விளையாட்டு
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி பற்றிய வாசகரின் கேள்வியொன்றிற்கு உங்களின் பதிலை படித்து ஏமாற்றமடைந்தேன்.ஏனெனில் கடந்த வாரம் மலைநாட்டு வைணவ திருப்பதிகளை சேவிப்பதற்காக கேரளா வந்தபோது சிறிய கிராமங்களில் கூட பெரிய பெரிய பிளக்ஸ் பேனர் வைத்து சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களின் (பிரேசில்,அர்ஜன்டைனா போன்ற )முழுஉருவ படங்களுடன் கொண்டாடி கொண்டிருந்தது பார்ப்பதற்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.தமிழகம் முழுவதும் ஒன்றுக்கும் உதவாத அரசியவாதிகள் மற்றும் திரைப்பட பிரபலங்களின் ‘கட்அவுட்டை’ பார்த்து சலித்த எனக்கு இது பற்றி உங்களிடம் கேட்கவேண்டுமென நினைத்திருந்தேன்.ஆனால் நீங்கள் ஒரேயடியாக சினிமாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட விளையாட்டிற்கு கொடுக்க தயாராக இல்லை. அதுவும் ஒரேபோடாக – “நல்லவேளையாக என் மகனோ மகளோ அந்த ஈடுபாட்டுடன் இல்லை. இருந்திருந்தால் மிகப்பெரிய உளவிலக்கத்தை அவர்களிடம் அடைந்திருப்பேன்” – போட்டுவிட்டீர்கள்!
அன்புடன்,
அ .சேஷகிரி.
அன்புள்ள சேஷகிரி
ஒருவன் பொழுதை நெடுநேரம் ஒன்றில் செலவழித்தால் அவனுடைய அறிவுக்க்கு ஏதேனும் வளர்ச்சி இருக்கவேண்டும் . அல்லது உணர்வுசார்ந்தும் ஆன்மீகமாகவும் அவனை அது பண்படுத்தவேண்டும். விளையாட்டு அப்படி எதை அளிக்கிறது? நான் விளையாடுவதைச் சொல்லவில்லை. எந்த விளையாட்டும் உடல்நலத்துக்கு நன்று. உணர்வுசார்ந்து விடுதலை அளிப்பது. மறைமுகமாக ஆன்மிகமான வளர்ச்சியும்கூட. விளையாட்டைத் தொலைக்காட்சியில் பார்த்தபடி உட்கார்ந்திருப்பதனால் என்ன பயன். சீட்டு ஆடுவதைப்போலத்தானே? உலகக்கோப்பை போன்றவை ஒருவகையான திருவிழாக்கள். அவற்றைப் புரிந்துகொள்கிறேன். ஒரு கொண்டாட்டம் அவற்றில் உள்ளது. ஆனால் ஆண்டுமுழுக்க விளையாட்டுக்களைப் பார்த்துக்கொண்டிருப்பது பொழுதை மட்டுமல்ல மூளையையும் வீணடிப்பதுதான்
ஜெ
ஜெ,
விளையாட்டு பற்றிய உங்கள் கட்டுரை சலிப்பூட்டியது. விளையாட்டு என்பது சூதாட்டம் அல்ல. அதில் மனித உள்ளத்தின் திறனும் உடலின் திறனும் உச்சகட்டமாக வெளிப்படுகிறது. அது proxy ஆக வாழ்க்கையைத்தான் காட்டுகிறது. அதில் ஈடுபடுவதென்பது மனிதன் தன் எல்லைகளையும் தன்னால் முடிவதையும் கண்டுகொள்ளும் அனுபவம்தான். உங்களுக்குத் தெரியாததைப் பற்றி கருத்துச் சொல்கிறீர்கள்
ராஜ் அருண்
அன்புள்ள ராஜ்
இதையே லா வேகாஸில் சூதாடுபவனும் சொல்லலாம். நான் சுட்டிக்காட்டுவது அதையே.
நான் விளையாடுவதைப் பற்றிச் சொல்லவில்லை. விளையாட்டைப் பார்ப்பதில் மூழ்கி நாட்களை வீணடிப்பதைப்பற்றிச் சொல்கிறேன். எவராயினும் அவர்கள் மேல் எனக்கு மதிப்பில்லை என்று தான் சொல்கிறேன்.
ஜெ