விதுரரின் மாளிகையிலிருந்து அரண்மனை திரும்பும் வரை அரசியர் மூவரும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. தங்கள் எண்ணங்களில் மூழ்கி தேரின் ஒற்றைப் பீடத்தில் மூன்று வெவ்வேறு உலகங்களிலென அமர்ந்திருந்தனர். விதுரரின் நிலைகுலைவு அவர்களை வெவ்வேறு வகையில் உலுக்கிவிட்டிருந்தது. அவ்வரண்மனையில் ஒவ்வொன்றும் காற்றுகளால் அலையடிக்கும் ஆடைகள்போல கொந்தளித்துக்கொண்டிருக்கையில் விதுரர் அசையாத் தூண் என நின்றிருந்தார் என்னும் உளப்பதிவு பானுமதிக்கு இருந்தது. எப்போதோ ஒருமுறை “மைந்தரிடையே போர் என்பது முற்றழிவு என்று தெரியாதவரா அமைச்சர்? எவருக்கோ என விலக்கம் கொண்டிருக்க எப்படி இயல்கிறது அவரால்?” என்று அவள் அசலையிடம் சினந்து கேட்டதும் உண்டு. ஆனால் திருதராஷ்டிரரைவிடவும் அவர் உள்ளுலைந்துவிட்டிருக்கிறார் என்று தெரியவந்தமை அச்சத்தையே அளித்தது. சொல்லளிக்க நிலையுள்ளம் கொண்ட எவரும் இனி இந்நகரில் இல்லை என அவள் எண்ணிக்கொண்டாள். தாரை பெருமூச்சுடன் அசைந்தமர்வது கண்டு திரும்பி நோக்கினாள். அசலை தன் ஆடைநுனியை கசக்கி முறுக்கிக்கொண்டு உதடுகளை இறுக்கியபடி தேரின் சாளரத்தினூடாக ஒளிப்பரப்புகளாக அணுகி அகன்ற மாளிகைச்சுவர்களை நோக்கிக்கொண்டிருந்தாள்.
அரண்மனை முகப்பிலேயே பானுமதிக்காக அரசுச்சேடியர் காத்து நின்றிருந்தனர். அவள் உள்ளே நுழைய அவர்கள் இருபுறமும் என உடன் நடந்தபடி செய்திகளை சொன்னார்கள். முதுசேடியும் அமைச்சியுமான சுதாமை வணங்கி “ஒற்றர்கள் தங்களுக்காக காத்து நின்றிருக்கிறார்கள், அரசி” என்றாள். “அவர்களை சிற்றவைக்குள் அமரச்செய்க!” என்றபின் அவள் இரண்டாவது சேடியை பார்த்தாள். அவள் வந்து வணங்கி “அரசரின் அவைச் செய்தி தங்களுக்கு தனியோலையாக அனுப்பப்பட்டுள்ளது, அரசி” என்றாள். பானுமதி தலையசைத்தாள். “நாளை முதல்நாழிகையில் அரசர் தம் தம்பியர் ஐவருடன் வந்து பேரரசியின் வாழ்த்துகளைப் பெற்று கிளம்பவிருக்கிறார். தாங்கள் அங்கு உடனிருக்க வேண்டுமென்று அரசர் விரும்புகிறார்” என்றாள்.
பானுமதி மூன்றாவது சேடியை பார்த்தாள். துரியோதனனின் தனிச்சேடியான அவள் “அரசர் அன்னையிடம் செல்வதற்குமுன் தங்களைத் தேடி வருவார், அரசி” என்றாள். பானுமதி விழிகளை திருப்பிக்கொண்டாள். அவள் நெஞ்சு படபடத்தது. துரியோதனன் அவள் மஞ்சத்தறைக்கு வருவதில்லை என்பதை அரண்மனையில் அனைவருமே அறிந்திருந்தார்கள். அவள் அசலையிடம் திரும்பி “பேரரசியிடம் சென்று சொல்! நாளை பிரம்மப் பொழுதில் அரசர் அங்கு வருவார். அதற்கு முன்னரே நான் அங்கு வருவேன். அங்கு மூத்த அரசியர் ஒன்பதின்மரும் இருக்கவேண்டும். முறைப்படி வாழ்த்து அளித்து செஞ்சாந்திட்டு அனுப்புவதற்கான அனைத்தும் சித்தமாக இருக்கவேண்டும்” என்றாள்.
