‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 49

tigபானுமதி முதற்காலையில் காந்தார அரசியரை சந்திக்கும்பொருட்டு அணியாடை புனைந்துகொண்டிருக்கையில் அமைச்சர் வந்திருப்பதாக சேடி வந்து சொன்னாள். அப்போதுதான் அவள் அனுப்பியாகவேண்டிய ஓலைகளின் நினைவை அவள் அடைந்தாள். அமைச்சரை சிறுகூடத்தில் காத்திருக்கும்படி பணித்துவிட்டுச் சென்று சிறுபீடத்தில் கால் நீட்டி அமர்ந்தாள். அங்கு காத்திருந்த கற்றுச்சொல்லிகள் அவளைச் சூழ்ந்து அமர்ந்தனர். விழிமூடி விரைந்த சொற்களால் அவள் செய்தியை சொல்ல அவர்கள் ஓலையில் எழுதிக்கொண்டனர். அவளுடைய தாழ்ந்த குரலும் அதனுடன் இணைந்துகொண்ட எழுத்தாணியின் ஓசையும் மட்டுமே அறையில் ஒலித்துக்கொண்டிருந்தது. நகரெங்கும் அனுப்பி வைக்கப்படவேண்டிய அரசாணைகளை அவள் பிறப்பித்தாள்.

எந்நிலையிலும் எங்கும் இறப்பு தண்டனை அளிக்கப்படலாகாது என்றும், இறப்புக்குரிய குற்றங்கள் செய்தவர்கள் அஸ்தினபுரிக்கு கொண்டுவரப்படவேண்டுமென்றும், சிறு குற்றங்களுக்கு மட்டுமே ஆங்காங்குள்ள மூதன்னையர் குழுக்கள் தண்டனைகள் வழங்க ஒப்புதல் உண்டு என்றும் முதலாணை. பிறிதொரு ஆணை நிலம், நீர், பாதைகள் ஆகியவற்றைப் பற்றிய பூசல்கள் எவையும் போர் முடிந்து அரசர் திரும்பிவரும் வரையில் விசாரிக்கப்படமாட்டா என்றும் அவை அனைத்தும் அரசர் அவைநீங்கும் அந்நாளில் எந்நிலையில் இருந்ததோ அவ்வண்ணமே மாற்றமின்றி நீடிக்கவேண்டும் என்றும் கூறியது. வணிகர்கள் அரசுக்கு கட்டவேண்டிய நிகுதிகள் முழுமையாகவே நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டன என்றும் நகருக்குள் வரும் வணிகர்களுக்கு தங்குமிடமும் விலங்குகளுக்கான கொட்டில்களும் அவர்கள் சிறுவணிகம் செய்வதாக இருந்தால் அவற்றுக்குரிய கடைகளும் அரசால் வழங்கப்படுமென்றும் மூன்றாவது ஆணை.

ஏழு ஆணைகள் அஸ்தினபுரியுடன் முரண்பட்டு ஆங்காங்கே தனியரசுகளை அமைப்பதாக அறிவித்துக்கொண்ட சிறுகுடித்தலைவர்களுக்கு விடுக்கப்பட்டன. உடனடியாக அவர்கள் கோல்கொண்டு அரியணை அமர்வதை தவிர்த்து, அஸ்தினபுரியின் கொடி அடையாளத்தையே தாங்களும் கொண்டு, ஒவ்வொரு நாளும் அஸ்தினபுரிக்கு உறுதிமொழிகொண்டு அவைக் கடன்களை நிறைவேற்றவேண்டும் என்றும் அவ்வாறு தாங்கள் செய்வதை முறைப்படி ஓலைகளில் பொறித்து அஸ்தினபுரிக்கு அனுப்பவேண்டும் என்றும், அவ்வோலையின் பிறிது வடிவங்கள் சூழ்ந்திருக்கும் அனைத்து குலத்தலைவர்களுக்கும் அனுப்பப்படவேண்டுமென்றும் எழுதப்பட்டன.

அஸ்தினபுரியின் படகுகளைத் தாக்கும் கள்வரோ பிறரோ துரத்திச் செல்லப்படவேண்டாம் என்றும், ஆனால் அவர்களின் குலஅடையாளங்கள் கணக்கில் கொள்ளப்படவேண்டும் என்றும், போர் முடிந்து படைகள் திரும்பிவரும்போது அக்குற்றங்களில் ஈடுபட்டவர்களின் குலத்தின் இறுதிக்குழவி வரை வேட்டையாடி கொன்று அழிக்கப்படும் என்றும், எந்நிலையிலும் எதன்பொருட்டும் இச்சூழலில் அவர்கள் செய்யும் சிறுகுற்றங்கள்கூட பொறுத்துக்கொள்ளப்படமாட்டா என்றும் நான்கு எல்லைகளுக்கும் ஆணை வரையப்பட்டது. தெய்வங்களுக்கான பலிகொடைகளும் மூதாதையருக்கான படையல்களும் மறு அரசாணை வரும்வரை நிறுத்தப்படுவதாக பிறிதொரு ஆணை.

