‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 50

புஷ்பகோஷ்டத்தின் மூன்றாவது மாடத்தில் சற்று வெளியே நீட்டியிருந்த சிறிய மரஉப்பரிகையில் பானுமதி அசலையுடன் அமர்ந்திருந்தாள். வெளியே இருந்து நோக்குபவர்களுக்கு உள்ளிருப்பவர்கள் தெரியாதபடி மென்மரத்தாலான மான்கண் சாளரம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நெடுநேரம் அமர்ந்திருப்பது கடினம். பீடங்கள் குறுகலானவை. மூன்று பேர் இயல்பாக அமர்ந்திருக்கும் அளவுக்கே அதன் அமைப்பிருந்தது. ஆனால் அங்கிருந்து கீழிருக்கும் முற்றத்தையும் அப்பால் இருக்கும் கோட்டைச்சுவர் வரை விரிந்த காவலர்வெளிகளையும் அரண்மனையின் இடைநாழியையும் தெளிவாக பார்க்க முடிந்தது. முன்பு அரசியர் வந்தமர்ந்து கீழே நிகழும் காவலர்படைகளின் அணிவகுப்புகளை பார்க்கும் பொருட்டு அது அமைக்கப்பட்டது. பின்னர் அஸ்தினபுரியின் படைகளின் எண்ணிக்கை பெருகுந்தோறும் அணிவகுப்பு நிகழுமிடம் அரண்மனையிலிருந்து அகன்று சென்று கோட்டையின் கிழக்குப் பெருமுற்றத்தில் நிகழ்வதாக மாறியது. போர்க்களியாட்டுகளும்கூட செண்டுவெளிக்கு சென்றுவிட்ட பின்னர் அந்த உப்பரிகை பெரும்பாலும் எவராலும் பயன்படுத்தப்படாததாக இருந்தது.

போர் அணுகும்தோறும் ஒவ்வொருநாளும் ஏதேனும் சிறு நிகழ்ச்சிகள் அரண்மனையில் நிகழத்தொடங்கிய பின்னர் பானுமதி அந்த உப்பரிகையை தூய்மை செய்து செப்பனிடும்படி ஆணையிட்டிருந்தாள். அங்கிருந்த பீடத்தின் பலகைகள் சற்றே விரிசலிட்டு பழையதாகிவிட்டிருந்தன. மான்கண் சாளரங்களில் தூசியும் ஒட்டடையும் படிந்திருந்தன. ஒரு மாதம் முன்பு அவள் அவ்வழியே பழைய ஏடுகள் இருந்த மாடத்து அறை ஒன்றிற்குச் செல்லும்போது கீழே மங்கல இசை கேட்க அங்கு சென்று கீழே நோக்கினாள். மாளவஅரசர் இந்திரசேனரை துச்சாதனனும் கௌரவ இளையோர் பன்னிருவரும் எதிர்கொண்டு முறைமைகள் முடித்து திருதராஷ்டிரரை பார்க்கும்பொருட்டு அரண்மனைக்குள் அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். முதல் முறையாக அனைத்திலிருந்தும் விலகி நோக்கிக்கொண்டிருப்பதான உணர்வை அவள் அடைந்தாள்.

மாளவர் தனது பதினெட்டு அமைச்சர்களுடனும் இரண்டு மைந்தர்களுடனும் படைத்தலைவர்கள் பதினெண்மருடனும் வந்திருந்தார். மூன்று நிரைகளாக மங்கலச் சேடியரும் இசைச்சூதரும் வர அவர்களுக்கு முன்னால் மாளவத்தின் கொடியேந்தி படைவீரன் வந்தான். அவர்களை வரவேற்கும் பொருட்டு புஷ்பகோஷ்டத்தின் இருபுறமும் அஸ்தினபுரியின் படைத்தலைவர்களும் காவலர்தலைவர்களும் முழுக் கவச உடையுடன் அணிவகுத்திருந்தனர். அஸ்தினபுரியின் கொடியேந்திய வீரன் சென்று அதை மும்முறை சுழற்றி வணங்கினான். அவனைத் தொடர்ந்து சென்ற மங்கல இசைச்சூதரும் அணிச்சேடியரும் இருபக்கங்களிலாக விலக துச்சாதனன் கைகூப்பியபடி முன்னால் சென்று மாளவ அரசரின் கைகளைப்பற்றி வணங்கி முகமனுரைத்தான். துர்மதனும் துச்சலனும் துச்சகனும் சுபாகுவும் அவர் அருகே சென்று முகமனுரைத்தனர். அந்நிகழ்வின் பயிற்றுவிக்கப்பட்ட அசைவுகளும் தேர்ந்த முக நடிப்புகளும் படைவீரர்களின் ஒத்திசைவுகொண்ட நடையும் ஒரு பொருத்தமற்ற கூத்தென அங்கிருந்தபோது தோன்றியது. அந்த உணர்வை அவள் விரும்பினாள். அவள் சென்று பங்கெடுக்கத் தேவையற்ற நிகழ்வுகளை அங்கு சென்று அமர்ந்திருந்து பார்ப்பது அவள் வழக்கமாயிற்று.

