‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 64

tigதிருஷ்டத்யும்னனின் யானைத்தோல் கூடாரத்திற்குள் இருந்து வெளியே வந்தபோது ஸ்வேதனின் விழிகள் கூசின. கூடாரத்திற்குள் போதிய ஒளி இருந்தது. ஆனால் வெளியே பின்னுச்சிப்பொழுதின் வெயில் கண்களை நிறைத்து விழிநீர் பெருகச்செய்தது. நெடுநேரமாக தோல்பரப்பில் வரையப்பட்ட வரைபடங்களில் மெல்லிய கோடாக குறிக்கப்பட்டிருந்த வழிகளையும் செம்புள்ளிகளாகவும் நீலப்புள்ளிகளாகவும் தெரிந்த இடங்களையும் கூர்ந்து நோக்கியமையால் கண்கள் களைத்திருந்தன. வெளியே வந்தபோது முன்னுச்சிப் பொழுதில் இருந்து அங்கே கேட்டு அறிந்த அனைத்தையும் முற்றாக மறந்துவிட்டதாக உணர்ந்தான். நல்லவேளையாக அனைத்தையும் அவ்வப்போது ஓலையிலும் பொறித்துக்கொண்டோம் என்று ஆறுதல்கொண்டான். ஓலைக்கட்டை எடுத்து சரடை அவிழ்த்து முதல் ஓலையை பார்த்தான். உள்ளம் சலித்திருந்தமையால் ஒரு சொல்லும் உள்ளே செல்லவில்லை. மீண்டும் அடுக்கிக் கட்டி இடையில் வைத்துக்கொண்டு புரவியை நோக்கி சென்றான்.

திருஷ்டத்யும்னனின் அழைப்பை ஏற்று அவன் படைமுகப்பிலிருந்து காலையிலேயே கிளம்பி வந்திருந்தான். பாஞ்சாலத்து அமைச்சர்களான பார்க்கவரும் பத்ரரும் படைத்தலைவர் ரிஷபரும் அங்கிருந்தனர். அவர்கள் முன்னரே விரிவாகப் பேசி அனைத்தையும் வகுத்துவிட்டிருந்தார்கள். அவன் உள்ளே நுழைந்து வணங்கியபோது எதுவும் பேசாமல் கையை மட்டும் அசைத்த பின் பேச்சை தொடர்ந்தனர். பிரதிவிந்தியனும் சுதசோமனும் சதானீகனும் சுருதகீர்த்தியும் சர்வதனும் சேர்ந்து வந்தனர். யௌதேயனும் நிர்மித்ரனும் தனியாக வந்தார்கள். இறுதியாக உத்தரன் வந்தான். அனைவரும் கைகளைக் கட்டியபடி திருஷ்டத்யும்னன் பேசுவதைக் கேட்டு நின்றனர்.

“இங்கே எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம். நாட்கள் பல ஆகவும் கூடும். அதுவரை நாம் இங்கே ஒவ்வொருநாளும் போருக்குச் சித்தமாகவே தங்கவேண்டும். இப்போது அமைந்துள்ள அணிவகுப்பே போர்சூழ்கைகளாக உருமாற்றம் கொள்ளும் வகையில் அமையவேண்டும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “படைகளின் பின்புறம் வலப்பக்கம் ஒதுங்கி அடுமனைக்கூடங்கள் அமையட்டும். இடப்பக்கம் மருத்துவநிலைகள். அடுநிலைகளில் இருந்தும் மருத்துவநிலைகளில் இருந்தும் வண்டிகள் படைகளின் முகப்புவரை வருவதற்கு பெருவழிகள் இருக்கவேண்டும். அவை மரப்பலகைகள் போட்டு உறுதிசெய்யப்படவேண்டும். அவற்றிலிருந்து கிளைவழிகள் பிரிந்து அனைத்துப் படைப்பிரிவுகளுக்கும் செல்லவேண்டும்.” அவன் விரல்களால் சுட்டிக்காட்டி “அடுமனைக்கும் மருத்துவநிலைக்கும் நடுவே உள்ள இடைவெளிக்கு நேராகவே படைப்பிரிவில் எங்காயினும் போர்யானைகள் நிலைகொள்ளவேண்டும். அவை புண்பட்டால் அஞ்சி திரும்பி ஓடும் இயல்புள்ளவை. யானைகளைத் தொடர்ந்து செல்லும் படைகள் ஒற்றைக் கொம்போசையில் விரிந்து வழிவிட்டு அவற்றை பின்னால் செல்லவிடவேண்டும்படியே அமையும்” என்றான்.

ஸ்வேதன் முதலில் ஒவ்வொரு சொல்லையும் உளக்கிளர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தான். குடிநீர் கலங்களை ஏற்றிய வண்டிகள் படைமுழுக்க செல்லும் பாதைகள், ஒவ்வொரு படைப்பிரிவிலும் வீரர்கள் ஏந்தியவற்றுக்கு மேலாக மாற்றுப்படைக்கலங்களை கொண்டுசெல்லும் வண்டிகள் செல்லும் வழிகள் அனைத்தும் குறிக்கப்பட்டிருந்தன. முரசொலியாலும் கொடியசைவாலும் ஆணைகளை அளிக்கும் செய்திநிலைகள் நீலநிறமாகவும் கைவிடுபடைகளை ஏந்திய பீடங்கள் செந்நிறமாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. யானைகள் இழுத்த காவல்நிலைகளுக்கும் அத்திரிகளும் காளைகளும் இழுத்த காவல்நிலைகளுக்கும் வெவ்வேறு அடையாளங்கள் இருந்தன. மெல்ல அவன் சலிப்புகொண்டான். இவை போர் தொடங்கிய பின்னர் இவ்வண்ணமே ஒழுங்குடன் இருக்குமா என்ற ஐயம் எழுந்தது.