இறுதி ஓலையை அவள் உரைத்துக்கொண்டிருக்கும்போது சேடி வந்து அசலை வந்திருப்பதை சொன்னாள். பொன்னணிகளுக்கும் பட்டாடைகளுக்கும் பீதர்நாட்டு அணிப்பொருட்கள் அனைத்திற்கும் இருமடங்கு நிகுதி வகுக்கும் ஆணையை இறுதியாக கூறிமுடித்து அவள் எழுந்தபோது அசலை வந்து அறை மூலையிலிருந்த பீடத்தில் அமர்ந்திருந்தாள். பானுமதி எழுந்து கைகளை நீட்டி சோம்பல் முறித்தாள். உடலை உணர்ந்ததுமே சிறு திடுக்கிடலுடன் அசலையின் விழிகளை சந்தித்தாள். இளமகள்போல் அவள் உள்ளம் சிறுநாணம் கொண்டது. கற்றுச்சொல்லிகள் ஓலைகளை அடுக்கியபடி அகன்றனர். அணிச்சேடியர் வந்து அவள் ஆடைகளையும் குழலையும் சீர்படுத்தினர். அசலையை நோக்காமல் குரலை இயல்பாக்கி “இளையவள் எங்கே?” என்று அவள் கேட்டாள்.

“இன்று அவள் துயின்று எழ மிகவும் பிந்தியது என்று சேடி சொன்னாள். ஆகவே அவள் வர இயலவில்லை” என்று அசலை சொன்னாள். அவள் குரல் இயல்பாக இருந்தமையால் பானுமதி திரும்பினாள். அவள் விழிகளில் அவள் நாணிய அக்கூர்மையைக் கண்டு திரும்பிக்கொண்டு “நோயுற்றிருக்கிறாளா?” என்றாள். “இல்லை, ஆனால் கடுந்துயருற்றிருக்கிறாள்” என்றாள் அசலை. பானுமதி “ஆம், விகர்ணனிடம் அவள் பேசிய சொற்கள் எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவளை துன்புறுத்தும்” என்றாள். அசலை “அவ்வாறு நான் எண்ணவில்லை. இந்நகர்விட்டு அவள் சென்றாளென்றால் ஓரிரு நாட்களிலேயே இங்குள்ள அனைத்தையும் மறந்துவிடுவாள். எங்கிருக்கிறாளோ அங்கு முழுமையாக ஒன்றுவது அவள் இயல்பு. இங்கிருக்கையில் அவள் மச்ச நாட்டுப் பெண்ணல்ல. எனவே அங்கு சென்றபின் அவள் அஸ்தினபுரியின் அரசியாக இருக்கவும் வாய்ப்பில்லை” என்றாள்.

பானுமதி “நாம் கிளம்புவோம்” என்று சொல்லி திரும்பி சேடியை நோக்கி கையசைத்தாள். அரசி எழுந்தருள்வதை அறிவிக்கும் கொம்போசை வெளியே ஒலித்தது. அவள் வெளியே சென்றபோது வந்து வணங்கிய அமைச்சர் மனோதரரிடம் “ஓலைகளை எழுதிவிட்டேன், அமைச்சரே. அவை இன்றே அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சேரட்டும். அவை முறைப்படி சொல்கொள்ளப்பட்டனவா என்ற செய்தியை நாளை மாலைக்குள் எனக்கு தெரிவியுங்கள். சொல்மாறு உரைத்த குலக்குழுக்களின் செய்திகள் அனைத்தும் தனியாக ஓலையில் எழுதி என் முன் வைக்கப்பட வேண்டும்” என்றாள். ஓசையின்றி மனோதரர் தலைவணங்கி திரும்பிச்சென்றார். அசலை “இது ஒருபோதும் தீராது என எண்ணுகிறேன். இந்த அரண்மனை வளாகத்தின் அன்றாட ஆட்சிக்கே என் முழுப் பொழுதும் செலவழிகிறது” என்றாள். பானுமதி “இரண்டும் ஒன்றே” என்றாள். “ஆண்கள் தங்கள் பொறுப்புகளை பகிர்ந்துகொள்கிறார்கள். நாம் அனைத்தையும் நாமே செய்யவேண்டுமென விரும்புகிறோமோ?” என்றாள் அசலை. பானுமதி வெறுமனே திரும்பி நோக்கிவிட்டு நடந்தாள்.