அசலை ஓரிருமுறை அவளுடன் வந்து அமர்ந்திருந்தாள். அவளுக்கு நெடுநேரம் மான்கண் சாளரத்திலிருந்து கீழே பார்க்க இயலவில்லை. “ஒரு கண்ணினூடாக நோக்குகையில் தெரிவது ஒரு பகுதி. பிறிதொரு கண்ணில் பிறிதொரு பகுதி. ஒவ்வொன்றும் தனித்தனியாக எனக்கு தெரிகிறது. என்னால் ஒன்றென தொகுத்துக்கொள்ள முடியவில்லை, அக்கையே” என்று அவள் சொன்னாள். தாரை ஒருமுறைதான் அங்கு வந்தாள். மான்கண் சாளரத்தினூடாக நோக்கியபின் “என்ன இது? வௌவால்களைப்போல அனைவரும் தலைகீழாக தொங்கிக்கிடக்கிறார்கள். என்னால் இதைப் பார்த்து அமர்ந்திருக்க இயலவில்லை. சலிப்பாக இருக்கிறது” என்றாள். “சலிப்பா பொறுமையின்மையா?” என்று அவள் கேட்க “இரண்டும்தான். மானுடர் இவ்வாறு தலைகீழாக தொங்கிக்கிடப்பதை பார்க்கையில் அதில் என்ன மகிழும்படி இருக்கிறது?” என்றாள். பானுமதி வேண்டுமென்றே “ஏன் வௌவால்களை பார்க்கும்போது மகிழ்ச்சி வரவில்லையா?” என்று கேட்டாள். “வௌவால்களையா? அவற்றின் முகத்தை அருகிலிருந்து பார்க்கையில் ஒரு திடுக்கிடல் ஏற்படுகிறது. சிறிய நாய்க்குட்டிகள்போல தோன்றுகிறது” என்று அவள் சொன்னாள். “அவற்றுக்கு கீழே புவியில் நடப்பது தெரியாது என்று தோன்றவில்லையா? அவற்றின் சிறு மணிக்கண்களில் ஒரு திகைப்பு எப்போதும் உள்ளதே?” என்று பானுமதி கேட்டாள்.  “எனக்கு தோன்றவில்லை. நீங்கள் பேசும் இத்தகைய அணிச்சொற்கள் எனக்கு புரிவதுமில்லை” என்று தாரை சொன்னாள்.

கீழே கொம்பொலி எழுந்தது. அஸ்தினபுரியின் இரண்டு வேலேந்திய படைப்பிரிவுகள் முற்றத்தின் இரு எல்லைகளிலிருந்து சீரான ஒத்திசைவுகொண்ட நடையுடன் நீண்டு வந்து அம்முற்றத்தை வளைத்து வேலி போலாயின. அவர்கள் அனைவரும் இரும்புக்கவச உடையணிந்து புலரியின் பந்த ஒளியில் செவ்வலைகளாக நெளிந்துகொண்டிருந்தனர்.  கையில் சிறுகொம்பு ஏந்திய படைநடத்துனர்கள் அதை முழக்கி ஆணைகளை உரக்க கூவினர். அதற்கேற்ப படைவீரர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி நான்கு அணிகளாகப் பிரிந்து நான்கடுக்குச் சூழ்கையாக மாறினர். முற்றத்தின் நடுவே பெரிய மூங்கில் கம்பத்தில் அஸ்தினபுரியின் அமுதகலக் கொடி பறந்தது. அதன் படபடப்பின் ஓசை கேட்கும் அளவுக்கு சாளரத்திற்கு இணையான உயரத்தில் இருந்தது. அக்கொடிக்குக் கீழே அவர்கள் அனைவரும் செய்து கொண்டிருந்த அனைத்தும் அந்தக் கொடியை மேலே பறக்கவிடுவதற்காகவே என்று அவள் எண்ணிக்கொண்டாள். அல்லது ஒற்றைச் சிறகுள்ள அறியாத பறவை ஒன்றுபோல அது அவர்களை அந்த முற்றத்துடன் பெயர்த்தெடுத்துக்கொள்ள முயல்கிறது.

கீழே முழவுகள் ஒலிக்க அணிஏவலர் வண்ணத் தலைப்பாகைகளும் கச்சைகளும் அணிந்து அரண்மனைக்குள் இருந்து மூன்று நிரைகளாக வந்து முற்றத்தை நிரப்பினர். தொடர்ந்து மங்கல இசைச்சூதர்கள் வந்து முற்றத்தின் மேற்குப் பகுதியில் அரைவட்ட வடிவமாக அணி கொண்டனர். முழுதணிக்கோலத்தில் சேடியர் தாலங்களுடன் வந்து கிழக்குத் திசையில் அரைவட்டமாக நிரைவகுத்தனர். மீண்டுமொரு முறை முரசு ஒலித்து அமைந்தது. கனகர் படிகளில் இறங்கி பதறும் உடலோடு முற்றத்தை அடைந்து அங்கு நின்ற அனைவரிடமும் ஆளுக்கொரு ஆணையை பிறப்பித்தார். மீண்டும் பதறியபடி அரண்மனைக்குள் ஓடினார். அரண்மனைக்குள்ளிருந்து மனோதரர் விரைந்து வெளியே வந்து மேலும் ஆணைகளை பிறப்பித்தார். அவர் மீண்டும் அரண்மனைக்குள் செல்லும்போது வெளியே வந்த கனகர் மனோதரரிடம் கைகளை அசைத்து சினமோ பதற்றமோ கொண்டவர்போல ஏதோ சொன்னார். மனோதரர் இறங்கி வெளியே ஓடி முற்றத்தைக் கடந்து கோட்டைமுகப்பிலிருந்த காவல்மாடத்தை நோக்கி சென்றார். கனகர் மீண்டும் அரண்மனைக்குள் செல்ல அங்கு நின்றிருந்த படைவீரர்கள் அவர்களின் அசைவுகளை தலையசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