“நிலைகுலையாத படையே படை. நிலைகுலைந்த கணம் முதல் அது வெறும் திரள்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “நிலைகுலையாமலிருக்கச் செய்யும் விசைகள் இரண்டு. தாங்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடனிருக்கிறோம் என்று உணர்வது. தங்களை மேலிருப்பவர்கள் அறிந்து நடத்துகின்றனர் என்று உணர்வது அடுத்து. ஆகவே எந்நிலையிலும் செய்திமாடங்களில் ஆளொழியலாகாது. நூறுமுறை செய்திமாடங்கள் தாக்கப்பட்டாலும் அடுத்தகட்ட வீரர்கள் மேலேறிவிடவேண்டும்.” உத்தரன் “படைப்பிரிவுகளில் செய்திகளை முற்றாக புரிந்துகொள்ள இயலாத கிராதர் பலர் உள்ளனர்” என்றான். “ஆம், ஆகவேதான் அவர்களின் அத்தனை பிரிவுகளிலும் நூற்றுவர் தலைவர்களுடன் ஒரு ஷத்ரிய வீரனையும் இணைப்பொறுப்பாளனாக அமைத்திருக்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன்.

பின்னர் ஒவ்வொருவருக்குமான ஆணைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. படைப்பிரிவு முழுமைக்கும் குடிநீரும் உணவும் அளிக்கும் பொறுப்பு சுதசோமனுக்கும் சர்வதனுக்கும் அளிக்கப்பட்டது. படையெங்கும் செல்லும் செய்திப்புறாக்களும் தூதர்களும் யௌதேயனுக்கும் அனைத்துக் காவல்மாடங்களும் நிர்மித்ரனுக்கும் பொறுப்பளிக்கப்பட்டன. “செய்திப்புறாக்கள் அரிதாகவே அம்புகள் பட்டு விழுகின்றன. ஒரு புறா விழுந்தால் அச்செய்தி ஒருபோதும் சென்றுசேராமலாகக் கூடாது. ஒவ்வொரு எளிய செய்திக்கும் இரு புறாக்கள் செல்லவேண்டும். முதன்மைச் செய்திகளுக்கு மூன்று புறாக்கள். அரிதான மையச் செய்திகளுக்கு நான்கு” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.

படைகளுக்குரிய படைக்கலங்களின் பொறுப்பு சுருதகீர்த்திக்கும் வண்டிகளின் பொறுப்பு சதானீகனுக்கும் அளிக்கப்பட்டது. ஒற்றர்களை ஒருங்கிணைக்க சுருதசேனனுக்கு பொறுப்பளிக்கப்பட்டது. அரசர்களுக்குரிய முறைமைகளை நோக்கவும் அவர்களுக்கிடையேயான மோதல்களை பேசிமுடிக்கவும் பிரதிவிந்தியன் பொறுப்பேற்றுக்கொண்டான். உத்தரன் யானைகளுக்கும் பிற விலங்குகளுக்கும் பொறுப்பேற்றான். ஒவ்வொருவரும் தங்களுக்குமேல் நேரடியாக எவருடன் தொடர்புகொள்ளவேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

ஸ்வேதனை நோக்கி திரும்பிய திருஷ்டத்யும்னன் “குலாடரே, நீர் மருத்துவநிலைகளுக்கு பொறுப்பானவர். உமக்குக் கீழே நான்கு ஷத்ரியகுலத்தவர் மருத்துவநிலைகளை ஒருங்கிணைப்பார்கள். மருத்துவநிலைகள் மூன்று சாகைகளாக செயல்படுகின்றன. அரசர்களுக்குரியது ராஜன்யம். வீரர்களுக்குரியது ஷாத்ரிகம். விலங்குகளுக்குரியது வன்யம். மூன்று அமைச்சர்கள் அம்மூன்றுக்கும் பொறுப்பேற்பர். பிறிதொருவர் மருந்துகளுக்கு பொதுவாக பொறுப்பாவார். இவற்றில் ஷாத்ரசாகை மிகப் பெரிது. நூற்றியெட்டு கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அது. ஒவ்வொரு கண்டத்துக்கும் ஒரு மூத்த மருத்துவர் தலைவராக இருப்பார். அவை ஒவ்வொன்றும் பத்து பத்ரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பத்ரத்துக்கும் ஏழு முதிர்ந்த மருத்துவர்கள் இருப்பார்கள். நூறு துணைமருத்துவர்களும் நாநூறு மருத்துவ உதவியாளர்களும் நூறு வண்டிகளும் ஆயிரம் மஞ்சங்களும் கொண்டது ஒரு பத்ரம். ஒவ்வொரு பத்ரத்திலும் அதற்குரிய மருந்துகளும் பிற பொருட்களும் தனியாக கருதப்பட்டிருக்கும். ஒவ்வொன்றிலும் புண்படுவோரை நோக்கவும் நோயுற்றோரை பேணவும் வெவ்வேறு பகுதிகள் இருக்கும். நஞ்சூட்டப்பட்டோருக்கான பிரிவுகளும் உண்டு” என்றான்.