தாரை முணுமுணுப்பாக “அதை அங்கே சேடியர்களே செய்துகொள்வார்களே…” என்றாள். பானுமதி “பேரரசியின் உளநிலை எவ்வாறு இருக்குமென்று இப்போது சொல்ல இயலாது. முன்னரே சென்று அதை கணித்து அரசர் வருவதற்குள் எனக்கு செய்தி அனுப்பவேண்டும்” என்றாள். அசலை “ஆம்” என்று தலை வணங்கினாள். பானுமதி நான்காவது சேடியை பார்த்து “கற்றுச்சொல்லிகள் ஓலையுடன் சித்தமாக இருக்கும்படி சொல்க! எஞ்சிய ஆணைகளை நான் பிறப்பிக்க வேண்டியுள்ளது” என்றாள். தாரையும் அசலையும் வணங்கி விடைபெற்றனர். அவள் இடைநாழியில் நடக்க மேலும் நான்கு சேடியர் அவளைத் தொடர்ந்து நடந்தபடி செய்திகளை சொன்னார்கள். அனைத்து கௌரவர்களும் தங்கள் துணைவியரிடம் விடைபெற்று படைப்பிரிவுகளுக்கு கிளம்பிவிட்டனர். உபகௌரவர்கள் ஒவ்வொருவராக தங்கள் துணைவியரிடம் விடைபெற்று கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
“இளந்துணைவியர் துயருற்றிருக்கிறார்களா?” என்று பானுமதி கேட்டாள். “ஆம் அரசி, பலர் உளம் மயங்கி விழுந்துவிட்டார்கள். நூற்றுக்கு மேற்பட்டவர்களை மருந்துநிலைகளுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். கௌரவ இளவரசர்களின் அரசியரிலேயே பலருக்கு தன்னினைவு இல்லை. அகிபீனா உண்டு துயில்வதனால் அவர்கள் பித்துக்கு அண்மையில் என உளம்சிதைந்துள்ளனர்.” பானுமதி வெறுமனே தலையசைத்தாள். “விடைபெறும் சடங்குகள் அனைத்தும் முடிந்துவிட்டன. அமைச்சர்களில் எழுவர் மட்டுமே இங்கு எஞ்சப்போகிறார்கள். அனைத்துப் பொறுப்புகளும் இன்று நள்ளிரவில் முறைமாற்ற மணி ஓசையிடும்போது அவர்களுக்கு சென்றுசேரும்” என்றாள் இன்னொரு சேடி.
“அனைத்து ஆணையோலைகளும் தங்கள் அறையில் காத்திருக்கின்றன. தாங்கள் ஒப்புதலை அளித்தால் அவற்றை அனுப்பிவைப்போம்” என்று ஒரு சேடி சொன்னாள். “நான் அரைநாழிகைப்பொழுதில் அங்கு வருகிறேன், செல்க!” என்று அவளிடம் சொல்லிவிட்டு சிற்றவைக்குள் நுழைந்தாள். அங்கு அமர்ந்திருந்த ஒற்றர்கள் எழுந்து வணங்கினார்கள். அவள் அவ்வணக்கங்களை ஏற்று பீடத்தில் சென்று அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டாள். சேடி கதவை வெளியிலிருந்து மூடினாள். ஒற்றர்கள் அவளைச் சூழ்ந்து தாழ்வான பீடங்களில் அமர்ந்தனர். நடுவே அரசிக்குரிய பீடத்தில் கைகளை மார்பில் கட்டியபடி விழிமூடி அவள் அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு ஒற்றராக எழுந்து வந்து அவள் அருகே இருந்த பீடத்தில் அமர்ந்து தணிந்த குரலில் உணர்ச்சிகள் ஏதும் கலக்காமல் அணிச்சொற்களோ முறைமைக்கூற்றுகளோ இன்றி தங்கள் செய்தியை உரைத்தனர். நுண் விவரிப்புகள் செறிந்ததும் தன் கருத்துகளோ உணர்ச்சிக் கூற்றுகளோ இல்லாததுமான அவ்வுரைகள் அனைத்தும் ஒன்றேபோல ஒலித்தன. ஆனால் ஒவ்வொன்றிலும் அவ்வொற்றரின் பார்வையும் அவருடைய கள வாழ்வின் கால அளவும் தெரிந்தது.
வடபுலத்து ஒற்றர் சுக்ரர் “அஸ்தினபுரியின் படைகளில் பெரும்பகுதி கங்கையை கடந்துவிட்டது, அரசி. கோட்டையைச் சூழ்ந்திருக்கும் படைகளும் அகன்றுகொண்டிருக்கின்றன. நாளை உச்சிப்பொழுதுக்குள் படைகள் முழுமையாகவே இங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடும்” என்றார். “பதினெட்டு பிரிவுகளாக படைகள் நின்றுள்ளன. எவை எப்போது கிளம்பவேண்டும் என்று முன்னரே வகுக்கப்பட்டு ஆணைகள் அளிக்கப்பட்டுவிட்டன. ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் அவற்றை வகுத்துள்ளமையால் பிழைகளின்றி நிகழ்கின்றன அனைத்தும். ஊற்றிலிருந்து ஆறு கிளம்பி துணையாறுகளை இணைத்துக்கொண்டு பெருகிச்செல்வதுபோல படைகள் செல்லும். குருக்ஷேத்திரத்தை அணுகியதும் மீண்டும் பதினெட்டு கிளையாறுகளாகப் பிரிந்து முதல்கிளை முகப்பாகவும் பதினெட்டாம்கிளை இறுதியாகவும் அமையும்.”
அதை அஸ்வத்தாமன் ஜலபத வியூகம் என்று அழைத்தான். அவள் அதை அவையில் கேட்டிருந்தாள். ஓலையில் பார்த்துமிருந்தாள். ஆனால் அவள் முகத்தில் ஏதும் வெளிப்படவில்லை. அரைக்கண் மூடி வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தாள். ஊர்ப்புலத்து ஒற்றரான சிபிரர் “போர் அறிவிக்கப்பட்ட பின் ஒவ்வொரு நாளுமென பெருகி வந்த உளஎழுச்சி இன்று காலை முதல் அடங்கத் தொடங்கியிருக்கிறது, அரசி” என்றார். “பெரும்பாலான ஊர்களில் துயரம் மிகுந்த அமைதியே நிலவுகிறது. அது இயல்புதான் என்று தோன்றினாலும் இயல்பல்ல என்ற உள்ளுணர்வை நான் அடைந்தேன். பெரும்பாலான நகர்களில் நிமித்திகர்கள் தீய விளைவுகளையே குறி நோக்கி சொல்லியிருக்கிறார்கள். மலைக்குடிகளின் பூசகர்களில் தெய்வங்கள் வெறியாட்டெழுந்து பேரழிவை முன்னுரைத்திருக்கின்றன. மூதன்னையர் கனவுகளில் மண் மறைந்த அன்னைத்தெய்வங்கள் எழுந்து துயர் வருவதை கூறியிருக்கின்றன. பெண்கள் பலர் தீய கனவுகளை கண்டிருக்கிறார்கள். மூத்தோரும் நீத்தோரும் ஒரு சொல்லும் உரைக்காமல் அழுத கண்ணீருடன் வந்து அவர்கள் கனவுகளில் நின்றிருக்கிறார்கள்.”