உள்ளிருந்து நிமித்திகன் ஒருவன் வெளியே வந்து மங்கல இசைச்சூதரையும் அணிச்சேடியரையும் பார்த்தான். அவனும் கனகரும் படிக்கட்டில் நின்றே பேசிக்கொண்டிருந்தனர். அசலை அப்பால் முதுசேடி வருவதைக்கண்டு “அவள் வரவில்லை” என்று பானுமதியிடம் சொன்னாள். பானுமதி திரும்பிப்பார்த்தாள். சேடி பானுமதியின் அருகே வந்து “மச்ச நாட்டரசி நோயுற்றிருக்கிறார், எழ முடியவில்லை என்று சொன்னார்” என்றாள். பானுமதி ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தாள். அசலை “நீ பார்த்தாயா?” என்றாள். சேடியின் விழிகள் சற்றே மாறுபட “இல்லை. அவர்களின் அணுக்கச் சேடி வந்து என்னிடம் சொன்னாள். அதற்கு அப்பால் நான் எதுவும் கேட்கும் வழக்கமில்லை” என்றாள். அசலை அவள் செல்லலாம் என்று கையசைத்தாள்.

கீழே கொம்போசை கேட்டது. நிமித்திகர் குழுவொன்று வெளியே வந்தது. தலைமை நிமித்திகன் கையில் திருமுகச் சுருளுடன் முன்னால் செல்ல அவனைத் தொடர்ந்து பிறர் நடந்து முற்றத்தில் சென்று நின்றனர். தலைமை நிமித்திகன் வானை நோக்கி விண்மீன்களை கணிக்கத் தொடங்கினான். சூழ்ந்திருந்த நூற்றுக்கணக்கான பந்தங்கள் காற்றே அற்ற முதற்புலரி இருளுக்குள் மெல்லிய அசைவுகளுடன் நின்றிருந்தன. முதற்பறவை எங்கோ குரலெழுப்பியது. கரிச்சானின் குரல் செவியை கீறுவது. அந்தப் பறவை முழவில் கைஓட்டியதுபோல கார்வையுடன் கூவியது. அரண்மனையின் கூரைவிளிம்புகளில் அமர்ந்திருந்த புறாக்களின் குறுகலோசை கேட்டுக்கொண்டிருந்தது. உப்பரிகையின் அடிப்பகுதியிலேயே மரக்கூரை விளிம்பு முழுக்க சங்குகளை அடுக்கி வைத்ததுபோல் அவை உடல் குறுகி அமர்ந்திருந்தன.

முதல்நாள் அங்கு வந்திருந்தபோது அவை எழுப்பிய ஒலியை அவளால் அடையாளம் காணமுடியவில்லை. நூற்றுக்கணக்கான புறாக்களின் குறுகலோசைகள் இணைந்து சிம்மக்குரல் போலவே மாறிவிட்டிருந்தது. அவள் கையிலிருந்த சிறுகலமொன்று மரத்தரையில் விழுந்தபோது எழுந்த ஓசையில் அவையனைத்தும் ஒரே கணத்தில் சிறகடித்து காற்றில் எழுந்தபோதுதான் அது புறாக்களின் ஒலி என்று அவளுக்கு தெரிந்தது. சருகுப்புயலென புறாக்கள் காற்றில் கலைந்து சுழன்று நீரில் இழுபடும் மெல்லிய ஆடைபோல வளைந்து மீண்டும் வந்து கூரை விளிம்புகளில் அமைந்தன. புறாக்களின் ஒலி முன்பு அவளுக்கு அங்கிருந்த அமைதியை குலைப்பதாகத் தோன்றியது. ஆனால் அவற்றை அங்கிருந்து பெயர்க்க முடியாதென்று அவள் அறிந்திருந்தாள். ஹஸ்தியால் அவ்வரண்மனை கட்டப்பட்டபோது அங்கு குடியேறிய புறாக்களின் வழித்தோன்றல்கள். ஒருவகையில் அங்கு குடியிருக்கும் எந்த அரசரைவிடவும் அவ்வரண்மனைமேல் உரிமை கொண்டவை. பின்னர் அவள் அப்புறாக்களின் ஓசையை அங்கிருந்த அமைதியின் பிரதியாக மாற்ற உளம்பயின்றாள். கீழே தெரியும் சிறு சாளரத் துளையினூடாக அரிதாக புறாக்களின் உருவங்கள் தெரியும். சிறிய சிவந்த மணிகளைப் போன்ற விழிகள். அவை நோக்கு கொண்டனவா என்றே ஐயம் எழும். கீழிருக்கும் எதையும் அவை அறியவில்லை என்பதுபோல் தோன்றும். அங்கு தங்களுக்கான உணவுக்காக மட்டுமே சென்று மீள்கின்றன. அந்த மாடத்தில் அமர்ந்திருக்கையில் தன்னையும் அப்புறாக்களில் ஒன்றாக அவள் உணரத்தொடங்கினாள்.