“வன்யத்தில் யானைகள், புரவிகள், அத்திரிகள், மாடுகள் ஆகியவற்றுக்கு தனித்தனியாக நிலைகள் உண்டு” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “அரசகுடியினருக்குரிய ராஜன்யத்தில் ஒவ்வொரு அரசகுடிக்கும் தனித்தனியான மருத்துவகுழுக்கள் அவர்கள் நாட்டிலிருந்தே வந்துள்ளன. அவர்களுக்குரிய அனைத்தையும் அவர்களே கொண்டுவந்துள்ளார்கள். ஒவ்வொரு அரசகுடியின் மருத்துவக்குழுவும் அந்நாட்டு அரசமுத்திரை பொறிக்கப்பட்ட வெண்கொடியுடன் செயல்படுவார்கள். ஷாத்ரப் பிரிவில் ஒவ்வொரு கண்டத்துக்கும் பத்ரத்துக்கும் தனித்தனியான முத்திரைகள் உண்டு. வெண்கொடியில் வலப்பக்கம் கண்டத்தின் முத்திரையும் இடப்பக்கம் பத்ரத்தின் முத்திரையும் இருக்கும்.”

திருஷ்டத்யும்னன் விரல்சுட்டி மருத்துவநிலைகள் இருக்கும் இடத்தை காட்டினான். “இவை அனைத்தும் தனியாக புறாக்களாலும் கொடியடையாளங்கள் மற்றும் எரியம்புகளாலும் செய்தித்தொடர்பில் இருக்கவேண்டும். ஒவ்வொரு குழுவிலும் பிற குழுக்களுடன் தொடர்புகொள்வதற்குரிய மருத்துவத் தூதர்கள் இருக்கவேண்டும். எவ்வகையிலேனும் படைவழிகள் அடைந்துபோனால் அரைநாழிகைக்குள் வழி உருவாக்கப்படவேண்டும். இவை பிரிந்திருப்பது போதிய இடம் தேவை என்பதற்காக. ஆனால் செய்தித் தொடர்பால் இவை ஓரிடத்தில் ஒன்றென இருப்பதாகவே செயல்படவேண்டும்.” ஸ்வேதன் தலைவணங்கினான். “உங்களுக்குமேல் செய்திகளை பெற்றுக்கொள்பவர் யயாதி. அவருக்குமேல் சகதேவர். இறுதியாகவே இளைய யாதவரும் அரசரும். அவர்களிடம் செய்திகள் சென்று சேராமலிருக்கும்தோறும் நாம் நன்கு ஒருங்கிணைகிறோம் என்று பொருள்.”

ஸ்வேதன் “என் பணியை நான் முழுதாற்றுவேன், அரசே” என்றான். “இவை ஒவ்வொன்றும் அமைச்சர்களால் முழுமையாகவே வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருமுறை போர்ச்சங்கு ஊதப்பட்டுவிட்டால் அந்தணர்களுக்கு இங்கு இடமில்லை. ஆகவேதான் ஷத்ரியர்கள் பொறுப்பேற்கவேண்டியிருக்கிறது. படைத்தலைவர்கள் பலர் இருந்தாலும் அரசகுடியினர் ஒருவரின் ஆணையே அனைவராலும் இறுதியானதாக கொள்ளப்படும். ஆகவேதான் உங்களுக்கு பொறுப்புகள் பிரித்தளிக்கப்படுகின்றன” என்றான் திருஷ்டத்யும்னன்.

ஒவ்வொருவரும் ஆணையோலைகளை பெற்றபின் கிளம்பினர். வெளியே பாஞ்சாலத்து இளவரசர்கள் உள்ளே செல்லும்பொருட்டு கூடி நின்றனர். வெளியே சென்ற உபபாண்டவர்கள் அவர்களை வணங்கி முகமன் உரைத்தார்கள். ஸ்வேதனிடம் வந்த சதானீகன் “அவர்கள் உபபாஞ்சாலர். சுமித்ரர், பிரியதர்சர், யுதாமன்யு, விரிகர், பாஞ்சால்யர், சுரதர், உத்தமௌஜர், சத்ருஞ்ஜயர், ஜனமேஜயர், துவஜசேனர்” என்றான். ஸ்வேதன் “ஆம், அவர்களின் முகங்கள் பாஞ்சாலர்களுக்குரியவை” என்றான். புரவிகளில் மேலும் இளவரசர்கள் வந்து இறங்கிக்கொண்டிருந்தனர்.

