கணினியில் எழுதுவது…

book

அன்புள்ள ஜெ..

என் கணினி பழுதடைந்தால் பேப்பரில் ஒரு கட்டுரை எழுதினேன்…  வடிவம் , சொற்றொடர் என எதுவும் சரியாக வரவில்லை.. அதன்பின் கணினியில் எழுதும்போதுதான் சரியாக எழுத முடிந்தது…

உங்களுக்கு முந்தைய தலைமுறையினர் கணினி யுகத்தை அறிந்ததில்லை…  அடுத்து வர இருக்கும் தலைமுறை கம்ப்யூட்டர் தட்டச்சில் மட்டுமே எழுத தெரிந்தவரகள்

இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு அனுபவம் கொண்ட தலைமுறையை சேர்ந்த எழுத்தாளர் என்பதால் இது குறித்த உங்கள் பார்வை பதிவு செய்யப்படுவது அவசியம் என கருதுகிறேன்

எழுதுவதில் அதை அனுப்புவதில் வந்துள்ள நவீன வசதிகள் எழுத்தின் உள்ளடக்கததில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிப்பை ஏற்படுத்துகிறதா..  தனிப்பட்ட முறையில் உங்களை வைத்து மட்டும் அல்லாமல் பிற எழுத்தாளர்களையும் கவனித்து இருப்பீர்கள்…  அதை வைத்து உஙகள் பார்வையை அறிய ஆவல்

ஆயிரம் பக்க நாவலை கஷ்டபபட்டு பேனா பிடித்து எழுதுவதை விட எளிதாக தட்டச்சு செய்வது படைப்பாற்றலுக்கு சிந்தனைக்கு கூடுதல் நேரம் தருகிறதா…  அல்லது இதில் கிடைக்கும் வேகம் தரத்தில் பாதிப்பு ஏற்படுத்துகிறதா
அல்லது இது பொருட்படுத்தத்தக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை என கருதுகிறீர்களா

அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்

சுவாரசியமான கேள்வி. இதை எழுதுபொருட்களுக்கும் இலக்கிய ஆக்கத்துக்குமான உறவு என்றவகையில் விரிவாகவே அணுகமுடியும். நம் இலக்கியமரபில் தெளிவாகவே இந்த மாறுபாட்டைக் காணலாம். சங்ககாலத்தில் இலக்கியம் எழுத்துவடிவல்ல செவிவடிவு என்பது என்பது அவற்றின் ஒழுக்குள்ள செய்யுள் முறையில் இருந்து தெரிகிறது. அவை முதலில் பாடப்பட்டு, பதிவின்பொருட்டு பின்னர் எழுதப்பட்டிருக்கலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை வரை இலக்கியம் பெரும்பாலும் செவிவழியாகவே  அடையப்பட்டது, கூடவே எழுதவும்பட்டிருக்கலாம்.

ஆனால் சீவகசிந்தாமணி முதன்மையாக எழுதப்பட்ட காவியம். செவிக்கு ஒலிப்பது அடுத்தபடியாகவே. அதன்பின் நீளமான ஓலை ‘நீட்டு’ நம் செய்யுளின் வடிவைத் தீர்மானிக்கலாயிற்று. பின்னர் அச்சு வருவதுவரை நம் செய்யுட்கள் எல்லாமே ஓலையின் வடிவிலமைந்தவை. ஓலையில் இருந்து தாளுக்கு வந்தபின்னரே உரைநடை மைய இலக்கியவடிவம் ஆக மாறியது.இன்றைய எழுத்திற்குரிய வடிவ இலக்கணங்களான பத்தி, சொற்பிரிப்பு, பல்வேறுவகையான குறிகள் அனைத்துமே காகிதத்தால் உருவாகி வந்தவை. நெடுங்காலம் கோவையில் இருந்து மணிமொழி என்னும் சிற்றிதழ் வெளிவந்தது. மரபிலக்கியத்துக்கானது. அதில் நான் எழுதியதுண்டு. அவர்கள் காற்புள்ளி, நிறுத்தல்புள்ளி, பத்தி உட்பட எதையும் கடைப்பிடிப்பதில்லை, அவற்றுக்குத் தமிழிலக்கண ஒப்புதல் இல்லை என்பதனால்.

