ஆசிரியர்களின் வாழ்த்து

sun

அன்புள்ள ஜெ.,

நான் ஒருகாலத்தில் பள்ளியில் சிறந்த மாணவர்களில் ஒருவன் (பிறகு கட்டமண்ணாகப் போனது வரலாறு). நான் ஆறாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு முன் வகுப்புகளில் பாடம் எடுத்த ஆசிரியைகள் இருவர் என்னுடைய நிலைமைக்கு தான்தான் காரணம் என்று சண்டை போட்டுக்கொண்டார்கள் (இப்போது என்னைப்பார்த்தால் வேறுமாதிரி சண்டை போடுவார்கள் என்பது நிச்சயம்) அதை அந்தப் பருவத்தில் வெகுவாகவே ரசித்தேன்.நான் சொல்வது என்னவென்றால், வேறு  எவர் பாராட்டையும்விட ஆசிரியரின் பாராட்டு நமக்களிக்கும் உந்து சக்தி மிக முக்கியமானது.நீங்கள் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும், கணக்கில்லாத வாசகர் கடிதங்களுக்கு பதிலும் எழுதித் தள்ளியிருக்கிறீர்கள். இதில் உங்கள் ஆசிரியர் சுந்தர ராமசாமி பெயர் குறிப்பிடப்படாத ஒரு கட்டுரையோ, கடிதமோ இல்லை. இத்தனை வருடம் கழித்தும் உங்கள் மேல் அவர் செலுத்தும் பாதிப்பு ஆச்சர்யமானது. அவருடைய ஆளுமைத்திறனை பறைசாற்றக்கூடியது.உங்கள் ஆசிரியரிடமிருந்து உங்களுக்கு எப்போதாவது பாராட்டு கிடைத்திருக்கிறதா, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ? இன்னொரு கேள்வி. நீங்கள் எம்.எஸ் சு க்கு விழா எடுத்தபொழுது அவரை அழைத்தீர்களா?

அன்புள்ள,

கிருஷ்ணன் சங்கரன்

gnanani
ஞானி

அன்புள்ள கிருஷ்ணன்

முதல் விஷயம், இலக்கியத்தில் தொடர்ச்சியும் நீட்சியும் நேரடியானவை அல்ல என்பதே. சுந்தர ராமசாமியும் நானும் வெவ்வேறு தளங்களில் பயணம் செய்பவர்கள். அவர் இலக்கியம் என்னும் இயக்கம் மீது கொண்டிருந்த நம்பிக்கை, அதற்கு அளித்த அர்ப்பணிப்பு இரண்டை மட்டுமே நான் ஏற்று என்னுடையதாக்கிக்கொண்டேன்

என் மனம் மரபை இணைத்துக்கொண்டு முன்னகர்வது. தொல்படிமங்கள் இல்லாமல் இலக்கியம் முழுமைபெறுவதில்லை என்றும் அவை அனைத்தும் மரபில் மதம் என்னும் வடிவில் அமைந்துள்ளன என்றும் நம்புபவன் நான். மரபை விட்டு முற்றாகத் துண்டித்துக்கொள்வதே நவீனத்தன்மை என நம்பியவர் அவர். தன்னை உடைத்து நாற்புறமும் திறந்துகொண்டு வரலாற்றுத்துளியென ஆவதே எழுத்தாளனின் சவால் என நான் நினைக்கிறேன். அவர் தன்னை கூரிய ஆளுமையாகத் தொகுத்து எல்லா படைப்பிலும் வெளிப்படுத்தியவர். இருவேறு காலகட்டங்கள், இருவேறு உளநிலைகள்.

ஆற்றூர் ரவிவர்மா
ஆற்றூர் ரவிவர்மா

சுந்தர ராமசாமி என்னை நானறிய பெரிதாகப் பாராட்டியதில்லை. ரப்பர் வெளிவந்தபோது  ஒரு கடிதத்தில் “நாவல் என்பது மிகப்பெரிய கப்பலைக் கட்டும் கலைபோன்றது. அது எளிதாக உங்களுக்குக் கைவருகிறது . அடிப்படையில் நீங்கள் ஒரு நாவலாசிரியர்’ என எழுதினார். அன்றைய நண்பர்கள் பலருக்கும் அந்தக் கடிதத்தை நகல் செய்து அனுப்பியிருக்கிறேன். ஆனால் பின்னர் படுகை, மாடன்மோட்சம் என நான் வேறுதிசைகளுக்குச் சென்றபோது அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. விஷ்ணுபுரம் அவருக்கு பிடிபடவில்லை. அது நாவலா புராணமா தத்துவநூலா என்று கேட்டார்.

பின்னர் அவருடன் உளவிலகல் உருவானது. அதை அவரைச்சூழ்ந்திருந்தோர் பெருக்கினர். அவர் காடு நாவல் நன்றாக இருப்பதாகச் சொன்னபோது அவருடன் அன்றிருந்தவர்கள் கடுமையாக சீண்டப்பட்டனர் என்று ஒரு நண்பர் நெடுங்காலம் கழித்து என்னிடம் சொன்னார். அவர் ஒரு நிறுவனமாக ஆனார். அந்நிறுவனத்தில் என்னைப்போன்ற தனிப்போக்கு கொண்ட எழுத்தாளர்களுக்கு இடமில்லை.