“தீய நிமித்தங்கள் பலவற்றை பார்த்தோம் என்ற பேச்சு எங்கும் உலவிக்கொண்டிருக்கிறது” என்று அவர் தொடர்ந்தார். “இன்று புலரியில் பெண்கோழி கூவியதை பார்த்ததாக பல சிற்றூர்களில் பேச்சு எழுந்தது. வெண்காகம் ஒன்று இல்லமுற்றத்தில் வந்து அமர்ந்தது என்று தென்புலத்து ஊர்கள் தோறும் பெண்கள் சொல்ல கேட்டேன். எறும்புகள் நிரைகுலைந்து செல்வதையும் பசுக்கள் விடாமல் அழுதுகொண்டிருப்பதையும் மீன்கள் ஒழுக்குக்கு எதிராக நீந்தி எங்கோ செல்வதையும் கண்டோம் என்கிறார்கள். அச்சம் மேலும் அச்சத்தை உருவாக்குகிறது. ஒரு தீய நிமித்தம் நூறு தீய நிமித்தங்களை விழியில் கொண்டுவந்து வீழ்த்துகிறது. நம் குடிகள் இப்போதே போரில் முற்றாக தோற்றுவிட்டவர்களாக உணர்கிறார்கள்.”
பானுமதி மெல்ல கலைந்து “அது அவர்களின் உளவிழைவாகவும் இருக்கலாம்” என்றாள். அம்மறுமொழியை எதிர்பாராத சிபிரர் தடுமாறி “அறியேன். இருக்கலாம்” என்றார். படைப்பிரிவுகளின் ஒற்றரான சந்திரர் “ஆனால் நமது படைகள் வெறிகொண்டுதான் செல்கின்றன. போருக்குச் செல்கிறோம் என்பதே அவர்களை பித்துகொள்ள வைக்கிறது. அதற்கு மேல் ஒவ்வொருவருக்கும் உடல் நிறைந்து மூக்கினூடாக சொட்டுமளவுக்கு மது அளிக்கப்பட்டுள்ளது” என்றார். படைப்பிரிவுகளிலிருந்து வந்த மற்றொரு ஒற்றரான மூர்த்தர் “நம் படைவல்லமை பெரிது என்பது அனைவரையும் எழுச்சிகொள்ளச் செய்துள்ளது. பீஷ்ம பிதாமகருக்கு எதிராக அர்ஜுனர் வில்லெடுக்க மாட்டார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆகவே போர் முதல்நாளிலேயே முடிந்துவிடும் என எண்ணுகிறார்கள்” என்றார்.
சாலைகளின் ஒற்றரான குமுதர் “வணிகர்கள் பெரும்பாலானவர்கள் பாரதவர்ஷத்தின் தென்பகுதியை நோக்கி நகரத்தொடங்கிவிட்டார்கள்” என்றார். “எனது துணை ஒற்றர்களின் அனைத்துச் செய்திகளையும் தொகுத்துப் பார்க்கையில் பெரும்பாலான வணிகக்குழுக்கள் ஏற்கெனவே விந்திய மலையை கடந்துவிட்டன என்று தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இங்கு காங்கேயத்திலும் சைந்தவத்திலும் பெருவணிகர் குழுக்களே இல்லாமல் ஆகக்கூடும்” என்றார். பானுமதி முகமாறுதல் இல்லாமல் கண்மூடி அதை கேட்டிருந்தாள். “அவர்கள் சென்ற இடங்களை உள்ளூர் சிறுவணிகர் நிரப்புவதனால் இப்போது பெரிய இழப்பு தெரியவில்லை. ஆனால் இன்னும் சிலநாட்களில் வருபொருள் இன்மையால் வணிகம் தேங்கும். பொருட்சுழற்சி நிலைக்கும். அதை நம்பி வாழ்வோரின் வாழ்க்கை இடருக்குள்ளாகும்.”
“போருக்குப் பின் இங்கு பெரும்பாலான படைவீரர்கள் இறந்துவிடுவார்கள் என்று அவர்கள் கணிக்கிறார்கள். ஆகவே இந்நாடுகள் அனைத்திலுமே மிகுதியும் கைம்பெண்களே எஞ்சுவார்கள். அவர்கள் பொருள் வாங்கி நுகர்வது குறையும். துயர்காக்கும் குழந்தைகளுக்கும் அரிய பொருட்கள் வாங்கப்படமாட்டாது” என்று அவர் தொடர்ந்தார். “போருக்குப் பின் இங்குள்ள அரசர்களின் கருவூலங்கள் முற்றொழிவதனால் மிதமிஞ்சி வரி கொள்வார்கள். அவற்றை அளித்த பின் வாங்குவதற்கு எவரிடமும் பணம் இருக்கப்போவதில்லை. ஆகவே இங்கு இனி பெருவணிகத்திற்கு வாய்ப்பில்லை. அன்றாட உணவுப்பொருட்களும் ஆடைகளுமன்றி எதுவும் வாங்கப்படாது. வணிகத்தில் பெரும்பகுதி அழகுக்கும் பெருமைக்கும் வாங்கப்படும் பொருட்களே என்பதனால் வணிகர்களுக்கு முதற்பொருள் பெருக வாய்ப்பில்லை என்று எண்ணுகிறார்கள்.”
