோது விராடர் குலாடபுரிக்குச் செல்வது குறைந்தது. கீசகன் அவரை தன் ஆட்சிக்குக் கீழ் முழுமையாக வைத்திருந்தான். மதுவில் மூழ்கி உடல் தளர்ந்த பின்னர் மலைப்பாதையில் நெடுந்தொலைவு புரவியில் அமர்ந்து செல்வதை அவர் விரும்பவில்லை. அரசர் பொருட்டு உத்தரனே ஆண்டுக்கொருமுறை குலாடபுரிக்கு வந்து பெருங்களியாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டான். தன் இளையோர் மீது பற்றற்றவனாகவே உத்தரன் இருந்தான். அவர்களிருவருக்கும் உத்தரன் மீது ஏளனம் இருந்தது. அவனை தங்களுக்குள் பிரத்யுத்தரன் என்று அவர்கள் இளிவரலுடன் குறிப்பிட்டனர்.
உத்தரன் கொள்ளும் மிகைநடிப்புகளும் ஒவ்வொருமுறையும் தன்னை இளிவரலுக்குரியவனாக மாற்றிக்கொண்டு அவை நீங்குவதும் குலாடபுரியில் மிகப் பெரிய வேடிக்கையாக பேசப்பட்டது. அச்செய்திகள் ஒவ்வொன்றாக செவியில் விழத்தொடங்கிய பின்னர் உத்தரன் குலாடபுரிக்குச் செல்வதை தவிர்த்தான். குலாடபுரியும் விராடபுரியும் முற்றிலுமாக விலகிச் சென்றன. கீசகன் விராடபுரியில் முழுப் பொறுப்பையும் ஏற்ற பிறகு குலாடபுரி முற்றாகவே ஒதுக்கப்பட்டது. ஏழுமுறை கீசகனின் படைகள் பெருகி வந்து குலாடபுரியை தாக்கி கப்பம் கொண்டு சென்றன. குலாடபுரியைச் சூழ்ந்திருந்த அடர்காடுகளும் இரு நாடுகளுக்கும் நடுவே ஓடிக்கொண்டிருந்த நீர்மிகுந்த காட்டாறுகளும் கீசகனின் படைகள் நிலையாக குலாடபுரியை கைப்பற்றி விராடபுரியுடன் சேர்த்துக்கொள்ள தடையாக இருந்தன.
குலாடபுரி சுங்கம் கொண்டு வந்த அனைத்துப் பாதைகளிலும் கீசகன் தன் படையினரை நிறுத்தி முழுமையாக ஆட்கொண்டான். விராடபுரியின் மூன்றடுக்குச் சுங்கங்களையும் கட்டிய பிறகு வணிகர்கள் பொருட்களை கொண்டுவந்தமையால் ஒவ்வொரு பொருளும் ஏழுமடங்கு விலையேறியது. குலாடபுரியின் மலைப்பொருட்கள் அனைத்தும் ஒப்புநோக்க விலைகுறைந்தபடியே சென்றன. குலாடபுரியில் பெற்றுக்கொண்டு கலிங்கத்திற்கு கொண்டு செல்லும் பொருட்கள் மேலும் விராடபுரி சுங்கம் விடுக்கத் தொடங்கியதும் குலாடபுரி மேலும் மேலும் வறுமை கொண்டது. அதன் தொல்காலத்து வெற்றியும் புகழும் குறைந்து தொல்குடி வாழ்க்கைக்கு மீண்டது. காடுகளில் மலைப்பொருள் கொணர்ந்தும் ஆபுரந்தும் மலையோர நிலங்களில் கிழங்குகளும் நெல்லும் பயிரிட்டும் அவர்கள் புற உலகத் தொடர்பின்றி வாழத் தொடங்கினர். அச்சிறு நாட்டை விராடரும் கலிங்கரும் மறந்தனர். வணிகரன்றி பிற எவர் பேச்சிலும் அவ்வூர் இடம்பெறவில்லை.