“நீர் எங்கு செல்கிறீர்?” என்று சுருதகீர்த்தி ஸ்வேதனிடம் கேட்டான். “எனக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் மருத்துவநிலையை முழுமையாக சுற்றிப்பார்த்து அதன் அமைப்பை புரிந்துகொள்ளவேண்டும்” என்றான் ஸ்வேதன். “எனக்கும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்க இன்னும் சிலநாட்களே உள்ளன. படைக்கலங்கள் குறைந்தால் இனி ஒன்றும் செய்யவியலாது. அவை ஒருங்கமைவதென்றால் இதற்குமுன் அமைக்கப்பட்டிருக்கும். நான் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றான் சுருதகீர்த்தி. “ஆம், வண்டிகளின் பொறுப்பு எனக்கு என்றார்கள். இங்கிருக்கும் வண்டிகளின் எண்ணிக்கையை கணக்கிடவே நாலைந்து நாட்களாகும். நாற்பத்தெட்டு சகடங்கள் கொண்ட பாடிவீடுகளையும் வண்டிகளாக கணக்கிடவேண்டும். இரண்டு சகடங்களுடன் வீரர்களால் தள்ளிச்செல்லப்படும் உணவுவண்டிகளும் வண்டிகள்தான்…” என்றான் சதானீகன்.

“நான் என் பொறுப்பை முடிந்தவரை நிறைவேற்றவே விழைகிறேன்” என்றான் ஸ்வேதன். “நான் குலாடகுடிமேல் கொண்ட அன்பினால் உம்மை அழைத்தேன். என் குடிலில் சிறந்த யவன மதுவும் உப்பிட்டு உலர்த்தப்பட்டு கனலில் சுட்ட பன்றித்தொடையும் வைத்திருக்கிறேன். நீர் வந்து அவற்றை உண்டு குடித்தால் உமது மூதாதையர் மகிழ்வார்கள்” என்றான் சுருதகீர்த்தி. ஸ்வேதன் புன்னகைத்து “பிறிதொருமுறை அவர்களை மகிழ்விக்கிறேன், இளவரசே” என்றான்.

பிரதிவிந்தியன் அப்பால் நின்று “அங்கே என்ன செய்கிறீர்கள்? பணிகள் நிறைந்துள்ளன!” என்றான். “தொடங்கிவிட்டார்… அவருக்கு ஏற்கெனவே அவர் செய்துகொண்டிருக்கும் பணிகள்தான், ஒற்றர்களை உளவறிதல்” என்ற சுருதகீர்த்தி “சென்று மருத்துவநிலைகளை பாரும். உம்மைக் கண்டதும் அங்கிருப்போர் மிகையான மதிப்பும் முறைமைச்சொற்களும் அளிப்பார்கள். அதன் பொருள் எங்களை வேலைசெய்யவிட்டு விலகிச்செல்கிறீர்களா என்பதுதான். அதை உணர்ந்ததும் நீரே திரும்பி வருவீர். வந்ததும் எங்கள் குடிலில் உமக்கான பன்றித்தொடை காத்திருக்கும். யவன மதுவைப் பற்றி சொல்லமுடியாது. அது பாற்கடல் வெண்ணையைவிட இங்கே போட்டிக்குரியது” என்றான்.

ஸ்வேதன் “இங்கே இளையவர் அபிமன்யூவை காணவில்லையே?” என்றான். சுருதகீர்த்தி முகம் மாற “அவனிடம் எப்பொறுப்பை ஒப்படைப்பது?” என்றான். சதானீகன் ஸ்வேதன் தோளைத் தொட்டு “அவர் படைப்பயிற்சியில் இருக்கிறார்” என்றான். சுருதகீர்த்தி பிரதிவிந்தியனை நோக்கி செல்ல சதானீகன் “அவரிடம் அபிமன்யூ குறித்து கேட்கலாகாது” என்றான். “அவருக்கு தந்தையின் பிற மைந்தரை பிடிப்பதில்லையா?” என்றான் ஸ்வேதன். “அவ்வாறுதான் எண்ணினேன். ஆனால் இன்று காலைமுதல் அரவான் அவருடன்தான் இருக்கிறான். இருவரும் ஆடிப்பாவைகள்போல குடில்முகப்பில் நின்று பேசிக்கொண்டிருப்பதை கண்டேன்” என்றான்.

“வருகிறீர்களா இல்லையா?” என்றான் பிரதிவிந்தியன். “பணிகள் அளிக்கப்படுவதென்பது வில்லில் இருந்து அம்புகளை ஏவுவது என்பார்கள்.” சதானீகன் “இதோ கிளம்புகிறோம், மூத்தவரே” என்றபின் குரல் தாழ்த்தி “யாதவர்கள் அவர்களின் வளைதடிகள்போல. சென்றவிசையில் மீள்வார்கள்” என்றான். ஸ்வேதன் வாயை இறுக்கி சிரிப்பை அடக்கிக்கொண்டான். அவர்கள் புரவிகளில் ஏறி கிளம்பினர்.

tigஸ்வேதன் தன் புரவியில் ஏறி ஒருகணம் தயங்கினான். ஏவலரிடம் வழிகேட்க எண்ணி அதை தவிர்த்து தன் சுவடிக்கட்டை பிரித்தான். விளிம்பு ஒட்டப்பட்டு இணைக்கப்பட்டிருந்த ஓலையடுக்கை விரித்து அதில் வரையப்பட்டிருந்த வரைபடத்தில் மருத்துவநிலைகளை பார்த்தான். அதை உளம்குறித்துக்கொண்டு கிளம்பினான்.

