கன்னி எனும் பொற்தளிர்

kiraa“சொன்னால் நம்ப முடியாதுதான் நாச்சியாரம்மா இப்படி மாறுவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுபேர் அண்ணன் தம்பிகள். பெண்ணடியில்லை என்று எங்கள் தாய் அவளைத் தத்து எடுத்து தன் மகளாக்கிக்கொண்டாள்’’ என்று தொடங்குகிறது கி.ராஜநாராயணனின் கன்னிமை என்னும் புகழ் பெற்ற சிறுகதை.

நாச்சியார் என்னும் பெண்ணின் சித்திரம் அது. கதை இரண்டு பகுதிகளாக இருக்கிறது. முதல் பகுதியில் நாச்சியாரின் உடன் பிறந்தவன் அவளைப்பற்றி சொல்கிறான். அவள் பெரிய பெண்ணாகி ‘மூலையில் அமர்ந்த’ அழகு முதல் திருமணமாகிச் சென்றது வரை. அவளுடைய கனிவும் கருணையும் பதவிசும் பெருந்தன்மையும் சகோதரனால் பெரும்பரவசத்துடன் விதந்து சொல்லப்படுகிறது அவள் அந்த வீட்டிற்கு வரும் பிச்சைக்காரர்கள் முதல் குடுகுடுப்பைக்காரர்கள் வரை வேலைகாரர்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய சுவைக்கு ஏற்ப விதவிதமாக சமைத்துப்போடுகிறாள்.ஒவ்வொருவருக்கும் என்ன வேண்டுமென்று அவளுக்குத் தெரிந்திருக்கிறது. ஒவ்வொருவரிடமும் அவள் முகம் மலர்ந்தே பேசுகிறாள் அவர்கள்  எங்கு மகிழ்ச்சியடைவார்கள் என்று அறிந்து முன்னரே அங்கு சென்று நின்றிருக்கிறாள். ஒரு பேரன்னை போல அந்தக்குடும்பத்தை அவள் அணைத்து காக்கிறாள். சின்னக்குழந்தைகள் போல ஒவ்வொருவரும் நாச்சியாரின் அன்புக்காக ஏங்குகிறார்கள்

உடன்பிறந்தானுக்குச் சொல்லிச் சொல்லித்தீரவில்லை,  நாச்சியாளின் உடலசைவுகளின் நளினம், ஒவ்வொருசெயலையும் ஒரு கலைநிகழ்வுபோல அவள் செய்வதிலுள்ள அழகு, அவற்றில் அவள் சின்னக்குழந்தை விளையாடுவதுபோல ஆழமாக மூழ்கிவிடுவது  ஒவ்வொன்றும் அவனால் சொல்லப்படுகின்றன.

இரண்டாவது பகுதி நாச்சியாரின் கணவனின் கண்கள் வழியாக வருகிறது. அவன் ”ஆம்  நாச்சியாளின் உடன்பிறந்தவன் சொன்னது சரிதான். நாச்சியாள் அப்படித்தான் இருந்தாள். ஆனால் மணம்புரிந்தபின்னர் எதையோ இழந்துவிட்டேன்” என்று தொடங்குகிறான்.

நாச்சியாளின் அந்தக் கன்னிமை அழகைக்கண்டு மோகங்கொண்டுதான் அவள் அவனைத் திருமணம் செய்திருந்தான். திருமணம் செய்துகொண்டதுமே அவள் மேலும் தீவிரமானவளாகவும் உற்சாகமானவளாகவும் மாறிவிட்டாள். அவனுடைய குடும்பத்தை அவள் தான் காக்கிறாள். அவனுடைய குழந்தைகளை நெஞ்சிலும் தோளிலும் ஏற்றி வளர்க்கிறாள். தோட்டத்திலும் வீட்டிலுமாக இடைவெளியில்லாமல் வேலை செய்கிறாள். ஆனால் முன்பிருந்த ஒன்று இல்லாமலாகிவிட்டது. அதன் பெயர் கன்னிமை. என்று அவன் கண்டுகொள்கிறான்