குலாடபுரியின் இரு இளவரசர்களும் விராடநாட்டிலும் பாரதவர்ஷத்திலும் என்ன நிகழ்கிறதென்பதை ஒற்றர்கள் வழியாகவும் சூதர்கள் வழியாகவும் ஒவ்வொரு நாளுமென அறிந்துகொண்டிருந்தனர். ஸ்வேதன் இளமையிலேயே அர்ஜுனனின் வெற்றிக்கதைகளைக் கேட்டு வளர்ந்திருந்தான். சங்கன் பீமனை தன் உளத் தலைவனாக வழிபட்டான். விராடபுரியில் கீசகன் கொல்லப்பட்டது குலாடபுரியை மகிழ்வித்த பெருஞ்செய்தியாக இருந்தது. முதல்முறையாக அச்செய்தியை செவிகொண்டதுமே சங்கன் ஒருவேளை விராடபுரிக்கு பீமசேனர் வந்திருக்கக்கூடுமோ என்று ஐயுற்றான். அவர்கள் அரசவை முடிந்து இடைநாழியினூடாக தனியறைக்கு திரும்புகையில் தன் மூத்தவனிடம் அதை சொன்னான்.
ஸ்வேதன் நின்று “என்ன உளறுகிறாய்? அவர்கள் காட்டில் இறந்து மறைந்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது” என்றான். சங்கன் “அருமணிகள் ஒருபோதும் தொலைந்துபோவதில்லை என்று கேட்டிருப்பீர், மூத்தவரே. பெருவீரர்களுக்கு பிறவிநோக்கம் ஒன்றுள்ளது. அந்நோக்கத்தை அடையாது அவர்கள் இறப்பதில்லை. காட்டில் அவர்கள் அவ்வண்ணம் எவருமறியாமல் மறைந்தார்கள் என்றால் அதில் பெரும் காவியப்பிழை ஒன்றுள்ளது. தெய்வங்கள் அவ்வாறு ஒத்திசைவற்று செயல்படுவதில்லை” என்றான்.
“மூடன்போல் உளறுகிறாய். கதைகளைக் கேட்டு அதில் உளம் திளைத்து வாழப் பழகிவிட்டாய்” என்று ஸ்வேதன் சொன்னான். “காட்டில் எதிர்கொள்ளும் சிம்மமும் காலடியில் மிதிபடும் நாகமும் தங்கள் எல்லைக்குள் மானுடரைக் கண்ட கந்தர்வர்களும் அப்பிறவிநோக்கத்தை எல்லாம் அறிந்து செயல்படுவதில்லை” என்றான். “ஆம், அவர்களுக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொன்றையும் ஒன்றுடன் ஒன்று பிணைத்து இப்புவிநாடகத்தை இயற்றும் தெய்வங்களுக்கு தெரியும்” என்றான் சங்கன். சில கணங்கள் அவனை உற்றுப்பார்த்த பின் ஸ்வேதனும் ஐயுற்றான். “ஆம், பீமசேனரன்றி பிறரால் கீசகன் கொல்லப்பட இயலாதென்றே சொல்கிறார்கள். ஆனால் கந்தர்வர் ஒருவரால் கீசகர் கொல்லப்பட்டார் என்கிறார்கள். கந்தர்வர்கள் பெருவீரர்களை கொல்வது அரிய நிகழ்ச்சியுமல்ல” என்றான்.
“அக்கந்தர்வர் பீமசேனரா என்பதை உற்று நோக்குவோம். நமது ஒற்றர்களை விராடபுரிக்கு அனுப்புவோம்” என்றான் சங்கன். பன்னிரு நாட்களில் அங்கிருந்து ஒற்றன் செய்தி அனுப்பினான். அடுமனையாளன் ஒருவன் அனைவராலும் அஞ்சப்படுபவனாக இருக்கிறான் என. கீசகனைவிட பெருந்தோளன். இருமுறை களத்தில் அவன் பெருமல்லர்களை வென்றிருக்கிறான். கீசகனே அவனை அஞ்சிக்கொண்டிருந்திருக்கிறான். அடுமனையாளனால்தான் கீசகன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று விராடபுரியில் பேசிக்கொள்கிறார்கள் என்றது செய்தி.