இணையப்பக்கம் இன்று காகிதப்பக்கத்தின் இன்னொரு வடிவமாகவே உள்ளது. ஆனால் சில கூடுதலான இயல்புகள் உள்ளன. சுட்டிகளும் இணைப்புகளும் குறிப்பிடத்தக்கவை. இவை இன்று நம் வாசிப்பில் மிகப்பெரிய மாறுதலை உருவாக்கிவிட்டிருக்கின்றன. தாளிலிருந்து மின்பக்கத்துக்கு வாசிப்பு விரைவாக மாறிவருகிறது. பொதுவாகச் சொல்லப்படவேண்டிய மாறுதல் என்பது படைப்புக்களின் நீளம்தான். கம்பராமாயணத்தைவிட பொன்னியின்செல்வன் நீளமானது, தாளும் அச்சுவடிவமும் உருவாக்கிய மாறுதல் அது. பொன்னியின் செல்வனைவிட வெண்முரசு நீளமானது, அது கணிப்பொறி உருவாக்கிய மாறுதல்.

பதினைந்தாண்டுகளுக்கு முன்புகூட வெண்முரசு போன்ற ஒரு நாவல் எழுதப்பட்டிருக்க முடியாது. அதற்குத்தேவைப்படும் செய்திகளைச் சேர்ப்பதற்கே பல ஆண்டுகளாகும். இன்று இணையம், குறிப்பாக கூகிளின் புத்தகச் சேமிப்பு, மிகப்பெரிய செல்வப் பின்புலம். ஒரு மாபெரும் நூலகத்தில் ஆணையிட்டால் கணத்தில் தேடித்தரும் நூறு உதவியாளர்களுடன் அமர்ந்து எழுதுவதற்கு நிகர் இது. முன்பென்றால் இன்று ஒவ்வொரு நாளும் என வெளிவரும் ஒரு பகுதியை பல நாட்கள் ஆராய்ச்சிக்குப்பின்னரே எழுதிமுடிக்கமுடியும்.

அத்துடன் ஒருவர் ஓரிடத்தில் இருந்து எழுத உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு தொகுப்பாளர்களும் திருத்துநர்களும் பிரதிமேம்பாடு செய்ய இயல்கிறது. பிரதியைப் பற்றி ஒரே இடத்தில் இருந்து உரையாட முடிகிறது. பிரதி வெளியான சிலமணிநேரங்களுக்குள்ளாகவே பிழைகளை, விடுபடல்களை, பொருள்மயக்கங்களைச் சீரமைத்துக்கொள்வதும் எளிது.

அதைவிட முதன்மையானது தட்டச்சு. கைப்பிரதியில் படைப்பைத் திருப்பி எழுதித்தான் ஆகவேண்டும். விஷ்ணுபுரம் மும்முறை எழுதப்பட்டது. பின்தொடரும் நிழலின்குரல் இருமுறை. பலமடங்கு உழைப்பு அது. இன்று மின்வடிவில் இருக்கும் ஒரே மையப்பிரதி பலமுறை திருத்தப்பட்டு செப்பனிடப்பட்டு மேம்படுத்தப்படுகிறது. வெண்முரசின் சிறப்பியல்பு அது தேய்வழக்குகளை தவிர்க்கிறது என்பது. [அதேசமயம் மரபுகள் மாறாமல் தொடர்வதைக் காட்ட முறைமைச்சொற்களை திரும்பத்திரும்ப கையாள்கிறது] ஒரு சொற்றொடர் பலமுறை கையாளப்பட்டிருந்தால் உடனே தேடி எடுத்து தேவையில்லை எனில் நீக்கமுடியும். அது மொழியை கூர்மையாக வைத்திருக்கிறது.

பல்லாயிரம் துணைக் கதைமாந்தர் கொண்ட இப்படைப்பில் எங்கே எவர் எவ்வண்ணம் வந்திருக்கிறார் என்று பின்னால் சென்று தேடி தொடர்ச்சியை உருவாக்குவது மிக எளிது. முன்பு பயின்றுவந்த செய்திகளுக்குரிய நீட்சியை உருவாக்குவதும் கடினமல்ல. கணினியால் மட்டுமே வெண்முரசு போன்ற நூல்களை உருவாக்க முடியும். பின்பொரு காலத்தில் இந்நாவலை நூற்றுக்கணக்கான உள்ளிணைப்புகளுடன் மேலும் உள்விரிவுகள் கொண்டதாக ஆக்கமுடியும். குறிச்சொற்கள் வழியாக மொத்த படைப்புக்கும் குறுக்காகவும் நெடுக்காகவும் வாசகன் பயணம்செய்து அவனுக்கான நாவலை உருவாக்கிக்கொள்ளவும்கூடும். உதாரணமாக விதுரன் என்ற சொல்லினூடாக விதுரனைப்பற்றிய ஒரு நாவலை இதிலிருந்து பிரித்தெடுத்து வாசிக்கலாம். மெய்யாகவே இதுதான் அடுத்த காலகட்டத்துப் படைப்பு