பானுமதி விழிகளை திறக்காமலேயே தலையசைத்து “அத்துடன் அனைத்து நாடுகளும் வணிகர்களுக்கு மேலும் வரி சுமத்தக்கூடும். சுங்க நிலைகளில் கொள்ளையே நிகழ வாய்ப்புள்ளது” என்றாள். “ஆம் அரசி, அவ்வாறு அவர்கள் அஞ்சுகிறார்கள். இங்கு அனைத்தும் கலங்கி தெளிந்த பின்னரே தென்னகத்திலிருந்து வணிகக் குழுக்கள் இங்கு மீண்டும் வரும்” என்றார் குமுதர். பானுமதி “இதுநாள்வரை இந்நாடுகள் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று இணைத்தவை வணிகநிரைகளே. அவர்கள் அகல்வார்கள் என்றால் இந்நிலவிரிவு ஆயிரம் துண்டுகளாக சிதறும். அசைவழிந்து, எடைமிகுந்து படிந்து நிலைகொள்ளும். மீண்டு எழுவதற்கு நெடுங்காலமாகலாம்” என்றாள். அரசியல் ஒற்றரான பிரகம்பர் “அவ்வாறல்ல அரசி, வென்றவர்களில் ஒருவர் முதன்மை ஆற்றல் கொண்டவர் ஆகி பூசல்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்து ஒற்றைப்பேரரசை உருவாக்கி ஆண்டார் என்றால் எல்லை கடந்து சென்று அயலாரை வென்று கப்பம் கொண்டு வந்து கருவூலத்தை நிறைக்க முடியும். சில ஆண்டுகளிலேயே இங்கு மீண்டும் வணிகம் தழைக்கக்கூடும். முதிய வணிகர் ஒருவர் அதை சொல்லக் கேட்டேன். போரென்பது காட்டெரி. அதற்குப் பின் புதிய மரங்கள் துளிர்த்து காடு மேலும் தழைக்கும் என்று அவர் சொன்னார்” என்றார்.
அந்தண ஒற்றரான சௌம்யர் “அமைச்சராகவும் பூசகராகவும் வேதியராகவும் போருக்குச் செல்லும் அந்தணர்களை அந்தணர்குழுக்கள் குலநீக்கம் செய்யும் அதர்வவேதச் சடங்குகள் நிகழ்ந்து வருகின்றன, அரசி. குருதிக்களத்திற்குச் செல்பவர்கள் மூன்று வேதங்களையும் துறக்கவேண்டும் என்பது தொல்நெறி. எரிவளர்த்து அனலோனை வரவழைத்து அவியூட்டி அதில் தங்கள் முப்புரி நூலை களைந்திட்டு குலமொழிகிறார்கள். குழல் களைந்து நதியில் மூழ்கி எழுந்து திரும்பி நோக்காமல் அகல்கிறார்கள். சென்றவர்களின் பெற்றோரும் மைந்தரும் அவர் இறந்தவர் என்று கருதி நீத்தார்களுக்குரிய நீர்ச்சடங்குகள் இயற்றுகிறார்கள். மனைவியர் கைம்பெண்நோன்பு கொள்கிறார்கள்” என்றார்.
“போர்முடிந்து மீள்பவர்களுக்கு மறுபிறப்புக்குரிய சடங்குகள் இயற்றி, நுண்சொல் செவியுரைத்து, முப்புரிநூல் அணிவித்து குலத்திற்கு மீண்டும் எடுத்துக்கொள்வார்கள். மனைவியையே மீண்டும் மணந்துகொள்வார்கள்” என்றார் சௌம்யர். “எளிய சடங்குதான். ஆனால் நெடுங்காலமாக இங்கே அவ்வகைச் சடங்குகள் நிகழ்ந்ததில்லை. நூல்களை நோக்கி அதை செய்கிறார்கள். சடங்குதான் என்று உணர்ந்தாலும் செல்பவர்களின் மைந்தரும் மகளிரும் கதறியழுகிறார்கள். பெற்றோர் துயர்தாளாமல் விழுந்துவிடுகிறார்கள். அவர்களில் சிலர் அரசர் மேல் பழிகூவினர். அங்கே கூடி நின்றிருந்த எவரும் மறுப்புரை எழுப்பவில்லை. அவர்கள் அச்சொற்களுடன் உளமொப்புகிறார்கள் என்றே தோன்றியது.”
அவர்கள் ஒவ்வொருவருடனும் அவர்கள் முன்பு சொன்ன செய்திகள் இணைந்துகொண்டன. ஓரிரு சொற்களுக்குப் பின் அவள் அந்த நிலத்தில் விழிவிரிய செவிகூர்ந்து சென்றுகொண்டிருந்தாள். அவர்கள் சொன்னவற்றை அவள் அங்கு நிகழ்வனவாக கண்டாள். சொற்களை அவ்வாறு ஓவியங்களாக விரித்துக்கொள்வது அவற்றின் அனைத்து கூர் செய்திகளையும் சொல்லப்படாத மடிப்பாழங்களையும் விரித்துக்கொள்வது என அவள் உணர்ந்திருந்தாள். செய்திகள் வந்தணைவதில் உள்ள ஒரு ஒழுங்கை அவள் முன்பே அறிந்திருந்தாள். அஸ்தினபுரியிலிருந்து அகன்று அகன்று செல்லும் வரிசையில் செய்திகள் அவளிடம் வந்தணைந்தன. தொலைதூர எல்லைப்புறச் செய்தி இறுதியாக வந்தணைந்தது. அலையொன்று விரிந்து பெருகி விசை தளர்ந்து செல்வதன் ஓவியம் அவளுள் எழுந்தது. ஒவ்வொரு நிகழ்வும் மையத்தில் ஒன்றெனவும் எல்லைகளில் பிறிதொன்றெனவும் மாறிவிட்டிருந்தது. மையத்தில் நிகழ்ந்த ஒன்று எல்லையை அடைந்து பிறிதொன்றாகி அவளை வந்தடையும்.