கொம்பும் முழவும் சங்கும் என மங்கலமூவொலி எழுப்பி இசைச்சூதர் முன்னால் செல்ல அணிச்சேடியர் மூவர் மங்கலத்தாலங்களுடன் தொடர அசலையும் பானுமதியும் இருபுறமும் சேடியர் வர நடந்தனர். பானுமதி மிகவும் களைத்திருந்தாள். அவ்வப்போது நின்று சற்றே இளைப்பாறிய பின் நடந்தாள். அசலை “மிகவும் களைப்புற்றிருக்கிறீர்கள், அரசி. அத்துடன் இந்நாட்களில் தாங்கள் நன்கு எடை மிகுந்தும் உள்ளீர்கள்” என்றாள். “ஆம், அதுதான் எனக்கு விந்தையாக இருக்கிறது. விழித்திருக்கும் நேரமெல்லாம் பணியிலிருக்கிறேன். ஒவ்வொரு நாளுமென எடை கூடிவருகிறது” என்றாள். “பணியாற்றும் சலிப்பினூடாக நாம் உணவருந்திக்கொண்டிருக்கிறோம். உள்ளம் மகிழ்ந்திருக்கையில் இத்தனை எடை கூடுவதில்லை” என்று அசலை சொன்னாள். “சென்ற ஆண்டு கானாடலுக்குச் சென்றோம். திரும்பி வருகையில் என் உடல் காற்றில் மிதப்பதாக உணர்ந்தேன்.”

பானுமதி “அஸ்தினபுரியின் குடிகள் அரசி பேருருவத்துடன் இருப்பதையே விரும்புகிறார்கள். இங்கிருந்த மூதன்னையர் அனைவருமே பருத்த உடல் கொண்டவர்கள்” என்றாள். “ஆம், சிலைகளை பார்த்துளேன்” என்று அசலை சொன்னாள். பானுமதி “மெய்யாகவே அவர்கள் பருத்த உடல் கொண்டவர்களா, அன்றி காடுகளில் தொல்குடிகள் வழிபடும் மூதன்னையர் சிலைகளைப் பார்த்து இவர்களை வடித்தார்களா என்று தெரியவில்லை” என்றாள். அசலை “சிலைகளை பேருடலுடன் வடித்திருப்பார்கள். பின்னர் மூதன்னையர் அவர்களை தங்கள் உடலில் கொணர்ந்திருப்பார்கள்” என்றாள். பானுமதி புன்னகைத்தாள். அப்பேச்சினூடாக மெல்ல மெல்ல எளிதாகி முகத் தசைகள் முறுக்கவிழ்ந்து மெல்லிய புன்னகையுடன் அவர்கள் நடந்தனர். அசலை “ஆனால் போர்த்தெய்வங்களான அன்னையர் எவரும் பருத்தவர்கள் அல்ல” என்றாள்.

tigகாந்தாரியின் அவைவாயிலில் நின்றிருந்த முதுசேடி தொலைவிலேயே கொம்போசையைக் கேட்டு உள்ளே சென்று ஆணையிட மூன்று சேடியர் மங்கலத் தாலங்களுடன் வந்து பானுமதியை எதிர்கொண்டு தலைவணங்கி முகமனுரைத்தனர். முதுசேடியிடம் “பேரரசி ஒருங்கியுள்ளார்களா?” என்று பானுமதி கேட்டாள். “ஆம், சிறுகூடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். உடன் பிற அரசியரும் அமர்ந்திருக்கிறார்கள்” என்றாள். அவள் திரும்பிப்பார்க்க சற்று அப்பால் நின்றிருந்த சிற்றமைச்சர் உத்பவர் அருகணைந்து தலைவணங்கி “இன்னும் அரைநாழிகைப்பொழுதில் அரசரும் தம்பியர் மூவரும் மாதுலர் காந்தாரருடன் இங்கு வந்து பேரரசியிடம் போர்விடைகொள்ளப்போகிறார்கள், அரசி” என்றார். “மூவர் மட்டிலுமா?” என்று அவள் கேட்டாள். “முதலில் மூவர் வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து பதின்மர் குழுக்களாக இளையோர் வருவார்கள். அன்னையர் அனைவரிடமும் ஒரே இடத்தில் வைத்து விடைகொள்வது எளிது என்று கனகர் வகுத்துள்ளார்” என்றார் உத்பவர். “ஆயிரத்தவர் அனைவரும் நேற்றே பேரரசியிடம் விடைபெற்றுவிட்டனர்.”

மெல்லிய உளநடுக்கு ஒன்று நிகழ முகத்தில் அதை மறைத்தபடி “பேரரசி எவ்வாறு இருந்தார்கள்?” என்றாள். “வழக்கம்போலத்தான்… அனைவரையும் உச்சிமுகர்ந்து தழுவி விடையளித்தார்கள்.” பானுமதி தலையசைத்துவிட்டு முன்னால் நடந்தாள். உடன் வந்த முதுசேடியிடம் “பேரரசி இரவில் துயின்றார்களா?” என்றாள். “இல்லை, அரசி” என்றபின் அவள் குரல் தாழ்த்தி “மூத்த அரசியர் பதின்மரும் பொதுவாக துயில்வதேயில்லை” என்றாள். பானுமதி ஒன்றும் சொல்லாமல் நடக்க அவள் மேலும் குரல் தாழ்த்தி “சிற்றரசியரிலும் எவரும் துயில்வதில்லை. பலர் பித்துகொண்டிருக்கிறார்கள். நேற்று ஓர் அரசி தலையை தூண் ஒன்றில் மோதிக்கொண்டார்கள்” என்றாள். பானுமதி அவளிடம் அகலும்படி கைகாட்டினாள்.