பானுமதி ஓய்வாக உணர்ந்தாள். அன்று காலையுடன் அனைத்துப் பணிகளும் முடிவடைந்தன என்றும் வெறுமனே ஒரு மரப்பீடம்போல அரண்மனையில் இருப்பதைத்தான் இனி செய்துகொண்டிருக்கப் போகிறோம் என்றும் தோன்றியது. உடல் பீடத்துடன் படிந்து தசைகள் தொய்ந்து மூச்சு துயிலுக்கிணையாக சீரடைந்திருந்தது. உடல் ஓய்வுகொண்டதனால் உள்ளமும் விசையை இழந்து மெல்ல ஓடிக்கொண்டிருந்தது. உள்ளமும் ஆறுகளை போலத்தான். விசை குறைந்ததுமே பக்கவாட்டில் கிளைவிட்டு பிரிந்து அகலத் தொடங்கிவிடுகிறது. அசலையின் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் விழுந்திருந்தன. கீழிமைகள் மடிப்புகளாக தெரிந்தன. சிலநாட்களிலேயே அவள் பல்லாண்டுகளின் முதுமை கொண்டிருந்தாள். தன் முகமும் அவ்வண்ணம்தான் இருக்கும் போலும்.

கீழே மீண்டும் கொம்போசை எழுந்தது. அசலை மான்கண் துளையினூடாக பார்த்து “இளவரசர்கள்!” என்றாள். பானுமதி கீழே நோக்கி “ஆம்” என்றாள். லட்சுமணனின் தலைமையில் அரண்மனைக்குள்ளிருந்து உபகௌரவர்கள் வெளிவரத் தொடங்கினர். நான்கு இணைநிரைகளாக அவர்கள் சீர்நடையிட்டு வந்து முற்றத்தில் இறங்கி பதினெட்டு அடுக்குகளாக மாறி வெளிநிறைந்து நின்றனர். அசலை தன் மைந்தனை அடையாளம் கண்டாள். “துருமசேனன்” என்றாள். பானுமதியிடம் “அவர்கள் இதை எப்படி கற்றுக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. தந்தையின் அதே அசைவுகளை கொண்டிருக்கிறான்” என்றாள். பானுமதி “நன்று! தந்தையைப்போலன்றி தன் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டிருக்கிறான்” என்றாள். அசலை புன்னகைத்தாள்.

உபகௌரவர்கள் உள்ளிருந்து உடல்பெருக்காக ஒழுகி படிகளில் இறங்கி வந்து அம்முற்றத்தை நிரப்பிக்கொண்டே இருந்தனர். அனைவரும் இரும்புக்குறடுகளும் கைகளிலும் தொடைகளிலும் குழல்கவசங்களும் முதுகிலும் நெஞ்சிலும் இரும்பாலான வலைக்கவசங்களும், வெள்ளித்தகடிட்ட இரும்புத் தோளிலைகளும் அணிந்திருந்தனர். தலைக்கவசங்கள் அவர்களின் முதுகுக்குப் பின்னால் தொங்கியவைபோல கிடக்க தோல்வாரால் இழுத்துச் சுருட்டி கொண்டையென கட்டப்பட்ட தலைமயிர் உச்சந்தலையில் குவையாக அமைந்திருந்தது. அவற்றில் கொற்றவை ஆலயத்து செம்மலர்களை சூடியிருந்தனர். நெற்றிகளில் செங்குழம்புத் தீற்றல். அனைத்து முகங்களும் ஒன்றென்று தோன்றின. ஒரே உணர்வுகள், ஒரே விழியசைவுகள்தான் அவற்றில் இருக்குமென்று அவள் எண்ணினாள். அவர்கள் பெருந்திரளென ஆனதனாலேயே ஒருவரோடொருவர் மாறுபாடின்றி ஆகிவிட்டிருந்தனர். நூற்றுவர் என்பதனாலேயே கௌரவர்கள் ஒற்றைத்திரளென ஆனதுபோல. பாண்டவர்போல் ஐவரென்று இருந்தால் ஐந்து தனிஇயல்புகள் கொண்டவர்களாக இருந்திருக்கக் கூடும்.

அரண்மனைக்குள் கொம்போசையும் வாழ்த்துக்களும் எழுந்தன. அவ்வோசை அரண்மனையின் வாயில்கள் மற்றும் சாளரங்கள் வழியாக முற்றத்தில் பெருகி அங்கு சுழன்று மேலெழுந்தமையால் உப்பரிகையில் அமர்ந்து கேட்டபோது நேர் எதிர்த்திசையில் சாலையிலிருந்து பெருமுற்றம் நோக்கி திறக்கும் கோட்டை வாயிலின் வழியாக எழுவதாகத் தோன்றியது. அசலை “அங்கிருந்தா?” என்று இயல்பாக கேட்டபடி மான்கண் சாளரத்தினூடாக கீழே பார்த்தாள். அரண்மனைக்குள்ளிருந்து அஸ்தினபுரியின் அமுதகலக் கொடியுடன் முழுக்கவச உடையணிந்த வீரன் சீர்நடையிட்டு வெளியே இறங்கி முற்றத்தில் நடந்து கொடியை தரையில் ஊன்றி முழந்தாளிட்டு பிடித்துக்கொண்டான். தொடர்ந்து துரியோதனனின் அரவு பொறித்த போர்க்கொடியுடன் இன்னொரு வீரன் வந்தான். மங்கலத் தாலங்கள் ஏந்திய சேடியர் இரண்டு நிரைகளாக முன்னால் வந்தனர். தொடர்ந்து துச்சாதனனும் துர்மதனும் இருபுறமும் தொடர துரியோதனன் கைகூப்பியபடி வந்து படிகளிலிறங்கி முற்றத்தின் மையத்தை நோக்கி சென்றான்.