“எல்லைப்புறச் சிற்றூர்களில் உணவுப்பொருட்களை கரந்துவைக்கத் தொடங்கிவிட்டனர், அரசி” என்றார் காவல் ஒற்றராகிய பத்ரர். “முதலில் பேரூக்கத்துடன் அவர்களே உணவும் நெய்யும் படைகளுக்கு அளித்தனர். தங்களுக்கான வரைவெல்லை கடந்ததும் அவற்றை சேர்த்து நமக்கு விற்கத்தொடங்கினர். ஆனால் நாமளிக்கும் செல்வம் ஓலைக்குறிப்பென்றே வந்தணைகிறது என்று உணர்ந்ததும் அவர்களின் உளம் மாறத்தொடங்கிவிட்டது. அரசக்குறிப்பு பொருளென்று ஆகவேண்டுமெனில் அங்கு அரசென்று ஒன்று இருக்கவேண்டும். போருக்குப் பின் எவ்வரசு எவ்வண்ணம் இருக்குமென்று இப்போது எவரால் உரைக்க முடியுமென்று ஒரு முதியவர் சொல்வதை கேட்டேன். அவர்கள் நெல்லையும் கோதுமையையும் கலங்களில் போட்டு விளிம்புகளை மெழுகும் களிமண்ணும் கலந்த பிசினால் ஒட்டி உருக்கிச் சுட்டு மண்ணில் ஆழப்புதைத்து வைக்கிறார்கள். உலர்ந்த கிழங்குகளை பெரிய தோலுறைகளுக்குள் பொதிந்து புதைக்கிறார்கள். நெய்க்கலங்களை சுனைகளின் ஆழங்களுக்குள் வேர்களில் கட்டி வைத்திருக்கிறார்கள். நாம் எண்ணுவதைவிட மிகுதியான உணவு அங்கே உள்ளது. போர் முடிந்து ஆறுமாதம் உண்பதற்குரிய உணவு பெரும்பாலான மலைச்சிற்றூர்களில் எஞ்சியுள்ளது.”
பானுமதி எரிச்சலடைந்தாள். களைப்பு அவ்வெரிச்சலைப் பெருக்கி உடலெங்கும் பரப்புவது. அதை உணர்ந்து அவள் தன் கைவிரல்களை ஒவ்வொன்றாக தளர்த்தி நீட்டி மெல்ல தன்னை எளிதாக்கிக்கொண்டாள். “அவர்களுக்கு போர் குறித்த செய்திகளை எவர் சொல்கிறார்கள்?” என்றாள். “அரசி, அவர்கள் போரைப் பார்த்து இரண்டு தலைமுறைகாலமாகிறது. ஆனால் நாம் படைகொண்டு சென்ற எல்லைப்புறங்களுக்குச் சென்றவர்கள் ஒவ்வொரு சிற்றூரிலும் ஒருவரேனும் உள்ளனர். போரென்பது களத்தில் நடக்கும் படை நடத்தும் களமோதல் மட்டுமல்ல. போர் என்பது களம் முடிந்த பின் வரும் எரிபரந்தெடுத்தல், கொள்ளை, சூறையாடல், படைக்கட்டின்மை, அரசின்மை அனைத்தும் கலந்ததே என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். எந்தப் போர் முடிந்த பின்னரும் ஏழு நாட்கள் படைவீரர்களை அவர்களின் தலைவர்கள் கட்டுப்படுத்த இயலாதென்றும், அந்தக் கட்டுப்பாடு உருவாகி வருவதற்குள் குடியினர் பெருமளவில் இழந்துவிட்டிருப்பார்கள் என்றும் அனைவருக்குமே தெரிந்துள்ளது.”
“அவ்வாறு ஒவ்வொரு முறையும் நிகழவேண்டியதில்லை” என்று பானுமதி முனகிக்கொண்டாள். “ஆம், ஆனால் அவ்வாறன்றி முறைப்படி நிகழ்ந்த போரெதுவும் எந்த வீரரின் நினைவிலும் இல்லை. எந்த நூலும் இதுவரை அப்படி ஒரு போரை சொன்னதில்லை. ராகவராமன் படைகொண்டு சென்று இலங்கையை வென்றபோதுகூட ஏழு நாட்கள் அந்நகர் சூறையாடப்பட்டது என்றே தொல்கதைகள் சொல்கின்றன” என்றார் பத்ரர். பானுமதி தலையசைத்தாள். “விளைவயல்களை எரிப்பதும் குடிநீர் நிலைகளில் களிறுகளை இறக்கி அழிப்பதும்கூட போர்களுக்குப் பின் வழக்கமாக உள்ளது. போர் முடிந்து பின்னர் குருதி உலர்ந்து அனைத்தும் சொற்களென்றாகி நினைவுகளுக்குச் சென்று சுருங்கிய பின்னரே மேழி எடுத்து வயலில் வைக்க முடியும். அதன் பின் பயிர் வளர்ந்து விளை பெருகி பெறுவதே உணவு. அதுவரைக்குமான உணவு ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டும். போருக்குப் பிந்தைய அரசர்கள் வென்றவராயினும் தோற்றவராயினும் வெறிகொண்ட திருடர்களே. அவர்கள் கவர்ந்து சென்றது போகவே நம் மைந்தருக்கு உணவென்றாகும் என்று மூத்தவர்கள் சொல்கிறார்கள்” என்றார் பத்ரர்.