சங்கன் அச்செய்தியை கேட்டதும் பீடத்திலிருந்து எழுந்து உரத்த குரலில் “ஐயமே இல்லை! அது அவர்தான்! பீமசேனரேதான்! அடுமனை அவருக்குரிய இடம்! எங்கேனும் ஒளிந்து தங்குவதாக இருந்தால் அடுமனையாளன் வடிவையே அவர் எடுப்பார். முன்பு கானேகியபோதும் மூன்று இடங்களில் அவர் அடுமனையாளனாக பணியாற்றியிருக்கிறார்!” என்றான். ஸ்வேதன் “அவர் மட்டும் தனியாக அங்கு வந்து தங்கியிருக்க வாய்ப்பில்லை. சென்ற ஓராண்டுக்குள் அங்கு வந்து எவ்வகையிலேனும் பிறர் நோக்கை இழுப்பவர்கள் எவரெவர் என்று கேட்டு ஒற்றர்களிடம் செய்தி அனுப்புகிறேன்” என்றான்.
மேலும் ஆறு நாட்களுக்குப் பின் அங்கிருக்கும் ஐவரையும் அரண்மனையிலிருக்கும் சைரந்திரி என்னும் சேடியையும் பற்றிய செய்திகள் அங்கு வந்தன. “அவர்களேதான்! ஐயமில்லை!” என்று ஸ்வேதன் சொன்னான். “மூத்தவரே, நான் இக்கணமே விராடபுரிக்கு செல்ல விரும்புகிறேன். அவரை நான் பார்த்தாகவேண்டும். அவர் கால்களைத் தொட்டு சென்னிசூடி என்னை வாழ்த்துங்கள் அரசே என்று சொல்லவேண்டும். இங்கு அவர் என ஓர் இரும்புக் கதாயுதத்தை வைத்து ஆசிரியர் என்று கொண்டு ஒவ்வொரு நாளும் கதை பயில்பவன் நான். அவரை ஒருமுறைகூட பார்த்திராத மாணவன். பிறிதொரு வாய்ப்பு எனக்கு அமையப்போவதில்லை” என்றான்.
ஆனால் ஸ்வேதன் தயங்கினான். கீசகனின் இறப்பு குலாடபுரியில் பெரும்களியாட்டென்று மாறியது. முதலில் அதை நகர்மக்கள் எவரும் நம்பவில்லை. முன்பும் பலமுறை அவ்வாறு கீசகன் கொல்லப்பட்ட செய்தி அவர்களுக்கு வந்திருந்தது. மீண்டும் மீண்டும் அச்செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே குலாடபுரியில் களியாட்டங்கள் தொடங்கின. தேனும் தினையும் கலந்த இனிப்புகளை ஒருவரோடொருவர் பரிமாறிக்கொண்டனர். மலர்களாலும் தளிரிலைச்செண்டுகளாலும் மாறி மாறி அறைந்து கூவி நகைத்தனர். குலாடபுரியின் மூத்தோர் குன்றின்மீதேறி நடுகற்களுக்கு மாலையிட்டு ஊனும் கள்ளும் படைத்து வணங்கி நன்றியுரைத்தனர்.
பூசகர்களில் வெறியாட்டெழுந்த மூதாதையர் குலாடபுரியின் இருண்ட காலம் முடிவுற்றுவிட்டது, ஒளியெழவிருக்கிறது என்று அறிவித்தார்கள். ஆனால் ஸ்வேதன் மட்டும் ஐயம் கொண்டிருந்தான். “ஆணிலி என்று அங்கிருப்பவர் அர்ஜுனராக இருக்க வாய்ப்பில்லை. பெருவீரர் ஆணிலியாக எப்படி இருக்க முடியும்?” என்றான். “அவரே என்பதில் எனக்கு ஐயமில்லை. விற்கலையும் நடனமும் ஒன்றே. அவர் பெருநடிகர்” என்றான் சங்கன். அதை ஸ்வேதன் அறிந்திருந்தான் எனினும் அர்ஜுனனை பெண்ணுருவில் உளத்தால் காண அவன் தயங்கினான்.