ஓர் இரவும் அரைப்பகலும் கடப்பதற்குள் பாண்டவப் படை முழுமையாகவே தன்னை ஒருங்கமைத்து அங்கே நிலைகொண்டுவிட்டது. செல்லும் வழியெங்கும் ஓர் இடத்தில்கூட அவனுக்கு தடை ஏதும் நிகழவில்லை. ஒவ்வொரு அக்ஷௌகிணிக்கும் நான்கு சுற்றும் காவல்மாடங்கள் எழுந்து அவற்றில் தொலையம்புகளுடனும் முரசுகளுடனும் காவலர்கள் அமர்ந்திருந்தார்கள். வழிக்காவலர் முத்திரைகோரி நோக்கி அனுப்பிவைத்தனர். படைவீரர்கள் பெரும்பாலானவர்கள் தரையிலிட்ட பாய்களில் இடையில் கோவணம் மட்டும் சுற்றி அணிந்து வெற்றுடலுடன் துயின்றுகொண்டிருந்தனர். பலர் சிறுகுழுக்களாக அமர்ந்து தரையில் வரையப்பட்ட களங்களில் காய்களையும் கற்களையும் பரப்பி பகடை ஆடிக்கொண்டிருந்தார்கள். கைகளில் மதுக்கோப்பைகளுடன் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். எங்கும் ஓய்வும் நிறைவும் தென்பட்டது. அவர்கள் அனைவர் முகங்களிலும் மகிழ்ச்சியினால் எழும் மெல்லிய சலிப்பே நிறைந்திருப்பதாக அவனுக்கு தோன்றியது.

மருத்துவநிலையில் அவனை பொறுப்பாளர்களான சபரரும் சந்திரரும் வக்ரரும் எதிர்கொண்டனர். பிரகதர் மருந்துவண்டிகளின் அருகே நிற்பதாக சபரர் சொன்னார். அங்கே அப்போதும் ஒருங்கமைவுப் பணிகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. “புண்பட்டோரை கொண்டுவரும் இருசகட வண்டிகள் சகடங்கள் இன்றித்தான் வந்துசேர்ந்தன. தச்சர்கள் இப்போதுதான் அவற்றை பொருத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் சபரர். அவன் தொலைவில் ஒரு வண்டியை பார்த்ததுமே அது ஏன் என்று புரிந்துகொண்டான். அதன் சகடங்கள் பெரிதாக இருந்தன. பெரிய சகடம்கொண்ட வண்டிகள் குழிகளில் விழுந்து அதிர்வதில்லை. ஆனால் சகடங்களுடன் அவற்றை வண்டிகளில் ஏற்றுவது கடினம். “படிகாரம் போதுமான அளவு உள்ளதா என்ற ஐயம் எழுந்தது. நோக்க சொல்லியிருக்கிறேன்” என்றார் வக்ரர்.

அவன் அந்த மருத்துவநிலையை நோக்கியபடி நடந்தான். தொலைவிலேயே தெரியும்படி அதன் இலச்சினைகள்கொண்ட கொடி மூங்கில்மேல் ஏற்றப்பட்டிருந்தது. “இப்பகுதியே மருத்துவநிலைகளால் ஆனது என்று அங்கே படைமுகப்பில் நின்றால் தெரியுமா?” என்று அவன் கேட்டான். “அங்கிருந்து தெரியாது…” என்றார் வக்ரர். “அங்கிருந்தே தெரியும்படி இங்கு ஓர் அடையாளம் வேண்டும். உயரமான இரு மூங்கில்கள் நடுவே மிகப் பெரிய பட்டம் ஒன்று இங்கே தொங்கவேண்டும். ஏனென்றால் போர் தொடங்கியபின் திசைகள் அழிந்துவிடும் என்று கேட்டிருக்கிறேன்” என்றான். வக்ரர் தலைவணங்கினார்.

வண்டிகளில் இருந்து கந்தகப்பொடியை பெரிய மூட்டைகளில் இறக்கிக்கொண்டிருந்தார்கள். அழுகிய ஊன் வாடையுடன் இருந்த அப்பகுதியெங்கும் பணியாளர்கள் மூக்கில் துணிகளை கட்டியிருந்தனர். பலகைகளை இறக்கிக்கொண்டிருந்த இடத்தை அடைந்து “இவை எதற்காக?” என்று அவன் கேட்டான். “போர்க்களத்தில் மஞ்சங்களுக்காக நிறைய இடம் தேவை. மஞ்சங்களை விரித்தால் மருத்துவரும் பிறரும் நெடுந்தொலைவு நடக்கவேண்டியிருக்கும். இவை நான்கடுக்கு மஞ்சங்கள். இருபுறமும் என எட்டு மஞ்சங்களால் ஆனது ஒரு கால்” என்றார் அங்கிருந்த முதிய ஏவலர். பெரிய பீதர்நாட்டு தாழிகள் இறக்கி வைக்கப்பட்டன.