பானுமதி கைகூப்பியபடி உள்ளே நுழைந்தாள். தொன்மையான அவைக்கூடத்தில் கௌரவர்களின் துணைவியர் அனைவரும் அணியாடை புனைந்து நிரைவகுத்து காத்து நின்றிருந்தனர். பானுமதி அந்த அறை அதைப்போல மகளிரால் நிறைந்து அணியோசையும் ஆடையோசையும் மென்சிரிப்புகளும் குறும்பேச்சுமாக முழங்கிக்கொண்டிருந்த நாட்களை நினைவுகூர்ந்தாள். அத்தனை அரசியரும் தங்களுக்குரிய முறைமைத் தோற்றத்தில் இருந்தாலும் எவர் முகமும் அருள் கொண்டிருக்கவில்லை. பலர் தலையாடையை இழுத்து முகத்தின் மேலிட்டு மூடிக்கொண்டிருந்தனர். உவகையில் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டு சிறுகுரலில் பேசிக்கொண்டிருக்கும் அவர்கள் துயரில் ஒவ்வொருவரும் முற்றிலும் தனித்தவராக மாறிவிட்டிருந்தனர். உடல்கள் ஒன்றையொன்று ஒட்டி நின்றிருந்தபோதும்கூட ஒருவரையொருவர் நோக்கிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவரைச் சுற்றியும் ஒலியின்மையாலான குளிர்ந்த பளிங்கு அறை ஒன்று அமைந்திருந்ததுபோல.

அவைக்கூடத்தின் நடுவே அமைந்த பெரும்பீடத்தில் காந்தாரி அமர்ந்திருந்தாள். அவளுக்கு இருபுறமும் சத்யசேனையும் சத்யவிரதையும் நின்றிருந்தனர. சுதேஷ்ணையும் சம்ஹிதையும், தேஸ்ரவையும், சுஸ்ரவையும், நிகுதியும், சுபையும், தசார்ணையும் பீடத்திற்குப் பின்னால் நிரைவகுத்து நின்றிருந்தனர். நூற்றுவர் மருகியர் அறையின் இருபுறங்களிலும் சுவரை ஒட்டி நான்கு நிரைகளாக நின்றிருந்தனர். மகாநிஷாதகுலத்து இளவரசியரான சந்திரிகையும் சந்திரகலையும் அவர்களில் இருக்கிறார்களா என அவள் ஒரு விழியோட்டலில் நோக்கி இல்லை என தெளிந்தாள். அவர்களுக்கும் அணியாடை அணிவித்து அந்த நிரையில் கொண்டுவந்து நிறுத்த துணியாமைக்காக அவள் காந்தார அரசியரை நினைத்துக்கொண்டாள்.

நிமித்திகை பானுமதியின் வரவை முறைச்சொற்களில் அறிவித்தாள். பானுமதி காந்தாரியை அணுகி கால்தொட்டு சென்னிசூடி “வணங்குகிறேன், பேரரசி” என்றாள். காந்தாரி தன் வலக்கையால் அவள் தலைதொட்டு சொல்லின்றி வாழ்த்தினாள். அசலையும் அவ்வாறே வணங்கி பானுமதியின் அருகே நின்றுகொண்டாள். பானுமதி விழிகளால் சத்யசேனையிடம் அனைத்தும் முறைப்படி நிகழ்கிறதல்லவா என்றாள். சத்யசேனை மெல்ல தலையசைத்தாள். பானுமதி தன் நெஞ்சிலிருந்து எழுந்த நீள்மூச்சை மெல்ல அடக்கி வாயால் ஊதி வெளிவிட்டாள். அங்கு குளிர்வதுபோலவும் வியர்வை எழுவதுபோலவும் ஒரே தருணத்தில் தோன்றியது. காற்று பேரெடை கொண்டு உடலை அழுத்தியது. அங்கிருந்த அனைவரும் முள்ளில் நீர்த்துளிகள் என ததும்பி நின்றிருந்தனர். சற்று அசைவெழுந்தால்கூட விழுந்துவிடுவார்கள். அவள் அவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் நோக்க விரும்பினாள். ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொற்களாவது பேசவேண்டுமென்று தோன்றியது. எக்கணமும் அவர்களில் ஒருத்தி விம்மலென வெடித்துவிடக்கூடும். பித்தெழுந்து கூச்சலிட்டபடி வெறியாட்டு கொள்ளக்கூடும்.