உலகு அனைத்திற்குமே மடைதிறந்து பொழிந்த அவளுடைய கருணை கணவனுக்கும் குடும்பத்திற்கும் மட்டுமானதாக மாறிவிட்டது அவ்வளவுதான். பிறர் என்றும் தமர் என்றும் வேறுபாடு கண்களில் பேச்சில் வந்துவிட்டது. நாளைபற்றிய கவலை கொண்டவள் ஆகிவிட்டாள். ஆகவே அள்ளி வைக்கும் கைகளில் கணக்கு குடியேறிவிட்டது

கதையின் இறுதியில் சந்தையிலிருந்து வாங்கிக்கொண்டு வந்த பொருளை அடுக்கி வைத்து அவற்றின் விலையை கணக்கிடுகிறாள் நாச்சியார். ஐந்து ரூபாய் குறைவது போலிருக்கிறது. திரும்ப திரும்ப எண்ணிக்கொண்டிருக்கிறாள். நெடுந்தொலைவு நடந்து வந்த கணவன் அவள் தன்னை வந்து கவனிக்கவேண்டுமென ஏங்குகிறான். தன் பசியையும் தாகத்தையும் அவள் பொருட்படுத்தவேயில்லையே என எண்ணுகிறான். அவன் கொள்ளும் அந்த ஏக்கமே அவளுக்குத் தெரிவதில்லை. ”பணம் போனால் போகிறது நாளைக்கு எண்ணிக்கொள்ளலாம் வா” என்று சொல்கிறான். அது அவளுக்குப் புரியவில்லை. திரும்ப திரும்ப பதைப்புடன அந்தப்பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் நாச்சியாரைப்பார்த்து  “நாச்சியாள் என் பிரியே, நீ எங்கிருக்கிறாய்” என்று அந்தக்கணவன் ஏங்குமிடத்தில் கதை முடிகிறது.

கி.ராவின் பக்கத்து ஊர்க்காரரான தேவதச்சன் ஒரு கவிதையில் எழுதுகிறார்.

காற்றில் வினோத நடனம் புரியும்
இலைகளை கைவிரலால் பற்றினேன்.
ஒவ்வொரு முறையும் இலைதான் சிக்குகிறது
நடனம் எங்கோ மறைந்துவிடுகிறது.

அவ்வரிகளுக்கு மிகப்பொருத்தமான கதை இது.

கி.ராஜநாராயணன்  இந்தக்கதையைப்பற்றிச் சொல்லும்போது அவர் இளவயதில் கன்னியாகுமரிக்குச் சென்று கன்னியாகுமரி தேவி கன்னிப்பெண்ணாக கருவறையில் நின்றிருக்கும் அழகைப்பார்த்து வியந்ததை நினைவுகூர்கிறார். ”கன்னிப்பருவமென்பது எத்தனை அற்புதமான ஒன்று. அதை ஒரு சிற்பமாக வடிக்கவேண்டும் என்று ஒருவனுக்குத் தோன்றியிருக்கிறதே. அதை தெய்வமாக வழிபடவேண்டும் என்று நினைத்திருக்கிறார்களே. அதைத்தான் இந்தக்கதையாக எழுதினேன். கன்னிமை என்ற சொல்லாக அதை மாற்றிக்கொண்டேன்” என்கிறார்.

கன்னிப்பருவ வாழ்க்கையின் பொறுப்புகளே கிடையாது. எந்தக்கசப்பும் வந்து தொட்டதில்லை. எனவே எதிர்மறையான விஷயங்கள் எதுவுமே தெரியாது. மனிதர்கள் அனைவர் பேரிலும் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே இருக்கிறது. அந்தக் கன்னித்தன்மை கனிவெனப் பெருகி  அவளை உலகனைத்திற்கும் உணவூட்ட விரிந்த கைகள் கொண்ட பேரன்னையாக மாற்றுகிறது. மனிதர்கள் அனைவருக்கும் ஊட்டுமளவுக்கு அவள் நெஞ்சில் முலைப்பால் நிறைகிறது.