பானுமதி சில கணங்களுக்குப் பின் சூதர்குலத்து ஒற்றரான ஊர்த்துவரிடம் “நீர் என்ன எண்ணுகிறீர், ஊர்த்துவரே?” என்றாள். அவர் சற்று தயங்கிய பின் “நாம் அனைத்தையும் பேசித்தான் ஆகவேண்டும். அரசுகாலத்தை அறப்பொழுதென்றும் மறப்பொழுதென்றும் தொல்மரபு பிரித்துக்கொள்கிறது. முடிமன்னரின் கோல் தொல்நெறிகளும், முனிவரும், அந்தணரும் வகுக்கும் முறையில் நின்றிருக்கும் அமைதிக்காலமே அறப்பொழுது. எதன்பொருட்டு எழுந்தது என்றாலும் போருக்கு முன்பும் போருக்குப் பின்பும் உருவாவது மறப்பொழுது. அங்கு அறங்களென எதுவும் திகழ்வதில்லை” என்றார். பானுமதி “அது படைகளைப்பற்றிய குடிகளின் அச்சமும் ஐயமும் மட்டுமே” என்றாள். “ஆம், ஆனால் அவை எப்போதும் உள்ளன. அவற்றை எவ்வரசரும் நோக்காதொழிய இயலாது” என்று ஊர்த்துவர் தொடர்ந்தார்.
“எங்கும் படைகளின் உளநிலை ஒன்றே. உயிர் கொடுக்கப்போகிறோம் என்னும் உணர்வால் தாங்கள் செய்வதனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுமென்று படைவீரர்கள் எண்ணுகிறார்கள். போருக்குப் பின் உயிர் கொடுத்தோம் என்னும் உணர்வால் எதையும் செய்யலாம் என்று துணிகிறார்கள். செருகளத்தில் பல்லாயிரக்கணக்கில் தன்னவர் இறந்துகிடப்பதைக் கண்டு குருதியிலாடி மீண்டபின் ஒவ்வொரு படைவீரனும் வெறிகொண்டிருக்கிறான். போருக்கெழாது ஊரில் குடியிருக்கும் அனைத்து குடிகள் மேலும் அவன் தீரா பெருவஞ்சம் கொண்டிருக்கிறான். அவர்களின் பொருட்டே தானும் தன்னவரும் குருதி சிந்தியதாக எண்ணிக்கொள்கிறான். அவர்கள் எவ்வகையிலோ தங்களை இறப்பு நோக்கி செலுத்தியதாகவும் அதற்கான பொறுப்பை அவர்கள் ஏற்கவேண்டுமென்றும் அதன் பொருட்டு அவர்கள் பொருட்கொடையும் தேவையெனில் உயிர்க்கொடையும் அளிக்கவேண்டுமென்றும் அவன் கருதுகிறான். போருக்குப் பின் நிகழும் கொள்ளை எந்த வீரருக்கும் குற்றஉணர்வை அளிப்பதில்லை.”
பானுமதி அந்த நேரடியான கூற்றை எதிர்பார்க்கவில்லை. எண்ணங்கள் ஓய்ந்து அவள் மறுசொல்லின்றி அமர்ந்திருந்தாள். “போருக்குப் பின் வீரர்கள் பெண்கவர்தலும் வல்லுறவு கொள்ளுதலும்கூட தொல்முறைகளால் மறைமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உயிர் மீண்டதுமே படைவீரன் கொள்ளும் முதல் எண்ணம் காமமாகவே இருக்கிறது. வாழ்கிறேன் என்று தனக்கும் தன் தெய்வங்களுக்கும் அவன் அறிவித்துக்கொள்வது அது. வாழ்ந்திருக்கும் கணங்களை கொண்டாடுவது. திரும்பும் படைகள் தங்கள் நாட்டு ஊர்களின் மீதே மலையிறங்கும் பெருமழையென பரவுகின்றன. பெண்டிர் அனைவரும் அவர்களின் களியாட்டிற்கு உரியவர்களாகிறார்கள்” என்றார் ஊர்த்துவர். “தொன்றுதொட்டு இவ்வழக்கம் பழங்குடிகளிடமும் முறைமையென ஒப்புக்கொள்ளப்பட்டது. வென்று வருபவன் வீரன் என்றும் பெண்கள் அவனுடன் உறவுகொண்டு பிறக்கும் குழந்தைகள் வெற்றி வீரர்களாக இருப்பார்களென்றும் குலம் பெருக்கும் களிறுகளென எழுவார்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். சிறுகுடிகளில் படைவென்று வரும் வீரர்களுக்கு மகளிரைத் திரட்டி அளிக்கும் வழக்கமே உள்ளது. விலங்குகளில் வென்று வரும் கடுவன் பேடைகள் அனைத்தையுமே தனக்கென கொள்ளும் வழக்கமுள்ளதுபோல.”