மேலும் சிலநாட்களுக்குப் பின் அஸ்தினபுரியிலிருந்து அங்க நாட்டரசர் கர்ணன் தலைமையில் துரியோதனனும் அஸ்வத்தாமனும் படைகொண்டு விராடபுரி நோக்கி வருவதை ஒற்றர்கள் வந்து உரைத்தனர். “இதுவே தருணம். தந்தையின் உதவிக்காக நாம் படைகொண்டு செல்வோம்” என்று சங்கன் சொன்னான். ஸ்வேதன் “நாம் இன்று பிறிதொரு நாடு. அவர்கள் நம்மை அழைக்காமல் இப்போருக்குச் செல்வது உகந்ததல்ல. இன்றும் நமது குலத்தலைவர்களின் அவை அறுதி முடிவை எடுக்கும் ஆற்றலுடன் உள்ளது. அவர்களிடம் கோருவோம்” என்றான்.
குலாடக் குன்றில் கூடிய குலாடர்களின் குடிப்பேரவை விராடபுரியின் அரசர் தன் முத்திரை பொறிக்கப்பட்ட ஓலையாலோ அரசத்தூதென்று வரும் அந்தணர் ஒருவராலோ முறைப்படி குலாடபுரியை போருக்கு உடன்வருமாறு அழைத்தாலன்றி அவர்கள் செல்ல வேண்டியதில்லை என்று முடிவெடுத்தது. விராடர் தன் அரசியையும் மைந்தர்களையும் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னரே முற்றாக மறந்துவிட்டிருந்தார். கீசகனின் படைகள் குலாடபுரியை சூறையாடியபோதும் விராடரின் துணைவியாகிய அரசி பிரதீதை கீசகனின் முன்னால் சென்று முடியும் அரசணியுமின்றி நின்று கைகூப்பி அடியறைவு சொல்லி கப்பம் அளித்தபோதும் விராடர் மறுவினையாற்றவில்லை. அவ்வஞ்சம் குலாடர்களிடம் நஞ்சென தேங்கியிருந்தது.
குலாடபுரியின் அரசி தனிமணிமுடி சூடலாகாதென்றும் அரியணையில் அமர்ந்து அவை நிகழ்த்தலாகாதென்றும் கீசகன் ஆணை பிறப்பித்தபோதும் விராடபுரியின் அரசரிடமிருந்து ஆதரவென்று எதுவும் எழவில்லை. “குலாடபுரியை விராடபுரியின் இணை நாடாகவும், நம் அரசியை விராடரின் அரசியாகவும் அவர்கள் ஏற்றுக்கொண்ட பின்னரே நாம் படைகொண்டு செல்லவேண்டும்” என்றனர் குலத்தலைவர்கள். “இப்போரில் விராடபுரி தோற்கும். அது நமக்கு நன்று. கலிங்கமும் விராடமும் ஆற்றல் குன்றுகையிலேயே நாம் வளர்கிறோம்” என்றார் பிறிதொருவர்.
சங்கன் “ஐயமே தேவையில்லை, விராடபுரியை இந்நிலையில் எவரும் வெல்ல இயலாது” என்றான். “ஏன்? வருபவர்கள் எவர் என்று தெரியுமா?” என்று ஒரு குடித்தலைவர் கேட்டார். “அங்கு பெருவீரன் உத்தரன் இருப்பதனாலா?” என்று அவர் சொன்னபோது அவையமர்ந்த குடித்தலைவர் அனைவரும் வெடித்து நகைத்தனர். சங்கனை விழிநோக்கிய ஸ்வேதன் பேசாதே என்று தடுத்தான். “அவர்களுக்கு கந்தர்வர்களின் அருளிருக்கிறது. கீசகனைக் கொன்ற கந்தர்வன் இப்போதும் அவர்களின் பணிக்கென அங்கிருக்கிறான்” என்றான் சங்கன்.
குடிமூத்தவர் “நீ கதைகளிலேயே உழலுகிறாய், இளையோனே. கந்தர்வர்கள் நள்ளிரவில் உலவும் மானுடரை அச்சுறுத்தி வெல்வதுண்டு. இன்று வரை எவரும் தேவர் உதவியாலோ கந்தர்வர்களின் பின்துணையாலோ போர்களை வென்றதில்லை. மானுடப் போர்களில் தெய்வங்கள் ஊடாடுவதில்லை. படைக்கலங்களில் வந்தமைந்து குருதி உண்ணும் பாதாள தெய்வங்கள்கூட போர் வெற்றிகளை முடிவு செய்வதில்லை. ஆற்றலும் உறுதியுமே போர்களை முடிவு செய்கின்றன” என்றார். சங்கன் மேலும் ஏதோ சொல்ல முனைய ஸ்வேதன் அவனை விழியால் தடுத்தான்.