“பெரும்பாலான மருந்துகளை உலர்த்தி இடித்து பொடிகளாகவே கொண்டுவந்துள்ளோம். நீரை கொதிக்கவைத்து பிழிசாறாக மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்” என்று அவனுடன் வந்தபடி சந்திரர் சொன்னார். புண்ணில் கட்டு போடுவதற்குரிய வாழையிலைச் சருகுகள், நார்கள். கட்டுகளை ஒட்டுவதற்குரிய அரக்கும் சுண்ணப்பொடியும் தேன்மெழுகும் பெரிய உருளைகளாகவும் தட்டுகளாகவும் இறக்கி அடுக்கப்பட்டன. “முதன்மையான மருந்து அகிபீனாதான். கரும்பசையாகவும் இலைப்புகையாகவும். புண்பட்டோர் வலிமறப்பர், இறப்பவர் இனிய நினைவுகளில் திளைத்து கடந்துசெல்வர்” என்று சந்திரர் சொன்னார்.

அகிபீனா அடங்கிய மரப்பெட்டிகளை ஏவலர் கொண்டுசென்று தோல்கூடாரத்திற்குள் அடுக்கிக்கொண்டிருந்தார்கள். “மது?” என்று ஸ்வேதன் கேட்டான். “அது உணவுடன் அளிக்கப்படுகிறது. போரின்போது காலையில் அதில் ஃபாங்கத்தின் இலைகளும் அரைத்து கலக்கப்படும்” என்றார் சந்திரர். வண்டிகளின் அருகே நின்றிருந்த பிரகதர் வந்து வணங்கினார். “அனைத்து வண்டிகளும் வந்துசேர்ந்துவிட்டனவா?” என்றான். “அங்கிருந்து கிளம்பிய வண்டிகளின் எண்ணிக்கை நம்மிடம் இல்லை. வெவ்வேறு நாடுகளின் தலைநகர்களிலிருந்து வந்து ஒருங்கிணைந்தவை. இனி அவர்களிடம் கணக்கு கோருவதும் இயல்வதல்ல.” ஸ்வேதன் “சரி, இங்கு வந்த வண்டிகள் அனைத்துக்கும் ஒரு கணக்கு எடுக்கவியலுமா?” என்றான். பிரகதர் “அதற்கான பொழுது இப்போதில்லை” என்றார்.

ஸ்வேதன் “அப்படியென்றால் என்னதான் செய்யமுடியும்?” என்றான். “கோருமிடமெல்லாம் முடிந்தவரை வண்டிகள் சென்றுசேரும்படி செய்யலாம்” என்றார். “ஆம், அதை செய்யவேண்டும். ஆனால் கணக்கு இல்லாவிட்டால் நாம் வண்டிகளுக்காக பரிதவிப்போம். கட்டுப்பொருட்குவைகளிலோ படைக்கலத்திரளிலோ எவராலும் அறியப்படாமல் வண்டிகள் வெறுமனே கிடக்கும். அவை மருத்துவநிலை வண்டிகள் என்பதை நம்மால் மட்டுமே அடையாளம் காணமுடியும்” என்றான். பிரகதர் பேசாமல் நின்றார். “வண்டிகளின் அளவுள்ள எந்த பொருட்குவை எங்கிருந்தாலும் மருத்துவச்சூதர் ஒருவர் சென்று அங்கே வண்டிகள் உள்ளனவா என்று நோக்கிவரவேண்டும்” என்று அவன் ஆணையிட்டான். அவர் தலைவணங்கினார். “மருத்துவப்பொருட்கள் உணவுப்பொருட்களுடன் கலந்து சென்றிருக்க வாய்ப்புண்டு. மருத்துவர்குழு ஒன்று சென்று அனைத்து உணவுநிலைகளையும் நோக்கிவரவேண்டும். அவர்களுக்கு அதற்கு உரிமையளிக்கும் ஆணையோலையை நான் அளிக்கிறேன். எங்கும் எப்பொருளும் வீணாக கிடக்கலாகாது” என்றான் ஸ்வேதன். பிரகதர் மீண்டும் தலைவணங்கி “ஆணைப்படியே” என்றார்.

அவன் மருத்துவநிலையை சுற்றி முடித்தபோது வெயில் இறங்கத் தொடங்கியிருந்தது. பொதிகளிலிருந்து வந்த வெவ்வேறு மணமுள்ள பொடிகளினால் அவன் உடல் மெல்லிய ஆடையால் என போர்த்தப்பட்டிருந்தது. மீசையிலும் தாடியிலும் பொடி படிந்து அவை முட்கள்போல தோன்றின. படைகளில் நீராட்டு தடைசெய்யப்பட்டிருந்தது. குடிலுக்குச் சென்று மரவுரியால் உடலை அடித்துத் துடைத்து தூய்மை செய்துகொள்ளலாம் என்று தோன்றியது. கிளம்பும்போது “நான் நாளை காலை வருகிறேன். ஆணையோலைகளை இரவுக்குள் என் குடிலுக்கு வந்து வாங்கிச்செல்க!” என்றான். அமைச்சர்கள் வணங்கி சொல்லேற்றனர்.

