நான் எழுதலாமா?’ ஒரு கடிதம்
அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் எழுதலாமாவெனும் கேள்வியுடன் உங்களுக்கு அனுப்பப்பட்ட பத்தாண்டுகளுக்கு முன்பான ஒரு வாசகரின் கடிதத்தையும் அதற்கான தங்களின் பதிலையும் இன்று வாசித்தேன்.
நான் தமிழில் தட்டச்சி உங்களுக்கு எழுதி, நீங்கள் தளத்தில் பிரசுரித்த ஒரே ஒரு கடிதத்தின் பிறகு முற்றிலுமாய் மாறிப்போன என் வாழ்வைக் குறித்து சொல்லிக் கொள்ளவே இதை எழுதுகிறேன்
பலவருடங்களுக்கு முன்பெல்லாம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மாய்ந்து மாய்ந்து கைவிரல் வலிக்க கடிதங்கள் அதிகம் எழுதிக்கொண்டிருந்தேன் கண்ணில் பட்டதும் கையில் கிடைத்ததுமாய் கலவையாக வாசித்துக் கொண்டிருந்தபோது உங்கள் எழுத்துக்கள் அறிமுகமானது.
என் சகோதரி சங்கமித்ரா உங்களது இணையதளத்தினை தொடர்ந்து வாசிப்பவள், ஆனால் எனக்கு வீட்டில் இணையவசதி இல்லாத காலம் அது எனவே உங்கள் எழுத்துக்களை பிரிண்ட் எடுத்து எனக்கு அவள் கொடுத்ததிலிருந்து, மகன்களுக்கு கேசவன்குட்டி என்னும் யானையைப்பற்றி வாசித்து சொன்னதும் அப்போது சின்னப்பையனாக இருந்த தருண் பல நாட்கள் வீட்டில் யானையைபோல எல்லோரையும் முட்டித்தள்ளி விளையாடிக்கொண்டிருந்தான். 7 அம் வகுப்பில் படித்துகொண்டிருந்த சரண், உங்கள்வீட்டு நாயைக்குறித்து நீங்கள் எழுதிய பதிவைக்குறித்தும் தருண் தன்னை கேசவன்குட்டியாகவே பாவித்துக்கொண்டு குறும்பு செய்வதையும் பற்றி உங்களுக்கு முதன்முதலாக உடைந்த ஆங்கிலத்தில் ஒரு மின்னஞ்சல் எழுதினான். மறுநாளே நீங்கள் அவனுக்குப் பதிலளித்திருந்தீர்கள். அந்தக்கடிதத்தையும் “ஒரு சிறுவனின் கடிதம்’’ என்று உங்கள் தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். சரணுக்கும் எனக்கும் அது என்றும் மறக்கமுடியா அரிய விஷயம், மற்றும் பொக்கிஷம்
பின்னர் வெண்முரசு வாசிக்கத்துவங்கினோம். வெண்முரசை தினமும் அன்றைக்கான அத்தியாயத்தை முழுக்க கேட்டுவிட்டே பள்ளிக்கு செல்வார்கள் மகன்கள். சிலநாட்களில் மாலை வீடுதிரும்பி வேனில் இருந்துஇறங்கும் போதும் கதைத்தொடர்ச்சியை விவாதித்துக்கொண்டும் அர்ஜுனன் பூரிசிரவஸ் விதுரருக்கெல்லாம் இருவரும் ரசிகர்களாகிவிட்டிருந்தபடியால் அவர்களைக்குறித்து பரவசமாய் பேசிக்கொண்டும் வருவார்கள்
8 ஆம் வகுப்பில் சரண் விடுதியில் தங்கவேண்டி வந்தபோது வெண்முரசை கேட்காமல் இருக்கமுடியாதென்று தீவிரமாக வருந்தத்துவங்கியதால் தினமும் அன்றைக்கான அத்தியாயத்தை வீட்டிலிருந்து அதே பள்ளிக்குச்செல்லும் தருணிடம் சுருக்கமாக ஆங்கிலம் தமிழ் இரண்டும் கலந்து அதிகாலையில் எழுதிக் கொடுத்தனுப்புவதை ஏறக்குறைய ஒரு வருடம் தொடர்ந்து செய்தேன். சிறுவர்களுக்கான, சுருக்கப்பட்ட அவர்களுக்கேற்றபடி கொஞ்சமாக மாற்றப்பட்ட வெண்முரசின் வடிவம் அது என்றுகூட சொல்லலாம். எனக்கே அதை வாசிக்கையில் மிகவும் பிடித்திருந்தது.