“உண்மையில் அதை பெண்டிர் அஞ்சுகிறார்களா விரும்புகிறார்களா என்று கண்டறிய இயல்வதில்லை. எப்போதும் அனைத்துப் பெண்டிரும் அதை அஞ்சுகிறார்கள். தங்கள் கணவர்களுக்கும் தந்தையருக்கும் பிழை செய்வதாகவே அதை கருதுகிறார்கள். மாற்றான் தொடுவதற்கு முன் உயிர் மாய்த்துக்கொள்ளவேண்டும் என்ற பேச்சு சிற்றூர்கள் அனைத்திலுமே திகழ்வது. ஆனால் போர் வெற்றிகொண்ட வெறிக்களிப்புடன் திரும்பிவரும் வீரர்களை காண்கையில் அவர்களின் கருப்பைகளில் குடிகொள்ளும் தெய்வங்கள் எழுமென்றும் அவர்களை அவையே தங்கள் கருவிகளாகக் கொள்ளும் என்றும் பெண்டிர் காமவிடாயும் களிப்பும் கொண்டு அவர்களை நோக்கி சென்று காமம் கொண்டாடுவார்கள் என்றும் தொல்கதைகள் கூறுகின்றன” என்று ஊர்த்துவர் சொன்னார்.
“இது சூதர்மொழி… அவர்கள் என்றும் அறம், ஒழுக்கம், மரபு அனைத்துக்கும் எதிர்நிலைகொள்பவர்கள்” என்றார் முதிய ஒற்றரான சுக்ரர். “என் சொல் விரும்பப்படவில்லை எனில் நிறுத்திக்கொள்கிறேன்” என்றார் ஊர்த்துவர். “சொல்க, இதுவும் ஒரு நோக்குதான்” என்றாள் பானுமதி. “ஒரு போருக்குப் பின் போர்வென்றவர்களின் மைந்தர்களால் அந்நிலம் புதுத் தளிர் கொண்டெழவேண்டும். அதுவே உயிரின் இயல்பு. ஆகவே மகளிர் போர்வென்று வரும் வீரர்களை அஞ்சி வெறுக்கிறார்கள், அவர்களின் உயிர்த்துளியை எண்ணி அவர்களின் உடல்கள் காத்திருக்கின்றன” என்றார் ஊர்த்துவர். “இழிசொல்… இது மகளிரைப்பற்றிய இழிசொல் அன்றி வேறல்ல” என்றார் சுக்ரர். பிறர் சினத்துடன் மெல்ல முனக பானுமதி “ம்” என்றாள். அவ்வோசை அவிந்தது.
பானுமதி “என்ன நிகழுமென்று இப்போது நம்மால் சொல்லக்கூடுவதில்லை. ஆனால் எவர் வென்றாலும் அவர்கள் அஸ்தினபுரிக்கு அயலவர்கள் அல்ல. அஸ்தினபுரியை பேணும் உரிமையின் பொருட்டே இருசாராரும் போருக்கெழுந்திருக்கிறார்கள். அதை நம்புவதன்றி இப்போது வேறு வழி இல்லை” என்றாள். ஒற்றர்கள் எழுந்து வணங்கி வெளியேறினர்.
பானுமதி எழுந்தமர்ந்தபோது சுதாமை உள்ளே வந்து “ஒற்றர்பெண்டுகள் வந்துள்ளனர், அரசி” என்றாள். மீண்டும் சாய்ந்துகொண்டு “வரச்சொல்க!” என்றாள். ஓசையில்லாமல் ஒற்றர்பெண்டிர் வந்து அவளைச் சூழ்ந்து அமர்ந்தனர். சூதமகளிராகவும் வேட்டுவ வணிகர்களாகவும் ஊர்கள்தோறும் செல்பவர்கள். அவள் அவர்களிடம் பேசும்படி கைகாட்டினாள்.
சிற்றூர் ஒற்றர்பெண்டான அமிதை முதலில் சொல்லத் தொடங்கினாள். “பெரும்பாலான சிற்றூர்கள் தங்கள் ஊருக்கு வரும் பாதைகளில் காவல்நிலைகளை அமைத்திருக்கின்றன. முதுபெண்டிரில் ஒருவரும் முதுவீரர் ஒருவரும் வில்திறனும் வாள்திறனும் கொண்ட படைப்பெண்டிரின் சிறு குழுவும் அடங்கியது ஓர் வழிக்காவல் அலகு. அவர்கள் சின்னாட்களிலேயே தங்கள் வழிகள் அனைத்தையும் காத்துக்கொள்ளத் தொடங்கினர். ஓரிரு நாட்களுக்குள்ளேயே அவ்வழி செல்பவரிடம் அக்காவலுக்குரிய சிறு பணத்தை கேட்டு பெறத்தொடங்கினர். இன்று எல்லைப்புறங்கள் முழுக்க அவை சுங்கநிலைகளாக மாறிவிட்டன.”
பானுமதி அதை அறிந்திருந்தாள். “வணிகர்கள் நம் எல்லையிலிருந்து கடந்து செல்கிறார்கள். ஆகவே இறுதியாகக் கொடுப்பதுதானே என்ற எண்ணத்தில் கேட்ட சுங்கத்தை அவர்கள் அளிக்கிறார்கள். சுங்கம் மிகுதியாக கிடைக்குந்தோறும் விழைவு பெருகுகிறது. வழிகளைத் தவிர்த்து காட்டுப்பாதைகளினூடாக வணிகர்கள் செல்லத்தொடங்கும்போது காவல்குழுக்கள் சுங்கச்சாவடிகளைவிட்டு நீங்கி வேட்டைக் குழுக்களைப்போல வணிகர்களை தேடிச்சென்று பொருள் கொள்கிறார்கள். மிக அரிதாகவே இது நிகழ்கிறது. ஆனால் இது ஒரு தொடக்கமென்றாகலாம்.”