மீண்டும் வண்டிகளை நோக்கி “இவற்றில் ஒரே தருணத்தில் எத்தனைபேர் ஏற்றி கொண்டுவரப்படுவார்கள்?” என்றான். “இருவர், இளவரசே” என்றார் பிரகதர். “உடல்கள் என்றால்?” என்றான். “உயிரற்ற உடல்களை புண்பட்டோர் முழுமையாக எடுத்துக்கொண்டு வரப்பட்ட பின்னர் இறுதியாகவே எடுப்பார்கள். அதற்கான வண்டிகள் வேறு. அவை நம்முடன் தொடர்புடையவை அல்ல” என்றார் பிரகதர். “அப்பணியை செய்யும் தொழும்பர்கள் பன்னிரண்டாயிரம் பேர் தனியாக வந்துள்ளனர். அவர்கள் நமக்கும் பின்னால் குறுங்காடுகளின் ஓரமாக தங்கியிருக்கிறார்கள். அவர்கள் எருமைகள் இழுக்கும் மாட்டுவண்டிகளை வைத்திருக்கிறார்கள். ஒரு வண்டியில் ஒன்றன்மேல் ஒன்றென நூறு உடல்களைக்கூட ஏற்றுவார்கள். எரிப்பதும் புதைப்பதும் அவர்களின் பொறுப்பு. ஒருநாளுக்கு ஐம்பதாயிரம் உடல்களை அவர்களால் இங்கிருந்து நீக்கி கொண்டுசென்று மண்ணிலும் தீயிலும் மறைவுசெய்ய முடியும்.” ஸ்வேதன் பெருமூச்சுவிட்டான். “அவர்களுக்கான பொறுப்பை சிகண்டித்தேவருக்கு அளித்திருக்கிறர்கள். அவரும் அவர்களுடன் அங்குதான் பாடிவீடமைத்து தங்கியிருக்கிறார்” என்றார் வக்ரர்.

அவன் புரவியில் தொற்றியவன்போல அமர்ந்திருந்தான். உடலெங்கும் களைப்பு மிகுந்திருந்தது. ஒவ்வொரு தசையும் தொய்ந்திருந்தது. இறுதியாக அந்த சடலங்களைப் பற்றி கேட்டிருக்காவிடில் அத்தனை களைப்பு இருந்திருக்காதோ என அவன் எண்ணிக்கொண்டான். எவ்வண்ணமேனும் தன் குடில்வரை சென்றால்போதும் என்று தோன்றியது. குதிரையின் ஒவ்வொரு அடிவைப்பும் உடலில் அதிர்வாகி நெஞ்சில் பட்டது. கண்களை மூடினால் புரவியிலிருந்தபடியே துயில்கொண்டுவிடுவோம் என்று தோன்றவே இமைகளைத் தூக்கி தலையை இறுக்கி நிறுத்திக்கொண்டான்.

“மூத்தவரே!” என்ற ஓசை கேட்டு அவன் திடுக்கிட்டு விழித்தான். அப்போது குலாடபுரியில் இருப்பதாகவே தோன்றியது. சங்கன் புரவியில் விரைந்து வந்தான். மூச்சிரைக்க நின்று பெரிய பற்கள் தெரிய சிரித்தபடி “நான் குடிலுக்கு சென்றிருந்தேன்… அங்கு நீங்கள் இல்லை. எங்கு சென்றீர்கள் என்று அறியாமல் வந்தபோது உங்களை கண்டேன்…” என்றான். ஸ்வேதன் “எப்படி இருக்கிறாய்?” என்றான். “நலமாக. நான் எப்போதுமே இளைய பாண்டவரின் கூடவே இருக்கிறேன். அவர் என்னை எருமை என்கிறார்.” ஸ்வேதன் புன்னகைத்து “ஏன்?” என்றான். சங்கன் நாணி “தெரியவில்லை. ஆனால் அவரை நான் மாருதரே என்று அழைக்கிறேன். மெய்யாகவே அவர் மாருதியின் மைந்தர். சொன்னால் நம்பமாட்டீர்கள். நேற்று ஒரு பெரிய குரங்கு அருகிருக்கும் காட்டிலிருந்து வந்துவிட்டது. அடுமனைக்கு வெளியே அவர் அமர்ந்து உண்டுகொண்டிருந்தார். நான் பரிமாறினேன். அருகே விறகுக்குவியல் என எண்ணி திரும்பிநோக்கினேன். பெருங்குரங்கு. தாட்டான். என்னை நோக்கி பல்காட்டி சீறி உணவுபோடு மூடா என்றது. நான் தாலமிட்டு உணவை பரிமாறினேன். அவருக்கு இணையாக அமர்ந்து உருட்டி உண்டது. அவர் என்னிடம் அதற்கு காரம் மட்டும் அளிக்கலாகாது என்றார். அவர் அந்த மாருதரிடம் உரையாடுகிறார். ஆம், மாருதமொழியில் உரையாடுகிறார். இருவரும் சிரித்துக்கொள்கிறார்கள்” என்றான்.

“அவர் உன்னிடம் அன்பாக இருக்கிறாரா?” என்றான் ஸ்வேதன். “தெரியவில்லை… ஆனால் அவரிடம் அனைவரும் அன்பாக இருக்கிறார்கள்” என்றான் சங்கன். “அன்பானவரிடம் மட்டும்தானே பிறர் அனைவரும் அப்படி இருப்பார்கள்?” ஸ்வேதன் புன்னகைத்தான். “மூத்தவரே, நான் படைமுகப்பை பார்க்கச் செல்கிறேன். வருகிறீர்களா?” என்றான் சங்கன். “படைமுகப்பையா? இந்நேரத்திலா? நான் களைத்திருக்கிறேன்” என்று ஸ்வேதன் சொன்னான். “இப்போது பார்த்தால்தான்… ஒருவேளை நாளையே போர் தொடங்கிவிட்டால் படைமுகப்பை நம்மால் பார்க்கவே முடியாமலாகலாம். ஆகவே தவறவிடக்கூடாது என்று கிளம்பினேன். இது ஓய்வுக்குரிய பொழுது. ஆகவே எவரும் தடைசொல்லமுடியாது… வருக!”