மாளிகையின் தரை தேன்மெழுகால் மெருகூட்டப்பட்டிருந்தது. கௌரவ அரசியரின் அணியாடைகளின் வண்ணங்கள் ஈரம்போல் மின்னிய அத்தரையில் தெரிந்தன. ஒருத்தியின் தலையில் இருந்த மணிகள் பதிக்கப்பட்ட பொன்மீன் நீருக்குள் நீந்துவதுபோலத் தெரிய பானுமதி விழிதூக்கி ஒரு நோக்கில் அனைவரையும் பார்த்தாள். ஒரு பெருவிழவுக்குரிய அணித்திரள். ஒருகணத்தில் அதிலிருந்த பொருளின்மை அவளை துணுக்குறச் செய்தது. அவ்வாடைகள், அணிகள், முறைமைத் தோற்றம் அனைத்தும் ஓர் அவல நாடகத்தின் இளிவரல் ஓங்கிய பகுதிகள். அவள் சம்படையை நினைவுகூர்ந்தாள். குண்டாசியின் முகம் எண்ணத்திலெழுந்தது. மீண்டும் அரசியரை பார்த்தாள். முகங்கள் மரப்பாவைகள்போல் உயிரற்றிருந்தன. தோல் விரிசல்களுடன் உலர்ந்திருக்க கண்களுக்குக் கீழே ஆழ்ந்த கருவளையங்கள். வாயைச் சுற்றி அழுத்தமான கோடுகள். துயரம், வஞ்சம், தனிமை, கசப்பு, பித்து என ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு வகையில் முறுக்கிக்கொண்டிருந்தது. அனைவரிலும் சம்படை எழுந்திருந்தாள்.

கௌரவர்கள் அனைவரும் மணம்புரிந்து அரசியரை கொண்டுவந்த அந்நாளில் அங்க நாட்டரசன் உள்ளே நுழைய பெண்டிர் அவனை களியாடியதை அவள் எண்ணினாள். ஓங்கிய உடலை நாணத்தால் குறுக்கி எவர் விழிகளையும் பார்க்காமல், எச்சொற்களையும் கேட்காமல் ஊடே அவன் கடந்து சென்ற அதே பெண்டிர்தான். அவர்களுக்குள்ளிருந்து அன்றிருந்த ஒன்று அகன்றுவிட்டிருக்கிறது. இன்று அந்த நாட்களை அவ்வகையில் நினைவுகூரக்கூட அவர்களால் இயலாதிருக்கலாம். கனவுகளில் அங்கெங்கோதான் அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்ந்தது அரசியர் என மணம்கொள்ளும் வரை மட்டுமே. காட்டில் பூத்துநின்றிருக்கும் மரத்தை வெட்டிச் செதுக்கி இழைத்து அணிக்கோல் என்றாக்குவதே அதன்பின் நிகழ்வது என்று காசிநாட்டில் அவளுடைய செவிலியன்னை ஒருமுறை சொன்னாள். ஆயிரம் முறைமைகளால் கட்டுண்டவர்கள் அரசர்கள், பல்லாயிரம் எச்சரிக்கைகளால் ஆனவர்கள் அரசியர் என்றாள்.

காந்தாரி மெல்ல அசைந்து அமர்ந்தபோது சத்யவிரதை குனிந்து “என்ன, அக்கையே?” என்றாள். “ஒன்றுமில்லை” என்று காந்தாரி கைவீசி சொன்னாள். அவள் முகத்தையே பானுமதி நோக்கிக்கொண்டிருந்தாள். வெண்கல்லில் செதுக்கிய சிற்பம் போன்ற முகம். சிறிய உதடுகள், சிறிய செவிகள். அவள் கைகளும் விரல்களும் சிறியவை. சிட்டுக்குருவியின் மூக்கு போன்ற சிவந்த மெல்லிய நகங்கள் கொண்ட விரல்கள். அவ்வுடலுக்குள்ளிருந்து துரியோதனன் எழுந்திருக்கிறான். அவள் முதலைகள் முட்டையிலிருந்து விரிவதை ஒருமுறை பார்த்ததை நினைவு கூர்ந்தாள். முட்டை எனும்போது உள்ளிருந்து பறவை ஒன்றை ஈரமான மென்சிறகுடன் எதிர்பார்க்கும் வழக்கம் நெஞ்சுக்கும் விழிக்கும் இருந்தது. முட்டை உடைந்து செதில்கள் கொண்ட உடலும் நீண்ட வாலும் திறந்த வாய்க்குள் கூரிய பற்களுமாக முதலைக்குழவி வெளிப்படும்போது ஏற்படும் திடுக்கிடல்.