அவர்கள் அஸ்தினபுரியின் படைகள் விராடபுரியை நோக்கி வரும் செய்தியை ஒவ்வொரு நாழிகையும் என ஓலைகளால் அறிந்துகொண்டிருந்தனர். விராடரின் மைந்தன் உத்தரனின் தலைமையில் படையொன்று அவர்களை எதிர்கொள்ளச் செல்கிறது என்ற செய்தி வந்தபோது “நன்று! இப்போருக்குப் பின் ஒருவேளை உத்தரபுரியையும் நமது இளவரசர்களே ஆளக்கூடும். அரசருக்கு வேறு மைந்தர்கள் அங்கில்லை” என்று குடிமூத்தார் ஒருவர் சொன்னார். “உத்தரனை தேர்த்தூணில் கைகால் பிணைத்து கட்டிவைத்து போருக்கு கொண்டு செல்லவேண்டும். கட்டு சிறிது நெகிழ்ந்தால்கூட அவர் பாய்ந்து திரும்பி ஓடிவிடக்கூடும்” என்றார் ஒருவர். அவை அதை எண்ணி எண்ணி நகைத்துக்கொண்டிருந்தது.
ஸ்வேதன் “அவருக்கு தேரோட்டிச்செல்பவர் ஆற்றல் கொண்டவர் என்கிறார்கள்” என்றான். “யாரவர்? விராடரே தேரோட்டுகிறாரா?” என்றார் குடித்தலைவர். “அல்ல. அங்கு பிருகந்நளை என்னும் ஆணிலி இளவரசிக்கு நடனம் கற்றுக்கொடுப்பதற்காக வந்திருக்கிறாள்.” அவை ஒருகணம் அச்சொற்களைக்கேட்டு அதன் பின்னர் புரிந்துகொண்டு தொடைகளிலும் பிறர் தோள்களிலும் அறைந்தபடி உரக்க நகைத்தது. மீண்டும் மீண்டுமென நகைப்பு வெடித்தெழுந்தது. முதியவர் கண்களில் நீர்வார சிரித்து “உத்தரனுக்கு பேடி தேரோட்டுகிறாள். மிகப் பொருத்தம். ஆனால் பேடிக்கு எதிர்நிற்க அங்கர் மறுத்துவிடக்கூடும். பேடிகளை எதிர்கொள்ள அவர்களிடமும் பேடிகள் இருந்தாகவேண்டும்” என்றார்.
அதற்கு மறுநாள் அஸ்தினபுரியின் படை விராடநாட்டுப் படையினரால் தோற்கடிக்கப்பட்டு எல்லைவரை துரத்தியடிக்கப்பட்டதென்றும் உத்தரர் விழுப்புண் பெற்று போர்வீரராக நகர்நுழைந்தாரென்றும் ஒற்றர் செய்தி வந்தது. என்ன நிகழ்கிறது என்று அறியாமல் குடித்தலைவர்கள் சொல்லிழந்து அமர்ந்திருந்தனர். உத்தரர் நகர்நுழைந்த வீறையும் விராடபுரியின் மக்கள் மலரள்ளி வீழ்த்தி வெறிகொண்டு கூத்தாடியதையும் ஒற்றர்கள் சொல்லச் சொல்ல அவர்களிலொருவர் “இது மெய்யென்றால் நாமறியாத ஏதோ தெய்வங்கள் இதில் ஊடாடியுள்ளன. இது மானுட நிகழ்வே அல்ல” என்றார்.