ஸ்வேதன் மறுப்பதற்குள் அவன் ஸ்வேதனின் புரவியின் கடிவாளத்தைப் பிடித்து திருப்பினான். “நான் இன்னொரு நாள்…” என சொன்னதை அவன் கேட்கவில்லை. அவனே ஸ்வேதனின் புரவியையும் தட்டி விரைவுகொள்ளச் செய்தான். பெருஞ்சாலை நேராகவே படைமுகப்பு நோக்கி சென்றது. அவர்கள் சென்ற பாதை முழுக்க பலகையிடப்பட்டிருந்தமையால் புரவிகள் ஓசையுடன் எளிதாக ஓடின. “வண்டிப்பாதை… குளம்புகளுக்கும் ஏற்றது” என்றான் சங்கன். “அங்கே என்ன ஓசை?” என்றான் ஸ்வேதன். “விளையாட்டு… எவரோ படைப்பயிற்சி எடுக்கிறார்கள்” என்றான் சங்கன். “படைப்பயிற்சியா? இங்கா?” என்று ஸ்வேதன் கேட்டான். “படையாசிரியர்கள் கொடியவர்கள். கடமையுணர்ச்சியை உடலுக்குள் இரும்புக்கம்பியாக குத்தி செலுத்திவிடுவார்கள்” என்றான் சங்கன்.

இரு படைகளின் நடுவே இருந்த திறந்தவெளியில் படைகள் ஒன்றையொன்று நோக்கி நின்றிருந்தன. காட்டுக்கு நடுவே பெருநதிபோல இருபுறமும் படைவிளிம்புகள் வேலிபோல் எல்லையிட்டிருக்க அந்தச் செம்மண்வெளி கிடந்தது. அதன் விளிம்பில் உபபாண்டவர்கள் படைக்கலப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அது முன்னரே விளையாட்டாக மாறிவிட்டிருந்தது. சுருதகீர்த்தி சதானீகனின் வாளை அம்பால் அடித்து தெறிக்கவிட்டான். அவன் அதை எடுக்கச் செல்லும்தோறும் அது அம்பு பட்டு துள்ளித் தெறித்தது. சுதசோமன் அதை நோக்கி சிரித்துக்கொண்டிருந்த சர்வதனை தூக்கிச் சுழற்றி வீசினான். அங்கே சிரித்துக்கொண்டும் கூச்சலிட்டுக்கொண்டும் இருந்த இளவரசர்கள் பலரை ஸ்வேதன் அறிந்திருக்கவில்லை. சர்வதன் சுருதசோமனை துரத்திப்பிடிக்க அவர்கள் தரையில் புரண்டு மற்போரிட்டனர்.

மறுபக்கம் கௌரவப்படையின் அருகில் உபகௌரவர்கள் படைபயின்றுகொண்டிருந்தார்கள். அங்கே நின்றிருந்த லட்சுமணன் இடையில் கைவைத்து நின்று அவர்கள் விளையாடுவதை நோக்கினான். சுதசோமன் மரத்தாலான ஒரு தலைக்கவசத்தை தூக்கி வீசி காலால் உதைத்து அவனை நோக்கி செலுத்தினான். லட்சுமணன் சிரித்தபடி அதை திரும்ப உதைத்து அவர்களை நோக்கி செலுத்தினான். உடன் துருமசேனன் வந்து சேர்ந்துகொள்ள சர்வதன் அந்தக் கவசத்தை திரும்ப உதைத்து செலுத்தினான். சங்கன் “அவன் பெயர் துருமசேனன். துச்சாதனரின் மைந்தன்…” என்று கூவினான். தலைக்கவசம் பந்துபோல இருபக்கமும் பறந்தது. சர்வதன் கூவிநகைத்தபடி களத்தில் இறங்கி ஓட இருபக்கமிருந்தும் இளையோர் ஓடிவந்தனர். சில கணங்களில் அந்த தலைக்கவசம் ஒரு பந்தென்றாக அங்கே களிப்பும் பாய்ச்சலுமாக விளையாட்டு ஒன்று தொடங்கியது.

“வருக, மூத்தவரே!” என்று கூவியபடி சங்கன் இறங்கி ஓடினான். சில கணங்கள் தயங்கிவிட்டு ஸ்வேதனும் இறங்கி ஓடி அந்த விளையாட்டில் கலந்துகொண்டான். இருபக்கமிருந்தும் இளவரசர்கள் வந்து சேர்ந்துகொண்டே இருந்தார்கள். மேலும் பல தலைக்கவசங்கள் காற்றில் பறக்கலாயின. பல குழுக்களாகப் பிரிந்து அவர்கள் உடற்கொப்பளிப்பும் கூச்சல்அலைகளுமாக விளையாடினார்கள்.

முந்தைய கட்டுரைஅச்சம் என்பது….
அடுத்த கட்டுரைசுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்