அவ்விலக்கம் நீடிக்கும்போதுதான் எம்.எஸ் அவர்களுக்குப் பாராட்டுவிழா ஒருங்கமைத்தோம். அதில் அவர் பங்குகொள்வது அன்றைய சூழலில் இயல்வதல்ல. சொல்புதிது தொடங்கியபோது முதல் இதழை அவர் வெளியிடவேண்டும் என விரும்பினேன். ஆனால் நான் கலந்துகொண்டால் அவ்விழாவில் அவர் கலந்துகொள்ளமுடியாத அளவுக்கு ஒரு கெடுபிடி இருந்தது  என்றார்கள். ஆகவே விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை. அவர் முதல் இதழை வெளியிட்டார்.

nithyachaithanyayathi.jpg.image.784.410

சுரா என்னை வாழ்த்தினாரா , என் எழுத்தை அறிந்திருந்தாரா என்று கூடத் தெரியாது. இல்லை என்றே நினைக்கிறேன்.இன்று எண்ணும்போது எல்லாமே வேடிக்கைகளாகத் தெரிகின்றன. அவர் குறித்த வருத்தம் எனக்கிருந்தது. பின்னர் அதைக் கடந்துவந்தேன் எழுத்தாளர்கள் பிற மானுடரை விடவும் சில தளங்களில் கட்டுண்டவர்கள். வெவ்வேறுவகையான உணர்ச்சிகளாலும் ஐயங்களாலும் ஆணவத்தாலும். நானும் அவ்வாறு இருக்கலாம். இருக்கலாகாது என சொல்லிக்கொள்கிறேன்.

ஆனால் என் ஆசிரியர்களாக நான் கொள்பவர்களில் பிறர் என்னை பெரிதும் பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்கள். கோவை ஞானி என் முதல் கதை முதல் வெண்முரசு முதற்கனல் வரை வாசித்து பாராட்டியிருக்கிறார். கொற்றவைக்கு அவர் ஒரு சிறப்பு மலரே வெளியிட்டிருக்கிறார். ஆற்றூர் ரவிவர்மா விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு ’ஒரு மாஸ்டர்பீஸ். இனி முருங்கை முளைப்பதுபோல இதன் எல்லா பகுதிகளையும் முளைக்கவைத்தால் நீ மாஸ்டர்” என்று சொன்னார். அசோகமித்திரன் ‘நூறாண்டு தமிழிலக்கியப் பரப்பின் மாபெரும் முயற்சி’ என எழுதினார்.

என் முதன்மையான ஆசிரியர் நித்ய சைதன்ய யதி தான். அவருக்கும் எனக்கும் இடையே எந்த தடையும் இல்லை. ஆகவே மரபுகளும் இருக்கவில்லை. விஷ்ணுபுரம் அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது. அது வெளியான போது அவர் உடல்நலம் தளர்ந்து ஓய்விலிருந்தார். கோவைக்குச் சென்று அவரைப்பார்த்து அந்நூலை அளித்தேன். “எவ்வளவு பெரிய நூல்” என்று கேலியாகச் சொன்னார். மீண்டும் அவரைச் சந்தித்தபோது அதை கைபோனபோக்கில் பிரித்து ஒருபக்கத்தை வாசிக்கும்படிச் சொன்னார்.

நான் வாசித்த பகுதி ஒரு பௌத்தத் துறவி தூபி ஒன்றின் மேல் பறவைகள் கொண்டுவந்து போடும் தானியங்களை உண்டு மழைநீரை அருந்தி முற்றாகத் தனிமையில் வாழும் பகுதி. எந்த மனிதனும் என்னை விட மேலான அர்த்தம் கொண்ட வாழ்வை வாழவில்லை.எவரை விடவும் மேலான வாழ்க்கையையும் நான் வாழவில்லை என்று அவர் சொல்லும் வரியை வாசித்துவிட்டு “நன்று, இது ஒரு கிளாஸிக்’ என்றார். ‘ஏன்?” என்று நான் கேட்டேன். இன்னொரு பக்கத்தை பிரி என்றார்.

நான் பிரித்த அடுத்த பகுதியில் அனைவரும் ஊரைவிட்டு சென்று விஷ்ணுபுரமே ஒழிந்துகொண்டிருக்கையில் ஒரு குருவி மட்டும் கைவிடப்பட்ட வீட்டில் இருக்கும் ஆடியில் கொத்திக்கொண்டே இருக்கிறது. “ஒரு கிளாஸிக்கில் எல்லா நிகழ்வுகளும் அதன் மையத்தின் அர்த்தத்தை ஏற்று படிமங்களாக இருக்கும்’ என்றார். அது எனக்கு கிடைத்த பெரும் பாராட்டு. அது எத்தனை அரிதானது என நான் அறிவேன் என்பதனால் இப்புவியில் எழுத்தாளனாக நான் வெல்லவும் அடையவும் ஏதுமில்லை

ஜெ

முந்தைய கட்டுரைராஜ்கௌதமன், திருப்பூர் சந்திப்பு, சிலுவைராஜ் சரித்திரம்…
அடுத்த கட்டுரைகம்போடியா பயணம்