பின்னர் கோவை வெண்முரசு கலந்துரையாடலுக்கு திரு.விஜயசூரியன் இல்லத்திற்கு சென்றிருந்தபோது, என்னையும் சரணையும் சொல்புதிது குழுமத்தில் இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டோம், இணைத்துக்கொண்டது மட்டுமன்றி, அடுத்த நாளே குழுமத்தில் பதிவிடுவதற்காக தமிழில் தட்டச்சுவது தெரியாத எனக்கு மீனாம்பிகை சின்னப்பிள்ளைக்குச் சொல்லித்தருவதுபோல தொலைபேசியிலேயே பொறுமையாக NHM எப்படி தரவிறக்குவது எப்படி தட்டச்சுவதென்றெல்லாம் சொல்லித்தந்தபின்னர் கற்றுக்கொண்டேன். சிலநாட்களில் பின்னிரவு வரையிலும் கூட தட்டச்சிப்பயின்றேன் நான் தமிழில் தட்டச்சி அதை கணினித்திரையில் பார்ப்பது பெரும் கிளர்ச்சியளித்தது.
திரு காட்சன் எங்கள் கல்லூரிக்கு வந்திருந்து ஒரு பயிலரங்கம் நடத்தின அன்று உங்களுக்கு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முதன்முதலாக கடிதம் எழுதினேன். அது மறுநாளே பிரசுரம் ஆனதும் திகைத்துப்போய்விட்டேன். எனக்கு அது மிகப்பெரிய அங்கீகாரம்.
உங்கள் எழுத்துக்கள் வேறுமாதிரி தீவிரமான தமிழில் இருக்கின்றது, புரியவில்லை என்று சொல்பவர்கள் இன்னும் கூட நிறைய இருக்கிறார்கள், எனவே நீங்கள் எழுதுவது எனக்கு புரிகின்றதென்பதே அதுநாள் வரையிலும் எனக்குப்பெரியதோர் தகுதியாக இருந்துவந்தது, நானே தமிழில் எழுதி அனுப்பிய என் கடிதம் உங்கள் தளத்தில் பிரசுரமானது கூடுதல் தகுதியாகிவிட்டது.
அதன்பிறகு உண்மையிலேயே எனக்கு பெரிய தன்னம்பிக்கை வந்துவிட்டது. பின்னர் அவ்வப்போது உங்களுக்கு எழுதிக்கொண்டே இருக்கிறேன். சிறுபிள்ளைத் தனமாகக்கூட பலமுறை கேள்விகள் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் எனக்கு பதிலளித்திருக்கிறீர்கள். குடும்பச்சுழலில் மறுபடி மறுபடி சுற்றிச்சுற்றி உழன்று கொண்டிருந்த எனக்கு வாழ்வின் repetitions கொடுத்த, அலுப்பு நிறைந்து வழிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் , எளிமையாக என்றாலும் என்னாலும் தமிழில் எழுதமுடியுமென்ற நம்பிக்கை வந்தது.
2016ல் குழும நண்பரொருவர் உங்கள் தளத்தில் என் கடிதங்களைப்பார்த்துவிட்டு பரிந்துரைத்ததால் தினமலரிலிருந்து என்னால் மாணவர்களுக்காக தாவரவியல் தகவல்களை தமிழில் எழுதித்தரமுடியுமாவெனக் கேட்டார்கள். தயக்கமிருந்தது ஆனாலும் ஒத்துக்கொண்டேன். சரியான வடிவில் குறிப்பிட்ட வார்த்தை உச்சவரம்பிற்குள் சொல்லவேண்டியதைச்சொல்ல பலமுறை எழுதவேண்டியிருந்தது எனினும் ஒரு ஆசிரியையாக எனக்கு முக்கியமென்று தோன்றியவற்றையும் தினமலரிலிருந்தே கொடுக்கப்படும் தலைப்பிலுமாக இன்றைக்கு வரை தொடர்ந்து விருப்பத்துடன் எழுதுகிறேன். வாரத்தில் 2 அல்லது மூன்றுநாட்கள் என் பதிவுகள் வருகின்றது. கணிசமாக சன்மானமும் வருகின்றது. அரசுப்பணியில் இருக்கிறேன். சம்பளம் பலவருடங்களாக வாங்கிக்கொண்டுதானிருக்கிறேன் என்றாலும் இப்படி எழுதி அதில் கிடைக்கும் சன்மானம் எனக்கு பெரும் மகிழ்வளிக்கின்றது
இப்போது அதிகம் பிழைகள் இல்லாமல் கல்லூரியிலும் வெளியிடங்களுக்கும் தமிழில் பதிவுகள், கட்டுரைகள் எழுதுவது எளிதாகிவிட்டது. இன்னும் தட்டச்சுப் பிழைகளைக் குறைத்துக்கொள்கிறேன்.மிக எளிய அறிவியல் தகவல்கள் தான் எழுதுகிறேன் என்றாலும் அதற்கும் மிகக்கவனமெடுத்துக்கொள்கிறேன் முன்பைவிட இப்போது இன்னும் சுவையாக தகவல்களை கொடுக்கிறேன் கல்லூரி நிர்வாகம் அதன் பிறகு கல்லூரி மலருக்கு என்னை ஆசிரியராக்கி இருப்பதால் 3 இதழ்கள் வெளிவந்துவிட்டது என் பொறுப்பில். 2 பாடநூல்களில் கூட தமிழில் பாடங்கள் எழுதிவிட்டேன்