துரியோதனன் பொற்தகடு வேயப்பட்ட இரும்பு மார்புக்கவசமும் தொடைக்காப்பும் தோளிலைகளும் அணிந்திருந்தான். அவனுடைய தலைக்கவசத்துடன் ஒரு வீரன் அணுக்கமாக நடந்து வந்தான். துச்சாதனனும் துர்மதனும் இரும்புக்கவசங்கள் அணிந்திருந்தாலும் அவர்களின் தலைக்கவசங்கள் மட்டும் பொன்தகடு வேயப்பட்டவையாக இருந்தன. தொடர்ந்து வந்த துச்சகனும் துச்சலனும் பீமவேகனும் சுபாகுவும் பந்த ஒளியில் சுடர்கொண்ட இரும்புக்கவசங்கள் அணிந்திருந்தனர். செந்நிற ஒளியில் இரும்புக்கவசங்களுக்கும் பொன்னுக்கும் வேறுபாடு தெரியவில்லை. துரியோதனன் கைகூப்பி நிகர்நிலையில் நின்றான். அவர்கள் உடல்களில் கவசங்களின் தழல்கள் மாற்றொளி கொண்டு அப்பகுதியெங்கும் காட்டெரி பெருகியதுபோல தெரிந்தது. மேலிருந்து பார்க்கையில் ஒரு கனலடுப்பை குனிந்து பார்க்கும் உணர்வேற்பட்டது.

படைத்தலைவர்களும் அமைச்சர்களும் முறையாக இருபுறமும் நிரைகொண்டனர். தொலைவானில் மெல்லிய ஒளி தெரிவதுபோல் ஒரு விழிமயக்கு ஏற்பட்டது. மிக ஆழத்திலெங்கோ கதிரவன் தன்னை உணரும் தருணம் அது என்பார்கள். வானில் ஒளி நனைந்து ஊறிப் பரவி முகில்களை துலங்கச்செய்யும். முதல்பறவை விழிகளில் அந்த ஒளி பட்டதும் அது எழுந்து சிறகடித்து செங்குத்தாக மேலே எழுந்து “எங்கோ வாழ்!” என்று வாழ்த்துக் குரல் எழுப்பும். ஒருநாள் ஒருகாட்டில் ஒருபறவை அதற்கென தேர்வு செய்யப்படுகிறது என்றன காவியங்கள். அப்பறவை அந்நாளில் முழுமை அடைகிறது. பின்பு அத்தருணம் அதற்கு அளிக்கப்படுவதில்லை.

பானுமதி கிழக்கு வான்விளிம்பையே நோக்கிக்கொண்டிருந்தாள். புலர்வதற்கு இன்னும் நெடுநேரம் இருக்கிறது, முதற்பறவைக் குரலையே சற்று முன்னர்தான் கேட்டோம் என்று அறிந்திருந்தாள். ஆயினும் அப்போது கதிர் எழ வேண்டுமென்று விரும்பினாள். சிறு குழவிபோல் விடாப்பிடியாக அவள் உள்ளம் அந்த விழைவை ஏந்தி விண்ணுடன் மன்றாடியது. ஒரு சிறு கதிர் எழுந்து ஒரு முகில்துளி ஒளிகொண்டால் போதும். கீழ்வானின் கோடி சற்று மின்னத்தொடங்கினாலே போதும். கீழே இருளில் அமைந்திருக்கும் மாளிகைச் சுவர்கள் மிளிர்ந்து தெளிந்தெழுந்தாலே போதும். அனைத்தும் சீராகிவிடுமென்ற ஓர் உறுதிப்பாட்டை அதிலிருந்து உருவாக்கிக்கொள்ள முடியும். ஒரு சிறு நம்பிக்கையை பற்றிக்கொள்ள முடியும்.

அவள் தன் வலக்கையை நெஞ்சோடு சேர்த்து விழிமூடி தெய்வங்களை வேண்டிக்கொண்டாள். “கதிரவனே! புவி முழுதாள்பவனே! ஒளிர்பவனே! அனைத்தையும் ஒளிரச் செய்பவனே! இத்தருணத்தில் உன் அருளில் ஒரு சிறுதிவலை என் மீது தெறிக்கட்டும். உன் நோக்கின் ஒருகணம் எனக்கு அருளப்படட்டும். இத்தருணம் எழில் கொள்ளட்டும். இதிலிருந்து நான் மீண்டெழுந்து இனியொரு வாழ்வை கடக்க வேண்டும். நான் செல்லும் பாதைகள் அனைத்திலும் ஒரு கூழாங்கல்லேனும் விழியொளி கொண்டிருக்க வேண்டும். இறையுருவே, அலகிலா வெளியின் அழகிய மைந்தனே, எனக்கருள்க! இத்தருணத்தில் இங்கெழுந்தருள்க!”