வழிநிலைகளின் ஒற்றர்பெண்டான சக்ரை “பிற நாடுகளிலும் இது நிகழ்கிறதென்கிறார்கள் வணிகர்கள். ஏனென்றால் ஆண்களைவிட பெண்கள் பொருள்விழைவு மிக்கவர்கள் என்கிறார்கள். மிக விரைவில் பெண்கள் விழுமியங்களை கைவிட்டுவிடுவார்கள். ஏனெனில் ஆண்களைப்போல் ஊர்முறைமையும் குலமுறைமையும் தெய்வமுறைமையும் அவர்களை கட்டுப்படுத்துவதில்லை. அவர்கள் அறிந்த முறைமை குடிமுறைமை மட்டுமே. தங்கள் குடிக்கு வெளியே தயக்கமின்றி எதையும் செய்ய அவர்களால் இயலும்” என்றாள். பானுமதி “அனைத்தையும்விட அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக கவலை கொள்கிறார்கள். போருக்குப் பின் பஞ்சம் வருமென்று அவர்கள் செவிச்செய்தியாக அறிந்திருப்பார்கள். ஒவ்வொருவரும் தங்கள் களஞ்சியங்களை நிறைத்துவைக்க முயல்வார்கள்” என்றாள்.
ஊர்க்குழுக்களின் ஒற்றர்பெண்டான சுதீரை “சில இடங்களில் ஊர்க்காவல் குழுக்களிடையே சிறுபூசல்கள் தோன்றியிருக்கின்றன. சாலைகளில் சுங்கம்கொள்வதில் எல்லைகள் சரியாக வகுக்கப்படவில்லை. நாடெங்கும் அவ்வாறு வகுப்பது இப்போது எளிதுமல்ல. பூசல்கள் பெரிதாகக்கூடும். அவர்களை இப்போதே கட்டுப்படுத்தவேண்டும்” என்றாள். எல்லையூர்களின் ஒற்றர்பெண்டான சத்ரை “எல்லைகளில் ஊர்க்குழுக்களிடையே குல மேன்மை குறித்த பூசலும் தொடங்கியுள்ளது, அரசி. இப்போது அவை சொல்லாடலாகவே உள்ளன” என்றாள். பானுமதி “அவர்களை இப்போது நாம் எவ்வகையிலும் தடுக்க இயலாது. நம்மிடம் இப்போது படைகள் இல்லை. நம்மிடம் இருக்கும் படைகள் இந்நகரைக் காக்கவே போதுமானவை” என்றாள்.
“பொதுவாக படைகளால் தனிக்குழுக்களை வெல்ல இயலாது. எல்லைப்புற குலக்குழுக்கள் எப்போதுமே படைகளுக்கு பெருந்தொல்லைதான். படைகள் தங்கள் பெரிய எண்ணிக்கையால், தங்களுக்குப் பின்னிருக்கும் பேரரசு எனும் அச்சுறுத்தலால் மட்டுமே எல்லைப்புறச் சிற்றூர்களை வென்றுள்ளன. எதிர்த்தவர்களை முற்றழித்து எஞ்சாமல் ஆக்குவதே அரசநிலைகளின் வழக்கம். அச்செய்தி உருவாக்கும் அச்சம் நிலைத்திருப்பதனால்தான் எல்லைகள் ஆளப்படுகின்றன. இப்போது நாம் படைகொண்டு சென்று அவற்றில் ஒரு படையை அவர்கள் வென்றார்கள் என்றால் எஞ்சியிருக்கும் அச்சம் முற்றாக விலகும். தேனீக்கூடு அப்பால் நின்று பார்க்கையில் ஒரு பொதியெனத் தோன்றும். ஒரு சிறு அசைவில் தனித்தேனீக்களாக சிதறி இன்மையென்றாகக்கூடும். நாடுகளும் அவ்வாறுதான். இதை ஒன்றென நிறுத்தும் விசை என்பது அச்சமும் தன்னலமும் தொல்குடிகளின் நம்பிக்கையும்தான்.”
“பூசல் பெருகினால் நம்மால் கட்டுப்படுத்த இயலாது” என்றாள் அந்தணர்குலத்து ஒற்றர்பெண்டான ஹம்ஸை. பானுமதி “சில நாட்களுக்குள்ளேயே எல்லைப்புறமெங்கும் ஓரிரு பெரிய குழுக்கள் உருவாகிவிடும். அக்குழுக்களுக்கே அப்பகுதியை ஆளும் பொறுப்பு அளித்து அவற்றை நம் கைகளாக மாற்றிக்கொள்வோம். எப்போதும் அரசுகள் அவ்வாறுதான் அமைக்கப்பட்டுள்ளன. திருடன் கொழுத்தால் அரசன், அரசன் மெலிந்தால் திருடன் என்று முதுசொல் ஒன்று உண்டு” என்றாள். ஒற்றர்பெண்டுகள் புன்னகைத்தனர். பானுமதி எழுந்து தலையசைக்க ஒற்றர்பெண்டுகள் தலைவணங்கி ஒவ்வொருவராக ஓசையின்றி வெளியே சென்றனர். அவள் பெருமூச்சுடன் எழுந்தாள். களைப்பால் தலைசுழன்றது. ஆனால் படுத்துக்கொண்டே செய்திகளை கேட்டமையால் உடல்கொண்ட ஓய்வு சற்று உயிரை மீட்டளித்தது. கதவைத் திறந்து வந்து பணிந்த சுதாமையிடம் “கற்றுச்சொல்லிகளை அழை. ஆணையோலைகள் அனைத்தும் இன்றே சென்றுவிடவேண்டும்” என்றாள்.