சங்கன் “அதைத்தான் நானும் கூறினேன், அங்கு ஐந்து தெய்வங்கள் ஊடாடியுள்ளன” என்றான். ஐந்து என்ற எண்ணிக்கை அவர்களனைவரையும் உலுக்க அனைவரும் அவனை நோக்கினர். ஸ்வேதன் “தேரோட்டிச் சென்றவர் பாண்டவராகிய அர்ஜுனர். போருக்கு பீமனும் சென்றுள்ளார்” என்றான். “ஆம்! ஆம்! அதுவே மெய்யென்றிருக்கவேண்டும்!” என்று குரல்கள் ஒலித்தன. “வேறெவர்? வேறெவரால் இது இயலும்!” என்றார் ஒரு குடிமூத்தார். “அவர்கள் இங்கிருப்பதை அறிந்துதான் அஸ்தினபுரியின் படைகள் வந்திருக்கக்கூடும்.”
மேலும் ஒரு நாள் கழித்து அனைத்தும் தெளிவடைந்தன. விராடபுரியின் இளவரசியை அவள் தன்னேற்புக் களத்திலிருந்து அர்ஜுனன் கொண்டுசென்று தன் மைந்தனுக்கு துணைவியாக்கினார் என்று தெரியவந்தது. விராடபுரியில் அவ்வாண்டு நிகழ்ந்த உண்டாட்டுக்கும் செண்டு விளையாட்டுக்கும் குலாடபுரிக்கு முறையான அழைப்பு வந்தது. ஆனால் குடித்தலைவர்கள் அவர்கள் செல்வதை ஒப்பவில்லை. “இவ்வழைப்பை விடுக்கவேண்டியவர் உத்தரர் அல்ல. நம் அரசியை பதினாறாண்டுகாலம் துறந்த விராடரே. உங்களிருவரையும் மைந்தர்களாக அவர் ஏற்று அங்கே உத்தரருக்கு நிகரான அரியணையில் அமர்த்துவாரென்றால் செல்லலாம். அச்சொல் பெறாமல் நாம் அங்கு செல்லக்கூடாது” என்றனர்.
அவ்விழவு முடிந்ததுமே அஸ்தினபுரியின் முடிப்பூசல் செய்திகள் வரத்தொடங்கின. பெரும்போரொன்று எழவிருக்கிறது என்று ஒவ்வொரு நாளும் ஒற்றர்கள் செய்தி கொணர்ந்தனர். மெல்ல மெல்ல குடிமூத்தவர்களும் புறவுலகை அறியலாயினர். இளைய யாதவரின் முதற்தூது முறிந்து அவர் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பிய அன்று வந்த ஒற்றன் அவைநின்று நிகழ்வதை விளக்கினான். அவன் குலாடனல்ல, நூல்நவின்ற சூதன். ஆகவே அவன் குரல் வேறெங்கிருந்தோ தெய்வமொன்றின் அறைகூவலென ஒலித்தது. அதை அவையில் கேட்டபோது மூத்தவர்கள் திகைத்து செயலிழந்து அமைந்திருந்தனர்.
“பாரதவர்ஷத்தின் வரலாற்றிலேயே மாபெரும் போர் நிகழவிருக்கிறது. ஒரு தரப்பில் தொல்குடி ஷத்ரியர்கள் அணிநிரக்கிறார்கள். மறுதரப்பில் இளைய யாதவருடன் பாண்டவர்களும் பாஞ்சாலர்களும் வளர்ந்தெழும் புதிய அரசுகள் அனைத்தும் நிரைகொள்கின்றன. பாரதவர்ஷமே இரண்டெனப் பிரிந்து களம் நிற்கிறது. எவர் வெல்வார் என்பதை ஒட்டியே எத்திசையில் இப்பெருநிலம் வளருமென்று கூற இயலும். கௌரவர் வென்றால் மீண்டும் இங்கு தொல்வேதமே திகழும். பாண்டவர்கள் வென்றால் வேத முடிபு ஓங்கும். இங்குள்ள அனைத்துப் புறவேதங்களையும் தன்னுள் ஏற்று பெருநெறியொன்று எழுந்து வரும். தெய்வங்கள் விண்ணிலிருந்து ஆர்வத்துடன் குனிந்து நோக்கும் தருணம் இது என்கின்றனர் புலவர்.”