பின்னர் அவளுக்கென்று குடும்பமும் குழந்தைகளும் அமைகின்றன அவர்களைப்பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற பொறுப்பு அவளுக்கு வரும்போது அவளுடைய எல்லைகள் குறுகத் தொடங்குகின்றன. உலகியல் பதற்றங்கள் உருவாகின்றன எப்படியோ அது அவள் வீட்டுக்கு வந்து சேரும் அனைவருக்குமே தெரிகிறது. பூம் பூம் மாட்டுக்காரனோ பிச்சைக்காரனோகூட வீட்டில் ஒரு கன்னி இருந்தால் முகம் மலர்கிறார்கள். முற்றிலும் அன்னியர்கள் கூட சிரித்து நகையாடி உரிமையுடன் எதையாவது பெற்றுச் செல்கிறார்கள்.

 கி.ராஜநாராயணனின்  உலகம் ஒருவகையில் தனித்தது. அவருடைய கதைக்களமாக அமையும் இடைச்செவல் தமிழகத்தில் நடந்த அரசியல், பண்பாட்டு, பொருளியல் மாற்றங்கள் அனைத்திற்கும் அப்பால் ஒரு தனித்த சிறுகிராமம்.  அவருடைய கதை நாயகர்களாகிய தெலுங்கு நாயக்கர்கள் அவ்வப்போது வரும் சமூக மாற்றங்கள் அதிகமும் வந்து சேராத மக்களாகவே தென்படுகிறார்கள். ஆகவே அவர்களுடைய கதைகளுக்கு ஒரு ’காலம்கடந்த’ தன்மை உண்டு.

ஏறத்தாழ ஜெயகாந்தனின் காலகட்டத்தில் எழுதப்பட்டவை கி.ராஜநாராயணனின் கதைகள். கி.ராஜநாராயணனின் கதைகளில் ஜெயகாந்தனின் கதாபாத்திரங்கள் அடையும் நவீனச் சிந்தனைகளோ அவை உருவாக்கும் சிக்கல்களோ இருப்பதில்லை. ஜெயகாந்தனின் கதாபாத்திரங்களுக்கு இருந்த அறிவார்ந்த கேள்விகளோ ஆளுமை மோதல்களோ கி.ராஜநாராயணன் காட்டும் மனிதர்களுக்கு இல்லை. கி.ராஜநாராயணனின் கதைகள் மாறாத வாழ்க்கை சித்திரங்கள் சிலவற்றை அளிக்கின்றன ஆகவே தான் அவை  பழமையாகாமல் நின்றுகொண்டிருக்கின்றன.

கி.ராஜநாராயணனின் கன்னிமை  ஒரு நவீன வாழ்க்கைப் பிரச்னையல்ல. அது மனித குலத்துக்கு என்றும் உள்ளது. பெண் என பெருகி நின்றிருப்பவள் மனைவி என்று ஆகும் பரிணாமம் அது. பெண் உலகுக்குரியவள். மனைவி ஒரு குடும்பத்துக்குரியவள். கன்னிமை என்பது ஒரு கனவு. ஒருவசந்த காலம். காலங்களில் மிக குறுகியது வசந்த காலம். அந்தக் கனவு கலைந்தே ஆகவேண்டும். அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃப்ரோஸ்ட்

Nature’s first green is gold,

Her hardest hue to hold

[இயற்கையின் முதற்தளிர் பொன்.

அதனால் தக்கவைக்க மிகக் கடினமான வண்ணம்]

என்கிறார். மானுடரிலும் அப்படித்தான்.