உங்கள் தளத்தில் பிரசுரமான ஒரு கடிதம் என்னை இத்தனை வேகமாக மாற்றி விட்டது. இனி மீட்பில்லை என்னும் அளவிற்கு சலிப்பும் துயருமான ஒரு வாழ்விலிருந்த நான், வாசிப்பிலும் எழுத்திலுமாய் உற்சாகமான மிக தன்னம்பிக்கையுடைய ஒரு ஆளுமையாக மாறி விட்டேன். முன்பைக்காட்டிலும் அதிகம் கல்லூரியில் பணிகளைச்செய்கிறேன். முன்பு சரியாகச்செய்தவற்றை இப்போது சிறப்பாகச் செய்கிறேன். அந்தரங்கத் துயரை பன்மடங்கு பெருக்கி கொண்டு அதிலேயே மூழ்கிக்கொண்டிருந்த அதே நான் இப்போது கல்லூரியில் grief counselling செய்யும் ஆசிரியையாகவும் இருக்கிறேன்
நிறைய நேரமும் இருக்கின்றது. உண்மையிலேயே எல்லாவற்றிற்கும். முன்பு சுயஇரக்கத்தில் என்னை நானே தாழ்த்திக்கொண்டும் வருத்திக் கொண்டும் இருப்பதற்கு செலவிட்ட நேரங்களில் இப்போது பயனுள்ளவகையில் எனக்கு மகிழ்வளிக்கும்படி எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் எழுத்தாளராக முயற்சிக்கவில்லை. படைப்பாளி ஆகவேண்டும் என்றெல்லாம் நினைத்ததுமில்லை. மிக மிக எளிய தளத்திலான என் வாழ்வில் இப்போது எனக்கு இந்த அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம் கொடுக்கும் மகிழ்ச்சியே இனிமீதமிருக்கும் வாழ்நாளுக்கெல்லாம் போதுமானது
சமீபத்தில் ஒரு blog துவங்கி அதில் எனக்கு தோன்றியதையெல்லாம் என் கண்ணில்பட்டதையெல்லாம் எழுதுகிறேன். நானெல்லாம் எதற்கு எழுதனும்னு நினைக்காமல் நான் எழுதியதை நானே வாசிக்கையில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன். காரில் செல்லாமல் பேருந்தில் சென்ற ஒரு நாளின் அனுபவத்தை. சாலையைக்கடந்து சென்ற என்னுடன் ஐந்தாம் வகுப்பில் படித்த ஒரு நண்பனைக்குறித்து, தேர்வறையில் ஒரு மாணவி பின்னலில் வைத்துக்கொண்டிருந்த, அறைமுழுதும் மணம் கமழ்ந்து கொண்டிருந்த மனோரஞ்சித மலரைக்குறித்து, கல்லூரியில் நடந்த ஒரு சம்பவத்தை. நான் ரசித்த ஒரு திரைப்படத்தை இப்படி நேரம் கிடைக்கையில் எதையாவது எழுதிகொள்கிறேன். என்னை நானே பலசமயம் அதற்காகப் பாரட்டிக்கொள்கிறேன் நெருங்கிய நண்பர்களிடம் மட்டும்அதைப்பகிர்ந்து கொண்டுமிருந்தேன்.
இப்போது நீங்கள் எழுதியதை வாசித்ததும் நான் எழுதுவது என் வாழ்வில் நடக்கும் எளிய நிகழ்வுகளின் பதிவுகள், அதில் இலக்கியம் இல்லைதான் எனினும் அது எனக்கு மகிழ்வளிக்கின்றது. எனவே இன்னும் எனக்கு தெரிந்தவரகளுக்கும் நானும் எழுதுகிறேன் என்று, வெட்கப்படாமல் தாழ்வுணர்ச்சியின்றி இனி சொல்லிக்கொள்ளலாமென்று தோன்றுகிறது
உங்களின் இந்த பதிவு எனக்கு இன்னும் பெரிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுத்தது மட்டுமல்லாமல் மனதில் கொஞ்சமாய் மறைந்திருந்த தாழ்வுணர்ச்சியையும் கூட அகற்றிவிட்டது
மனமார்ந்த நன்றிகளுடன்
லோகமாதேவி
***
அன்புள்ள ஜெ
நான் எழுதலாமா? பதிவை வாசித்தேன். இது எழுத எண்ணும் ஒவ்வொருவரின் மனதின் குரல். தங்கள் பதில் கேள்விக்கான பதிலாய் மட்டுமில்லாமல், நேர மேலாண்மை பற்றியும் சிறப்பாய் பேசுகிறது.
இதை நீங்கள் வருடம் ஒருமுறை மறுபதிவிடலாம். புதிய வாசகருக்கும், எழுத நினைபோருக்கும் எப்போதும் பொருந்தும்.
நன்றி
அன்புடன்
பகவதி
***