“பாரதவர்ஷத்தின் அனைத்து அவைகளிலும் முனிவரும் அந்தணரும் புலவரும் அவைசூழ்வோரும் சான்றோரும் இதைப்பற்றி அன்றி பிறிதெதையும் பேசவில்லை. இன்று ஒவ்வொருவர் முன்பிலும் இருக்கும் வினா நீங்கள் எத்தரப்பு என்பதே” என்றான் ஒற்றுச்சூதன். ஸ்வேதன் “இப்போரில் நாம் கலந்து கொள்ளவேண்டும்” என்றான். குடிமூத்தார் “எவர் பொருட்டு?” என்றார். “பிறிதொரு எண்ணமே இல்லை, பாண்டவர் பொருட்டு. அவர்களே எங்கள் உள்ளத்தின் ஆசிரியர்கள். அவர்கள் பொருட்டு களம் நிற்பதில் நாங்கள் பிறவியின் நிறைவை காண்கிறோம்” என்றான் சங்கன்.
“ஆனால் நாம் இன்னும் அழைக்கப்படவே இல்லை. இருசாராரின் ஓலைகளும் இங்குள்ள அனைத்து அரசுகளுக்கும் முன்னரே அனுப்பப்பட்டுள்ளன. பாண்டவர்கள் நிஷாதர்களையும் கிராதர்களையும் அசுரர்களையும் அரக்கர்களையும்கூட தூதனுப்பி தங்களுடன் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு இன்னும் எச்செய்தியும் வரவில்லை. அழைக்காமல் போருக்குச் சென்று சேர்வதென்பது இழிவு மட்டுமல்ல, அரசுசூழ்தலில் பெரும்பிழையும் கூட. போருக்குப் பின் என்ன நிகழுமென்பதற்கு ஒரு சொல்லேனும் உறுதி நமக்களிக்கப்படவேண்டும். நம் வீரர்கள் அங்கு சென்று மறைவதற்கும் குருதி சிந்துவதற்கும் ஈடென நாம் பெறுவதென்ன என்பது இங்கிருந்து கிளம்புவதற்கு முன்னரே தெளிவுபடுத்தப்படவேண்டும்” என்றனர் குடித்தலைவர்கள்.
ஸ்வேதன் “இப்போரில் நாம் கலந்துகொள்ளாவிட்டால் தனிமைப்படுவோம். போரில் கலந்து கொண்டு வென்றவர்கள் தரப்பில் நிற்போமெனில் மேலும் வெற்றியும் புகழும் செல்வமும் நம்மை சேரும். தனித்து நிற்போமெனில் எவர் வென்றாலும் அவர்களின் எதிரியாகவே நாம் கருதப்படுவோம். நம்மை முற்றழிப்பார்கள். போரில் கலந்து கொள்ளுகையில் நாம் வெல்வதற்கான வாய்ப்புகள் பாதியாவது உள்ளன” என்றான். சங்கன் உரத்த குரலில் “எங்கு பெருங்காற்றுகளின் மைந்தன் படைக்கலமேந்தி நின்றிருக்கிறானோ அத்தரப்பே வெல்லும். ஐயமேயில்லை. இப்புவியை மாருதியின் மைந்தர் வெல்வார். களத்தில் அவரை எதிர்கொண்டு ஒருநாழிகைப்பொழுது எதிர்நிற்பதற்கு தகுதி கொண்ட எவருமில்லை. நாம் அவருடன் நிற்போம். நம் குடிகள் வாழ்வார்கள்” என்றான்.
ஆனால் குடிப்பேரவை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. “நம் அரசியை மீண்டும் மணிமுடி சூடி அவையமரும்படி ஒப்புதல் அளித்து விராடர் ஒரு ஓலையாயினும் அனுப்பும் வரைக்கும் அவர் தரப்பில் நாம் நிற்பது எவ்வகையிலும் உகந்ததல்ல” என்று குடித்தலைவர் இறுதியாக சொன்னார். அவைநீங்கும்போது சங்கன் “ஒவ்வொரு முறையும் தவறிப்போகிறது, மூத்தவரே. இனியொரு தருணம் இல்லை. நான் அவருடன் சென்றாகவேண்டும். அவருக்கென படைக்கலம் ஏந்தியாகவேண்டும்” என்றான். ஸ்வேதன் “நாம் செல்வோம். ஆனால் அது முறைப்படியே ஆகட்டும். காத்திருப்போம்” என்றான்.