இந்தக் கதைக்கு ஒரு காலப்பின்னணி  ஒன்று உண்டு. சென்ற நிலப்பிரபுத்துவ யுகத்தில் பெண்கள் வீடு என்ற பாதுகாக்கப்பட்ட வளையத்திற்குள் வாழ்ந்தனர். நாச்சியாள் வெளியே சென்று கல்வி கற்றதாக தெரியவில்லை. உறவுக்குள் தன் ஊருக்குள் அவள் வாழ்கிறாள். அங்கு அவளுக்கு புற உலகம் அறிமுகமாவதில்லை என்பதனாலேயே வாழ்க்கையின் சவால்களும் அறிமுகமாவதில்லை. ஆகவே பூஜையறைக்குள் எரியும் சுடரின் தெளிந்த அசைவின்மை அவளிடம் இருக்கிறது எப்போது பெண் வீட்டைவிட்டு வெளியே சென்று கல்வி கற்கத்தொடங்கினாளோ, பணிக்குச் சென்றாளோ அப்போதே கன்னிமை என்ற இந்த பொன்வண்ணம் இல்லாமல் ஆகத்தொடங்குகிறது. இன்று மிகச்சில ஆண்டுகளிலேயே பெண்ணிடம் இருக்கும் அந்த இனிய களங்கமின்மை மறைந்துவிடுகிறது

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான மனிதர்களை எதிர்கொள்வதனூடாக அவள் தந்திரங்களும் சூட்சுமங்களும் அறிந்தவளாக மாறிவிடுகிறாள். மனிதர்களைப்பற்றி அவளது நம்பிக்கை மனிதர்கள் குறித்த கனிவும் இல்லாமல் ஆகின்றன. கன்னிமை கதையில் நாச்சியார் திருமணமாகி குடும்பம் என்று ஆனபிறகு தன் தெய்வீகத்தன்மையை இழக்கிறாள். இன்று உருவாகாமலேயே போய்விடுகிறது அந்த தெய்வீகத்தன்மை.

இருபதாம் நூற்றாண்டு மனிதர்களுக்குப் பல கொடைகளை அளித்திருக்கிறது. அதில் முதன்மையானது சுதந்திரம். தான் விரும்புவதைச் செய்யும் வாய்ப்பு இன்றைய மனிதனுக்கு உண்டு. மதத்தால் ,ஜாதியால், குடும்பத்தால் அவன் கட்டுப்படுத்தப்படுவதில்லை. உளவியல் தடைகள் அவனைக் குறுக்குவதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய மாபெரும் மதச்சீர்த்திருத்த ,சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் தத்துவங்கள் அவன்  உள்ளத்தை படிப்படியாக மாற்றி தனிமனிதனாக ஆக்கிவிட்டிருக்கின்றன. இன்று தன்னுடைய வாழ்க்கை குறித்த முடிவை தானே எடுக்க வேண்டுமென்பதில் ஒவ்வொருவருக்கும் தெளிவிருக்கிறது. தன் வாழ்க்கைக்கு தானே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்னமும் இருக்கிறது.

சுதந்திரமும் பொறுப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். இந்த சுதந்திரத்தின் மறுபக்கம் என்பது ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பு வட்டத்திலிருந்து வெளிவருவது. சென்றகால மனிதனுக்கு பெரும் கட்டுப்பாடுகளை அளித்த மதம், இனம், ஜாதி ,குடும்பம் முதலியவை பெரிய பாதுகாப்பு அரணாகவும் இருந்தன. அந்த பாதுகாப்பு அரண்களை விலக்கி வெளிஉலகின் முன் வந்து நிற்கும் மனிதன் தன்னுடைய சொந்தப் புத்திசாலித்தனத்தால், தந்திரத்தால், திறனால் வென்று செல்லவேண்டியிருக்கிறது. ஆகவே அவன் முதலில் இழப்பது கள்ளமில்லாத தன்மையைத் தான்.  நாச்சியார் கன்னிமையை இழப்பது போலவே இன்று  ஒவ்வொருவரும் தங்கள் இனிய இளமையை மிக சில ஆண்டுகளிலேயே இழந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

முந்தைய கட்டுரைவல்லினம் சு வேணுகோபால் சிறப்பிதழ்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 80