அவ்வெண்ணத்தை விலக்கும்பொருட்டு அவள் தன் ஆடையை சீரமைத்தாள். அவ்வசைவை அங்கிருந்த அனைத்துப் பெண்டிரும் உணர்ந்தனர். அத்தனை அசைவின்றியா இந்த நூற்றுவரும் நின்றிருக்கிறார்கள்? உடலில் அவ்வளவு அசைவின்மை கூட வேண்டுமென்றால் உள்ளத்தில் அதைவிட பலமடங்கு அசைவின்மை நிறைந்திருக்க வேண்டும். அசைவின்மை என்பது உள்ளத்தின் இயல்பே அல்ல. அது தன்னை மறக்கையில் அசைவின்மை கொள்கிறது. நோயுற்று அழிகையில் அசைவின்மை கொள்ளக்கூடும். இது பிறிதொன்று. மதங்கொண்ட யானையை எட்டுத் திசைகளிலும் இழுத்துக்கட்டிய சங்கிலிகளால் அசைவற்று நிறுத்துவதுபோல. அதன் உடலில் சங்கிலிகள் இறுக்கிய புண்களில் குருதி வழியும். ஒருகணமும் நில்லாது அது ததும்பிக்கொண்டிருக்கும். ஒருமுறை காவல் கோட்டத்தின் மேலிருந்து அவள் போர்க்களிறான நிக்ரஹன் பன்னிரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டிருப்பதை பார்த்தாள். அது நிலைகுத்தி நின்று மெல்ல அசையும் கருவிழிபோல் என்று தோன்றியது அன்று.

அவள் தன் உள்ளத்தை அஞ்சினாள். ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என சென்றுகொண்டிருக்கும் இவ்வெண்ணங்களை எங்கு நிறுத்துவது? இந்த அறைக்குள் நூற்றிப்பத்து உள்ளங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஓசையின்றி அசைவின்றி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசை கொண்டிருக்கலாம். ஆனால் அனைத்தும் ஒன்றையே அளைந்துகொண்டிருக்கின்றன. எத்தனை சொல் பெருக்கினாலும் எவ்வளவு எண்ணி எண்ணி அடுக்கினாலும் எஞ்சிவிடும் பொருளின்மை.

வெளியே கொம்பொலி கேட்டது. சிற்றவைக்குள் பெருமூச்சொலிகள் எழுந்தன. பெண்கள் அறியா கைகளால் தங்கள் ஆடைகளையும் அணிகளையும் சீர்படுத்தத் தொடங்கினர். உலோக ஓசையும் ஆடைகளின் உரசலோசையும் மெல்லிய குரலில் உரையாடல்களும் சேர்ந்த முழக்கம். காந்தாரி மெல்ல உடல் நிமிர்த்தி அமர ஒரு சேடி வந்து அவள் அணிந்திருந்த பட்டாடையின் மடிப்புகளை சீர்படுத்தினாள். வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் கேட்கத் தொடங்கின. அமைச்சர் உத்பவர் உள்ளே வந்து தலைவணங்கி முறைமை முன்சொல்லாக “அரசர் தம்பியருடன் எழுந்தருள்கிறார், பேரரசி” என்றார். காந்தாரி வெறுமனே கையை மட்டும் அசைத்தாள்.

மங்கலத் தாலங்களேந்திய ஏழு சேடியர் சிற்றவைக்குள் நுழைந்தனர். அவர்களைத் தொடர்ந்து சங்கும் மணியும் கொம்பும் முழவும் இலைத்தாளமும் முழக்கிய ஐந்து இசைச்சூதர்கள் வந்தனர். இசை முழங்க அவர்கள் அத்தாலங்களை காந்தாரி முன் காட்டினர். அவள் அவற்றிலொன்றை கையால் தொட்டு ஏற்றுக்கொண்டாள். கனிகளும் மலர்களும் பொன்னும் மணியும் நீரும் அடங்கிய தாலங்களை அவளுக்கு முன் தரையில் விரித்தனர். அஸ்தினபுரியின் அமுதகலம் பொறிக்கப்பட்ட சிறு கொடியுடன் ஒரு வீரன் முன்னால் வந்து அறைக்குள் நுழைந்ததும் அவனுடன் வந்த கொம்பூதி சிறுகொம்பை முழக்கி “யயாதியின் கொடிவழி வந்தவர்! குருகுலத் தலைவர்! அஸ்தினபுரியின் அரசர்! தார்த்தராஷ்டிரராகிய துரியோதனர் எழுந்தருள்கை!” என்று அறிவித்தான்.

கொம்பூதி வலப்பக்கமாக விலக கொடியேந்தியவன் இடப்பக்கமாக விலகினான். துர்மதனும் துச்சகனும் தொடர வலப்பக்கம் துச்சாதனன் நடந்துவர துரியோதனன் அவைக்குள் நுழைந்தான். அவனுக்குப் பின்னால் சகுனி புண்பட்ட காலை இழுத்துவைத்து வலியால் வாயை கடித்திருந்தமையால் தாடியுடன் தாடை முன் நீண்டிருக்க மெல்ல நடந்துவந்தார். அவர்கள் உள்ளே வந்ததும் இசைச்சூதரும் சேடியரும் கொடிவீரனும் பிறரும் இரு வாயில்களூடாக வெளியே சென்றனர். சகுனி நின்று இளைப்பாறிக்கொள்ள அவர் உடல் மிகவும் வெளுத்து உயிரற்றதுபோல் தெரிவதை பானுமதி நோக்கினாள். துரியோதனன் சகுனியை நோக்க அவர் “முன்செல்க!” என உதடசைவால் சொல்லி கைகாட்டினார்.