அவள் விழி திறந்தபோது அவ்வேண்டுதலின் விசையாலேயே உள்ளம் அதுவரை கொண்டிருந்த பதற்றங்களனைத்தையும் இழந்து அமைதி பெற்றிருந்தது. அது அவள் முகத்தில் தெரிந்தது. பெருமூச்சுடன் கீழே நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் விழிமூடி வேண்டியதையும் முகம் அமைதி கொள்ள இயல்படைந்து அமைந்ததையும் அசலை நோக்கினாள். ஆனால் எதுவும் கேட்கக்கூடாதென்று அவள் அறிந்திருந்தாள். கீழே மீண்டும் மங்கல ஓசையும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. அசலை “பேரரசர் எழுந்தருள்கிறார்” என்றாள். அரண்மனைக்குள்ளிருந்து அமுதகலக்கொடியுடன் முதல்வீரன் வெளிப்பட்டான். திருதராஷ்டிரரின் சர்ப்பக்கொடியுடன் பிறிதொருவன் வெளியே வந்து அமுதகலக்கொடிக்கு அருகே அதை ஊன்றி முழந்தாளிட்டான். மங்கலச்சேடியர் மூன்று நிரைகளாக வெளியே வந்து தாலம் உழிந்து விலகினர். இசைச்சூதர் ஐம்மங்கலக் கலங்களை முழக்கியபடி மறுபக்கமாக வளைந்தகன்றனர்.

சஞ்சயன் தோளில் கைவைத்தபடி திருதராஷ்டிரர் சிற்றடி எடுத்துவைத்து வெளியே வந்தார். நிமித்திகன் கைகளை ஓங்கி தாழ்த்த முற்றத்தில் நின்றிருந்த அனைத்து வீரர்களும் பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பினர். “யயாதியின் கொடிவழிவந்தவர் வாழ்க! குருகுலத்து மூத்தோர் வாழ்க! விசித்திரவீரியரின் மைந்தர் வாழ்க! புவியாளும் பேரரசர் திருதராஷ்டிரர் வாழ்க! அஸ்தினபுரியாளும் அமுதகலக்கொடி வெல்க! வெல்க அறம்! வெல்க குலம்! வெல்க குடி! வெற்றிவேல்! வீரவேல்!” அலையலையாக எழுந்தெழுந்து அடங்கிக்கொண்டிருந்தது வாழ்த்தொலிப்பெருக்கு. அதனுடன் இணைந்து முழங்கியது மங்கல இசை. அவ்வாழ்த்தொலிகளுடன் இணைந்தபோது அச்சொற்களையே அதுவும் சொல்வதாகத் தோன்றியது.

திருதராஷ்டிரருக்குப் பின்னால் நடந்து வந்த சங்குலன் அவர் அமரவிருக்கும் பீடத்தை ஒரு கையால் தொட்டு சற்றே அசைத்தான். அவன் உறுதி செய்துகொண்ட பின்னர் திருதராஷ்டிரர் கைகூப்பியபடி அப்பீடத்தில் அமர்ந்தார். அவருக்கு வலப்பக்கம் சஞ்சயன் நின்றான். இடப்பக்கம் சங்குலன் சற்று பின்னால் தள்ளி நின்றான். காவலர்கள் இருபக்கமும் அணிவகுத்தனர். இசையும் வாழ்த்தொலிகளும் உச்சம்கொண்டு பின்னர் நிமித்திகர்களின் கையசைவுக்கு ஏற்ப மெல்ல அடங்கி அமைதிகொண்டன. மரத்தாலான சிறிய அறிவிப்பு மேடையில் ஏறி தன் வெள்ளிக்கோலை இருபுறமும் மும்முறை சுழற்றித் தாழ்த்திய நிமித்திகன் ஓங்கிய குரலில் “வெற்றி நிறைக! குருகுலம் வெல்க! அமுதகலக்கொடி எழுக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். “வெல்லும் பொருட்டு எழுந்தவர்களுக்கு தெய்வங்கள் அருள்க! அஸ்தினபுரியின் அரசர், குருகுலத் தலைவர், ஹஸ்தியின் கொடிவழி வந்தவர் தார்த்தராஷ்டிரராகிய துரியோதனரின் கையில் விளங்கும் செங்கோல் வெல்க!” என்றான். அனைவரும் “ஆம், வெல்க! வாழ்க!” என்றனர்.