எழுதுவதென்பது ஒருவகை ‘தன்மறப்பு’ நிலை. மொழியினூடாக வெளிப்படும் கனவு அது. அதற்கு ஊடகம் துணையும் அல்ல, எதிர்ப்பும் அல்ல. உண்மையில் ஊடகமே அங்கில்லை. அந்த ஊடகத்தை ஆழ்மனதுக்குப் பழக்குவது மட்டுமே சிக்கல். எந்த எழுத்து வடிவையும் கொஞ்சம் கொஞ்சமாக நம் ஆழத்துக்குப் பழக்கிவிடலாம். தமிழில் நாஞ்சில்நாடன் போன்ற பலர் இன்னமும்கூட கணினிக்குப் பழகவில்லை. நான் 2000 த்திலேயே கணிப்பொறி வாங்கி தட்டச்சு செய்யத் தொடங்கிவிட்டேன். என் உள்ளத்தை படிப்படியாக அதற்குப் பழக்கினேன்.பழகியதும் அதற்கேற்ப எழுத்து வெளிவரத் தொடங்கியது. புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டது, பழைய வெற்றிகள் எதையும் இழக்கவுமில்லை.

தொடக்கத்தில் சிறுகுறிப்புகள் மட்டுமே கணினியில் எழுதமுடிந்தது.. கைபழகுவதற்காகவே அன்று அத்தனை இணையவிவாதங்களிலும் கலந்துகொண்டேன். திண்ணை, பதிவுகள், தமிழ் போன்ற பல தளங்களில் இன்றைய முகநூல் போலவே சூடான விவாதங்கள் நிகழ்ந்த காலகட்டம். மட்டுறுத்தப்படாத விவாதம் என்பது மாபெரும் வெட்டிவேலை என அன்றே கண்டுகொள்ளவும் அது உதவியது. கைபழகியதும் கட்டுரைகள் எழுதினேன். பின்னர் நேரடியாக கதைகள். கணிப்பொறி வாங்கியபின்னரும்கூட காடு, ஏழாம் உலகம் கையால்தான் எழுதப்பட்டது. முற்றிலும் தட்டச்சில் உருவான ஆக்கம் கொற்றவை. 2003ல் எழுதப்பட்டு 2005ல் வெளிவந்தது.

இன்று முழுக்கமுழுக்க தட்டச்சுதான். ஆனால் மலையாளம் இன்னமும் கையால்தான் எழுதுகிறேன். வெண்முரசில் சில பகுதிகள் கையால் எழுதப்பட்டவை. அவற்றுக்கும் பிறவற்றுக்கும் வேறுபாடு கண்டுபிடிக்கமுடியாது- என்னாலேயேகூட. இருவகை எழுத்துமுறைகளிலும் ஆசிரியனாக என்ன வேறுபாடு காண்கிறேன்? கையால் எழுதினால் எழுத்து விரைவோடையாக உள்ளது. தட்டச்சில் கூடுதலாக பத்திகள் வரிகள் பற்றிய ஒரு நோக்கு நம்மிடம் இருந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் அச்சில் அப்படைப்பு எப்படி வெளிவரும் என நம் கண்முன் கணினித்திரையில் தெரிந்துகொண்டே இருக்கிறது. இது ஒன்றுமட்டுமே சொல்லும்படியான வேறுபாடு.

வருங்காலத்தில் ஒருவேளை கையால் எழுதுவதே அழிந்துவிடலாம். தேர்வுகள் கையால் எழுதப்படும் காலம் வரைக்கும்தான் எழுத்துமுறை இருக்கும். எழுத்துக்களோ எழுதுமுறையோ மாறினாலும் படைப்பியக்கம் பெரிதாக மாறுவதில்லை. இலக்கியவடிவங்கள் வாசிக்கப்படும் வடிவுக்கேற்ப மாறுபடுகின்றன. படைப்பூக்கம் அன்றும் இன்றும் ஒன்றே. கலைவளர்வதில்லை, அதன் பேசுபொருட்களே காலந்தோறும் மாறுகின்றன என்ற எலியட்டின் வரியை சற்றே மாற்றி  கனவுகள் மாறுவதில்லை, காணும்பொருட்களே காலந்தோறும் மாறுகின்றன என்று சொல்லலாம்

ஜெ

முந்தைய கட்டுரைராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6
அடுத்த கட்டுரை’தீட்டு ’