துரியோதனன் முறைமைக்குரிய நீண்ட சீரடி வைத்து நடந்து காந்தாரியை அணுகினான். “அன்னையே, உங்கள் மைந்தன் வணங்குகிறேன். அஸ்தினபுரியின் கொடி காக்கவும் நம் குருதிவழியின் உரிமை பேணவும் ஷத்ரிய அறத்தை நிலைநாட்டவும் நான் இன்று போருக்கு கிளம்புகிறேன். தங்கள் மைந்தர் நூற்றுவரும் என்னுடன் வருகிறார்கள். எங்கள் மைந்தர் ஆயிரத்தவரும் உடனெழுகிறார்கள். அஸ்தினபுரியின் படைகளும் துணைக்கு எழுந்த பத்து அக்ஷௌகிணி படைப்பெருக்கும் களம்நின்று போராடவிருக்கின்றன. பிதாமகர் பீஷ்மர் தலைமை கொள்கிறார். நல்லாசிரியர் கிருபரும் துரோணரும் உடனிருக்கிறார்கள். ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் சல்யரும் கிருதவர்மனும் பூரிசிரவஸும் என் தோள்களென நிற்கவிருக்கிறார்கள். இப்போரில் நான் வென்று மீளும் பொருட்டு தங்கள் சொல்கோர வந்திருக்கிறேன்” என்றான்.

பின்னர் முறைப்படி மூன்றடி எடுத்து வைத்து முழங்கால் மடித்து நிலத்தமர்ந்து காந்தாரியின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். காந்தாரி தன் வலக்கையை அவன் தலைக்குமேல் நீட்டி “அறம் வெல்க!” என்றாள். பானுமதி திகைப்புடன் காந்தாரியின் முகத்தை பார்த்தாள். விழியின்மையென்பது எத்தனை பெரிய திரையென்று அப்போது தெரிந்தது. சென்று தொடமுடியாத பிறிதெங்கோ வெற்றுச் சிலையென காந்தாரியின் முகம் தெரிந்தது. துச்சாதனன் திரும்பி நோக்க சகுனி “அக்கையே, தங்கள் மைந்தன் தன் முழு வெற்றியின்பொருட்டு களம்புகவிருக்கிறான். காந்தார நிலத்தின் வடிவென நீங்கள் கொண்ட அத்தொல்கனவு நிறைவுகொள்ளப்போகிறது. வெற்றிக்கென உங்களது அருள் வேண்டுகிறான்” என்றார்.

“வென்று வருக என்றுரைப்பதுதான் மரபு, பேரரசி” என்றார் அமைச்சர். காந்தாரி மீண்டும் “அறம் வெல்க!” என்றாள். சகுனி சத்யவிரதையை பார்த்து உதடுகளை அசைக்க அவள் குனிந்து காந்தாரியின் தோளைத்தொட்டு “அக்கையே, இத்தருணத்தில் தங்கள் மைந்தர் வென்று மீளவேண்டும் என்று கூறுவதே முறை” என்றாள். காந்தாரி மீண்டும் “அறம் வெல்க!” என்றாள். சத்யசேனை ஏதோ சொல்வதற்குள் சகுனி “அக்கையே, தங்கள் மைந்தர் நீளாயுளுடன் நிறைவாழ்வு பெறவேண்டும், அவர்களின் கொடி சிறக்க வேண்டுமென்று தாங்கள் வாழ்த்தலாம். மூதன்னையாக அச்சொல்லை அளிக்கும் கடமையும் தங்களுக்குண்டு” என்றார்.

காந்தாரி இரு கைகளையும் கூப்பி “அறம் வெல்க! அறம் வெல்க! அறமே வெல்க!” என்றாள். சினத்துடன் துர்மதன் ஏதோ சொல்ல கைதூக்கி முன்னகர விழிதிருப்பி வெறும் நோக்கால் அவனை துரியோதனன் அடக்கினான். பின்னர் “அன்னையே, உங்கள் சொல் திகழ்க!” என்றபின் மீண்டுமொருமுறை கால்தொட்டு சென்னிசூடி எழுந்தான். துச்சாதனன் கொந்தளிக்கும் முகத்துடன் உடலெங்கும் தசைகள் இழுபட்டு அசைய பற்களைக் கடித்தபடி நின்றான். விழிகளால் அன்னையை வணங்கும்படி துரியோதனன் ஆணையிட்டான். மேலும் சில கணங்கள் தயங்கிவிட்டு துச்சாதனன் முழங்கால் மடித்தமர்ந்து “வணங்குகிறேன், அன்னையே” என்றான். அவள் கைநீட்டி அவன் தலையை தொடாமல் வாழ்த்துரைத்தாள். துர்மதனும் துச்சகனும் வணங்கி வாழ்த்து கொண்டனர்.