“தெய்வங்களால் அளிக்கப்பட்டதும் குலமுறைகளால் உறுதி செய்யப்பட்டதும் குடியறத்தால் நிறுத்தப்பட்டதுமாகிய அச்செங்கோலுக்கு எதிராக படைகொண்டு எழுந்திருக்கும் அரச வஞ்சகர்களாகிய பாண்டவர்களையும், அவர்களை துணைக்கொண்டுள்ள அரசர்களையும் போரில் களம்கண்டு முற்றழித்து மீளும் பொருட்டு இங்கிருந்து கிளம்பவிருக்கிறார் அரசர். தன் தந்தையும் அஸ்தினபுரியின் பேரரசரும் குடிமூத்தாருமாகிய திருதராஷ்டிரரின் வாழ்த்துக்களைப் பெற்று முதல் வெற்றிக்காலடியை வைக்கப்போகிறார். இத்தருணத்தை நிறைக்கட்டும் குலதெய்வங்கள்! இங்கு மூச்சென வந்தமையட்டும் மூதாதையர்! இத்தருணத்தில் மங்கலத்தைப் பெருக்கும் தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் இங்கு சூழ்க! இது சூதர் சொல்லில் எக்காலமும் வாழும் தருணமென்றாகுக! கொடிவழிகள் இதை உளக்கிளர்ச்சியுடன் நினைவுகூர்க! என்றும் இவ்வரலாறு அழியா மலைகள் என நிலைகொள்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் நிமித்திகன்.

பின்னர் கனகர் அறிவிப்பு மேடையிலேறி “தொல்முறைப்படி இங்கு வாழ்த்தும் வணக்கமும் நிகழவிருக்கிறது. மூப்புமுறைப்படி அரசரும் இளவரசர்களும் உபகௌரவர்களும் வந்து தந்தையின் வாழ்த்து பெற்றுச் செல்வார்கள்” என்றார். அமைச்சர்கள் திருதராஷ்டிரரின் முன் வணங்கி அவர் ஆற்றவேண்டியவற்றை மெல்லிய குரலில் உரைத்தனர். வைதிகர் நூற்றுவர் கங்கை நீர்க்குடங்களுடன் அணிநிரந்தனர். குடிமூத்தார் பதினெண்மர் மறுபக்கம் நின்றனர். பெருந்தாலத்தில் கொற்றவை அன்னையின் குருதிச்சாந்து கொண்டு வைக்கப்பட்டது. திருதராஷ்டிரர் தன் பெரிய தலையை பக்கவாட்டில் திருப்பி வேறெங்கோ இருந்து ஆணையிடும் எதையோ நோக்குவதுபோல் அமர்ந்திருந்தார். அவரது இரு கைகளும் பீடத்தின் பிடியில் நிலையழிந்து நெருடிக்கொண்டிருந்தன. தன்னிலும் பெரிதான ஒன்றை விழுங்க முற்படும் இரு கரிய நாகங்கள்போல.

கனகர் சென்று துரியோதனனிடம் பணிந்துரைக்க அவன் தலையசைத்த பின் கைகளைக் கூப்பியபடி சீர்நடையிட்டு வந்து திருதராஷ்டிரரின் முன் கால்களை மடித்து அமர்ந்து தன் தலையை அவர் கால்களில் படுமாறு வைத்து வணங்கினான். அவர் அவனை “வெற்றியும் சிறப்பும் கொள்க!” என்று வாழ்த்தி அருகிலிருந்த தாலத்திலிருந்து செஞ்சாந்தெடுத்துத் தீற்றி அருள் அளித்தார். மீண்டுமொருமுறை தந்தையை வணங்கியபின் வேதியர் முன் நின்றான். அவர்கள் கங்கைநீர் தெளித்து வாழ்த்தினர். குடிமூத்தார் கோல்களால் அவன் தலையைத் தொட்டு தொல்காடுகளில் இருந்து அவர்களிடம் வந்த அறியா நுண்சொற்களை உரைத்து வாழ்த்தினர். மறுபக்கம் வழியாக மீண்டும் தன் இடத்திற்குச் சென்று அவன் நின்றான். தொடர்ந்து துச்சாதனனும் துர்மதனும் துச்சகனும் மூப்பு நிலைப்படி திருதராஷ்டிரரிடம் வந்து வணங்கி செஞ்சாந்துக்குறி பெற்று திரும்பிச்சென்றனர்.

நூற்றுவர் கௌரவரும் அங்கில்லையென்பதை பானுமதி எண்ணிக்கொண்டாள். “ஆம், குண்டாசி அங்கில்லை” என்று அவள் எண்ணத்தை அறிந்ததுபோல அசலை சொன்னாள். “அவர் நேற்று மாலையே தன் படைப்பிரிவுக்கு சென்றுவிட்டார். இங்கிருந்து எவரிடமும் விடைகொள்ளவில்லை.” பானுமதி அதை அறிந்திருந்தாள். விகர்ணன் திருதராஷ்டிரரை வணங்கி செஞ்சாந்து பெற்றுக்கொள்வதை பானுமதி பார்த்தாள். அசலை “நடுங்கிக்கொண்டிருக்கிறார். நேற்று முழுவதும் கள் மயக்கில் குண்டாசியின் அறையிலிருந்தார். அங்கிருந்து எழுப்பி நீராட்டி கொண்டுவந்திருக்கிறார்கள். நோயுற்றவர் போலிருக்கிறார்” என்றாள். பானுமதி தாரையைப் பற்றி வெறுமனே எண்ணினாள். அசலை “அவள் அவரை சந்திக்க மறுத்துவிட்டாள். நான்குமுறை சேடியர் சென்று அழைத்தார்கள்” என்றாள்.