சகுனியின் முகத்தையே பானுமதி நோக்கிக்கொண்டிருந்தாள். அங்கு எந்த உணர்வுமாறுபாடும் எழவில்லை. “என்னை வாழ்த்துக, அக்கையே” என்று அவள் காலடியில் குனிந்தார். காந்தாரி அசைவிலாதிருந்தாள். சத்யசேனை “அக்கையே…” என்றாள். காந்தாரியில் எந்த அசைவும் எழவில்லை. அவள் எடைமிகுந்து குளிர்ந்துகொண்டே செல்வதுபோலிருந்தது. அந்தத் தண்மையில் அக்கூடம் விறைத்துக்கொண்டதுபோல. சத்யசேனை மீண்டும் காந்தாரியைத் தொட தலையசைத்து அதை தடுத்தபின் காந்தாரியின் தாள்தொட்டு சென்னி சூடினார். கையை நிலத்தில் ஊன்றி வலிமுனகலுடன் எழுந்தார். அவர் சற்று நிலைதடுமாற அவரை பிடிக்கும்பொருட்டு கைநீட்டிய துர்மதன் அவர் எழுந்துவிட்டதைக் கண்டு பின்னிழுத்துக்கொண்டான்.

காந்தாரியின் முகம் சுண்ணக்கல் பாவை என தெரிந்தது. சகுனியின் முகத்தில் தெரிவது உணர்வின்மை அல்ல என பானுமதி எண்ணினாள். அவர் முகத்தின் அத்தனை தசைகளும் தொய்ந்து சரிந்திருந்தன. சலிப்பும் வலியும் அவற்றில் தசையமைப்பாகவே நிலைகொண்டிருந்தன. அமைச்சரிடம் ஒரு சொல்லில் ஏதோ ஆணையிட்டுவிட்டு துரியோதனன் சீர்நடையிட்டு வாயிலை நோக்கி சென்றான். துச்சாதனன் உடன் செல்ல துர்மதனும் தொடர்ந்தான். துச்சகன் சகுனிக்காக காத்து நின்றான். அவன் தோளைப் பற்றியபடி வலியுடன் மெல்ல நடந்து சகுனியும் வெளியேறினார்.

துரியோதனன் தன்னை ஒருகணமேனும் பார்ப்பான் என்று பானுமதி எண்ணினாள். ஆனால் அவள் நிற்பதையே அறியாதவனாக அவன் அறையைவிட்டு நீங்கினான். அனைவரும் வெளியே சென்றதும் அங்கு நின்றிருந்த அரசியர் அனைவருமே நீள்மூச்சுகளும் உடல் எளிதாகும் ஓசைகளுமாக நிலைமீண்டனர். அம்புகளை ஏவி தளரும் விற்களைப்போல. மீண்டும் வெளியே கொம்போசை எழுந்தது. பானுமதி நீள் கால் வைத்து அரச நடையில் செல்லும் துரியோதனனை உளவிழியால் நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் முந்தைய இரவில் கண்ட துரியோதனனை அவன் அவளிடமே விட்டுச்சென்றிருந்தான் என்று எண்ணிக்கொண்டாள்.

நிமித்திகை வந்து அறிவிப்பு அளிக்க கௌரவர்கள் இரண்டு நிரைகளாக அறைக்குள் வந்து காந்தாரியிடமும் ஒன்பது அன்னையரிடமும் வாழ்த்துகள் பெறத்தொடங்கினர். ஒருவர் பின் ஒருவராக கரிய பேருடலுடன் அவர்கள் தோன்றிக்கொண்டே இருந்தனர். காந்தாரி வெண்ணிற முகம் உறைந்திருக்க ஒவ்வொருவர் தலையாகத் தொட்டு வாழ்த்தளித்தாள். அவள் விழிகளை மூடியிருந்த நீலப்பட்டையே பானுமதி நோக்கிக்கொண்டிருந்தாள், அது சற்றேனும் நனைந்து நிறம் மாறுகிறதா என்று. அனைவரும் வந்து சொல்கொண்டு சென்றபின் மெல்ல முனகியபடி காந்தாரி கையை நீட்டினாள். சத்யசேனையும் சத்யவிரதையும் அவளைப் பற்றி மெல்ல தூக்க சிற்றடிமேல் நிற்க அவள் உடல் தடுமாறியது. பின்னர் உடன்பிறந்தார் தோள்களைப் பற்றியபடி அவள் உள்ளே சென்றாள்.

முந்தைய கட்டுரைபொற்றை
அடுத்த கட்டுரைபிழையின் படைப்பூக்கம் -கடிதங்கள்