கௌரவர்கள் வாழ்த்துகொண்டு முடிந்ததும் உபகௌரவர்கள் லட்சுமணன் தலைமையில் வந்து திருதராஷ்டிரரை வணங்கினர். பின்னர் தங்கள் தந்தையர் காலடிகளை வணங்கி வாழ்த்து பெற்றனர். அசலை அத்திரளில் தன் மைந்தனையே பார்த்துக்கொண்டிருந்தாள். துருமசேனன் துச்சாதனனை வணங்கி வாழ்த்துகொண்டு தன் இடத்தில் சென்று நின்றபோது இரு கைகளாலும் மான்கண் சாளரத்தைப் பற்றி தலையை அதன்மேல் சாய்த்து உடல் தளர்ந்ததுபோல் அமர்ந்திருந்தாள். அவன் வாழ்த்து பெற்று முடித்ததும் மெல்லிய தேம்புதல் போல “தெய்வங்களே…” என்றாள். பானுமதி திருதராஷ்டிரரின் வாய் அசைந்துகொண்டே இருப்பதை கண்டாள். அவர் எதையோ பேசுவது போலிருந்தது. ஆனால் பற்களைக் கடித்து அரைப்பதுதான் அது என கூர்ந்தபோது தெரிந்தது. அவரை அவள் தலையிலிருந்து கால்வரை உற்று நோக்கினாள். அவர் கால்கள் தரையை அரைத்துக்கொண்டிருந்தன. அவர் காலடியில் ஒரு பன்றிக்குழவி தன் அமையா உடலுடன் திமிறிக்கொண்டிருப்பதுபோல.

உபகௌரவர்களும் வாழ்த்து பெற்று முடிக்கையில் வானம் நன்கு ஒளிகொண்டு சாம்பல் நிறமாக மாறிவிட்டிருந்தது. கீழ்த்திசையில் பறவைகள் தோன்றி நீரில் என வானில் நீந்தின. மேலும் சில கணங்களில் மெல்லிய செவ்வொளித் தீற்று தெரிந்தது. துரியோதனன் தம்பியர் துணையுடன் மிதப்பதுபோல் நடந்தகல வைதிகர்கள் வேதமோதி கங்கை நீர் தெளித்து அரிமலரிட்டு அவனை வாழ்த்தினர். அதர்வ வேதத்தின் ஒலி குறுமுழவை நீட்டி இழுத்து ஒலிப்பதுபோல் கேட்டது. போருக்கு உரிய பாடல் அது என்று அவள் எண்ணினாள். இருபுறமும் ஒன்றை ஒன்று நோக்கி செவி முன் கோட்டி மூக்கு நீட்டி தலைதாழ்த்தி விழிகோத்து நின்று உறுமும் செந்நாய்க்கூட்டங்களின் ஓசை. துரியோதனன் கோட்டைவாயிலை நடந்து கடந்ததும் நிமித்திகர்கள் கைகாட்ட மங்கல இசைக்கலங்கள் இணைந்தொலித்தன. வாழ்த்தொலிகள் எழுந்து கலந்தன.

அரண்மனை முற்றத்திற்கு அப்பால் பெருஞ்சாலையில் படைத்தேர்கள் ஒருங்கி நின்றிருந்தன. துரியோதனனும் துச்சாதனனும் முதல் தேரிலேறிக்கொண்டதும் பொன் தகடு பூசப்பட்ட மகுடமுகடுடன் அத்தேர் குலுங்கியபடி உயிர்கொண்டு சாலையில் ஒழுகி அகன்றது. சிறு காதுக்குழையொன்று சுண்டி வீசப்பட்டதுபோல் அது செல்வதாக அவளுக்கு தோன்றியது. விழியிலிருந்து அது மறைந்ததும் அதைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக செல்லும் தேர்களை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். இறுதி உபகௌரவரும் வெளியே சென்று மறைந்ததும் திருதராஷ்டிரர் ஒழிந்த பெருமுற்றத்தை பார்த்தபடி இரு கைகளையும் கூப்பி தலை நடுங்கி அசைய நின்றிருந்தார். பின்னர் கைகளை தன் தலைக்குமேல் தூக்கி வணங்கி அண்ணாந்து எதையோ கோரினார். அவர் சற்று தள்ளாடுவது போலிருந்தது. சங்குலன் ஓர் அடி முன்னால் வந்து அவருடைய இடத்தோளை பற்றிக்கொள்வதை பானுமதி பார்த்தாள். வலக்கையை சஞ்சயனின் தோளில் வைத்தபடி சிற்றடிகளுடன் மெல்ல நடந்து அவர் திரும்பி மாளிகைப்படிகளை நோக்கி சென்றார்.

அப்பால் அஸ்தினபுரியின் குடிகள் எழுப்பிய வாழ்த்தொலி பெருகி எழுந்தது. அனைத்துத் திசைகளிலிருந்தும் அலையலையாக அது வந்து செவிகளை நிறைத்தது. மிகமிகத் தொலைவில்கூட படைகளும் குடிகளும் வாழ்த்து முழக்கிக்கொண்டிருந்தனர். அங்கிருந்து கேட்டபோது ஒளிகொண்டிருந்த தொலைவான்கோடு அவ்வோசையில் அதிர்ந்து நெளிவதாகத் தோன்றியது.

முந்தைய கட்டுரைசிராப்புஞ்சியின் மாமழை
அடுத்த கட்டுரைராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1